வெள்ளி, 12 மே, 2017

அயர்லாந்தில் அரசு ஒளிபரப்பில் கடவுளை நோக்கி பிரபல நடிகரின் சரமாரியான கேள்விகள்! மதத் துவேஷம் என்ற புகார் தள்ளுபடி!

பிரிட்டிஷார் போட்ட மதத் துவேஷ  எதிர்ப்பு 295-ஏ சட்டத்தைத் தூக்கி எறிக!அயர்லாந்தில் அரசு ஒளிபரப்பில் பிரபல நடிகர் ஸ்டீபென் ஃப்ரை என்பவர் கடவுளை நோக்கி எழுப்பிய பகுத்தறிவு ரீதியான வினாக்கணைகள் அங்கு மத வாதிகளைப் பதற்றத்திற்கு ஆளாக்கியது. காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது- ஆனால், அந்தப் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், பிரிட்டிஷார் போட்ட - மதத் துவேஷ எதிர்ப்புச் சட்டமான 295-ஏ என்பதை இந்தியாவில் ஏன் இன்னும் வைத்துள்ளீர்கள்? அதனைத் தூக்கி எறிய வேண்டாமா? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:

அயர்லாந்தின் பிரபலமான நடிகர் ஸ்டீபென் ஃப்ரை (Stephen Fry) என்ற 59 வயது நிறைந்த நடிகர்.

அய்ர்லாந்து நாட்டின் அரசு ஒளிபரப்பான RTE (2015) என்பதில் இந்த பிரபல நடிகர் ‘வாழ்க்கையின் பொருள்’ (The Meaning of Life) என்ற தலைப்பில் இக்காட்சியை நடத்தி ஒளிபரப்பினார். இதற்கு ஆன செலவை கே பைரன் (Gay Byrne) என்பவர் ஏற்றுக் கொண்டார்!

‘‘ஒரு கண்ணாடி வழியே காணும் எதிர் பாராதவை’’ (‘The Alice Through the Looking Glass’) என்று அந்நடிகர் கடவுள்பற்றிக் கடு மையாக விமர்சனம் செய்தார் - அக்காட்சியில்!

கடவுளை நோக்கி 
நறுக்குத் தெறித்த வினாக்கள்!

‘‘சொர்க்கத்தின் கதவுகளுக்குமுன் நிற்க வைக்கப்பட்டுள்ளீர்கள் நீங்கள். அப்போது கடவுளைப் பார்த்து நீங்கள் என்ன கூறுவீர்கள்?’’ என்று ஒரு கேள்வி இந்த நடிகர் ஏற்ற பாத் திரத்தை நோக்கிக் கேட்கப்படுகிறது!

ஸ்டீபன் பிரை என்ற  அந்த பிரபல நடிகர் அவருக்கே உரித்தான முறையில் தனித் தன்மையோடு - சொன்னார் (அக்காட்சியில்).
‘‘எதற்காக கடவுளே நீங்கள் ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தைகளுக்கு எலும்புப் புற்றுநோயைத் தந்தீர்கள்? எவ்வளவு அகங் காரம் (அழுக்கு மனம்) உங்களுக்கு இருந்தால் இப்படி செய்வீர்கள்? அக்குழந்தை செய்த தவறு என்ன? பாவம் என்ன?’’

‘‘மக்களாகிய எங்கள் தவறு என்று ஏதும் சொல்ல முடியாத நிலையில், இந்த உலகில் ஏன் துன்பத்தை நிறையவே படைத்தீர்கள்?’’
‘‘இது சரியல்ல. இது முழுக்க முழுக்க பெரும் தீமையான செயல் அல்லவா?’’

‘‘நான் ஏன் ஒரு நிலையில்லா மனமுள்ள - அற்பத்தனமான - முட்டாள் கடவுளை அதுவும் அநீதியும், வஞ்சமும், துன்பமும் நிறைந்த உலகத்தைப் படைத்த கடவுளாகிய உன்னை ஏன் மதிக்கவேண்டும்?’’

என்று பொரிந்து தள்ளும் காட்சி பார்வை யாளர்களான மக்களைப் பெரிதும் ஈர்த்த காட்சிகளாகியது!

மத விரோதப் புகார் தள்ளுபடி!

இதற்காக அந்நாட்டு காவல்துறையிடம் மதத் துவேஷத்தை (Blasphemy), மத விரோத கருத்தைத் தூண்டி விடுகிறார் என்று இவர்மீது புகார் கொடுக்கப்பட்டது.

இந்தக் கூற்று ஒன்றும் மத விரோதத்தையோ, மதத் துவேஷத்தையோ பரப்புவதாக இல்லை என்று கூறி, அயர்லாந்து காவல்துறை இந்தப் புகாரை தள்ளுபடி செய்துவிட்டது.

-மேற்காட்டிய கேள்விகளை 200 ஆண்டு களுக்கு முன்பே அமெரிக்காவில் இங்கர்சாலும், பிரிட்டனில் பெர்னாட்ஷாவும், பெர்ட்ரண்ட் ரசலும் எழுப்பிப் பிரச்சாரம் செய்தனர்!

அந்நாட்டு கிறித்துவ மதவாதிகள் (வெள் ளைக்காரர்) தங்கள் மதங்களின் ஆபாசங்களை வெளியே கொண்டுவராமல் தடுக்க அரசின் அதிகாரத்தின்கீழ் Blasphemy Laws’ மத விரோத துவேஷ பரப்புதலை - குற்றமாக்கினர்!

இது ஒரு மனித கருத்து சுதந்திர பறிப்பில் தலையாயது!

பிரிட்டிஷ் அரசு போட்ட சட்டம் 
இன்னும் ஏன்?

