ஞாயிறு, 28 ஜூலை, 2024
தெலங்கானா மாநிலம் – வாரங்கல் நகரில் இந்திய நாத்திகர் சங்கத்தின் மூன்றாம் மாநில மாநாடு
கழகப் பொருளாளர் பங்கேற்றார்
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டணம் நகரில் தலைமையகத்தைக் கொண்டு 1972 – ஆம் ஆண்டு இந்திய நாத்திகர் சங்கம் (Atheist Society of India) நிறுவப்பட்டது. சீரிய பகுத்தறிவாளர் முனைவர். ஜெயகோபால் அவர்களை நிறுவனராகக் கொண்டு தொடங்கப்பட்ட சங்கம் ஆந்திர மாநிலம் முழுவதும் கிளைகளைக் கொண்டு நாத்திக, பகுத்தறிவுப் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2004 – ஆம் ஆண்டில் மாணவர்களை அறிவியல் மனப்பான்மைக் கொண்டு செயல்பட வைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவியல் மாணவர் கூட்டமைப்பினை (Scientific Students’ Federation) இச்சங்கம் தொடங்கி களப்பணி ஆற்றி வருகிறது. ஆந்திர மாநிலம் பிரிந்ததற்குப் பின்னர் தெலங்கானா மாநிலக் கட்டமைப்பிலும், இந்திய நாத்திகர் சங்கம் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. தெலங்கானா மாநில இந்திய நாத்திகர் சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு ஜூலை 24 – ஆம் நாள் வாரங்கல் நகரில் நடைபெற்றது. அந்த மாநில மாநாட்டில் கலந்து கொள்ள திராவிடர் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திராவிடர் கழகத்தின் சார்பாக பொருளாளர் வீ. குமரேசன் இந்திய நாத்திகர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டார். உடன் திராவிடர் கழக சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன் அவர்களும் சென்று பங்கேற்றார்.
திராவிடர் கழகத்துடன் கொள்கை உறவு
அண்மையில் காலமான முனைவர். ஜெயகோபால், திராவிடர் கழகத்துடனும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். மியான்மா நாட்டில் பிறந்து, வளர்ந்து, தாயகம் திரும்பியவர். மியான்மர் நாட்டில் வாழ்ந்த காலத்தில் பெரியாருடைய எழுத்துகளை படித்ததன் மூலமாக தமிழைக் கற்றுக் கொண்டவர். சரளமாக தமிழில் உரையாடக் கூடியவர். திராவிடர் கழகம் நடத்திய பல மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். தந்தை பெரியாருடைய கொள்கை மீது கொண்ட பற்றுதலினால், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் முதன் முதலாக தந்தை பெரியாருடைய சிலையினை விசாகப்பட்டணம் – கடற்கரை சாலையில் அமைத்திட முயற்சி செய்தவர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்திட அன்றைய ஆந்திர மாநில அமைச்சர் பெருமக்கள் முன்னிலை வகித்து சிறப்பாக சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விசாகப்பட்டண நகர் மன்றத் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றிடும் வகையில் நிகழ்ச்சியினை ஜெயகோபால் அவர்கள் நடத்தினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலிவு காரணமாக ஜெயகோபால் அவர்கள் இயற்கை எய்தினார். அவரது படத்திறப்பு — நினைவேந்தல் நிகழ்விற்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் சென்று பங்கேற்றார். திராவிடர் கழகத்துடன் கொள்கை உறவுநிலை கொண்டு இந்திய நாத்திகர் சங்கம் செயல்பட்டு வருகிறது.
மாநில மாநாடு
இந்திய நாத்திகர் சங்கத்தின் மூன்றாம் மாநில மாநாடு வாரங்கல் நகர் அனுமன்கொண்டா பகுதியில் நடைபெற்றது. தெலங்கானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், சங்கத்தின் பொறுப்பாளர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர். மாநாட்டு தொடக்க உரையினை ரவி ஜெயகோபால் ஆற்றினார். சங்கத்தின் தெலங்கானா மாநிலத்தின் தலைவர் நரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
மாநாட்டின் தொடக்க உரையினை திராவிடர் கழகப் பொருளாளர் ஆங்கிலத்தில் வழங்கினார். தனது
உரையில் அவர் குறிப்பிட்டதாவது:-
பெரியார் இயக்கம் என்பது நாத்திக இயக்கம் – கடவுளை மறுக்கின்ற அமைப்பு என்பது பரவலாக அறியப்பட்டுள்ளது. கடவுள் மறுப்பு என்பது பிரச்சாரத்தின் சாரமாக இருந்தாலும், கடவுள் மறுப்பு என்பது முழுமையான கொள்கையல்ல; இல்லாத கடவுளை மறுத்துப் பேசுவது மட்டும் கொள்கைப் பிரகடனம் ஆகாது. பெரியாரின் கொள்கையானது மனிதர் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதே. ஆனால் நடைமுறையில் மனிதரிடையே சமத்துவநிலை இல்லை. பாகுபாடு காட்டுவது, ஏற்றத்தாழ்வு நிலை, அதன் அடிப்படையில் மனிதருக்கு அவசியமான தேவையான கல்வி மறுக்கப்படுவது என்ற நிலைமைகள் சமூகத்தில் உள்ளன. இந்த உயர்வு தாழ்வுகள் இருநிலைப்பட்டவை (binary) அல்ல; அவை பலநிலைப்பட்டவை; பலநிலைப்பட்டவை மட்டுமல்ல; தரநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையாக (graded inequality) உள்ளது. இந்த பிரிவினை என்பது மனிதரால் உருவாக்கப்பட்டவை என்றபோதிலும், கடவுள் விதித்த விதி; கடவுள் தானே உருவாக்கிய பிரிவு என சொல்லுவதாக கற்பிக்கப்படுகிறது. மக்களால் அந்த கற்பித்தல் ஏற்றுக்கொள்ளவும் பட்டுள்ளது.
மக்களிடையே சமத்துவநிலையினை உருவாக்கிட கடவுளின் கற்பிதம் தடையாக உள்ளது; அந்தத் தடை தகர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் கடவுள் மறுப்பு – கடவுள் எதிர்ப்பு ஓர் அணுகுமுறை என்ற அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. சமத்துவ நிலையினை எட்டிட ஒவ்வொருவரின் சுயமரியதை உணர்வு எழுச்சி பெறவேண்டும். பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவைகளை வலியுறுத்தித்தான் சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்கினார். அதன் நூற்றாண்டு (1924 – 2025) இப்பொழுது நடைபெறுகிறது. பெரியார் இயக்கத்தார் தேர்தலில் போட்டியிடாமல், சமுதாயப் பணி ஆற்றுகின்றவர்கள்.
பிறப்பின் அடிப்படையில், பாகுபாடு, பிரிவினையைத் தாண்டி உடல் உழைப்பு மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. தந்தை தொழிலைத்தான் மகன் செய்திட வேண்டும்; மாறிச் செய்தால், மீறியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் உரிய பங்கு வேண்டும் என 1929–இல் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 1989-இல் சட்டமாகி, பின்னர் 2006–இல் ஒன்றிய அரசின் சட்டமாகவும் ஆகி பாலின சமத்துவத்திற்கு வித்திட்டது. தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகம் இதுவரை அரசமைப்புச் சட்டத்தின் மூன்று திருத்தங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்துவதுதான் அந்த மூன்று சட்ட திருத்தங்களும்.
தனது கழகப்பணிக்கு கிடைத்த வெற்றியை தன் வாழ்நாளிலேயே கண்டவர் தந்தை பெரியார். தந்தை பெரியாருக்குப்பின் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் இயக்கத்தை வழிநடத்தினர் (1973-1978). அவருக்குப் பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி இயக்கத்தினை வழிநடத்தி வருகிறார். பெரியார் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் தொடர்ந்து திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது.
– இவ்வாறு தனது உரையில் குறிப்பிட்டுக் கூறினார். ஆங்கில உரையினை தெலுங்கில் மொழிபெயர்த்திட ஏற்பாடு செய்திருந்தனர்.
நண்பகல் உணவிற்குப் பின்னர் மாநாட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன. திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், தெலுங்கு மொழியில் சில மணித்துளிகள் உரையாற்றினார்.
வழக்குரைஞர் சைனிக் நரீந்தர் நன்றி கூறி மாநாட்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.
புதன், 3 ஜூலை, 2024
திருச்சியில் டிசம்பர் 28–29 நாள்களில் உலக நாத்திகர் – பகுத்தறிவாளர் – மனிதநேயர் – சுதந்திர சிந்தனையாளர் மாநாடு!
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர்
சங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!
சென்னை, ஜூலை 3 – உலக நாத்திகர், பகுத்தறிவாளர், மனிதநேயர், சுதந்திர சிந்தனையாளர் மாநாடு திருச்சியில் டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.
இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 30.6.2024 அன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டத்தின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமையேற்று நடத்தினார். கூட்டத்தில், கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சுடேஷ் கோடேராவ், செயற்குழுவில் அங்கம் வகித்திடும் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும், கூட்டமைப்பின் துணைத் தலைவருமான இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
21 மாநிலங்களில் செயல்பட்டுவரும் – கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, செயலாளர் பாவலர் செல்வமீனாட்சி சுந்தரம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் இராமு ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டமைப்பின் அடுத்த தேசிய மாநாட்டினை, பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் பங்கேற்று உரை
இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் வேண்டுதலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் என்ற நிலையில் பங்கேற்று உரையாற்றினார்.
தமிழர் தலைவரின் உரைச் சுருக்கம் வருமாறு:
சமுதாயத்திற்குக் கேடு ஏற்படுத்திவரும் மதவெறியை, மூடநம்பிக்கைகளை எதிர்த்து களமிறங்கி போராடி வருவதில் பகுத்தறிவாளர் சங்கங்கள் ஒரு குறிப்பிடத்தகுந்த சிறப்பான பணியினை ஆற்றி வருகின்றன. அவை ஆற்றிய களப்பணிகளால் நாட்டில் ஒரு மாறுதலான அரசியல் சூழல் ஏற்படும் என நினைத்திருந்த நேரத்தில், மதவெறி அமைப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும் சக்தியினர் மீண்டும் அதிகார நிலைக்கு வந்துள்ளனர். எந்தச் சோதனையினையும் சாதனையாக்கிக் கொள்ளும் பகுத்தறிவாளர் சங்கத்தினர் நடப்புச் சூழலையும் நேர்கொண்டு சமுதாயத்தில் மக்களிடம் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
திருச்சியில் மாநாடு
பகுத்தறிவாளர்களின் செயல்பாடு உலகளாவிய மக்களுக்குரியது; அனைவருக்கும் தொடர்புடையது. அந்த வகையில், பன்னாட்டு பகுத்தறிவு, மனிதநேய, நாத்திக, சுதந்திர சிந்தனைமிக்க அறிஞர்களை – அமைப்பின் தலைவர்களை அழைத்து, தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடத்திடலாம். தமிழ்நாட்டின் மய்யத்தில் இருக்கும் திருச்சி மாநகரில் அந்த மாநாட்டினை நடத்திடுவோம்.
வருகின்ற டிசம்பர் திங்கள் 28, 29 ஆகிய இரு நாள்களில் மாநாட்டினை நடத்திடுவோம். இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டினையும் சேர்த்து மிகப்பெரும் மாநாடாக நடத்திடுவோம். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நடைபெறும் காலத்தில் இந்த உலக மாநாடு நடைபெறுவது சிறப்புக்குரியது.
இரண்டு நாள் மாநாட்டிலும் அறிஞர் பெருமக்கள், முற்போக்குக் கொள்கையாளர்கள் பங்கேற்று உரையாற்றுவர். மாநாட்டின் நோக்கத் தலைப்பில் பங்கேற்பாளர்கள் கட்டுரை படித்திடவும், தனி அரங்கு நிகழ்ச்சிகளாகவும் இரண்டு நாள்களும், திருச்சியில் மக்கள் பங்கேற்கும் வகையில் திறந்தவெளியில் பொதுக் கூட்டம் நடைபெறும். மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடத்தப்படும்.
கடந்த காலங்களில் இரண்டு உலக நாத்திகர் மாநாடுகள் மற்றும் பல கழக மாநாடுகளை நடத்திக் காட்டிய திருச்சி நகரில், இரண்டு நாள் மாநாடு நடைபெறுவது மக்களுக்கும், பகுத்தறிவாளர் சங்கத்தினருக்கும் ஆக்கமும், ஊக்கமும் நிச்சயம் அளித்திடும்.
மாநாடு குறித்த தொடர் பணிகள் பற்றிய ஆலோசனை களை கூட்டமைப்பின் அங்கமாக உள்ள சங்கத்தினர் தெரிவிக்கலாம். மாநாட்டினை வெற்றிகரமாக அனைவரது ஈடுபாட்டுடன் நடத்திடுவோம்.
– இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்கும், தேசியச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சுடேஷ் கோடேராவ் அவர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்று சிறப்புச் செய்தார்.
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய நிர்வாக குழு கூட்டம் (MEETING OF FIRA)
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய நிர்வாக குழு கூட்டம் NATIONAL EXECUTIVE MEETING OF FIRA
சென்னை, ஜூலை 3 – இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் [FIRA] தேசிய நிர்வாகக் குழு கூட்டம் 30.6.2024 ஞாயிறு காலை 10.00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் பகுத்தறிவாளர் கழகம், தமிழ்நாடு ஆதரவுடன் நடைபெற்றது.
முன்னதாக வருகை தந்த தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் அவர்களது தங்கியுள்ள விடுதிகளில் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன் ஆகியோர் .சந்தித்து வரவேற்று காலை உணவளித்து அவர்களை நிகழ்வுக்கு வரவேற்று வந்தார்கள்.
காலை 10.00 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு தக்க்ஷின் கன்னட ரேஷனலிஸ்ட், கருநாடகா அமைப்பை சார்ந்தவரும் இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் நரேந்திர நாயக் தலைமை ஏற்றார்..
தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக தலைவரும், கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவருமான இரா. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.
மகாராட்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி அமைப்பை சார்ந்தவரும், கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான பேராசிரியர். முனைவர் சுடேஷ் பாஸ்கர் கோடேராவ் அவர்கள் கடந்த ஆறு மாதங்களில் கூட்டமைப்பின் செயல்பாடுகளை தொகுத்து உரையாற்றினார்.
கூட்டத்தில், அரியானா தக்க்ஷீல் சொசைட்டி தாரவாடி தலைவர் சதி ஃபபாம் சிங், தக்ஷீல் சொசைட்டி நிதி தலைவர் லூதியானா சதி ஆத்மா சிங், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டமைப்பின் முதல் உறுப்பினர் சு.அறிவுக்கரசு. பேரா. பல்வான்ட் சிங், குருஷேத்ரா இதழ் ஆசிரியர் ஜெயகோபால், நிறுவுனர் பாரத நாஸ்திக சமாஜம் பேரா. முனைவர். முந்த்ரா ஆதிநாராயணா தெலுங்கான ஜன விஞ்ஞான் வேதிகா, யு.கலாநாதன், புரவலர், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர் பாசுரேந்திர பாபு, திருவனந்தபுரம் பத்மசிறீ பிருபாலா ராபா, அஸ்ஸாம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டமைப்பு பதிவு செய்வது பற்றியும் கூட்டமைப்பின் வரைவு ஆவணம் பற்றியும் விவாதம் நடந்தது. விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.
கூட்டமைப்பின் வரவு செலவுகளை பொருளாளர் சார்பில் தலைவர் நரேந்திர நாயக் அவர்கள் படித்திட அனைவரும் ஒப்புதல் வழங்கினார்கள்.
தொடந்து ஒடிசா ஹூமனிஸ்ட் அன்ட் ரேஷனலிஸ்ட் அமைப்பின் செயலறிக்கையை கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஈ.தேஜேஸ்வர் ராவ் வழங்கினார்கள்.
தெலங்கானா ரேஷனலிஸ்ட் ஃபேமிலிஸ் சொசைட்டி அமைப்பின் செயலறிக்கையை கூட்டமைப்பின் துணைத்தலைவர் வழக்குரைஞர் செலிமேளா ராஜேஷ்வர் வழங்கினார்கள்.
கேரளா யுக்திவாதி சங்கத்தின் அறிக்கையை கூட்டமைப்பின் துணைத்தலைவர் இரிங்கல் கிருஷ்ணன் வழங்கினார்.
அகில் பாரதீய அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் செயலறிக்கையை கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஹரீஷ் தேஷ்முக் வழங்கினார்கள்.
ஒடிசா ஹுமனிஸ்ட் அன்ட் ரேஷனலிஸ்ட் அமைப்பின் அறிக்கையை நிர்வாகக்குழு உறுப்பினர் பாசந்தி ஆச்சார்யா வழங்கினார்.
மானவ விகாசா வேதிகா, ஹைதராபாத் அமைப்பின் செயலறிக்கையை கூட்டமைப்பின் செயலாளர் சாம்பசிவராவ் வழங்கியதோடு 2024 செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் அய்தராபாத் நகரில் நடக்க இருக்கும் தங்களது அமைப்பின் இருபதாம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அனைவருக்கும் கடிதம் கொடுத்து முடித்தார்.
