விருதுநகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருதுநகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 டிசம்பர், 2019

விருதுநகர் ப.க. மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எழுப்பிய வினா

திருவள்ளுவர் பிறந்த 2000 ஆண்டுகளுக்குமுன் இந்து மதம் இல்லாத நிலையில், அதனை இந்து நூல் என்பது எப்படி?

விருதுநகர் ப.க. மாநாட்டில்  எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  எழுப்பிய வினா


விருதுநகர், டிச.21 திருவள்ளுவர் பிறந்த 2000 ஆண்டுகளுக்குமுன் இந்து மதம் இல்லாத நிலையில், அதனை இந்து நூல் என்பது எப்படி?  என்ற வினாவினை எழுப்பினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா  தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வழியில் நின்று இந்த மண்ணை பகுத்தறிவு வழியில் முன்னோக்கி இழுத்துச் செல்லவேண்டும் என்று போராடிக் கொண் டிருக்கின்ற சமூகநீதிப் போராளிகளே,  தமிழ்ச் சொந்தங்களே, என்னுடன் வருகை தந்திருக்கின்ற என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மதுரைக்குச் சென்று விமானம் பிடித்து சென் னைக்குச் செல்லவேண்டும் என்கிற காரணத்தால், சற்று முன்னதாகவே, அய்யா அவர்கள் பேசுவதற்கு முன்னதாகவே பேசி, விடைபெறவேண்டும் என்கிற ஒரு நெருக்கடியில் நான் நின்று கொண்டிருக்கின்றேன். இடையிலேயே விடைபெறுவதற்காக முதலில் என் னுடைய வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

21 தீர்மானங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்

பகுத்தறிவாளர் கழகத்தின் இந்தப் பொன்விழா மாநாட்டில் நிறைவேற்றி இருக்கிற 21 தீர்மானங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று, இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் தொட்டிருக்கின்ற நிலையில், பொன்விழாவின் தொடக்க நிகழ்ச்சி விருதுநகரிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொடக்க விழா நிகழ்விலே பங்கேற்று உரையாற்றக்கூடிய ஒரு அரிய வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக தமிழர் தலை வர் அய்யா அவர்களுக்கும், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கும் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர்

இந்த மண்ணில் தோன்றியிருக்காவிட்டால்...

தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர் இந்த மண்ணில் தோன்றியிருக்காவிட்டால், 50 ஆண்டு களுக்கு முன்பே அல்லது 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடும், சங் பரிவார்களின் கொட்டம் தலைவிரித்தாடும் ஒரு பகுதியாக மாறியிருக்கும். இன்றைக்குத் தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியவில்லை, வேரூன்ற முடியவில்லை என்கின்ற வகையில், ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகள்தான். அதுதான் இன்றைக்குத் தமிழ்நாட்டை, மதச்சார்பற்ற ஒரு நிலப்பகுதியாக அறியக்கூடிய வகையில், பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.

சென்னை அய்.அய்.டி. மாணவி பாத்திமா லத்தீப் உயிர்ப் பலியாகியிருக்கின்ற நிலையில், அவருடைய பெற்றோர் இருவரும், பதறிக்கொண்டு சொன்ன வார்த்தைகள், ‘‘வேறு எங்கே எங்கள் பெண்ணை அனுப்பினாலும் பாதுகாப்பு இருக்காது; தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற  நிலம். ஆகவே, இங்கே பாதுகாப்பு இருக்கும் என்று எண்ணித்தான், சென்னை அய்.அய்.டி. யிலே படிக்க வைத்தோம். ஆனால், இங்கேயும் மதவெறி என் குழந்தையின் உயிரைப் பறித்துக் கொண்டதே'' என்று வேதனையோடு அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தந்தை பெரியார் அவர்களின்

உழைப்புதான், சிந்தனைதான்

அப்படி ஒரு எண்ணம் தமிழ்நாட்டில், மதவெறிக்கு இடமில்லை, ஜாதி வெறிக்கு இடமில்லை, இங்கே பாதுகாப்பு இருக்கும் என்ற ஒரு சிந்தனையை அவர்களுக்கு உருவாக்கி இருப்பது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் உழைப்புதான், சிந்தனைதான்.

சமூகநீதியைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழர் தலைவர்

இன்றைக்கு நம்மிடையே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இல்லை என்றாலும், அந்த இடத்தை இட்டு நிரப்பி, வெற்றிகரமாக, பகுத்தறிவு சிந்தனை களைப் பரப்பிக் கொண்டிருப்பதுடன், சமூகநீதியைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

அவருடைய நிறைவுரையைக் கேட்கவேண்டும் என்கிற ஆவல்; ஆனால், எனக்கு நேரமில்லை. அதனால், நிறைவு  விழா மாநாட்டிலும் பேசுகிற வாய்ப்பை அய்யா அவர்கள் எனக்கு வழங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாட்டில் ஜாதியவாதிகளும், மதவாதிகளும் கோலோச்சுவதற்குத் துடிக்கிறார்கள்

இது தொடக்க விழா மாநாடு; பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு  பெற்றிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் ஜாதியவாதிகளும், மதவாதிகளும் கோலோச்சுவதற்குத் துடிக்கிறார்கள்; இங்கே கொடிகட்டி ஆளத் துடிக்கிறார்கள். ஏனென் றால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டைத் தவிர, மற்ற மாநிலங்களில் அவர்களின் தாக்கம் இருந்தது, ஆதிக்கம் இருந்தது, அவர்களால் வெற்றி பெறவும் முடிந்தது. தமிழகத்தில் அது எடுபடவில்லை. ஆனால், எப்படியாவது இன்றைக்கு தலைவர் கலைஞர், ஜெயலலிதா அம்மையார் இல்லை என்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. வின் இக்கட்டான நிலைமைகளை, அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி இங்கே கோலோச்ச வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

இத்தகைய ஒரு சூழலில்தான், அவர்கள் கையில் எடுத்திருக்கின்ற யுக்திகள் - அய்யன் திருவள்ளு வருக்குக் காவி உடை உடுத்துவது, திருநீறு பூசுவது, நாமம் சாத்துவது, ருத்திராட்சக் கொட்டை அணி விப்பது போன்ற நடவடிக்கைகள்.

திருவள்ளுவர்  நமக்கு வழங்கியிருக்கிற அருட்கொடை

அய்யன் திருவள்ளுவருடைய உருவத்தை நாம் யாரும் பார்க்கவில்லை. அவருக்கு எந்த உருவம் தந்தாலும், அதற்கு நாம் எப்படி எதிர்ப்போ அல்லது ஆதரவோ செய்ய முடியும் என்கிற ஒரு நிலை இருக் கிறது. ஆனாலும்கூட, அய்யன் திருவள்ளுவர், நமக்கு வழங்கியிருக்கிற அருட்கொடை என்று சொல்லலாம், நமக்கான அந்த அறிவுக்கொடை திருக்குறள்.

உலகத்தில் எல்லா மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்ற ஒரு மகத்தான அறநூல். அந்த நூல், அய்யன் திருவள்ளுவரின் சிந்தனையை நமக்கு வெளிப்படுத்துகிறது; அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அவரை சமணர்கள் தங்களுடைய முனிவர்கள் என்று உரிமை கோருகிறார்கள்; பவுத்தர்கள் உரிமை கோருகிறார்கள். சமணமும், பவுத்தமும் உரிமை கோரு வதில்கூட  ஒரு பொருள் இருக்கிறது.

ஏனென்றால், சமணமும், பவுத்தமும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் உயர்ந்தவர்கள் - தாழ்ந்த வர்கள் என்று போதிக்கின்ற மதங்கள் இல்லை.

சமணமும், பவுத்தமும் சமத்துவத்தைப் பேசுகின்ற மதங்கள்.

அய்யன் திருவள்ளுவரும் சமத்துவத்தைப் போதிக் கக்கூடிய ஒரு மாமனிதர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று சொன்னார்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'' என்ற ஏழு சொற்கள், அய்யன் திருவள்ளுவர் யார் என்று மதிப்பீடு செய்வதற்கான ஓர் அளவுகோல்.

1330 குறளில், மற்ற குறள்களைக்கூட நாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, இந்த ஒற்றைக் குறளை ஆய்வு செய்தால் போதும். அவருடைய சிந்தனை எவ்வளவு உயர்ந்தது, மேம்பட்டது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'' என்று சொல்லு வதன்மூலம்,

பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்று சொல்ல வில்லை.

பிறப்பொக்கும் எல்லா இனத்திற்கும் என்று சொல்ல வில்லை.

பிறப்பொக்கும் எல்லா மதத்திற்கும் என்று சொல்ல வில்லை.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்றுதான் சொல்லியிருக்கிறார். அது மனித உயிராக இருக்கலாம், விலங்குகள் உயிராக இருக்கலாம், பறவைகளின் உயிராக இருக்கலாம், எந்த உயிராகவும் இருக்கலாம். உயிர் என்பது எப்படி பிறப்பெடுக்கிறது என்றால், தாய்வழியே பிறப்பெடுக்கிறது.

அதனால், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' - அதில் உயர்வு - தாழ்வை எப்படி நாம் மதிப்பிட முடியும் என்கிற கேள்வி அதற்குள்ளே புதைந்து கிடக்கிறது.

‘‘சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' - செய்யும் தொழிலால் வேற்றுமை இருந்தாலும், அவர் களின் சிறப்பு அதனால்  பாதிக்கப்படாது என்பதுதான் - ‘‘சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' என்பது.

ஆனால், இவர்கள் அதற்கு என்ன விளக்கம் சொல் லுகிறார்கள்? ஏன் நாம் சமணம் உரிமை கோருவதை எதிர்க்கவில்லை; பவுத்தம் உரிமை கோருவதை எதிர்க்கவில்லை. இவர்கள் உரிமைக் கோருவதை எதிர்க்கிறோம் என்றால், சமணமும், பவுத்தமும் சமத் துவத்தைப் பேசுகிறது; அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளும் சமத்துவத்தைப் பேசுகிறது. அதனால், அவர்களின் சிந்தனைகளில் ஒரு ஒற்றுமை இருப்பதால், உரிமை கோருவதில்கூட தவறில்லை என்று நாம் கருதுகிறோம்.

சனாதனத்தின் அடிப்படையான கோட்பாடு!

ஆனால், சனாதனம் - இதுதான் அவர்களே சொல் லிக் கொள்கிற ஒரு கோட்பாடு.

சனாதனம் என்றால், மாறாதது; நிலையானது என்று அவர்கள் அதற்கு விளக்கம் சொல்கிறார்கள். அவர்கள் வகுத்த வரையறை என்பது மாறாது; அது அப்படியே தொடரும்.

என்ன வரையறை?

பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு உண்டு என்கிற கோட்பாடுதான் சனாதனத்தின் அடிப்படை யான கோட்பாடு.

ஒரு மனிதன் அக்கிரகாரத்தில் பிறந்தால் உயர்ந்த வன் என்றும், மற்ற குடியிருப்புகளில் பிறக்கிறவன் அத்தனை பேரும் தாழ்ந்தவன் என்றும் சொல்லுகிற ஒரு கோட்பாடு.

நான்கு வருணம் என்று வருணத்தை வரை யறுக்கின்ற கோட்பாடு. அந்த வருணங்களில் ஒரே ஒரு வருணம்தான் உயர்ந்த வருணம் - மேல் வருணம் - மேல்ஜாதி, மேல் மக்கள் என்பது. மற்ற வருணங்கள் அனைத்தும் கீழ்ஜாதி - கீழானவர்கள் என்று சொல்கிற கோட்பாடு. அதுதான் சனாதனம்.

பிராமணர்கள் என்கிற பார்ப்பனர்களைவிட, அவ் வளவு பேரும் கீழ்ஜாதிதான். அதைத்தான் சதுர்வர்ணம் சொல்லுகிறது.

இந்துத்துவம் என்ற

சனாதனத்தை எதிர்த்து...

அதில் என்ன ஒரு நுட்பமான கோட்பாட்டை வைத்திருக்கிறார்கள் என்றால், ஒருவன் ஓரிடத்தில் கீழ்ஜாதியாக இருப்பான்; அவனே இன்னொருவனுக்கு மேல்ஜாதியாகவும் இருப்பான். அது ஒரு சமரசம்.

அதனால்தான், இந்துத்துவம் என்ற இந்த சனாதனத்தை எதிர்த்து, பிராமணர் அல்லாதவர்கள் போராட முடியாத நிலை ஏற்பட்டது என்று, புரட்சி யாளர் அம்பேத்கர் அவர்களும்,  தந்தை பெரியார் அவர்களும் நமக்குச் சொல்கிறார்கள்.

ஏன் இதை எதிர்த்து, ஜாதி இந்துக்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் போராடவில்லை என்றால், ஜாதி இந்துவாக தன்னை உணருகிற ஒவ்வொருவனும்,  பிராமணனுக்கு கீழ்ஜாதியாக இருந்தாலும், தனக்குக் கீழே இருக்கிற வர்ணம் எதுவோ, அதற்கு இவன் மேல்ஜாதி என்கிற ஒரு உளவியலையே  அது தருகிறது.

எல்லா கீழ்ஜாதிக்காரனுக்கும் ஒரு இடத்திலே ஒரு மேல்ஜாதி உணர்வையும் சேர்த்துத் தருகிற கோட் பாடாக, சனாதனக் கோட்பாடு இருக்கிறது; இப்படி ஒரு சமரசம் அதிலே செய்யப்பட்டு இருக்கிறது என்று நம்முடைய மாமனிதர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் நுட்பமாக நமக்குச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ஆகவேதான், இந்த மண்ணில் இந்தக் கோட் பாட்டைப் புரிந்துகொள்வதிலிருந்துதான் அடிமைத் தளையிலிருந்து மக்களை மீட்க முடியும் என்று சிந்தித்த அந்த அறிவு இருக்கிறதே, அதுதான் பகுத்தறிவு.

பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்வதற்காக இயக்கம் காணவில்லை.

கடவுள் சிலைகளை அவமதிப்பதற்காக அவர் இயக்கம் காணவில்லை.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு சொல்லப்படுகிறது. இது இத்தனை ஆண்டுகளாக, இத்தனை லட்சம் ஆண்டுகளாக எப்படிப் பாதுகாக் கப்பட்டு வருகிறது என்பதைப்பற்றி சிந்தித்துப் பார்க்கின்றபொழுது,

ஜாதியை வருணம் காப்பாற்றுகிறது,

வருணத்தை மதம் காப்பாற்றுகிறது,

மதத்தை அவர்கள் கோட்பாடு காப்பாற்றுகிறது,

மதத்தை அவர்களின் கடவுள் காப்பாற்றுகிறது.

ஆகவே, இந்த வருணம் கடவுள் என்கிற அந்த அடையாளங்களை எதிர்த்துப் பேசவேண்டும் என்கிற துணிச்சலைப் பெற்றதால், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை அவரால் உருவாக்க முடிந்தது.

மதம் இல்லாமலும், கடவுள் நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும்!

இன்றைக்கு உலகமே ஒரு புள்ளிவிவரம் சொல்லு கிறது.

மதம் இல்லாமல்,

கடவுள் நம்பிக்கை இல்லாமல்,

வழிபாடு இல்லாமல் வாழக்கூடிய மக்கள் தொகை என்பது, உலக அளவில், நம்பிக்கை உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட, பெருகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

கடவுளை நம்புகிறவர்களின் எண்ணிக்கையைவிட,

மதத்தில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை யைவிட,

மதம் இல்லாமலும், கடவுள் நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை, அந்த சதவிகிதம் பெருகி வருகிறது என்று புள்ளிவிவரம் சொல்வதை நாம் பார்க்கிறோம்.

ஆகவே, இதற்கெல்லாம் வித்திட்ட பெருமை, இந்தக் காலகட்டத்தில், சம காலத்தில், அந்தக் காலத்தில் சாக்ரட்டீஸ் போன்றவர்கள் எல்லாம் இருந்திருக்கலாம்; ஆனால்,  நாம் வாழும் இந்தக் காலத்தில், அல்லது இந்த நூற்றாண்டில், இதை மாபெரும் மக்கள் இயக்கமாக முன்னெடுத்த பெருமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

கடவுள் மறுப்புதான் பகுத்தறிவு என்று இல்லை

சடங்கு மறுப்புதான் பகுத்தறிவு என்று இல்லை

சம்பிரதாய மறுப்புதான் பகுத்தறிவு என்று இல்லை

பிறப்பின் அடிப்படையில் இருக்கிற உயர்வு - தாழ்வு என்பது தவறு; அதற்குக் காரணமான கோட்பாட்டை எதிர்த்துப் போராடுவது என்பதுதான் பகுத்தறிவு.

ஒரு கோட்பாட்டிற்கு எதிரான யுத்தம்

தந்தை பெரியாரின் போராட்டமே, ஒரு கோட்பாட் டிற்கு எதிரான யுத்தம். சனாதனத்திற்கு எதிரான யுத்தம். சனாதனத்தைப் புரிந்துகொள்வதுதான் பகுத்தறிவு.

பிறப்பின் அடிப்படையிலே, உயர்வு - தாழ்வு உண்டு என்பதை காலங்காலமாக கட்டிக் காப்பாற்றி, அதை சிதைய விடாமல் முன்னெடுத்துச் செல்வதற்கு எது காரணமாக இருக்கிறது என்று பார்க்கிற பொழுதுதான், மனிதர்களை சுயமாக சிந்திக்கவிடாமல், சடங்குகளுக்குள்ளும், சம்பிரதாயங்களுக்குள்ளும், கடவுள் வழிபாடுகளுக்குள்ளும் மக்களைக் கொண்டு போய் தள்ளிவிட்டார்கள். அந்த மாயையிலிருந்து மக்களால் மீள முடியாத நிலையில், அவர்களால் அந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. அதன் நுட்பத்தைப் புரிந்துகொள்ள முடிய வில்லை.

