செவ்வாய், 31 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா - 5

21.12.2019 அன்றைய தொடர்ச்சி...

'பல்கலைக் கழக நிறுவனர் ஹார்வர்டு அவர்களின் சிலை முழுவது கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. கால் விரல் பகுதிகளில் மட்டும் வண்ணம் தேய்ந்து, உள்ளே இருக்கும் ஒளிர் மஞ்சள் நிறத்தில் வெண்கலம் தெரி கிறதே! ஏன் அப்படி?' என்ற கேள்வியினை கேட்டதும் வழிகாட்டி புன்முறுவலுடன் பதிலளித்தார்.  அது வேறொன்றுமில்லை, இந்தப் பல்கலைக் கழகத்தில் பயிலும் பல மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும் முன்பு சிலையின் கால் பகுதியைத் தொட்டு வணங்கி விட்டுத்தான் செல்வார்களாம். விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களோ, இரவு முழுவதும் சிலை முன் அமர்ந்து காலைப் பிடித்துக் கொண்டு வேண்டிக் (தேர்வில் வெற்றியடைய)  கொள்வார்களாம். கால் பகு தியைத் தொட்டுத் தொட்டு, தேய்த்துத் தொடர்ந்து வணங்கி யதால் கருப்பு வண்ணம் மறைந்து வெண்கலம் தெரிகிறது என்றார்.

நன்றாகப் படித்துத் தேர்வு எழுதினால் வெற்றி யடைந்து விடலாம் எனும் தன்னம்பிக்கை சார்ந்த செயலை விடுத்து சிலையைத் தொட்டு வணங்கினால் வெற்றி யடைந்து விடலாம் என ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களது நினைப்பு ஒருவகை மூடநம்பிக் கையே. தந்தை பெரியார் அடிக்கடி கூறுவது போல முட்டாள்தனம், மூடநம்பிக்கை என்பது நம் மக்களுக்கு மட்டுமே சொந்தமா? மேலை நாட்டிலும் சொந்தம் கொண்டாட 'உரிமை'(!) இல்லையா? என்று சொன்ன நிகழ்வு நினைவிற்கு வந்தது. முட்டாள்தனம் உலகம் முழுவதும் - அனைத்து மக்களிடம் ஏதோ ஒருவகையில் நிலவிவருகிறது.

மாசசூசெட்ஸ் மாநிலத்தில் முக்கியமான இரண்டு இடங்களைப் பார்க்க விரும்பினோம். காலக் குறைவு, பயண தூரம் காரணமாக பார்க்க முடியாமல் போய் விட்டது. ஒன்று - யேல் பல்கலைக் கழகம். புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களுள் ஒன்று. அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்த பொழுது அவரை அழைத்து ‘Sub Fellowship’ பட்டம் கொடுத்துப் பாராட்டி மகிழ்ந்த பல்கலைக் கழகம் யேல் பல்கலைக் கழகமாகும். அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு திருக்குறள் பாடம் சொல்லி விளக்கமளித்த உயர்கல்வி நிறுவனம் யேல் பல்கலைக் கழகம். மற்றது - அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த - சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய பொழுது சுட்டுக் கொல் லப்பட்ட ஜே.எப். கென்னடியின் நினைவகம். இரண்டு இடங்களும் நாங்கள் பயணம் செய்த வழியிலிருந்து விலகி தனித் தடத்தில் இருந்ததாலும், பயணத்தூரம் அதிகமாக இருந்த படியாலும் பார்க்க முடியாமலே போய்விட்டது.

அமெரிக்க உயர்கல்வி நிலையங்களைப் பற்றி கேள்விப்பட்டுமட்டும் இருந்த நிலையில் அவைகளை நேரில் சென்று பார்த்த அனுபவம் நன்றாக இருந்தது. அனைவருக்கும் கல்வி என்பதில், அமெரிக்கா அண்மை யில் உருவான (400 ஆண்டுகள்) நாடு என்றாலும், எவ் வளவு உறுதியாக உள்ளது, அந்நாட்டு மக்கள் பல்துறை களில் சிறந்து விளங்கி வருவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பது புலப்பட்டது.

சுற்றுலா தொடங்கி இரண்டு மூன்று நாட்களே ஆகி, நண்பகல், மற்றும் இரவு நேர உணவிற்கு இந்திய உணவகங்களுக்குச் சென்றாலும், அங்குள்ள அசைவ உணவைத் தவிர இதர உணவு வகையில் வட இந்தியச் சுவையில் இருந்தது, ஒரு நெருடலாகவும், உணவு அருந்தியும், அருந்தாமல் இருப்பது போலவே இருந்தது. உடன் வந்த வழிகாட்டியிடம் முன்னமே இந்த உணவு ஒவ்வாமையைத் தெரிவித்ததால் பாஸ்டன் நகர் சுற்றுலா முடிந்ததும், தென்னிந்தியர் (ஆந்திரர்) நடத்தும் 'கோதாவரி' உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என தென்னிந்திய உணவு வகைகள் கண்ணில் பட்டதுமே கூடுதல் பசியும் தொற்றிக் கொண்டது. வயிற்றுக்கு வேண்டிய மட்டும் அந்த உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு அடுத்து நியூயார்க் நகரை நோக்கிப் பயணமானோம். பாஸ்டனிலிருந்து நியூயார்க். 350 கிலோ மீட்டர், பயண நேரம் 4.30 மணி என்ற நிலையில் தொடர்ந்து பேருந்துப் பயணத்தால் களைப் புடன் இருந்த பலர் அந்தப் பயணத்தை தூக்கத்திலேயே கழித்தனர். இரவு சரியாக 9.00 மணிக்கு நியூஜெர்ஸியில் உள்ள விடுதிக்கு, இரவு உணவை இடையில் இருந்த பஞ்சாபி உணவகத்தில் அருந்திவிட்டு சென்று சேர்ந்தோம்.

நியூஜெர்ஸியில் ஒன்ரூட் (One Route) பகுதியில் இருந்த ஹாலிடே இன் டோடோவா (Holiday Inn Totowa)  விடுதிக்கு வந்து அன்று இரவும் அடுத்தநாள் இரவும் தங்கினோம்.

நியூயார்க் நகரச் சுற்றுலா

அடுத்த நாள் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நியூயார்க் நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

சுதந்திர தேவி சிலை

(Liberty Statue)

நியூயார்க் நகரம் அட்லாண்டிக் பெருங்கடலின் கரைப்பகுதியில் அமைந்துள்ளது - அமெரிக்கா எனும் பொழுது வானைத் தொட்டுவிடத் துடிக்கும் உயரமான கட்டடங்களின் தோற்றத்தைக் (Skyscrapers) காட்டும் நகரம் நியூயார்க். முதல் இடமாக உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் - அமெரிக்காவைக் காட்சிப் படுத்த வேண்டு மானால் அதன் அடையாளமாகத் திகழும்  சுதந்திர தேவிச் சிலையினைப் பார்க்கச் சென்றோம். நியூ யார்க்கின் ஒரு பகுதியான மன்காட்டன் தீவில் (Manhattan Island) அமைந்துள்ளது அந்த பிரம்மாண்டமான சிலை. மோட்டார் படகின் மூலம்தான் சிலை உள்ள தீவினைச் சென்றடைய முடியும். விமானப் பயணம்-வெளிநாட்டுப் பயணம் செல்லும்போது எப்படி பயணிகளைப் பரிசோ தனை செய்வார்களோ அப்படி பல நிலைச் சோதனை களைத் தாண்டி மோட்டார் படகில் ஏறி அமர்ந்தோம். படகு புறப்பட்ட திசையை நோக்கி சுதந்திரத் தேவிச் சிலை தூரத்தில் தெரிகிறதா என்ற தேடலுடன் பயணம் செய் தோம்.

நியூயார்க் - மன்காட்டன் தீவில்

சுதந்திர தேவிச் சிலை விடுதலை வேட்கையின் எழுச்சி வடிவமாக அமைக்கப்பட்டது. வலதுகையில் ஒளி விளக்குச் சுடரை ஏந்திப் பிடித்தும், இடது கையில் ‘July 4, 1776’ என்ற நாள் பொறிக்கப்பட்ட அமெரிக்க விடுதலை பிரகடனமும் உள்ளது. இந்த சிலை 1886-ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க அய்க் கிய நாடுகளின் தேசிய பூங்கா சேவைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தரையிலிருந்து 93 மீட்டர் உயரமுள்ள (சிலை மட்டும் 46 மீட்டர்) செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்ட இந்த சிலையானது பிரான்ஸ் நாட்டினரால் அமெரிக்க அய்க்கிய நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசாகும். 'விடுதலை' (Liberty)  உணர்வினை வெளிப் படுத்திய பிரெஞ்சுப் புரட்சியின் அடையாளமாக பரிசளிக் கப்பட்டது. (பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் பல நூற்றாண் டுகளுக்கு முன்னரே - கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே விடுதலை உணர்விற்கு வித்திட்டவர் பகுத்தறிவாளர் புத்தர். புத்தரின் போதனையின் சாரம்சமான விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் (Liberty, Equality and Fraternity) ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் இடம் பெற்றுள்ளதாக அதன் வரைவுக் குழுத் தலைவரான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறி னார். சமூக புரட்சியாளர் தந்தை பெரியார் முழுமையான விடுதலை மனிதனுக்கு வேண்டும் என்ற சீரிய நோக்கத் தில் தான் நடத்தி வந்த பத்திரிக்கைக்கு 'விடுதலை' (Liberation) எனப் பெயரிட்டார். 87-ஆம்  பிறந்த நாள் கண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 57-ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை ஏட்டின் ஆசிரியராக இருப்பது வெளி வருகிற செய்தி ஒப்பீடும்  அமெரிக்க மண்ணில் சுதந்திர தேவி சிலை யினைப் பார்க்கும் நேரத்தில் மனதில் எழுந்தது.

சிலையின் முழுமையான பரிமாணமும் தூரத்தில் இருந்துதான் பார்க்கமுடியும். தீவை அடைந்து, படகி லிருந்து இறங்கி, நெருங்கிச் சென்று பார்க்கும் பொழுது சிலை முழுமையையும் ஒரு பார்வை வீச்சில் சிக்கவில்லை. ஒவ்வொரு பகுதியாகத்தான் பார்க்க முடிந்தது. பீடப் பகுதியில் ஏறி சிலையை சுற்றி வர வழி இருக்கிறது. சிலையில் கிரீடம் அமைந்துள்ள பகுதி வரை ஏறிச் செல்ல படிக்கட்டும் உள்ளது. கால அளவு போதாத காரணத்தால் சிலையை மட்டும் அருகில் இருந்து பார்த்தோம். ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டோம். 'விடுதலை' ஏட்டினைப் படித்துவரும் 'விடுதலை' வாசகர்களாகிய சுற்றுலா சென்ற சுயமரியாதை  தோழர்கள் சுதந்திரதேவி சிலையின்  (Statue of Liberty) முன்பு ஒன்றாக சேர்ந்து ஒளிப்படம் எடுத்தது குறிப்பிடத் தக்கதாக இருந்தது.

அரை மணி நேரம் மட்டும் சுதந்திர தேவி சிலை யுள்ள தீவில் செலவழித்து விட்டு அந்த லட்சினையுள்ள நினைவுப் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் படகுப் பயணத்தில், புறப்பட்ட துறைமுகப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மய்யத்தின் இரட்டை கோபுர நினைவிடம்:

மறக்க முடியாத நாள்: 11 செப்டம்பர் 2011. நெஞ்சை விட்டு அகலாமல் நீடிக்கும் காட்சி உலக வர்த்தக மய்யத்தின் இரட்டை கோபுரங்கள் - நினைத்துப் பார்க்க முடியாத சில நொடிகளில் தரைமட்டமாகி, பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களை பலி வாங்கிய தீவிரவாதிகளின் வான்தாக்குதல்.

வர்த்தகக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட ஒரு சில வினாடிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அந்த கொடுமையான காட்சியை தொலைக்காட்சியில் நேர லையில் பார்க்க நேரிட்டது. அமெரிக்க குடியரசுத் தலைவராயிருந்த ஆபிரகாம் லிங்கன் 1863-ல் சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது அந்தத் துயரச் செய்தி அட் லாண்டிக் கடலின் மறுகரையில் உள்ள அய்ரோப்பாவிற்குச் சென்றடைய ஒரு வார காலம் பிடித்தது என்று சொல் வார்கள். அறிவியல் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் இன்று செய்திகளை நேரலைக் காட்சியாகவே கொண்டு சேர்க்கிறது. இருப்பினும் அந்த அளவிற்கு மானுடப் பற்று மேம்படாமல் மங்கிக் கொண்டே வருவதற்கு இரட்டை கோபுர தகர்ப்பே ஒரு சாட்சியாக - நினைவிடமாக இருக்கிறது. இமை துடிக்கும் நேரத்தில் கம்பீரமாக நின்ற நியூயார்க் இரட்டை கோபுரம் இடிந்து நிர்மூலமான நிகழ்வு எவருடைய நெஞ்சைவிட்டும் அகலாது. பகல் நேரத்தில் நடந்த தகர்ப்பில் அந்த இரட்டை கோபுரங்களில் இருந்த அலுவலகங்களில் பணிபுரிந்த ஏறக்குறைய 3000 நபர்கள் உயிரிழந்தனர். 25000 பேர் படுகாயமடைந்தனர். மனித நேயமற்ற வகையில் அப்பாவி மக்கள் பலிவாங்கப்பட்டது. மனிதகுல வரலாற்றில் நிலைத்துவிட்ட பெரிய தழும்பாகவே நீடிக்கும்.

இரட்டை கோபுரம் நிர்மூலமான இடத்தை, நினை விடமாக எழுப்பி இறந்தவர்களின் நினைவுகள் உலக மக்களின் நெஞ்சங்களில் ஈரத்துடன் உள்ளன என்பது போல அந்த நினைவிடத்தில் நீரூற்றுகள் அமைத்துள் ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் நாள் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டாலும், ஒவ்வொருநாளும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நியூயார்க் வருபவர்கள் இரட்டை கோபுர நினைவகத்தை பார்வையிட்டு உயிர் துறந்த மனித உறவுகளுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர். நாங்கள் அந்த நினைவிடத்தை பார்வை யிட்ட பொழுது அப்படி வீரவணக்கம் செலுத்தியதன் அடையாளங்கள் - மலர் வளையங்கள், மலர் கொத்துகள் பரவலாகக் காணப்பட்டன. எங்களது வீர வணக்கத்தையும் உயிர் துறந்தவர்களுக்கு செலுத்தும் விதமாக மலர் வளை யம் வைத்தோம். நினைவிடம் பரந்துபட்டு இருந்தாலும், நகரின் மையப் பகுதியில் இருந்தாலும், அந்த இடத்தைப் பொருத்த அளவில் அமைதிப் பூங்காவாகவே இருந்தது. நினைவிடத்தைவிட்டு கனத்த நெஞ்சுடன் புறப்பட்டோம்.

ஓருலக வர்த்தக மய்யம்

(One World Trade Centre)

இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சில ஆண்டு களிலேயே வன்முறையினை எதிர்த்து மனிதகுலம் ஓரணியில் நிற்கிறது என்பதைக் காட்டுகின்ற வகையில் நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு அருகிலேயே ஓருலக வர்த்தக மய்யம் மிகவும் எழிலோடும் பிரம்மாண்டமாகவும் எழுப்பப்பட்டுள்ளது. பல அடுக்குகளுடன்  தரையிலிருந்து கோபுர நுனிவரை 1792 அடி உயரத்தில் ஓருலகு வர்த்தக மய்யம் எழுப்பப்பட்டு 4 நவம்பர் 2014 திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வட அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகின் மேல் அரைக்கோளப் பகுதியிலேயே உயரமான கட்டடமாக எழுப்பட்டுள்ளது. மேல்தளத்தில் செல்லுவதற்கு மின் துக்கி உள்ளது. அந்தப் பகுதியில் தொலைநோக்கி கருவியுடன் கூடிய மய்யமும்  (Observatory) செயல்படுகிறது. மேல் தளத்திலிருந்து சுற்றிலும் பார்த்தால் நியூயார்க் நகரின் முழுப் பரிமாணமும் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒட்டுமொத்த பருந்துப் பார்வை  (Bird's eye view)   வசதி பெரும்பாலான நகரங்களில் இருக்காது. கட்டணம் செலுத்திதான் ஓருலகு வர்த்தக மய்யத்தை பார்வையிட முடியும். சிறிய கைக் கணினி  (tablet)  வடிவமைப்பையும் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

கை கணினியைப் பார்த்தவாறு, காது கேட்பானுடன் நகர்ந்து கொண்டே வர்த்தக மய்யம் பற்றியும், நியூயார்க் நகர் பற்றிய விளக்கங்களையும் கேட்க முடியும். கீழிலிருந்து பார்த்தால் வானத்தை தொடுவது போன்ற கட்டடங்கள் - வர்த்தக மய்யத்தின் மேல் தளத்திலிருந்து பார்த்தால் பிற கட்டடங்களின் உயர் நுனிக்கு மேலாக நாம் இருந்து பார்க்கும் நிலை - ஒருபக்கம் கடலில் நகர்ந்து செல்லும் படகுக் கப்பல், சுதந்திர தேவி சிலை சிறியதாகத் தோன்றும் நிலை - இப்படி நாம் இருக்கும் இடத்தை பொறுத்து, பிரம்மாண்டமாகப் பார்க்கப்பட்ட இடங்கள் கூட பிரம்மாண்டம் குறைந்து நமக்குள் அடங்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஒருமணி நேரத்தை ஓருலகு வர்த்தக மய்யத்தில்  செலவழித்துவிட்டு அய்க்கிய நாடுகள் அவையை பார்வையிடலாம் எனப் புறப்பட்டோம். செல்லும்பொழுது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அய்.நா. அவை நடவடிக்கையில் பங்கேற்ற வந்திருந்த படியால் அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துள் வந்திருப்பதாக அறிய வந்தோம். பார்வையாளர்கள், சுற்றுலாவாசிகள் எவரும் அய்.நா. அவை உள்ள பகுதிப் பக்கம் செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை. அய்.நா. அவையை தூரத்தில் இருந்து கூட பார்க்க முடிய வில்லையே என்ற ஏக்கத்துடன், எழுச்சியின் வடிவத்தை உருவாக்கிய பல்கலைக் கழகம் ஒன்றிற்குச் சென்றோம்.

வீ. குமரேசன்

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 23.12.19

திங்கள், 30 டிசம்பர், 2019

விருதுநகர் ப.க. மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எழுப்பிய வினா

திருவள்ளுவர் பிறந்த 2000 ஆண்டுகளுக்குமுன் இந்து மதம் இல்லாத நிலையில், அதனை இந்து நூல் என்பது எப்படி?

விருதுநகர் ப.க. மாநாட்டில்  எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  எழுப்பிய வினா


விருதுநகர், டிச.21 திருவள்ளுவர் பிறந்த 2000 ஆண்டுகளுக்குமுன் இந்து மதம் இல்லாத நிலையில், அதனை இந்து நூல் என்பது எப்படி?  என்ற வினாவினை எழுப்பினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா  தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வழியில் நின்று இந்த மண்ணை பகுத்தறிவு வழியில் முன்னோக்கி இழுத்துச் செல்லவேண்டும் என்று போராடிக் கொண் டிருக்கின்ற சமூகநீதிப் போராளிகளே,  தமிழ்ச் சொந்தங்களே, என்னுடன் வருகை தந்திருக்கின்ற என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மதுரைக்குச் சென்று விமானம் பிடித்து சென் னைக்குச் செல்லவேண்டும் என்கிற காரணத்தால், சற்று முன்னதாகவே, அய்யா அவர்கள் பேசுவதற்கு முன்னதாகவே பேசி, விடைபெறவேண்டும் என்கிற ஒரு நெருக்கடியில் நான் நின்று கொண்டிருக்கின்றேன். இடையிலேயே விடைபெறுவதற்காக முதலில் என் னுடைய வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

21 தீர்மானங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்

பகுத்தறிவாளர் கழகத்தின் இந்தப் பொன்விழா மாநாட்டில் நிறைவேற்றி இருக்கிற 21 தீர்மானங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று, இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் தொட்டிருக்கின்ற நிலையில், பொன்விழாவின் தொடக்க நிகழ்ச்சி விருதுநகரிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொடக்க விழா நிகழ்விலே பங்கேற்று உரையாற்றக்கூடிய ஒரு அரிய வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக தமிழர் தலை வர் அய்யா அவர்களுக்கும், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கும் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர்

இந்த மண்ணில் தோன்றியிருக்காவிட்டால்...

தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர் இந்த மண்ணில் தோன்றியிருக்காவிட்டால், 50 ஆண்டு களுக்கு முன்பே அல்லது 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடும், சங் பரிவார்களின் கொட்டம் தலைவிரித்தாடும் ஒரு பகுதியாக மாறியிருக்கும். இன்றைக்குத் தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியவில்லை, வேரூன்ற முடியவில்லை என்கின்ற வகையில், ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகள்தான். அதுதான் இன்றைக்குத் தமிழ்நாட்டை, மதச்சார்பற்ற ஒரு நிலப்பகுதியாக அறியக்கூடிய வகையில், பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.

சென்னை அய்.அய்.டி. மாணவி பாத்திமா லத்தீப் உயிர்ப் பலியாகியிருக்கின்ற நிலையில், அவருடைய பெற்றோர் இருவரும், பதறிக்கொண்டு சொன்ன வார்த்தைகள், ‘‘வேறு எங்கே எங்கள் பெண்ணை அனுப்பினாலும் பாதுகாப்பு இருக்காது; தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற  நிலம். ஆகவே, இங்கே பாதுகாப்பு இருக்கும் என்று எண்ணித்தான், சென்னை அய்.அய்.டி. யிலே படிக்க வைத்தோம். ஆனால், இங்கேயும் மதவெறி என் குழந்தையின் உயிரைப் பறித்துக் கொண்டதே'' என்று வேதனையோடு அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தந்தை பெரியார் அவர்களின்

உழைப்புதான், சிந்தனைதான்

அப்படி ஒரு எண்ணம் தமிழ்நாட்டில், மதவெறிக்கு இடமில்லை, ஜாதி வெறிக்கு இடமில்லை, இங்கே பாதுகாப்பு இருக்கும் என்ற ஒரு சிந்தனையை அவர்களுக்கு உருவாக்கி இருப்பது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் உழைப்புதான், சிந்தனைதான்.

சமூகநீதியைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழர் தலைவர்

இன்றைக்கு நம்மிடையே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இல்லை என்றாலும், அந்த இடத்தை இட்டு நிரப்பி, வெற்றிகரமாக, பகுத்தறிவு சிந்தனை களைப் பரப்பிக் கொண்டிருப்பதுடன், சமூகநீதியைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

அவருடைய நிறைவுரையைக் கேட்கவேண்டும் என்கிற ஆவல்; ஆனால், எனக்கு நேரமில்லை. அதனால், நிறைவு  விழா மாநாட்டிலும் பேசுகிற வாய்ப்பை அய்யா அவர்கள் எனக்கு வழங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாட்டில் ஜாதியவாதிகளும், மதவாதிகளும் கோலோச்சுவதற்குத் துடிக்கிறார்கள்

இது தொடக்க விழா மாநாடு; பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு  பெற்றிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் ஜாதியவாதிகளும், மதவாதிகளும் கோலோச்சுவதற்குத் துடிக்கிறார்கள்; இங்கே கொடிகட்டி ஆளத் துடிக்கிறார்கள். ஏனென் றால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டைத் தவிர, மற்ற மாநிலங்களில் அவர்களின் தாக்கம் இருந்தது, ஆதிக்கம் இருந்தது, அவர்களால் வெற்றி பெறவும் முடிந்தது. தமிழகத்தில் அது எடுபடவில்லை. ஆனால், எப்படியாவது இன்றைக்கு தலைவர் கலைஞர், ஜெயலலிதா அம்மையார் இல்லை என்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. வின் இக்கட்டான நிலைமைகளை, அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி இங்கே கோலோச்ச வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

இத்தகைய ஒரு சூழலில்தான், அவர்கள் கையில் எடுத்திருக்கின்ற யுக்திகள் - அய்யன் திருவள்ளு வருக்குக் காவி உடை உடுத்துவது, திருநீறு பூசுவது, நாமம் சாத்துவது, ருத்திராட்சக் கொட்டை அணி விப்பது போன்ற நடவடிக்கைகள்.