பிரிட்டிஷ் அரசு புகுத்திய இந்தியன் பீனல் கோட் என்ற இந்திய குற்றவியல் சட்டத்தில் 295-ஏ மதத்தைப்பற்றிப் பேசினால், மனம் புண்படும்  என்ற செல்லரித்த சட்டப் பிரிவை தூக்கி வீசாமல் இருப்பது ஏன்? பிரிட்டிஷ் அரசிடமிருந்து ‘‘சுதந்திரம்‘’ பெற்ற நாடாகக் கூறப்படும் நமது இந்திய நாட்டிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகாவது இது எப்படிப்பட்ட சட்டம் என்பதை எண்ணிப் பார்த்து தூக்கி வீசிடவேண்டாமா? இப்படி வெள்ளைக்கார ஆதிபத்தியத்தின் கருப்புச் சட்டங்கள் நீடிக்கப்படலாமா?

பின் என்ன சுதந்திரம் - வெங்காயம்!!

மதம் கூறுவது பிரபஞ்ச உற்பத்திக்கு விஞ்ஞானத்தால் ஏற்க முடியுமா?

சென்னை                                                                                         தலைவர் 
12.5.2017                                                                                   திராவிடர் கழகம்.

செவ்வாய், 9 மே, 2017

உலகமயம் ஆகிறார் பெரியார்! ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு!

மஞ்சை வசந்தன்
இந்தியாவைப் பொருத்தவரை தமிழர்கள் மட்டுமே பரவி வாழ்ந்த காலத்தில் இங்கு கடவுள் நம்பிக்கையென்பதோ, மூடநம்பிக்கை-யென்பதோ அறவே இல்லை. நன்றியின்-பாற்பட்ட வழிபாடு மட்டுமே இருந்தது.

ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் ஊடுருவிய-பின், சிறுபான்மையினரான அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும், தங்களுக்கு வருவாய் தேடிக்கொள்ளவும், பல்வேறு மூடச் சடங்குகளை நுழைத்து கடவுள்களையும், புராணங்களையும் கற்பித்து, விழாக்கள், பூசைகள், ஆரவாரங்கள் நிகழ்த்தி மக்களை கடவுள் நம்பிக்கையின்பாற் கவர்ந்தனர்.

காலம்காலமாக கடவுள் மறுப்புக் கொள்கைகள் பலரால் பரப்பப்பட்டாலும் அவற்றால் மிகப்பெரிய விளைவுகள் உருவாகவில்லை. ஆனால், தந்தை பெரியாரின் இடைவிடா பிரச்சாரத்தின் விளைவாய் கடவுள் என்ற கற்பனை தகர்க்கப்பட்டது. பட்டை நாமம், கடவுள் பெயர் சூடல் என்ற நிலை முற்றாக மாறி கடவுள் சார்ந்த செயல்பாடுகள் கேலிக்குரியவையாக மாறின.

தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பை தனது முதன்மைக் கொள்கையாகக் கொள்ளவில்லை. அவரது முதன்மைக் கொள்கை சுயமரியாதை. கடவுள், மதம், சாஸ்திரங்கள் பெயரால் மக்களைப் பிறவியால் பேதம் கற்பித்து, உயர்வு_தாழ்வு கற்பித்து, பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தி, மான உணர்ச்சியற்றவர்களாக ஆரியப் பார்ப்பனர்கள் ஆக்கினர். இச்சூழ்ச்சியை, தந்தை பெரியார் முறியடித்து, தன்மான உணர்ச்சியை நாள்தோறும் ஊட்டி, சட்டரீதியாகவும், வாழ்க்கைமுறை மாற்றத்தாலும், ஆரிய பார்ப்பனர் ஆதிக்கத்தை அகற்றினார்.

பெரியார் ஊட்டிய சுயமரியாதை உணர்வு உலக அளவில் தனிச்சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் பொருளாதாரம் சார்ந்து போராடிக் கொண்டிருந்த வேளையில், அதனினும் மனிதனுக்கு சுயமரியாதையே முக்கியம் என்ற சூடான உணர்வை உருவாக்கினார். இச்சுயமரி-யாதைச் சூடு இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்டதோடு, மெல்ல மெல்ல அயல்நாடுகளுக்கும் பரவி, இன்று பெரியார் உலகமயமாகி உணர்சி ஊட்டிக்-கொண்டிருக்கிறார்.

கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது சுயமரியாதை உணர்வின் ஓர் அங்கமே ஆகும்.

பகுத்தறிவுள்ள மனிதனை கல்லும், சிலையும் மதமும், மூடநம்பிக்கையும் ஆதிக்கம் செலுத்தினால் _ அவனது செயல்பாட்டை தீர்மானித்தால், அது அவனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்தானே? எனவே, ஆதிக்கவாதி களிடமிருந்து விடுபடுவது போலவே, இவற்றிட மிருந்தும் விடுபடுவதும் சுயமரியாதை உணர்வினை அடிப்படையாகக் கொண்டதே யாகும். இன்று பெரியாரின் சிந்தனைகள் உலக அளவில் பெருமளவில் பரவி வருகின்றன.

இந்தியாவை தவிர்த்து, வளர்ச்சி பெற்ற நாடுகளைக் கணக்கில் கொண்டால்,

60%க்கும் மேலான மக்கள் கடவுளையும், மதத்தையும் மறுக்கின்ற உண்மை நிலை ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த நாத்திகர்களின் பேரணி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் ஏற்பாடு செய்த, மதநம்பிக்கை அற்றவர்கள் ஒன்று கூடி நடத்திய மாபெரும் பேரணி ஒன்று லிங்கன் மெமோரியலிலிருந்து புறப்பட்டது.

இந்த பேரணியில் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் இருந்து 30,000 ஆயிரத்திற்குமேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசியலில் மதம் நுழைவதை கண்டித்தும், அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் நபர் மதச்சார்பற்ற கொள்கைகளை கடைபிடிப்பவராகவும் இருக்கவேண்டும் என்று முழக்கங்கள் இட்டனர். உலகம் முழுவதும் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது, முக்கியமாக மதசார்பற்ற கொள்கைகள் படித்தவர்களிடையே விவாதத்திற்குரிய கருத்தாக இருந்து வருகிறது, இந்த நிலையில் தற்போது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் மதரீதியான தாக்குதல்களும் மதத்தின் பெயரால் வன்முறைகளும் நடந்து வருகின்றன.  அன்பை போதிக்கும் மதங்கள் என்று கூறிக்கொண்டு அந்த மதத்தின் பெயரால் உயிர்பலிகள் நடைபெறுகின்றன. இதனை கண்டிக்கும் விதத்திலும், மதங்களால் வன்முறைகள் தான் அதிகரிக்கின்றன என்ற ஒரு கருத்தை முன்வைத்தும் நாத்திகர்கள் பேரணி அமெரிக்காவில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட அனைவரும் தாங்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை, என்றும் தங்களுக்கு கடவுள் மற்றும் மூடநம்பிக்கையின் மீது நம்பிக்கை இல்லை என்றும் கையொப்ப மிட்டுள்ளனர்.

இது குறித்து மதச்சார்பற்ற கூட்டமைப்பு-களின் ஒருங்கினைப்பாளர் லாரி டெக்கர் கூறியதாவது இந்தப் பேரணியில் அமெரிக்க நாடாளுமன்றக் காங்கிரஸ் அவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் மூலம் அமெரிக்க அரசியலிலும் மதச்சார்பின்மை மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்-துள்ளது, இது நல்ல மாற்றமாகும்.

அமெரிக்காவில் 60 விழுக்காடு மக்கள் நாத்திகத்திற்கு ஆதரவு தரும் அதிபரையே விரும்புகின்றனர். அமெரிக்கவின் நவீன காலத் துவக்கத்தில் மிகவும் சிறிய அளவு நாத்திகர்களின் எண்ணிக்கை இருந்தது, அந்தச் சிறிய அளவு நாத்திகர்களின் கருத்துக் கண்ணோட்டத்தின் மூலம் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாகின. தற்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் சுருங்கிவிட்டது, தற்போது அமெரிக்காவில் படித்தவர்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைப் பணியில் மதங்களை ஒதுக்கிவைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டெக்கர் என்பவர் கூறும்போது நான் பிற மதத்தவரிடம் பழகுவதை விட மதநம்பிக்கை இல்லாதவர்களிடம் நட்புகொள்ளும் போது ஓர் உளம் சார்ந்த நட்பை உணர்கிறேன். இதுதான் உண்மையும் கூட, ஒரு மத நம்பிக்கை-யுள்ளவர்கள் வேறு மத நம்பிக்கை கொண்டவர்களை நன்பர்களாக பெறும் போது ஏதாவது ஒரு வகையில் இருவருக்குமிடையே ஒரு மாற்றுக்கருத்து ஏற்படும். இது நட்பை சீர்குலைத்துவிடும் அளவிற்கு அதிகரித்து-விடுகிறது, ஆனால் மதநம்பிக்கையற்றவர்-களுடன் பழகும் போது இந்தச் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை,  அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் தீவிர மதநம்பிக்கை கொண்ட அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியைச் சந்தித்து வெளியேறியிருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களுள் சிலர் சண்டெட் குரூஸ், ஒஹியோ கவர்னர் ஜான் காசிச், போன்றவர்களைக் கூறலாம். இதில் ஜான் காசிச் தனது தேர்தல் தோல்வி குறித்து பேசும் போது தான் அதிபராக வருவது கடவுளுக்கு பொறுக்கவில்லை என்று கூறினார். அந்த அளவிற்கு அவர் கடவுள் நம்பிக்கையுள்ளவராக இருந்தார்.

(‘வாஷிங்டன் போஸ்ட்’ சிஎன்என், 05.06.2016)

பிரிட்டனில் அதிகரித்து வரும் நாத்திகர்களின் எண்ணிக்கை

பிரிட்டனில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாங்கள் நாத்திகர்கள் என்று குறிப்பிட்ட மக்கள் எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டு 48 -விழுக்காடாக இருந்து அய்ந்து ஆண்டுகளில் மிகவும் அதிகமான எண்ணிக்கையை தொட்டுள்ளது.

அதே நேரத்தில் தீவிர மதப்பற்றுள்ளவர் களின் எண்ணிக்கை தேவாலய நிர்வாகமே கவலைகொள்ளும் அளவிற்கு குறைந்துவிட்டது.

இங்கிலாந்து மக்கள் தொகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், மற்றும் கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு உள்பிரிவைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.  முக்கியமாக பழமைவாத கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தென் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் தீவிர மதபற்றுள்ளவர்-களாக இருந்த நிலை மாறிவிட்டது.

நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பது தொடர்பாக இங்கிலாந்தின் டுவக்கென்ஹம் நகரில் உள்ள  செயிண்ட் மேரி காத்தோலிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர் ஸ்டீபன் புல்வண்ட் கூறியதாவது, வளரும் தலைமுறை மிகவும் தெளிவான சிந்தனையில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அறிவியல் சிந்தனை மதநம்பிக்கையை உடைத்தெறிந்து விட்டது. இதனால் தான் இளைய தலைமுறையினர் அதிக அளவு நாத்திகர்கள் என்று கருத்து-தெரிவித்துள்ளனர்.

மதம் எந்த வகையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது என்று இளையதலைமுறை தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொள்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் மதங்களின் பெயரால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை மற்றும் மூடத்தனமான செயல்பாடுகள் ஆகும்.

இங்கிலாந்து மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து நாட்டில் 52 விழுக்காடு மக்கள் மதநம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர். இப்பகுதிகள் 1999 ஆம் ஆண்டு 49 விழுக்காடு மக்கள் நாத்திகர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். பழமைவாத மதக் கோட்பாடுகளை கடுமையாக கடைபிடிக்கும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் நாத்திகர்-களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கிலாந்து கத்தோலிக்க மதப்பிரிவைச் சேர்ந்த மதகுருமார்கள் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்துப் பேசும் போது கடந்த சில ஆண்டுகளில் தேவாலயத்-திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது,. முக்கியமாக வருகைப் பதிவேடுகள் பெரும்பாலான நாட்களில் ஒரு பக்கங்கள் கூட நிரம்புவ-தில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்க மத தேவாலயங்களும், பிற மதவழிபாட்டுத்தலங்களும் மக்களின்வருகை குறைந்தது குறித்து கவலை தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தில் மதநம்பிக்கை உள்ள இளைய தலைமுறையினரில் பத்து பேரில் 4 பேர் மதரீதியான நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இனிவரும் காலத்தில் இவர்களும் நாத்திகர்களாக தங்களை அடையாளப்-படுத்திக்கொள்வார்கள். இங்கிலாந்தில் உள்ள தேவாலயங்கள் இளைய தலைமுறைகளை தேவாலயத்திற்கு அழைத்து வர பெரும்பாடு படுகின்றனர். அப்படியே வரும் இளைய தலைமுறைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பும்போது அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிவருகின்றனர்.  பழமைவாதத்தில் ஊறிப்போன பூர்வீக ஆங்கிலேயர்களிலும் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் கிறிஸ்தவம் மற்றும் இந்து, இஸ்லாம் இதர மதத்தினரிடம் கடவுள் நம்பிக்கை அதிரடியாக குறைந்து வருகிறது, முக்கியமாக இக்கணக்கெடுப்பு அனைத்து மதத்தினரும் அந்த மதத்தின் நம்பிக்கையை இழந்து வருவதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

(‘தி கார்டியன்’, 23.05.2016)
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்

48.5% மக்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தங்களை மதம் அற்றவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்து

52% மக்கள் தங்களை மதமற்றவர்களாக அறிவித்துள்ளனர்.

செக் குடியரசு:

யு.எஸ்.எஸ்.ஆர் எனும் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்துள்ள நாடான செக் குடியரசு அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் அதிக விழுக்காட்டளவில் நாத்திகர்களைக் கொண்டுள்ளது. 45 விழுக்காட்டினர் தாங்களாகவே நாத்திகர்களாக இருந்து-வந்துள்ள-தாகவும், 30 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் தற்போது நாத்திகர்களாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகமொத்தம் 75% நாத்திகர்கள்.

ஜப்பான்:

பழைமைகள் மற்றும் மதச்சடங்குகளை ஒதுக்கிவிட்டு இருப்பவர்களாக 25 விழுக்காட்டினரும், மேலான சக்தி என ஒன்றும் நம்புவதற்கில்லை என்கிற அளவில் 31 விழுக்காட்டினரும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெர்மனி:

ஜெர்மனி நாட்டில் 60 விழுக்காட்டினர் தங்களை நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இசுரேல்:

இசுரேலியர்களில் 57 விழுக்காட்டினர் தங்களை மதமற்றவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் நம்பிக்கையிலிருந்து நாத்திகர்களாக 8 விழுக்காட்டினர் மாறி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நார்வே

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவிலான மாற்றத்தை காண முடிகிறது. இரண்டு ஆண்டு களுக்கு முன்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் களும் சம அளவிலான எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால், தற்போது கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

உலகில் முதல் நாத்திக ஆய்வு இருக்கை!

அமெரிக்க நாட்டில் மதத்தினை புறந்தள்ளும் போக்கு அதிகரித்துவரும் நிலையில் மியாமி பல்கலைக்கழகம் ஓர் உயராய்வு இருக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் புளோரிடாவில் வசித்து வரும் 83 வயதினை எட்டியுள்ள ஓய்வு பெற்ற வணிகரும், பார்பிசன் பன்னாட்டு மாதிரிப் பள்ளியின் மேனாள் தலைவரும், சீரிய நாத்திகருமான லூயிஸ் ஜே அப்பிக்னானி கொடையாக அளித்த 2.2. மில்லியன் டாலர் நிதி ஆதாரத்துடன் நாத்திக உயராய்வு இருக்கை நிறுவப்பட்டுள்ளது

மியாமி பல்கலைக்கழகம் எடுத்திட்ட ஒரு துணிச்சலான செயல் என, கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (ஜிலீமீ நிஷீபீ ஞிமீறீusவீஷீஸீ) நூலாசிரியரும், பரிணாமவியல் உயிரியலாளரும், நாத்திகப் பெருந்தகையுமான ரிச்சர்டு டாக்கின்ஸ் பாராட்டியுள்ளார். மற்ற பல்கலைக்கழகங்களும் இப்படி நாத்திகப் படிப்பை அளித்திட முன்வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

(‘தி நியூயார்க் டைம்ஸ்’, 30.05.2016)

ஆக, உலகின் பல நாடுகளிலும் மதமற்றோர் எண்ணிக்கையும், கடவுள் மறுப்பாளர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வுகளின் மூலம் அய்யத்திற்கு இடமின்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை பெரியாரின் கொள்கைக்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இவற்றிற்குச் சிகரம் வைத்தாற்போல் ஜெர்மனியில் நடக்க இருக்கும் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு அமைய இருக்கிறது.

ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு

ஜூலை 27, 28 & 29 - 2017 ஆகிய நாள்களில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

இது பன்னாட்டளவில் நடைபெறவுள்ள முதல் சுயமரியாதை மாநாடு ஆகும்.

அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஏற்பாட்டில், ஜெர்மனி நாட்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் கிளையும், தஞ்சை_வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் இணைந்து மாநாட்டினை நடத்துகின்றனர்.

உலகின் பல நாடுகளிலிருந்தும் _ குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள், மனித நேயர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் தனிப்பட்ட முறையிலும், அமைப்பின் சார்பாகவும் பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து கருப்புச்சட்டைத் தோழர்கள், திராவிடர் கழகத்தின் சார்பாகத் தங்களது சொந்த செலவில் பங்கேற்க உள்ளனர்.

மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முதல் நாள் பிற்பகலில் மாநாட்டு தொடக்க விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. ஜெர்மன் நாட்டு பகுத்தறிவு அரசியலாளர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர் மாநாட்டினைத் தொடங்கி வைத்திட உள்ளனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்றிட உள்ளார்.

இரண்டாம் நாள் மாநாட்டில் ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களி லிருந்து கல்வியாளர்கள் பங்கேற்கும் முழுமையான நிகழ்வு. பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், ஜாதி ஒழிப்பும், பெரியாரும் மகளிர் அதிகாரத்துவமயமும் (ணினீஜீஷீஷ்மீக்ஷீனீமீஸீt), பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெரியார் உலகமயமாக்கம் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள், கல்வியாளர்களால் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாம் நாள் உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தரவுள்ள பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் “பெரியார் நிறுவி 90-_ஆம் ஆண்டு நிறைவு பெற்றுள்ள சுயமரியாதை இயக்கம் பற்றிய ஆய்வுகள், விளக்கங்கள், கலந்துரையாடல்கள் மேற்கொள்ள உள்ளனர்.

பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு, உலகமயமாகிவரும் பெரியாரை, உலகின் பல பாகங்களுக்கும் கொண்டுசேர்க்கும் சாதனையை நிகழ்த்தும். அதற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன.

பன்னாட்டு மாநாட்டு ஏற்பாடுகளை அமெரிக்காவிலிருந்து பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் மற்றும் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் ஆகியோர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் செய்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸையே  ஆட்கொண்ட
பெரியாரின் சுயமரியாதை!

வளர்ச்சிக் கவர்ச்சியில் ஆட்சியைக் கைப்பற்றிய மதவாதக் கட்சியால், இந்தியாவில் தற்போது சுயமரியாதை உணர்விற்கு சவால் எழுந்தாலும், அந்த மயக்கம் விரைவில் தெளிய, பெரியார் விரும்பிய மானமும், அறிவும் உள்ள சமுதாயம் மலரும் என்பது உறுதி. இதனை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேட்டியே உறுதிசெய்கிறது.

“ஹிந்து சமுதாயத்திலிருந்து விலகி நின்று, ஹிந்து என்று பேச்செடுத்தாலே ஒதுங்கி விடுகிற பிரிவினரை, தொடர்பு கொள்ளும் முயற்சி செய்தோம். விஷயங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைத்து, ஷாகாவிற்கு வரச்செய்ய முயற்சி நடைபெற்றது. அதன் விளைவாக அவர்களது சுயமரியாதைக்கான போராட்டத்தில் ஹிந்து ஒற்றமைப் பணி புரிவோரின் சக்தியும் ஆங்காங்கே சேர்ந்து கொண்டது.

தனிப்பட்ட முறையிலும், குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும், ஊருக்குள்ளும் எல்லா பேதங்களையும் ஒதுக்கிவிட்டு பழகுவது, பேச்சிலும் நடத்தையிலும் நம்மை மாற்றிக்கொள்வது அவசியம்.

பழைய ஏற்றத்தாழ்வை உதறி, சமத்துவத்துக்கு உகந்ததாக நமது நடத்தை உள்ளதா என்று ஊரார் சோதித்துப் பார்ப்பார்கள். குறிப்பாக, யாரை சங்கப் பணியில் இணைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ அப்படிப்பட்டவர்கள் சோதிப்பார்கள். சகஜமாகப் பழகும்போதுகூட நம்மை நன்கு திருத்திக் கொள்ள பழக வேண்டும்.

கலப்புத் திருமணம் பற்றிய பேச்சு. அதை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஸ்வயம் சேவகர்கள் கலப்புத் திருமணத்தை ஆதரிப்பவர்கள் என்ற எண்ணம் ஊரார் மனதில் பதிய வேண்டும்.’’

இது தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் கவர்ச்சியான மோசடிப் பேச்சு என்றாலும், தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே ஏற்கும் கட்டாயம் வந்துவிட்டதை இது காட்டுகிறது.
ஆதாரம்: 14.4.2017 விஜயபாரதம் பக்.13

பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு பற்றிய மேலும் விபரங்களை www.periyarinternational.com/selfrespectconf  இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்

-உண்மை இதழ்,16-30.4.17

புதன், 3 மே, 2017

புரட்சிக் கவிஞரின் பகுத்தறிவு முழக்கம்!
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத எதுவும், தனிநபருக்கோ, சமுதாயத்துக்கோ முட்டுக்கட்டையாக இருந்து முன்னேற்றத்தை - வளர்ச்சியைத் தடுக்கும் எதுவும், கேள்விக்கு உட்படுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே ஏற்றுக்கொள்கிற எதுவும், பரிசீ லித்துப் பார்க்காமல், அலசி ஆராயாமல் அப் படியே ஒப்புக்கொள்ளும் எதுவும் மூடநம்பிக் கைகளே! மடமைச்செயல்களே! மட்டித்தனங் களே!

மனித சமுதாயம் மேதமையோடு வாழத் தானே பகுத்தறிவு! எதையும் ஏன்? எதற்காக? எப்படி? என்று கேள்விகேட்டு தெளிந்த பார்வையோடு ஒன்றை ஏற்றுக்கொள்வதுதானே அறிவுடைமை! அன்று தொட்டு இன்று வரை ஏன் மக்கள் மூடவியாபாரிகளிடம் சரணடை கிறார்கள்? முடைநாற்றம் வீசும் மடமைக் கருத் துக்கள் பால் தலைசாய்க்கிறார்கள்? மூடநம்பிக் கைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக ‘கடவுள்’ என்னும் கருத்து இருப்பதால்தான். கடவுள் என்ற ஆணிவேரை வெட்டி அகற்றிப் போடாமல் மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது சாத்தியமாகாது. அதனால்தான் தத்துவப் பேராசான் ‘கடவுள் இல்லை’ ‘இல்லவே இல்லை’ என்றது.... மூடநம்பிக்கை கிளைகளை எத்தனை முறை வெட்டிவெட்டிப் போட்டாலும் மீண்டும் அவை துளிர்க்கவே செய்யும். மூடநம்பிக்கை களின் அடிப்படையான கடவுளை எதிர்த்து கடைசி காலம் வரை தந்தை பெரியார் சமர் செய்தது அதனால்தான்!

மூடநம்பிக்கை எனும் தொற்று நோயை பரவவிடாமல் அழித்தொழிக்க வேண்டும். மடமை இருளிலிருந்து மக்களை வெளிச்சத்துக்கு மடைமாற்றம் செய்தாக வேண்டும். மீண்டும் மதக்கருத்துகள் ஏற்படுத்தும் மூடப்புதைகுழியில் அப்பாவி மக்கள் புதைந்து போகாமல் பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கச் செய்ய வேண்டும். மானுடத்தின் மேன்மையை விரும்பும் மனிதர்கள் யாராக இருந்தாலும் அறிவுலக ஆசான் அய்யா பெரியாரின் அடியொற்றி நடைபயில வேண்டும். பாட்டாலே மடமைக்கு வேட்டு வைத்தப் பாவலனாம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்துகளை பின் தொடர்ந்தால் பகுத்தறிவு ஓங்கும் - மனிதநேயம் தழைக்கும்.

சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு. எதனையும் ஆராய்ந்து பார்த்து அறிவின் வழி விடை காண்பதே பகுத்தறிவு. பழமைக்கு விடை கொடுத்து புதுமைக்கு வழிகோலுவதே பகுத்தறிவு. பகுத்தறிவின் முன் மூடநம்பிக்கைகள் முனை மழுங்கி முறிபடும். மனிதகுல ஏற்றத்துக்கும் எழுச்சிக்கும் வித்திடுவது பகுத்தறிவு. பகுத்தறிவு பரவப்பரவ மூடநம்பிக் கைகள் அற்று வீழும் என்பதை புரட்சிக்கவிஞர் தமது பாடல்களில் பல்வேறு இடங்களில் சுட்டுகின்றார். ஒவ்வொரு மாந்தனும் அறிவுவழி நின்று அறிவு வினா தொடுக்கும் நாளை மடமை கிழிக்கும் நாளாக, அறிவை ஊட்டும் நாளாக, மானம் உணரும் நாளாக புரட்சிக்கவிஞர் குறிப்பிடுகின்றார். பகுத்தறிவுச்செயல் பரவுதல் வேண்டும் என்கிறார், மூடச்செயல்கள் முறிபடல் வேண்டும் என்கிறார்.

“பச்சை விளக்காகும் - உன்
பகுத்தறிவு தம்பி
பச்சை விளக்காலே - நல்ல
பாதை பிடி தம்பி” என்று பகுத்தறிவு எனும் பச்சை விளக்கை இளைய தலைமுறை ஏந்திட வேண்டும் என்கிறார்.
நாணு மூடவழக்கம் நாடுதல் பெரிதா?
நல்லறிவென்னும் வழிச்செல்லுதல் பெரிதா?
பாழ்படும் பழமை சூழ்வது திறமா?

பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா? என கேள்வி மேல்  கேள்வி தொடுக்கும் புரட்சிக் கவிஞர் பகுத்தறிவுப் பான்மையைப் போற்று கின்றார். மேலும் கவிஞரின் பாடல் பேசும் பகுத்தறிவின் சிறப்பினைப் பார்க்கலாமா?

“இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!

மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே!

வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்?

சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றைச்

சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை

வெருட்டுவது பகுத்தறிவே”

என்றும் பறைசாற்றுகின்றார்.

வீடின்றி மக்கள் தவிக்கின்றனர்; ஆடையின்றி அலைகின்றனர் பலர்; கல்வியைப் பெற முடியாமல் கலங்குகின்றனர் பலர்; தொழிலும், வாணிபமும் கெட்டு வதைகின்றனர் பலர்; நோய் நொடியால் நொடிகின்றனர் சிலர்; பசியால் பரிதவிக்கின்றனர் பலர். இப்படிப்பட்ட இல்லா மையை, கல்லாமையை, போதாமையை தடுத்து எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கச் செய்திட பக்தர்கள் ஏற்றியும் போற்றியும் தொழுதிடும் கோயிலும், கடவுளும், ஆத்திக வைதீகமும், மந்திரங்களும், குருமார்களும், அவர்தம் உச்சாடனங்களும் என்ன செய்து கிழித்தன என கேட்டு “கடவுள் என்பது இல்லாத ஒன்று” என்பதை நிலைநாட்டுகிறார் புரட்சிக் கவிஞர். தந்தை பெரியார் எழுப்பிய அறிவுக்கணை களையே பகுத்தறிவுப் பாவலரான பாரதிதாசன் தமது பாட்டால் இப்படி விளாசுகிறார்? பதில் சொல்ல அன்று தொட்டு இன்றுவரை பக்த பிரசங்கிகளால் இயலவில்லை என்பதே உண்மை.

“உங்கள் ஆஸ்திகம் உங்கள் வைதீகம்
உங்கள் கடவுள் உங்கள் கோயில்
உங்கள் குருக்கள் உங்கள் அய்யர்
உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம்
உங்கள் யோகம் உங்கள் யாகம்
உங்கள் விரதம் உங்கள் பூசனை
உங்கள் சடங்குகள் உங்கள் மடங்கள்
இவைகள் இதுவரை என்ன செய்தன?
ஆயிரம் ஆண்டாய் அசைத்த தென்ன?
இலட்சம் ஆண்டாய் ஈந்த தென்ன?
ஓர்யுகமாக உருட்டிய தென்ன?
சதுர்யுகமாகச் சாய்த்ததென்ன?
பசியால் மக்கள் பறக்கின்றாரே
நோயால் மக்கள் நொடிகின்றாரே
தொழிலின்றி மக்கள் சோர்கின்றாரே
வாணிபம் கெட்டு வதைகின்றாரே
கல்வியின்றிக் கலங்குகின்றாரே
ஆடையின்றி அலைகின்றாரே
வீடின்றி மக்கள் வெளிக்கின்றாரே”
“கல்வியில்லாத பெண்கள்
களர்நிலம்! அந்நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி, அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவிலவோ நான்?
பெண்கட்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியை பேணுதற்கே!”

(குடும்ப விளக்கு - பாரதிதாசன்)

மானுடம் மேன்மையுற வேண்டுமெனில் பெண்கள் படித்தவர்களாக, விழிப்புணர்ச்சி உள்ளவர்களாக அமைதல் வேண்டும். பெண் ணடிமை ஒழிந்து பெண்ணுரிமை உள்ள சமுதாயமாக ஆக வேண்டும் என்று தான் தந்தை பெரியார் அரும்பாடுபட்டார். மகளிர் உரிமை எனும் தடத்தில் பெரியாரின் பங்களிப்பு மிக உயர்ந்தது. பெரியாரின் வழித்தடத்தில் பாடல்கள் புனைந்த பாவேந்தர் பெண்கல்வியை கொண் டாடினார். பெண்ணடிமை தீருமட்டும் நாட்டின் மண்ணடிமை தீருவது முயற்கொம்பே என்றார். நல்ல விழிப்புணர்ச்சி மிக்க தாயின் வயிற்றில்தான் நல்லறிவுடைய மக்கள் தோன்றுவர் என புரட்சிக் கவிஞர் சொல்லுவதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கல்வியைப் பேணவும், உலகினைப் பேணவும், மக்களைப் பேணவும், குடித்தனம் பேணவும் கல்வி பெண்களுக்கு அவசியம் என்றார் கவிஞர்.

சாணியை எரிபொருளாக பார்ப்பது - பயன் படுத்துவது நல்ல நம்பிக்கை. அதே சாணியை சாமியாக ஏற்றுக்கொள்வது மூடநம்பிக்கை. சாணியை, பசுமூத்திரத்தை தயிரோடும், பாலோடும், நெய்யோடும் கலந்து பஞ்சகவ்யமாக பவ்வியத்தோடு சாப்பிடுவதும் மூடநம்பிக்கையே!

அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் “சாணிக்குப் பொட்டிட்டு சாமியென்பார் செய் கைக்கு நாணி கண்ணுறங்கு நகைத்து நீ கண் ணுறங்கு” என்கிறார். பகுத்தறிவு என்பது ஆதாரத் தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள் வது. மடமைத்தான் அச்சத்தின் வேர் என்கிறார் புரட்சிக்கவிஞர். அச்சமும் மடமையும் இல்லாத பெண்களே அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்று பகர்கிறார் புரட்சிக் கவிஞர்.

“உச்சி இருட்டினில் பேய் வந்ததாக
உளறினால் அச்சமா? பேய் என்பதுண்டா?
முச்சந்தி காத்தானும் உண்டா? இதை 
முணுமுணுப்பது நேரில் கண்டா?
கள்ளுண்ணும் ஆத்தாளும் ஏது? - மிகு
கடிசாராய முனி ஏது?
விள்ளும் வைசூரிதான் மாரியாத் தாளாம்
வேளை தோறும் படையல் வேண்டும் என்பாளாம்!”

மடமைக்கு விடை கொடுக்கும் புரட்சிப் பெண்களாக, புதுமைப் பெண்களாக மகளிர்குலம் மாறிட வேண்டும் என்கிறார்.
“உருவிலா ஒன்றுக்குருவமைத்தது

பெரியதோர் மடமை” - என்றும்,
“மடமையை நாட்டில் மலிவு செய்தால்
உடமையை லேசாய் உறிஞ்சலாம் என்பது
பூசாரி எண்ணம்” - என்றும்
“பேடி வழக்கங்கள், மூடத்தனம் - இந்தப்

பீடைகளே இங்கு சாத்திரங்கள்” என்றும் சொன்னதுடன் வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கிடும் மூடப்பழக்கம் எனும் மாடுகளை சீர்திருத்தி வண்டியிலே பூட்டிட இளைய தலை முறைக்கு அழைப்பு விடுக்கும் புரட்சிக்கவிஞர் பெரியார் எனும் உரை நடையின் கவிதை வடிவம்தானே!

“பார்ப்பனன் உயர்வு என்கிறீர்கள், சத்திரி யனை இரண்டாம் என்கிறீர்கள், வைசியர் அவன் அண்டைபடி என்கிறீர்கள், சூத்திரன் கடைசி என்கிறீர்கள். “பஞ்சமன்” என்கிறீர்கள் இன்றைக்கு மாத்திரம் இன்றி இவைகளை உண்டாக்கியதாய்ச் சொல்லும் பிரமன் ஒருவன் இருந்தால் அவன் காலத்திலேயே இவை சுத்தப்பொய் என்பதை சிந்திக்க மறுக்கிறீர்கள். இந்த நிலையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவைகள் உமது இதயத்தில் இடம் பெறுவது எப்படி? என வினா தொடுக்கும் புரட்சிக்கவிஞர் பிரம்மனின் முகத் தில், தோளில், தொடையில், காலில் முறையே பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் எனும் நால்வரும் உருவானதாகக் கூறும் ஆரிய கற்பனையையும் சாடுகிறார்”.

“முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே
தோளில் பிறப்பதுவும் உண்டோ தொழும் பனே
இடையில் பிறப்பதுவும் உண்டோ எருமையே
காலில் பிறப்பதுவும் உண்டோ கழுதையே
நான்முகன் என்பான் உளனோ நாயே
புளுகடா புகன்றவையெலாம் போக்கிலியே”

என்ற புரட்சிக்கவிஞர் தம் பாடலில் இருக்கும் சூட்டை, கோபத்தை, வேகத்தை என்னவென்று சொல்லுவது? சமுதாயத்தின் மீது கவிஞருக்கு இருந்த பற்றுதலே இப்படி அவரை கோபப்பட வைத்தது. பெரியாரின் கொள்கை சாரமே இதற்கு அடிப்படை. தாலாட்டுப்பாடும்போதும் தளரா கொள்கைப் பேசும் புரட்சிக்கவிஞர் - சாதியை, மதத்தை, கடவுளை, தொப்பை வளர்க்கும் பார்ப்பனர் கூட்டத்தை கூட்டி அந்த பொல்லாங்குகளை தவிர்த்திட அறிவுறுத்தும் அழகியலை, பகுத்தறிவு சீர்மையை பாருங்கள்:

“மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற
காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம் விடுவிக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணில் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே!
தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண் குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று தொடை நடுங்கும்
பொல்லாங்குத் தீர்த்துப் புதுமை செய வந்தவளே!
வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயில் என்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே!”

அடடா... அய்யாவின் கருத்தின் பிரதிபலிப்பே புரட்சிக் கவிஞர் என்பதை புலப்படுத்துகிறார். தந்தை பெரியாரின் கொள்கைச் செழிப்பால் எப்படிப்பட்ட நிலைமைகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் பட்டியலிடுகிறார் கவிஞர்.

“வந்தேறிகளால் வாழ்நாள் எல்லாம்
அறியாமை இருட்டில் ஆழ்ந்திய தமிழர்க்கு 
அறிவொளி கூட்டிய அன்புடை பெரியார்
சீர்த்திருத்தத்தால் செம்மை நெறியினை
ஆர்வத்தோடும் மக்கள் அணைக்கையில்
சாதி என்னும் சழக்கு தகர்ந்தது.
சமயம் என்னும் தடைச்சுவர் இடிந்தது
மதத்தின் நரித்தனம் மடிந்தொழிந்தது
இவற்றைத் தாங்கிய என்றும் இலாத
கடவுள் என்னும் கயமையும் மறைந்தது”

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில், பகுத்தறிவுப் பேரியக்கத்தில், திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அறிவுலக ஆசானின் அறிவார்ந்த லட்சியங்களை, புரட்சிகர கருத்துகளை, மனித சமத்துவ கருத்துகளை பாடுவதையே - எழுத்தாக்கி பறை சாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்திட்ட புரட்சிக் கவிஞர் வாழ்க! அவர் எண்ணம் ஈடேற உழைப்போமாக!,விடுதலை,29.4.17

செவ்வாய், 2 மே, 2017

அம்பேத்கர் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு செய்த பணிகள்

அம்பேத்கர் பிறந்த நாளோ, நினைவு நாளோ இல்லையே. மேதினத்திற்கு எதற்கு அம்பேத்கர் படத்தை பதிவிட்டு வாழ்த்து சொல்லவேண்டும் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காகவே, அம்பேத்கர் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு செய்த பணிகளை பட்டியலிடுகின்றோம். கொஞ்சம் கேளுங்கள்...

1. பிரிட்டீஷ் இந்தியாவிலேயே 8 மணிநேர வேலையை முதலில் அரசாணை வர காரணமானவர்.
2. பெண் தொழிலாளர்களுக்கான பேருகால விடுப்பிற்கு காரணமானவர்.
3. இந்தய தொழிலாளர்களுக்கான பி.எஃப். முறைக்கு காரணமானவர்.
4. தொழிலாளர்களுக்கான ESI திட்டத்தை வடிவமைத்துக்கொடுதவர்.
5. தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து பேச இரு தரப்பு பேச்சுவார்த்தையாக இல்லாமல், முத்தரப்பு பேச்சுவார்த்தையாக (அரசையும் உள்ளடிக்கிய) மாற்றியவர்.
6. இன்றைக்கு இந்திய தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கும் சட்டப்பாதுகாப்புகளுக்கு காரணமானவர்.
7. இந்திய விடுதலைக்கு முன்பே "சுதந்திர தொழிலாளர் கட்சி" என்று தொழிலாளர்களுக்காகவே கட்சி தொடங்கியவர்
என்று இன்னும் ஏராளமாக அம்பேத்கர் குறித்து சொல்லலாம்.

ஆங்கிலேய ஆட்சியாளர்களால், அம்பேத்கருக்கு அப்போதிருந்த வைஸ்ராய் கவுன்சிலில் ‘தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக’ 1942ம் ஆண்டு பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவியானது நாடாளுமன்ற அமைச்சருக்குச் சமமான அதிகாரமுள்ள பதவியாகும். இதை பயன்படுத்தி முழுக்க முழுக்க தொழிலாளர் நலன்களுக்காகவே செயல்பட்டார் அம்பேத்கர்.

தொழிலாளர்களுக்கான சட்டங்கள் ஒரே சீராக அமைவதன் அவசியம், காகித கட்டுப்பாட்டு ஆணை, இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா, தேர்ச்சிபெற்ற மற்றும் பகுதி தேர்ச்சிபெற்ற பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு நிலையங்கள், தொழிலாளர்களுக்கு கிராக்கிப்படி வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு, தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நலன்கள் பற்றிய திட்டத்தில் சமூக பாதுகாப்பு, சம்பளம், வாழ்க்கை நலம், மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா, சுரங்க மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா, இந்திய தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா, தொழிற்சாலைகள் (திருத்த) மசோதா, ஆலைத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள், ஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா சுரங்க தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா, தொழிற்சாலைப் பணியாளார் நலக் காப்பீடு இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம், தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா, தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் தொடர்பான விவாதங்களை மத்திய சட்டமன்றத்தில் (தற்போதைய நாடாளுமன்றம்) அன்றே கொண்டு வந்தவர் அம்பேத்கர்.

மேலும் தொழிலாளர்களோடு நெருங்கிய தொடர்பை மேற்கொள்ள, அவர்களது குறைகளைக் கேட்டறிய எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக தீர்வுகளைப் பெற, தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல அதிகாரிகள் நியமிக்கப்படுவது விரும்பத்தக்கது என்று அன்றே மத்திய அமைச்சரவையை பொதுவாக ஒப்புக்கொள்ள வைத்தவர்.

இவர் படத்தை மேதின கொண்டாட்டத்தில் இணைப்பதே தொழிலாளி வர்க்கத்தின் தற்போதைய புரட்சிகர செயலாகும். இதுவே அம்பேத்கரை, "தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்" என்று குறுக்கிப்பார்க்கும் அதிகார வர்க்கத்திற்கு தொழிலாளி வர்க்கம் கொடுக்கும் மேதின பரிசாகும்.