செவ்வாய், 31 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா - 5

21.12.2019 அன்றைய தொடர்ச்சி...

'பல்கலைக் கழக நிறுவனர் ஹார்வர்டு அவர்களின் சிலை முழுவது கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. கால் விரல் பகுதிகளில் மட்டும் வண்ணம் தேய்ந்து, உள்ளே இருக்கும் ஒளிர் மஞ்சள் நிறத்தில் வெண்கலம் தெரி கிறதே! ஏன் அப்படி?' என்ற கேள்வியினை கேட்டதும் வழிகாட்டி புன்முறுவலுடன் பதிலளித்தார்.  அது வேறொன்றுமில்லை, இந்தப் பல்கலைக் கழகத்தில் பயிலும் பல மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும் முன்பு சிலையின் கால் பகுதியைத் தொட்டு வணங்கி விட்டுத்தான் செல்வார்களாம். விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களோ, இரவு முழுவதும் சிலை முன் அமர்ந்து காலைப் பிடித்துக் கொண்டு வேண்டிக் (தேர்வில் வெற்றியடைய)  கொள்வார்களாம். கால் பகு தியைத் தொட்டுத் தொட்டு, தேய்த்துத் தொடர்ந்து வணங்கி யதால் கருப்பு வண்ணம் மறைந்து வெண்கலம் தெரிகிறது என்றார்.

நன்றாகப் படித்துத் தேர்வு எழுதினால் வெற்றி யடைந்து விடலாம் எனும் தன்னம்பிக்கை சார்ந்த செயலை விடுத்து சிலையைத் தொட்டு வணங்கினால் வெற்றி யடைந்து விடலாம் என ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களது நினைப்பு ஒருவகை மூடநம்பிக் கையே. தந்தை பெரியார் அடிக்கடி கூறுவது போல முட்டாள்தனம், மூடநம்பிக்கை என்பது நம் மக்களுக்கு மட்டுமே சொந்தமா? மேலை நாட்டிலும் சொந்தம் கொண்டாட 'உரிமை'(!) இல்லையா? என்று சொன்ன நிகழ்வு நினைவிற்கு வந்தது. முட்டாள்தனம் உலகம் முழுவதும் - அனைத்து மக்களிடம் ஏதோ ஒருவகையில் நிலவிவருகிறது.

மாசசூசெட்ஸ் மாநிலத்தில் முக்கியமான இரண்டு இடங்களைப் பார்க்க விரும்பினோம். காலக் குறைவு, பயண தூரம் காரணமாக பார்க்க முடியாமல் போய் விட்டது. ஒன்று - யேல் பல்கலைக் கழகம். புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களுள் ஒன்று. அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்த பொழுது அவரை அழைத்து ‘Sub Fellowship’ பட்டம் கொடுத்துப் பாராட்டி மகிழ்ந்த பல்கலைக் கழகம் யேல் பல்கலைக் கழகமாகும். அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு திருக்குறள் பாடம் சொல்லி விளக்கமளித்த உயர்கல்வி நிறுவனம் யேல் பல்கலைக் கழகம். மற்றது - அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த - சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய பொழுது சுட்டுக் கொல் லப்பட்ட ஜே.எப். கென்னடியின் நினைவகம். இரண்டு இடங்களும் நாங்கள் பயணம் செய்த வழியிலிருந்து விலகி தனித் தடத்தில் இருந்ததாலும், பயணத்தூரம் அதிகமாக இருந்த படியாலும் பார்க்க முடியாமலே போய்விட்டது.

அமெரிக்க உயர்கல்வி நிலையங்களைப் பற்றி கேள்விப்பட்டுமட்டும் இருந்த நிலையில் அவைகளை நேரில் சென்று பார்த்த அனுபவம் நன்றாக இருந்தது. அனைவருக்கும் கல்வி என்பதில், அமெரிக்கா அண்மை யில் உருவான (400 ஆண்டுகள்) நாடு என்றாலும், எவ் வளவு உறுதியாக உள்ளது, அந்நாட்டு மக்கள் பல்துறை களில் சிறந்து விளங்கி வருவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பது புலப்பட்டது.