ஆகவேதான், தந்தை பெரியார் அவர்கள் சனா தனத்தை எதிர்த்துப் பேசினார். மக்களை நேரிடையாக மயக்கி வைத்திருக்கிற மாயை எதுவோ, அதன்மீது குறி வைத்து தனது விமர்சனத் தாக்குதல்களைத் தொடுத்தார்.

மொத்தத்தில் அவர் ஏதோ கடவுள் மறுப்பாளர், கடவுள் சிலை அவமதிப்பாளர் என்பதைப் போன்ற ஒரு தொடர்பை, தோற்றத்தை இங்கே உருவாக்கி விட்டார்கள்.

பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதற்கும் சனாதனம் ஒரு காரணம்!

மக்கள் தொகையில் பாதியாக இருக்கின்ற பெண்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.

பெண்களுக்கு கல்வியில்லை,

பெண்களுக்கு சொத்துரிமை இல்லை,

பெண்களுக்கு அதிகாரமில்லை

பெண்களின் பேச்சுக்கு மதிப்பில்லை

கருத்துச் சொல்ல சுதந்திரமில்லை

இப்படி பெண்கள் மக்கள் தொகையில் சரி பாதியாக இருப்பவர்கள் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதற்கும் இந்த சனாதனம் ஒரு காரணம்.

இந்த சிந்தனைதான் பகுத்தறிவு சிந்தனை. ஜாதியின் பெயரால் உழைக்கின்ற மக்களை ஒன்றுபடவிடாமல், சிதறடிக்கப்பட்டு, பிளவுபடுத்தப்பட்டு தொடர்ந்து மைனாரிட்டியாக இருக்கக்கூடியவர்கள் ஆள முடியும் என்கிற நிலையை வெற்றிகரமாக இங்கே நிகழ்த்திக் கொண்டிருப்பதற்குக் காரணம் சனாதனம்தான். இந்த நுட்பம்தான் பகுத்தறிவு.

ஒட்டுமொத்தத் தொகையில் 3 சதவிகிதமாக இருக்கிற பார்ப்பனர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடிகிறது.

உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளில் அவர்கள் மட்டுமே ஆதிக்கம் செய்ய முடிகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையாக அவர்கள் மட்டுமே இருக்க முடிகிறது.

இதை ஏன்? என்றுகூட கேள்வி எழுப்புகிற ஒரு துணிச்சல், அந்த விழிப்புணர்வு மற்றவர்களுக்கு இல் லாமல் போனதற்கு எது காரணம் என்று சிந்தித்தவர்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

சமூகநீதி சிந்தனைதான்

பகுத்தறிவுச் சிந்தனை

ஆகவே, இவர்கள் எந்த மவுடீகத்தில் மூழ்கிக்  கிடக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்த நிலையில்தான், சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறார். இவர் களுக்கு விழிப்புணர்வு  உருவாகவேண்டுமானால், அதிகார வலிமையைப் பெறவேண்டும். அதிகார வலிமையைப் பெறவேண்டுமானால், இவர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், அதிகாரப் பகிர் விலும் இட ஒதுக்கீடு வேண்டும். இந்த இட ஒதுக்கீடு என்பதுதான் சமூகநீதி. சமூகநீதி சிந்தனைதான் பகுத்தறிவுச் சிந்தனை.

எவ்வளவு ஆழமாக, நுட்பமாக அரசியலைப் புரிந்து தந்தை பெரியார் அவர்கள் இந்தக் களத்தை அமைத்திருக்கிறார்; ஒரு மாபெரும் மக்கள் இயக் கத்தை உருவாக்கி இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதனால்தான், புராணங்களையும், சாஸ்திரங்களையும் அவர் கையில் எடுத்தார். எல்லா வற்றிற்கும் அடிப்படையாக இருக்கிற மனுதர்மத்தை அவர் குறி வைத்து விமர்சனம் செய்தார்.

இல்லாத ஒன்று  என்று யாரும் அதை சொல்ல முடியாது. எங்கே இருக்கிறது மனுதர்மம் என்று  யாரும் கேட்க முடியாது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பே நம்பிக்கையின் அடிப் படையில்தான் நிலத்தை வழங்குகிறோம் என்று அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆதாரங்களின் அடிப் படையில் அல்ல.

இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது

மனுதர்ம சாஸ்திரம்தான்

ஆகவே, நாட்டை ஆளுவது இந்திய அரசமைப்புச் சட்டமா? அல்லது மனுதர்ம சாஸ்திரமா? என்றால், இந்தத் தீர்ப்பை வைத்தே சொல்ல முடியும், இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பது மனுதர்ம சாஸ்திரம்தான். அரசமைப்புச் சட்டமில்லை.

மெத்தப் படித்தவர்களே, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே, தீர்ப்பை எழுதக்கூடியவர்களே, நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பை எழுதக்கூடிய நிலை இருக்கிறது என்று சொன்னால், இந்த இடத்தில் நம்மை விமர்சனப் பார்வையோடு பார்க்க வைப்பது தான் பெரியாரின் பார்வை - அதுதான் பகுத்தறிவுப் பார்வை - அதுதான் பகுத்தறிவு சிந்தனை. இல்லை யென்றால், நாமும் வாய்மூடித்தான் கிடக்கவேண்டும்.

ஆகவேதான் மனுதர்மத்தை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் வெகுமக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்.

அது வெறும் சாஸ்திரமாக இல்லை,

அது வெறும் கோட்பாடாக இல்லை,

அது ஒரு சமூகத்தை வழிநடத்தக் கூடிய சட்ட மாகவும் இருக்கிறது; தண்டனை வழங்கக்கூடியதாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு வருணத்திற்கும் ஒரு தண்டனை; ஒரே குற்றம், வெவ்வேறு தண்டனை. ஆக, தண்டனையை வரையறை செய்யக்கூடிய ஒரு நூலாகவும் அது இருக்கிறது என்பதை, முதலில் இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு அடையாளம் கண்டு சொன்ன பெருமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைச் சாரும்.

யோசித்துப் பாருங்கள், நாம் இங்கே இருந்து மெனக் கெட்டு கோவிலுக்குப் போய், அங்கே கடவுளுடைய அருள் கிடைக்கும் என்று நினைக்கிறோம். கடவுளு டைய கருவறைக்குள்ளேயே இருக்கிறவர்கள், எல்லா அத்துமீறல்களையும் செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள  ஒரு கோவிலில் தேவநாதன் என்பவர் செய்த அட்டூழியம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். இதை யெல்லாம் கண்டிப்பதற்கு இங்கே யாரும் இல்லை.

அய்யன் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசாதீர்கள் என்று சொன்னால், கோபப்படுகிறார்கள். இதை மட்டும் சொல்லி நான் என்னுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

திருவள்ளுவர் வாழ்ந்த காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு!

அய்யன் திருவள்ளுவர் வாழ்ந்த காலம் தோராய மாக, 2000 ஆண்டுகளுக்கு முன்பு - கிறித்து பிறப்பதற்கு முன் 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது நூறு ஆண்டு களுக்கு முன்பு என்று சொல்லுகிறார்கள். அல்லது அதற்குப் பின்னால்கூட இருக்கலாம். எப்படியோ 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்தார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தபொழுது, இந்தியாவில் இருந்த மதங்கள் என்ன? ஆதிசங்கரர் காலமே கி.பி.எட்டாம் நூற்றாண்டு. 1200 ஆண்டு களுக்கு முன்பு. அப்பொழுதே இந்து மதம் என்ற ஒன்று இல்லை.

அப்பொழுது அவர் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று, மக்களைச் சந்தித்து,

சைவம்,

வைணவம்,

கானபத்தியம்,

கவுமாரம்,

சவுரம்,

சாக்தம் என்ற ஆறு சமயங்களை - இந்த ஆறு சமயங்களுக்குள் ஒரு ஒருமித்த பண்பாடு இருக்கிறது; எனவே, இதனை ஒன்று சேர்க்கவேண்டும் என்பதற் காக ஆங்காங்கே மடங்களை நிறுவினார் என்று வரலாறு சொல்லுகிறது.

அது 1200 ஆண்டுகளுக்கு முன்பு. அய்யன் திருவள்ளுவர் காலம் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆதிசங்கரருக்கு முன்னால் 800 ஆண்டுகளுக்கு மூத்தவர் அய்யன் திருவள்ளுவர்.

இந்து மதம் என்ற ஒரு மதம்

ஒற்றை வடிவத்தில் இல்லை

1200 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதம் என்ற ஒரு மதம் ஒற்றை வடிவத்தில் இல்லை. ஒற்றைச் சொல்லாடலில் குறிப்பிடப்படவில்லை.

சைவம் என்பது வேறு சமயம்

வைணவம் என்பது வேறு சமயம்

மகாராட்டிராவை மய்யமாகக் கொண்டு இயங்குகிற விநாயகர் - கானபத்தியம், கணபதி வழிபாடு.

முருகப் பெருமானைத் தலைவராகக் கொண்டு அல்லது  கடவுளாகக் கொண்டு வழிபடக்கூடிய கவுமாரம் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கக் கூடிய ஒன்று.

சாக்தம் அல்லது  சக்தி அல்லது அம்மன் வழிபாடு இன்றைக்கும் மேற்கு வங்கம்தான் அதற்குப் பெயர் போன பகுதியாக இருக்கிறது.

இப்பொழுது எங்கே போனது சவுரம்? சவுரம் என்றால், சூரியனை வழிபடக் கூடியவர்கள்.

சாக்தம் என்றால், சக்தியை வழிபடக் கூடியவர்கள்.

கவுமாரம் என்றால், குமரனை, திருமுருகனை வழிபடக் கூடியவர்கள்.

சைவம் - சிவனை

வைணவம் - விஷ்ணுவை

இந்த மதங்கள் எங்கே போயின? சமயங்கள் எங்கே போயின?

இந்த 200 ஆண்டு காலத்தில்தான் இந்து, இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில்தான் இந்தப் புழக்கம் வந்தது.

திருவள்ளுவருக்கு

மதச் சாயம் பூசாதீர்கள்!

அப்பொழுது 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால், வள்ளுவர் இருந்தது உண்மை என்றால், அவர் உங்கள் மதத்தில் ஏதேனும் ஒன்றில் இருந்திருக்க வேண்டும். ஒன்று, சைவத்தில் இருந்திருக்கவேண்டும்; அல்லது வைணவமாக இருக்கவேண்டும்.

ஆனால், தோள்பட்டையில்,  திருநீறு  பூசியிருக் கிறார்கள்; நெற்றியில் நாமம் சாத்தியிருக்கிறார்கள். இரண்டும் இருக்க முடியாது, 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக. ஏதாவது ஒன்றைத்தான் சொல்ல முடியும். ஒன்று சைவத்தைச் சார்ந்தவர் என்று சொல்லுங்கள் அல்லது வைணவத்தை சார்ந்தவர் என்று சொல் லுங்கள். அல்லது முருகப் பெருமானை வழிபடக் கூடியவர் என்று சொல்லுங்கள்.

கிடையாது.

ஏனென்றால், அவர் எல்லாவற்றையும் எதிர்த்து, மறுத்துப் பேசியிருக்கிறார். மதச் சாயம் அவருக்குக் கிடையாது. அதனால்தான் நீங்கள் மதச் சாயம் பூசாதீர்கள் என்று சொல்லுகிறோம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

இது கடவுள் வாழ்த்து. ஆதிபகவன் - பகவன் என்கிற பிராமணன்; ஆதி என்கிற  பறைச்சி; இந்த இரண்டு பேருக்கும் இடையில் பிறந்த சமூகம்தான் இந்த சமூகம். இப்படி ஒரு கதை.

அப்பொழுதே கலப்பு மணம் நடைபெற்று இருக் கிறது போலிருக்கிறது, அவர்களுடைய பார்வையில்.

அந்தக் கருத்தில் நமக்கு உடன்பாடில்லை.

ஆதி என்கிற பறைச்சி அல்லது புலைச்சி; பகவான் என்கிற பிராமணன், பார்ப்பனன். இவர்களுக்கிடையில் தோன்றிய உலகம்தான் மானுட உலகம், மனித உலகம்.

இந்த உலகத்திற்கு உள்ள எல்லா மனிதர்களும் இவர்களுக்குப் பிறந்தவர்களாம்.

கிறித்துவ மதத்தில் ஆதாம் - ஏவாள் என்று சொல் கிறார்கள்.

இவர்கள் ஆதி பகவன் என்று சொல்வதாகச் சொல்கிறார்கள்.

மூடிய வாயைத் திறந்ததும் வருகிற முதல் ஒலி ‘அ' - அதனால் அகர முதல எழுத்தெல்லாம்

அந்தத் திருக்குறளை நன்றாக நீங்கள் படித்துப் பாருங்கள்,

அகர முதல எழுத்தெல்லாம்

உலகத்தில் இருக்கிற எந்த சமூகமாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும், மூடிய வாயைத் திறந்ததும் முதலில் ஒலிக்கின்ற சொல் ‘அ' என்பதுதான். யாரும் ‘இ' என்று இளிக்கமாட்டோம். இதழ்களை விரித்தவுடன் வருகிற ஒலி  ‘அ'. வெள்ளைக்காரனாக இருந்தாலும், கருப்பனாக இருந்தாலும், இந்தியனாக இருந்தாலும், ஆஸ்திரேலியனாக இருந்தாலும், யாராக இருந்தாலும், மூடிய வாயைத் திறந்ததும் வருகிற முதல் ஒலி ‘அ' - அதனால் அகர முதல எழுத்தெல்லாம். இது உலகத்திற்கே பொருந்தும்.

பிறகு எப்படி ஆதிபகவன் என்று தமிழ்நாட்டிற்குள்  மட்டுமே அவருடைய சிந்தனை சுருங்கும். அது உலகத்திற்கே விரிந்து, உலகளாவிய பார்வை கொண்ட ஒரு மாமனிதருக்கு,  உடனே ஆதிபகவன் என்கிற இந்தியப் பார்வைக்குள் அல்லது தமிழ்நாட்டுப் பார்வைக்குள் எப்படி சுருங்கும்?

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்''  இது உலகளாவிய பார்வை; உள்ளூர்ப் பார்வையல்ல.

ஆதிபகவன் என்பது

ஆதவனைக் குறிக்கின்ற சொல்

ஆகவே, ஆதிபகவன் முதற்கே உலகு என்றால், ஆதிபகவன் என்பது ஒரு சொல்தான்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

ஆதிபகவன் என்பது ஒரு சொல்தான்; ஆதி யும்,பகவன் என்பதும் வேறு வேறு சொல்லல்ல. இரண்டு சொல் அல்ல.  எனவே, இரண்டு பெயராக இருக்க வாய்ப்பில்லை. ஆதிபகவன் என்பது ஒற்றைச் சொல். அப்படியென்றால், ஆதிபகவன் என்பது ஆதவனைக் குறிக்கின்ற சொல்லாகத்தான் இருக்க முடியும்.

ஏனென்றால், இந்த பூமி என்கிற உலகம், சூரியனி லிருந்து சிதறி வந்த, லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த ஒரு பகுதி, நிலப்பரப்பு. உலகம் பூமியிலி ருந்துதான் தொடங்குகிறது. ஏனென்றால், மனிதனுக்கு உலகம் பூமிதான். பிரபஞ்சத்தை இவன் உலகமாகப் பார்க்க மாட்டான். மனிதன் வாழக்கூடிய ஒரே கோள் பூமி. எனவே, மனிதன் பார்வையில் ஒரே உலகம் பூமி.

ஆக, உலகம் எங்கிருந்து தொடங்குகிறது என்றால், ஆதிபகவனிலிருந்து தொடங்குகிறது என்று அறிவியல் பார்வையோடு அய்யன் திருவள்ளுவன் ஆதவனைத்தான் குறிப்பிட்டு இருக்க முடியுமே தவிர, ஆதி என்கிற பறைச்சியையும், பகவன் என்கிற பிரா மணனையும் குறித்திருக்க வாய்ப்பே இல்லை.

கடவுள் வாழ்த்து  என்பதேகூட, இவர்கள் இடையில் சொருகியதாகத்தான் இருக்க முடியும்

எனவே, கடவுள் வாழ்த்து  என்பதேகூட, இவர்கள் இடையில் சொருகியதாகத்தான் இருக்க முடியும்; அந்தத் தலைப்போ, அதிகாரங்களோ அவர்தான் எழுதினார் என்பதற்கு நமக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

வ.உ.சி. போன்றவர்களே, ஏராளமான இடைச்செரு கல்கள் இருப்பதாகப்  பதிவு செய்திருக்கிறார்கள் என்று இப்பொழுது நாம் வாட்ஸ் அப்பில் பார்க்கிறோம்.

எனவே, பகுத்தறிவு என்பது குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தையும் விமர்சிப்பதற்கானது அல்ல. உலகம் முழுவதும்  உள்ள மக்கள் தலைநிமிர்ந்து தன்மானத் தோடு வாழ்வதற்கான சிந்தனை.

பகுத்தறிவு என்பது தமிழர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல.

உலகம் முழுவதும் அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தக் கூடியது.

பகுத்தறிவு என்பது குறிப்பிட்ட இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பதற்கானது அல்ல.

உலகில் எங்கெல்லாம் மூடநம்பிக்கைகள் இருக் கிறதோ, அறிவியலுக்கு முரணாக இருக்கின்றனவோ, அவ்வளவையும் எதிர்க்கிற, அதிலிருந்து மாறுபட்டு, அறிவியல் சார்ந்து சிந்திக்கிற ஒரு சிந்தனைதான் பகுத்தறிவு சிந்தனை.

உலகம் தழுவிய பார்வையுள்ள

ஒரு மாமனிதர் தந்தை பெரியார்!

எனவே, அய்யன் திருவள்ளுவர் உலகம் தழுவிய பார்வையுள்ள ஒரு மாமனிதர் என்பதுபோல, அய்யா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், உலகம் தழுவிய பார்வையுள்ள ஒரு மாமனிதர் என்பதைச் சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரையாற்றி னார்.

- விடுதலை நாளேடு, 21.12.19

திங்கள், 9 டிசம்பர், 2019

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

வடநாட்டுப் பணம் வருகிறது என்பதால் காவிகள் அத்துமீற வேண்டாம்!

சாலை விபத்துகளைவிட ஜனநாயக விபத்து ஆபத்தானது

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்


விருதுநகர்,டிச.1சாலைவிபத்துக்களைவிட ஜன நாயக  விபத்து ஆபத்தானது; வடநாட்டுப் பணம் வருகிறது என்பதால் காவிகள் அத்துமீற வேண்டாம் என்று திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நம்முடைய கழகத் துணைத் தலைவர் அவர்கள் உரையாற்றும்பொழுது ஒரு கருத்தை சொன்னார்கள். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு நீங்கள் வெள்ளமென திரண்டிருக்கிறீர்கள். காலையில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டில் அரங்கம் நிரம்பி வழியக்கூடிய அளவிற்கு திரண் டிருந்தீர்கள். அந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்து, பொதுக்கூட்ட நிகழ்ச்சியாக இங்கே கூடியிருக்கிறோம்.

நாட்டிலேயே திராவிடர் கழகம்தான்

முதல் இயக்கம்

இந்த நிகழ்ச்சி நடைபெறக்கூடிய அளவிற்கு, தொடங்கப்பட்ட காலத்திலிருந்து என்ன காரணத்தி னாலோ தெரியவில்லை; இந்த மண், நம்முடைய மண். கரிசல் மண் மட்டுமல்ல, காமராசருடைய பூமி. காமராசரைப் பார்த்து, பச்சைத் தமிழர் என்ற அளவில் வைத்து, சிறப்பாகத் தாங்கியவர் தந்தை பெரியார் அவர்கள். அதுமட்டுமல்ல, நீதிக்கட்சித் தலைவர்கள் எல்லாம் இங்கு வந்தவர்கள். இப்படிப்பட்ட வரலாறு உள்ள இந்த பூமியில், திராவிடர் கழகத்தின் சார்பில் கூட அல்ல, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், ஒரு அறிவார்ந்த, பதிவு செய்யப்பட்ட அமைப்பு. இன் னுங்கேட்டால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., நீதிபதிகள் எல்லாம் பங்கேற்ற அமைப்பு, உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பின் பொன்விழா மாநாட்டினை இங்கே நடத்துவதற்கு, இங்கே இருக்கின்ற யாரோ சில அனாமதேயங்கள் மொட்டைக் கடிதம் எழுதுவதோ அல்லது காவல்துறையினர் மிரட்டல் கடிதங்களை வைத்துக்கொண்டு, இங்கே கூட்டம் நடத்த அனுமதி யில்லை என்று சொல்வது. அதற்குப் பொருத்தமில்லாத அளவிற்கு அவர்களையே பார்த்து மற்றவர்கள் கேலி செய்து சிரிக்கக்கூடிய அளவிற்கு இருப்பது நியாயமா? காவல்துறையை மிகவும் மதிக்கக்கூடிய இயக்கம் இருக்கிறது என்றால், நாட்டிலேயே திராவிடர் கழகம் தான் முதல் இயக்கம். அதைத்தான் எங்களுடைய துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்கள்.

அனைவருக்கும் அனைத்தும்

கிட்டுவதுதான் சமூகநீதி

இந்த இயக்கம் அப்படிப்பட்ட ஒரு இயக்கம். சட்டம், ஒழுங்கு, அமைதி - இவை அத்தனையும் காப் பாற்றப்படவேண்டும். சமூக நல்லிணக்கம் நிறைந்து இருக்கவேண்டும். எந்த இடத்திலும் ஜாதிச் சண்டை களோ, மதச் சண்டைகளோ இருக்கக்கூடாது. மனித நேயம் மலரவேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிட்டுவதுதான் சமூகநீதி. சமத்துவம் என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரு இயக்கம் எங்கள் இயக்கம்.

நாங்கள் என்ன அரசியலுக்குப் போகக்கூடியவர் களா? குறைந்தபட்சம் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலுக் காவது எங்களுடைய தோழர்கள் போட்டியிடலாம் என்று சொல்லி, அதன் காரணமாக நாக்கிலே தேனைத் தடவி, எங்கள் பின்னாலே ஆட்களைக் கூட்டி வந்திருப்பவர்களா?

மக்களுக்காகப் பாடுபடுகிற ஒரு இயக்கம்.

இதோ வெள்ளம்போல இங்கே அமர்ந்திருக்கிறார் களே, இவர்கள் எல்லாம் பணம் கொடுத்து அழைத்து வந்தவர்களா? இதுவரையில் அப்படிப்பட்ட ஒரு நிலை இல்லாத ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இந்த இயக்கம் ஒப்பற்ற ஒரு இயக்கம். மக்கள் இயக்கம். மக்களுக்காகப் பாடுபடுகிற ஒரு இயக்கம். மக்களுக் காக எங்களை நாங்கள் தியாகம் செய்துகொள்வோமே தவிர, மக்களுக்கு ஒரு சிறு தொல்லைகூட கொடுக்காத அளவிற்கு,

பொதுச் சொத்துக்கு நாசமின்றி,

பொது அமைதிக்குப் பங்கமின்றி

பொது ஒழுக்கத்திற்குக் கேடின்றி

நடத்தவேண்டும் என்ற அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த பாதையில், அவர்கள் உருவத்தால் மறைந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் நெருங்குகிற இந்தக் காலகட்டத்தில்கூட, அவ்வளவு கட்டுப்பாடாக இருக்கின்ற இயக்கம் இந்தக் கருஞ்சட்டை இயக்கம் - இந்தப் பகுத்தறிவாளர் கழக இயக்கம்.

எங்களுடைய மாநாடு நடைபெற்றதே, யாருக் காவது இடையூறு உண்டா?

ஊர்வலம் நடத்தக்கூடாது;

கூட்டம் போடக்கூடாது - ஏன்?

இது என்ன நியதி?

அரசமைப்பு சட்டத்தில் இருக்கிற உரிமை என்ன?

மீண்டும் காற்று அடிக்கும்

எச்சிலிலை கீழே வரும்

நாங்கள் எல்லாம் சட்டம் படித்தவர்கள் என்பது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்; நியாயம் தெரிந்தவர்களைப் பார்த்துக் கேட்கிறோம். இந்த நாட்டில் காலூன்ற முடியாதவர்கள் எல்லாம், யாரோ சில பேர் இன்றைக்கு அடித்த காற்றில் மேலே போகின்ற சில எச்சில் இலைகள், மேலே வந்துவிட்டது என்கிற காரணத்திற்காக இந்த எச்சில் இலைகளுக்கு நீங்கள் சல்யூட் அடிக்க லமா? மீண்டும் காற்று அடிக்கும் எச்சிலிலை கீழே வரும்.

நாங்கள் எப்பொழுதும் மேலேயும் போக மாட்டோம்; கீழேயும் போகமாட்டோம்; ஒரே இடம்  நாங்கள் போகக்கூடியது சிறைச்சாலையைத் தவிர வேறு கிடையாது.

லஞ்சம் வாங்கிவிட்டு சிறைச்சாலைக்குப் போகக்கூடியவர்கள் அல்ல; ஊழல் செய்துவிட்டு சிறைச்சாலைக்குப் போகக்கூடியவர்கள் அல்ல. உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற் காக நாங்கள் சிறைச்சாலைக்குப் போகக்கூடிய வர்கள்.

நாங்கள் சர்வபரிதியாகம்

செய்துகொள்ளக் கூடியவர்கள்

உங்கள் பிள்ளைகள் டாக்டர்களாக வேண்டும் என்பதற்காக, எங்களை நாங்கள் ‘‘சர்வபரிதியாகம்'' செய்துகொள்ளக் கூடியவர்கள்.

உங்கள் பிள்ளைகள் உத்தியோகம் பெறவேண்டும் என்பதற்காக சிறைச்சாலைகளுக்குச் செல்பவர்கள் நாங்கள்.

இப்படிப்பட்ட எங்களுடைய தொண்டர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள் என்று மார்தட்டி னாரே தந்தை பெரியார் - அப்படிப்பட்ட ஒரு அற்புத மான இயக்கம் இது.

இது ஏதோ ஒரு சமூக விரோத இயக்கத்தைப் போல-

இது ஏதோ ஒரு தீவிரவாத இயக்கத்தைப் போல-

இது ஏதோ பெரிய பயங்கரவாத இயக்கத்தைப் போல - தவறாக நீங்கள் நினைத்துக் கொண்டு, அனுமதி மறுக்கிறீர்கள்.

மேலதிகாரிகள் சரியாக இருக்கிறார்கள்; புதிதாக வந்த அதிகாரிகள் சரியாக இருக்கிறார்கள். இதற்கு மேல் நான் இந்த சொல்லை சொல்வதற்கு என்னுடைய தகுதிக்குக் குறைவு என்று நினைக்கின்றேன். ஏனென் றால், யாரும் காவல்துறையினரின் மதிப்பைக் குறைக் கக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும், காவல்துறையை நம்பித்தான் இருக்கவேண்டும்.

கருஞ்சட்டைப் படை என்கிற காவல்துறை

நமக்குப் பிடிக்காத நிலை என்று கருதியவுடன், காவல்துறையை நாம் கொச்சைப்படுத்திவிட்டு, அத னுடைய மரியாதையை நாம் குறைத்துவிட்டோமே யானால், மீண்டும் நாட்டிற்குப் பாதுகாப்பு இருக்காது.  இராணுவம் எப்படி நாட்டிற்கு மிக முக்கியமோ, அதுபோலத்தான் காவல்துறை. ஆனால், அந்தக் காவல்துறையின் கட்டுப்பாட்டையும் தாண்டி இருக்கிற தனி ஒரு காவல்துறை உண்டு - அதுதான் கருஞ்சட்டைப் படை என்கிற காவல்துறை.

தமிழகத்தில் மட்டுமல்ல, சமுதாய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இங்கே உரையாற்றிய டாக்டர் அம்மையார் சொன்னாரே, அவர் என்ன திராவிடர் கழகத்துக் காரரா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்தவரா? ஒரு பிரபலமான டாக்டர். அறிவுபூர்வமான சிந் திக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான பெண்மணி. அவர் மிகவும் எளிமையாக சொன்னார்.

திராவிடர் கழகத்தினரின் பணியை யாராவது, இந்திய நாட்டில் செய்கிறார்கள் என்று காவல் துறையோ அல்லது வேறு ஏவல் துறையோ சொல் லட்டும்.

இது இந்திய அரசமைப்புச் சட்டம். இதன்மீதுதான் பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்.

அதிலே அடிப்படை உரிமை என்பது முன் பகுதி.

அதற்கடுத்து இருக்கக்கூடிய பகுதி, புதிதாக இணைக்கப்பட்ட பகுதி - அதுவும் நெருக்கடி நிலை  காலகட்டத்தில்.

Fundamental duties
51-A, I it shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and Reform.

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக் கின்ற அடிப்படைக் கடமைகள்.

நழுவக்கூடாதது, தவறக்கூடாத ஒரு கடமை என்னவென்றால், பல கடமைகள் இருக்கின்றன.

ஆதாரமில்லாமல் பேசிப் பழக்கப்பட்டவர்கள் அல்ல பெரியார் தொண்டர்கள்

51-ஏ,  யார் வேண்டுமானாலும் அதனைப் படித்துப் பார்க்கலாம். ஆதாரமில்லாமல் பேசிப் பழக்கப்பட்ட வர்கள் அல்ல பெரியார் தொண்டர்கள். எனவே, ஆதாரத்தோடுதான் நாங்கள் சொல்லுகிறோம்.

அதில் ஒரு பகுதி,

ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப் பான்மையை வளர்க்கவேண்டும்.

மனிதநேயம்,  ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கக்கூடிய உணர்வு வரவேண்டும்.

அதற்குமேலே சீர்திருத்தம்.

இந்த அடிப்படைக் கடமையை நிறைவேற்றக் கூடிய இயக்கம் நாட்டில், இந்தியாவில், உலகத்தில் பெரியார் இயக்கமான திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகத்தைத் தவிர, இதனை முழு வேலையாக செய்துகொண்டிருக்கிற ஒரே இயக்கம் இந்த இயக் கத்தைத் தவிர வேறு எந்த இயக்கம்?

இந்த இயக்கத்தின் பிரச்சாரம் பரவினால், உங்கள் வேலை சுமை குறையும்.

பெரியார், யாருக்காகப்  பிரச்சாரம் செய்தார்?

இந்த இயக்கத்தினுடைய பிரச்சாரம் பரவினால், கலவரங்கள் இருக்காது; காலிப்பயல்களுக்கு நாட்டில் இடம் இருக்காது.

வாலாட்டலாம் என்று நினைக்கக்கூடாது. மக்கள் தானே திருந்தக் கூடிய நிலையில் இருப்பார்கள்.

நாங்கள் கேட்பது என்ன?

95 வயது வரையில் வாழ்ந்தாரே பெரியார், யாருக்காகப்  பிரச்சாரம் செய்தார்?

பகுத்தறிவு குடும்பத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார், ‘‘தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவருடைய வகுப்பு மாலை நேரத்தில் தொடங்கும். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அறிவுறுத்துவார். மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் பேசினார்'' என்றார்.

சாலையோர விபத்துகளைவிட ஜனநாயக விபத்துகள் ஆபத்தானவை

எண்ணிப் பாருங்கள் தோழர்களே, யாரோ சிலர் பேசுகிறார்கள்; கூலிகள், வடநாட்டுக்காரன் பணம் கொடுக்கிறான் என்பதற்காக, வடநாட்டுக் காவிகளின் பணம் வருகிறது என்பதற்காக, இங்கே திடீரென்று பல நேரங்களில் ஜனநாயகத்தில்  விபத்துகள் ஏற்படு வது உண்டு. சாலையோர விபத்துகளைவிட ஜன நாயக  விபத்துகள் ஆபத்தானவை. அப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு வந்துவிட்டார்கள் என்பதற்காக, ஏதோ அதுதான் நிரந்தரம் என்பது போல,

எங்கள்மீது ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

காலங்காலமாக, 50 ஆண்டுகாலமாக நாங்கள் இந்தப் பணியை செய்துவருகிறோம். ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

திராவிடர் கழகம் தன்னுடைய பணியை செய்து கொண்டு வருகிறது 75 ஆண்டுகாலமாக - அதனுடைய பவளவிழாவை கொண்டாடுகிறது. யாராவது விரலை நீட்ட முடியுமா? இன்ன குற்றம் என்று சொல்ல முடியுமா? தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும்.

யாருக்காக நாங்கள் பாடுபடுகிறோம்?

இந்த இயக்கத்தின் கொள்கை என்ன?

இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றவரை கவிழ்த்துவிட்டு, அந்த நாற்காலியை நாங்கள் பிடிக்கவேண்டும் என்பதற்காகவா?

எங்களைப் பொறுத்தவரையில், ‘‘துறவிக்கு வேந்தன் துரும்பு''

இதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எங்களுக்கு எந்த நாற்காலியைப்பற்றியும் கவலை யில்லை. காரணம் என்ன?

எங்களுடைய கொள்கை - சமத்துவம். அதுகூட புரியாத சிலர் சொல்வார்கள். இங்கே நண்பர்கள் விளக்கினார்கள்; தோழர் இராசா அவர்களும் விளக் கினார்கள்; நம்முடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன் அவர்களும் சொன்னார்கள்.

கடவுள் மறுப்போ, பார்ப்பன எதிர்ப்போ எங்களு டைய கொள்கையல்ல. அது ஒரு திட்டம்.

ஏன்?

ஜாதி ஒழியவேண்டும் என்பதற்கு குறுக்கே எவை இருந்தாலும் எதிர்ப்போம்.

சமத்துவம் நிலைக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, நடத்துவது மனுதர்ம ஆட்சியா?

யாரையும் புண்படுத்துவது எங்கள் வேலையல்ல!

இன்றைக்கு அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அம்பேத்கர் போன்றவர்களால்  உரு வாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு, அந்த இடத்தில் நடைபெறுவது என்ன? மனுதர்மம்.

இதனைத் தட்டிக் கேட்பதற்கு எங்களைவிட்டால், நாதியுண்டா தோழர்களே, உங்களுக்கு. இந்த மக்களுக்கு நாதி உண்டா?

யாரையும் ‘புண்படுத்துவது' எங்கள் வேலையல்ல-

யாரிடத்திலும் வீண் வம்புக்குப் போவது எங்கள் வேலையல்ல -

இது புரட்சிகரமான இயக்கம். இதற்கு ஒப்பான ஒரு புரட்சி இயக்கத்தை  நீங்கள் உலக வரலாற்றில் பார்க்க முடியாது.

எங்கள் புரட்சி வெறும் ரத்தம் சிந்துகின்ற புரட்சியல்ல - அறிவுப் புரட்சி - அமைதிப் புரட்சி - மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய புரட்சி.

மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால்,

சமத்துவத்திற்கு எதிரி யார்?

பகுத்தறிவினுடைய உணர்வு என்னவென்று அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டால், அதற்குப் பிறகு, தானே எல்லாம் சரியாகும்.

சமத்துவத்திற்கு எதிரி யார்?

என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டாமா?

சொன்னார்களே,

முகத்திலிருந்து பிறக்க முடியுமா?

தோளிலிருந்து பிறக்க முடியுமா?

தொடையிலிருந்து பிறக்க முடியுமா?

காலிலிருந்து பிறக்க முடியுமா?

அறிவியல் பூர்வமாக வந்த அரசமைப்புச் சட் டத்தை எடுத்துவிட்டு, எப்பொழுதோ உளறி வைத் தார்கள், எழுதி வைத்திருக்கும் மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறது?

எங்களுக்கு யாரையும் புண்படுத்துவதோ அல்லது யாரையோ கொச்சைப்படுத்துவதோ, தனி மனித விரோதமோ எங்களுக்கு முக்கியம். கிடையாது. தயவு செய்து நடுநிலையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு''

இளைஞர்களே,

மானம் பெரிது.

தந்தை பெரியார் சொன்னார், உலக மக்களுக்காக சொன்னார்; ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொல்லவில்லை.

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு''

மனிதர் என்று எவன் இருக்கின்றானோ அவனுக் குப் பகுத்தறிவு. அறிவு, அறிந்து கொள்வது. பகுத்தறிவு, ஆராய்ந்து, எது நல்லது? எது கெட்டது? எது தேவை? என்று அறிந்து கொள்வது.

‘‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்'' என் பதுதானே முக்கியம். இதுதானே பண்பாடு.

ஆனால், மனுதர்மத்தில் என்ன எழுதி வைத்திருக் கிறார்கள்; அதைத்தானே இப்பொழுது தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்; அதைத்தானே கல்விக் கொள்கையாகக் கொண்டு வருகிறார்கள்.

இந்த அமைப்பு இல்லை என்றால், அதனை எடுத்துச் சொல்லக்கூடிய நாதி இல்லையே!

என்னுடைய கையில் இருக்கின்ற புத்தகம் அசல் மனுதர்மம். நாங்கள் போட்டதல்ல. பார்ப்பனர்கள் அச்சிட்டது.

ஒரு வரிகூட மாற்றம் இல்லாமல், 1919 - நீங்களோ, நாங்களோ பிறக்காத காலம். நூறு ஆண்டுகளுக்கு முன் -

திருவந்திபுரம் இளையவல்லி கோமாண்டூர்  இராமானுஜ ஆச்சாரியார்

அவர் எழுதிய புத்தகம். அச்சு போடுகிறவர் யார்?

நம்மாள்.

அவர்கள் கெட்டிக்காரர்கள்; அவர்களுடைய செலவில் செய்யமாட்டார்கள்.

வெந்தக் காய்கறிக்குத்தான் தீட்டு; வேகாத காய்கறிக்குத் தீட்டு கிடையாது

ஏனென்றால், அவாளுக்கு வெந்தக் காய்கறிக்குத் தான் தீட்டு; வேகாத காய்கறிக்குத் தீட்டு கிடையாது.

இலவசமாகக் கிடைக்கும் தண்ணீருக்குத் தீட்டு உண்டு-

ஆனால், பாலுக்குத் தீட்டு கிடையாது

நெய்க்குத் தீட்டு கிடையாது.

ஏனென்றால், மாட்டிடம் உதையை வாங்கிக் கொண்டு பாலைக் கறக்கிறான் பாருங்கள், அவன் கீழ்ஜாதி.

அதேபோன்று, பணத்திற்குத் 'தீட்டு' கிடையாது-

பச்சரிசிக்குத் தீட்டு கிடையாது.

ஆனால், சமைத்துக் கொடுத்தால் மட்டும் ‘தீட்டு'; சாப்பிட மாட்டேன் என்பார்கள்.

இப்படி சொல்லி சொல்லி, காலம் காலமாக ஏமாற் றிய உன்னை, பகுத்தறிவோடு சிந்தித்துப் பார் என்று சொன்ன ஒரு மாபெரும் இயக்கம்தான் பகுத்தறிவாளர் இயக்கம் - அதை சொன்ன தலைவர்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

இப்பொழுதுதான் மும்பையில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது

மனுதர்மத்தைக் கொண்டு வந்து அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்கிறார்கள்.  இந்த இயக்கம் இல்லை என்றால், அதைத் தட்டிக் கேட்கவில்லை என்றால், எதிர்க்கவில்லை என்றால் - தமிழ்நாடுதான் இன்றைக்குக் கலங்கரை விளக்கம். மற்ற இடங்களில் எல்லாம் கப்பல்கள் முட்டிக் கொள்கின்றன - அங்கே இருட்டு.

இப்பொழுதுதான் வடமாநிலங்களில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இப்பொழுதுதான் பல இடங்களுக்குப் பரவுகிறது. பரவும், பரவாமல் இருக் காது. ஏனென்றால், இது ஏவுகணை - பெரியாருடைய சிந்தனை இருக்கிறதே, அது ஏவுகணை போன்றது.

இலக்கு நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்.

அசல் மனுதர்மம்

முதல் அத்தியாயம், சுலோகம் 87

‘‘அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறு மைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியே பகுத்தார்.''

இது மனுதர்ம வாசகம்.

உடனே நம்மாள் சொல்வார்கள், வீரமணி வந்தான், திராவிடர் கழகத்துக்காரன் வந்தான்; இந்து மதத்தை மட்டும்தான் பேசினான். வேற மதத்தைப்பற்றி பேசவில்லை.

மதம் பிடித்த மனிதனுக்குப் போடுகிற

ஊசிதான் பகுத்தறிவு ஊசி

மனிதர்களுக்கே மதம் பிடிக்கக்கூடாது; யானைக்கு மதம் பிடித்த படுகிற பாட்டை பார்க்கிறோம். மதம் பிடித்து யானையை ஊசிப் போட்டு அடக்குகிறார்கள். அதுபோன்று, மதம் பிடித்த மனிதனுக்குப் போடுகிற ஊசிதான் பகுத்தறிவு ஊசி. அதுதான் பெரியாருடைய ஊசி.

இதை நாங்கள் சொல்லவில்லை.

எந்த மதம் எங்களை ‘‘சூத்திரனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘பறையனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘சக்கிலியனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘கேவலமாக்குகிறது?''

எந்த மதம் என்னுடைய தாயை ‘‘தேவடியாள்'' ஆக்குகிறது?

அந்த மதம் எனக்குத் தேவையா? தூக்கி வங்காள விரிகுடாவிற்கு அப்பால் போடவேண்டாமா?

சொல்லுங்கள்!

‘‘இந்து மதம் எங்கே போகிறது?''

நான் சொல்லவில்லை. இதோ அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்து மதம் என்ற பெயரே வெள்ளைக்காரன் கொடுத்தது, வெளிநாட்டுக்காரன் கொடுத்தது.

சொன்னது பெரியாரல்ல - சங்கராச்சாரியார்.

எங்களுக்கு மதம் பிடிக்காது. அருமையாக புரட்சிக்கவிஞர் சொன்னார்:

இந்த மண்ணில்

எண்ணிலா மதங்கள்

கந்தகக் கிடங்கில்

கனலின் கொள்ளிகள்

என்றார்.

நூறு வயது வரையில் வாழ்ந்த அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார், கடைசியில் உண்மை யைச் சொல்லிவிட்டுப் போனார்.

காஞ்சி சங்கராச்சாரியார், சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனாரே அந்த சங்கராச்சாரியாருக்கு குருநாதர். இப்பொழுது இறந்துபோனவர், ஜெயிலுக் கும், பெயிலுக்கும் அலைந்தவர். அவருக்கு முன்பு இருந்தவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

அவருடைய நண்பர்தான் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார். அவர் எழுதியுள்ள ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்தகத்தின் 19 ஆம் பக்கத்தில்,

ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட் டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கை யோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட் டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர் கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

சொல்லுவது யார்?

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்.

வழக்குப் போடுங்கள்!

ஆகா, இப்படியெல்லாம் நீங்கள் பேசினால், வழக்குப் போடுவோம் என்று யாராவது சொன்னால், வழக்குகளைக் கண்டு சளைப்பவர்களா? நாங்கள். மற்றவர்களுக்காவது வழக்குரைஞர் தேவை. எனக்கு அதுவும் தேவையில்லை. அதற்காகத்தானே படித்திருக்கி றோம்.  வழக்குப் போடுங்கள். இங்கே சொல்லுவதை விட, நீதிமன்றத்தில் சொன்னால், நன்றாகப் பதிவாகும்.

கடவுள் மறுப்புக்கு ஒருவர் வழக்குப் போட்டு, இப்பொழுது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

பெரியார் எப்பொழுதெல்லாம் கடவுள் மறுப்பு சொன்னார் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் (ஒரு பார்ப்பனர் நீதிபதி உள்பட) ஆதாரத்தோடு எழுதினார்கள்.

ஆகவே, வழக்கு போடட்டும். அதைப்பற்றி கவலையில்லை.

மேலும்  அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? நூலில்,

மனு?  வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனை வருக்கும் அறிவு குறைவு.

அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கி றோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.

நாங்கள் ஏன் மனுதர்மத்தை எதிர்க்கிறோம்?

நாங்கள் ஏன் ஜாதி தர்மத்தை எதிர்க்கிறோம்?

நாங்கள் ஏன் வருணாசிரம தர்மம் ஒழியவேண்டும் என்கிறோம்?

அந்த வருண தர்மத்தை நானே உருவாக்கினேன்; நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று பகவான் கண்ணன் கீதையில் சொன்னான் என்றால், கீதையும் எங்களுக்கு விரோதிதானே!

தனிப்பட்ட முறையில் கீதை மீது எங்களுக்கு என்ன கோபம்?  கிருஷ்ணன்மேல் என்ன கோபம்?

நான்கு வருணத்தை நானே உண்டாக்கினேன்; நானே நினைத்தாலும் அதனை மாற்ற முடியாது'' என் கிறான், கிருஷ்ணன் கீதையில். அரசமைப்புச் சட்டத் தையே நூறு முறை திருத்தலாம்; ஆனால், அவர் சொன்ன தர்மத்தை, அவராலேயே மாற்ற முடியாதாம்.

மேலும்  அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? நூலில்,

பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு -

சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.

“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் போகிறது மனு.

இந்த இயக்கம் ஏன் தேவை? இன்னும் நூறாண்டுக்கு அல்ல; இன்னும்பல ஆண்டுகளுக்கு.

கடைசி முட்டாள் இருக்கின்ற வரையில்,

கடைசி தற்குறி இருக்கின்ற வரையில்,

கடைசி அறியாமையில் உழலக் கூடியவன் இருக்கின்ற வரையில்,

கடைசி நிர்மூடன் இருக்கின்ற வரையில்,

இந்த இயக்கம்  தேவைப்படும்.

அறிவியல் தேவைப்படுவதைப்போல,

இருட்டை நீக்க வெளிச்சம் தேவைப்படுவதுபோல,

இதனுடைய விளைவு என்ன நண்பர்களே!

நாம் படிக்காத மக்களானோம்; ஏன் மூட்டைத் தூக்கினோம். நீதிக்கட்சி வருவதற்கு முன் எத்தனை பேர் நம்முடைய நாட்டில் படித்தோம்.

(தொடரும்)

விடுதலை நாளேடு 1 12 19

எந்த மதம் எங்களை சூத்திரனாக, பஞ்சமனாக ஆக்குகிறதோ அதை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய வேண்டாமா?

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முரசம்

விருதுநகர், டிச.2  எந்த மதம் எங்களை சூத்திரனாக, பஞ்சமனாக ஆக்குகிறதோ அதை வங்காள விரி குடாவில் தூக்கி எறியவேண்டாமா? என்று முரசு கொட்டினார் திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘தமிழன் அடிமையானது எவ்வாறு?''

இன்னொரு ஆதாரத்தைச் சொல்லுகிறேன்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தில் துணை வேந்தராக இருந்த மிகப்பெரிய தமிழ றிஞர் - நம்முடைய அருமை நண்பர் டாக்டர் அற வாணன் அவர்கள்.

அவர் எழுதிய ‘‘தமிழன் அடிமையானது எவ்வாறு?'' என்ற நூலில் சொல்கிறார்,

‘‘காலந்தோறும் தமிழருடைய கல்வி அறிவு போதுமானதாக இல்லை; சுத்தமாக இல்லை. 1901 இல் ஆங்கிலேயரால் எடுக்கப்பெற்ற  முதல் மக்கள் தொகை அறிவிப்பின்படி தமி ழருள் படித்தோர் தொகை ஒரு விழுக்காட் டிற்கும் குறைவுதான்; 99% பேர் படிக்காமல் இருந்தனர்.  அக்காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லச் செல்லத் தமிழர் கல்வி கற்றதற்கான தடயங்கள் மிகமிகக் குறைவாக உள்ளன. அல்லது இல்லாமலே உள்ளன. நாயக்கர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், பிற்காலச் சோழர் காலம், பல்லவர் காலம், களப்பிரர் காலம், சங்ககாலம் எனப் பின்னோக்கிப் பார்க் கும்பொழுது கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, சீனம், யூத நாடுகளைப் போல மக்கள் நிறுவன வழி கல்வி கற்றதற்கான அல்லது கல்வி கற் பித்ததற்கான தடயங்களே இல்லை. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளில் அரசர்கள், பிராமணர்கள் நான்கு வேதங்களையும் கற்க மானியங்கள் வழங்கிய செய்திகள், அரசர் ஆட்சிதோறும் காணப்படுகின்றன. எந்தச் செலவுமில்லாமல் இலவசமாகப் பிராமணர் களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு அரசே  மானியங்கள் வழங் கிற்று என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன'' என்று பேராசிரியர் க.ப.அறவாணன் குறிப்பிடுகின்றார்.

எனவே, நம்மாள் படிக்கவில்லை. படிக்கச் சொல்லி முதல் முயற்சியை செய்த இயக்கம் திராவிடர் இயக்கம் - நீதிக்கட்சி.

நீதிக்கட்சி 1920 இல் பிறக்கவில்லை என்றால், நமக்கு யாருக்கும் படிப்பறிவு வந்திருக்காது. ஏழு சதவிகிதம்கூட இல்லையே! நாம் எல்லாம் இன் றைக்குப் பெருமைப்படுகின்றோமே, அய்.ஜி.யாக, டி.அய்.ஜி.,யாக நம்மாட்கள் வந்திருக்கிறார்கள்; எங் களுக்குப் பெருமை. அதிகாரிகளாக காவல்துறையில் வந்திருக்கிறார்கள்; எங்களுக்குப் பெருமைதான்.

அவர்கள் எங்களுடைய கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கட்டும்; ஆனால், காக்கிச் சட்டைக்குள் வெறும் பூணூல் இருந்ததற்குப் பதில், இன்றைக்கு நம்மாள்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றோம் பாருங்கள்.

இது எப்படி நடந்தது?

முப்பத்து முக்கோடி தேவர்கள் வரம் கொடுத்ததால் நடந்ததா?

நாற்பத்தைந்தாயிரம் ரிஷிகளால் வந்ததா இது?

பெரியார் என்ற மாமனிதருடைய உழைப்பினால் வந்த பலன் அல்லவா!

நீதிக்கட்சியினுடைய பலன் அல்லவா!

கல்வி வள்ளல் காமராசர் கேட்டாரே, ‘‘எவன்டா உன் தலையில் எழுதினவன்? அவன் தலையைக் கொண்டு வா - அதனை மாற்றி எழுதுவதற்காகத்தான் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன்'' என்று சொன்னவர் காமராசர்.

இராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டம் - குலக்கல்வித் திட்டம். அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்பது.

அந்தக் குலக் கல்வித் திட்டம் மறுபடியும் இப் பொழுது வரப் போகிறது.

அதனுடைய முன்னோட்டம்தான் நீட் தேர்வு -

அதனுடைய முன்னோட்டம்தான் புதிய கல்விக் கொள்கை.

இந்தப்  பீடிகையை ஏன் நான் போட்டேன் என்று சொன்னால்,  நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எந்தக் கட்சிக்காரராக வேண்டுமானாலும் நீங்கள் இருங்கள்; தேர்தல் நேரத்தில் யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டுப் போடுங்கள்; ஏலம் போட்டு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள்.

இப்பொழுது ஏலம்தானே நடக்கிறது, மிக முக்கியமாக.

ஏலம் என்ற கோலம் - தேர்தல் காலம்.

அது எங்களுக்கு முக்கியமல்ல.

மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு

அருமை நண்பர்களே, உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டாமா?

உங்கள் பாட்டன் படிக்கவில்லை,

உங்கள் பாட்டி படிக்கவில்லை.

உங்கள் அப்பன் படிக்கவில்லை

என் அப்பன் படிக்கவில்லை

நான் படித்தேன், என் மகன் படித்தான்

என் பேரன் இனிமேல் படிக்க முடியாது. காரணம், மீண்டும் குலக்கல்வி கதவைத் தட்டிக் கொண்டு வருகிறது. அதுதான் காவிக் கொள்கை - அதுதான் மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு.

இதனை சொல்வதற்கு இந்தக் கூட்டத்தைத் தவிர, வேறு எந்தக் கூட்டமும் வாய் திறக்காது. திராவிட இயக்கம்தான் அதனை செய்யும்.

இன்றைய டாக்டர்களுக்குத் தெரியுமா?

எத்தனைப் பேர்களுக்குத் தெரியும் - இன்றைய டாக்டர்களுக்குத் தெரியுமா? இந்த இயக்கம் என்ன செய்தது என்பதுபற்றி.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன் நண்பர் களே, காதைத் தீட்டிக்கொண்டு காவல்துறையும், அரசாங்கத் துறையும் பதிவு செய்யட்டும்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்,  மருத்துவப் படிப்பிற்கு மனு போடவேண்டுமானால், சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் மனு போட முடியும்.

அதனை நீக்கிய பெருமை நீதிக்கட்சியைச் சார்ந் தது; திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தது. அதனால்தான், நம்மாள்கள் எல்லாம் படித்தார்கள்.

இன்றைக்குத் திரும்பிய பக்கமெல்லாம், இளஞ்செழியன் எம்.பி.பி.எஸ்., நெடுஞ்செழியன் எம்.பி. பி.எஸ்., அன்பழகன் எம்.பி.பி.எஸ்.

ஆக, இவையெல்லாம் வந்ததற்குக் காரணம்,

இந்த இயக்கம். சரசுவதி  பூஜையை நீங்கள் தொடர்ந்து கொண்டாடிய காரணத்தினால் அல்ல. அல்லவே அல்ல.

சரசுவதி என்று பெயர் கொண்ட பாட்டிக்கே கையெழுத்துப் போடத் தெரியாது. பேத்தி சரசுவதி பொறியாளர் சரசுவதி, மருத்துவர் சரசுவதி, நீதிபதி சரசுவதி என்றால், அது இந்த இயக்கத்தினுடைய சாதனையாகும்.

இந்த இயக்கம் இல்லாவிட்டால்,

இந்தக் கொள்கைப் பரவாவிட்டால் என்னவாகி யிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் தோழர்களே!

இப்பொழுது வேகமாக வருகிறார்கள்,

புதிய கல்விக் கொள்கை,

சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிறார்கள்.

வெறும் 25 ஆயிரம் பேர் பேசும் மொழியான சமஸ்கிருத மொழியை...

130 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில், வெறும் 25 ஆயிரம் பேர் பேசும் மொழியான சமஸ்கிருத மொழியை - அனைத்து மக்களும் படிக்கவேண்டும் என்றால், என்ன நியாயம்?

செம்மொழி தமிழ் என்று கலைஞர் பாடுபட்டு உருவாக்கினாரே, அந்த செம்மொழி நிறுவனம் இன்றைக்குத் தினக்கூலி நிறுவனமாக ஆக்கப்பட்டு விட்டதே!

இதிலே நடுவிலே நடுவிலே வித்தைகள். நம்மு டைய பிரதமர் மிக அழகாக வித்தை காட்டுவார்; வித்தையிலேயே மிகச்சிறந்த வித்தை மோடி வித்தை தான். மோடி வித்தை மிக அழகாகக் காட்டுவார்.

‘‘டமில், டமில் ரொம்ப ரொம்ப ரொம்ப புராதான மொழி.

டமில் வால்க!

திருவள்ளுவர், டமில் வாழ்க!

வேட்டிக் கட்டிக்கொண்டு டமில் வாழ்க என்று சொல்வார்.

யாரை ஏமாற்றுகிறீர்கள்?

நாங்கள் ஏமாறுவோமா?

நாங்கள் போதைக்கு அடிமையானவர்கள் அல்ல; நாங்கள் டாஸ்மாக் கடையின் முன் நிற்கக்கூடிய கூட்டமல்ல; அறிவைத் தட்டி எழுப்பக் கூடிய கூட்டம்.

ஆச்சாரியாருடைய குலக்கல்வி

மீண்டும் புதிய வடிவத்தில் வருகிறது

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆச்சாரியாருடைய குலக்கல்வி மீண்டும் புதிய வடிவத்தில் வருகிறது. பழைய கள்; புது மொந்தை.

எனவேதான், இந்த மாநாட்டினுடைய 21 தீர் மானங்களில் மிக முக்கியமான தீர்மானம், பெற் றோர்களே உங்களுக்காக, மாணவச் செல்வங் களே உங்களுக்காக - எங்களுக்காகவோ, எங்களுடைய பேரப் பிள்ளைகளுக்காகவோ -  எங்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்காகவோ அல்ல - கருப்புச் சட்டைக்காரர்கள் பிள்ளை களுக்கோ அல்ல - எங்களை எதிர்க்கிறார்கள் பாருங்கள், புரியாமல் - அந்தக் காவிச் சட்டைக் காரருடைய பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.

நீட் தேர்வு  ஒழிந்தால்தான், உங்களுடைய பிள்ளைகளும் படிக்க முடியும்.

இல்லையென்றால், எல்லாம் அனிதாக்கள் தான்; எல்லாம் சுபசிறீக்கள்தான். நம்முடைய பிள்ளைகள் எவ்வளவு காலம்தான் தற்கொலை செய்துகொண்டிருப்பது.

டாக்டர் ஷாலினி இவ்வளவு பெரிய டாக்டராக வந்திருக்கிறாங்க. இவர்கள் என்ன நீட் தேர்வு எழுதியா வந்தார்கள்? நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

நமது இயக்கம்  - அறிவுப் புரட்சி இயக்கம்

1. நமது இயக்கம் புரட்சி இயக்கம் - மாறுதலை விரும்பும் உழைக்கும் புரட்சி இயக்கம்.

2. ரகசியம் இல்லாதது

3. வன்முறை, வெறியாட்டம், காலித்தனம், கலவரம் இவற்றில் நம்பிக்கை இல்லாத, பங்கு கொள்ளாத அறிவுப் புரட்சி இயக்கம்.

4. இதுவரை நடத்திய கிளர்ச்சிகள் - அறப் போராட்டங்களில் ரத்த ஆறு ஓடியதா?

5. கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து உண்டா?

6. முகமூடித்தனம் எங்கள் இயக்கத்தில் இல்லை?

7. பொதுச்சொத்துக்கு நாசம் உண்டா?

8. இளைஞர்களின் கட்டுப்பாடு

9. சிறைக்கஞ்சா நெஞ்சுறுதி

10. தன்னலம் துறந்த தற்கொலை பட்டாளம்

11. இயக்கத்தால் சம்பாதித்தவர்கள் உண்டா?

12. தீவிரவாதம் - பயங்கரவாதம் ஒன்றாவது உண்டா?

13. பெரியார் ஒரு முறிமருந்து - விஷக்கடிக்கு மாற்று (தீவிர மாற்று மருந்து) ஒன்றுதான் மருந்து!

வாய்ப்புக் கொடுத்தால்

அறிவு வருகிறது

சந்திராயன் சிவன் இருக்கிறார். சிவன், சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறார். அப்பேர்ப்பட்ட சிவன், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். மயில்சாமி அண்ணாதுரை எங்கே படித்தவர். இந்தி படித்தவரா? சமஸ்கிருதம் படித்தவரா? ஆங்கில மொழியில் படித்தவரா? இல்லையே! எம்மொழி செம்மொழி!

வாய்ப்புக் கொடுத்தால் அறிவு வருகிறது. இது வரையில் வாய்ப்புக் கொடுக்கவில்லை; எங்களைத் தட்டித் தட்டி வைத்திருந்தீர்கள்.

உனக்குப் படிப்பு வருமாடா?

தர்ப்பைப் புல்லைக் கிள்ளி உன் வாயில் போட் டால்கூட, உன் நாக்கில் போட்டால்கூட உனக்குப் படிப்பு வராதுடா, போடா சூத்திரப் பயலே என்று கேட்ட வாத்தியார்தானே, பார்ப்பான் வாத்தியார் தானே இருந்தான்.

இன்றைக்குத்தானே எங்கள் ஆள்கள் வாத்தி யார்களாக எல்லாம் வந்திருக்கிறார்கள். அதனால் தானே வாத்தியார்களை மட்டம் தட்டுகிறார்கள். ஆசிரியர்களே வரக்கூடாது என்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, நீட் தேர்வு எத்தனை  உயிர்களை பலிவாங்கி இருக்கிறது.

இரட்டை வேடம் போடலாமா தமிழக அரசு

ஒரு அரசாங்கம் -  இரட்டை வேடம் போடலாமா - தமிழக அரசு.

நீட் தேர்வை நாங்கள் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளமாட்டோம். எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண் டாரா?

நுழைவுத் தேர்வை அவர் கொண்டு வந்தபொழுது, 21 ஆண்டுகள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து நாங்கள் போராடி, இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

கலைஞர் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களுக்கு இருக் கலாம், அது வேறு விஷயம். கடைசியில் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டார்கள். அவருடைய பெயரை சொல்லக்கூடிய தமிழக அரசு - அந்த சகோதரர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்,  உங்களுக்குப் போட்டியாக நாங்கள் உங்களுடைய நாற்காலியில் உட்காரப் போகிறோம் என்றா கேட்கிறோம்.

ராஜாவை மிஞ்சும்

ராஜ விசுவாசிகள்

எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்?

உங்கள் பலகீனங்கள் ஏன் டில்லிக்கு அடிமையாக உங்களை ஆக்குகிறது.

டில்லி சொல்லிவிட்டது என்றவுடன், அந்தக் கல்வித் திட்டம் இன்னும் அமுலுக்கு வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு முன்பாகவே அறிவிப்பு செய்துவிட்டார்கள். ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகள்.

முதலில் பள்ளிக்கூடத்திற்கே போகாமல் இருந் தனர் நம் பிள்ளைகள். பள்ளிக்கூடங்களைத் திறந்து வைத்து, வாங்க, வாங்க என்று கூப்பிட்டார்கள். காமராசர் சோறு போட்டால், அந்தப் பிள்ளைகள் படிப்பார்கள் என்றால், சோறு போடுங்கள் என்றார். அதேபோன்று, தியாகராயர் சொன்னார் முதலில்.

நீட் தேர்வில் எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள்?

இன்றைக்கு நீட் தேர்வில் எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள்.

மாநிலப் பட்டியலிலிருந்த கல்வியை ஒத்திசைவு பட்டியலுக்குக் கொண்டு போனார்கள். கன்கரண்ட் பட்டியலுக்கு - அதனை மாற்றவேண்டும் என்பது முக்கியம்.

ஆனால், இன்றைக்கு நாட்டில் ஒரே ஒரு கல்விக் கொள்கைதான் இந்தியா முழுவதும்.

ஒரே கொள்கை - ஒரே ஆட்சி.

இது கூட்டாட்சி இல்லையா!

அரசமைப்புச் சட்டத்தின் முதல் பாகம் என்ன சொல்கிறது?

India that is Bharath shall be a Union of  State

கூட்டாட்சித் தத்துவத்திற்கு

பெரிய ஆபத்து

இந்தியா, அதாவது பாரத நாடு பல மாநிலங் களுடைய கூட்டாட்சி. இந்தக் கூட்டாட்சித் தத்துவத் திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து இப்போது.

அதுமட்டுமல்ல, மாநிலங்களுக்கு இருக்கின்ற கல்வி வேறு; மத்தியில் இருக்கின்ற கல்வி வேறு. அது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம்.

5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு.

எல்லாவற்றிற்கும் மேலே, பல்கலைக் கழகத்தில்  படிக்கப் போகவேண்டும் என்றால், முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் முத்திரை அடித்துக் கொடுப்பார்கள்,  ‘‘எலிஜிபிள் பார் காலேஜ் கோர்ஸ்'' என்று.

பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு அனுமதி வாங்கவேண்டும். அதற்கு ஒரு தேர்வு எழுதவேண்டும். எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு நீட் தேர்வு எழுதவேண்டும். அதற்குப் பிறகு  நெக்ஸ்ட் என்ற தேர்வு.

இன்று அகில  உலகமும் பாராட்டக் கூடிய மருத் துவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இங்கே இருந்து போனவர்கள்தான். ஆனால், இப்போது மருத்துவப் படிப்புப் படிக்கவேண்டும் என்றால், நீட் தேர்வு எழுதவேண்டுமாம்.

இது என்ன கொடுமை?

இன்றைய மாணவர்களுக்கு எதிர்காலமே இல் லையே!  இதைக்கேட்பதற்கு நாதி இல்லையே! கேட்டால், வாய்ப்பூட்டு,  இதைப்பற்றி பேசுவதற்கு கூட்டத்திற்கு அனுமதி கேட்டால், அனுமதி கிடை யாது.

‘‘விருதுநகர் பிரகடனம் - விருதுநகர் போராட்டக் களத்தை வகுத்திருக்கிறது''

ஆகவேதான், இந்தத் தீர்மானம் மிக முக்கிய மானது நண்பர்களே ‘‘விருதுநகர் பிரகடனம் - விருதுநகர் போராட்டக் களத்தை வகுத்திருக் கிறது'' - இந்த மாநாடு ஒரு திருப்பம் என்று சொல்ல வேண்டும்.

வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையில் பிரச்சாரம் செய்யவிருக்கிறோம்.

இதுவரையில் நீட் தேர்வால் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளி கள் கொள்ளையடிக்கிறார்கள்.

‘‘நீட் தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' நீதிபதிகள் கேள்வி

உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் கேட்கிறார்கள், ‘‘நீட் தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று.

அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதே - நாம் ஒன்றும் பிச்சை கேட்கவில்லையே நாம்! அது சட்டப்படி நமக்குள்ள உரிமை!

சட்டமன்றம் கூடும்பொழுது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுங்கள். மசோதாவை  மீண்டும் நிறைவேற் றுங்கள். என்ன காரணத்தினால், நாங்கள் அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பினீர்கள் என்று கேளுங்கள்.

இந்த நாட்டில் ஒரு பக்கம் நீதிமன்றம்; அதில் பூணூல் மயம்; இன்னொரு பக்கத்தில் நீட், நெக்ஸ்ட் தேர்வு. எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டு, அவர் களுடைய படிப்பில் மண்ணைப் போட்டால் என்ன நியாயம்?

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததுபோல...

கலைஞர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி. ஆனால், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்தானே அங்கே வந்து உட்காருகிறார்கள்.

போஸ்ட் கிராஜூவேட், சூப்பர் ஸ்பெஷாலிட்டிஸ் - இவையெல்லாம் யாருக்கு?

இவை எல்லாவற்றையும்விட சமூகநீதி - அரச மைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

அந்த சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்திருக் கின்ற ஆட்சி மத்தியில் இருக்கின்ற ஆட்சி.  அதற்குத் தலையாட்டுகின்ற ஆட்சிபோல் மாநிலத்தில் இருந்து கொண்டிருப்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.

எங்களுக்கென்றும் தனிப்பட்ட முறையில் யார்மீதும் கோபமோ, வெறுப்போ கிடையாது. இந்த சமுதாயத்தின்மீது இருக்கிற அக்கறைதான்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற, சிறுபான்மை சமுதாய மக்கள் படிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் எங்களுக்கு.

10 சதவிகித இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்காம்.

Socially and Educationally backward classes

உச்சநீதிமன்றத்தினுடைய 9 நீதிபதிகள் அது தவறு என்று  கொடுத்த தீர்ப்பு இந்திரா சகானி வழக்கு இருக்கிறது. அதையெல்லாம் மதிப்பதற்குத் தயாராக இல்லை.

அதற்குப் பதிலாக கூடுதல் பணம் கொடுக்கிறோம்; கூடுதல் இடம் கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 27 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் நமக்கு ‘வரம்' போல் அளித்தாரே, அதை இன்றைக்கு இவர்கள் அமல்படுத்தவில்லை.

டாக்டர்கள் ஏன் போராடினார்கள்?

மத்திய  சதவிகிதத்திற்கு ஒதுக்கீடு என்ற ஒன்றைக் கொடுத்தாயிற்று. 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா? இல்லையா?

இதைக் கேட்பதற்கு நாதியில்லையே! நம்மால் என்ன செய்கிறான், டாஸ்மாக் கடையின்முன்  போய் நிற்கிறான்.

தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்குத் தைரியும்.

இதைப்பற்றி சிந்திக்கவேண்டாமா? தோழர்களே!

தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு

இந்த இயக்கம் வெட்டியாக இதனை செய்ய வில்லை. நம்முடைய பிள்ளைகள், அது காவல் துறையில் இருக்கலாம்; அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக நம்மவர்கள் வர முடியாமல் இருந்தது. மண்டல் கமிசன் வந்த பிறகுதானே, நம்மாட்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக வந்தார்கள்.

வங்கிகள் எல்லாம் பொதுத் துறை நிறுவனங்கள். இப்பொழுது அவற்றை எல்லாம் தனியார்த் துறையாக மாற்றுகிறார்கள். ஆகையால்தான், எங்களுடைய மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்.

திராவிட இயக்கம், தமிழ்நாடுதான் இதற்காகக் குரல் கொடுக்கிறது. இந்தியாவினுடைய இதர பாகங்களிலும் இது எதிரொலிக்கிறது.

எனவே, நண்பர்களே!

நீட் தேர்விலே ஆள் மாறாட்டம் - எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, இதுவரையில் தமிழ் நாட்டு வரலாற்றில்.

வடநாட்டில்கூட காப்பி அடிப்பதற்கு சட்டம் உண்டு. தமிழ்நாட்டில், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்ற தகவல்கள் புற்றீசல் போன்று வெளிவந்து கொண்டே இருக்கின்றன. வழக்கு மேல் வழக்குப் போட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

நீட் தேர்வு ஊழலை ஒழித்துவிட்டதா?

ஊழலை ஒழிப்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்தோம் என்று சொன்னார்களே, நீட் தேர்வு ஊழலை ஒழித்துவிட்டதா?

இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

எனவே, நண்பர்களே!

கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை, பிராந் தியமில்லை. நாங்கள் படிக்கவேண்டும்; எங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும்;  எங்கள் வருங்கால சந்ததிகளுக்கு வாழ்வளிக்கவேண்டும். அதற்கு சமூகநீதி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்கான குரல் இருக்கிறதே - அந்தக் குரலை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஜாதி உண்டானது எப்பொழுது?

50 ஆண்டுகள் பகுத்தறிவாளர் கழகம் - வெள் ளைக்காரன் ஆட்சி 200 ஆண்டுகள். ஜாதி உண்டானது எப்பொழுது? ஜாதி காரணமாகத்தானே, மனுதர்மம் காரணமாகத்தானே நம்மை படிக்கவேண்டாம் என்று சொன்னார்கள்.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு  அறிவைக் கொடுக்காதே - இங்கே இருந்து படித்து அமெரிக்கா விற்குப் போனாங்க பாருங்கள் - அங்கே ஜாதியைக் கொண்டு போயிருக்கிறார்கள்.  Caste in the  United states  புள்ளிவிவரம்.

அம்பேத்கர் மிக அழகாக சொன்னார், இந்து மதத்தைப்பற்றி பேசுகிறோம் என்று சொல்கிறீர்களே, அம்பேத்கருடைய அறிவுரை

If Hindus migrated to other regions on the earth; caste would become a world problem

உலகப் பிரச்சினை ஆகும். இப்பொழுது ஆகிக் கொண்டிருக்கிறது.

எனவேதான் நண்பர்களே, உங்களுக்கு மிக முக் கியமாக சொல்கிறோம். இதை நாங்கள் வேடிக்கையா கவோ, விளையாட்டுக்காகவோ சொல்ல வில்லை.

பெற்றோர்களே  நீங்கள் வரவேண்டும். அலட்சிய மாக இருக்காதீர்கள். அய்.அய்.டி.யில் படிக்கின்ற பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?

காரணம் என்ன?

93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம்

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் பெரியார் காலத்தில்.

இரண்டாவது அரசியல் சட்டத் திருத்தம் பெரியாருடைய தொண்டர்கள் காலத்தில்.

76 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் 69 சதவிகித இட ஒதுக்கீடு. இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக் கீட்டை அனுபவிப்பவர்கள் அத்தனை பேருக்கும் எப்படி வந்தது என்று தெரியுமா?

எங்களை எவ்வளவு கேலி செய்தார்கள்;

எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்

அன்றைக்கு                எங்களை எவ்வளவு கேலி செய் தார்கள்; எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்; எங்கள்  குடும்பத்தினருக்கு எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வந்தன.

அந்த அவமானங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் தோழர்களே,

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீடு. அதனால்தான், அந்த அம்மையாருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்தோம். இன்னமும் சொல்கிறோம், அதிலிருந்து எங்களுக்கு மாறுபாடு கிடையாது.

மூன்று பார்ப்பனர்களை வைத்து

வேலை வாங்கியவர்கள் நாங்கள்!

நாங்கள் ஒரு முடிவெடுத்தால், அதில் எங்களுக்குத் தடுமாற்றம் இருக்காது.

சுலபத்தில் முடிவு எடுக்கமாட்டோம்; அப்படி முடிவு எடுத்துவிட்டால், நன்றி காட்டுவது எங்கள் பண்பாடு.

69 சதவிகித இட ஒதுக்கீடு எப்படி வந்தது?

இங்கே, சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்று  பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா காலத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் - எழுதிக் கொடுத்தது திராவிடர் கழகம்.  நிறைவேற்றியது அவர்கள்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலாவது 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறதா? அதற்கும் இப்பொழுது ஆபத்து வந்திருக்கிறது.

அப்பொழுது பிரதமராக இருந்தவர் நரசிம்ம ராவ் - அவர்  ஆந்திரப் பார்ப்பனர்.

அன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருந்த வர் சங்கர் தயாள் சர்மா - உத்தரப்பிரதேச பார்ப்பனர்.

மூன்று பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் வேலை வாங்கிய இயக்கம் திராவிடர் கழகம்.

கருஞ்சட்டைப் பட்டாளம் இராணுவத்தைவிட கட்டுப்பாடு மிகுந்தது - பெரியாரின் இராணுவம்

நீங்கள் எங்களை அலட்சியமாக நினைக்க வேண்டாம்; வெறும் எண்ணிக்கையைப் பொறுத் ததல்ல. எவ்வளவு பேர் இவர்கள் என்று நினைக் காதீர்கள். நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் மெஜாரிட்டியா? விஞ்ஞானிகள் எல்லாம் மெஜா ரிட்டியா? இராணுவம் எல்லாம் மெஜாரிட்டியா? 130 கோடி மக்களுக்கு 130 கோடி இராணுவம் இருக்கிறதா? அல்லது இந்த ஊரில் எவ்வளவு மக்கள் தொகை இருக்கிறதோ, அவ்வளவு  போலீஸ் இருக்கிறதா? போலீசுக்குப் பயந்து தானே, சட்டம் ஒழுங்கே!  இராணுவத்திற்குப் பயந்துதானே எதிரி படையெடுக்காமல் இருக் கிறான்.

அதுபோல், கருஞ்சட்டைப் பட்டாளம் இராணு வத்தைவிட கட்டுப்பாடு மிகுந்தது - பெரியாரின் இராணுவம்.

இந்த இயக்கம் ரகசிய இயக்கமல்ல!

எனவே,

இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள்;

இந்த இயக்கத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள்.

இந்த இயக்கம் பொறுப்புள்ள இயக்கம்

இந்த இயக்கம் ரகசிய இயக்கமல்ல

இந்த இயக்கத்திற்கு ரகசியத்தில் நம்பிக்கையில்லை

இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல

முகமூடித்தனம் எங்களுக்குத் தெரியாது.

இரட்டை வேடம் எங்களுக்குத் தெரியாது.

அதுமட்டுமல்ல, எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு செய்யக்கூடியவர்கள் நாங்கள். அதிலிருந்து தப்பிப்பவர்கள் நாங்களல்ல.

அது உன்னுடைய மதத்தில் இருக்கிறது.

ஒரு மதத்தைச் சேர்ந்தவர் சொல்வார்,

என்ன பாவம் வேண்டுமானாலும் செய் - ஞாயிற் றுக்கிழமை சர்ச்சுக்குப் போனால் சரியாகிவிடும்.

இன்னொரு மதக்காரர் சொல்வார்,

வெள்ளிக்கிழமை கோவிலுக்குப் போனால் சரி யாகிவிடும்

தவறு செய்தால், தண்டனையை ஏற்றுக்கொள்வோம்!

12 ஆண்டுகள் செய்த பாவம், மகாமகக் குளத்தில் சென்று குளித்தால் உன் பாவம் போய்விடும் என்று சொல்வார்.

தவறு செய்யாதே -

‘‘எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று'' - குறள்

தண்டனை அனுபவி - இதுதான் பகுத்தறிவுவாதி.  தவறு செய்தால், தண்டனையை ஏற்றுக்கொள்வோம். அதில் ரகசியம் கிடையாது. கொலை, கொள்ளைக் கூட்டமா?

எனவேதான் நண்பர்களே, இந்த மண்ணிலே சொல்லுங்கள். மாபெரும் விழிப்புணர்ச்சியை அரசாங்கம் செய்யவேண்டிய வேலையை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக, தமிழக அரசே, நீங்கள் நிமிர்ந்து நிற்கவேண்டும். நிமிர முடியுமா? என்று கேட்காதீர்கள். அது உங்களைப் பொறுத்தது. மக்கள் நிமிர வைப்பார்கள்.  அதுதான் மிக முக்கியம்.

நாங்கள் அடுத்த தேர்தலைப்பற்றி கவலைப்படு கிறவர்கள் அல்ல; அடுத்த தலைமுறையினுடைய மான வாழ்வை, உரிமை வாழ்வை, கல்வி வாழ்வைப் பற்றி கவலைப்படுகிறவர்கள்.

எனவேதான், இளைஞர்களே! இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்!

நீங்கள் திசை தடுமாறாதீர்கள் -

உங்களை திசை தடுமாற வைக்க எத்தனையோ ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்; போதை மருந்தை தயாராக வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட் என்ற ஒரு போதை வைத்திருக்கிறார்கள். தறி கெட்டு கிரிக்கெட்டு - அதிலே சூதாட்டம்.

தமிழ்நாட்டில் ஏது வெற்றிடம் -

கற்றிடம்தான் தமிழ்நாடு!

இன்னும் சில பேர், புதிது புதிதாக மாயக் குதிரையை உருவாக்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் வெற்றிடம் என்கிறார்கள். தமிழ் நாட்டில் ஏது வெற்றிடம் - கற்றிடம்தான் தமிழ்நாடு.

ஆகையால், வெற்றிடம் என்று திடீரென்று சொல்வது, புரூடாக்கள் விடுவது - நம்முடைய ஊடகங்கள் அதனை பெரிதாக்குகின்றன. அவர் இந்தத் தேசத்திற்காக 35 முறை சிறைக்குச் சென்றவர்.

காருக்குறிச்சி அருணாசலம்  அருமையாக நாதசுரம் வாசிப்பார்; நாங்களும் ரசிப்போம். அதற்காக அவரை பிரதமராக ஆக்க முடியுமா?

என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு நாங்கள் தயார்!

ஆகவே நண்பர்களே! அறிவுபூர்வமான செய்தி களை சொல்வதுதான் எங்களுடைய வேலை. அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு நாங்கள் தயார்!

வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது, நாங்கள் திரும்பிப் போவோம் என்று நினைத்துக் கொண்டு வருவதில்லை.

ஒரு மனிதன் விபத்தில் சாகக்கூடாது - ஒரு பயனும் கிடையாது. ஆனாலும், ஒரு பயன் இருக்கிறது அதில் - அங்கேயும் பகுத்தறிவு வேலை செய்ததினால் - உறுப்புகளை மற்றவர்களுக்குக் கொடையாகக் கொடுக்கிறார்கள்.

அந்த உறுப்புகள்கூட, செட்டியார் உறுப்பு செட்டியாருக்கு இல்லை; நாடார் உறுப்பு நாடாருக்கு இல்லை; முதலியார் உறுப்பு, முதலியாருக்கு இல்லை. அங்கேயே ஜாதி ஒழிந்து போய்விட்டது - ஆனால், புரிய மாட்டேன் என்கிறது நம்முடைய ஆட்களுக்கு.

அய்யங்கார் ரத்தம், அய்யங்காருக்கா ஏற்று கிறார்கள்?

முதலியார் விழியை, முதலியாருக்கா பொருத்து கிறார்கள்?

ஆகவேதான் நண்பர்களே,

ஜாதியால்,

மதத்தால்,

பதவியால்

சூழ்ச்சியால்

ஏமாறாதீர்கள்;

இந்த இயக்கம் இல்லாவிட்டால்

உங்கள் கதி என்ன?

உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் பேரப் பிள்ளைகளுடைய கல்வி வாழ்க் கையை நினைத்துப் பாருங்கள்.

படித்தவர்களுடைய வேலை வாய்ப்பைப்பற்றி நினைத்துப் பாருங்கள்.

சமூகநீதி அழிந்தால், கல்வி வாய்ப்புகள் ஒழிந்தால், அதைக் கேட்கின்ற இந்த இயக்கம் இல்லாவிட்டால் உங்கள் கதி என்ன? முடிவு செய்யுங்கள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

 - விடுதலை நாளேடு 2 12 19

விருதுநகர் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் தமிழர் தலைவர் சூளுரை

குலக்கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான காமராசர் பிறந்த ஊர் இது

மீண்டும் குலதர்மம் தலைதூக்குகிறது - முறியடிப்போம்! முறியடிப்போம்!!

விருதுநகர் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் தமிழர் தலைவர் சூளுரை

விருதுநகர், நவ.30  இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வி திட்டம் ஒழிக்கப்படக் காரணமாக இருந்தவர் களுள் ஒருவரான கல்வி வள்ளல் காமராசர் பிறந்த ஊர் இந்த விருதுநகர். மீண்டும் இப்பொழுது குலக்கல்வி புதிய வடிவத்தில் தலைதூக்குகிறது - அதனை முறியடிப்போம் என்று சூளுரைத்தார் பகுத்தறிவாளர் கழகப் புரவலரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாடு

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு நடைபெறக் கூடிய பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா என்ற இந்த சிறப்பான மாநாடு, நம்முடைய விருதுநகர் மண்ணிலே நடைபெறுகிறது. விருதுநகரைப் பொறுத்தவரையில் பல மாநாடுகள் தொடர்ந்து, சுயமரியாதை மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாநாட்டினுடைய தனிச் சிறப்பாக, பகுத்தறிவாளர் களுடைய கூட்டமைப்பாக, நாத்திகர்களுடைய கூட்டமைப்பாக இருக்கக்கூடிய அமைப்பினுடைய தென்மாநிலங்களுடைய தலைவர் அருமை பெருமைக்குரிய டாக்டர் நரேந்திர நாயக் அவர்களே,

அதுபோல, கேரள யுக்திவாதிகள் அமைப்பைச் சேர்ந்தவரும், பகுத்தறிவாளர் அமைப்பைச் சேர்ந்த வரும், நம்மோடு எப்போதும் இருக்கக்கூடியவரும் நம்முடைய அருமை நண்பருமான தோழர் பேராசிரியர் சுகுமாறன் அவர்களே,

அதுபோல, நார்வேயிலிருந்து வந்திருக்கக்கூடிய சீரிய பகுத்தறிவாளர், மனிதாபிமானி கிறிஸ்டினா அவர்களே,

மற்றும் கழகத்தின் துணைத் தலைவர் உள்பட, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக்கூடிய அருமைப் பெரியவர்களே, நண்பர்களே, தாய்மார் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய உரை என்பது சுருக்கமாக இருக்கும். மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விரி வாக உரையாற்றுவேன்.

பேரணி இல்லாத காரணத்தால், காலை நிகழ்ச்சிகள்  நீள்கிறது.  மாலை பொதுக்கூட்ட நிகழ்ச்சியைக்கூட  முன்கூட்டியே தொடங்கிவிடலாம்;  அதன் காரணமாக 9 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்துவிடலாம். வெளியூர் தோழர்கள் அவரவர் ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாகவும் இருக்கும். ஆகவே தோழர்கள் ஒத்துழைக்கவேண்டும்.

ஊர்ப் பொதுமக்களுக்காகத்தான் பொதுக்கூட்டம் மாலையில் நடைபெறவிருக்கிறது. தீர்மான விளக் கங்களும் அந்தப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இருக்கும்.

தோழர் நல்லதம்பி அவர்கள்

தனித்து விடப்படவில்லை

இங்கே நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கழகத் துணைப் பொதுச்செயலாளர் உள்பட, மாநில பகுத் தறிவாளர் கழகத் தலைவர் அழகிரிசாமி, பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் அவர்கள், பகுத்தறிவு ஆசிரியரணியைச் சார்ந்த தோழர்கள் அனைவருடைய சிறப்பான  ஒத்துழைப்பு, மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் திருப்பதி, ஆதவன், அமைப்புச் செயலாளர் தோழர் செல்வம் அவர்களும், இன்னும் வரிசையாக அவர்களோடு இணைந்த நம்முடைய தோழர்களும், மாணவர் கழக, இளைஞரணி, மகளிரணி ஆகிய தோழர்களும் இணைந்து - தோழர் நல்லதம்பி அவர்கள் தனித்து விடப்படவில்லை, நல்லதம்பி அவர்கள் சிறப்பாக இங்கே பகுத்தறிவாளர் கழகத்தினுடைய அந்தச் சுடரை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளம்,

நம்முடைய நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற வெங்கடாசலபதி

அதுபோலவே, மறைந்தும் மறையாமல் நம்மு டைய நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற வெங்கடா சலபதி அவர்களுடைய அருமைப் புதல்வன், நம்மோடு என்றைக்கும் இருக்கிறார்; வெங்கடாசலபதி அவர்களுடைய  நூற்றாண்டு ஜனவரி மாதத்தில் வருகிறது என்று சொன்னார்கள், அந்த நூற்றாண்டு விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தென்மாவட்டங்களில் ஏராளமான மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன என்று இங்கே சொன் னார்கள். குறிப்பாக, சுயமரியாதை மாநாடு, செங்கல் பட்டுக்கு அடுத்தபடியாக ஈரோடு, அடுத்து விருதுநகர்.

சர் ஆர்.கே.சண்முகம்

விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாகாண மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் யார் என்று சொன்னால், சர் ஆர்.கே.சண்முகம் அவர்கள். சுய மரியாதை இயக்கத்திற்குத் தலைவராக இருந்தவர்.

எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், எனக்கு 11 வயது நடைபெற்ற காலகட்டத்தில், கடலூர், திருப்பாதிரிபுலியூரில் என்னுடைய ஆசிரியர் திரா விடமணி அவர்கள் முன்னின்று நடத்திய, தென் னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு. ஏனென்றால், அப்பொழுது திராவிடர் கழகம் என்ற பெயர் வரவில்லை. நீதிக்கட்சிதான்.  நாங்கள் மாணவப் பருவத்திலிருந்து அந்தப் பயிற்சி பெற்றவர்கள். அப்படி வந்த காலகட்டத்தில், திருப்பாதிரிபுலியூரில்  நடைபெற்ற அந்த மாநாட்டில், மாலை ஊர்வலத்தில், தந்தை பெரியார்மீது செருப்பொன்று வீசப்பட்டது; இரண்டாவது செருப்பை தேடிப் பிடித்தார் பெரியார் அவர்கள்.

பெரியாரின் உற்ற தள நாயகர்  வி.வி.ராமசாமி

செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும் என்று கவிதை எழுதக் கூடிய அளவிற்கு, எதிர்ப்பு வந்த இடத்தில், கடலூரில் இன்றைக்கும் சிலை இருக்கக்கூடிய காட்சியைப் பார்க்கிறோம். அப் படிப்பட்ட அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் யார் என்று சொன்னால், எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது; 76 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி - இந்த ஊரைச் சார்ந்த, தந்தை பெரியாருக்கு உற்ற தள நாயகராக கடைசி வரையில் இருந்த வி.வி.ராமசாமி அவர்களாவார்கள்.

நிறைய பேருக்கு, ஈ.வி.ராமசாமியா? வி.வி.ராம சாமியா? என்ற சந்தேகம் இருக்கும். வி.வி.ஆர். என்றால், உள்ளூரில் நன்றாகத் தெரியும்.  விருதுநகர் காரர்களுக்கு வி.வி.ராமசாமி நாடார் என்று சொல் வார்கள். எல்லோரும் செங்கல்பட்டு மாநாட்டில், ஜாதிப் பட்டத்தை எடுத்துவிட்டார்கள்.

வி.வி.ராமசாமி அவர்கள், ‘தமிழ்த்தென்றல்' என்ற ஒரு மாதப் பத்திரிகையை நடத்தினார், தமிழ் இன உணர்வோடு. இன்றைய இளைய தலைமுறையின ருக்கு இந்தத் தகவல் தெரியாது. வி.வி.ஆர். அவர்கள், கடைசிவரை பெரியாருடைய தளபதி. காமராசர் காங்கிரசில் இருந்த காலத்தில், நீதிக்கட்சிக்குப் பெரிய தூண்கள் இங்கே இருந்தார்கள். அந்தத் தூண்களில் ஒருவர் வி.வி.ராமசாமி அவர்கள்.

அப்படிப்பட்ட வி.வி.ஆர். அவர்கள்தான், கடலூ ரில் நடைபெற்ற மாநாட்டிற்குத் தலைவர். நான் முதன்முதலில், மேஜை மீது ஏறி நின்று பேசிய மாநாட்டினை இந்த ஊரைச் சார்ந்தவர்தான் தலைமை தாங்கி நடத்தினார். இந்த வி.வி.ஆருக்கு எவ்வளவு உணர்ச்சி என்று சொன்னால், 1971 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது; அண்ணா அவர்கள் மறைந்து, கலைஞர் அவர்கள் முதலமைச்சராகி இரண்டாண்டு ஆகிறது; இன்னும் அவருடைய ஆட்சி ஓராண்டு இருக்கிறது;  இந்திரா காந்தி நாடாளுமன்றத் தேர்தலை அறிவிக்கிறார்கள்.

‘‘தந்தை பெரியார் எங்கே இருக்கிறார்?''  முதலமைச்சர் கலைஞர்!

கலைஞருக்கு ஒரு கருத்து தோன்றியது; பொதுத் தேர்தல் நடைபெறுகிறது - அதுகூடவே சட்டமன்றத் தேர்தலையும் நடத்திவிட்டால், வசதியாக இருக்குமே. ஓராண்டில் அதற்குத் தனி தேர்தல் தேவையில்லையே என்று நினைத்தார். ஆனால், அப்படி எடுக்கப்படுகின்ற முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவாகவோ அல்லது தவறான முடிவாகவோ இருக்கக்கூடாது. சரியான முடிவாக இருக்கவேண்டும் என்று நினைத்த நேரத் தில், என்னை அழைத்தார், அதனை இப்பொழுது சொல்வதால் ரகசியம் ஒன்றுமில்லை. ‘‘தந்தை பெரியார் எங்கே இருக்கிறார்?'' என்று முதலமைச்சர் கலைஞர் கேட்டார்.

‘‘பெரியாரை துணை கோடல்'' என்பதுதான் அந்த ஆட்சியினுடைய, தி.மு.க. ஆட்சியினுடைய இலக் கணம்.

சேலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டினை பகுத்தறிவாளர் கழகம் நடத்தவிருக்கிறது. அதற்காக அங்கே அய்யா சென்றிருக்கிறார் என்று சொன்னேன்.

அப்படியென்றால், நீங்கள், அய்யா அவர்களிடம் ஒரு கருத்து கேளுங்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலை நடத்தவேண்டும் என்றால், மேலே அனுமதி வாங்கிவிடலாம். இந்திரா காந்தி யோடு கூட்டணி வைத்திருக்கிறோம்.  அப்பொழுது தான் இந்திரா காந்தி அம்மையார் தனியே இயக்கத்தை ஆரம்பித்திருந்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் நடத்தலாமா? என்று கேட்டு வாருங்கள் என்றார்.

நான் இதற்காக சேலம் சென்றேன். தொலைப் பேசியில் சொல்லக்கூடாத அளவிற்கு அரசியல் ரீதியாக ரகசியமாக நடந்த செய்தி இது. என்னைப் பார்த்ததும் அய்யா அவர்கள், ‘‘என்னங்க இங்கே வந்திருக்கிறீங்க?'' என்றார்.

நாம்தான் வெற்றி பெறுவோம்!

அய்யா அவர்களிடம், தனியே சென்று அந்தத் தகவலை சொன்னேன்.

நல்ல யோசனை என்று சொல்லுங்கள். இதுதான் சரியான தருணம். இன்னும் ஓராண்டு போனால், ஒருவேளை வித்தியாசமாக இருக்கலாம் ஏனென்றால், தி.மு.க.வை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். தி.மு.க.விற்கு எதிர்ப்பை உண்டாக்குகிறார்கள். தைரியமாக கலைக்கச் சொல்லுங்கள்; நாம்தான் வெற்றி பெறுவோம் என்றார்.

இந்தத் தகவலை முதலமைச்சர் கலைஞரிடம் சொன்னதும், உடனே அமைச்சரவையைக் கூட்டி, ஓராண்டிற்கு முன்பே, ஆட்சியைக் கலைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலை சந்திக்கின்றோம்; நாடாளு மன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் சந்திப்போம் என்று அறிவித்தார்கள்.

தவறை உணர்ந்த காமராசர்!

அந்த நேரத்தில், இராஜகோபாலாச்சாரியாரும், காமராசரும் ஒன்று சேர்ந்தார்கள். வாழ்நாளிலேயே எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இவர்கள். தோல்வியுற்ற பிறகு காமராசர் சொன்னார், ‘‘என் வாழ்நாளில் செய்யக்கூடாத தவறை அரசியல் தவறை நான் செய்தேன் என்றால், இராஜாஜியோடு கூட்டணி சேர்ந்ததுதான்; அதனைப் பெரியார் அவர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொன்னார்.

தேர்தலில் உச்சக்கட்டப் பிரச்சாரம் நடைபெற்றது. ஊழலோ ஊழல், தி.மு.க. ஆட்சி இனிமேல் வராது என்று பிரச்சாரம் செய்தார்கள்.

அப்பொழுதுதான் சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதில் ராமன் படம் வைக்கப்பட்டு வந்தது. பெரியாருக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக ஜனசங்கத்தினர் அனுமதி வாங்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். இன்றைக்குத்தான் பா.ஜ.க., அன்றைக்கு ஜனசங்கம்தான். முதலமைச் சராக இருந்த கலைஞர், கருப்புக் கொடி காட்டுவதற்கு அனுமதி வழங்கினார். ஏனென்றால், கருப்புக் கொடி காட்டினால், பெரியாருடைய வேகம் இன்னும் அதிக மாகும். உற்சாகமாகப் பேசுவார்; அவர்களை ஏன் தடுக்கவேண்டும்; இடத்தைத் தேர்வு செய்து கொடுங் கள், அந்த இடத்தைவிட்டு அவர்கள் தாண்டக்கூடாது என்று சொல்லச் சொல்லி அனுமதி கொடுத்தார்.

ஊர்வலத்தில், பெரியாரை நோக்கி செருப்பு வீசி னார்கள். ஆனால், அய்யாவின் கார் நகர்ந்துவிட்டதால், அந்த செருப்பு ஊர்வலத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த கடவுளர் படங்கள் வந்த வாகனத்தில் வந்து விழுந்தது, அதை நம்மாள் அந்த செருப்பை எடுத்து, இராமன் படத்தின்மீது அடித்தார்.

‘‘இராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?''

தேர்தல் நேரத்தில் எதிரிகளுக்குப் பிரச்சாரம் செய்வதற்கு எதுவுமில்லை என்ற காரணத்தினால், ‘‘இராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?'' என்று ‘துக்ளக்' புத்தகத்தில் அட்டைப் படம் போட்டு வெளியிட்டார்கள்.  அதை காமராசருடைய காங்கிரஸ் கட்சியும், மற்றவர்களும் சேர்ந்து, பெரிய பெரிய போஸ்டர் அடித்து ஓட்டினார்கள். இப்படி மக்களுக்கு மத உணர்ச்சியை  உண்டாக்கினால் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தார்கள்.

அந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தி.மு.க. சட்டப்பேரவையில் 137 இடங்கள் பெற்றிருந்தது; அந்தத் தேர்தல் முடிவின்போது 184 இடங்கள் பெற்றது தி.மு.க. இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிற்குப் பெரும்பான்மை பெற்றது தி.மு.க.

வி.வி.ஆரின் தொலைப்பேசி அழைப்பு!

எதற்காக இதை நான்  இந்த விருதுநகரில் சொல் கிறேன் என்றால், தி.மு.க. வெற்றி பெறாது என்று திட்டமிட்ட பிரச்சாரங்களை ஊடகங்கள் செய்தன.

திடீரென்று விருதுநகரில் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது; ‘‘யார், ஆசிரியர் வீரமணியா பேசுவது?'' என்று ஒரு குரல்.

ஆமாங்க, நான்தான் பேசுகிறேன், நீங்கள் யார் அய்யா? என்று கேட்டேன்.

நான் வி.வி.ஆர். பேசுகிறேன். இங்கே நிறைய அட் டூழியப் பிரச்சாரங்களை செய்கிறார்கள். ஆகையால், விடுதலையில் தினமும் மனுதர்மத்தை எடுத்துப் போடுங்கள். தேர்தல் முடியும்வரை போடுங்கள் என்றார்.

மனுதர்மம் தோற்றது;

மனித தர்மம் வென்றது!

அதன்படியே நாங்கள் போட்டோம்; மனுதர்மம் தோற்றது; மனித தர்மம் வென்றது. அதை சொன்னவர் வி.வி.ஆர்.

பிறகு காமராசர் அவர்களே வருத்தப்பட்டார்; தவறான முடிவு எடுத்தோமே என்று.

இந்த விருதுநகரில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன. இன்றைக்குத் திருவள்ளு வருக்கு சாயம் அடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அம்பேத்கரை கரைத்துப் பார்த்தான், நடக்கவில்லை. பெரியார் சிலையை நெருங்கிப் பார்த்தான், நடக்க வில்லை.

இன்றைக்கு வேட்டி கட்டிப் பார்க்கிறார்கள்; நீங்கள் வேட்டி கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி, தமிழ்நாட்டை ஒருபோதும் கட்டி ஆள முடியாது; இந்த மண்ணை காவி மண்ணாக்க முடியாது. ஏனென்றால், இந்த மண் வித்தியாசமானது.

கருப்பினுடைய தத்துவமே என்னவென்றால், கருப்பு வண்ணத்தின்மீது எது விழுந்தாலும், கருப் பாகத்தான் தெரியும். வேறு வண்ணம் வராது.

குறள் மாநாட்டுத் தீர்மானங்கள்!

விருது நகர், குறள் மாநாடு 3.4.1949 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்பொழுது இயக்கம் ஒன்றாக இருந்தது. அதற்குப் பிறகு 6 மாதங்கள் கழித்துதான் இயக்கம் பிரிகிறது.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்,

1. இப்பொழுதுள்ள கல்வித் திட்டத்தில் முதல் உயர்நிலை வகுப்பு (பாரம்) தொடங்கி இளங்கலைஞர் (பி.ஏ..,)  வகுப்பு முடிய திருக்குறள் முழுதும் படித்து முடிக்கும் வகையில் படிப்படியாகப் பாடத் திட்டம் வகுப்பு மாறும், அதற்கென தனி வினாத்தாள் (ஷேக்ஸ்பியர் போல) ஏற்படுத்துமாறும் கல்வித்துறை அதிகாரிகளையும், பல்கலைக் கழகங்களையும் இம்மாநாடு வேண்டுகின்றது.

2. ஆட்சி மன்றங்களில் உறுப்பினராக வரு வோர்க்கும், கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் தலைவராக வருவோர்க்குரிய தகுதிகளில் திருக்குறள் புலமையும் ஒன்றாக வற்புறுத்துமாறு ஆட்சியாளரை வேண்டுகின்றது.

3. திருவள்ளுவர் விழாவுக்கென ஒரு நாளைக் குறிப்பிட்டு, அரசு விடுமுறை நாளாக்கி, அந்நாளை நாடெங்கும் கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்கின்றது.

4. திருக்குறள் பற்றிய விழாக்கள், மாநாடுகள் முதலியவற்றின் நிகழ்ச்சிகளை அறிவிக்குமாறும், ஒலிபரப்புமாறும் திருச்சி வானொலி நிலையத்தாரைக் கேட்டுக் கொள்கின்றது.

குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால்,

எனவேதான் நண்பர்களே, இந்த மண் காமராச ரைப் பெற்றெடுத்த மண். அதேநேரத்தில், காமராசரை ஆதரித்த பிறகு, பெரியார் மிகச் சிறப்பான வகையில் அவருக்கு ஆதரவு கொடுத்தார். பச்சைத் தமிழர் காமராசர்  அவர்கள்  முதலமைச்சராவதற்கே தயங் கினார். பெரியார்தான், ‘‘நாங்கள் எல்லாம் இருக்கி றோம்; நீங்கள் தைரியமாக இருங்கள்'' என்று சொன்ன பிறகு, முதலமைச்சரான காமராசர் அவர்கள், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அன்றைக்குக் குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் பொறியாளர்களாகவோ, மருத்துவர்களாகவோ, வழக்குரைஞர்களாகவோ வந்திருக்க முடியுமா?

இன்றைக்குக் குலக்கல்வி வேறு ரூபத்தில், மறு வடிவத்தில் மாற்று மோகனி அவதாரத்தில் மீண்டும் இப்பொழுது வரக்கூடிய முயற்சி எடுக்கிறது.அதை  முறியடித்தாகவேண்டும். அதைப்பற்றி மாலையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் தெளிவாகச் சொல்கிறேன்.

‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்''

இதோ என்னுடைய கைகளில் இருப்பது ‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்'' என்ற புத்தகம் இன் றைக்கும் இருக்கிறது சாமியார்கள், நிர்வாண சாமியார்கள், டில்லியில் காமராசர் அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபொழுது, அவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள்.

அதைக் கண்டித்து விடுதலையில் கட்டுரைகள் தொடர்ந்து வந்தன. அந்தத் தலைப்பை அய்யாதான் கொடுத்தார். அந்தப் புத்தகத்தைப்பற்றி  இந்த மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், ஆர்.எஸ்.எஸ். காரர்கள், அம்பேத்கரையும் உரிமை கொண்டாடு கிறார்கள்; காமராசரையும் உரிமை கொண்டாடுகிறார்கள். ஏதோ, காமராசர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந் ததுபோன்று; யார் யாரையெல்லாம் வளைத்துப் போட முடியுமோ, வளைத்துப் போடுகிறார்கள். இதுவரைக்கும், பெரியாரிடம்தான் அவர்களால் நெருங்க முடியவில்லை.

எரிமலையிடம் நெருங்க முடியாது

காரணம் என்னவென்றால், எந்த மலைமீது வேண்டுமானாலும் ஏறலாம்; இமயமலைமீதுகூட ஏறலாம்; ஆனால், எரிமலையிடம் நெருங்க முடியாது.

நெருப்புத் தூய்மையானது; நெருப்புப் பயன்படக் கூடியது; நெருப்பு மாசற்றது.

நெருப்பு, நமக்குப் பயன்படக்கூடியது என்றாலும், அதைத் தூக்கி வைத்து கொஞ்ச முடியாது. நெருப்பு, நெருப்பாகத்தான் இருக்கும்.

ஆகவேதான், தந்தை பெரியார், எல்லோரையும் தூய்மைப்படுத்துகின்ற, சமைக்க வேண்டிய நேரத் தில், சமையலுக்குப் பயன்பட்டு, தீ வைக்க வேண்டிய நேரத்தில் தீ வைத்து, எரிக்க வேண்டியவைகளை எரித்து, அத்தனையும் செய்வதற்கு, பல்வகைப் பயன்பாடுடைய நெருப்புபோல.

தூய்மையும், நெருப்பும் ஒன்றானது. அசுத்தமான நெருப்பு என்று இதுவரையில் இல்லை.

அசுத்தமான நெய் இருக்கலாம்;

அசுத்தமான தண்ணீர் இருக்கலாம்;

அசுத்தமான காற்றுகூட இருக்கலாம்

ஆனால், அசுத்தமான நெருப்பு என்று நீங்கள் இதுவரையில் கேள்விப்பட்டு இருக்க முடியாது. அதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

அந்த வகையில் நண்பர்களே, இன்றைக்கு அம் பேத்கர் படத்தையும் இங்கே திறந்து வைத்திருக் கிறோம்.

அமெரிக்காவில்கூடவா ஜாதி?

பேராசிரியர் காளிமுத்து அவர்கள் உரையாற்றும் பொழுது சொன்னார். புத்தகத்தை மொழி பெயர்த் திருக்கிறார். அமெரிக்காவில்கூடவா ஜாதி? என்ற அளவிற்கு வந்தால், அந்தப் புத்தகத்தில், அம்பேத்கர் எழுதிய ஒரு மேற்கோளைப் போட்டிருக்கிறார்கள். அதை மட்டும் நான் சொல்கிறேன்.

இந்து மதத்தில் இருக்கிறவன், இந்து என்று தன்னை அழைத்துக் கொள்கிறவன், உலகத்தின் எந்தப் பாகத்திற்குக் குடிபெயர்ந்தாலும், அவன் கையில் கொண்டு போகக்கூடிய சரக்கு ஒன்றே ஒன்றுதான்; அதுதான் ஜாதி. அதுதான் தீண்டாமை.

இன்றைக்கு அதைத்தான் கொண்டு போகிறார்கள்.

இன்றைக்கு அம்பேத்கர் ஜெயந்தியை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடுகிறார்கள்.

காந்தியாரைக் கொன்ற கோட்சே  ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி எடுத்தவன். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, காந்தியாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடுகிறது.

காந்தியாரைக் கொன்றவர்கள், இன்றைக்குக் காந்தியார் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்

காந்தியாருக்கு ஏற்பட்ட விபத்தைப் பாருங்கள். காந்தியாரைக் கொன்றவர்கள், இன்றைக்குக் காந்தி யார் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

காமராசரை உயிரோடு வைத்து கொளுத்த  முயன்றவர்கள் காமராசரைக் கொண்டாடுகிறார்கள்.

ஓநாய் சைவமாகிவிட்டது என்று சொல்லுகிறார்கள்; நம்பினால், நீங்கள் ஏமாளிகள் என்று பொருளே தவிர, ஓநாயினுடைய குற்றமல்ல. அதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அந்த வகையில்தான், ஓநாய் ஒருநாளும் சைவமாகாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு ஒரே ஒரு செய்தி என்னவென்று சொன்னால், அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்களே, இந்து மதத்தில் என்ன ஜாதி இந்து என்ன? மீதி இந்து என்ன? வருணஸ்தர்கள் என்ன? அவர்ணஸ்தர்கள் என்ன?

படிக்கட்டு ஜாதி முறையை அம்பேத்கர் சொன் னாரே, அதனை ஒழிப்பதற்குத் தயாரா நீங்கள்?

ஒரே ஜாதி என்று சொல்வீர்களா?

இந்து சகோதரர்களே ஒன்று சேருங்கள் என்று சொல்கிறீர்களே! நாம் ஒன்று சேரலாம் என்கிற அளவிற்கு இருக்கிறதா?

ஒரே நாடு,

ஒரே மொழி,

ஒரே கலாச்சாரம்

என்று சொல்கிறீர்களே, ஒரே ஜாதி என்று சொல்வீர்களா?

பெரியாருடைய கொள்கைகளை

அப்படியே  பிரதிபலித்தார் காமராசர்!

ஆகவேதான், பெரியாரும், அம்பேத்கரும் சமத் துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் பாடுபட்டவர்கள். காம ராசர் அவர்கள் பெரியாருடைய கொள்கைகளை அப் படியே பிரதிபலித்தார். ஆகையால்தான், பெரியார் அவர்கள், காமராசருக்குப் பெரிய துணை யாக இருந்தார்.

தகுதி, திறமை என்று பேசும்போது காமராசர்  சொன்னார்,

பறையரை நான்  டாக்டர் ஆக்கினேன். அவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்துப் போனான் சொல் என்றார். நீ படித்ததும் தெரியும், உனக்கு சொல்லிக் கொடுத்தவனைபற்றியும் எனக்குத் தெரியும் என்றார்.

அதேபோன்று,

தாழ்த்தப்பட்டவனை பொறியாளராக்கினேன். அவன் பாலம் கட்டினான்; எந்தப் பாலம் இடிந்து விழுந்தது சொல் என்றார்.

மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பேசினார். பெரியார் கேட்டதுபோன்றே காமராசரும் கேட்டார்.

எவன்டா உன்னுடைய தலையில் எழுதியது? அவனைக் கொண்டுவாடா அதனை மாற்றி எழுது வதற்காகத்தான் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னவர் காமராசர் அவர்கள்.

பகுத்தறிவின் பயனை உருவாக்கித் தந்த தலைவர்களின் படங்களைத் திறந்திருக்கிறோம்!

எனவே, பகுத்தறிவு, இன உணர்வு, சமத்துவம், சம வாய்ப்பு, வாய்ப்பற்றவர்களுக்கெல்லாம் இருப்பது தான் பகுத்தறிவின் பயன். அந்தப் பகுத்தறிவின் பயனை உருவாக்கித் தந்த தலைவர்களின் படங் களைத்தான் இங்கே திறந்து வைத்திருக்கிறோம்.

தீர்மானங்களுக்குப் பிறகு மாலை நேரத்தில் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்படும்.

வாழ்க பெரியார்! வாழ்க காமராசர்! வாழ்க அம்பேத்கர்!

வளர்க பகுத்தறிவு! வளர்க சுயமரியாதை!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

- விடுதலை நாளேடு 30 11 19

செவ்வாய், 26 நவம்பர், 2019

விருதுநகர் பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டின் 21 தீர்மானங்கள்

'நீட்', 'டெட்' போன்ற தேர்வுகளை நீக்குக!

புதிய தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் கைவிடுக!!

ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு தேவை

விருதுநகர், நவ. 17- 'நீட்', 'டெட்' போன்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள் கையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும், ஜாதி வாரி சுடுகாடு கூடாது என்பது உள்பட 21 தீர்மானங்கள் விருதுநகரில் நடைபெற்ற (16.11.2019) பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

முன்மொழிந்தவர்: பெரம்பலூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராஜன்

விருது பெற்றமைக்குப் பாராட்டு

அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மனிதநேய சங்கத்தின் சார்பில்  (Humanist Association) 
திரா விடர் கழகத் தலைவர் - பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' (Humanist Life Time Achievment Award) விருது வழங்கியமைக்கு இம்மாநாடு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதுடன், விருது பெற்ற தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இம்மாநாடு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

முன்மொழிந்தவர்: பகுத்தறிவாளர் கழக

மாநிலத் துணைத் தலைவர் ஆ.சரவணன்

தேவையற்ற ஒன்று!

கடவுள் வாழ்த்து என்பது தேவையற்ற ஒன்று. அதற் குப் பதிலாக மக்கள் வேறுபாடின்றி மகிழ்ச்சியாகவும், ஒற்றுமை யாகவும் வாழ்ந்திட விழைவதாகப் பாடல் அமையலாம் என்று பகுத்தறிவாளர் கழக மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்  3:

முன்மொழிந்தவர்: பகுத்தறிவு ஆசிரியரணி

மாநில அமைப்பாளர் வா.தமிழ்ப் பிரபாகரன்

பாடத் திட்டத்தில் புராணம்,

இதிகாசங்கள் இடம்பெறக்கூடாது!

விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) திட்டவட்டமாகக் கூறுவதால், பாடத் திட்டங்களில் விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிரான புராணம், இதிகாசம் மற்ற மதக் கற்பனைகள் போன்றவை இடம்பெறாமல் செய்யவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்  4:

முன்மொழிந்தவர்: தருமபுரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் மாரி.கருணாநிதி

பாடத் திட்டத்தில் திருக்குறள்

திருக்குறளை தொடக்கப் பள்ளிமுதல் பட்ட மேற்படிப்பு வரை முக்கியமாக இடம்பெறச் செய்ய ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தியாவின் எல்லா மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் பாடத் திட்டங்களில் இடம்பெறச் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. பேருந்துகளில் மறுபடியும் திருக்குறள் இடம்பெறச் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்  5:

முன்மொழிந்தவர்: மேட்டூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக தலைவர் அன்புமதி

ஜாதியைக் குறிக்கும்

சின்னங்களை தடை செய்க!

ஜாதியைக் குறிக்கும் வகையிலும், வெளிப்படுத்தும் வகையிலும் வண்ணக் கயிறுகளைக் கையில் கட்டிக் கொண்டு மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு வரும் விபரீதப் போக்கை உடனடியாகத் தடை செய்யவேண்டும் என்று தமிழக அரசின் கல்வித் துறையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

முன்மொழிந்தவர்: தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சிவக்குமார்

மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதம்

மதச்சார்பற்ற அரசின் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசின் ஆணைப்படி எந்தவிதமான கடவுள் படங்களோ, பூஜை களோ இடம்பெறக்கூடாது - அப்படி மீறி நடந்தால் அது சட்ட விரோதம் என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

புதிதாக அரசு அலுவலகங்கள் கட்டும்போது பூமி பூஜை என்ற பெயரால் மதச் சடங்குகளை நடத்துவது, மழை பெய்வதற்காக யாகம் நடத்தச் சொல்லி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ததும், அப்படிப்பட்ட யாகங்களில் அமைச்சர்கள் பங்கேற்றதும் அப்பட்டமான சட்ட மீறலும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், கண்டிக்கத்தக்கதுமாகும் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமானதால் அத்தகைய மதச் சடங்குகளை நிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

முன்மொழிந்தவர்: புதுக்கோட்டை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.மலர்மன்னன்

நடைபாதைக் கோவில்களை அகற்றுக!

நடைபாதைக் கோவில்களையும், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எழுப்பப்பட்டுள்ள அனைத்து மதக் கோவில்களை யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், மத்திய - மாநில அரசுகளின் சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் உடனே நீக்கிட ஆவன செய்யப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

முன்மொழிந்தவர்: பகுத்தறிவு ஆசிரியரணி

மாநில அமைப்பாளர் சி.இரமேஷ்

‘நீட்', தேசிய கல்வியை ரத்து செய்யவேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2019 என்பது பல மாநிலங்கள், பல மொழிகள், பல இனங்கள், பல்வேறு பருவ நிலைகளைக் கொண்ட ஒரு துணைக் கண்டத்திற்குப் பொருந்தாது என்று இம்மாநாடு திட்டவட்டமாக அறிவிக்கிறது.

மாநிலக் கல்வி உரிமை பறிப்புக்கான திட்டமே இந்தக் கல்விக் கொள்கை என்று இம்மாநாடு தெரிவிக்கிறது.

மூன்றாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகளைத் திணிப்பது 5 மற்றும் 8 ஆம் வகுப்புப் பிள்ளைகளுக்கு அரசு பொதுத் தேர்வு என்பது குழந்தைத் தொழிலாளர் கொடுமை என்னும் குற்றத்தின்கீழ் வரக்கூடியது என்று இம்மாநாடு திட்டவட்டமாகக் கருதுகிறது - இத்திட்டத்தை உடனே கைவிடுமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் உறுதியாக நின்று, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவை முற்றிலும் நிராகரிக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

‘நீட்' என்பது எந்த வகையிலும் நீடிக்க அருகதையற்றது - சமூகநீதியின் குரல் வளையை நெரித்துக் கொல்லக் கூடியதேயாகும். அதனை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,081 சீட்டுகள் உள்ளன. இதில் 3,033 பேர் பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்' பயிற்சி வகுப்பு சென்று வந்தவர்கள். பயிற்சிக்குச் செல்லாத மீதமுள்ள 48 பேர்களில் பெற்றோர்கள் படித்தவர்கள் பெரும் செல்வந்தர்கள்.

இதில் ஒரே ஒருமுறை ‘நீட்' தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்தவர்கள் 1,026.

மீதமுள்ள 2007 பேர் இரண்டுக்கு மேற்பட்ட முறை பயிற்சி மய்யங்களுக்குச் சென்று பயிற்சி பெற்று ‘நீட்' தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள்.

‘நீட்' தேர்வு முடிந்த பிறகு, நாளிதழ்களில் முழு பக்கம் வரும் விளம்பரங்களைக் கொடுக்கும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணமாகப் பெறுகின்றனர்.

இது இந்த (2019-2020) ஆண்டு ரூ.13 லட்சம் முதல் ரூ.17 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 7 மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களில் அனைவருமே பெரும் செல்வந்தர்கள்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 210-க்கும் மேல் ஆகும்.

‘நீட்' ஆள் மாறாட்டம் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதாகவும், இதில் 300 பேருக்கும் மேல் ஈடுபட்டனர் என்றும் கேரளாவைச் சேர்ந்த ‘நீட்' மோசடி வழக்கில் கைதான ‘நீட்' பயிற்சி மய்யம் நடத்தும் நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமூகநீதிக்கு விரோதமான - படித்தவர்கள், பணக்காரர் களுக்கு வசதியான - ஊழல் நிறைந்த ‘நீட்'டினை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

மாநில அரசும் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களின் அடிப்படையில் மீண்டும் ஒரு மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசை வற்புறுத்தவேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9:

முன்மொழிந்தவர்: திருப்பத்தூர் மாவட்டப் பகுத்தறிவு  ஆசிரியரணித் தலைவர் இரா.பழனி

பொருளாதார அளவுகோல் ஏற்கத்தக்கதல்ல!

இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட - சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்கிற அளவுகோலே சரியானது என்பதால், எந்த வடிவத்திலும் பொருளாதார அளவுகோல் என்பது ஏற்கத்தக்கதல்ல - அது சமூக நீதியின் நோக்கத்தையே சிதற அடிக்கக்கூடியது என்று இம்மாநாடு திட்டவட்டமாக தெரிவிக்கிறது - பொருளாதார அளவுகோலை அறவே விலக்கி வைக்குமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10:

முன்மொழிந்தவர்: திருவள்ளூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கி.எழில்

தனியார்த் துறைகளிலும்

இட ஒதுக்கீடு தேவை!

விதி விலக்குகள் ஏதுமின்றி அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்றும், மிக முக்கிய மாக தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் அளிக் கப்பட வேண்டும் என்றும்,  இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

கடவுள் வாழ்த்து தேவையில்லை

பாடத்திட்டத்தில் புராண இதிகாசங்களை நீக்குக

நடைபாதைக் கோயில்களை அகற்றுக

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் ஏற்கத்தக்கதல்ல

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக

ஒரே சுடுகாடு தேவை!

தீர்மானம் எண் 11:

முன்மொழிந்தவர்: தருமபுரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கதிர்.செந்தில்

கல்வியை மீண்டும் மாநிலப்

பட்டியலுக்குக் கொண்டு வருக!

கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கானதோர் தீர் மானத்தை உடனே நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12:

முன்மொழிந்தவர்: கல்லக்குறிச்சி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீ.முருகேசன்

பெண்களுக்கான 33 விழுக்காடு சட்டம்!

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் 33 விழுக் காடு பெண்களுக்கான இட  ஒதுக்கீடு சட்டத்தை மேலும் காலதாமதம் செய்யாமல் நிறைவேற்றவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 13:

முன்மொழிந்தவர்: தஞ்சை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ச.அழகிரி

தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிதி!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை எந்த  காரணத்தை முன்னிட்டும் வேறு துறைக்குச் செலவழிக்கக் கூடாது என்று இம்மாநாடு மாநில அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 14:

முன்மொழிந்தவர்: அரியலூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க.சிவமூர்த்தி

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள விடுதிகள் போதிய பராமரிப்பு இன்றி, அலங் கோலமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்கும் கட்டடம் நல்ல வசதியுடன், தக்கப் பராமரிப்புடன் பேணப்படுவது அவசியம் என்றும், அவர்களுக்கான உணவு விடயத்திலும் தக்க கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பெண்கள் தங்குவதற்கான விடுதிகளை போதுமான அளவில் அரசே உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 15:

முன்மொழிந்தவர்: தென்காசி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ம.இராசையா

மாணவர்களுக்கு யோகா என்ற பெயரால்....

மாணவர்களுக்கு யோகா என்ற பெயரால் மத ரீதியான சடங்குகளை உள்ளே நுழைக்கக் கூடாது என்றும் இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 16:

முன்மொழிந்தவர்: திருநெல்வேலி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.வேல்முருகன்

விளையாட்டுக்கு உரிய முக்கியத்துவம் தேவை!

பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியமானதோர் இடம் அளிக்கப்படவேண்டும் என்றும், வெறும் மனப்பாட படிப்பு, அதன்மூலம் பெறும் மதிப்பெண்தான் மாணவர்களின் தகுதி என்ற முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான முறையில் கல்வி திட்டம், கற்பித்தல் முறையை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் இம்மாநாடு அறிவுறுத்துகிறது.

தீர்மானம் எண் 17:

முன்மொழிந்தவர்: மன்னார்குடி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அழகிரி

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைத் திணிக்காதீர்!

குழந்தைகள் கைப்பேசியின் பொம்மைகளாக மாறாமல், பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் கடவுள், மதம், மூடநம்பிக்கைகளை அவர்களின் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கவேண்டாம் என்றும் பெற்றோர்களையும், உறவினர்களையும் இம்மாநாடு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது. ஆடம்பர நுகர்வு கலாச்சாரத்துக்கும் அவர்களை ஆட்படுத்தவேண்டாம் என்றும், பதப்படுத்தப்பட்ட வசீகரமான முறையில் டின்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள்மீதான ஆர்வம் பிள்ளைகளுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை என்றும் இம்மாநாடு தன் வேண்டுகோளாக வைக்கிறது.

தீர்மானம் எண் 18:

முன்மொழிந்தவர்: பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.திராவிடச் செல்வன்

குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டுக!

குழந்தைகளுக்கு தாய், தந்தையர் பெயர்களின் முதல் எழுத்தை இணைத்து (இனிஷியல்) தமிழில் பெயர் சூட்டுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 19:

முன்மொழிந்தவர்: தென்சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.மாணிக்கம்

சுடுகாட்டில் வேறுபாடு வேண்டாம்!

ஜாதிக்கு ஒரு சுடுகாடு, இடுகாடு என்பது ஒழிக்கப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு - இடுகாடு அமைக்கப்படுதல் வேண்டும் என்றும், மின் தகன ஏற்பாட்டை எல்லா இடங்களிலும் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 20:

முன்மொழிந்தவர்: விருதுநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.அசோக்

ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பினை உறுதி செய்க!

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைக் கொலை செய்யும் போக்கு நாளும் அதிகரித்துவருவதற்கு முடிவு கட்டப்படவேண்டும் என்றும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கென்று காவல்துறையில் தனி வசதி  செய்யப்படவேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வர சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 21:

முன்மொழிந்தவர்: நாமக்கல் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வழக்குரைஞர் இளங்கோ

மறு தேர்வுகள் தேவையில்லை

ஆசிரியர் பயிற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு மறுதேர்வு (டெட்) என்பது அவசியமற்றது என்றும், சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கும், வெளிநாடுகள் சென்று மருத்துவம் படிப்போர்க்கும் மறுதேர்வு என்பதெல்லாம் தேவை யற்ற நிர்பந்தம் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்போர் நுழை வுத் தேர்வு எழுதவேண்டும் என்பதும், கலைக்கல்லூரிகளில் சேருவதற்கும் நுழைவுத் தேர்வு என்பதெல்லாம் வளர்ந்துவரும் முதல் தலைமுறையினரையும், கிராமப்புற ஏழை, எளிய வர்களையும் ஒடுக்கும் ஏற்பாடு என்று இம்மாநாடு கருதுகிறது. இதனைக் கைவிடுமாறும் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- விடுதலை நாளேடு, 17.11.19