கேரளா, திருவனந்தபுரம் பெரியார் ரேஷனலிஸ்ட் ஃபோரம் சார்பின் லால்சலாம் அவர்கள் தங்களது அமைப்பு ஆற்றிவரும் செயல்பாடுகளை அறிக்கையாக வழங்கினார்.
எத்திஸ்ட் சொசைட்டி ஆப் ஆந்திரபிரதேஷ் அண்ட் தெலுங்கானா அமைப்பின் செயலறிக்கையை கூட்டமைப்பின் செயலாளர் புத்தா முஸ்லி நாயுடு வழங்கினார்.
ஜான் விகாஸ் ஃபவுண்டேஷன் இன்டர்நேஷனல், கார்டி, மகாராட்டிரா அமைப்பின் செயலறிக்கையை மனோஜ் பன்சோட் வழங்கினார்.
அடுத்து பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளரும், கூட்டமைப்பின் செயலாளருமான வி.மோகன் பகுத்தறிவாளர் கழகத்தின் செயலறிக்கையை வழங்கினார்..
இந்நேரத்தில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேனாள் பகுத்தறிவாளர் கழக தலைவரும், திராவிடர் கழக பொருளாளருமான வீ.குமரேசன் அவர்களோடு நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஆசிரியர் அவர்களிடம் கூட்டமைப்பின் மாநாட்டை பற்றியும், அதுபற்றிய வழிகாட்டுரையும் வழங்கிட கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், கூட்டமைப்பு செயல்பட வேண்டிய விதம், மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்றும் எதனை முன்னிறுத்தி இம்மாநாடு நடைபெற வேண்டும் என்றும் அதற்கு ஏற்ற இடம் திருச்சி என்றும், மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்றும், மாநாடு கூட்டமைப்பின் மாநாடாகவும், பன்னாட்டு மாநாடாகவும் இருக்க வேண்டும் என்றும் கோடிட்டுக்காட்டி உரையாற்றினார்.
‘The Modern Rationalaist’ இதழ் பற்றி எடுத்துக்கூறினார்.
தொடர்ந்து 4 பேர் சந்தா வழங்கிட முன்வந்ததை பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசனும், வடசென்னை இராமுவும் சேகரித்தனர்.
கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர நாயக் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் முனைவர். பேரா. சுடேஷ் பாஸ்கர் கோடேராவ் அவர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் அனைவருக்கும் இம்மாத தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழை வழங்கிடச் செய்தார்.
பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் மற்றும் வடசென்னை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இராமு இருவரும் அனைவருக்கும் The Modern Rationalist Annual Number book வழங்கினார்கள்.
தலைவர் நரேந்திர நாயக் தனது முடிவுரையில் ஆசிரியர் அவர்களது வழிகாட்டுதல்களை ஏற்று செயல்படுவதாக அனைவரது கையொலிகளுக்கிடையே தெரிவித்தார்.
நேரத்தின் அருமை கருதி அவரே நன்றியும் கூறி நிகழ்வை முடித்தார்.
தொடர்ந்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர் அவர்களோடு மகிழ்வுடன் அளவளாவினார்கள்.
ஒவ்வொருவரும் ஆசிரியர் அவர்களுடன் தனித்தனியாகவும் குழுவாகவும் புகைப்படமும், செல்பியும் எடுத்துக்கொண்டார்கள்.
நிகழ்வில், ஒடிஷா முனைவர் பிது பிரவா, கருநாடகா ஸ்ரீனிவாஸ் நடேகர், முனைவர்.ஹெச்.ஆர்.ஸ்வாமி, கேரளாவின் எல்சம்மா, தெரேசியா என் ஜோன், சந்தோஷ் குமார், மகாராஷ்டிரா ஷீலா கோடேராவ், எஸ்.அபிலாஷ், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் பிரின்சு என்னரெசு பெரியார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் மதுரை வா.நேரு, செயலாளர் மீனாட்சி சுந்தரம், பகுத்தறிவு ஊடகத் துறை தலைவர் அழகிரிசாமி, வடசென்னை பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.கோபால், சு.துரைராசு, மதுரை அன்புமணி, செந்தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர் சுரேஷ், பெரியார் திடல் கலைமணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.