திருவள்ளுவர்  நமக்கு வழங்கியிருக்கிற அருட்கொடை

அய்யன் திருவள்ளுவருடைய உருவத்தை நாம் யாரும் பார்க்கவில்லை. அவருக்கு எந்த உருவம் தந்தாலும், அதற்கு நாம் எப்படி எதிர்ப்போ அல்லது ஆதரவோ செய்ய முடியும் என்கிற ஒரு நிலை இருக் கிறது. ஆனாலும்கூட, அய்யன் திருவள்ளுவர், நமக்கு வழங்கியிருக்கிற அருட்கொடை என்று சொல்லலாம், நமக்கான அந்த அறிவுக்கொடை திருக்குறள்.

உலகத்தில் எல்லா மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்ற ஒரு மகத்தான அறநூல். அந்த நூல், அய்யன் திருவள்ளுவரின் சிந்தனையை நமக்கு வெளிப்படுத்துகிறது; அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அவரை சமணர்கள் தங்களுடைய முனிவர்கள் என்று உரிமை கோருகிறார்கள்; பவுத்தர்கள் உரிமை கோருகிறார்கள். சமணமும், பவுத்தமும் உரிமை கோரு வதில்கூட  ஒரு பொருள் இருக்கிறது.

ஏனென்றால், சமணமும், பவுத்தமும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் உயர்ந்தவர்கள் - தாழ்ந்த வர்கள் என்று போதிக்கின்ற மதங்கள் இல்லை.

சமணமும், பவுத்தமும் சமத்துவத்தைப் பேசுகின்ற மதங்கள்.

அய்யன் திருவள்ளுவரும் சமத்துவத்தைப் போதிக் கக்கூடிய ஒரு மாமனிதர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று சொன்னார்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'' என்ற ஏழு சொற்கள், அய்யன் திருவள்ளுவர் யார் என்று மதிப்பீடு செய்வதற்கான ஓர் அளவுகோல்.

1330 குறளில், மற்ற குறள்களைக்கூட நாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, இந்த ஒற்றைக் குறளை ஆய்வு செய்தால் போதும். அவருடைய சிந்தனை எவ்வளவு உயர்ந்தது, மேம்பட்டது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'' என்று சொல்லு வதன்மூலம்,

பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்று சொல்ல வில்லை.

பிறப்பொக்கும் எல்லா இனத்திற்கும் என்று சொல்ல வில்லை.

பிறப்பொக்கும் எல்லா மதத்திற்கும் என்று சொல்ல வில்லை.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்றுதான் சொல்லியிருக்கிறார். அது மனித உயிராக இருக்கலாம், விலங்குகள் உயிராக இருக்கலாம், பறவைகளின் உயிராக இருக்கலாம், எந்த உயிராகவும் இருக்கலாம். உயிர் என்பது எப்படி பிறப்பெடுக்கிறது என்றால், தாய்வழியே பிறப்பெடுக்கிறது.

அதனால், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' - அதில் உயர்வு - தாழ்வை எப்படி நாம் மதிப்பிட முடியும் என்கிற கேள்வி அதற்குள்ளே புதைந்து கிடக்கிறது.

‘‘சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' - செய்யும் தொழிலால் வேற்றுமை இருந்தாலும், அவர் களின் சிறப்பு அதனால்  பாதிக்கப்படாது என்பதுதான் - ‘‘சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' என்பது.

ஆனால், இவர்கள் அதற்கு என்ன விளக்கம் சொல் லுகிறார்கள்? ஏன் நாம் சமணம் உரிமை கோருவதை எதிர்க்கவில்லை; பவுத்தம் உரிமை கோருவதை எதிர்க்கவில்லை. இவர்கள் உரிமைக் கோருவதை எதிர்க்கிறோம் என்றால், சமணமும், பவுத்தமும் சமத் துவத்தைப் பேசுகிறது; அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளும் சமத்துவத்தைப் பேசுகிறது. அதனால், அவர்களின் சிந்தனைகளில் ஒரு ஒற்றுமை இருப்பதால், உரிமை கோருவதில்கூட தவறில்லை என்று நாம் கருதுகிறோம்.

சனாதனத்தின் அடிப்படையான கோட்பாடு!

ஆனால், சனாதனம் - இதுதான் அவர்களே சொல் லிக் கொள்கிற ஒரு கோட்பாடு.

சனாதனம் என்றால், மாறாதது; நிலையானது என்று அவர்கள் அதற்கு விளக்கம் சொல்கிறார்கள். அவர்கள் வகுத்த வரையறை என்பது மாறாது; அது அப்படியே தொடரும்.

என்ன வரையறை?

பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு உண்டு என்கிற கோட்பாடுதான் சனாதனத்தின் அடிப்படை யான கோட்பாடு.

ஒரு மனிதன் அக்கிரகாரத்தில் பிறந்தால் உயர்ந்த வன் என்றும், மற்ற குடியிருப்புகளில் பிறக்கிறவன் அத்தனை பேரும் தாழ்ந்தவன் என்றும் சொல்லுகிற ஒரு கோட்பாடு.

நான்கு வருணம் என்று வருணத்தை வரை யறுக்கின்ற கோட்பாடு. அந்த வருணங்களில் ஒரே ஒரு வருணம்தான் உயர்ந்த வருணம் - மேல் வருணம் - மேல்ஜாதி, மேல் மக்கள் என்பது. மற்ற வருணங்கள் அனைத்தும் கீழ்ஜாதி - கீழானவர்கள் என்று சொல்கிற கோட்பாடு. அதுதான் சனாதனம்.

பிராமணர்கள் என்கிற பார்ப்பனர்களைவிட, அவ் வளவு பேரும் கீழ்ஜாதிதான். அதைத்தான் சதுர்வர்ணம் சொல்லுகிறது.

இந்துத்துவம் என்ற

சனாதனத்தை எதிர்த்து...

அதில் என்ன ஒரு நுட்பமான கோட்பாட்டை வைத்திருக்கிறார்கள் என்றால், ஒருவன் ஓரிடத்தில் கீழ்ஜாதியாக இருப்பான்; அவனே இன்னொருவனுக்கு மேல்ஜாதியாகவும் இருப்பான். அது ஒரு சமரசம்.

அதனால்தான், இந்துத்துவம் என்ற இந்த சனாதனத்தை எதிர்த்து, பிராமணர் அல்லாதவர்கள் போராட முடியாத நிலை ஏற்பட்டது என்று, புரட்சி யாளர் அம்பேத்கர் அவர்களும்,  தந்தை பெரியார் அவர்களும் நமக்குச் சொல்கிறார்கள்.

ஏன் இதை எதிர்த்து, ஜாதி இந்துக்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் போராடவில்லை என்றால், ஜாதி இந்துவாக தன்னை உணருகிற ஒவ்வொருவனும்,  பிராமணனுக்கு கீழ்ஜாதியாக இருந்தாலும், தனக்குக் கீழே இருக்கிற வர்ணம் எதுவோ, அதற்கு இவன் மேல்ஜாதி என்கிற ஒரு உளவியலையே  அது தருகிறது.

எல்லா கீழ்ஜாதிக்காரனுக்கும் ஒரு இடத்திலே ஒரு மேல்ஜாதி உணர்வையும் சேர்த்துத் தருகிற கோட் பாடாக, சனாதனக் கோட்பாடு இருக்கிறது; இப்படி ஒரு சமரசம் அதிலே செய்யப்பட்டு இருக்கிறது என்று நம்முடைய மாமனிதர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் நுட்பமாக நமக்குச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ஆகவேதான், இந்த மண்ணில் இந்தக் கோட் பாட்டைப் புரிந்துகொள்வதிலிருந்துதான் அடிமைத் தளையிலிருந்து மக்களை மீட்க முடியும் என்று சிந்தித்த அந்த அறிவு இருக்கிறதே, அதுதான் பகுத்தறிவு.

பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்வதற்காக இயக்கம் காணவில்லை.

கடவுள் சிலைகளை அவமதிப்பதற்காக அவர் இயக்கம் காணவில்லை.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு சொல்லப்படுகிறது. இது இத்தனை ஆண்டுகளாக, இத்தனை லட்சம் ஆண்டுகளாக எப்படிப் பாதுகாக் கப்பட்டு வருகிறது என்பதைப்பற்றி சிந்தித்துப் பார்க்கின்றபொழுது,

ஜாதியை வருணம் காப்பாற்றுகிறது,

வருணத்தை மதம் காப்பாற்றுகிறது,

மதத்தை அவர்கள் கோட்பாடு காப்பாற்றுகிறது,

மதத்தை அவர்களின் கடவுள் காப்பாற்றுகிறது.

ஆகவே, இந்த வருணம் கடவுள் என்கிற அந்த அடையாளங்களை எதிர்த்துப் பேசவேண்டும் என்கிற துணிச்சலைப் பெற்றதால், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை அவரால் உருவாக்க முடிந்தது.

மதம் இல்லாமலும், கடவுள் நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும்!

இன்றைக்கு உலகமே ஒரு புள்ளிவிவரம் சொல்லு கிறது.

மதம் இல்லாமல்,

கடவுள் நம்பிக்கை இல்லாமல்,

வழிபாடு இல்லாமல் வாழக்கூடிய மக்கள் தொகை என்பது, உலக அளவில், நம்பிக்கை உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட, பெருகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

கடவுளை நம்புகிறவர்களின் எண்ணிக்கையைவிட,

மதத்தில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை யைவிட,

மதம் இல்லாமலும், கடவுள் நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை, அந்த சதவிகிதம் பெருகி வருகிறது என்று புள்ளிவிவரம் சொல்வதை நாம் பார்க்கிறோம்.

ஆகவே, இதற்கெல்லாம் வித்திட்ட பெருமை, இந்தக் காலகட்டத்தில், சம காலத்தில், அந்தக் காலத்தில் சாக்ரட்டீஸ் போன்றவர்கள் எல்லாம் இருந்திருக்கலாம்; ஆனால்,  நாம் வாழும் இந்தக் காலத்தில், அல்லது இந்த நூற்றாண்டில், இதை மாபெரும் மக்கள் இயக்கமாக முன்னெடுத்த பெருமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

கடவுள் மறுப்புதான் பகுத்தறிவு என்று இல்லை

சடங்கு மறுப்புதான் பகுத்தறிவு என்று இல்லை

சம்பிரதாய மறுப்புதான் பகுத்தறிவு என்று இல்லை

பிறப்பின் அடிப்படையில் இருக்கிற உயர்வு - தாழ்வு என்பது தவறு; அதற்குக் காரணமான கோட்பாட்டை எதிர்த்துப் போராடுவது என்பதுதான் பகுத்தறிவு.

ஒரு கோட்பாட்டிற்கு எதிரான யுத்தம்

தந்தை பெரியாரின் போராட்டமே, ஒரு கோட்பாட் டிற்கு எதிரான யுத்தம். சனாதனத்திற்கு எதிரான யுத்தம். சனாதனத்தைப் புரிந்துகொள்வதுதான் பகுத்தறிவு.

பிறப்பின் அடிப்படையிலே, உயர்வு - தாழ்வு உண்டு என்பதை காலங்காலமாக கட்டிக் காப்பாற்றி, அதை சிதைய விடாமல் முன்னெடுத்துச் செல்வதற்கு எது காரணமாக இருக்கிறது என்று பார்க்கிற பொழுதுதான், மனிதர்களை சுயமாக சிந்திக்கவிடாமல், சடங்குகளுக்குள்ளும், சம்பிரதாயங்களுக்குள்ளும், கடவுள் வழிபாடுகளுக்குள்ளும் மக்களைக் கொண்டு போய் தள்ளிவிட்டார்கள். அந்த மாயையிலிருந்து மக்களால் மீள முடியாத நிலையில், அவர்களால் அந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. அதன் நுட்பத்தைப் புரிந்துகொள்ள முடிய வில்லை.

ஆகவேதான், தந்தை பெரியார் அவர்கள் சனா தனத்தை எதிர்த்துப் பேசினார். மக்களை நேரிடையாக மயக்கி வைத்திருக்கிற மாயை எதுவோ, அதன்மீது குறி வைத்து தனது விமர்சனத் தாக்குதல்களைத் தொடுத்தார்.

மொத்தத்தில் அவர் ஏதோ கடவுள் மறுப்பாளர், கடவுள் சிலை அவமதிப்பாளர் என்பதைப் போன்ற ஒரு தொடர்பை, தோற்றத்தை இங்கே உருவாக்கி விட்டார்கள்.

பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதற்கும் சனாதனம் ஒரு காரணம்!

மக்கள் தொகையில் பாதியாக இருக்கின்ற பெண்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.

பெண்களுக்கு கல்வியில்லை,

பெண்களுக்கு சொத்துரிமை இல்லை,

பெண்களுக்கு அதிகாரமில்லை

பெண்களின் பேச்சுக்கு மதிப்பில்லை

கருத்துச் சொல்ல சுதந்திரமில்லை

இப்படி பெண்கள் மக்கள் தொகையில் சரி பாதியாக இருப்பவர்கள் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதற்கும் இந்த சனாதனம் ஒரு காரணம்.

இந்த சிந்தனைதான் பகுத்தறிவு சிந்தனை. ஜாதியின் பெயரால் உழைக்கின்ற மக்களை ஒன்றுபடவிடாமல், சிதறடிக்கப்பட்டு, பிளவுபடுத்தப்பட்டு தொடர்ந்து மைனாரிட்டியாக இருக்கக்கூடியவர்கள் ஆள முடியும் என்கிற நிலையை வெற்றிகரமாக இங்கே நிகழ்த்திக் கொண்டிருப்பதற்குக் காரணம் சனாதனம்தான். இந்த நுட்பம்தான் பகுத்தறிவு.

ஒட்டுமொத்தத் தொகையில் 3 சதவிகிதமாக இருக்கிற பார்ப்பனர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடிகிறது.

உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளில் அவர்கள் மட்டுமே ஆதிக்கம் செய்ய முடிகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையாக அவர்கள் மட்டுமே இருக்க முடிகிறது.

இதை ஏன்? என்றுகூட கேள்வி எழுப்புகிற ஒரு துணிச்சல், அந்த விழிப்புணர்வு மற்றவர்களுக்கு இல் லாமல் போனதற்கு எது காரணம் என்று சிந்தித்தவர்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

சமூகநீதி சிந்தனைதான்

பகுத்தறிவுச் சிந்தனை

ஆகவே, இவர்கள் எந்த மவுடீகத்தில் மூழ்கிக்  கிடக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்த நிலையில்தான், சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறார். இவர் களுக்கு விழிப்புணர்வு  உருவாகவேண்டுமானால், அதிகார வலிமையைப் பெறவேண்டும். அதிகார வலிமையைப் பெறவேண்டுமானால், இவர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், அதிகாரப் பகிர் விலும் இட ஒதுக்கீடு வேண்டும். இந்த இட ஒதுக்கீடு என்பதுதான் சமூகநீதி. சமூகநீதி சிந்தனைதான் பகுத்தறிவுச் சிந்தனை.

எவ்வளவு ஆழமாக, நுட்பமாக அரசியலைப் புரிந்து தந்தை பெரியார் அவர்கள் இந்தக் களத்தை அமைத்திருக்கிறார்; ஒரு மாபெரும் மக்கள் இயக் கத்தை உருவாக்கி இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதனால்தான், புராணங்களையும், சாஸ்திரங்களையும் அவர் கையில் எடுத்தார். எல்லா வற்றிற்கும் அடிப்படையாக இருக்கிற மனுதர்மத்தை அவர் குறி வைத்து விமர்சனம் செய்தார்.

இல்லாத ஒன்று  என்று யாரும் அதை சொல்ல முடியாது. எங்கே இருக்கிறது மனுதர்மம் என்று  யாரும் கேட்க முடியாது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பே நம்பிக்கையின் அடிப் படையில்தான் நிலத்தை வழங்குகிறோம் என்று அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆதாரங்களின் அடிப் படையில் அல்ல.

இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது

மனுதர்ம சாஸ்திரம்தான்

ஆகவே, நாட்டை ஆளுவது இந்திய அரசமைப்புச் சட்டமா? அல்லது மனுதர்ம சாஸ்திரமா? என்றால், இந்தத் தீர்ப்பை வைத்தே சொல்ல முடியும், இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பது மனுதர்ம சாஸ்திரம்தான். அரசமைப்புச் சட்டமில்லை.

மெத்தப் படித்தவர்களே, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே, தீர்ப்பை எழுதக்கூடியவர்களே, நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பை எழுதக்கூடிய நிலை இருக்கிறது என்று சொன்னால், இந்த இடத்தில் நம்மை விமர்சனப் பார்வையோடு பார்க்க வைப்பது தான் பெரியாரின் பார்வை - அதுதான் பகுத்தறிவுப் பார்வை - அதுதான் பகுத்தறிவு சிந்தனை. இல்லை யென்றால், நாமும் வாய்மூடித்தான் கிடக்கவேண்டும்.

ஆகவேதான் மனுதர்மத்தை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் வெகுமக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்.

அது வெறும் சாஸ்திரமாக இல்லை,

அது வெறும் கோட்பாடாக இல்லை,

அது ஒரு சமூகத்தை வழிநடத்தக் கூடிய சட்ட மாகவும் இருக்கிறது; தண்டனை வழங்கக்கூடியதாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு வருணத்திற்கும் ஒரு தண்டனை; ஒரே குற்றம், வெவ்வேறு தண்டனை. ஆக, தண்டனையை வரையறை செய்யக்கூடிய ஒரு நூலாகவும் அது இருக்கிறது என்பதை, முதலில் இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு அடையாளம் கண்டு சொன்ன பெருமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைச் சாரும்.

யோசித்துப் பாருங்கள், நாம் இங்கே இருந்து மெனக் கெட்டு கோவிலுக்குப் போய், அங்கே கடவுளுடைய அருள் கிடைக்கும் என்று நினைக்கிறோம். கடவுளு டைய கருவறைக்குள்ளேயே இருக்கிறவர்கள், எல்லா அத்துமீறல்களையும் செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள  ஒரு கோவிலில் தேவநாதன் என்பவர் செய்த அட்டூழியம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். இதை யெல்லாம் கண்டிப்பதற்கு இங்கே யாரும் இல்லை.

அய்யன் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசாதீர்கள் என்று சொன்னால், கோபப்படுகிறார்கள். இதை மட்டும் சொல்லி நான் என்னுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

திருவள்ளுவர் வாழ்ந்த காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு!

அய்யன் திருவள்ளுவர் வாழ்ந்த காலம் தோராய மாக, 2000 ஆண்டுகளுக்கு முன்பு - கிறித்து பிறப்பதற்கு முன் 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது நூறு ஆண்டு களுக்கு முன்பு என்று சொல்லுகிறார்கள். அல்லது அதற்குப் பின்னால்கூட இருக்கலாம். எப்படியோ 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்தார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தபொழுது, இந்தியாவில் இருந்த மதங்கள் என்ன? ஆதிசங்கரர் காலமே கி.பி.எட்டாம் நூற்றாண்டு. 1200 ஆண்டு களுக்கு முன்பு. அப்பொழுதே இந்து மதம் என்ற ஒன்று இல்லை.

அப்பொழுது அவர் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று, மக்களைச் சந்தித்து,

சைவம்,

வைணவம்,

கானபத்தியம்,

கவுமாரம்,

சவுரம்,

சாக்தம் என்ற ஆறு சமயங்களை - இந்த ஆறு சமயங்களுக்குள் ஒரு ஒருமித்த பண்பாடு இருக்கிறது; எனவே, இதனை ஒன்று சேர்க்கவேண்டும் என்பதற் காக ஆங்காங்கே மடங்களை நிறுவினார் என்று வரலாறு சொல்லுகிறது.

அது 1200 ஆண்டுகளுக்கு முன்பு. அய்யன் திருவள்ளுவர் காலம் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆதிசங்கரருக்கு முன்னால் 800 ஆண்டுகளுக்கு மூத்தவர் அய்யன் திருவள்ளுவர்.

இந்து மதம் என்ற ஒரு மதம்

ஒற்றை வடிவத்தில் இல்லை

1200 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதம் என்ற ஒரு மதம் ஒற்றை வடிவத்தில் இல்லை. ஒற்றைச் சொல்லாடலில் குறிப்பிடப்படவில்லை.

சைவம் என்பது வேறு சமயம்

வைணவம் என்பது வேறு சமயம்

மகாராட்டிராவை மய்யமாகக் கொண்டு இயங்குகிற விநாயகர் - கானபத்தியம், கணபதி வழிபாடு.

முருகப் பெருமானைத் தலைவராகக் கொண்டு அல்லது  கடவுளாகக் கொண்டு வழிபடக்கூடிய கவுமாரம் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கக் கூடிய ஒன்று.

சாக்தம் அல்லது  சக்தி அல்லது அம்மன் வழிபாடு இன்றைக்கும் மேற்கு வங்கம்தான் அதற்குப் பெயர் போன பகுதியாக இருக்கிறது.

இப்பொழுது எங்கே போனது சவுரம்? சவுரம் என்றால், சூரியனை வழிபடக் கூடியவர்கள்.

சாக்தம் என்றால், சக்தியை வழிபடக் கூடியவர்கள்.

கவுமாரம் என்றால், குமரனை, திருமுருகனை வழிபடக் கூடியவர்கள்.

சைவம் - சிவனை

வைணவம் - விஷ்ணுவை

இந்த மதங்கள் எங்கே போயின? சமயங்கள் எங்கே போயின?

இந்த 200 ஆண்டு காலத்தில்தான் இந்து, இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில்தான் இந்தப் புழக்கம் வந்தது.

திருவள்ளுவருக்கு

மதச் சாயம் பூசாதீர்கள்!

அப்பொழுது 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால், வள்ளுவர் இருந்தது உண்மை என்றால், அவர் உங்கள் மதத்தில் ஏதேனும் ஒன்றில் இருந்திருக்க வேண்டும். ஒன்று, சைவத்தில் இருந்திருக்கவேண்டும்; அல்லது வைணவமாக இருக்கவேண்டும்.

ஆனால், தோள்பட்டையில்,  திருநீறு  பூசியிருக் கிறார்கள்; நெற்றியில் நாமம் சாத்தியிருக்கிறார்கள். இரண்டும் இருக்க முடியாது, 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக. ஏதாவது ஒன்றைத்தான் சொல்ல முடியும். ஒன்று சைவத்தைச் சார்ந்தவர் என்று சொல்லுங்கள் அல்லது வைணவத்தை சார்ந்தவர் என்று சொல் லுங்கள். அல்லது முருகப் பெருமானை வழிபடக் கூடியவர் என்று சொல்லுங்கள்.

கிடையாது.

ஏனென்றால், அவர் எல்லாவற்றையும் எதிர்த்து, மறுத்துப் பேசியிருக்கிறார். மதச் சாயம் அவருக்குக் கிடையாது. அதனால்தான் நீங்கள் மதச் சாயம் பூசாதீர்கள் என்று சொல்லுகிறோம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

இது கடவுள் வாழ்த்து. ஆதிபகவன் - பகவன் என்கிற பிராமணன்; ஆதி என்கிற  பறைச்சி; இந்த இரண்டு பேருக்கும் இடையில் பிறந்த சமூகம்தான் இந்த சமூகம். இப்படி ஒரு கதை.

அப்பொழுதே கலப்பு மணம் நடைபெற்று இருக் கிறது போலிருக்கிறது, அவர்களுடைய பார்வையில்.

அந்தக் கருத்தில் நமக்கு உடன்பாடில்லை.

ஆதி என்கிற பறைச்சி அல்லது புலைச்சி; பகவான் என்கிற பிராமணன், பார்ப்பனன். இவர்களுக்கிடையில் தோன்றிய உலகம்தான் மானுட உலகம், மனித உலகம்.

இந்த உலகத்திற்கு உள்ள எல்லா மனிதர்களும் இவர்களுக்குப் பிறந்தவர்களாம்.

கிறித்துவ மதத்தில் ஆதாம் - ஏவாள் என்று சொல் கிறார்கள்.

இவர்கள் ஆதி பகவன் என்று சொல்வதாகச் சொல்கிறார்கள்.

மூடிய வாயைத் திறந்ததும் வருகிற முதல் ஒலி ‘அ' - அதனால் அகர முதல எழுத்தெல்லாம்

அந்தத் திருக்குறளை நன்றாக நீங்கள் படித்துப் பாருங்கள்,

அகர முதல எழுத்தெல்லாம்

உலகத்தில் இருக்கிற எந்த சமூகமாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும், மூடிய வாயைத் திறந்ததும் முதலில் ஒலிக்கின்ற சொல் ‘அ' என்பதுதான். யாரும் ‘இ' என்று இளிக்கமாட்டோம். இதழ்களை விரித்தவுடன் வருகிற ஒலி  ‘அ'. வெள்ளைக்காரனாக இருந்தாலும், கருப்பனாக இருந்தாலும், இந்தியனாக இருந்தாலும், ஆஸ்திரேலியனாக இருந்தாலும், யாராக இருந்தாலும், மூடிய வாயைத் திறந்ததும் வருகிற முதல் ஒலி ‘அ' - அதனால் அகர முதல எழுத்தெல்லாம். இது உலகத்திற்கே பொருந்தும்.

பிறகு எப்படி ஆதிபகவன் என்று தமிழ்நாட்டிற்குள்  மட்டுமே அவருடைய சிந்தனை சுருங்கும். அது உலகத்திற்கே விரிந்து, உலகளாவிய பார்வை கொண்ட ஒரு மாமனிதருக்கு,  உடனே ஆதிபகவன் என்கிற இந்தியப் பார்வைக்குள் அல்லது தமிழ்நாட்டுப் பார்வைக்குள் எப்படி சுருங்கும்?

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்''  இது உலகளாவிய பார்வை; உள்ளூர்ப் பார்வையல்ல.

ஆதிபகவன் என்பது

ஆதவனைக் குறிக்கின்ற சொல்

ஆகவே, ஆதிபகவன் முதற்கே உலகு என்றால், ஆதிபகவன் என்பது ஒரு சொல்தான்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

ஆதிபகவன் என்பது ஒரு சொல்தான்; ஆதி யும்,பகவன் என்பதும் வேறு வேறு சொல்லல்ல. இரண்டு சொல் அல்ல.  எனவே, இரண்டு பெயராக இருக்க வாய்ப்பில்லை. ஆதிபகவன் என்பது ஒற்றைச் சொல். அப்படியென்றால், ஆதிபகவன் என்பது ஆதவனைக் குறிக்கின்ற சொல்லாகத்தான் இருக்க முடியும்.

ஏனென்றால், இந்த பூமி என்கிற உலகம், சூரியனி லிருந்து சிதறி வந்த, லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த ஒரு பகுதி, நிலப்பரப்பு. உலகம் பூமியிலி ருந்துதான் தொடங்குகிறது. ஏனென்றால், மனிதனுக்கு உலகம் பூமிதான். பிரபஞ்சத்தை இவன் உலகமாகப் பார்க்க மாட்டான். மனிதன் வாழக்கூடிய ஒரே கோள் பூமி. எனவே, மனிதன் பார்வையில் ஒரே உலகம் பூமி.

ஆக, உலகம் எங்கிருந்து தொடங்குகிறது என்றால், ஆதிபகவனிலிருந்து தொடங்குகிறது என்று அறிவியல் பார்வையோடு அய்யன் திருவள்ளுவன் ஆதவனைத்தான் குறிப்பிட்டு இருக்க முடியுமே தவிர, ஆதி என்கிற பறைச்சியையும், பகவன் என்கிற பிரா மணனையும் குறித்திருக்க வாய்ப்பே இல்லை.

கடவுள் வாழ்த்து  என்பதேகூட, இவர்கள் இடையில் சொருகியதாகத்தான் இருக்க முடியும்

எனவே, கடவுள் வாழ்த்து  என்பதேகூட, இவர்கள் இடையில் சொருகியதாகத்தான் இருக்க முடியும்; அந்தத் தலைப்போ, அதிகாரங்களோ அவர்தான் எழுதினார் என்பதற்கு நமக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

வ.உ.சி. போன்றவர்களே, ஏராளமான இடைச்செரு கல்கள் இருப்பதாகப்  பதிவு செய்திருக்கிறார்கள் என்று இப்பொழுது நாம் வாட்ஸ் அப்பில் பார்க்கிறோம்.

எனவே, பகுத்தறிவு என்பது குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தையும் விமர்சிப்பதற்கானது அல்ல. உலகம் முழுவதும்  உள்ள மக்கள் தலைநிமிர்ந்து தன்மானத் தோடு வாழ்வதற்கான சிந்தனை.

பகுத்தறிவு என்பது தமிழர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல.

உலகம் முழுவதும் அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தக் கூடியது.

பகுத்தறிவு என்பது குறிப்பிட்ட இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பதற்கானது அல்ல.

உலகில் எங்கெல்லாம் மூடநம்பிக்கைகள் இருக் கிறதோ, அறிவியலுக்கு முரணாக இருக்கின்றனவோ, அவ்வளவையும் எதிர்க்கிற, அதிலிருந்து மாறுபட்டு, அறிவியல் சார்ந்து சிந்திக்கிற ஒரு சிந்தனைதான் பகுத்தறிவு சிந்தனை.

உலகம் தழுவிய பார்வையுள்ள

ஒரு மாமனிதர் தந்தை பெரியார்!

எனவே, அய்யன் திருவள்ளுவர் உலகம் தழுவிய பார்வையுள்ள ஒரு மாமனிதர் என்பதுபோல, அய்யா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், உலகம் தழுவிய பார்வையுள்ள ஒரு மாமனிதர் என்பதைச் சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரையாற்றி னார்.

- விடுதலை நாளேடு, 21.12.19

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா -4

- ஒரு தொகுப்பு -

18.12.2019 அன்றைய தொடர்ச்சி...

உயர்கல்வி பல்கலைக் கழகங்களின் உறைவிடம் பாஸ்டன்:

அமெரிக்க அய்க்கிய நாடுகளின் அங்கமாக உள்ள மாசசூசெட்ஸ் (Massachusetts) தொடக்ககாலம் முதல் இன்றுவரை மிக முக்கிய மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. அம்மாநிலத்தின் தலைநகர் பாஸ்டன் (Boston). அமெரிக்க விடுதலைப் போர் வரலாற்றைப் படிக்கும் பொழுது பாஸ்டன் நகரைப் பற்றிய குறிப்பு தவறாமல் வரும்; அட்லாண்டிக் கடற் கரையில் அமைந்துள்ள துறைமுக நகரம். அந்நாளில் அமெரிக்கக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பிரிட்டனிலிருந்து மிகப்பலர் முதன்முதலாகக் குடி யேறிய இடம் பாஸ்டன் நகரமாகும். பிரிட்டிஷ் மக்களின் குடியிருப்புப் பகுதி பாஸ்டன் நகராகும்; பிரிட்டன் மக்களின் நேரடி வாரிசு என்றும், அமெரிக்காவில் உள்ள பிற இனமக் களுடன் கலப்பில்லாதவர்கள் என பாஸ்டன் நகர அமெ ரிக்கர்கள் தங்களை உயர்வாகக் கருதிக் கொண்டிருக்கும் போக்கு இன்றும் நிலவுகிறது.

நகரைச் சுற்றிப் பார்க்க எங்களை அழைத்துச் சென்ற அமெரிக்க வழிகாட்டி உலகநாடுகளைப் பற்றிய முக்கிய சமூக, அரசியல் பொருளாதாரச் செய்திகளை அறிந்தவ ராக இருந்தார். பாஸ்டன்நகர அமெரிக்கர்களின் மேலா திக்க மனப்பான்மையினை கூறவந்த அந்த வழிகாட்டி, 'உங்கள் நாட்டு (இந்தியா) பார்ப்பனர்களைப் போல உள்ளார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் Boston Brahmins (பாஸ்டன் பார்ப்பனர்கள்) எனக் குறிப்பிடலாம் என ஒப்பீட்டுடன் விளக்கமளித்தார். 17-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க விடுதலைப் போருக்கு வித்திட்ட நகரம் பாஸ்டன்.  பிரிட்டனின் காலனி ஆதிக் கத்தை விரும்பாத அமெரிக்கர்கள், பிரிட்டனிலிருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்படும் வணிகப் பொருள் களுக்கு வரி கொடுக்க மாட்டோம்,  பிரிட்டனின் பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என எதிர்ப்புக் காட்டினர், அச்சமயம் பிரிட்டனிலிருந்து கப்பல் மூலமாக ஏரளமான அளவில் தேயிலைச் சரக்குப் பெட்டிகள் பாஸ்டன் துறைமுகத்தை வந்தடைந்தன. பிரிட்டனின் ஆதிக்க அரசியலை எதிர்க்கும் விதமாக போரா அமெரிக்கர்கள் செவ்விந்தியர் போல வேடமணிந்து பாஸ்டன் துறைமுகத்தில், கப்பல் மூலம் வந்த சரக்குகளை இறக்கவந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு தேயிலைச் சரக்குப் பெட்டிகள் இருந்த கப்பலில் ஏறினார்கள். ஒட்டு மொத்தமாக அத்துணை தேயிலைச் சரக்குகளையும் கப்பலிலிருந்து தூக்கி கடலில்  வீசி எறிந்து வீணாக்கி தங்களது எதிர்ப் பினைக் காட்டினார்கள். தேயிலை கடல்நீரில் கலந்து, கரைந்து போனதால் அந்த நிகழ்வு 'பாஸ்டன் தேநீர் விருந்து' (Boston Tea Party)  என பிரபலமாகப் பேசப் பட்டது. அமெரிக்க விடுதலைப் போரை முடுக்கிவிட்ட முக்கிய நிகழ்வாக பாஸ்டன் தேநீர் விருந்து அமைந்துவிட்டது.

காலைச் சிற்றுண்டிக்குப் பின்,

பாஸ்டன் புறநகர் பகுதியில் இருந்த விடுதியைக் காலி செய்து விட்டு பாஸ்டன் நகர் முழுமையும் சுற்றிப் பார்க்க கிளம்பிய நாங்கள் முதன் முதலாக 'பாஸ்டன் தேநீர் விருந்து' நடைபெற்ற நிகழ்விடம் வந்தோம். அந்த வரலாற்று நிகழ்வினை நினைவுபடுத்தும் வகையில் கப்பலின் வடிவத்தை செயற்கையாக உருவாக்கி

17-ஆம் நூற்றாண்டுச் சூழலை நினைவிடமாக வைத் துள்ளனர். வரலாற்றை நினைவுபடுத்திப் பார்ப்பதில் அமெரிக்கர்களின் அணுகுமுறை பாராட்டப்படும் சிறப்புக்குரியது. ஒரு சில நிகழ்வுகளை உள்ளடக்கிய வரலாற்றுக்கே நினைவிடம் வைக்கும் அமெரிக்க வழக்கத்தைப் பார்க்கும்பொழுது, சுயமரியாதை இயக்க வரலாற்றில் திருப்பு முனையான எத்தனையோ நிகழ்வுகளுக்கு நமது மண்ணில் நினைவிடம் அமைத்து நமது எழுச்சி வரலாற்றை அடுத்தடுத்து வருகின்ற புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியானது.

பாஸ்டன் நகரை அடுத்துள்ள பகுதிகள் உயர்கல்வி நிலையங்கள் - உலகப் புகழ்வாய்ந்த கல்வி நிலை யங்களைக் கொண்டுள்ளது.

மாசசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்

(Massachusetts Institute of  Technology-MIT)

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் MITயும் ஒன்று. தமிழகத்தில்  MIT என்றதும் சென்னை-குரோம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல் கலைக் கழகத்தின் அங்கமாக (Constituent)   உள்ள  (Madras Institute of Technology-MIT) நினைவுக்கு வந்தது. மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் படித்த சென்னை  உயர்கல்வி பொறியியல் நிறுவனம். ஆனால் அமெரிக்காவில் ஏராளமான பல்கலைக்கழகங்கள், அனைத்து உயர்கல்வித் துறை களான கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்வியை ஒரே வளாகத்தில் அளிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றன. பாஸ்டனில் உள்ள MIT பல்கலைக் கழகத்தில் பயின்றோர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். இந்தப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள் பலருக்கு அவர்களது ஆய்வுக்கு உலகப் புகழ்பெற்ற நோபல்பரிசு பல துறைகளிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2019) பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, அவரது துணைவியார் எஸ்தர் டுஃப்ளே மற்றும் மைக்கேல் கிரேமர் (ஹார்வர்டு பல் கலைக்கழகம்) ஆகியோர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியர்களாக உள்ளனர். நாங்கள் MIT-அய் பார்வையிட்ட பொழுது சுற்றுலா வழிகாட்டி, கடந்த காலங்களில் பலர் - இந்த உயர் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என பொதுவாகத்தான் குறிப்பிட்டார். சுற்றுலா நிறைவு பெற்ற ஒரு வார காலத்திலேயே MIT-அய் சார்ந்த இரண்டு பொருளாதாரப் பேராசிரியர்கள் நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது MIT-யின் பெருமையைப் பறை சாற்றுவதாக இருக்கிறது. அடுத்து சற்று தூரத்தில் இருந்த தொன்மையான புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றிற்குச் சென்றோம்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம்  (Harvard University)

1636-ஆம் ஆண்டு கிறிஸ்தவப் பாதிரியார் ஜான் ஹார்வர்டு என்பவரால் நிறுவப்பட்ட இந்த உயர்கல்வி நிலையம் அமெரிக்காவிலேயே மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்ததாகும். பிறநாடுகளில் உள்ள உயர்கல்வி பயின்றோருக்கும், பழம்பெருமையினால் மிகவும் பிரபலமான ஒரு கல்வி நிறுவனம் இது. வளா கத்தைச் சுற்றிப் பார்த்து வருகையில் - எழுந்து நிற்கும் கட்டடங்களே பழமையை கலைநயத்துடன் வெளிப் படுத்தின. பெரிய-மிகப்பெரிய நூலகம் உள்ளது. இங்கு பணியாற்றிய, பணியாற்றி வரும் பல ஆய்வுப் பேராசிரி யர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள செய்தி யோடு சுற்றுலா வழிகாட்டி கூடுதல் செய்தி ஒன்றையும் கூறினார். ஹார்வர்டு பல்கலைக் கழகம் தன்னிடம் பயின்ற மாணவர்களுள் - ஜே.எம்.கென்னடி, பாரக் ஒபாமா உட்பட எட்டுப் பேரை அமெரிக்க நாட்டின் குடி யரசுத் தலைவராக உயர்ந்திட வழி ஏற்படுத்தியுள்ளது.

நமது நாட்டில் சமூகநீதி வழங்குவதற்கு, வழி முறையாக அமைந்துள்ள 'இட ஒதுக்கீடு' (Reservation) நடைமுறை போலவே கல்வியில் ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் ஆகிய மாணவர்கள் பயில 'உடன்பாட்டு செயல்முறை' (Affirmative Action) நடைமுறையில் உள்ளது. பெரும் பாலான உயர்கல்வி நிலையங்களும், வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களும் தனியார் வசம் இருந்த போதிலும் உடன்பாட்டு செயல்முறை கடைப்பிடித்தலால் அந்த நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட அனைவரையும் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதையும் சில நிமிடங்களில் பார்த்து விடமுடியாது. ஓரளவிற்குப் பார்த்துவிட்டு பல்கலைக்கழக நிறுவனர் ஜான் ஹார்வர்டுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்தோம். பல்கலைக் கழக வரலாற்றைச் சுருக்கமாக சுற்றுலா வழிகாட்டி கூறிமுடித்தார்.

ஜான் ஹார்வர்டு சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டு அதன் மீது கருப்பு வண்ணம் பூசப்பட்டு அமர்ந்து இருக்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. சிலையைப் பார்த்த சுற்றுலா வந்த சுயமரி யாதைத் தோழர்களில் ஒருவர் சரியானபடி ஒரு விளக்கத்தினை வழிகாட்டியிடம் கேட்டார்.

வீ. குமரேசன்

(தொடரும்)

- விடுதலை நாளேடு 21 12 19

சனி, 21 டிசம்பர், 2019

மலேசியாவில் திராவிடர் எழுச்சி!

மலேசியா நாடு முழுதும் முக்கிய தலைநகர்களில் திராவிடர் கூட்டமைப்பு பிரச்சார பெருமழை

தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரைகள்

சிலிர்த்தெழுந்த சிங்கம் போல் தொடர் நிகழ்ச்சிகள்

மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த பெரியார் பெருந் தொண்டர்கள், திராவிடர் இயக்க செயல் வீரர்கள் - மானமிகு சுயமரியாதைக்காரர்கள் என அனைத்து அமைப்பினரும் முதல் முறையாக கடந்த 24.11.2019 அன்று கிரவுன் பிளாசா ஓட்டலில் Harbour Crew No.217, Persiaran Raja Muda musa, 4200 Pelabuhan Klang - Selangor என்ற அரங்கில், ஆசிரியர் கி.வீரமணி (தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர்) அவர்களின் தலைமையில் கலந்துறவாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துகளை ஒத்த குரலில் பரிமாறிக் கொண்டு புதிய சரித்திரத்தின் - முதல் வரிகளை எழுதத் தொடங்கினர். இதன் அடிப்படையில்தான் தந்தை பெரியாரின 46ஆவது ஆண்டு நினைவு நாள் (24.12.2019) தொடர் நிகழ்வை மிகுந்த சிறப்புடன் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா - 3

- ஒரு தொகுப்பு -

16.12.2019 அன்றைய தொடர்ச்சி...

பிலடெல்பியா நகரம் (City of Philadelphia)

சில்வர் ஸ்பிரிங் நகரிலிருந்து 135 மைல்கள் (217 கிலோ மீட்டர்) பயணம் செய்து சரியாக 12.30 மணிக்கு பிலடெல்பியா நகருக்கு வந்துசேர்ந்தோம். அமெரிக்க நாட்டிலேயே பெரிதும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நகரம் பிலடெல்பியா, அமெரிக்கா, பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் விடுதலைக்கான வித்து ஊன்றப்பட்ட இடம் பிலடெல்பியா நகரமாகும். அமெ ரிக்க விடுதலைப் போரில் பங்கேற்ற ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்ஸன், பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகிய தலைவர்-தளபதிகள் வாழ்ந்த நகரம் பிலடெல்பியா ஆகும். அமெரிக்க விடுதலைப் போருக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் பிலடெல்பியா. அமெ ரிக்கா விடுதலை பெற்ற பிறகு அந்நாளில் (1776-ஆம் ஆண்டில்) 13 மாநிலங்களை மட்டும் உள்ளடக்கிய அமெரிக்க அய்க்கிய நாட்டின் தலைநகராக விளங்கிய நகரம் பிலடெல்பியா. அதற்குப் பின்னர்தான் வாஷிங்டன் D.C. உருவாக்கப்பட்டு தலைநகர் மாற்றப்பட்டது.

விடுதலை மணி தேசியப் பூங்கா

(National Park of Liberty Bell)

பிலடெல்பியா நகரின் கட்டடங்களின் அமைப்பே 400 ஆண்டு கால வரலாற்றைச் சொல்வது போல விளங்கிக் கொண்டிருந்தன. விடுதலை மணி (Liberty Bell)  தேசியப் பூங்காவிற்கு சென்றோம். லிபர்டி பெல் என்று அழைக்கப்படும் வரலாற்று புகழ்பெற்ற மணி, விடுதலை உணர்வின் வெளிப்பாடாக, ஓர் அடையாள மாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க விடு தலைப் போருக்கு முன்னர், பிலடெல்பியா சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன் ஒலிக்கப்படும் மணியாக இருந்த வழக்கம் பின்னர் நகரின் முக்கிய பிரச்சினைகள், அபாய அறிவிப்புகள் பற்றிய எச்சரிக்கை விடுப்பதற்கான பயன்பாட்டில் இருந்தது. இந்த வழக்கத்தை ஒட்டி முக்கிய நிகழ்வுக்காக அதற்கென பிரத்யேகமாக 4 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மணி இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டது. வந்து சேர்ந்தபொழுது அந்த மணியில் ஏற்பட்ட கீறல் காரணமாக உரிய அளவில் ஒலி எழுப்பிட அந்த மணி பயன்படவில்லை. அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தின் பொழுது இந்த விடுதலை மணி ஒலித்ததாகவும் தெரியவில்லை. இருப்பினும் இந்த லிபர்டி பெல்லை ஒரு நினைவுச் சின்னமாகக் கருதி, விடுதலை உணர்வின் மேன்மையை பறைசாற்றிடும் வகையில் ஒரு தேசியப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த விடுதலை மணியில் கிறிஸ்துவ மத போதனைப் புத்தகத்தில் உள்ள வரிகளான, ‘Proclaim Liberty throughout all the Land unto all the Inhabitants there of’ (அனைத்து நிலப்பகுதிகளிலும் வாழும் மக்களுக்கும் விடுதலை பிரகடனப்படுத்தப்படுவதாகுக) எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த லிபர்டி பெல் சின்னத்தைப் பற்றி அதனைப் பார்வையிட்ட பல தலைவர்களும் அதன் பின்னணியில் உள்ள விடுதலை வேட்கையினைப் பற்றிப் பாராட்டி கருத்து தெரிவித்த நிகழ்வுகள் படங்களாக அந்தப் பூங்காவில் இடம் பெற்றுள்ளன.

பிரான்சு நாட்டு தலைநகர் பாரீசுக்கு சென்றவர்கள் ஈபிள் கோபுரத்தைப் (Eiffel Tower) பார்க்காமல் எப்படி வர இயலாதோ அந்தளவிற்கு பிலடெல்பியாவிற்கு வருபவர்கள் லிபர்டி பெல் நினைவுச் சின்னத்தை பார்க்காமல் திரும்ப முடியாது; அப்படிப்பட்ட முக்கிய வரலாற்றுப் புகழ்பெற்ற நினைவுப் பூங்காவாக அது திகழ்கிறது.

அந்த நினைவுச் சின்னப் பூங்காவிற்கு அருகிலேயே, அமெரிக்க விடுதலைப் போரை முன்னின்று நடத்திய வரும், விடுதலை பெற்ற அமெரிக்க அய்க்கிய நாடு களின் முதல் குடியரசுத் தலைவராக விளங்கியவருமான ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்ந்த இல்லம், சிதிலமடைந்து தரை மட்டமான நிலையிலும், எஞ்சிய கட்டுமானங் களைப் பாதுகாத்து நினைவுச் சின்னமாக்கியுள்ளனர். அதைப் பார்க்கின்ற இளைய தலைமுறையினருக்கு சின்னம் பற்றிய சிறப்பைவிட விடுதலைப் போரை நினைவு படுத்திப் பார்க்கின்ற ஓர் உணர்வினை அந்த இடம் ஊட்டிவருகிறது.

இந்த இடங்களை எல்லாம் சுற்றிக் காட்டிட ஓர் உள்ளூர் வழிகாட்டிப் பெண்மணி வந்திருந்தார். ஒவ்வொரு இடத்தைப் பற்றிய செய்திகளையும் மிகுந்த ஆர்வத்துடன் விளக்கிக் கொண்டு வந்தார். ஆங்கிலத் தில் அவர் விளக்கமளித்தாலும் அமெரிக்கர்களின் ஆங்கிலப் பேச்சின் முழுமையைப் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. கேட்டுக் கேட்டு பழக்கப்படவேண்டும் என உணர்ந்து கொண்டோம். அந்த வழிகாட்டிப் பெண்மணி எங்களுடன் வருகை தந்த பின்னர் விடைபெறும் பொழுது (கட்டணம் பெற்றுக் கொண்ட வழிகாட்டியாக இருந்த போதிலும்) எங்களுடன் நிரந்தரமாக வந்த வழிகாட்டியிடம் ஒரு நிகழ்வினைக் கூறி ஆதங்கப்பட்டாராம். அதாவது அந்தப் பெண்மணி ஒவ்வொரு இடத்தைப் பற்றிய செய்திகளை விளக்கிக் கொண்டு இருந்த பொழுது அதைக் கவனிக்காமல் சுற்றுலா வந்த எங்களுள் சிலர் சத்தமாக உரையாடிக் கொண்டு இருந்ததைத்தான் அந்தப் பெண்மணி ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியி ருந்தார். அதாவது, அவரது எதிர்பார்ப்பு இதுதான்: விளக்கமளிப்பதை கவனிக்காமல் இருந்தால் கூடப் பரவாயில்லை; அதற்கு இடையூறு அளிக்கும் வகையில் உரையாடிக் கொண்டிருந்ததை தனக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாக அவர் நினைத்து வெளிப்படுத்தியி ருக்கிறார். அவரின் ஆதங்கத்தின் வெளிப்பாட்டில் நில விய ஒருவித சுயமரியாதை உணர்வு நியாயமாகத்தான் பட்டது; கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார்,  பிலடெல்பியா நகரைச் சார்ந்த அந்த வழிகாட்டிப் பெண்மணி.

நண்பகல் பசிநேரம் நெருங்கியதால் அங்கிருந்து நகரின் மய்யப்பகுதியில் அமைந்திருந்த ஓர் இந்திய உணவகத்திற்கு சென்று உணவருந்தினோம். பொதுவாக இந்திய உணவகமாக இருந்தாலும் அங்குள்ள அமெரிக் கர்களின் சுவையறிந்து அதற்கு ஏற்றாற்போல இந்திய உணவு வகைகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. உப்பு, காரம் மிகவும் குறைந்து சப்பென்று சாப்பிடுவது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

நண்பகல் உணவருந்திய பின்பு பிலடெல்பியா புறநகர்ப் பகுதியில் இருந்த கிரௌன் பிளாசா (Crown Plaza) விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் பயணம் - நயாகரா அருவிக்கு நீண்ட தொலைவு தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்தால் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டோம். இரவு உணவினையும் அதே இந்திய உணவகத்திற்குச் சென்று  சாப்பிட்டு விட்டு விடுதிக்குத் திரும்பினோம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய இடம், புதிய சூழல் என பயண அனுபவம் சற்று களைப்பு கலந்த களிப்பாகவே இருந்தது. விடுதி அறைகள் மிகவும் தூய்மையாகவும், நல்ல தண்ணீர், மின்சார வசதி முழுவதும் தங்கு தடையின்றி இருந்தது. குடிநீரும், குளிக்கும் நீரும் ஒன்றே. அறையிலேயே எந்நேரத்திலும் காபி அல்லது தேநீரை நாமே தயாரித்துக் கொள்ள உதவியாக உரிய பொருட்கள், உபகரணங்கள் இருந்தன. தொடர்ந்து வந்த பயணக் களைப்பினைப் போக்கும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் தங்கிய விடுதி ஏற்பாடுகள், வசதிகள் விடுதியில் வழங்கப்பட்ட காலை நேர சிற்றுண்டி விருந்து அனைத்தும் சிறப்பாக இருந்தன.

பிலடெல்பியா விடுதியின் வரவேற்புத் தளத்தில் நேர்கொண்ட ஓர் அனுபவம் நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள உதவியது. விடுதிக்கு வந்ததும், அறைச்சாவி களை பெற்று, உடன் வந்த தோழர்களுக்கு வழங்கிவிட்டு, ஒரு விளக்கம் வேண்டி வரவேற்பு முனையில், மற்றொரு வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்த  பெண் விடுதி ஊழியர் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். அவர் மிகவும் பொறுமையாக, தான் மற்றொருவருக்கு விளக்கம் அளித்துக் கொண்டு இருப்பதாகவும், அவரை அடுத்து மற்றொருவர் எங்களுக்கு முன்னரே வந்து வரிசையில் காத்திருப்பதால். அவருக்கு உரிய பதிலைத் தந்துவிட்டுத்தான் எங்களது கேள்விக்கு அவர் பதிலளிக்க முடியும் என எந்தவித சங்கடமுமின்றி தெளிவாகக் கூறினார். முன்னர் வந்தவர் முன்னரே செல்ல வேண்டும்; பின்னர் வந்தவர் காத்திருந்து தனது முறை வரும்பொழுதுதான் வேண்டிய விளக்கத்தைப் பெறமுடியும் என்பது சற்று உடனடிச் சங்கடமாக இருந்த போதிலும், நினைத்துப் பார்த்தால் சரியாகவே தோன் றியது. நாகரிக வாழ்க்கை முறையின் ஓர் அங்கமாகவே அந்த நிகழ்வு அளித்த அனுபவம் உணர்த்தியது.

சுற்றுலா சென்று பல்வேறு இடங்களைப் பார்ப்ப தோடு, மனிதநேய நாகரிக வாழ்க்கை முறையில் உள்ள ஏற்றங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஓர் அலாதியான இன்பம் இருந்தது. அனைவரும் விரைவாகத் தூங்கி அதிகாலையில் எழுந்து (காலை 6.30 மணிக்கே காலை விருந்து சிற்றுண்டி தயாராகி விடும்) தயாராகி அடுத்த ஊருக்கு பயணத்தை தொடர்ந்திடும் நினைப்புடன் அவரவர்களது அறைக்குச் சென்றோம்.

நயாகரா அருவி  (Niagara Falls)

காலைச் சிற்றுண்டியை பிலடெல்பியா விடுதி யிலேயே முடித்துவிட்டு சரியாக 9.30 மணிக்கு நயாகரா நகரத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம். பிலடெல்பியா இருப்பது பெனிசில்வேனியா மாநிலம். நயாகரா இருப்பது நியூயார்க் மாநிலத்தில்; பயண நேரம் 669 கி.மீ.; சாலை வழிப் பயணநேரம் 7.15 மணி; நெடுநேரப் பயணம்; இடையில் நண்பகல் உணவிற்கு இறங்கியதைத் தவிர வேறெங்கும் தங்காமல் தொடர்ந்து பயணம் செய்தோம். நயாகரா - அமெரிக்காவின் வடக்கு எல்லையில் உள்ள நகரம்; கனடா நாட்டின் தென்பகுதி யினை ஒட்டியுள்ள அமெரிக்க நகரம். இரண்டு நாடுகளுக்குமிடையில் உள்ள எல்லைப் பாதுகாப்பிற்கு எந்தவித ராணுவமும் நிறுத்தப்படவில்லை. நாடுவிட்டு நாடு செல்லும் பயணிகள் ஏதோஉள்ளூர் பயணம் போன்று பாஸ்போர்ட், விசா சம்பிரதாய பரிசோதனையுடன் வந்து செல்லுகின்றனர். ஆனால் அமெரிக்காவின் தென் எல்லையில் உள்ள நாடு மெக் ஸிகோ. அங்கிருந்து அமெரிக்காவிற்குள் வருவதற்கோ கெடுபிடிகள் அதிகம். அமெரிக்கா, கனடா போன்ற நாடு களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுவும், வாழ்வாதார, அடிப்படை வசதிகளைப் பொறுத்த அளவில் அதிக வேறுபாடுகளும் கிடையாது. ஆனால் ஸ்பானிஷ் மொழி பேசும் மெக்ஸிகோ நாட்டு மக்க ளிடையே வாழ்வாதாரக் கட்டமைப்பும், வேலைவாய்ப்பு வசதியும் மிகவும் குறைவு. சட்டத்தை மீறி மெக்ஸிகோ நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குள் மெக்ஸிகோவினர் நுழைந்து விடுகிறார்கள். இருப்பினும் அப்படிப்பட்ட வர்களை உடல் உழைப்பு வேலைகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளும் வழக்கம் அமெரிக்கநாட்டின் தென் பகுதியில் உள்ள கலிபோர்னியா, கொலரோடா, டெக் ஸாஸ் ஆகிய மாநிலங்களில் நிலவி வருகிறது.

நயாகரா நகரைச் சென்றடையும் பொழுது இரவுப் பொழுதாகி விட்டது. விடுதியில் இறங்கி அறையில் பெட்டி, பொருட்களை வைத்து விட்டு, அருகிலேயே இரவு உணவையும் முடித்துவிட்டு கால்நடையாகவே நயாகரா அருவியை பார்க்கச் சென்றோம். இரவு நேரத் தில் வண்ணவிளக்குகள் அந்த நதியின் இருபுறங்களிலும் உள்ள இரண்டு நகரங்கள் மின்னிடும் சூழலில் நயாகரா அருவியை பார்ப்பது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.

நயாகரா அருவி என்பது ஒன்றல்ல; மூன்று அருவிகளின் சங்கமம் ஆகும். குதிரை லாட அருவி (Horseshoe Falls) கனடா நாட்டின் ஆண்டாரியா மாநிலப்பகுதியில் உள்ளது. மீதமுள்ள அமெரிக்க அருவி  (American Falls), பிரைடல் வொய்ல் அருவி (Bridal Veil Falls)  ஆகிய இரண்டும் அமெரிக்க நாட்டு நிலப்பரப்பில் உள்ளவை. இவை மூன்றும் சங்கமிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் உயரம் 165 அடிகளாகும்.

பலவித வண்ணவிளக்குகளின் வெளிச்சத்தில் விழும் நீர் அந்தந்த வண்ணங்களில் ஒளிர்ந்தது. அமெரிக்கப் பகுதியில் உள்ள கரையிலிருந்து நீர்வீழ்ச்சிப் பக்கம் நெருங்கிச் சென்ற வேளையில் நீர்த்திவலைகள் காற்றோடு காற்றாகக் கலந்து வந்து உடம்பில் ஒட்டிக் கொண்டன. ஆற அமர ஓர் இடத்தில் இருந்து அமை தியாக அருவி கொட்டுவதைப் பார்க்கவே மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. இரவு நேரத்தில் நயாகரா அருவிக் காட்சிகளை பார்த்து ரசித்த நினைவுகளுடன் மீண்டும் அடுத்த நாள் பகல்நேரத்தில் அருவியைப் பார்த்திடும் நினைப்புடன் விடுதிக்கு திரும்பி வந்தோம்.

அடுத்தநாள் (25, நவம்பர்) காலைச் சிற்றுணவை விடுதியிலேயே முடித்துக் கொண்டு அறையைக் காலி செய்து பொருட்களை சுற்றுலாப் பேருந்தில் இருத்தி விட்டு மறுபடியும் நயாகரா அருவியைப் பார்க்கச் சென்றோம். பகல்நேரத்தில் பார்த்தது புதிய அனுபவமாக இருந்தது. நயாகரா அருவியின் ஒட்டு மொத்த பேரழகையும் கண்டு மகிழ்ந்தோம். அருவியை, நதியின் கரையிலிருந்து பார்ப்பது ஒருவகை அனுபவம்.  நீர் விழும் இடத்திற்கு அருகில் சென்று பார்ப்பது, அந்தச் சூழலில் மகிழ்வது சற்று மாறுபட்ட அனுபவம். அருவியை அருகில் சென்று பார்ப்பதற்கான பயண ஏற்பாட்டை நயாகரா நகர சுற்றுலா நிர்வாகமே செய்து வருகிறது. அதற்கு  ‘Maid of the Mist’ (நீர்த்திவலை மங்கை) என அந்தப் பயணத்திற்கு - அது தொடர்பான சுற்றுலா ஏற்பாடுகளுக்குப் பெயரிட்டுள்ளனர்.  எங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனமே ஒட்டு மொத்தமாக நதியில் மின்சார குறுங்கப்பலில் (Motorised Miniship) பயணிக்க பயணச் சீட்டுகளை வாங்கிவிட்டனர். கப்பலில் ஏறிப் பயணிக்க பெருங் கூட்டம் காத்திருந்தது. கப்பலில் ஏறும் முன்பே  ‘Maid of the Mist’ நிர்வாகம் பயணிகள் அனைவருக்கும் உடம்பில் அருவி நீர் படாமல் இருக்க நெகிழி உடையினை (Polythene dress) வழங்கினர். உடையினை அணிந்த எங்களுக்கு ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்தது ஒருவித மகிழ் வினைத் தந்தது. பயணிகள் இரண்டு அடுக்குகளில் அமர்ந்து, நின்றிருக்க, கப்பலானது நதியின் போக்கை எதிர்த்து நகர்ந்தது.  அருவியை நெருங்க நெருங்க ஒருவித பேரழகு மனநிலை நெஞ்சம் முழுவதும் கவ்விக் கொண்டது. அருவியையை நெருங்க நெருக்க நீர்த்திவலைகள் மிகுந்த காற்றுச் சூழல் அதிகரித்துக் கொண்டே வந்தது. அபாயக்கோடு வரை கப்பல் பயணிக்கும் பொழுது சுற்றுலா சென்ற அனைவரும் வயது, உடல்நிலை எதையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்த சூழல் இயற்கையின் இயல்புப்போக்கு எவ்வளவு இனிமை யானது என்பதை புரிய வைத்தது. ஒளிப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்வுகளில் பார்த்த நயாகரா நீர் வீழ்ச்சியினை நேரில் நெருங்கி தொட்டுப் பார்த்துவிட்ட தீரச் செயலுடன் எங்களது கப்பல் பயணம் மீண்டும் கரையினை வந்தடைந்தது. தங்களிடம் உள்ள செல்பேசி காமிராக்கள் மூலம் அந்தச் சூழல் முழுவதையும் ஒருவரை மற்றவர் ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம், சுயப்படபிடிப்பும் (Selfie) செய்து கொண்டோம். கரை திரும்பிய பின்னர் கரைப்பக்கம் அருவியை நெருங்கிப் பார்த்திடும் பார்வையாளருக்கான இடங்களில், வயது முதிர்ந்தவர்களும் படியேறிப் பார்த்து ரசித்து இளைஞர் களாகிவிட்ட சூழலையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்க முடிந்தது.

அமெரிக்காவில் எந்தவொரு சுற்றுலா இடம்-போற்றுதலுக்குரிய நினைவிடம் போனாலும் அதன் நினைவாகப் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள ஒரு வித வணிக மயச் சூழலை பரவலாகப் பார்க்க முடிகிறது. நயாகரா அருவியைப் பார்த்ததன் நினைவாக, ‘Maid of the Mist’  இலட்சினையுடன் பொறிக்கப்பட்ட உடைகள், பரிசுப் பொருட்கள் விற்பனையகத்தில் வைக்கப்பட்டிருந்தன. தோழர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு பொருளை வாங்கிக் கொண்டோம்.

நயாகரா அருவி தந்த உள மகிழ்ச்சியுடன், குளிர்ந்த மனநிலையுடன் அந்த நெஞ்சம் நிறைந்த இனிய சூழலைவிட்டு அகல முடியாமலும், தொடரவேண்டிய பயணம் அதிகம், தூரமும் அதிகம் என்ற கட்டாயத்தால் அங்கிருந்து நகர்ந்து வந்து பேருந்தில் ஏறினோம்; பாஸ்டன் நகர் நோக்கிய பயணம் தொடர்ந்தது. முந்தையநாள் பயண தூரத்தை விட அந்தநாள் பயணம் அதிகம்; 476 மைல் (766 கிலோ மீட்டர்). நண்பகல் உணவை இடையில் முடித்துக் கொண்டு தொடர்ந்து பயணம் செய்து இரவு 9.00 மணி அளவில் பாஸ்டன் நகரின் புறப்பகுதியில் உள்ள விடுதிக்கு  (Laquinta Andover)  வந்து சேர்ந்தோம்.

வீ. குமரேசன்

(தொடரும்)

- விடுதலை நாளேடு 18 12 19

திங்கள், 16 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா- 2

- ஒரு தொகுப்பு -

14.12.2019 அன்றைய தொடர்ச்சி...

வெள்ளை மாளிகை

(The White House)

218 ஆண்டுகளுக்கு முன்னர் 1800-ஆம் ஆண்டு முதல் ஜான் ஆடம்ஸ் குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலிருந்து குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக வெள்ளை மாளிகை விளங்கி வருகிறது. வெள்ளையர் இன அமெரிக்கர்கள் மட்டுமே குடியரசுத் தலைவர்களாக பதவி ஏற்று ஆட்சி செய்த காலத்தில் மனிதன்  (The Man) எனும் தலைப்பில் இர்விங் வேலஸ் (Irving Wallace) எழுதிய வெள்ளை மாளிகை பற்றிய ஒரு புதினம் மிகவும் பிரசித்தி பெற்றது. குடியரசுத் தலைவராக ஒரு கருப்பர் (ஆஃப்ரோ அமெரிக்கர்) இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதைக் கரு. இந்த ஆங்கில புதினத்தைத் தழுவி அறிஞர் அண்ணா தனக்கே உரிய எழுத்துத் திறனுடன் 'வெள்ளை மாளிகையிலே' எனும் இலக்கியப் படைப்பினை உருவாக்கினார். அந்தப் படைப்பு களின் கனவுகளை நனவாக்கும் வகையில், முதன்முறையாக கருப்பர் இன அமெரிக்கரான பாரக் ஒபாமா (Barack Obama) அமெரிக்க அய்க்கிய நாடுகளின் 44-ஆம் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். தொடர்ந்து இரண்டு முறை (2009-2017) அவர் பதவியில் இருந்தார். கருப்பர் என்பது எந்த வகையிலும் தகுதிக் குறைவானது அல்ல என்பதை கண்ணியமாக, ஆட்சி செய்த பாங்கின் மூலம் நடத்திக் காட்டி, மனிதரிடம் இருக்கும் பிறவி சார்ந்த இழிவு, தகுதிக் குறைவு, செயலாற்ற இயலாது போன்ற பொய் வாதங்களைத் தவிடு பொடியாக்கிய பெருமைக்கு உரியவராக பாரக் ஒபாமா விளங்கினார்.

வெள்ளை மாளிகை என்றதும் கோள வடிவக் கோபுரம் கொண்ட கட்டடம் உங்கள் மனக்கண்ணில் தோன்றலாம். ஆனால் அது வெள்ளை மாளிகை அன்று. கேபிடோல் மாளிகை  (Capitol building) என்றழைக்கப் படும் United States Congress  கட்டடம் அதாவது அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம். அதனைப் பிறகு பார்க்கலாம்.

நாங்கள் முதலில் பார்த்தது உண்மையான வெள்ளை மாளிகை. அதாவது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமும், அலுவலகமும் உள்ள கட்டடம். அதன் வடபுறமுகப்பான லாஃபியேட் சதுக்கம், பூங்கா அமைந்த பகுதி. முன்பு அந்த பூங்காவில் பொது மக்கள் அனுமதிக்கப்படுவதுண்டாம். இப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக முழக்க கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் அங்கேயே நெடுநாட்களாக இருந்து போராடக் கூடியவர்களைப் பார்த்தோம். ஆங்காங்கே பல்வேறு கோரிக்கைகள் ஆங்கில பதாகைகளை ஏந்தியபடி கவனத்தை ஈர்க்க முனைந்தனர். அமெரிக்க அரசு கவனம் செலுத்துகிறதோ இல்லையோ, அங்கு வரும் பார்வையாளர்கள் கவனம் செலுத்தினர். அதன்பிறகு அங்கிருந்து நாம் முன்னர் சொன்ன கேபிடோல் கட்டடம் சென்றோம்.

பயணம் செய்த பேருந்து பெனிசில்வேனியா நிழற் சாலையில் நுழைந்ததும் தூரத்தில் காபிடோல் (Capitol) தெரிந்தது.  நெருங்க நெருங்க  பிரமிப்புடன் ஒரு பேரமைப்பை பேருருவை  நோக்கி நகர்வதாகவே தோன்றியது. பெனிசில்வேனியா நிழற்சாலை எனும் பெயருக்கேற்ற நிழல் தரும் மரங்கள் வான்நோக்கி வளர்ந்து சாலையின் இரு மருங்கிலும் வரிசையாக வரவேற்றன.  அந்த வழியில் தான் இன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவருக்குச் சொந்தமான  டிரம்ப் இன்டர்நேஷனல் விடுதி (Trump International Hotel)  இருப்பதை வழிகாட்டி எங்களுக்குச் சுட்டிக் காட்டினார். முழுமையான அரசியல்வாதியாக இல்லாமல், பல நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளியாக இருந்து வெள்ளை மாளிகைக்கு வந்தவர் டொனால்டு டிரம்ப்.

கேபிடோல் கட்டடத்தின் ஒரு வெளிப்புறப் பகுதி, (படிக்கட்டுகள் பல அடுக்கடுக்காக அமைந்த பகுதி) மட்டும் பார்வையாளர் பார்த்திட அனுமதிக்கப்பட் டுள்ளது. அனைவரும் படிக்கட்டுகளில் நின்று கேபி டோல்  கட்டடத்தின் முழு வடிவமைப்பும் உள்ளடங்கும் வகை யில் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அரை மணி நேரம் அந்த வளாகத்தில் உலாவி விட்டு பன்னாட்டு மாநாடு நடைபெற விருந்த மேரிலாந்து மாநிலம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அமெரிக்க அய்க்கிய நாடுகளின் கூட்டமைப்பில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் (மாநிலப் பரப்பு, மக்கள் தொகை ஆகிய அளவுகளைப் பொருட்படுத்தாது உண்மையான பிரதிநிதித்துவம் அளிக்கப் படும் வகையில்) இரண்டு உறுப்பினர்கள் செனட் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படு கிறார்கள். அடுத்து ஒவ்வொரு மாநிலமும் காங்கிரஸ் பேரவைக்கும் பிரதிநிதி களைத் தேர்ந்தெடுத்து அனுப் புகிறது. குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டாலும் அதிக அதிகாரங்கள் அவருக்கு இருந்தும், அதனை நெறிப்படுத்துகின்ற வகையில் செனட் அவைக்கு அதிகாரம் உள்ளது. உண்மையான கூட் டாட்சி முறைக்கு எடுத்துக் காட்டாக அமெரிக்கா விளங்கு கிறது. கூட்டாட்சி அமைப்பின் தலைவரான குடியரசுத் தலை வரின் நேரடி ஆளுகைக்கு என வாஷிங்டன் D.C. எனும் நகரம் உருவாக்கப்பட்டது. இது எந்த மாநிலப் பகுதியிலும் வராது. வாஷிங்டன் எனும் பெயரிலேயே ஒரு தனி மாநிலம் அமெரிக்காவின் வட மேற்குக் கோடியில் உள்ளது. வாஷிங்டன் மாநிலத்தி லிருந்து வேறுபடுத்திக்காட்ட, தலை நகரான வாஷிங்டன் D.C. (District of Columbia) எனும் பெயரில்தான் அழைக்கப் பட்டு வருகிறது. வாஷிங்டன்  டி.சி.யிலிருந்து கிளம்பி அண்டை மாநிலமான மேரிலாந்தின் சில்வர் ஸ்பிரிங் பகுதிக்கு வந்தடைந்தோம்.

சில்வர் ஸ்பிரிங் நகரில் மாநாடு நடைபெற்ற மாண்ட் கோமரி கல்லூரிக்கு அருகி லேயே (சாலையைக் கடக்கும் தூரத்தில்) இருந்த விடுதியில் (Holiday Inn Express)  ஒதுக்கப்பட்ட அறைகளில் (ஓர் அறைக்கு இருவர்) தங்கினோம். சிறப்பாகவும், அடிப்படை வசதி களுடன் கூடிய அறைகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டி ருந்தன. மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களில் அமெரிக்க நாட்டிற்கு முதல் தடவை யாகச் சென்றவர்கள் பலர். இரவு உணவு மாநாட்டு ஏற்பாட்டாளர் களால் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு, விடுதியின் உணவகத்திலேயே அருந்திட வசதிகள் உருவாக்கப்பட்டி ருந்தன. இரவு உணவிற்குப் பின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர். சோம இளங்கோவனும், முனைவர் இலக்குவன் தமிழ் அவர்களும் அமெரிக்க நாட்டு குடிமக்களது நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள், வருகை தந்துள்ள பிற நாட்டினர் கடைப்பிடிக்க வேண்டிய குடிமை நடவடிக்கைகள் என மாநாட்டுப் பேராளர்களுக்கு பல குறிப்புகளை வழங்கினர். குறிப்பாக அமெரிக்க நாட்டில் கடைப்பிடிக்கப்படும் போக்குவரத்து விதிகளில் உரிய கவனம் செலுத்துவது பற்றியும் சரியாகக் கடைப் பிடிப்பதைப் பற்றியும், எடுத்துரைத்தனர்.

நடைமேடை தவிர, சாலைகளில் நடந்து செல்லக் கூடாது; சாலையைக் கடந்து செல்ல நினைத்தால் உரிய வழித்தடத்தில் தான் கடந்து செல்ல வேண்டும்; உரிய வழித்தடத்திற்கு வந்து அங்குள்ள கம்பத்தில் உள்ள பொத்தானை அழுத்தி சாலையினைக் கடக்க காத் திருக்க வேண்டும்; சாலையின் குறுக்காக நடை மேடையில் உள்ள விளக்கில் வெள்ளை நிற வெளிச்சம் தெரியும் பொழுதுதான் கடந்து செல்ல வேண்டும். சாலையில் வாகனங்கள் செல்லாவிட்டாலும், உரிய வழித்தடத்தில் அல்லாமல் பிற இடங்களில் குறுக்காக நடந்து சாலையினைக் கடக்க முயற்சிக்கக் கூடாது. வாகனங்களின் பயணம் இந்தியாவில் உள்ளதைப் போல (இடது பக்கப் பயணம்) அல்லாமல் அமெரிக் காவில் வலது பக்கப் பயணமாக உள்ளதைப் பற்றிய நினைப்பினை எப்பொழுதும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி புதிய நாடு, புதிய மக்கள் வாழும் இடம், வாழும் சூழல், சாலை விதிகள் என பரந்துபட்டு முக்கியக் குறிப்புகளைப் மாநாட்டுப் பேராளர்களுக்கு விளக்கமாக அளித்தனர். விதி முறைகள் பற்றிய விளக்கம் அளிக்கும் பொழுது இந்தியாவிற்கும் அமெரிக் காவிற்கும் உள்ள காலநேர வேறுபாடு காரணமாக பேராளர்கள் அனைவரும் ஜெட் லாக்  (Jet lag) எனப் படும் தூக்க நிலைக்கு உந்தப்பட்டனர். (ஜெட்லாக் என்பது உறங்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக வரும் உடல் உணர்வு.  நாம் முன்னரே கண்டதுபோல நமது நாட்டில் உறங்கும் இரவு அமெரிக்காவில் பகல் நேரமாகும், அமெரிக்காவில் இரவு என்பது இந்தியாவில் பகலாக இருக்கும். உறங்கும் நிலை அமெரிக்கச் சூழலுக்கு ஒத்துப்போக ஓரிரு நாட்களாகும் என்பதற்கு அமெரிக்காவிற்கு (இந்தியாவிலிருந்து) செல்லும் அனைவரும் பழக்கப்பட்டே ஆக வேண்டும். பயணக் களைப்பு காரணமாக (தொடர்ந்து 4.30 + 14.00=18.30 மணிநேரப் பயணம்) அனைவரும் நன்றாகத் தூங்கி எழுந்தோம்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து மீண்டு வந்த அமெரிக்கர்கள், தங்களில் மிகப் பலர் பிரிட்டனின் வம்சாவளியினைச் சார்ந்தவர்கள் என்ற போதிலும், சில பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டு இருந்திட வேண்டும்; பிரிட்டனின் மறுமதிப்பாக அமெரிக்கா இருந்திடக் கூடாது என்பதில் தொடக்கம் முதல் கவனமாக இருந்து  பல மாற்றங்களைச் செய்துள்ளனர். இன்று பிரிட்டனிலேயே மெட்ரிக் முறை ஏற்றுக் கொள் ளப்பட்டாலும், அமெரிக்காவில் லிட்டர் அளவிற்குப் பதிலாக காலன் என்பதும் எடையளவில் கிலோ என்பதற்குப் பதிலாக பவுண்டு என்பதும் நடைமுறையில் உள்ளது. தூரத்தை கிலோ மீட்டருக்குப் பதில் மைல் என்று தான் கணக்கிடுகிறார்கள். ஆங்கிலத்தில் டாய்லெட் (Toilet) என்பதை ரெஸ்ட் ரூம் (Rest Room)  என்பதாகச் சொல்லுகிறார்கள்.

இப்படி அமெரிக்கர்களின், அமெரிக்காவில் வாழும் பிறநாட்டினரின் பயன்பாட்டில் உள்ள வழக்கங்கள் பற்றி பெற்ற விளக்கங்கள் மாநாட்டின் பொழுதும் அதைத் தொடர்ந்து ஒரு வார காலம் சுற்றுலா செல்லும் பொழுதும் பயனுள்ள வகையில் இருந்தன.

செப்டம்பர் 21  22 (சனி  ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற சுயமரியாதை-மனிதநேய பன்னாட்டு இரண்டாம் மாநாடு பல்வேறு நாட்டவர், அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் பங்கேற்புடன் சிறப்புகள் பல பெற்று, வரலாற்றில் நிலைத்து நிற்கும் வகையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சென்ற அனைவரும், பிறநாட்டவர்களும், பெரியார் இயக்க வரலாற்றில் பெருமைப் படத்தக்க வகையில் இடம் பெற்றவர்களாகி விட்டோம் என்பதை நினைக்கும் பொழுது மனதிற்கு பெரிதும் மகிழ்ச்சி, மனநிறைவு. மாநாட்டு ஏற்பாட்டா ளர்களான பெரியார் பன்னாட்டு அமைப்பு, (Periyar International, USA)  அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association) மற்றும் ஓடியாடி உழைத்திட்ட பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டத் தினருக்கு நன்றிகள் பல கூறும் வகையில் மாநாட்டு நடவடிக்கைகள் நிலைத்து பெருமை படைத்துவிட்டது. (பன்னாட்டு மாநாடு நடைபெற்ற விதம், மாநாட்டு நடவடிக்கைகள் முழுவதும் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன வெளியீடான 'அமெரிக்காவில் பெரி யார்' எனும் நூலில் தொகுப்பாகவே வெளி வந்துள்ளது.)

மாநாடு நிறைவு பெற்று

மீண்டும் தொடர்ந்த சுற்றுலா

செப்டம்பர் 23-ஆம் நாள் காலை சிற்றுண்டியை அருந்தியபின், எங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு விடுதி அறைகளைக் காலி செய்தோம். அடுத்த ஆறு நாள்களுக்கு தொடர்ந்து பயணிக்க சிறப்பு சுற்றுலாப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுலா முழுவதும் எங்களுக்கு உடன் வழிகாட்டியாக மும்பை நகரிலிருந்து அடில் டாக்டர்   (Adil Doctor)  எனும் வழிகாட்டும் உதவியாளரை சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் அனுப்பி இருந்தது. எங்களது சுற்றுலா நிறைவடைந்து இந்தியா திரும்பிச் செல்ல நியூயார்க் விமான நிலையம் வரை உறுதுணையாக உடன் இருந்து சென்றார். தமிழ்நாட்டிலிருந்து சென்ற தோழர்களுடன் மாநாட்டில் பங்கேற்ற மூன்று ஜெர்மானியப் பிரதிநிதி களும் எங்களுடன் சுற்றுலாவில் சேர்ந்து வந்தனர். அம் மூவர் - உல்ரிக் நிக்லஸ், முனைவர் பிலிப் மொல்லர் மற்றும் ஸ்வென் வொர்ட்மான் ஆவார்கள்.  முனைவர் உல்ரிக் நிக்லஸ் அவர்கள் ஜெர்மனி-கொலோன் நகரில் 2017-ஆண்டு ஜூலை மாதம்   பெரியார் சுயமரியாதைப் பன்னாட்டு முதலாம் மாநாடு நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர். பெரியார் பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி கிளையின் தலைவராக உள்ள இவருக்கு 2019-ஆம் ஆண்டு சமூகநீதிக்கான

கி. வீரமணி விருது மேரிலாந்தில் நடைபெற்ற இரண்டாம் பன்னாட்டு மாநாட்டில் வழங்கப்பட்டது.  பிலிப் மொல்லர் ஜெர்மன் நாட்டு புருனோ நிறுவனத்தில் பணியாற்றுபவர்; மாநாட்டில் 'நடைமுறை மனிதநேயம்' எனும் தலைப்பில் உரையாற்றியவர். ஸ்வென் வொர்ட் மான் ஜெர்மனி-கொலோன் பல்கலைக் கழகத்தில் தென்கிழக்கு நாடுகள் பற்றிய ஆய்வுத் துறையில் பணியாற்றி வருபவர்.

சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சுற்றுலா செல்லுகையில் கவனமாக இருந்து, பாதுகாப் புடன் நல்ல முறையில் இருந்திட அனுபவபூர்வமான அறிவுரைகளை வழங்கினார்; எங்களை வாழ்த்தி அனுப்பிவைத்தார்.

சரியாக காலை 9.30 மணிக்கு மேரிலாந்து - சில்வர் ஸ்பிரிங்கிலிருந்து கிளம்பினோம். அமெரிக்க நாட்டு தலைநகர் வாஷிங்டன் D.C. யைச் சுற்றியுள்ள மாநி லங்கள் இரண்டு. ஒன்று, தென்மேற்கு பக்கத்தில் இருக் கும் வர்ஜினியா; மற்றது-வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள மேரிலாந்து. வாஷிங்டன் D.C. யிலிருந்து வடக்கு நோக்கிப் பயணித்தோம். இந்த மாநிலங்கள் அனைத்தும் அமெரிக்க நாட்டு வடக்குப் பகுதியில் அமைந்த கிழக்கு கடற்கரையினை (அட் லாண்டிக் பெருங்கடல்) ஒட்டியுள்ள மாநிலங்களாகும். மேரிலாந்து மாநிலத்தின் முக்கிய நகரமான பால்டி மோரை கடந்து டெலவார் மாநிலத்தின் தலைநகர் டென்வர் வழியாக பெனிசில் வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியா நகரை நோக்கிப் பயணித்தோம்.

- வீ. குமரேசன்

(தொடரும்)

- விடுதலை நாளேடு 15 12 19

சனி, 14 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா!

- ஒரு தொகுப்பு -
வீ. குமரேசன்
அமெரிக்க அய்க்கிய நாட்டின் மேரிலாந்து மாநிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை - மனிதநேய பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை-விமான நிலையம் அண்ணா பன்னாட்டு முனையத்திலிருந்து சுயமரியாதைக் கொள்கையில் பற்றுடையோர் 47 பேர், 2019 செப்டம்பர் 19-ஆம் தேதி இரவு 9.30 மணிக்குக் கிளம்பினோம். 4.30 மணி நேரப் பயணத்திற்குப் பின் நாங்கள் சென்ற எமிரேட்ஸ் (Emirates) விமான நிறுவனத்தின் தலைமையிடமான துபாய் நகர விமான நிலையம் வந்து சேர்ந்தோம். சென்னையிலிருந்து புறப்படும் பொழுதே பயணச் சான்றுகளை  (Boarding Pass) சென்னை - துபாய்,  துபாய்-வாஷிங்டன்  ஆகிய இரு விமானப் பயணங்களுக்கும் சேர்த்துப் பெற்றுக் கொண்டதால், துபாய் விமான நிலையத்தில் வெறும் பாதுகாப்புச் சோதனைகளுக்கு மட்டுமே ஆளானோம். பல்வேறு கட்ட பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக் கொண்டு வாஷிங்டன் செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்து நீண்ட நேரப் (12 மணி நேரம்) பயணத்திற்கு அணியமானோம். 20-ஆம் தேதி காலை 8.40 மணிக்கு வாஷிங்டன் சென்று சேருவதாகப் பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தால்  ஆசிய, அய்ரோப்பிய நாடு களைக் கடந்து அட்லாண்டிக் கடல் மீது பெரிதும் இரவு நேரத்தில் பயணப்பட வேண்டியிருக்கும் என நினைத்திருந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் இரவு முடிந்து விடியல் தொடங்கி விட்டது. பூமி சுழற்சியின் போக்கில் ஒருநாள் என்பது இந்தி யாவிற்கு முதலில் தொடங்கி விடும்.  மேற்கு நோக்கிச் செல்ல செல்ல அந்தநாள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்தியாவில்  பகல் நேரம் அமெரிக்காவில் இரவு நேரமாகும். அமெரிக்கா விடிய விடிய இந்தி யாவில் இரவு தொடங்கும்.
ஏறக்குறைய 12 மணிநேர கால வேறுபாடு இரு நாடுகளுக்குமி டையே உண்டு. காலவேறுபாடு நினைப்பில்தான், காலையில் வாஷிங்டன் சென்று சேருவோம் என்பதால் பயணநேரத்தின் பெரும்பகுதி இரவு நேரமாகத்தான் இருக்கும் என நினைத்திருந்தோம். ஆனால் துபாயில் விமானம், ஏறிய சில மணிநேரங்களில் விடியத் தொடங்கி விட்டது.  அமெரிக்காவை நோக்கி விடியலை முன் நகர்த்தியபடி செல்வதைப் போலவே அமைந்தது எங்கள் பயணம்! செப்டம்பர் 20-ஆம் நாள் காலை சரியாக 8.40 மணிக்கு வாஷிங்டன் ஜே.எப். கென்னடி பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கினோம்.
சென்னையிலிருந்து இந்தியாவை விட்டுக் கிளம்பும் பொழுது கடவுச்சீட்டு  (Passport), விசா (Visa) பரிசோ தனை நடந்ததைப் போலவே, அமெரிக்க மண்ணில் நுழைந்திடும் பொழுதும் குடிவரவுச் சோதனையுடன் சில கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அமெரிக்காவிற்கு எதற்காக வந்திருக்கிறோம் எங்கு தங்கவிருக்கிறோம்? எவ்வளவு நாள் தங்கி இருப்போம்? எப்பொழுது திரும்பிச் செல்வோம்? என பல கேள்வி களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருந்தது.  வந்த நோக்கம் ஒன்றாக இருப்பதையும், ஒரே இடத்தில் தங்க விருப்பதையும் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்ததும், எங்கள் அனைவரையும் ஒன்றாக சேர்ந்து வர அறிவுறுத்தினார்கள். அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி வருவதற்காகக் காத்திருந்தோம். அப்போது விமான நிலையத்தின், ஒரு பகுதியில்  எங்களது தோற்றம், உடல் நிறம், உடை ஆகியவற்றைப் பார்த்து இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிந்து கொண்ட ஒரு பெண் பரிசோதனை அதிகாரி (அவரும் தோற்றத்தில் இந்திய வம்சாவளியினைச் சார்ந்தவர் போல இருந்தார்) எங்களருகில் வந்து இந்தியில் பேசி உதவி செய்வது போல சில விவரங்கள் கேட்டார். அதற்கு நான் எங்களுக்கு இந்தி தெரியாது. தமிழ் நாட்டிலிருந்து வந்துள்ளோம் என பதிலளித்தேன். ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்த அந்த அமெரிக்க - இந்திய வம்சாவளி பெண் அதிகாரி எந்த விளக்கமும் கேட்காமல் மெல்ல நகர்ந்து சென்று விட்டார். இந்தி யாவைச் சேர்ந்தவர்கள் என்றாலே இந்தி மொழி தெரியும் என்ற தவறான கருத்தினை வெளிநாடுகளில் பரப்பியதில் இந்தியாவை 72 ஆண்டுகளாக ஆண்டு வந்தவர்களுக்கும், வருபவர்களுக்கும் பெரும்பங்கு உள்ளது என்ற உண்மை அப்பட்டமாக விளங்கியது. பரிசோதனையினை அனைவரும் நல்ல படியாக முடித்துக் கொண்டு எங்களது பெட்டிகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்திற்கு வந்தோம். பெட்டிகளை வைத்து எடுத்துச் செல்லும் தள்ளுவண்டிக்கு 5 அமெரிக்க  டாலர் (இந்திய பண மதிப்பில் ரூபாய் 350) கட்டணம் செலுத்தித் தான் பயன்படுத்த முடிந்தது. (இந்தியாவில் விமான நிலையத்தில் பெட்டி எடுத்துச் செல்லும் வண்டிக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஒரு வேளை அரசு வசமுள்ள இந்திய விமான நிலையங்கள் தனியார்வசம் சென்றுவிட்டால் கட்டணம் செலுத்தி வண்டிகளைப் பயன்படுத்தும் நிலைமை உருவாகலாம்). விமான நிலைய வருகை முனையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் எங்களுடன் வந்த தமிழர் தலைவர் அவர் களையும், எங்களையும் மகிழ்ச்சியுடனும், எழுச்சியு டனும் வரவேற்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், மோகனா அம்மையாரும், வரவேற்க வந்தோருடன் உரையாடி விட்டு, ஒளிப்படம் எடுத்துக் கொண்ட பின்னர், உள்ளூர் (வாஷிங்டன் நகர்) சுற்றுலா செல்லவிருந்த எங்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினர். பாதுகாப்பாக விடுதிக்கு மாலையில் வந்து சேர்ந்து விடுங்கள் என தமிழர் தலைவர் எங்களிடம் கூறிவிட்டு, மேரிலாந்தில் உள்ள விடுதிக்கு முன்னரே கிளம்பிச் சென்றார். வாஷிங்டன் நகரைச் சுற்றிப் பார்க்க சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க- பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர். சோம. இளங்கோவன் அவர்களின் வாழ்விணையர் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்கள் எங்களுடன் வந்தார். சுற்றுலா இடங்களைப் பற்றிய விளக்கத்தை வழங்கிட ஓர் அமெரிக்கரும் (வழிகாட்டி) உடன் வந்தார். பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் எங்களுக்குச் சாப்பிட சில நொறுக்கு தீனிப் பொட்டலங்கள், குடிநீர் புட்டிகள் வழங்கப்பட்டன. கூடவே உதட்டுக்குச் சாயம் இடும் குப்பியைப் போல ஒன்றை ஒவ்வொருவருக்கும் வழங் கினார்கள். திறந்து பார்த்த பொழுது வெள்ளை நிறத்தில் வாசலின் போன்ற களிம்பு இருந்தது. எங்களது இரண்டு உதடுகளிலும் நன்றாகத் தடவிக் கொள்ளச் சொன் னார்கள். பனிப் பொழிவுக்கு முன்னர்  குளிர் போன்ற தட்ப வெப்ப நிலை இருந்தால், அந்த களிம்பைத் தடவ வில்லையென்றால் ஓரிருநாள்களில் உதடு வெடித்து புண்ணாகும் வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கை கலந்த உடல் நலக் குறிப்பும் வழங்கப்பட்டது. இவை அனைத் தையும் கேட்டுக் கொண்டே, அமெரிக்க நாட்டுச் சூழலையும், அந்நாட்டுக்கே உரிய உயர்ந்த கட்டட எழுச்சியினையும் பார்த்துக் கொண்டே சென்ற சற்று நேரத்தில் தாமஸ் ஜெபர்ஸன் நினைவகம் வந்து சேர்ந்தோம்.
தாமஸ் ஜெபர்சன் நினைவகம்
(Thomas Jefferson Memorial)
அமெரிக்க நாட்டின் விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றியவரும், அமெரிக்க நாட்டு விடுதலைப் பிரகடனத்தின்   (Declaration of Independence 1776)   பிதாமகனும், அமெரிக்க அய்க்கிய நாடுகளின் மூன்றாம் குடியரசுத் தலைவருமாகிய (1801-1809) தாமஸ் ஜெபர்சன் அவர்களின் நினைவுகளைப் போற்றுகின்ற வகையில்  வாஷிங்டனில் எழுப்பப்பட்ட நினைவகம் அது. 1939-43 ஆண்டுகளில் அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட நினைவகம். அமெரிக்க நாட்டு ஒவ்வொரு குடியரசுத் தலைவருக்கும் நினைவகம் ஒன்று அமெரிக்க அரசின் செலவில் உருவாக்கப்படும் வகையில் அங்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற பொழுது 13 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. மூன்றாவது குடியரசுத் தலைவரான தாமஸ் ஜெபர்சன் காலத்தில் அது 26 மாநிலங்களாக உருவெடுத்தது. அதனை நினைவுபடுத்தும் வகையில் நினைவகம் 26 தூண்களுடன் நிர்மாணிக்கப்பட்டு, அதற்குள் தாமஸ் ஜெபர்சனின் பெரிய உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. போட்டோமாக்   (Potomac River) கரையில் அமைந்துள்ள இந்த நினைவகத்தில் தாமஸ் ஜெபர்சனின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் விடுதலை வேட்கையின் எதிரொலியால் எழுந்த அவரது  முழக்கங்கள், வழிகாட்டு வாசகங்கள் என அவரைப் பற்றிய ஒரு முழுமையான வரலாற்று ஆவணப் பதிவாகவே இருக்கிறது. விடுதலை வேட்கையுடன், முறையாகக் கல்வி பயின்று சான்றோராக விளங்கிய தாமஸ் ஜெபர்சனின் நினைவகத்தினைப் பார்க்கும் பொழுது தொடக்கக் கல்வியைக் கூட முழுமையாக கற்று முடிக்காத சுய சிந்தனையாளர் தந்தை பெரியாரை நினைத்துப் பார்த்து ஒப்பிடத் தோன்றியது. தாமஸ் ஜெபர்சன் பகுத்தறிவைத் தேடி (In Pursuit of Reason)  எனும் நூலை எழுதியவர். அமெரிக்க நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பொழுது அதில் இடம் பெறுகின்ற வகையில் ‘All are created equal’ (அனைவரும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறோம்) என கடவுள் அனைவரையும் உருவாக்கியதாக தாமஸ் ஜெபர்சன் குறிப்பிட்டாராம். தாமஸ் ஜெபர்சன் பகுத்தறிவைத் தேடிய வேளையில், அனைவரையும் உருவாக்கியதாகக் கூறப்படும்  கடவுளை, 'கற்பிக்கப்பட்ட ஒன்று', என தந்தை பெரியார் கூறியதையும், அத்துடன்  'கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என துணிச்சலாக பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் கூறியிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால்   பகுத்தறிவின் சிகரம்  தந்தை பெரியார் என்று சொல்வதன் மாண்பு,  ஆழமான பொருள் மிக்கதாக விளங்கியது - பெருமை கொள்ளச் செய்தது. தாமஸ் ஜெபர்சன் நினைவகத்தின் உள்ளேயும், வெளியேயும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். நினைவக விற்பனை நிலையத்தில் புத்தகங்கள், நினை வுப் பொருட்களை (அமெரிக்க மண்ணில் இறங்கியதும்)  முதன் முதல் டாலர் கொடுத்து பெற்றுக் கொண்டு அடுத்த சுற்றுலா இடத்தினைப் பார்க்கக் கிளம்பினோம்.
ஆபிரகாம் லிங்கன் நினைவகம்
(Lincoln Memorial)
அமெரிக்க அய்க்கிய நாடுகளின் 16-ஆம் குடியரசுத் தலைவராக இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சிப் பிரகடனம் (Emancipation Proclamation) என்பதை
1863-ஆம் ஆண்டில் உருவாக்கி, நடைமுறைப்படுத்தி கருப்பின மக்களையும் அமெரிக்காவின் பூர்வ குடிமக்களையும் அடிமைகளாக நடத்தி வந்த வழக்கத்திற்கு (சட்ட பூர்வமான) முற்றுப்புள்ளி வைத்த மானுடப் பற்றாளர் ஆபிரகாம் லிங்கன் (1809-1865). செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து பெரும் இன்னலுக்கிடையில் படித்து வழக்குரைஞராகி, குடியரசுத் தலைவர் நிலைக்கு உயர்ந்து, மனிதநேயம் காத்ததற்காகவே கொடியவன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவாக எழுப்பப்பட்ட அந்த நினைவகத்தில் ஆபிரகாம் லிங்கன் அமர்ந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட மாபெரும் சிலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நினைவகத்தின் நுழைவு வாயிலில் நின்று பார்த்தால் எதிர்ப் பக்கம் தூரத்தில் அமெரிக்க விடுதலைப் போரில் மாண்ட மாவீரர்களின் பெருமையைப் போற்றும் வகையில் அவர்தம் நினைவாக பெரிய தூண் ஒன்று நிறுவப்பட்டி ருக்கிறது. மனித உரிமை வேண்டிப் போராட்டம் நடத்துவோர் கூடிக் கூட்டம் நடத்திட, போராட இந்த லிங்கன் நினைவகம் ஒரு புகலிடமாகவே இருந்து வருகிறது. கருப்பு மக்களின் உரிமைக்கு, அவர்களைப் பேதப்படுத்தி ஒதுக்கிடும் போக்கினைக் கண்டித்துப் போராடிய மார்டின் லூதர் கிங் ஜூனியர் 1963-ஆம் ஆண்டில் இதே லிங்கன் நினைவகத்தி லிருந்துதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க எனக்கு ஒரு கனவு உண்டு (I have a Dream)   எனும் எழுச்சி உரை ஆற்றி, கருப்பின மக்களின் பால் அமெரிக்கர்களை (வெள்ளையர்) மட்டுமின்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். புத்தகங்களில், படங்களில் பார்த்துத் தெரிந்து கொண்ட லிங்கன் நினைவகத்தை நேரில் பார்க்கையில் வியப் பாகவும், பெருமையாகவும் இருந்தது. சுற்றுலா சென்றி ருந்த அனைவரும், தனியாகவும், சேர்ந்தும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். நண்பகல் உணவுவேளை நெருங்கியதால் வாஷிங்டன் (D.C.)  யில் உள்ள ஓர் இந்திய உணவகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். உணவு அருந்திய பின்பு, இயல்பாக ஏற்படும் களைப் புடன், முழுமையான தூக்கம்   இல்லாமல் 16 மணிநேரம் பயணம் செய்ததால் சே(£)ர்ந்த களைப்பினையும் பொருட்படுத்தாது, அடுத்த இடத்தினை பார்க்கப் புறப்பட்டோம். பார்க்கப் பயணப்பட்ட இடம், உலக அரசியல் அரங்கில் முக்கியமாகப் பேசப்படும்-உலகப் பொருளாதாரத்தையே பாதிக்க வைக்கக்கூடிய முடிவு களை மேற்கொள்ளுமிடமான அமெரிக்க அய்க்கிய நாடுகளின் குடியரசுத் தலைவரது அலுவலகத் தலைமை யிடமும் - தங்குமிடமுமான வெள்ளை மாளிகை.
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 14.12.19 

செவ்வாய், 10 டிசம்பர், 2019

கடவுள் மறுப்பை முழங்கும் அரியானா இளைஞர்

அரியானாவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலான ஆவணம் பெற சட்டரீதியில் போராடி வருகிறார்

. ''நாத்திகர்'' என்று பொருள்படும் ''Atheist" கடவுள் மறுப்பை முழங்கும் அரியானா இளைஞர்" எனும் ஆங்கிலச் சொல்லை இரண்டு கைகளிலும் பெரிதாக பச்சை குத்தியுள்ள 33 வயதான ரவிக்குமார், கடவுள் இல்லை என்பதை தனது ஆறு அல்லது ஏழாவது வயதில் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.

''ஒவ்வோர் ஆண்டு தீபாவளியின் போதும் என் தந்தை லாட்டரி சீட்டு வாங்கி வந்து லட்சுமியிடம் வேண்டிக் கொள்வார். ஆனால் ஒருபோதும் பரிசு விழுந்தது கிடையாது. ஒரு நாள் நான்கு பையன்கள் என்னை அடித்தபோது, கடவுள் கிருஷ்ணரிடம் வேண்டிக் கொண்டேன். ஆனால் அவர் என்னைக் காப்பாற்றவில்லை,'' என்று அவர் கூறுகிறார்.

தலைநகர் டில்லியில் இருந்து 250 கிலோ மீட்டர் (155 மைல்கள்) தொலைவில் டோஹனா என்ற கிராமத்தில் இரண்டு அறைகள் கொண்ட தனது வீட்டில் அமர்ந்திருக்கும் அவர் ''உயர் மதிப்புமிக்க சொத்து'' என குறிப்பிடும் சான்றிதழ் ஒன்றை காட்டினார். ''எந்த ஜாதியும், எந்த மதமும் இல்லை, கடவுள் இல்லை,'' என்ற பிரிவைச் சார்ந்தவர் என அவருக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ் அது. அரியானா மாநில அரசால் ஏப்ரல் 29 ஆம் தேதி வழங்கப்பட்ட இந்தச் சான்றிதழில், உள்ளூர் அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால், ஒரு வாரம் கழித்து அதை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். ''தங்களது அதிகார வரம்பை மீறி'' சான்றிதழ் வழங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சான்றிதழைத் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

அதைத் திருப்பித் தர மறுத்துவிட்ட ரவிக்குமார், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ''தன்னை ஒரு நாத்திகர் என கூறிக் கொள்வதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது'' என்று அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு கூறுகிறது என்றும், அதற்கான சான்றிதழாக சட்டபூர்வ ஆவணம் எதுவும் தேவையில்லை,'' என்றும் நீதிபதி கூறினார்.

கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு, வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வரும் ரவிக்குமார், இந்த முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்று கூறுகிறார். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அவர் கூறுகிறார். இந்த விஷயத்தில் தமக்கு உதவுமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

''இதற்கு ஒரு சான்றிதழ் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், எனக்கு அதற்கான தேவை உள்ளது'' என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார். ''மக்களுக்கு அரசாங்கம் ஜாதி அல்லது மதச் சான்றிதழ் வழங்கும்போது, நான் நாத்திகர் என்று அடையாளம் காட்டும் சான்றிதழைப் பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. நானும் இந்த நாட்டின் குடிமகன்தான்'' என்கிறார் அவர்.

இந்தியாவில், மதம் மாறினால் மட்டுமே அவருக்கு மதச் சான்றிதழ் தேவைப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயப் பிரிவினராக இருந்து, அரசுப் பணிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற விரும்புவோருக்கு ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

ரவிக்குமாரின் குடும்பம் ஒடுக்கப்பட்ட பிரிவு சமூகத்தைச் சேர்ந்தது. ஆனால் அரசின் சலுகைகள் எதையும் கேட்பதில்லை என்று அவர் உறுதி எடுத்துக் கொண்டுள்ளார். தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்த சான்றிதழைக் கோருகிறார்.

தனது பெயரின் இறுதியில் நாத்திகர் என சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் 2017 செப்டம்பரில் அவர் சட்டபூர்வ நடவடிக்கையை ஆரம்பித்தார். மூன்று மாதங்கள் கழித்து, 2018 ஜனவரி 2ஆம் தேதி, அவருக்கு ஆதரவாக சிவில் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் ''ரவிக்குமார் நாத்திகர்'' என பதிவு செய்து கொள்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது என அவர் தீர்ப்பளித்தார்.

பள்ளிக்கூட விலகல் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி அட்டைகளில் பெயரை மாற்றிக் கொண்ட பிறகு, ''எந்தச் ஜாதியும் இல்லை, எந்த மதமும் இல்லை, கடவுள் இல்லை,'' என சான்றிதழ் கோரி உள்ளூர் அதிகாரிகளை அணுகினார். அதன்படி சான்றிதழும் பெற்றார்.

ஆனால், இதுபற்றிய செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான போது, ''தங்கள் அதிகார வரம்பை மீறி'' செயல்பட்டிருப்பதாக அதிகாரிகள் உணர்ந்தனர். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கூறுவது தங்களுடைய பணி அல்ல என்று அவர்கள் கூறினர். ஜாதி இல்லாத நாத்திகர் என்று வேறு சான்றிதழ் தருவதாக உத்தரவாதம் அளித்து, அந்த சான்றிதழை திருப்பித் தருமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவலின்படி, 33,000 இந்தியர்கள் தங்களை நாத்திகவாதிகள் என பதிவு செய்துள்ளனர். 130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இது மிகவும் குறைவான எண்ணிக்கைதான். இந்தியாவில் பெரும்பாலான விஷயங்களில் மதமும், மத அடையாளமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கடந்த நூற்றாண்டில் இந்து தேசியவாதம் அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலான நாத்திகர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை வெளிப்படுத்தாமல் அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு மாறாக ஏதும் பேசினால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம் - நண்பர்கள் மற்றும் உறவினர்களால் புறக்கணிக்கப்படலாம்.

கடவுள் இருப்பதை நிரூபிக்குமாறு அவர் வெளிப்படையாக சவால் விடுகிறார். மதத்தை விட்டு மக்கள் வெளியே வர வேண்டும் என்று, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் வேண்டுகோள் விடுக்கிறார். ''கடவுள் இருக்கிறார் என்பதை யாராலும் நிரூபிக்க முடியவில்லை,'' என்று அவர் கூறுகிறார். ''ஏனெனில் கடவுள் கிடையாது. கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய விஷயம். கடவுள் என்பது வெறும் வார்த்தைதான். அப்படி எதுவும் கிடையாது,'' என்றும் குறிப்பிடுகிறார் ரவிக்குமார்.

ஓரளவுக்கு மத நம்பிக்கை உள்ள குடும்பத்தில் ரவிக்குமார் வளர்ந்தார்: அவருடைய பெற்றோரும், தாத்தா பாட்டி குடும்பத்தினரும் இந்து மத நம்பிக்கை கொண்டவர்கள். மத விழாக்களின்போது கோவில் களுக்குச் சென்று, சடங்குகள் செய்யக் கூடியவர்களாக இருந்தனர். ''என் தந்தை என்னை கோவில்களுக்கு அழைத்துச் செல்வார். அங்கே என்ன இருக்கிறது என பார்க்கும் ஆர்வத்தில் அவருடன் நான் செல்வேன்,'' என்று ரவிக்குமார் தெரிவித்தார்.

தங்கள் கடவுள் லட்சுமியை தீபாவளி நாட்களில் வணங்குவதாகவும், அதனால் தங்களுக்கு வளம் கிடைக்கும் என்றும் அவருடைய தாயார் கூறியுள்ளார். பகவத் கீதை படிக்கும் அவருடைய தாத்தா, பிரச்சினைகளில் சிக்கும்போது நம்மைக் காப்பாற்ற இறைவன் கிருஷ்ணர் வருவார் என்று கூறியுள்ளார்.

''மதம் மற்றும் ஜாதி வேறுபாடுகள் என்பவை அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர் களால் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், மக்களின் பல வீனங்களைப் பயன்படுத்தி சுரண்டுவதற்குப் பயன்படுத் தும் வார்த்தைகள்,'' என வளரும்போது அறிந்து கொண்டதாக ரவிக்குமார் தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக எந்தக் கோவிலுக்கும் சென்றதில்லை என்று அவர் கூறினார். கோவில்கள், மசூதிகள் மற்றும் இதர மத வழிபாட்டுத் தலங்களுக்காக செலவிடும் தொகையை பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவ மனைகள் உருவாக்க செலவு செய்வது நல்லதாக இருக்கும் என்று அவர் வாதம் செய்தார்.

நாத்திக சிந்தனை உடையவராக இருந்ததால் பள்ளி, கல்லூரிக் காலங்களில் புறக்கணிக்கப் பட்டுள்ளார். அந்தக் காரணத்தாலேயே வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளார். பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருடைய தொடர்பை துண்டித்துக் கொண்டனர். அவர் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வதாக, அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.

கடவுள் மீது நம்பிக்கையில்லாத ஒருவருக்கு, மத வழக்கத்தின்படி அல்லாமல் திருமணம் செய்து கொள்ள விரும்பும் தனக்கு பெண் கொடுக்க எந்தக் குடும்பத்தினரும் முன்வராத காரணத்தால், இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

மகனின் நம்பிக்கையை அவருடைய பெற்றோரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தொழிற்சாலையில் தச்சு வேலை பார்க்கும் அவருடைய தந்தை இந்தர் லால், தனது மகனை மற்றவர்கள் நாத்திகர் என கூறுவதைக் கேட்டு வருந்தியிருக்கிறார். ''ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நான் வீட்டில் இருந்து வெளியேறினேன். ஆனால், பிறகு மனதை மாற்றிக் கொண்டு திரும்பி வந்துவிட்டேன்,'' என்று அவர் கூறினார். ஆனால் இப்போது அவரும் நாத்திகராக மாறிவிட்டார். ''அவன் சொல்வதில் அர்த்தம் இருப்பதாக நான் கருதுகிறேன். இப்போது வீட்டில் மத சம்பிரதாயங்கள் எதையும் நாங்கள் செய்வது இல்லை. கோவிலுக்குச் செல்வதையும் நாங்கள் நிறுத்திக் கொண்டோம்,'' என்று அவர் தெரிவித்தார். 'நாத்திகர்' என சட்டபூர்வ அங்கீகாரம் பெறுவதற்காக அவர் போராடி வருவது பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்திகள் வெளியாகி வருவதால், சிறிதளவு பிரபலமாகிவிட்டார்.

''தொலைதூரப் பகுதிகளில் இருந்து பலர் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். சிலர் நேரில் வந்து சந்திக் கிறார்கள் - தாங்களும் நாத்திகர்கள் என்று சொல் கிறார்கள். என்னைப் போல தாங்களும் பெயரின் பின்னால் நாத்திகர் என சேர்த்துக் கொள்ள விரும்பு வதாகக் கூறினர்,'' என்று ரவிக்குமார் குறிப்பிட்டார். உலகில் பிரச்சினைகளுக்கு வேராக மதம்தான் இருக்கிறது என்பதால், நாத்திகம் என்ற தனது கருத்து சரியானதாக அமைந்திருக்கிறது என்று அவர் கூறினார்.

''இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலுக்கு மதத்தை காரணமாகக் கூறுகின்றன. உலகம் மூன்றாவது உலகப் போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மதத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் 24 மணி நேரமும் கெட்டவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கொலை செய்யவும், ஊனப்படுத்தவும் கத்திகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்துகிறார்கள். உலகில் அவ்வளவு துயரங்கள் இருக்கின்றன. உலகைப் படைத்தது கடவுள் என்றால், இவ்வளவு கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை எதற்காக அவர் படைத்தார்,'' என்று ரவிக்குமார் கேள்வி எழுப்பு கிறார்.

- பிபிசி இணையம் (ஆங்கிலம்)

28.11.2019

- விடுதலை நாளேடு 4 12 19

திங்கள், 9 டிசம்பர், 2019

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

வடநாட்டுப் பணம் வருகிறது என்பதால் காவிகள் அத்துமீற வேண்டாம்!

சாலை விபத்துகளைவிட ஜனநாயக விபத்து ஆபத்தானது

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்


விருதுநகர்,டிச.1சாலைவிபத்துக்களைவிட ஜன நாயக  விபத்து ஆபத்தானது; வடநாட்டுப் பணம் வருகிறது என்பதால் காவிகள் அத்துமீற வேண்டாம் என்று திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நம்முடைய கழகத் துணைத் தலைவர் அவர்கள் உரையாற்றும்பொழுது ஒரு கருத்தை சொன்னார்கள். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு நீங்கள் வெள்ளமென திரண்டிருக்கிறீர்கள். காலையில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டில் அரங்கம் நிரம்பி வழியக்கூடிய அளவிற்கு திரண் டிருந்தீர்கள். அந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்து, பொதுக்கூட்ட நிகழ்ச்சியாக இங்கே கூடியிருக்கிறோம்.

நாட்டிலேயே திராவிடர் கழகம்தான்

முதல் இயக்கம்

இந்த நிகழ்ச்சி நடைபெறக்கூடிய அளவிற்கு, தொடங்கப்பட்ட காலத்திலிருந்து என்ன காரணத்தி னாலோ தெரியவில்லை; இந்த மண், நம்முடைய மண். கரிசல் மண் மட்டுமல்ல, காமராசருடைய பூமி. காமராசரைப் பார்த்து, பச்சைத் தமிழர் என்ற அளவில் வைத்து, சிறப்பாகத் தாங்கியவர் தந்தை பெரியார் அவர்கள். அதுமட்டுமல்ல, நீதிக்கட்சித் தலைவர்கள் எல்லாம் இங்கு வந்தவர்கள். இப்படிப்பட்ட வரலாறு உள்ள இந்த பூமியில், திராவிடர் கழகத்தின் சார்பில் கூட அல்ல, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், ஒரு அறிவார்ந்த, பதிவு செய்யப்பட்ட அமைப்பு. இன் னுங்கேட்டால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., நீதிபதிகள் எல்லாம் பங்கேற்ற அமைப்பு, உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பின் பொன்விழா மாநாட்டினை இங்கே நடத்துவதற்கு, இங்கே இருக்கின்ற யாரோ சில அனாமதேயங்கள் மொட்டைக் கடிதம் எழுதுவதோ அல்லது காவல்துறையினர் மிரட்டல் கடிதங்களை வைத்துக்கொண்டு, இங்கே கூட்டம் நடத்த அனுமதி யில்லை என்று சொல்வது. அதற்குப் பொருத்தமில்லாத அளவிற்கு அவர்களையே பார்த்து மற்றவர்கள் கேலி செய்து சிரிக்கக்கூடிய அளவிற்கு இருப்பது நியாயமா? காவல்துறையை மிகவும் மதிக்கக்கூடிய இயக்கம் இருக்கிறது என்றால், நாட்டிலேயே திராவிடர் கழகம் தான் முதல் இயக்கம். அதைத்தான் எங்களுடைய துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்கள்.

அனைவருக்கும் அனைத்தும்

கிட்டுவதுதான் சமூகநீதி

இந்த இயக்கம் அப்படிப்பட்ட ஒரு இயக்கம். சட்டம், ஒழுங்கு, அமைதி - இவை அத்தனையும் காப் பாற்றப்படவேண்டும். சமூக நல்லிணக்கம் நிறைந்து இருக்கவேண்டும். எந்த இடத்திலும் ஜாதிச் சண்டை களோ, மதச் சண்டைகளோ இருக்கக்கூடாது. மனித நேயம் மலரவேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிட்டுவதுதான் சமூகநீதி. சமத்துவம் என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரு இயக்கம் எங்கள் இயக்கம்.

நாங்கள் என்ன அரசியலுக்குப் போகக்கூடியவர் களா? குறைந்தபட்சம் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலுக் காவது எங்களுடைய தோழர்கள் போட்டியிடலாம் என்று சொல்லி, அதன் காரணமாக நாக்கிலே தேனைத் தடவி, எங்கள் பின்னாலே ஆட்களைக் கூட்டி வந்திருப்பவர்களா?

மக்களுக்காகப் பாடுபடுகிற ஒரு இயக்கம்.

இதோ வெள்ளம்போல இங்கே அமர்ந்திருக்கிறார் களே, இவர்கள் எல்லாம் பணம் கொடுத்து அழைத்து வந்தவர்களா? இதுவரையில் அப்படிப்பட்ட ஒரு நிலை இல்லாத ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இந்த இயக்கம் ஒப்பற்ற ஒரு இயக்கம். மக்கள் இயக்கம். மக்களுக்காகப் பாடுபடுகிற ஒரு இயக்கம். மக்களுக் காக எங்களை நாங்கள் தியாகம் செய்துகொள்வோமே தவிர, மக்களுக்கு ஒரு சிறு தொல்லைகூட கொடுக்காத அளவிற்கு,

பொதுச் சொத்துக்கு நாசமின்றி,

பொது அமைதிக்குப் பங்கமின்றி

பொது ஒழுக்கத்திற்குக் கேடின்றி

நடத்தவேண்டும் என்ற அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த பாதையில், அவர்கள் உருவத்தால் மறைந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் நெருங்குகிற இந்தக் காலகட்டத்தில்கூட, அவ்வளவு கட்டுப்பாடாக இருக்கின்ற இயக்கம் இந்தக் கருஞ்சட்டை இயக்கம் - இந்தப் பகுத்தறிவாளர் கழக இயக்கம்.

எங்களுடைய மாநாடு நடைபெற்றதே, யாருக் காவது இடையூறு உண்டா?

ஊர்வலம் நடத்தக்கூடாது;

கூட்டம் போடக்கூடாது - ஏன்?

இது என்ன நியதி?

அரசமைப்பு சட்டத்தில் இருக்கிற உரிமை என்ன?

மீண்டும் காற்று அடிக்கும்

எச்சிலிலை கீழே வரும்

நாங்கள் எல்லாம் சட்டம் படித்தவர்கள் என்பது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்; நியாயம் தெரிந்தவர்களைப் பார்த்துக் கேட்கிறோம். இந்த நாட்டில் காலூன்ற முடியாதவர்கள் எல்லாம், யாரோ சில பேர் இன்றைக்கு அடித்த காற்றில் மேலே போகின்ற சில எச்சில் இலைகள், மேலே வந்துவிட்டது என்கிற காரணத்திற்காக இந்த எச்சில் இலைகளுக்கு நீங்கள் சல்யூட் அடிக்க லமா? மீண்டும் காற்று அடிக்கும் எச்சிலிலை கீழே வரும்.

நாங்கள் எப்பொழுதும் மேலேயும் போக மாட்டோம்; கீழேயும் போகமாட்டோம்; ஒரே இடம்  நாங்கள் போகக்கூடியது சிறைச்சாலையைத் தவிர வேறு கிடையாது.

லஞ்சம் வாங்கிவிட்டு சிறைச்சாலைக்குப் போகக்கூடியவர்கள் அல்ல; ஊழல் செய்துவிட்டு சிறைச்சாலைக்குப் போகக்கூடியவர்கள் அல்ல. உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற் காக நாங்கள் சிறைச்சாலைக்குப் போகக்கூடிய வர்கள்.

நாங்கள் சர்வபரிதியாகம்

செய்துகொள்ளக் கூடியவர்கள்

உங்கள் பிள்ளைகள் டாக்டர்களாக வேண்டும் என்பதற்காக, எங்களை நாங்கள் ‘‘சர்வபரிதியாகம்'' செய்துகொள்ளக் கூடியவர்கள்.

உங்கள் பிள்ளைகள் உத்தியோகம் பெறவேண்டும் என்பதற்காக சிறைச்சாலைகளுக்குச் செல்பவர்கள் நாங்கள்.

இப்படிப்பட்ட எங்களுடைய தொண்டர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள் என்று மார்தட்டி னாரே தந்தை பெரியார் - அப்படிப்பட்ட ஒரு அற்புத மான இயக்கம் இது.

இது ஏதோ ஒரு சமூக விரோத இயக்கத்தைப் போல-

இது ஏதோ ஒரு தீவிரவாத இயக்கத்தைப் போல-

இது ஏதோ பெரிய பயங்கரவாத இயக்கத்தைப் போல - தவறாக நீங்கள் நினைத்துக் கொண்டு, அனுமதி மறுக்கிறீர்கள்.

மேலதிகாரிகள் சரியாக இருக்கிறார்கள்; புதிதாக வந்த அதிகாரிகள் சரியாக இருக்கிறார்கள். இதற்கு மேல் நான் இந்த சொல்லை சொல்வதற்கு என்னுடைய தகுதிக்குக் குறைவு என்று நினைக்கின்றேன். ஏனென் றால், யாரும் காவல்துறையினரின் மதிப்பைக் குறைக் கக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும், காவல்துறையை நம்பித்தான் இருக்கவேண்டும்.

கருஞ்சட்டைப் படை என்கிற காவல்துறை

நமக்குப் பிடிக்காத நிலை என்று கருதியவுடன், காவல்துறையை நாம் கொச்சைப்படுத்திவிட்டு, அத னுடைய மரியாதையை நாம் குறைத்துவிட்டோமே யானால், மீண்டும் நாட்டிற்குப் பாதுகாப்பு இருக்காது.  இராணுவம் எப்படி நாட்டிற்கு மிக முக்கியமோ, அதுபோலத்தான் காவல்துறை. ஆனால், அந்தக் காவல்துறையின் கட்டுப்பாட்டையும் தாண்டி இருக்கிற தனி ஒரு காவல்துறை உண்டு - அதுதான் கருஞ்சட்டைப் படை என்கிற காவல்துறை.

தமிழகத்தில் மட்டுமல்ல, சமுதாய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இங்கே உரையாற்றிய டாக்டர் அம்மையார் சொன்னாரே, அவர் என்ன திராவிடர் கழகத்துக் காரரா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்தவரா? ஒரு பிரபலமான டாக்டர். அறிவுபூர்வமான சிந் திக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான பெண்மணி. அவர் மிகவும் எளிமையாக சொன்னார்.

திராவிடர் கழகத்தினரின் பணியை யாராவது, இந்திய நாட்டில் செய்கிறார்கள் என்று காவல் துறையோ அல்லது வேறு ஏவல் துறையோ சொல் லட்டும்.

இது இந்திய அரசமைப்புச் சட்டம். இதன்மீதுதான் பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்.

அதிலே அடிப்படை உரிமை என்பது முன் பகுதி.

அதற்கடுத்து இருக்கக்கூடிய பகுதி, புதிதாக இணைக்கப்பட்ட பகுதி - அதுவும் நெருக்கடி நிலை  காலகட்டத்தில்.

Fundamental duties
51-A, I it shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and Reform.

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக் கின்ற அடிப்படைக் கடமைகள்.

நழுவக்கூடாதது, தவறக்கூடாத ஒரு கடமை என்னவென்றால், பல கடமைகள் இருக்கின்றன.

ஆதாரமில்லாமல் பேசிப் பழக்கப்பட்டவர்கள் அல்ல பெரியார் தொண்டர்கள்

51-ஏ,  யார் வேண்டுமானாலும் அதனைப் படித்துப் பார்க்கலாம். ஆதாரமில்லாமல் பேசிப் பழக்கப்பட்ட வர்கள் அல்ல பெரியார் தொண்டர்கள். எனவே, ஆதாரத்தோடுதான் நாங்கள் சொல்லுகிறோம்.

அதில் ஒரு பகுதி,

ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப் பான்மையை வளர்க்கவேண்டும்.

மனிதநேயம்,  ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கக்கூடிய உணர்வு வரவேண்டும்.

அதற்குமேலே சீர்திருத்தம்.

இந்த அடிப்படைக் கடமையை நிறைவேற்றக் கூடிய இயக்கம் நாட்டில், இந்தியாவில், உலகத்தில் பெரியார் இயக்கமான திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகத்தைத் தவிர, இதனை முழு வேலையாக செய்துகொண்டிருக்கிற ஒரே இயக்கம் இந்த இயக் கத்தைத் தவிர வேறு எந்த இயக்கம்?

இந்த இயக்கத்தின் பிரச்சாரம் பரவினால், உங்கள் வேலை சுமை குறையும்.

பெரியார், யாருக்காகப்  பிரச்சாரம் செய்தார்?

இந்த இயக்கத்தினுடைய பிரச்சாரம் பரவினால், கலவரங்கள் இருக்காது; காலிப்பயல்களுக்கு நாட்டில் இடம் இருக்காது.

வாலாட்டலாம் என்று நினைக்கக்கூடாது. மக்கள் தானே திருந்தக் கூடிய நிலையில் இருப்பார்கள்.

நாங்கள் கேட்பது என்ன?

95 வயது வரையில் வாழ்ந்தாரே பெரியார், யாருக்காகப்  பிரச்சாரம் செய்தார்?

பகுத்தறிவு குடும்பத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார், ‘‘தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவருடைய வகுப்பு மாலை நேரத்தில் தொடங்கும். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அறிவுறுத்துவார். மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் பேசினார்'' என்றார்.

