சனி, 18 மார்ச், 2023

ஏகாதிபத்திய எதிர்ப்பு - சமதர்ம புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வி அலெய்டா குவேராவுக்குப் பாராட்டு

 

 சேகுவேராவின் பெயர்த்தி டாக்டர் எஸ்டெஃபானிக்கு

 தமிழர் தலைவர் பெரியாரின் பெண்ணியம் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தை வழங்குகிறார்

"அநீதியால் ஒடுக்கப்படும் ஒவ்வொருவரும் தனது தோழரே என்ற மானுட சகோதரத்துவத்தின் மாண்பாளர் சேகுவேரா"

 உலகறிந்த சோசலிச புரட்சியாளர் - தென் அமெரிக்கா கண்டத்தினைச் சார்ந்த அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூபா விடுதலைக்காகப் போராடி வெற்றி கண்டவர் - தனக்குக் கிடைத்த முதன்மை அதிகாரப் பதவிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காங்கோ, பொலிவியா ஆகிய நாடுகளில் நிலவிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்த்த பொழுது,  அதிகார அழிவு சக்திகளால் கொல்லப்பட்டவர் - தனது வாழ்நாள் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முறையைக் கடைப்பிடித்த பெரும் புரட்சியாளரான எர்னெஸ்ட் சே குவேரா அவர்களின் மகள் மருத்துவர் அலெய்டா குவேரா சென்னை மாநகருக்கு வருகை தந்திருந்தார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கியூபா நாட்டு டனான ஒற்றுமையைப் பேணும் தேசியக் குழுவின் ஏற்பாட்டில் வருகை தந்திருந்த அலெய்டா குவேரா அவர்களுக்கு வரவேற்பும், பாராட்டு விழாவும் சென்னை - அண்ணாமலை மன்றத்தில் 18-1-2023 அன்று அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்பின் தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்தேறியது.

பாராட்டுக் கூட்டத்திற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தோழர்கள் எல்.சுந்தரராஜன், 

ஆர். வேல்முருகன், ஜி. செல்வா ஆகியோர் முன்னிலை யில் என். குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

மருத்துவர் அலெய்டா குவேரா பற்றிய அறிமுக உரையினை எம்.ஏ. பேபி அவர்கள் வழங்கினார். தமிழர் தலைவரின் பாராட்டுரையுடன் தொடங்கிய விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி (தி.மு.க.), தொல்.திருமாவளவன் (வி.சி.க.), இரா. முத்தரசன் (சி.பி.அய்.) வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உ.வாசுகி, ஜி. இராம கிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், பேராசிரியர் ஹாஜாகனி (ம.ம.க.) மற்றும் பலர் பாராட்டி உரையாற்றினர்.

அலெய்டா குவேராவுக்கு தமிழர் தலைவர் செய்த சிறப்பு

புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வியான மருத்துவர் அலெய்டா குவேராவிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார். நினைவுப் பரிசாக 'Collected Works of Periyar E.V.R.'  மற்றும்  'A Man Ahead of His Time' ஆகிய புத்தகங்களை வழங்கினார். சிறப்புச் செய்திடும் பொழுது தந்தை பெரியார் பற்றிய சிறப்புகளை, குறிப்பாக அலெய்டா குவேராவிடம் ஆசிரியர் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது, எம்.ஏ. பேபி அவர்கள் 'பெரியார்தான் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை  (Communist Manifesto) தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என வெகு பொருத்தமாக அலெய்டா குவேராவிடம் கூறினார்.

அலெய்டா குவேரா அவர்களுடன் வருகை தந்திருந்த அவரது மகளும், சேகுவேராவின் பெயர்த்தி யுமான எஸ்டெஃபானி அவர்களுக்கும் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து 'Periyar Feminism'எனும் புத்தகத்தினை நினைவுப் பரிசாக வழங்கினார். 

பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சார்பாக சிறப்புச் செய்யப்பட்டது. நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

விருந்தினர் பற்றிய அறிமுக உரை

அலெய்டா குவேரா அவர்களுடன் பல்வேறு நகரங்களுக்குச் சென்று வரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி அறிமுக உரையாற்றினர்; அதன் சுருக்கம்:

ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்த கியூபா, புரட்சித் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ, எர்னெஸ்ட் சேகுவேரா ஆகியோர்களின் வழிகாட்டுதலில் சோசலிச குடியரசாக மலர்ந்தது. இருப்பினும் கியூபாவினை எதிர்த்து பொருளாதாரத் தடையினை அமெரிக்கா விதித்தது. அய்க்கிய நாடுகள் அவையில் (United Nations Organisation) அங்கம் வகிக்கும் கியூபா பொருளாதாரத் தடையினை நீக்கக்கோரி அவையில் வேண்டியது ஓட்டுக்கு விட்ட பொழுது இன்றைக்கு உக்ரைன், பிரேசில் (சோசலிசம் மலர்ந்துள்ள நாடு) ஆகிய இரண்டு நாடுகள் மற்றும் தடை விதித்த அமெரிக்கா தவிர, உலக நாடுகள் முழுவதும் - இந்தியா உட்பட கியூபாவின் வேண்டு கோளுக்கு ஆதரவு அளித்தன. இருப்பினும், அமெரிக்க நாட்டுப் பொருளாதாரத் தடை நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிட குறைந்த மக்கள் தொகையான 1.5 கோடி மக்களைக் கொண்ட கியூபா நாடு சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் பல வகையிலும் முன்னேற்றம் கண்டுள் ளது. மருத்துவர் - மருத்துவர் சேவை மிக அழுத்தமாகக் கிடைக்கும் நாடு கியூபா, வருகை தந்துள்ள சேகுவே ராவின் மகள் அலெய்டா குவேரா அவர்களும் ஒரு மருத்துவர் - குழந்தை மருத்துவ வல்லுநர் - ஒரு சமூகப் போராளி. ஒரு பெண்ணிய - பெண் விடுதலைப் போராளி. மக்கள் அதிகாரமே மகத்தானது என்பதை அடிப்படையாக வைத்து சமத்துவம், சம வாய்ப்பினை உருவாக்கிட பாடுபட்டு வருகின்றார். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று பாடுபட்டு வருகிறார். அப்படிப்பட்ட பெண் போராளி - பெண்ணியப் போராளி அலெய்டா குவேரா அவர்களுக்கு நாம் தரும் ஆதரவு முழக்கம் 'வெற்றியை நோக்கிப் பயணியுங்கள்' என்பதே. இவ்வாறு அலெய்டா குவேரா பற்றி  எம்.ஏ. பேபி அறிமுகம் செய்தார்.

(தமிழர் தலைவரின் தொடக்க - பாராட்டுரை தனியே காண்க).

கவிஞர் கனிமொழி உரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்கள்  ஆற்றிய உரையின் சுருக்கம்:

நான் எப்பொழுதும் ஆசிரியர் அய்யா அவர்களைப் பின்பற்றி வந்துள்ளேன். இந்த நிகழ்ச்சியிலும் ஆசிரியருக்கு அடுத்து, அவரைத் தொடர்ந்து பாராட்டுரை வழங்கிட வாய்ப்பளித்ததற்கு எனது நன்றியினைத்தெரிவித்துக் கொள்கிறேன். 

புத்தகம், படங்கள் ஆகியவற்றில் மட்டுமே பார்த்துப் படிக்கப்பட்ட புரட்சியாளர் சேகுவேரா அவர்களை - அவரது சாயல் உள்ள அன்புப் புதல்வியார் மருத்துவர் அலெய்டா குவேரா அவர்கள் மூலம் பார்க் கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக் கிறது. புரட்சியின் வெற்றியை பறைச £ற்றிடும் நாடு கியூபா, சிறிய தீவு நாடாக இருந்தாலும் அந்த மக்களி டையே கொள்கை அளவில் தெரியும் மொழி ஒரே மொழி 'மனிதநேயம்' மட்டுமே.

அதிக அளவில் மருத்துவர் எண் ணிக்கை, நாட்டுமக்களுக்கு நிறைந்த மருத்துவ சேவை வழங்கிடும் நாடு கியூபா. இருப்பினும் கியூபா நாட்டு நிலைமையை ஒரு சமயம் அலெய்டா குவேரா குறிப்பிட்டார். மருத்துவ சேவைகள் வழங்கிடும் அடிப்படை வசதிகள் கியூபாவில் நிலவினாலும் உடல் நலத்திற்கான மருந்துகள் வெளி நாடுகளிலிருந்து தான் - குறிப்பாக அமெரிக்காவிலிருந்துதான் வர வேண்டும். வர வேண்டிய மருந்து வராததால் மருத்துவர் இருந்தும், மருத்துவ சேவை இருந்தும் மர ணத்தைத் தழுவிய குழந்தைகள் ஏராளம் என்பதே அலெய்டா கூறியது. அந்நிலை நீங்கிட உலக நாடுகள் ஆதரவுக் குரல், கரம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும்     NEET ('நீட்') தேர்வுவிலக்கு மட்டும் கிடைத்து விட்டால் கியூபாவில் உள்ளதைப் போல பரந்துபட்ட மருத்துவ சேவை வழங்கிட முடியும்.  ழிணிணிஜி  மூலம் தடை உள்ள நிலையிலும், 'இல்லம் தேடி மருத்துவம்" சேவை வழங்கப் பட்டு வருகிறது. புரட்சியின் பலன் முழுமையாகக் கியூபாவில் கிடைப்ப தற்கு அலெய்டா குவேரா எடுத்து வரும் முன்னெடுப்புகள் - முயற்சிகள் வென்றிட நாமெல்லாம் உறுதுணை யாக இருப்போம் என கூறி அவர் களை வரவேற்று பாராட்டி அமர் கின்றேன்.

இவ்வாறு கவிஞர் கனிமொழி தமது உரையில் குறிப்பிட்டார்.

எழுச்சித் தமிழர் 

தொல். திருமாவளவன் உரை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்  - தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

மொழி, மதம், இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து உலகப் பார்வையுடன் வாழ்ந்த புரட்சியாளர் சேகுவேரா உலகில் எந்தப் பகுதியில் ஆதிக்க சக்திகளால் அல்லல்படும் மக்கள் இருக்கிறார்களோ அவர்களுக் கெல்லாம் தோழனாக விளங்கினார்.  அலெய்டா குவேரா அவர்களைப் பார்க்கும்பொழுது - சேகுவேரா அவர்களே நேரில் வந்தது போல - அவரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது.

ஏகாதிபத்தியம் என்பது முதலா ளித்துவம் சார்ந்தது மட்டுமல்ல; மத அடிப்படையிலான ஆதிக்கமும்  - ஒரு வகையான ஏகாதிபத்தியமே! சேகுவேராவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இந்த மண்ணில் சனாதன எதிர்ப்பு என்பதாகவே கருதப்பட வேண்டும். அல்லல்படும் மக்களுக்கு ஆதரவாகவே  இருந் திருப்பார் சேகுவேரா. அவர் வாழ்ந்த காலத்தில் ஈழப்போர் நடைபெற்றி ருந்தால் ஈழ விடுதலை கிடைத் திருக்கும். கியூபா புரட்சியை முடித்து விட்டு பொலிவியா நாட்டிற்குச் சென்றதைப் போல, பல நாடுகளுக்கும் - ஆதிக்க சக்திகளால் அடக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சேகுவேரா குரல் எழுப்பியிருப்பார். காலம் அவரை விட்டு வைக்கவில்லை என ஏகாதிபத்திய சக்திகள் திசை திருப்பிட முனைந்தார்கள். அவரது  வேறுபட்ட அணுகுமுறை, சோசலிச கொள்கை மீதான பற்று உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணர்வினை - எழுச்சியினை ஊட்டிட வேண்டும் எனக் கூறி, அவரது அருமை மகள் மருத்துவர் அலெய்டா குவேரா அவர்களை பாராட்டி மகிழ்கிறேன்.

இவ்வாறு எழுச்சித் தமிழர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

தலைவர்களின் பலரது பாராட்டு களுக்குப் பின்னர் மருத்துவர் அலெய்டா குவேரா உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நன்றி உரையினை ஆறுமுக நயினார் வழங்கினார். 

பல கட்சியினரும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பல தரப்பினரும் உணர்ச்சிப் பெருக்குடன் அலெய்டா குவேரா அவர்களைக் காண பெருந் திரளாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

திராவிடர் கழகத்தின் சார்பாக துணைத் தலைவர், கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. கும ரேசன், சென்னை மண்டல செயலா ளர் தெ.செ. கோபால்,  அமைப்பாளர் சண்முகப்பிரியன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ. சுரேஷ் மற்றும் பல தோழர்கள் பங் கேற்றனர். சமூகநீதிக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்தரநாத், டாக்டர் சாந்தி மற்றும் பல ஆர்வலர்கள் பாராட்டு நிகழ் விற்கு வருகை தந்திருந்தனர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அலெய்டா குவேரா

தனது பண்பாட்டு அடையாளம்பற்றி

"ஒரு முதலாளித்துவ சாம்ராஜ்யத்திற்குப் பக்கத் தில் இருந்து கொண்டு, சோஷலிசப் புரட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள பன்னாட்டு அளவில் புகழ் பெற்ற கரீபியன் பகுதியில் உள்ள ஒரு தீவில் (கியூபா) இருந்து  நான் வருகிறேன். கருப்பின மக்களோடு, ஸ்பானிஷ் மிகச் சிறிய அளவில் பூர்வ குடிகள், சிறிது சீனர்கள் இணைந்த கலவையாக விளங்கும் 'கரீபியன் கலாச்சாரம்' என்னுடையது."

(தனது பன்மைத்துவ பண்பாட்டுத் தன்மை பற்றி அலெய்டா குவேரா கூறியது - கியூபா போன்ற மிகச் சிறிய, ஆனால் மிகப் பெரிய கொள்கைப் பலம் வாய்ந்த நாட்டில் உள்ள 'பண்பாட்டு' நிலையாகும். பன்மைத்துவம் கலந்த பண்பாட்டிலும், ஒருமைப் பாடு காட்டி வருகின்றனர்).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக