வெள்ளி, 18 மே, 2018

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் "சார்வாகம் 2018"

அறிவியல் பகுத்தறிவுக் கருத்தரங்கத்தில் திராவிடர் கழகம் பங்கேற்பு
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் யுக்திவாத பாடனகேந்திரத்தின் ஏற்பாட்டில் "சார்வாகம் 2018" நிகழ்ச்சி  மே 12-13 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியான அறிவியல் பகுத்தறிவு கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன் பங்கேற்றார்.

"மதச்சார்பற்ற இந்திய நாட்டில் பகுத்தறிவாளர் களுக்கான அறைகூவல்கள்" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. எர்ணாகுளம் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள நகர் மன்ற அரங்கில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் நாள் பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு "டெக்கான் கிரானிக்கல்" ஆங்கில ஏட்டின் நிர்வாக ஆசிரியர் கே.ஜே. ஜேக்கப் நெறியுரைஞராக இருந்தார். கருத்தரங்கில் அனைந் திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், மகாராஷ்டிர அந்தஸ்திரத நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல், கேரள யுக்திவாதி சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜகோபால் வக்கதானம்  கர்நாடக மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. சுப்பாராவ், யுக்திவாத பாடனகேந்திராவின் துணைத் தலைவர் ஷிபு எரிக்கல் ஆகியோருடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசனும் பங்கேற்றார்.

கருத்தரங்கில் வீ. குமரேசன் உரை


கருத்தரங்கில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலா ளர் வீ. குமரேசன் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

மதச் சார்பற்ற இந்தியா எனக் குறிப்பிடும் பொழுது நாட்டுக் குடிமக்களிடத்தில், நாட்டை ஆட்சி செய்யும் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை உள்ளதா எனக் கேள்வி எழுகிறது.  குடிமக்களைப் பொறுத்த அளவில் தொன்றுதொட்டு மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர்; இன்றும் இருந்து வருகின்றனர். 'மதமா? மனித  சமுதாய நல்லிணக்கமா? என கேள்வி எழுந்தபொழுதெல்லாம் மத உணர்வுகள் மக்களிடம் மட்டுப் பட்டே வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்தினைப் பொறுத்த அளவில் மதச் சார்பின்மையினை வலியுறுத்தும் விதிகள் உள்ளன. விதிகள் எனும் பொழுது மதச்சார்பின்மை கருத்தினை வலியுறுத்தும் எழுத்துகள் உள்ள அளவிற்கு மதச் சார்பின்மை எண்ணங்கள் இன்றைய ஆட்சியாளர்களால் போற்றப்படவில்லை; பேணப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. மத உணர்வுகளை பாதுகாத்து மத நடவடிக்கையால் விளைந்த மனித சமத்துவத்துக்கு எதிரான நிலைகளுக்கு ஏதுவான விதிமுறைகளும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியினை வலியுறுத்தும் விதிமுறைகள் நீக்கப்பட வேண்டும் என 1957-இல் தந்தை பெரியார், அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட் டத்தினை நடத்தினார். 3000க்கும் மேற்பட்டோர் சிறை புகுந்தனர். மேலும் ஒரே மதத்திற்குள்ளே ஏற்றத் தாழ்வு, தொட்டால் தீட்டு, என்று, தாம் விரும்புகின்ற கடவுளைக் கூட பூஜை செய்யும் பணி ஒரு ஜாதியினருக்கு மட்டுமே உள்ளது. இதனை எதிர்த்து அனைத்து ஜாதியினரும் கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என பெரியார் தொடங்கிய போராட்டம் பெரியார் நிறுவிய பகுத்தறிவு சுயமரியாதை இயக்கமாகிய திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் இன்றும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதற்கென தனிச் சட்டம் இயற்றப்பட்டாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

கேரள அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் ஆணையினை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி யுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில்  மத உணர்வுகளை போற்றிப் பாதுகாக்கின்ற விதிமுறைகள் பலவீனப்படுத்தப் பட வேண்டும். இறுதியில் முறையாக நீக்கம் பெற வேண்டும். மதச் சார்பின்மைக்கு வலு சேர்க்கும் விதி முறைகள் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். வெறும் விதிமுறையாக எழுத்தில் மட்டுமல்லாமல் நடைமுறை யிலும் ஆக்கம் பெறுகின்ற வகையில் ஆட்சியாளர்களை நடத்திடும் பணி பகுத்தறிவாளருக்கு உள்ளது.  அறிவியல் மனப்பான்மை எதனையும் கேள்விக்கு உள்ளாக்கி உண்மையினை அறிந்து கொள்வது குடிமக்களின் அடிப்படைக் கடமையாக அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி கூறி பதவி ஏற்றுள்ள ஆட்சியாளர்கள் அடிப் படைக் கடமைகளுக்குப் புறம்பாக வெறும் புராணச் செய்தி களையும் அறிவியல் ஆதாரம் அற்ற செய்தி களையும் அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளாக கூறி வருகின்றனர். ஆளும் பிஜேபி அரசின் பிரதமர் தொடங்கி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் எனப் பலரும் முக்கிய நிகழ்ச்சிகளில், அறிவியல் மாநாட்டில் ஆதாரம் ஏதுமின்றி, போகிற போக்கில் புராணச் செய்திகளை அறிவியல் தொழில் நுட்பத்துடன் தொடர்பு படுத்தி கருத்தினைக் கூறி வருகின்றனர்; அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக நடந்து வருகின்றனர். சட்டத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொள்ளுவது பகுத்தறி வாளர்களுக்கு ஒரு பெரிய அறைகூவலாக இருக்கிறது. இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்திடும் பகுத்தறி வாளர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படு கிறார்கள். 2013-இல் தொடங்கி டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம். கல்புர்கி மற்றும் இதழியல் மனித உரிமை ஆர்வலர் கவுரி லங்கேஷ் ஆகியோர் ஒரேவிதமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப் பட்டு தண்டனை வழங்கப்படவில்லை என்பதே ஆட்சியின் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதுவும்  கொலை செய்த மத ஆதிக்கவாதிகள் இன்னும் சட் டத்தின் பிடியில் சிக்காததுவும் மதச் சார்பற்ற இந்தியாவை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பல பகுத்தறிவா ளர்கள் - மனித நேயர்கள் மதவெறியர்களின் கோரப் பசிக்கு இரையாகலாம். இவ்வளவு இன்னல் களையும் எதிர்த்துதான் பகுத்தறிவாளர்கள் போராட வேண்டி யுள்ளது; எதிர் வன்முறை தவிர்த்து பிரச்சாரம் செய்திட வேண்டியுள்ளது. தொடர்ந்து பகுத்தறிவாளர்கள் செய் திடும் பிரச்சாரத்தின் மூலம்தான் பொது மக்களிடம் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்திட முடியும். அறிவியல் மனப்பான்மையினை அவர்களிடம் உருவாக்கிட முடியும். அறிவியல் அல்லாதவற்றை, அறிவியலுக்கு புறம்பானவற்றை பகுத்து, தவறாக வழி மாற்றிடும் ஆட்சியாளர்களை அடையாளம் காண முடியும். இதுவே மதச் சார்பற்ற இந்திய நாட்டில் பகுத்தறிவாளர்கள் நேர் கொண்டுள்ள அறைகூவல்கள்; ஆற்றிட வேண்டிய கடமைகள். இது நீண்ட நெடிய பணி - பயணமாகும். ஆனால் மானுடத்திற்கு நிலையான பயனை அளித்திட வல்லதாகும். அத்தகைய பயணத்தை பகுத்தறிவாளர் களாகிய நாம் மேலும் உறுதிபூண்டு வலிமையாக தொடர்ந்து நடத்துவோம்! இவ்வாறு வீ. குமரேசன் தமதுரையில் குறிப்பிட்டார்.

பகுத்தறிவாளர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்கு விருது வழங்கல்


கடந்த ஆறு ஆண்டுகளாக "சார்வாகம்" நிகழ்வு நடத்தப்பட்டு வந்தாலும், நடப்பு ஆண்டு (2018) முதல் "சுதந்திர சிந்தனையாளர் விருது" வழங்கிட யுக்திவாத பாடனகேந்திரம் முடிவெடுத்தது. "சார்வாகம் 2018" நிகழ்ச்சியில் முதன் முறையாக சுதந்திர சிந்தனையாளர் விருது (Free Thought Award) வழங்கப்பட்டது. அனைத் திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்கு விருது வழங் கப்பட்டது. விருதுக் கேடயம், விருது மடல் ஆகியவற் றுடன் விருது பண முடிப்பாக ரூபாய் பத்தாயிரத்தை யுக்திவாத பாடனகேந்திர அமைப்பினர் வழங்கினர்.

"சார்வாகம் 2018" இதர நிகழ்ச்சிகள்


முதல் நாள் முற்பகல் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் குரீபுழா சிறீகுமார் தொடக்கவுரை ஆற்றினார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் ஆட்சியின் தேசிய செயலாளர் பினாய் விஸ்வம் சிறப்புரை வழங்கினார். அடுத்து "உண்மையின் மணம்" (Fragrance of Truth) எனும் தலைப்பில் பேராசிரியர் சி. ரவிச்சந்திரன் கணினி படங்கள் மூலம் விளக்கம் அளித்து உரையாற்றினார்.

மாலையில் கணினி தொழில் நுட்பத்துடன் கூடிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறார்கள் மகளிர் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். கலை நிகழ்ச் சிகள், பார்த்தோர் மனம் கொள்வதாக சிறப்புடன் நடந்தன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஒரு கிரேக்கப் புராணம் (A Greek Myprology) எனும் தலைப்பில் தொழில் நிறுவன உரிமையாளர் ஜோர்டி ஜார்ஜ், 'மதம் சார்ந்த சமூகத்தில் மகளிருக்கு சுதந்திர சிந்தனை சாத்தியமா? (Is Free Thought Possible for Women in Religion Society) எனும் தலைப்பில் கல்வியாளர் அஜா சூசன் ஜார்ஜ் மற்றும் "குடியரசு மற்றும் மக்களாட்சி; இந்தியாவின் ஏக்கங்கள்" (Republic and Democracy Longing India) எனும் தலைப்பில் டாக்டர் அருண்குமார் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

பிற்பகல் 'பயம் பற்றிய உள்ளுணர்வுகள்' (Chemistry of Fear) எனும் தலைப்பில் உளவியலாளர் இ. பிரியதர்சினி, 'ஹேராம் (Heyram) எனும் தலைப்பில் மனுஜா மைத்ரி, 'ஆட்டம் முடிக்கப்பட்டது. (Innings Declared) எனும் தலைப்பில் டாக்டர் பி.எஸ். ஜினேஷ் மற்றும் "நான் நேர்கொண்ட கேள்விகள்"(Questions I Faced) எனும் தலைப்பில் இ.பி. ஜாபர் உரையாற்றினர்.

"சார்வாகம் 2018" நிகழ்வுகள் இரண்டு நாள்கள் சிறப்பாக நடந்தேறின. யுக்திவாத பாடனகேந்திரத்தின் பொறுப்பாளர்கள் ஜார்ஜ், கோபக்குமார் மற்றும் ஆர்வ லர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

- விடுதலை நாளேடு, 16.5.18