சேகுவேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேகுவேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 மார்ச், 2023

புரட்சி வீரர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேராவுக்கு வரவேற்பு விழா!

 

உடல்நலன் பாராமல் கொள்கை சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள் தந்தை பெரியாரும் - சேகுவேராவும்!

இந்தியா - கியூபா ஒருமைப்பாட்டுக் குழுவுக்கும் - 

சி.பி.எம். கட்சிக்கும் பாராட்டுகள்: தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, ஜன.19 தந்தை பெரியாரும், சேகுவேராவும் கொள்கையில் சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள்; பொதுவுடைமை இயக்கத்துக்கும், திராவிட இயக்கத்துக்கும் தொடர்பு எப்பொழுதும் உண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முழங்கினார்.

அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு

நேற்று (18.1.2023) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு சார்பில் நடைபெற்ற புரட்சியாளர் சேகுவேராவின் மகள்  டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு மாபெரும் வரவேற்பு மற்றும் சோசலிச கியூபாவுக்கு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைத் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

எல்லையற்ற மகிழ்ச்சிக்குரிய ஓர் அருமையான விழா!

மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில், தமிழ் நாட்டில் நாம் பெருமையடையக் கூடிய மகிழ்ச்சிக்குரிய, எல்லையற்ற மகிழ்ச்சிக்குரிய ஓர் அருமையான விழா - இந்த விழாவில், வழமையான பொங்கல் திருநாளில், உழைக்கின்ற பாட்டாளி மக்களுக்கு மட்டுமல்ல, உழைக்கின்ற பேச முடியாத ஜீவன்களுக்குக்கூட விழா எடுக்கக்கூடிய அறுவடைத் திருநாள் என்ற உழவர் திருநாள் முடிந்து, அந்த விழாவின் தொடர்ச்சி யாக, நேற்று காணும் பொங்கல் - இன்றைக்குக் காண வேண்டியவரை காணும் பொங்கலாகவே வந்திருக்கக் கூடிய மிக அருமையான  ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களுக்கும், அவரை ஒருங்கிணைத்து அழைத்து வந்த பேபி அவர்களின் அமைப்பிற்கும் முதலில் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் மண்ணைச் சார்ந்த, சமதர்ம மண்ணைச் சார்ந்த, சுயமரியாதை மண்ணைச் சார்ந்த, தமிழ்நாட்டு மண்ணிற்கு, அம்மையார் அவர்களை அழைத்து வந்தமைக்கு நன்றி!

‘‘தோழர், தோழர்’’ என்று அழையுங்கள் என்றார் தந்தை பெரியார்!

புரட்சியாளர் சேகுவேரா - 'சே' என்றால், தோழர் என்று அர்த்தம். ‘‘தோழர்; தோழர்’’ என்று அழையுங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள், எங்களைப் போன்ற, உங்களைப் போன்ற இளைஞர்கள் பிறக்காத காலத்திற்கு முன்பே, தமிழ்நாட்டில் ‘‘தோழர், தோழர்’’ என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

பெருமலையை, சிறு உளி தகர்ப்பதுபோல...

‘‘காம்ரேட்’’ என்று சொல்லக்கூடிய அந்த அற்புத மான பொதுவுடைமைத் தத்துவம். அந்தப் பொது வுடைமைத் தத்துவத்தைப்பற்றி சிறப்பாக உலகம் முழுவதும் பரவச் செய்து வெற்றி பெறும் நல்வாய்ப்பு - ஏகாதிபத்தியங்கள் எவ்வளவுதான் எதிர்த்தாலும், எங்களால் பெருமலையை, சிறு உளி தகர்ப்பதுபோல, கியூபா போல நின்று வெற்றி பெற முடியும் என்று காட்டுவதற்கு, அந்தப் புரட்சியாளருடைய வரிசையில் சிறந்தவராக சேகுவேரா அமைந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட அருமையான புரட்சியாளர் சேகுவேராவின் மகள்  டாக்டர் அலெய்டா குவேரா அவர்களுக்கும், அவருடைய பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா அவர்களுக்கும் மாபெரும் வரவேற்பு - சோசலிச கியூபாவிற்கு வரவேற்பு என்ற இந்த அருமையான நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருக் கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 

தமிழ்நாட்டினுடைய செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

‘தமிழ்நாடு’ என்று சொல்லும்பொழுது இப்பொழுது எவ்வளவு பூரிப்படைகிறீர்கள்; இந்த பூரிப்பு மட்டுமல்ல நண்பர்களே, இங்கே எழுப்பப்படும் கரவொலி சாதாரணமான கரவொலி அல்ல - இது எங்கெங்கோ போய் ஒலித்து, யார் யாரையோ குடைந்து கொண் டிருக்கின்ற கரவொலியாகவும் இருக்கின்றது என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.

இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றியுள்ள அரு மைத்தோழர் குணசேகரன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக் கூடிய தோழர் சுந்தரராஜன் அவர்களே, வேல்முருகன் அவர்களே, செல்வா அவர்களே, வர வேற்புப் பாடல் பாடிய டி.எம்.கிருஷ்ணா அவர்களே,

விருந்தினர் அறிமுக உரையை மிக உணர்ச்சிப் பூர்வமாக இங்கே நிகழ்த்திய நம்முடைய கேரளத்துத் தோழர் சகோதரர் எம்.ஏ. பேபி அவர்களே,

கலைஞர் தந்த பகுத்தறிவுச் செல்வம், அறிவுச் செல்வம், கொள்கைச் செல்வம் - 

அருமைத் தோழர் கனிமொழி

எங்கள் தனித்தமிழ்ச் செல்வம், திராவிட முன் னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் என்பதெல்லாம் பிறகு, எந்நாளும் பகுத்தறிவுச் செல்வம், கலைஞர் தந்த பகுத்தறிவுச் செல்வம், எங்கள் அறிவுச் செல்வம், கொள்கைச் செல்வம் - அருமைத் தோழர் கனிமொழி அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற எங்கள் ஆருயிர் தோழர், நாங்கள் பிரிய முடியாத தோழர் என்றால், அவர் தோழர் முத்தரசன்தான் - சி.பி.அய்.யின் தமிழ்நாட்டுச் செயலாளர் அவர்களே,

அதேபோல, தமிழ்நாட்டில் யாரையெல்லாம் ஒரு காலத்தில் ஒடுக்கி வைத்திருந்தோம் என்று ஆணவக் காரர்கள் நினைக்கின்றார்களோ, அந்த ஒடுக்குமுறை யாளர்கள் எல்லாம் இன்றைக்கு அலறக்கூடிய அள விற்கு ஒருவர் இருக்கிறார் என்றால், அவர்தான் எங்கள் எழுச்சித் தமிழர் சகோதரர் தொல்.திருமாவள வன் என்று சொல்லக்கூடிய பெருமைமிகு தோழரே!

இந்நிகழ்ச்சியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கலந்துகொண்டுள்ள கொள்கை விளக்க அணியின் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்களே,

காங்கிரஸ் பேரியக்கம் - அந்தப் பேரியக்கம் - இலட்சியத்தில் தமிழ்நாடு வழிகாட்டுகிறது. அரசியல் ரீதியாகப் பார்க்கும்பொழுது, மற்ற மாநிலங்களில் இருக்குமா இதுபோன்ற கூட்டணி என்பது வேறு; ஆனால், இது தமிழ்நாடு - எங்களை இலட்சியங்கள் ஒன்றிணைக்கும் - எதுவும் எங்களைப் பிரிக்காது என்று காட்டுவதற்காக வந்திருக்கின்ற அருமைச் சகோதரர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர், செய்தித் தொடர்பாளர் அருமைத் தோழர் கோபண்ணா அவர்களே,

இவர்கள் எல்லாம் உறவுக்காரர்கள்தான்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிரணி தலைவர் - நம் குடும்பத்து உறுப்பினர் என்று அவரையும் அழைக்கலாம். பல பேர் நினைக்கலாம், இவர் என்ன, எல்லோரையும் உறவு  கொண்டாடுகிறாரே என்று - ஆம்!  இவர்கள் எல்லாம் உறவுக்காரர்கள்தான். அவருடைய தாய் - தந்தையாருடைய திருமணமே, தந்தை பெரியாருடைய தலைமையில்தான் நடைபெற்றது என்கிற வரலாறு இருக்கிறதே, அது இளைய தலைமுறையினருக்குத் தெரிவிக்கப்படவேண்டிய வரலாறாகும்.

அதுபோலவே, தோழர் இராமகிருஷ்ணன் அவர்கள். நாங்கள் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள்; ஒரே தெருவைச் சார்ந்தவர்கள். அதுதான் மிகவும் முக்கியமானது.

நம்முடைய நாராயண ஆறுமுக நாயனார் அவர்களே,

பேராசிரியர் ஹாஜாக்கனி அவர்களே,

தமிழ்நாடு பெற்றிருக்கின்ற பெருமைமிகுந்த நாடாளுமன்ற உறுப்பினர்

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், எவ்வளவு சுறுசுறுப்பாக, எவ்வளவு ஆவேசமாக, எல்லா உரிமைகளையும் எவ்வாறு கேட்கவேண்டுமோ அவ்வாறே கேட்கிறார் என்று சொன்னால், தமிழ்நாடு பெற்றிருக்கின்ற பெருமைமிகுந்த நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் வெங்கடேசன் அவர்களே,

இந்த மேடையைப் பார்க்கிறேன்; இந்த மேடையில் பேசவேண்டிய அவசியமில்லை. இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றவர்களும் சரி; மேடைக்கு எதிரில் அமர்ந்திருக்கின்ற நீங்களும் சரி; யாருக்கு என்ன பதில் வேண்டுமோ - அவர்களுக்குப் பதில் சொல்லக்கூடிய அற்புதமான வாய்ப்புப் பெற்றுள்ள உணர்வாளர்கள்.

இங்கேயே ஒரு கியூபா புரட்சி ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

ஒன்றை மட்டும் எடுத்து நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

என்ன இவர்களுக்கு இவ்வளவு உறவுகள் என்று நினைக்கலாம். நான் இங்கே வந்தவுடன், புரட்சியாளர் சேகுவேராவின் மகள்  டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள்.

அருகிலிருந்த மொழி பெயர்ப்பாளர் சிறப்பான முறையில் மொழி பெயர்த்து அவர்களுக்குச் சொன்னார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மேனிஃபேஸ்டோ அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்தவர்!

அந்த வகையில், தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான  சாதனைகளைப்பற்றியெல்லாம் நம்முடைய தோழர் சேகுவேராவின் மகளுக்குச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், தோழர் பேபி அவர்கள், ஒரு முத்தாய்ப்பான செய்தியை சொன்னார்.

அது என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள்தான், கம்யூனிஸ்ட் கட்சியின் மேனிஃபேஸ்டோ அறிக்கையை இந்தியாவில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு, அதற்காக சிறைச்சாலைக்குச் சென்றவர் என்று சொன்னார்.

புதுப்பிக்கவேண்டிய உறவல்ல; 

தொடர்கின்ற உறவு - இருக்கின்ற உறவு

இந்த அறிமுகம் போதும்; நம் உறவு என்பது எப்பொழுதும் புதுப்பிக்கவேண்டிய உறவல்ல; தொடர்கின்ற உறவு - இருக்கின்ற உறவு என்பதுதான் மிகவும் முக்கியம்.

இது ஒரு பெரிய நிகழ்ச்சி. காண வேண்டியவர்களை காணும் பொங்கல் நாளின் மீட்சியாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி.

உலகளாவிய மனிதப் பார்வை சேகுவேரா அவர்களுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் இருந்தது என்பதை இளைஞர் உலகம் பார்த்து உணர்ந்து கொள்ளவேண்டும்.

இன்றைய இளைஞர்கள் எல்லாம் சேகுவேரா படத்தையும், இன்னொரு பக்கம் தந்தை பெரியாரின் படத்தையும் போட்டிருப்பார்கள்.

சமுதாயத்தை மாற்றிப் புரட்டிப் போடக்கூடிய மிக முக்கியமான புரட்சி!

ஏனென்றால், இரண்டு பேரும் புரட்சியாளர்கள். அவர்கள் செய்த புரட்சி என்பது சமுதாயத்தை மாற்றிப் புரட்டிப் போடக்கூடிய மிக முக்கியமான புரட்சியாகும்.

‘‘இனிவரும் உலகம்’’

பெரியார் பேசுகிறார் கேளுங்கள்:

‘‘ஒரு மனிதன் தன்னுடைய காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும், அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்வதுபோல, உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கும் ஏற்படும் சங்கடத்தையும், குறைபாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டதுபோல நினைக்கும்படியாக அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும், அவ்வளவு கூட்டு வாழ்க்கையின் ஒற்றுமையும், உணர்ச்சியும் உள்ள சமுதாயம் ஏற்படும்’’ என்று தந்தை பெரியார் 1943 இல், ‘இனிவரும் உலகம்’ என்ற உரையின்மூலம் சொன்னார்கள்.

அந்த உரையைக் கேட்ட அண்ணா அவர்கள், ‘‘இனிவரும் உலகம்‘‘ என்ற தலைப்பில் எழுதி, நூலாக வந்திருக்கிறது.

இது பெரியாருடைய கருத்து 1943 ஆம் ஆண்டு.

வண்ணங்கள் மாறுபடலாம்; ஆனால், எண்ணங்கள், புரட்சியை நோக்கியே, எல்லா சாலைகளும் அங்கு நோக்கியே என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சி வந்திருக்கிறது.

சேகுவேரா பேசுகிறார்!

இப்பொழுது சேகுவேரா பேசுகிறார் கேளுங்கள்:

‘‘If you tremble with indignation at every injustice, then you are a comrade of mine.’’

‘‘ஒவ்வொரு அநீதியைப் பார்க்கும்பொழுது, உங்களுடைய கைவிரல்கள், உங்கள் உடல்கள் நடுநடுங்கி கோபதாபங்களை உருவாக்கக் கூடிய அந்த சூழ்நிலையில் இருந்தால், நீ என்னுடைய தோழன்.’’

"Yes. We are the Comrades of the Cuba's humanists

We are the Comrades of Working Class

We are the Comrades of oppressed, depressed and suppressed

We oppose tooth and nail - fundamentalists and facists"

எனவே, இந்த நாள் ஓர் இனிய நாள். 

இரு தலைவர்களும் உடல் நோய் பாராமல் உழைத்தவர்கள் இறுதி வரையில்!

அதுபோல நண்பர்களே, இரு தலைவர்களும் உடல் நோய் பாராமல் உழைத்தவர்கள் இறுதி வரையில் - தந்தை பெரியாரும் சரி; சேகுவேரா அவர்களும் சரி.

அவருடைய மகளையும், பேத்தியையும் அவ்வளவு அன்போடு வரவேற்கிறோம். இது ஒரு சம்பிரதாய உறவல்ல.

நீங்கள் கியூபாவின் மகள் மட்டுமல்ல; இந்த நாட்டின் மகள். இந்த நாட்டின் மகள். இங்கே வந்திருக்கின்ற பேத்தி, எங்கள் பேத்தி.

நீங்கள் தமிழ்நாட்டு மகள்!

இந்த நாட்டு மகள் என்பதைவிட, அதிகமாக ஒருபடி மேலே சொல்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டு மகள். அதுபோல, கேரளத்தின் மகள். அதுபோல, வங்கத்தின் மகள்.

எங்கே இருந்தாலும், நீங்கள் எங்கள் செல்வம்; எங்கள் உறவு - இந்த உறவு நீடிக்கவேண்டும். 

தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய உடலில் இயற்கை வழியிலே சிறுநீர் பிரியாத நேரத்தில்கூட வயிற்றில் துளை போட்டு, ஒரு குழாயை இணைத்து, அந்தக் குழாயின் மறுபகுதியை ஒரு பாட்டிலினுள் வைத்து, அந்தப் பாட்டிலை ஒரு வாளியில் வைத்து, அதைத் தூக்கிக்கொண்டு 5 ஆண்டுகாலம் நடந்தார் என்பது மிகப்பெரிய வரலாறு.

பதவி மோகமற்ற போராளிகள்

அதேநேரத்தில்தான், கியூபா புரட்சியில் வென்று, அமைதியை நிலவ வைத்து, பொறுப்பைத் துறந்து சென்றவர், நம்முடைய சேகுவேரா அவர்கள். அவருடைய உடல் நலத்தைப் பொருட்படுத்தாமல், பதவி மோகமற்ற போராளியாக -எங்கெல்லாம் அநீதிகள் நடைபெறுகின்றனவோ - எங்கெல்லாம் சமூக அநீதிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் எனக்கு வேலை இருக்கிறது; அங்கெல்லாம் நான் செல்வேன் என்று சொன்னவர்தான் காமரேட் என்ற உணர்வுபடைத்த சேகுவேரா அவர்களுடைய பணி.

அதனால்தான், இன்னொரு மகளைப் பார்த்துச் சொன்னார், நீங்களும் குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். கொள்கைப் பணிக்கு வாருங்கள் என்று சொன்னார்.

அது வாரிசு முறையல்ல நண்பர்களே - புரட்சியின் தொடர்ச்சி அது!

பொதுவுடைமைதனைக் 

காப்போம்! காப்போம்!!

‘‘இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் 

இது எனது என்ற கொள்கையை உடைப்போம் 

உலகமெங்கும் புதிய சமுதாயத்தைப் படைப்போம்

பொதுவுடைமைதனைக் காப்போம்! காப்போம்!!’’

இதுதான் உறுதி என்று சொல்லி, உங்களை வரவேற்கிறோம்!

வாழ்க புரட்சி!

வளர்க புரட்சி!

வாழ்க தமிழ்நாடு!

வளர்க பொதுவுடைமைத் தத்துவம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’’ எனும் முழக்கம்!
‘‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’’ எனும் முழக்கம்!

புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு நடைபெற்ற வரவேற்பு விழாவில் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் - ‘’மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில் (மூன்று முறை) நாம் பெருமை யடையக் கூடிய விழா’’ என்று உரைத்தபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சேர்ந்து விண்ணைப் பிளக்கும் வகையில்,
‘‘தமிழ்நாடு வாழ்க!’’,  ‘‘தமிழ்நாடு வாழ்க!’’, ‘‘தமிழ்நாடு வாழ்க!’’ என்று பலத்த கைதட்டலுடன் முழக்கமிட்டது மெய்சிலிர்க்கச் செய்தது. 
குறைந்த நேரம் பேசினாலும், கலகலக்கச் செய்தார் ஆசிரியர்!

ஏகாதிபத்திய எதிர்ப்பு - சமதர்ம புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வி அலெய்டா குவேராவுக்குப் பாராட்டு

 

 சேகுவேராவின் பெயர்த்தி டாக்டர் எஸ்டெஃபானிக்கு

 தமிழர் தலைவர் பெரியாரின் பெண்ணியம் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தை வழங்குகிறார்

"அநீதியால் ஒடுக்கப்படும் ஒவ்வொருவரும் தனது தோழரே என்ற மானுட சகோதரத்துவத்தின் மாண்பாளர் சேகுவேரா"

 உலகறிந்த சோசலிச புரட்சியாளர் - தென் அமெரிக்கா கண்டத்தினைச் சார்ந்த அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூபா விடுதலைக்காகப் போராடி வெற்றி கண்டவர் - தனக்குக் கிடைத்த முதன்மை அதிகாரப் பதவிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காங்கோ, பொலிவியா ஆகிய நாடுகளில் நிலவிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்த்த பொழுது,  அதிகார அழிவு சக்திகளால் கொல்லப்பட்டவர் - தனது வாழ்நாள் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முறையைக் கடைப்பிடித்த பெரும் புரட்சியாளரான எர்னெஸ்ட் சே குவேரா அவர்களின் மகள் மருத்துவர் அலெய்டா குவேரா சென்னை மாநகருக்கு வருகை தந்திருந்தார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கியூபா நாட்டு டனான ஒற்றுமையைப் பேணும் தேசியக் குழுவின் ஏற்பாட்டில் வருகை தந்திருந்த அலெய்டா குவேரா அவர்களுக்கு வரவேற்பும், பாராட்டு விழாவும் சென்னை - அண்ணாமலை மன்றத்தில் 18-1-2023 அன்று அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்பின் தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்தேறியது.

பாராட்டுக் கூட்டத்திற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தோழர்கள் எல்.சுந்தரராஜன், 

ஆர். வேல்முருகன், ஜி. செல்வா ஆகியோர் முன்னிலை யில் என். குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

மருத்துவர் அலெய்டா குவேரா பற்றிய அறிமுக உரையினை எம்.ஏ. பேபி அவர்கள் வழங்கினார். தமிழர் தலைவரின் பாராட்டுரையுடன் தொடங்கிய விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி (தி.மு.க.), தொல்.திருமாவளவன் (வி.சி.க.), இரா. முத்தரசன் (சி.பி.அய்.) வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உ.வாசுகி, ஜி. இராம கிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், பேராசிரியர் ஹாஜாகனி (ம.ம.க.) மற்றும் பலர் பாராட்டி உரையாற்றினர்.

அலெய்டா குவேராவுக்கு தமிழர் தலைவர் செய்த சிறப்பு

புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வியான மருத்துவர் அலெய்டா குவேராவிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார். நினைவுப் பரிசாக 'Collected Works of Periyar E.V.R.'  மற்றும்  'A Man Ahead of His Time' ஆகிய புத்தகங்களை வழங்கினார். சிறப்புச் செய்திடும் பொழுது தந்தை பெரியார் பற்றிய சிறப்புகளை, குறிப்பாக அலெய்டா குவேராவிடம் ஆசிரியர் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது, எம்.ஏ. பேபி அவர்கள் 'பெரியார்தான் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை  (Communist Manifesto) தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என வெகு பொருத்தமாக அலெய்டா குவேராவிடம் கூறினார்.

அலெய்டா குவேரா அவர்களுடன் வருகை தந்திருந்த அவரது மகளும், சேகுவேராவின் பெயர்த்தி யுமான எஸ்டெஃபானி அவர்களுக்கும் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து 'Periyar Feminism'எனும் புத்தகத்தினை நினைவுப் பரிசாக வழங்கினார். 

பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சார்பாக சிறப்புச் செய்யப்பட்டது. நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

விருந்தினர் பற்றிய அறிமுக உரை

அலெய்டா குவேரா அவர்களுடன் பல்வேறு நகரங்களுக்குச் சென்று வரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி அறிமுக உரையாற்றினர்; அதன் சுருக்கம்:

ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்த கியூபா, புரட்சித் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ, எர்னெஸ்ட் சேகுவேரா ஆகியோர்களின் வழிகாட்டுதலில் சோசலிச குடியரசாக மலர்ந்தது. இருப்பினும் கியூபாவினை எதிர்த்து பொருளாதாரத் தடையினை அமெரிக்கா விதித்தது. அய்க்கிய நாடுகள் அவையில் (United Nations Organisation) அங்கம் வகிக்கும் கியூபா பொருளாதாரத் தடையினை நீக்கக்கோரி அவையில் வேண்டியது ஓட்டுக்கு விட்ட பொழுது இன்றைக்கு உக்ரைன், பிரேசில் (சோசலிசம் மலர்ந்துள்ள நாடு) ஆகிய இரண்டு நாடுகள் மற்றும் தடை விதித்த அமெரிக்கா தவிர, உலக நாடுகள் முழுவதும் - இந்தியா உட்பட கியூபாவின் வேண்டு கோளுக்கு ஆதரவு அளித்தன. இருப்பினும், அமெரிக்க நாட்டுப் பொருளாதாரத் தடை நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிட குறைந்த மக்கள் தொகையான 1.5 கோடி மக்களைக் கொண்ட கியூபா நாடு சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் பல வகையிலும் முன்னேற்றம் கண்டுள் ளது. மருத்துவர் - மருத்துவர் சேவை மிக அழுத்தமாகக் கிடைக்கும் நாடு கியூபா, வருகை தந்துள்ள சேகுவே ராவின் மகள் அலெய்டா குவேரா அவர்களும் ஒரு மருத்துவர் - குழந்தை மருத்துவ வல்லுநர் - ஒரு சமூகப் போராளி. ஒரு பெண்ணிய - பெண் விடுதலைப் போராளி. மக்கள் அதிகாரமே மகத்தானது என்பதை அடிப்படையாக வைத்து சமத்துவம், சம வாய்ப்பினை உருவாக்கிட பாடுபட்டு வருகின்றார். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று பாடுபட்டு வருகிறார். அப்படிப்பட்ட பெண் போராளி - பெண்ணியப் போராளி அலெய்டா குவேரா அவர்களுக்கு நாம் தரும் ஆதரவு முழக்கம் 'வெற்றியை நோக்கிப் பயணியுங்கள்' என்பதே. இவ்வாறு அலெய்டா குவேரா பற்றி  எம்.ஏ. பேபி அறிமுகம் செய்தார்.

(தமிழர் தலைவரின் தொடக்க - பாராட்டுரை தனியே காண்க).

கவிஞர் கனிமொழி உரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்கள்  ஆற்றிய உரையின் சுருக்கம்:

நான் எப்பொழுதும் ஆசிரியர் அய்யா அவர்களைப் பின்பற்றி வந்துள்ளேன். இந்த நிகழ்ச்சியிலும் ஆசிரியருக்கு அடுத்து, அவரைத் தொடர்ந்து பாராட்டுரை வழங்கிட வாய்ப்பளித்ததற்கு எனது நன்றியினைத்தெரிவித்துக் கொள்கிறேன். 

புத்தகம், படங்கள் ஆகியவற்றில் மட்டுமே பார்த்துப் படிக்கப்பட்ட புரட்சியாளர் சேகுவேரா அவர்களை - அவரது சாயல் உள்ள அன்புப் புதல்வியார் மருத்துவர் அலெய்டா குவேரா அவர்கள் மூலம் பார்க் கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக் கிறது. புரட்சியின் வெற்றியை பறைச £ற்றிடும் நாடு கியூபா, சிறிய தீவு நாடாக இருந்தாலும் அந்த மக்களி டையே கொள்கை அளவில் தெரியும் மொழி ஒரே மொழி 'மனிதநேயம்' மட்டுமே.

அதிக அளவில் மருத்துவர் எண் ணிக்கை, நாட்டுமக்களுக்கு நிறைந்த மருத்துவ சேவை வழங்கிடும் நாடு கியூபா. இருப்பினும் கியூபா நாட்டு நிலைமையை ஒரு சமயம் அலெய்டா குவேரா குறிப்பிட்டார். மருத்துவ சேவைகள் வழங்கிடும் அடிப்படை வசதிகள் கியூபாவில் நிலவினாலும் உடல் நலத்திற்கான மருந்துகள் வெளி நாடுகளிலிருந்து தான் - குறிப்பாக அமெரிக்காவிலிருந்துதான் வர வேண்டும். வர வேண்டிய மருந்து வராததால் மருத்துவர் இருந்தும், மருத்துவ சேவை இருந்தும் மர ணத்தைத் தழுவிய குழந்தைகள் ஏராளம் என்பதே அலெய்டா கூறியது. அந்நிலை நீங்கிட உலக நாடுகள் ஆதரவுக் குரல், கரம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும்     NEET ('நீட்') தேர்வுவிலக்கு மட்டும் கிடைத்து விட்டால் கியூபாவில் உள்ளதைப் போல பரந்துபட்ட மருத்துவ சேவை வழங்கிட முடியும்.  ழிணிணிஜி  மூலம் தடை உள்ள நிலையிலும், 'இல்லம் தேடி மருத்துவம்" சேவை வழங்கப் பட்டு வருகிறது. புரட்சியின் பலன் முழுமையாகக் கியூபாவில் கிடைப்ப தற்கு அலெய்டா குவேரா எடுத்து வரும் முன்னெடுப்புகள் - முயற்சிகள் வென்றிட நாமெல்லாம் உறுதுணை யாக இருப்போம் என கூறி அவர் களை வரவேற்று பாராட்டி அமர் கின்றேன்.

இவ்வாறு கவிஞர் கனிமொழி தமது உரையில் குறிப்பிட்டார்.

எழுச்சித் தமிழர் 

தொல். திருமாவளவன் உரை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்  - தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

மொழி, மதம், இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து உலகப் பார்வையுடன் வாழ்ந்த புரட்சியாளர் சேகுவேரா உலகில் எந்தப் பகுதியில் ஆதிக்க சக்திகளால் அல்லல்படும் மக்கள் இருக்கிறார்களோ அவர்களுக் கெல்லாம் தோழனாக விளங்கினார்.  அலெய்டா குவேரா அவர்களைப் பார்க்கும்பொழுது - சேகுவேரா அவர்களே நேரில் வந்தது போல - அவரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது.

ஏகாதிபத்தியம் என்பது முதலா ளித்துவம் சார்ந்தது மட்டுமல்ல; மத அடிப்படையிலான ஆதிக்கமும்  - ஒரு வகையான ஏகாதிபத்தியமே! சேகுவேராவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இந்த மண்ணில் சனாதன எதிர்ப்பு என்பதாகவே கருதப்பட வேண்டும். அல்லல்படும் மக்களுக்கு ஆதரவாகவே  இருந் திருப்பார் சேகுவேரா. அவர் வாழ்ந்த காலத்தில் ஈழப்போர் நடைபெற்றி ருந்தால் ஈழ விடுதலை கிடைத் திருக்கும். கியூபா புரட்சியை முடித்து விட்டு பொலிவியா நாட்டிற்குச் சென்றதைப் போல, பல நாடுகளுக்கும் - ஆதிக்க சக்திகளால் அடக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சேகுவேரா குரல் எழுப்பியிருப்பார். காலம் அவரை விட்டு வைக்கவில்லை என ஏகாதிபத்திய சக்திகள் திசை திருப்பிட முனைந்தார்கள். அவரது  வேறுபட்ட அணுகுமுறை, சோசலிச கொள்கை மீதான பற்று உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணர்வினை - எழுச்சியினை ஊட்டிட வேண்டும் எனக் கூறி, அவரது அருமை மகள் மருத்துவர் அலெய்டா குவேரா அவர்களை பாராட்டி மகிழ்கிறேன்.

இவ்வாறு எழுச்சித் தமிழர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

தலைவர்களின் பலரது பாராட்டு களுக்குப் பின்னர் மருத்துவர் அலெய்டா குவேரா உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நன்றி உரையினை ஆறுமுக நயினார் வழங்கினார். 

பல கட்சியினரும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பல தரப்பினரும் உணர்ச்சிப் பெருக்குடன் அலெய்டா குவேரா அவர்களைக் காண பெருந் திரளாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

திராவிடர் கழகத்தின் சார்பாக துணைத் தலைவர், கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. கும ரேசன், சென்னை மண்டல செயலா ளர் தெ.செ. கோபால்,  அமைப்பாளர் சண்முகப்பிரியன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ. சுரேஷ் மற்றும் பல தோழர்கள் பங் கேற்றனர். சமூகநீதிக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்தரநாத், டாக்டர் சாந்தி மற்றும் பல ஆர்வலர்கள் பாராட்டு நிகழ் விற்கு வருகை தந்திருந்தனர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அலெய்டா குவேரா

தனது பண்பாட்டு அடையாளம்பற்றி

"ஒரு முதலாளித்துவ சாம்ராஜ்யத்திற்குப் பக்கத் தில் இருந்து கொண்டு, சோஷலிசப் புரட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள பன்னாட்டு அளவில் புகழ் பெற்ற கரீபியன் பகுதியில் உள்ள ஒரு தீவில் (கியூபா) இருந்து  நான் வருகிறேன். கருப்பின மக்களோடு, ஸ்பானிஷ் மிகச் சிறிய அளவில் பூர்வ குடிகள், சிறிது சீனர்கள் இணைந்த கலவையாக விளங்கும் 'கரீபியன் கலாச்சாரம்' என்னுடையது."

(தனது பன்மைத்துவ பண்பாட்டுத் தன்மை பற்றி அலெய்டா குவேரா கூறியது - கியூபா போன்ற மிகச் சிறிய, ஆனால் மிகப் பெரிய கொள்கைப் பலம் வாய்ந்த நாட்டில் உள்ள 'பண்பாட்டு' நிலையாகும். பன்மைத்துவம் கலந்த பண்பாட்டிலும், ஒருமைப் பாடு காட்டி வருகின்றனர்).


புரட்சிப் பட்டறையில் பூத்த மலர் - அலெய்டா குவேரா!

 

கியூபா நாட்டின் புரட்சித் தந்தை பிடல் காஸ்ட்ரோவின் சீரிய சகப் போராளி - 'படைத் தலைவர்' சேகுவேரா ('சே' என்றால் 'தோழர்' என்று பொருள்). உலகில் எங்கெங்கெல்லாம் அநீதி - கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் சென்று அதனைத் தன் போர்க்களமாக்கி, அப்போரில் தான் கொண்ட லட்சியத் திற்காக தன்னையே கொடுத்த தகத்தாய கொள்கைத் தங்கம் தான் புரட்சியாளர் சேகுவேரா!

அவர்தம் புரட்சிப் பட்டறையில் பதப்படுத்தி பூத்த புதுமலர்கள் - கொள்கைகள் நறுமலர்கள் தான் தமிழ்நாட்டிற்கு - கேரள சுற்றுப் பயணம் முடித்து வந்து நமது கொள்கைப் போராட்டத்தின் திரிகளுக்கு மேலும் ஒளியூட்டினர். அவரது  அன்பு மகள் அலெய்டா சேகுவேரா மற்றும்  குழந்தை நல மருத்துவரும், அவரது கொள்கைப் பேத்தியுமான டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோர் தமிழ் நாட்டுக்கு வந்தனர். பெரியார் மண்ணான தமிழ்நாட்டு மண்ணின் கொள்கை - லட்சிய மணத்தினை முகர்ந்து - முற்றோதிய முழு மனிதம் நோக்கிய இலக்குடன் பதப்படுத்திய  மண்ணாக தமிழ் மண் இருப்பது கண்டு புளகாங்கிதத்துடன் பூரித்து மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டுத் தொழிலாளர்களும், அவர் களுக்குத் தோள் கொடுக்கும் இயக்கத் தலைவர்களும் கரம் கோர்த்து, புதியதோர் உலகு செய்து, பொது உடைமைக் கொள்கை புத்தாக்கம் தரும் புதிய பூமி, புதிய வானமாக தமிழ்நாடு- பெரியார் மண் திகழ்வதில் நம்மைப் போலவே - தோழர் அலெய்டாவும் மகிழ்ந்து "உங்கள்  மாநிலத்தின் பெயர் என்ன?" என்று கூடியிருந்த மக்கள் பெருந்திரளைப் பார்த்துக் கேட்க - 'தமிழ்நாடு' என்று மக்கள் ஓங்கிக் குரல் கொடுக்க, இன்னும் உரத்து முழங்குங்கள் என்று கூறியது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திராவிட இலக்கின் உண்மையை உலகும் உணர்ந் தோதுகிறது என்பதையே காட்டியது!

அது மட்டுமா?

அவரை நாம் பெருமையோடு, அவர் 'புரட்சி வயிற்றிலிருந்து  வந்த பீரங்கி' என்று வர்ணித்து வரவேற்ற நிலையில் நேற்று அவர் பதிலளித்தப் பாங்கு வியக்கத்தக்கது! வித்தகர் அவர் என்பதை விரி உலகத்திற்கே உணர்த்தியது!

"நான் யாருடைய மகள் என்பது முக்கியமல்ல;

நான் யாராக இருக்கிறேன் என்பதே முக்கியம்!

என் தாயார் (புரட்சியாளர் சேகுவேராவின் மனைவி) கூறிய அறிவுரை எனக்கு என்ன தெரியுமா?"

"இந்த மண்ணில் கால் ஊன்றிய நீ எப்போதும் உறுதியாக நிற்க வேண்டும். இதை இந்த நேரத்தில் நினைவு கொள்கிறேன்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பிரமிப்பை அளிக்கிறது!

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அங்குள்ள மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்.

எத்தனை தடைகள் இருந்தாலும் கியூபா மக்களின் மகிழ்ச்சியை மட்டும் அமெரிக் காவால் தடுக்க முடியவில்லை"

"எனது தந்தையார் இறந்தபோது (படுகொலை செய்யப்பட்டதைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார் - கவனியுங்கள்) உலக மக்களில் பெரும்பாலோர் வருத்தப்பட்டனர்.

ஒருவரின் இறப்புக்காக யாரும் அழ வேண்டியது இல்லை; அவர் கடமையைத் தொடர்ந்து செய்தால் அவர் நம்மோடு வாழ்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்"

இந்த வீரமும், நெஞ்சத்துக் கொள்கை உரமும் நிறைந்த பக்குவப்பட்ட பேச்சே, சேகுவேராவின் குடும்பம் கொள்கைப் பட்டறையில் தயாரித்த போர்க்கள ஆயுதங்களாகவே அமைந்திட்டன என்பதை நமக்கும், உலகத்திற்கும் காட்டுகிறது!

இப்படிப்பட்ட வீரப் பெண்களே, வீர வேங் கைகளே, விவேக சிந்தாமணிகளே இன்றைய அடிமைப் பெண்ணுலகை  ஆர்ப்பரித்து எழ வைக்கக் கூடிய தகுதி வாய்ந்தோராவர். பாலின வேறுபாடு இன்றி சமூகப் புரட்சிக்குத் தலை மையாக - அன்னை மணியம்மையார் போன்ற தியாகத் திருஉருவங்களை முன்னிறுத்தி புதியதோர் உலகு செய்து, அதனைப் பொது உரிமை, பொது உடைமை பூத்த சமுதாயமாக மாற்றிட புரட்சி பூபாளம் பாடுவோம் என்பதே தோழர் அலெய்டா பெற்ற வரவேற்பும், அதில் அவர் ஆற்றிய பதிலுரையும் - இல்லையா?