சாலையோர விபத்துகளைவிட ஜனநாயக விபத்துகள் ஆபத்தானவை

எண்ணிப் பாருங்கள் தோழர்களே, யாரோ சிலர் பேசுகிறார்கள்; கூலிகள், வடநாட்டுக்காரன் பணம் கொடுக்கிறான் என்பதற்காக, வடநாட்டுக் காவிகளின் பணம் வருகிறது என்பதற்காக, இங்கே திடீரென்று பல நேரங்களில் ஜனநாயகத்தில்  விபத்துகள் ஏற்படு வது உண்டு. சாலையோர விபத்துகளைவிட ஜன நாயக  விபத்துகள் ஆபத்தானவை. அப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு வந்துவிட்டார்கள் என்பதற்காக, ஏதோ அதுதான் நிரந்தரம் என்பது போல,

எங்கள்மீது ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

காலங்காலமாக, 50 ஆண்டுகாலமாக நாங்கள் இந்தப் பணியை செய்துவருகிறோம். ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

திராவிடர் கழகம் தன்னுடைய பணியை செய்து கொண்டு வருகிறது 75 ஆண்டுகாலமாக - அதனுடைய பவளவிழாவை கொண்டாடுகிறது. யாராவது விரலை நீட்ட முடியுமா? இன்ன குற்றம் என்று சொல்ல முடியுமா? தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும்.

யாருக்காக நாங்கள் பாடுபடுகிறோம்?

இந்த இயக்கத்தின் கொள்கை என்ன?

இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றவரை கவிழ்த்துவிட்டு, அந்த நாற்காலியை நாங்கள் பிடிக்கவேண்டும் என்பதற்காகவா?

எங்களைப் பொறுத்தவரையில், ‘‘துறவிக்கு வேந்தன் துரும்பு''

இதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எங்களுக்கு எந்த நாற்காலியைப்பற்றியும் கவலை யில்லை. காரணம் என்ன?

எங்களுடைய கொள்கை - சமத்துவம். அதுகூட புரியாத சிலர் சொல்வார்கள். இங்கே நண்பர்கள் விளக்கினார்கள்; தோழர் இராசா அவர்களும் விளக் கினார்கள்; நம்முடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன் அவர்களும் சொன்னார்கள்.

கடவுள் மறுப்போ, பார்ப்பன எதிர்ப்போ எங்களு டைய கொள்கையல்ல. அது ஒரு திட்டம்.

ஏன்?

ஜாதி ஒழியவேண்டும் என்பதற்கு குறுக்கே எவை இருந்தாலும் எதிர்ப்போம்.

சமத்துவம் நிலைக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, நடத்துவது மனுதர்ம ஆட்சியா?

யாரையும் புண்படுத்துவது எங்கள் வேலையல்ல!

இன்றைக்கு அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அம்பேத்கர் போன்றவர்களால்  உரு வாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு, அந்த இடத்தில் நடைபெறுவது என்ன? மனுதர்மம்.

இதனைத் தட்டிக் கேட்பதற்கு எங்களைவிட்டால், நாதியுண்டா தோழர்களே, உங்களுக்கு. இந்த மக்களுக்கு நாதி உண்டா?

யாரையும் ‘புண்படுத்துவது' எங்கள் வேலையல்ல-

யாரிடத்திலும் வீண் வம்புக்குப் போவது எங்கள் வேலையல்ல -

இது புரட்சிகரமான இயக்கம். இதற்கு ஒப்பான ஒரு புரட்சி இயக்கத்தை  நீங்கள் உலக வரலாற்றில் பார்க்க முடியாது.

எங்கள் புரட்சி வெறும் ரத்தம் சிந்துகின்ற புரட்சியல்ல - அறிவுப் புரட்சி - அமைதிப் புரட்சி - மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய புரட்சி.

மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால்,

சமத்துவத்திற்கு எதிரி யார்?

பகுத்தறிவினுடைய உணர்வு என்னவென்று அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டால், அதற்குப் பிறகு, தானே எல்லாம் சரியாகும்.

சமத்துவத்திற்கு எதிரி யார்?

என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டாமா?

சொன்னார்களே,

முகத்திலிருந்து பிறக்க முடியுமா?

தோளிலிருந்து பிறக்க முடியுமா?

தொடையிலிருந்து பிறக்க முடியுமா?

காலிலிருந்து பிறக்க முடியுமா?

அறிவியல் பூர்வமாக வந்த அரசமைப்புச் சட் டத்தை எடுத்துவிட்டு, எப்பொழுதோ உளறி வைத் தார்கள், எழுதி வைத்திருக்கும் மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறது?

எங்களுக்கு யாரையும் புண்படுத்துவதோ அல்லது யாரையோ கொச்சைப்படுத்துவதோ, தனி மனித விரோதமோ எங்களுக்கு முக்கியம். கிடையாது. தயவு செய்து நடுநிலையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு''

இளைஞர்களே,

மானம் பெரிது.

தந்தை பெரியார் சொன்னார், உலக மக்களுக்காக சொன்னார்; ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொல்லவில்லை.

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு''

மனிதர் என்று எவன் இருக்கின்றானோ அவனுக் குப் பகுத்தறிவு. அறிவு, அறிந்து கொள்வது. பகுத்தறிவு, ஆராய்ந்து, எது நல்லது? எது கெட்டது? எது தேவை? என்று அறிந்து கொள்வது.

‘‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்'' என் பதுதானே முக்கியம். இதுதானே பண்பாடு.

ஆனால், மனுதர்மத்தில் என்ன எழுதி வைத்திருக் கிறார்கள்; அதைத்தானே இப்பொழுது தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்; அதைத்தானே கல்விக் கொள்கையாகக் கொண்டு வருகிறார்கள்.

இந்த அமைப்பு இல்லை என்றால், அதனை எடுத்துச் சொல்லக்கூடிய நாதி இல்லையே!

என்னுடைய கையில் இருக்கின்ற புத்தகம் அசல் மனுதர்மம். நாங்கள் போட்டதல்ல. பார்ப்பனர்கள் அச்சிட்டது.

ஒரு வரிகூட மாற்றம் இல்லாமல், 1919 - நீங்களோ, நாங்களோ பிறக்காத காலம். நூறு ஆண்டுகளுக்கு முன் -

திருவந்திபுரம் இளையவல்லி கோமாண்டூர்  இராமானுஜ ஆச்சாரியார்

அவர் எழுதிய புத்தகம். அச்சு போடுகிறவர் யார்?

நம்மாள்.

அவர்கள் கெட்டிக்காரர்கள்; அவர்களுடைய செலவில் செய்யமாட்டார்கள்.

வெந்தக் காய்கறிக்குத்தான் தீட்டு; வேகாத காய்கறிக்குத் தீட்டு கிடையாது

ஏனென்றால், அவாளுக்கு வெந்தக் காய்கறிக்குத் தான் தீட்டு; வேகாத காய்கறிக்குத் தீட்டு கிடையாது.

இலவசமாகக் கிடைக்கும் தண்ணீருக்குத் தீட்டு உண்டு-

ஆனால், பாலுக்குத் தீட்டு கிடையாது

நெய்க்குத் தீட்டு கிடையாது.

ஏனென்றால், மாட்டிடம் உதையை வாங்கிக் கொண்டு பாலைக் கறக்கிறான் பாருங்கள், அவன் கீழ்ஜாதி.

அதேபோன்று, பணத்திற்குத் 'தீட்டு' கிடையாது-

பச்சரிசிக்குத் தீட்டு கிடையாது.

ஆனால், சமைத்துக் கொடுத்தால் மட்டும் ‘தீட்டு'; சாப்பிட மாட்டேன் என்பார்கள்.

இப்படி சொல்லி சொல்லி, காலம் காலமாக ஏமாற் றிய உன்னை, பகுத்தறிவோடு சிந்தித்துப் பார் என்று சொன்ன ஒரு மாபெரும் இயக்கம்தான் பகுத்தறிவாளர் இயக்கம் - அதை சொன்ன தலைவர்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

இப்பொழுதுதான் மும்பையில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது

மனுதர்மத்தைக் கொண்டு வந்து அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்கிறார்கள்.  இந்த இயக்கம் இல்லை என்றால், அதைத் தட்டிக் கேட்கவில்லை என்றால், எதிர்க்கவில்லை என்றால் - தமிழ்நாடுதான் இன்றைக்குக் கலங்கரை விளக்கம். மற்ற இடங்களில் எல்லாம் கப்பல்கள் முட்டிக் கொள்கின்றன - அங்கே இருட்டு.

இப்பொழுதுதான் வடமாநிலங்களில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இப்பொழுதுதான் பல இடங்களுக்குப் பரவுகிறது. பரவும், பரவாமல் இருக் காது. ஏனென்றால், இது ஏவுகணை - பெரியாருடைய சிந்தனை இருக்கிறதே, அது ஏவுகணை போன்றது.

இலக்கு நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்.

அசல் மனுதர்மம்

முதல் அத்தியாயம், சுலோகம் 87

‘‘அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறு மைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியே பகுத்தார்.''

இது மனுதர்ம வாசகம்.

உடனே நம்மாள் சொல்வார்கள், வீரமணி வந்தான், திராவிடர் கழகத்துக்காரன் வந்தான்; இந்து மதத்தை மட்டும்தான் பேசினான். வேற மதத்தைப்பற்றி பேசவில்லை.

மதம் பிடித்த மனிதனுக்குப் போடுகிற

ஊசிதான் பகுத்தறிவு ஊசி

மனிதர்களுக்கே மதம் பிடிக்கக்கூடாது; யானைக்கு மதம் பிடித்த படுகிற பாட்டை பார்க்கிறோம். மதம் பிடித்து யானையை ஊசிப் போட்டு அடக்குகிறார்கள். அதுபோன்று, மதம் பிடித்த மனிதனுக்குப் போடுகிற ஊசிதான் பகுத்தறிவு ஊசி. அதுதான் பெரியாருடைய ஊசி.

இதை நாங்கள் சொல்லவில்லை.

எந்த மதம் எங்களை ‘‘சூத்திரனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘பறையனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘சக்கிலியனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘கேவலமாக்குகிறது?''

எந்த மதம் என்னுடைய தாயை ‘‘தேவடியாள்'' ஆக்குகிறது?

அந்த மதம் எனக்குத் தேவையா? தூக்கி வங்காள விரிகுடாவிற்கு அப்பால் போடவேண்டாமா?

சொல்லுங்கள்!

‘‘இந்து மதம் எங்கே போகிறது?''

நான் சொல்லவில்லை. இதோ அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்து மதம் என்ற பெயரே வெள்ளைக்காரன் கொடுத்தது, வெளிநாட்டுக்காரன் கொடுத்தது.

சொன்னது பெரியாரல்ல - சங்கராச்சாரியார்.

எங்களுக்கு மதம் பிடிக்காது. அருமையாக புரட்சிக்கவிஞர் சொன்னார்:

இந்த மண்ணில்

எண்ணிலா மதங்கள்

கந்தகக் கிடங்கில்

கனலின் கொள்ளிகள்

என்றார்.

நூறு வயது வரையில் வாழ்ந்த அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார், கடைசியில் உண்மை யைச் சொல்லிவிட்டுப் போனார்.

காஞ்சி சங்கராச்சாரியார், சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனாரே அந்த சங்கராச்சாரியாருக்கு குருநாதர். இப்பொழுது இறந்துபோனவர், ஜெயிலுக் கும், பெயிலுக்கும் அலைந்தவர். அவருக்கு முன்பு இருந்தவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

அவருடைய நண்பர்தான் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார். அவர் எழுதியுள்ள ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்தகத்தின் 19 ஆம் பக்கத்தில்,

ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட் டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கை யோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட் டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர் கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

சொல்லுவது யார்?

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்.

வழக்குப் போடுங்கள்!

ஆகா, இப்படியெல்லாம் நீங்கள் பேசினால், வழக்குப் போடுவோம் என்று யாராவது சொன்னால், வழக்குகளைக் கண்டு சளைப்பவர்களா? நாங்கள். மற்றவர்களுக்காவது வழக்குரைஞர் தேவை. எனக்கு அதுவும் தேவையில்லை. அதற்காகத்தானே படித்திருக்கி றோம்.  வழக்குப் போடுங்கள். இங்கே சொல்லுவதை விட, நீதிமன்றத்தில் சொன்னால், நன்றாகப் பதிவாகும்.

கடவுள் மறுப்புக்கு ஒருவர் வழக்குப் போட்டு, இப்பொழுது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

பெரியார் எப்பொழுதெல்லாம் கடவுள் மறுப்பு சொன்னார் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் (ஒரு பார்ப்பனர் நீதிபதி உள்பட) ஆதாரத்தோடு எழுதினார்கள்.

ஆகவே, வழக்கு போடட்டும். அதைப்பற்றி கவலையில்லை.

மேலும்  அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? நூலில்,

மனு?  வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனை வருக்கும் அறிவு குறைவு.

அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கி றோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.

நாங்கள் ஏன் மனுதர்மத்தை எதிர்க்கிறோம்?

நாங்கள் ஏன் ஜாதி தர்மத்தை எதிர்க்கிறோம்?

நாங்கள் ஏன் வருணாசிரம தர்மம் ஒழியவேண்டும் என்கிறோம்?

அந்த வருண தர்மத்தை நானே உருவாக்கினேன்; நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று பகவான் கண்ணன் கீதையில் சொன்னான் என்றால், கீதையும் எங்களுக்கு விரோதிதானே!

தனிப்பட்ட முறையில் கீதை மீது எங்களுக்கு என்ன கோபம்?  கிருஷ்ணன்மேல் என்ன கோபம்?

நான்கு வருணத்தை நானே உண்டாக்கினேன்; நானே நினைத்தாலும் அதனை மாற்ற முடியாது'' என் கிறான், கிருஷ்ணன் கீதையில். அரசமைப்புச் சட்டத் தையே நூறு முறை திருத்தலாம்; ஆனால், அவர் சொன்ன தர்மத்தை, அவராலேயே மாற்ற முடியாதாம்.

மேலும்  அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? நூலில்,

பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு -

சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.

“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் போகிறது மனு.

இந்த இயக்கம் ஏன் தேவை? இன்னும் நூறாண்டுக்கு அல்ல; இன்னும்பல ஆண்டுகளுக்கு.

கடைசி முட்டாள் இருக்கின்ற வரையில்,

கடைசி தற்குறி இருக்கின்ற வரையில்,

கடைசி அறியாமையில் உழலக் கூடியவன் இருக்கின்ற வரையில்,

கடைசி நிர்மூடன் இருக்கின்ற வரையில்,

இந்த இயக்கம்  தேவைப்படும்.

அறிவியல் தேவைப்படுவதைப்போல,

இருட்டை நீக்க வெளிச்சம் தேவைப்படுவதுபோல,

இதனுடைய விளைவு என்ன நண்பர்களே!

நாம் படிக்காத மக்களானோம்; ஏன் மூட்டைத் தூக்கினோம். நீதிக்கட்சி வருவதற்கு முன் எத்தனை பேர் நம்முடைய நாட்டில் படித்தோம்.

(தொடரும்)

விடுதலை நாளேடு 1 12 19

எந்த மதம் எங்களை சூத்திரனாக, பஞ்சமனாக ஆக்குகிறதோ அதை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய வேண்டாமா?

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முரசம்

விருதுநகர், டிச.2  எந்த மதம் எங்களை சூத்திரனாக, பஞ்சமனாக ஆக்குகிறதோ அதை வங்காள விரி குடாவில் தூக்கி எறியவேண்டாமா? என்று முரசு கொட்டினார் திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘தமிழன் அடிமையானது எவ்வாறு?''

இன்னொரு ஆதாரத்தைச் சொல்லுகிறேன்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தில் துணை வேந்தராக இருந்த மிகப்பெரிய தமிழ றிஞர் - நம்முடைய அருமை நண்பர் டாக்டர் அற வாணன் அவர்கள்.

அவர் எழுதிய ‘‘தமிழன் அடிமையானது எவ்வாறு?'' என்ற நூலில் சொல்கிறார்,

‘‘காலந்தோறும் தமிழருடைய கல்வி அறிவு போதுமானதாக இல்லை; சுத்தமாக இல்லை. 1901 இல் ஆங்கிலேயரால் எடுக்கப்பெற்ற  முதல் மக்கள் தொகை அறிவிப்பின்படி தமி ழருள் படித்தோர் தொகை ஒரு விழுக்காட் டிற்கும் குறைவுதான்; 99% பேர் படிக்காமல் இருந்தனர்.  அக்காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லச் செல்லத் தமிழர் கல்வி கற்றதற்கான தடயங்கள் மிகமிகக் குறைவாக உள்ளன. அல்லது இல்லாமலே உள்ளன. நாயக்கர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், பிற்காலச் சோழர் காலம், பல்லவர் காலம், களப்பிரர் காலம், சங்ககாலம் எனப் பின்னோக்கிப் பார்க் கும்பொழுது கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, சீனம், யூத நாடுகளைப் போல மக்கள் நிறுவன வழி கல்வி கற்றதற்கான அல்லது கல்வி கற் பித்ததற்கான தடயங்களே இல்லை. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளில் அரசர்கள், பிராமணர்கள் நான்கு வேதங்களையும் கற்க மானியங்கள் வழங்கிய செய்திகள், அரசர் ஆட்சிதோறும் காணப்படுகின்றன. எந்தச் செலவுமில்லாமல் இலவசமாகப் பிராமணர் களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு அரசே  மானியங்கள் வழங் கிற்று என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன'' என்று பேராசிரியர் க.ப.அறவாணன் குறிப்பிடுகின்றார்.

எனவே, நம்மாள் படிக்கவில்லை. படிக்கச் சொல்லி முதல் முயற்சியை செய்த இயக்கம் திராவிடர் இயக்கம் - நீதிக்கட்சி.

நீதிக்கட்சி 1920 இல் பிறக்கவில்லை என்றால், நமக்கு யாருக்கும் படிப்பறிவு வந்திருக்காது. ஏழு சதவிகிதம்கூட இல்லையே! நாம் எல்லாம் இன் றைக்குப் பெருமைப்படுகின்றோமே, அய்.ஜி.யாக, டி.அய்.ஜி.,யாக நம்மாட்கள் வந்திருக்கிறார்கள்; எங் களுக்குப் பெருமை. அதிகாரிகளாக காவல்துறையில் வந்திருக்கிறார்கள்; எங்களுக்குப் பெருமைதான்.

அவர்கள் எங்களுடைய கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கட்டும்; ஆனால், காக்கிச் சட்டைக்குள் வெறும் பூணூல் இருந்ததற்குப் பதில், இன்றைக்கு நம்மாள்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றோம் பாருங்கள்.

இது எப்படி நடந்தது?

முப்பத்து முக்கோடி தேவர்கள் வரம் கொடுத்ததால் நடந்ததா?

நாற்பத்தைந்தாயிரம் ரிஷிகளால் வந்ததா இது?

பெரியார் என்ற மாமனிதருடைய உழைப்பினால் வந்த பலன் அல்லவா!

நீதிக்கட்சியினுடைய பலன் அல்லவா!

கல்வி வள்ளல் காமராசர் கேட்டாரே, ‘‘எவன்டா உன் தலையில் எழுதினவன்? அவன் தலையைக் கொண்டு வா - அதனை மாற்றி எழுதுவதற்காகத்தான் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன்'' என்று சொன்னவர் காமராசர்.

இராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டம் - குலக்கல்வித் திட்டம். அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்பது.

அந்தக் குலக் கல்வித் திட்டம் மறுபடியும் இப் பொழுது வரப் போகிறது.

அதனுடைய முன்னோட்டம்தான் நீட் தேர்வு -

அதனுடைய முன்னோட்டம்தான் புதிய கல்விக் கொள்கை.

இந்தப்  பீடிகையை ஏன் நான் போட்டேன் என்று சொன்னால்,  நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எந்தக் கட்சிக்காரராக வேண்டுமானாலும் நீங்கள் இருங்கள்; தேர்தல் நேரத்தில் யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டுப் போடுங்கள்; ஏலம் போட்டு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள்.

இப்பொழுது ஏலம்தானே நடக்கிறது, மிக முக்கியமாக.

ஏலம் என்ற கோலம் - தேர்தல் காலம்.

அது எங்களுக்கு முக்கியமல்ல.

மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு

அருமை நண்பர்களே, உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டாமா?

உங்கள் பாட்டன் படிக்கவில்லை,

உங்கள் பாட்டி படிக்கவில்லை.

உங்கள் அப்பன் படிக்கவில்லை

என் அப்பன் படிக்கவில்லை

நான் படித்தேன், என் மகன் படித்தான்

என் பேரன் இனிமேல் படிக்க முடியாது. காரணம், மீண்டும் குலக்கல்வி கதவைத் தட்டிக் கொண்டு வருகிறது. அதுதான் காவிக் கொள்கை - அதுதான் மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு.

இதனை சொல்வதற்கு இந்தக் கூட்டத்தைத் தவிர, வேறு எந்தக் கூட்டமும் வாய் திறக்காது. திராவிட இயக்கம்தான் அதனை செய்யும்.

இன்றைய டாக்டர்களுக்குத் தெரியுமா?

எத்தனைப் பேர்களுக்குத் தெரியும் - இன்றைய டாக்டர்களுக்குத் தெரியுமா? இந்த இயக்கம் என்ன செய்தது என்பதுபற்றி.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன் நண்பர் களே, காதைத் தீட்டிக்கொண்டு காவல்துறையும், அரசாங்கத் துறையும் பதிவு செய்யட்டும்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்,  மருத்துவப் படிப்பிற்கு மனு போடவேண்டுமானால், சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் மனு போட முடியும்.

அதனை நீக்கிய பெருமை நீதிக்கட்சியைச் சார்ந் தது; திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தது. அதனால்தான், நம்மாள்கள் எல்லாம் படித்தார்கள்.

இன்றைக்குத் திரும்பிய பக்கமெல்லாம், இளஞ்செழியன் எம்.பி.பி.எஸ்., நெடுஞ்செழியன் எம்.பி. பி.எஸ்., அன்பழகன் எம்.பி.பி.எஸ்.

ஆக, இவையெல்லாம் வந்ததற்குக் காரணம்,

இந்த இயக்கம். சரசுவதி  பூஜையை நீங்கள் தொடர்ந்து கொண்டாடிய காரணத்தினால் அல்ல. அல்லவே அல்ல.

சரசுவதி என்று பெயர் கொண்ட பாட்டிக்கே கையெழுத்துப் போடத் தெரியாது. பேத்தி சரசுவதி பொறியாளர் சரசுவதி, மருத்துவர் சரசுவதி, நீதிபதி சரசுவதி என்றால், அது இந்த இயக்கத்தினுடைய சாதனையாகும்.

இந்த இயக்கம் இல்லாவிட்டால்,

இந்தக் கொள்கைப் பரவாவிட்டால் என்னவாகி யிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் தோழர்களே!

இப்பொழுது வேகமாக வருகிறார்கள்,

புதிய கல்விக் கொள்கை,

சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிறார்கள்.

வெறும் 25 ஆயிரம் பேர் பேசும் மொழியான சமஸ்கிருத மொழியை...

130 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில், வெறும் 25 ஆயிரம் பேர் பேசும் மொழியான சமஸ்கிருத மொழியை - அனைத்து மக்களும் படிக்கவேண்டும் என்றால், என்ன நியாயம்?

செம்மொழி தமிழ் என்று கலைஞர் பாடுபட்டு உருவாக்கினாரே, அந்த செம்மொழி நிறுவனம் இன்றைக்குத் தினக்கூலி நிறுவனமாக ஆக்கப்பட்டு விட்டதே!

இதிலே நடுவிலே நடுவிலே வித்தைகள். நம்மு டைய பிரதமர் மிக அழகாக வித்தை காட்டுவார்; வித்தையிலேயே மிகச்சிறந்த வித்தை மோடி வித்தை தான். மோடி வித்தை மிக அழகாகக் காட்டுவார்.

‘‘டமில், டமில் ரொம்ப ரொம்ப ரொம்ப புராதான மொழி.

டமில் வால்க!

திருவள்ளுவர், டமில் வாழ்க!

வேட்டிக் கட்டிக்கொண்டு டமில் வாழ்க என்று சொல்வார்.

யாரை ஏமாற்றுகிறீர்கள்?

நாங்கள் ஏமாறுவோமா?

நாங்கள் போதைக்கு அடிமையானவர்கள் அல்ல; நாங்கள் டாஸ்மாக் கடையின் முன் நிற்கக்கூடிய கூட்டமல்ல; அறிவைத் தட்டி எழுப்பக் கூடிய கூட்டம்.

ஆச்சாரியாருடைய குலக்கல்வி

மீண்டும் புதிய வடிவத்தில் வருகிறது

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆச்சாரியாருடைய குலக்கல்வி மீண்டும் புதிய வடிவத்தில் வருகிறது. பழைய கள்; புது மொந்தை.

எனவேதான், இந்த மாநாட்டினுடைய 21 தீர் மானங்களில் மிக முக்கியமான தீர்மானம், பெற் றோர்களே உங்களுக்காக, மாணவச் செல்வங் களே உங்களுக்காக - எங்களுக்காகவோ, எங்களுடைய பேரப் பிள்ளைகளுக்காகவோ -  எங்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்காகவோ அல்ல - கருப்புச் சட்டைக்காரர்கள் பிள்ளை களுக்கோ அல்ல - எங்களை எதிர்க்கிறார்கள் பாருங்கள், புரியாமல் - அந்தக் காவிச் சட்டைக் காரருடைய பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.

நீட் தேர்வு  ஒழிந்தால்தான், உங்களுடைய பிள்ளைகளும் படிக்க முடியும்.

இல்லையென்றால், எல்லாம் அனிதாக்கள் தான்; எல்லாம் சுபசிறீக்கள்தான். நம்முடைய பிள்ளைகள் எவ்வளவு காலம்தான் தற்கொலை செய்துகொண்டிருப்பது.

டாக்டர் ஷாலினி இவ்வளவு பெரிய டாக்டராக வந்திருக்கிறாங்க. இவர்கள் என்ன நீட் தேர்வு எழுதியா வந்தார்கள்? நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

நமது இயக்கம்  - அறிவுப் புரட்சி இயக்கம்

1. நமது இயக்கம் புரட்சி இயக்கம் - மாறுதலை விரும்பும் உழைக்கும் புரட்சி இயக்கம்.

2. ரகசியம் இல்லாதது

3. வன்முறை, வெறியாட்டம், காலித்தனம், கலவரம் இவற்றில் நம்பிக்கை இல்லாத, பங்கு கொள்ளாத அறிவுப் புரட்சி இயக்கம்.

4. இதுவரை நடத்திய கிளர்ச்சிகள் - அறப் போராட்டங்களில் ரத்த ஆறு ஓடியதா?

5. கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து உண்டா?

6. முகமூடித்தனம் எங்கள் இயக்கத்தில் இல்லை?

7. பொதுச்சொத்துக்கு நாசம் உண்டா?

8. இளைஞர்களின் கட்டுப்பாடு

9. சிறைக்கஞ்சா நெஞ்சுறுதி

10. தன்னலம் துறந்த தற்கொலை பட்டாளம்

11. இயக்கத்தால் சம்பாதித்தவர்கள் உண்டா?

12. தீவிரவாதம் - பயங்கரவாதம் ஒன்றாவது உண்டா?

13. பெரியார் ஒரு முறிமருந்து - விஷக்கடிக்கு மாற்று (தீவிர மாற்று மருந்து) ஒன்றுதான் மருந்து!

வாய்ப்புக் கொடுத்தால்

அறிவு வருகிறது

சந்திராயன் சிவன் இருக்கிறார். சிவன், சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறார். அப்பேர்ப்பட்ட சிவன், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். மயில்சாமி அண்ணாதுரை எங்கே படித்தவர். இந்தி படித்தவரா? சமஸ்கிருதம் படித்தவரா? ஆங்கில மொழியில் படித்தவரா? இல்லையே! எம்மொழி செம்மொழி!

வாய்ப்புக் கொடுத்தால் அறிவு வருகிறது. இது வரையில் வாய்ப்புக் கொடுக்கவில்லை; எங்களைத் தட்டித் தட்டி வைத்திருந்தீர்கள்.

உனக்குப் படிப்பு வருமாடா?

தர்ப்பைப் புல்லைக் கிள்ளி உன் வாயில் போட் டால்கூட, உன் நாக்கில் போட்டால்கூட உனக்குப் படிப்பு வராதுடா, போடா சூத்திரப் பயலே என்று கேட்ட வாத்தியார்தானே, பார்ப்பான் வாத்தியார் தானே இருந்தான்.

இன்றைக்குத்தானே எங்கள் ஆள்கள் வாத்தி யார்களாக எல்லாம் வந்திருக்கிறார்கள். அதனால் தானே வாத்தியார்களை மட்டம் தட்டுகிறார்கள். ஆசிரியர்களே வரக்கூடாது என்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, நீட் தேர்வு எத்தனை  உயிர்களை பலிவாங்கி இருக்கிறது.

இரட்டை வேடம் போடலாமா தமிழக அரசு

ஒரு அரசாங்கம் -  இரட்டை வேடம் போடலாமா - தமிழக அரசு.

நீட் தேர்வை நாங்கள் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளமாட்டோம். எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண் டாரா?

நுழைவுத் தேர்வை அவர் கொண்டு வந்தபொழுது, 21 ஆண்டுகள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து நாங்கள் போராடி, இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

கலைஞர் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களுக்கு இருக் கலாம், அது வேறு விஷயம். கடைசியில் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டார்கள். அவருடைய பெயரை சொல்லக்கூடிய தமிழக அரசு - அந்த சகோதரர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்,  உங்களுக்குப் போட்டியாக நாங்கள் உங்களுடைய நாற்காலியில் உட்காரப் போகிறோம் என்றா கேட்கிறோம்.

ராஜாவை மிஞ்சும்

ராஜ விசுவாசிகள்

எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்?

உங்கள் பலகீனங்கள் ஏன் டில்லிக்கு அடிமையாக உங்களை ஆக்குகிறது.

டில்லி சொல்லிவிட்டது என்றவுடன், அந்தக் கல்வித் திட்டம் இன்னும் அமுலுக்கு வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு முன்பாகவே அறிவிப்பு செய்துவிட்டார்கள். ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகள்.

முதலில் பள்ளிக்கூடத்திற்கே போகாமல் இருந் தனர் நம் பிள்ளைகள். பள்ளிக்கூடங்களைத் திறந்து வைத்து, வாங்க, வாங்க என்று கூப்பிட்டார்கள். காமராசர் சோறு போட்டால், அந்தப் பிள்ளைகள் படிப்பார்கள் என்றால், சோறு போடுங்கள் என்றார். அதேபோன்று, தியாகராயர் சொன்னார் முதலில்.

நீட் தேர்வில் எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள்?

இன்றைக்கு நீட் தேர்வில் எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள்.

மாநிலப் பட்டியலிலிருந்த கல்வியை ஒத்திசைவு பட்டியலுக்குக் கொண்டு போனார்கள். கன்கரண்ட் பட்டியலுக்கு - அதனை மாற்றவேண்டும் என்பது முக்கியம்.

ஆனால், இன்றைக்கு நாட்டில் ஒரே ஒரு கல்விக் கொள்கைதான் இந்தியா முழுவதும்.

ஒரே கொள்கை - ஒரே ஆட்சி.

இது கூட்டாட்சி இல்லையா!

அரசமைப்புச் சட்டத்தின் முதல் பாகம் என்ன சொல்கிறது?

India that is Bharath shall be a Union of  State

கூட்டாட்சித் தத்துவத்திற்கு

பெரிய ஆபத்து

இந்தியா, அதாவது பாரத நாடு பல மாநிலங் களுடைய கூட்டாட்சி. இந்தக் கூட்டாட்சித் தத்துவத் திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து இப்போது.

அதுமட்டுமல்ல, மாநிலங்களுக்கு இருக்கின்ற கல்வி வேறு; மத்தியில் இருக்கின்ற கல்வி வேறு. அது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம்.

5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு.

எல்லாவற்றிற்கும் மேலே, பல்கலைக் கழகத்தில்  படிக்கப் போகவேண்டும் என்றால், முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் முத்திரை அடித்துக் கொடுப்பார்கள்,  ‘‘எலிஜிபிள் பார் காலேஜ் கோர்ஸ்'' என்று.

பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு அனுமதி வாங்கவேண்டும். அதற்கு ஒரு தேர்வு எழுதவேண்டும். எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு நீட் தேர்வு எழுதவேண்டும். அதற்குப் பிறகு  நெக்ஸ்ட் என்ற தேர்வு.

இன்று அகில  உலகமும் பாராட்டக் கூடிய மருத் துவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இங்கே இருந்து போனவர்கள்தான். ஆனால், இப்போது மருத்துவப் படிப்புப் படிக்கவேண்டும் என்றால், நீட் தேர்வு எழுதவேண்டுமாம்.

இது என்ன கொடுமை?

இன்றைய மாணவர்களுக்கு எதிர்காலமே இல் லையே!  இதைக்கேட்பதற்கு நாதி இல்லையே! கேட்டால், வாய்ப்பூட்டு,  இதைப்பற்றி பேசுவதற்கு கூட்டத்திற்கு அனுமதி கேட்டால், அனுமதி கிடை யாது.

‘‘விருதுநகர் பிரகடனம் - விருதுநகர் போராட்டக் களத்தை வகுத்திருக்கிறது''

ஆகவேதான், இந்தத் தீர்மானம் மிக முக்கிய மானது நண்பர்களே ‘‘விருதுநகர் பிரகடனம் - விருதுநகர் போராட்டக் களத்தை வகுத்திருக் கிறது'' - இந்த மாநாடு ஒரு திருப்பம் என்று சொல்ல வேண்டும்.

வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையில் பிரச்சாரம் செய்யவிருக்கிறோம்.

இதுவரையில் நீட் தேர்வால் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளி கள் கொள்ளையடிக்கிறார்கள்.

‘‘நீட் தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' நீதிபதிகள் கேள்வி

உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் கேட்கிறார்கள், ‘‘நீட் தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று.

அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதே - நாம் ஒன்றும் பிச்சை கேட்கவில்லையே நாம்! அது சட்டப்படி நமக்குள்ள உரிமை!

சட்டமன்றம் கூடும்பொழுது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுங்கள். மசோதாவை  மீண்டும் நிறைவேற் றுங்கள். என்ன காரணத்தினால், நாங்கள் அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பினீர்கள் என்று கேளுங்கள்.

இந்த நாட்டில் ஒரு பக்கம் நீதிமன்றம்; அதில் பூணூல் மயம்; இன்னொரு பக்கத்தில் நீட், நெக்ஸ்ட் தேர்வு. எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டு, அவர் களுடைய படிப்பில் மண்ணைப் போட்டால் என்ன நியாயம்?

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததுபோல...

கலைஞர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி. ஆனால், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்தானே அங்கே வந்து உட்காருகிறார்கள்.

போஸ்ட் கிராஜூவேட், சூப்பர் ஸ்பெஷாலிட்டிஸ் - இவையெல்லாம் யாருக்கு?

இவை எல்லாவற்றையும்விட சமூகநீதி - அரச மைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

அந்த சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்திருக் கின்ற ஆட்சி மத்தியில் இருக்கின்ற ஆட்சி.  அதற்குத் தலையாட்டுகின்ற ஆட்சிபோல் மாநிலத்தில் இருந்து கொண்டிருப்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.

எங்களுக்கென்றும் தனிப்பட்ட முறையில் யார்மீதும் கோபமோ, வெறுப்போ கிடையாது. இந்த சமுதாயத்தின்மீது இருக்கிற அக்கறைதான்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற, சிறுபான்மை சமுதாய மக்கள் படிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் எங்களுக்கு.

10 சதவிகித இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்காம்.

Socially and Educationally backward classes

உச்சநீதிமன்றத்தினுடைய 9 நீதிபதிகள் அது தவறு என்று  கொடுத்த தீர்ப்பு இந்திரா சகானி வழக்கு இருக்கிறது. அதையெல்லாம் மதிப்பதற்குத் தயாராக இல்லை.

அதற்குப் பதிலாக கூடுதல் பணம் கொடுக்கிறோம்; கூடுதல் இடம் கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 27 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் நமக்கு ‘வரம்' போல் அளித்தாரே, அதை இன்றைக்கு இவர்கள் அமல்படுத்தவில்லை.

டாக்டர்கள் ஏன் போராடினார்கள்?

மத்திய  சதவிகிதத்திற்கு ஒதுக்கீடு என்ற ஒன்றைக் கொடுத்தாயிற்று. 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா? இல்லையா?

இதைக் கேட்பதற்கு நாதியில்லையே! நம்மால் என்ன செய்கிறான், டாஸ்மாக் கடையின்முன்  போய் நிற்கிறான்.

தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்குத் தைரியும்.

இதைப்பற்றி சிந்திக்கவேண்டாமா? தோழர்களே!

தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு

இந்த இயக்கம் வெட்டியாக இதனை செய்ய வில்லை. நம்முடைய பிள்ளைகள், அது காவல் துறையில் இருக்கலாம்; அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக நம்மவர்கள் வர முடியாமல் இருந்தது. மண்டல் கமிசன் வந்த பிறகுதானே, நம்மாட்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக வந்தார்கள்.

வங்கிகள் எல்லாம் பொதுத் துறை நிறுவனங்கள். இப்பொழுது அவற்றை எல்லாம் தனியார்த் துறையாக மாற்றுகிறார்கள். ஆகையால்தான், எங்களுடைய மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்.

திராவிட இயக்கம், தமிழ்நாடுதான் இதற்காகக் குரல் கொடுக்கிறது. இந்தியாவினுடைய இதர பாகங்களிலும் இது எதிரொலிக்கிறது.

எனவே, நண்பர்களே!

நீட் தேர்விலே ஆள் மாறாட்டம் - எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, இதுவரையில் தமிழ் நாட்டு வரலாற்றில்.

வடநாட்டில்கூட காப்பி அடிப்பதற்கு சட்டம் உண்டு. தமிழ்நாட்டில், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்ற தகவல்கள் புற்றீசல் போன்று வெளிவந்து கொண்டே இருக்கின்றன. வழக்கு மேல் வழக்குப் போட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

நீட் தேர்வு ஊழலை ஒழித்துவிட்டதா?

ஊழலை ஒழிப்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்தோம் என்று சொன்னார்களே, நீட் தேர்வு ஊழலை ஒழித்துவிட்டதா?

இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

எனவே, நண்பர்களே!

கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை, பிராந் தியமில்லை. நாங்கள் படிக்கவேண்டும்; எங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும்;  எங்கள் வருங்கால சந்ததிகளுக்கு வாழ்வளிக்கவேண்டும். அதற்கு சமூகநீதி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்கான குரல் இருக்கிறதே - அந்தக் குரலை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஜாதி உண்டானது எப்பொழுது?

50 ஆண்டுகள் பகுத்தறிவாளர் கழகம் - வெள் ளைக்காரன் ஆட்சி 200 ஆண்டுகள். ஜாதி உண்டானது எப்பொழுது? ஜாதி காரணமாகத்தானே, மனுதர்மம் காரணமாகத்தானே நம்மை படிக்கவேண்டாம் என்று சொன்னார்கள்.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு  அறிவைக் கொடுக்காதே - இங்கே இருந்து படித்து அமெரிக்கா விற்குப் போனாங்க பாருங்கள் - அங்கே ஜாதியைக் கொண்டு போயிருக்கிறார்கள்.  Caste in the  United states  புள்ளிவிவரம்.

அம்பேத்கர் மிக அழகாக சொன்னார், இந்து மதத்தைப்பற்றி பேசுகிறோம் என்று சொல்கிறீர்களே, அம்பேத்கருடைய அறிவுரை

If Hindus migrated to other regions on the earth; caste would become a world problem

உலகப் பிரச்சினை ஆகும். இப்பொழுது ஆகிக் கொண்டிருக்கிறது.

எனவேதான் நண்பர்களே, உங்களுக்கு மிக முக் கியமாக சொல்கிறோம். இதை நாங்கள் வேடிக்கையா கவோ, விளையாட்டுக்காகவோ சொல்ல வில்லை.

பெற்றோர்களே  நீங்கள் வரவேண்டும். அலட்சிய மாக இருக்காதீர்கள். அய்.அய்.டி.யில் படிக்கின்ற பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?

காரணம் என்ன?

93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம்

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் பெரியார் காலத்தில்.

இரண்டாவது அரசியல் சட்டத் திருத்தம் பெரியாருடைய தொண்டர்கள் காலத்தில்.

76 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் 69 சதவிகித இட ஒதுக்கீடு. இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக் கீட்டை அனுபவிப்பவர்கள் அத்தனை பேருக்கும் எப்படி வந்தது என்று தெரியுமா?

எங்களை எவ்வளவு கேலி செய்தார்கள்;

எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்

அன்றைக்கு                எங்களை எவ்வளவு கேலி செய் தார்கள்; எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்; எங்கள்  குடும்பத்தினருக்கு எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வந்தன.

அந்த அவமானங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் தோழர்களே,

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீடு. அதனால்தான், அந்த அம்மையாருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்தோம். இன்னமும் சொல்கிறோம், அதிலிருந்து எங்களுக்கு மாறுபாடு கிடையாது.

மூன்று பார்ப்பனர்களை வைத்து

வேலை வாங்கியவர்கள் நாங்கள்!

நாங்கள் ஒரு முடிவெடுத்தால், அதில் எங்களுக்குத் தடுமாற்றம் இருக்காது.

சுலபத்தில் முடிவு எடுக்கமாட்டோம்; அப்படி முடிவு எடுத்துவிட்டால், நன்றி காட்டுவது எங்கள் பண்பாடு.

69 சதவிகித இட ஒதுக்கீடு எப்படி வந்தது?

இங்கே, சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்று  பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா காலத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் - எழுதிக் கொடுத்தது திராவிடர் கழகம்.  நிறைவேற்றியது அவர்கள்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலாவது 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறதா? அதற்கும் இப்பொழுது ஆபத்து வந்திருக்கிறது.

அப்பொழுது பிரதமராக இருந்தவர் நரசிம்ம ராவ் - அவர்  ஆந்திரப் பார்ப்பனர்.

அன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருந்த வர் சங்கர் தயாள் சர்மா - உத்தரப்பிரதேச பார்ப்பனர்.

மூன்று பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் வேலை வாங்கிய இயக்கம் திராவிடர் கழகம்.

கருஞ்சட்டைப் பட்டாளம் இராணுவத்தைவிட கட்டுப்பாடு மிகுந்தது - பெரியாரின் இராணுவம்

நீங்கள் எங்களை அலட்சியமாக நினைக்க வேண்டாம்; வெறும் எண்ணிக்கையைப் பொறுத் ததல்ல. எவ்வளவு பேர் இவர்கள் என்று நினைக் காதீர்கள். நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் மெஜாரிட்டியா? விஞ்ஞானிகள் எல்லாம் மெஜா ரிட்டியா? இராணுவம் எல்லாம் மெஜாரிட்டியா? 130 கோடி மக்களுக்கு 130 கோடி இராணுவம் இருக்கிறதா? அல்லது இந்த ஊரில் எவ்வளவு மக்கள் தொகை இருக்கிறதோ, அவ்வளவு  போலீஸ் இருக்கிறதா? போலீசுக்குப் பயந்து தானே, சட்டம் ஒழுங்கே!  இராணுவத்திற்குப் பயந்துதானே எதிரி படையெடுக்காமல் இருக் கிறான்.

அதுபோல், கருஞ்சட்டைப் பட்டாளம் இராணு வத்தைவிட கட்டுப்பாடு மிகுந்தது - பெரியாரின் இராணுவம்.

இந்த இயக்கம் ரகசிய இயக்கமல்ல!

எனவே,

இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள்;

இந்த இயக்கத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள்.

இந்த இயக்கம் பொறுப்புள்ள இயக்கம்

இந்த இயக்கம் ரகசிய இயக்கமல்ல

இந்த இயக்கத்திற்கு ரகசியத்தில் நம்பிக்கையில்லை

இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல

முகமூடித்தனம் எங்களுக்குத் தெரியாது.

இரட்டை வேடம் எங்களுக்குத் தெரியாது.

அதுமட்டுமல்ல, எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு செய்யக்கூடியவர்கள் நாங்கள். அதிலிருந்து தப்பிப்பவர்கள் நாங்களல்ல.

அது உன்னுடைய மதத்தில் இருக்கிறது.

ஒரு மதத்தைச் சேர்ந்தவர் சொல்வார்,

என்ன பாவம் வேண்டுமானாலும் செய் - ஞாயிற் றுக்கிழமை சர்ச்சுக்குப் போனால் சரியாகிவிடும்.

இன்னொரு மதக்காரர் சொல்வார்,

வெள்ளிக்கிழமை கோவிலுக்குப் போனால் சரி யாகிவிடும்

தவறு செய்தால், தண்டனையை ஏற்றுக்கொள்வோம்!

12 ஆண்டுகள் செய்த பாவம், மகாமகக் குளத்தில் சென்று குளித்தால் உன் பாவம் போய்விடும் என்று சொல்வார்.

தவறு செய்யாதே -

‘‘எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று'' - குறள்

தண்டனை அனுபவி - இதுதான் பகுத்தறிவுவாதி.  தவறு செய்தால், தண்டனையை ஏற்றுக்கொள்வோம். அதில் ரகசியம் கிடையாது. கொலை, கொள்ளைக் கூட்டமா?

எனவேதான் நண்பர்களே, இந்த மண்ணிலே சொல்லுங்கள். மாபெரும் விழிப்புணர்ச்சியை அரசாங்கம் செய்யவேண்டிய வேலையை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக, தமிழக அரசே, நீங்கள் நிமிர்ந்து நிற்கவேண்டும். நிமிர முடியுமா? என்று கேட்காதீர்கள். அது உங்களைப் பொறுத்தது. மக்கள் நிமிர வைப்பார்கள்.  அதுதான் மிக முக்கியம்.

நாங்கள் அடுத்த தேர்தலைப்பற்றி கவலைப்படு கிறவர்கள் அல்ல; அடுத்த தலைமுறையினுடைய மான வாழ்வை, உரிமை வாழ்வை, கல்வி வாழ்வைப் பற்றி கவலைப்படுகிறவர்கள்.

எனவேதான், இளைஞர்களே! இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்!

நீங்கள் திசை தடுமாறாதீர்கள் -

உங்களை திசை தடுமாற வைக்க எத்தனையோ ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்; போதை மருந்தை தயாராக வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட் என்ற ஒரு போதை வைத்திருக்கிறார்கள். தறி கெட்டு கிரிக்கெட்டு - அதிலே சூதாட்டம்.

தமிழ்நாட்டில் ஏது வெற்றிடம் -

கற்றிடம்தான் தமிழ்நாடு!

இன்னும் சில பேர், புதிது புதிதாக மாயக் குதிரையை உருவாக்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் வெற்றிடம் என்கிறார்கள். தமிழ் நாட்டில் ஏது வெற்றிடம் - கற்றிடம்தான் தமிழ்நாடு.

ஆகையால், வெற்றிடம் என்று திடீரென்று சொல்வது, புரூடாக்கள் விடுவது - நம்முடைய ஊடகங்கள் அதனை பெரிதாக்குகின்றன. அவர் இந்தத் தேசத்திற்காக 35 முறை சிறைக்குச் சென்றவர்.

காருக்குறிச்சி அருணாசலம்  அருமையாக நாதசுரம் வாசிப்பார்; நாங்களும் ரசிப்போம். அதற்காக அவரை பிரதமராக ஆக்க முடியுமா?

என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு நாங்கள் தயார்!

ஆகவே நண்பர்களே! அறிவுபூர்வமான செய்தி களை சொல்வதுதான் எங்களுடைய வேலை. அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு நாங்கள் தயார்!

வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது, நாங்கள் திரும்பிப் போவோம் என்று நினைத்துக் கொண்டு வருவதில்லை.

ஒரு மனிதன் விபத்தில் சாகக்கூடாது - ஒரு பயனும் கிடையாது. ஆனாலும், ஒரு பயன் இருக்கிறது அதில் - அங்கேயும் பகுத்தறிவு வேலை செய்ததினால் - உறுப்புகளை மற்றவர்களுக்குக் கொடையாகக் கொடுக்கிறார்கள்.

அந்த உறுப்புகள்கூட, செட்டியார் உறுப்பு செட்டியாருக்கு இல்லை; நாடார் உறுப்பு நாடாருக்கு இல்லை; முதலியார் உறுப்பு, முதலியாருக்கு இல்லை. அங்கேயே ஜாதி ஒழிந்து போய்விட்டது - ஆனால், புரிய மாட்டேன் என்கிறது நம்முடைய ஆட்களுக்கு.

அய்யங்கார் ரத்தம், அய்யங்காருக்கா ஏற்று கிறார்கள்?

முதலியார் விழியை, முதலியாருக்கா பொருத்து கிறார்கள்?

ஆகவேதான் நண்பர்களே,

ஜாதியால்,

மதத்தால்,

பதவியால்

சூழ்ச்சியால்

ஏமாறாதீர்கள்;

இந்த இயக்கம் இல்லாவிட்டால்

உங்கள் கதி என்ன?

உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் பேரப் பிள்ளைகளுடைய கல்வி வாழ்க் கையை நினைத்துப் பாருங்கள்.

படித்தவர்களுடைய வேலை வாய்ப்பைப்பற்றி நினைத்துப் பாருங்கள்.

சமூகநீதி அழிந்தால், கல்வி வாய்ப்புகள் ஒழிந்தால், அதைக் கேட்கின்ற இந்த இயக்கம் இல்லாவிட்டால் உங்கள் கதி என்ன? முடிவு செய்யுங்கள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

 - விடுதலை நாளேடு 2 12 19