சுற்றுலா தொடங்கி இரண்டு மூன்று நாட்களே ஆகி, நண்பகல், மற்றும் இரவு நேர உணவிற்கு இந்திய உணவகங்களுக்குச் சென்றாலும், அங்குள்ள அசைவ உணவைத் தவிர இதர உணவு வகையில் வட இந்தியச் சுவையில் இருந்தது, ஒரு நெருடலாகவும், உணவு அருந்தியும், அருந்தாமல் இருப்பது போலவே இருந்தது. உடன் வந்த வழிகாட்டியிடம் முன்னமே இந்த உணவு ஒவ்வாமையைத் தெரிவித்ததால் பாஸ்டன் நகர் சுற்றுலா முடிந்ததும், தென்னிந்தியர் (ஆந்திரர்) நடத்தும் 'கோதாவரி' உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என தென்னிந்திய உணவு வகைகள் கண்ணில் பட்டதுமே கூடுதல் பசியும் தொற்றிக் கொண்டது. வயிற்றுக்கு வேண்டிய மட்டும் அந்த உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு அடுத்து நியூயார்க் நகரை நோக்கிப் பயணமானோம். பாஸ்டனிலிருந்து நியூயார்க். 350 கிலோ மீட்டர், பயண நேரம் 4.30 மணி என்ற நிலையில் தொடர்ந்து பேருந்துப் பயணத்தால் களைப் புடன் இருந்த பலர் அந்தப் பயணத்தை தூக்கத்திலேயே கழித்தனர். இரவு சரியாக 9.00 மணிக்கு நியூஜெர்ஸியில் உள்ள விடுதிக்கு, இரவு உணவை இடையில் இருந்த பஞ்சாபி உணவகத்தில் அருந்திவிட்டு சென்று சேர்ந்தோம்.

நியூஜெர்ஸியில் ஒன்ரூட் (One Route) பகுதியில் இருந்த ஹாலிடே இன் டோடோவா (Holiday Inn Totowa)  விடுதிக்கு வந்து அன்று இரவும் அடுத்தநாள் இரவும் தங்கினோம்.

நியூயார்க் நகரச் சுற்றுலா

அடுத்த நாள் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நியூயார்க் நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

சுதந்திர தேவி சிலை

(Liberty Statue)

நியூயார்க் நகரம் அட்லாண்டிக் பெருங்கடலின் கரைப்பகுதியில் அமைந்துள்ளது - அமெரிக்கா எனும் பொழுது வானைத் தொட்டுவிடத் துடிக்கும் உயரமான கட்டடங்களின் தோற்றத்தைக் (Skyscrapers) காட்டும் நகரம் நியூயார்க். முதல் இடமாக உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் - அமெரிக்காவைக் காட்சிப் படுத்த வேண்டு மானால் அதன் அடையாளமாகத் திகழும்  சுதந்திர தேவிச் சிலையினைப் பார்க்கச் சென்றோம். நியூ யார்க்கின் ஒரு பகுதியான மன்காட்டன் தீவில் (Manhattan Island) அமைந்துள்ளது அந்த பிரம்மாண்டமான சிலை. மோட்டார் படகின் மூலம்தான் சிலை உள்ள தீவினைச் சென்றடைய முடியும். விமானப் பயணம்-வெளிநாட்டுப் பயணம் செல்லும்போது எப்படி பயணிகளைப் பரிசோ தனை செய்வார்களோ அப்படி பல நிலைச் சோதனை களைத் தாண்டி மோட்டார் படகில் ஏறி அமர்ந்தோம். படகு புறப்பட்ட திசையை நோக்கி சுதந்திரத் தேவிச் சிலை தூரத்தில் தெரிகிறதா என்ற தேடலுடன் பயணம் செய் தோம்.

நியூயார்க் - மன்காட்டன் தீவில்

சுதந்திர தேவிச் சிலை விடுதலை வேட்கையின் எழுச்சி வடிவமாக அமைக்கப்பட்டது. வலதுகையில் ஒளி விளக்குச் சுடரை ஏந்திப் பிடித்தும், இடது கையில் ‘July 4, 1776’ என்ற நாள் பொறிக்கப்பட்ட அமெரிக்க விடுதலை பிரகடனமும் உள்ளது. இந்த சிலை 1886-ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க அய்க் கிய நாடுகளின் தேசிய பூங்கா சேவைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தரையிலிருந்து 93 மீட்டர் உயரமுள்ள (சிலை மட்டும் 46 மீட்டர்) செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்ட இந்த சிலையானது பிரான்ஸ் நாட்டினரால் அமெரிக்க அய்க்கிய நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசாகும். 'விடுதலை' (Liberty)  உணர்வினை வெளிப் படுத்திய பிரெஞ்சுப் புரட்சியின் அடையாளமாக பரிசளிக் கப்பட்டது. (பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் பல நூற்றாண் டுகளுக்கு முன்னரே - கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே விடுதலை உணர்விற்கு வித்திட்டவர் பகுத்தறிவாளர் புத்தர். புத்தரின் போதனையின் சாரம்சமான விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் (Liberty, Equality and Fraternity) ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் இடம் பெற்றுள்ளதாக அதன் வரைவுக் குழுத் தலைவரான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறி னார். சமூக புரட்சியாளர் தந்தை பெரியார் முழுமையான விடுதலை மனிதனுக்கு வேண்டும் என்ற சீரிய நோக்கத் தில் தான் நடத்தி வந்த பத்திரிக்கைக்கு 'விடுதலை' (Liberation) எனப் பெயரிட்டார். 87-ஆம்  பிறந்த நாள் கண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 57-ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை ஏட்டின் ஆசிரியராக இருப்பது வெளி வருகிற செய்தி ஒப்பீடும்  அமெரிக்க மண்ணில் சுதந்திர தேவி சிலை யினைப் பார்க்கும் நேரத்தில் மனதில் எழுந்தது.

சிலையின் முழுமையான பரிமாணமும் தூரத்தில் இருந்துதான் பார்க்கமுடியும். தீவை அடைந்து, படகி லிருந்து இறங்கி, நெருங்கிச் சென்று பார்க்கும் பொழுது சிலை முழுமையையும் ஒரு பார்வை வீச்சில் சிக்கவில்லை. ஒவ்வொரு பகுதியாகத்தான் பார்க்க முடிந்தது. பீடப் பகுதியில் ஏறி சிலையை சுற்றி வர வழி இருக்கிறது. சிலையில் கிரீடம் அமைந்துள்ள பகுதி வரை ஏறிச் செல்ல படிக்கட்டும் உள்ளது. கால அளவு போதாத காரணத்தால் சிலையை மட்டும் அருகில் இருந்து பார்த்தோம். ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டோம். 'விடுதலை' ஏட்டினைப் படித்துவரும் 'விடுதலை' வாசகர்களாகிய சுற்றுலா சென்ற சுயமரியாதை  தோழர்கள் சுதந்திரதேவி சிலையின்  (Statue of Liberty) முன்பு ஒன்றாக சேர்ந்து ஒளிப்படம் எடுத்தது குறிப்பிடத் தக்கதாக இருந்தது.

அரை மணி நேரம் மட்டும் சுதந்திர தேவி சிலை யுள்ள தீவில் செலவழித்து விட்டு அந்த லட்சினையுள்ள நினைவுப் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் படகுப் பயணத்தில், புறப்பட்ட துறைமுகப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மய்யத்தின் இரட்டை கோபுர நினைவிடம்:

மறக்க முடியாத நாள்: 11 செப்டம்பர் 2011. நெஞ்சை விட்டு அகலாமல் நீடிக்கும் காட்சி உலக வர்த்தக மய்யத்தின் இரட்டை கோபுரங்கள் - நினைத்துப் பார்க்க முடியாத சில நொடிகளில் தரைமட்டமாகி, பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களை பலி வாங்கிய தீவிரவாதிகளின் வான்தாக்குதல்.

வர்த்தகக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட ஒரு சில வினாடிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அந்த கொடுமையான காட்சியை தொலைக்காட்சியில் நேர லையில் பார்க்க நேரிட்டது. அமெரிக்க குடியரசுத் தலைவராயிருந்த ஆபிரகாம் லிங்கன் 1863-ல் சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது அந்தத் துயரச் செய்தி அட் லாண்டிக் கடலின் மறுகரையில் உள்ள அய்ரோப்பாவிற்குச் சென்றடைய ஒரு வார காலம் பிடித்தது என்று சொல் வார்கள். அறிவியல் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் இன்று செய்திகளை நேரலைக் காட்சியாகவே கொண்டு சேர்க்கிறது. இருப்பினும் அந்த அளவிற்கு மானுடப் பற்று மேம்படாமல் மங்கிக் கொண்டே வருவதற்கு இரட்டை கோபுர தகர்ப்பே ஒரு சாட்சியாக - நினைவிடமாக இருக்கிறது. இமை துடிக்கும் நேரத்தில் கம்பீரமாக நின்ற நியூயார்க் இரட்டை கோபுரம் இடிந்து நிர்மூலமான நிகழ்வு எவருடைய நெஞ்சைவிட்டும் அகலாது. பகல் நேரத்தில் நடந்த தகர்ப்பில் அந்த இரட்டை கோபுரங்களில் இருந்த அலுவலகங்களில் பணிபுரிந்த ஏறக்குறைய 3000 நபர்கள் உயிரிழந்தனர். 25000 பேர் படுகாயமடைந்தனர். மனித நேயமற்ற வகையில் அப்பாவி மக்கள் பலிவாங்கப்பட்டது. மனிதகுல வரலாற்றில் நிலைத்துவிட்ட பெரிய தழும்பாகவே நீடிக்கும்.

இரட்டை கோபுரம் நிர்மூலமான இடத்தை, நினை விடமாக எழுப்பி இறந்தவர்களின் நினைவுகள் உலக மக்களின் நெஞ்சங்களில் ஈரத்துடன் உள்ளன என்பது போல அந்த நினைவிடத்தில் நீரூற்றுகள் அமைத்துள் ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் நாள் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டாலும், ஒவ்வொருநாளும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நியூயார்க் வருபவர்கள் இரட்டை கோபுர நினைவகத்தை பார்வையிட்டு உயிர் துறந்த மனித உறவுகளுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர். நாங்கள் அந்த நினைவிடத்தை பார்வை யிட்ட பொழுது அப்படி வீரவணக்கம் செலுத்தியதன் அடையாளங்கள் - மலர் வளையங்கள், மலர் கொத்துகள் பரவலாகக் காணப்பட்டன. எங்களது வீர வணக்கத்தையும் உயிர் துறந்தவர்களுக்கு செலுத்தும் விதமாக மலர் வளை யம் வைத்தோம். நினைவிடம் பரந்துபட்டு இருந்தாலும், நகரின் மையப் பகுதியில் இருந்தாலும், அந்த இடத்தைப் பொருத்த அளவில் அமைதிப் பூங்காவாகவே இருந்தது. நினைவிடத்தைவிட்டு கனத்த நெஞ்சுடன் புறப்பட்டோம்.

ஓருலக வர்த்தக மய்யம்

(One World Trade Centre)

இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சில ஆண்டு களிலேயே வன்முறையினை எதிர்த்து மனிதகுலம் ஓரணியில் நிற்கிறது என்பதைக் காட்டுகின்ற வகையில் நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு அருகிலேயே ஓருலக வர்த்தக மய்யம் மிகவும் எழிலோடும் பிரம்மாண்டமாகவும் எழுப்பப்பட்டுள்ளது. பல அடுக்குகளுடன்  தரையிலிருந்து கோபுர நுனிவரை 1792 அடி உயரத்தில் ஓருலகு வர்த்தக மய்யம் எழுப்பப்பட்டு 4 நவம்பர் 2014 திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வட அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகின் மேல் அரைக்கோளப் பகுதியிலேயே உயரமான கட்டடமாக எழுப்பட்டுள்ளது. மேல்தளத்தில் செல்லுவதற்கு மின் துக்கி உள்ளது. அந்தப் பகுதியில் தொலைநோக்கி கருவியுடன் கூடிய மய்யமும்  (Observatory) செயல்படுகிறது. மேல் தளத்திலிருந்து சுற்றிலும் பார்த்தால் நியூயார்க் நகரின் முழுப் பரிமாணமும் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒட்டுமொத்த பருந்துப் பார்வை  (Bird's eye view)   வசதி பெரும்பாலான நகரங்களில் இருக்காது. கட்டணம் செலுத்திதான் ஓருலகு வர்த்தக மய்யத்தை பார்வையிட முடியும். சிறிய கைக் கணினி  (tablet)  வடிவமைப்பையும் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

கை கணினியைப் பார்த்தவாறு, காது கேட்பானுடன் நகர்ந்து கொண்டே வர்த்தக மய்யம் பற்றியும், நியூயார்க் நகர் பற்றிய விளக்கங்களையும் கேட்க முடியும். கீழிலிருந்து பார்த்தால் வானத்தை தொடுவது போன்ற கட்டடங்கள் - வர்த்தக மய்யத்தின் மேல் தளத்திலிருந்து பார்த்தால் பிற கட்டடங்களின் உயர் நுனிக்கு மேலாக நாம் இருந்து பார்க்கும் நிலை - ஒருபக்கம் கடலில் நகர்ந்து செல்லும் படகுக் கப்பல், சுதந்திர தேவி சிலை சிறியதாகத் தோன்றும் நிலை - இப்படி நாம் இருக்கும் இடத்தை பொறுத்து, பிரம்மாண்டமாகப் பார்க்கப்பட்ட இடங்கள் கூட பிரம்மாண்டம் குறைந்து நமக்குள் அடங்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஒருமணி நேரத்தை ஓருலகு வர்த்தக மய்யத்தில்  செலவழித்துவிட்டு அய்க்கிய நாடுகள் அவையை பார்வையிடலாம் எனப் புறப்பட்டோம். செல்லும்பொழுது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அய்.நா. அவை நடவடிக்கையில் பங்கேற்ற வந்திருந்த படியால் அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துள் வந்திருப்பதாக அறிய வந்தோம். பார்வையாளர்கள், சுற்றுலாவாசிகள் எவரும் அய்.நா. அவை உள்ள பகுதிப் பக்கம் செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை. அய்.நா. அவையை தூரத்தில் இருந்து கூட பார்க்க முடிய வில்லையே என்ற ஏக்கத்துடன், எழுச்சியின் வடிவத்தை உருவாக்கிய பல்கலைக் கழகம் ஒன்றிற்குச் சென்றோம்.

வீ. குமரேசன்

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 23.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக