சனி, 13 அக்டோபர், 2018

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் அறிவியல் மாணவர் கூட்டமைப்பு மாநாடு திராவிடர் கழகம் பங்கேற்கிறது



விசாகப்பட்டிணம், அக்.13 தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் காக்கத்தியா பல்கலைக் கழகத்தில் அறிவியல் மாணவர் கூட்டமைப்பு மூன்று நாள்  மாநாட்டினை நடத்தி வருகிறது. அக்டோபர் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாள் களில் நடைபெற்று வரும் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் பங்கேற்கிறது.

தெலங்கானா மாநிலம் விசாகபட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாக்டர் ஜெயகோபால் தலைமையிலான இந்திய நாத்திகர் சங்கம் (Atheist Society of India - ASI) அதன் மாணவர் அமைப்பான அறிவியல் மாணவர் கூட்டமைப்பு (Scientific Students Federation)  நடத்திடும் நாத்திக மாணவ இளைஞர் மாநாடு - 2018 (Atheist Students Youth Convention - 2018) மூன்று நாள் மாநாடு வாரங்கலில் உள்ள காக்கத்தியா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

பல்கலைக் கழக மற்றும் இதர மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்றிடும் இந்த மாநாடு நாத்திக மாணவர்கள் நடத்திடும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் நாத்திகம், அறிவியல் மனப்பான்மை பெருக்கம், சமூகநீதி எனப் பல்வேறு தளங்களில் கருத்தரங்கங்கள், கலந்துரையாடல்கள், சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளான அக்டோபர் 14இல் திராவிடர் கழகத்தின் சார்பாக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் ஏற்பாடுகளை அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் செயலாளர் நரேஷ் பைரி கவனித்து வருகிறார். தந்தை பெரியார் முன்னெடுத்த நாத்திக, சமூகநீதிக் கருத்துகள், போராட்டங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து கூட்டமைப்பின் மாண வர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் திராவிடர் கழகம் பங்கேற்றிட அழைப்பு விடுத்துள்ளனர்.

வாரங்கலில் மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ள அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் மூலஅமைப்பான இந்திய நாத்திகர் சங்கம், சில ஆண்டுகளுக்கு முன்னர் விசாகப்பட் டினத்தில் தந்தை பெரியாரின் சிலையினை நிறுவிட முயற்சி எடுத்திட்ட அமைப்பு   என்பது போற்றுதலுக்குரியது. அவர்களின் அழைப்பினை ஏற்று அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திர அரசின் அமைச்சர்களின் முன்னிலையில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தந்தை பெரியாரின் சிலையினை திறந்து வைத்ததும் ஒரு வரலாற்றுப் பூர்வ நிகழ்வாகும்.

மிகப் பல தொண்டர்களைக் கொண்டு சேவையாற்றிடும் அமைப்புகளில் திராவிடர் கழகமும், இந்திய நாத்திகர் சங்கமும் முதன்மை யானவை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 13.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக