ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

நவம்பர் 16 இல் விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா (50 ஆண்டு) மாபெரும் மாநாடு!

* சமுக ஊடக பிரச்சாரத்திற்கான  பயிற்சிப் பட்டறை
* அறிவியல் மனப்பான்மை வளர்க்க பிரச்சாரம்
மாநில ப.க. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
சென்னை, ஆக.18 விருதுநகரில் வரும் நவம்பர் 16 அன்று பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா மாநாட்டைச் சீரும் சிறப்புமாக நடத்துவது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
சென்னை - பெரியார் திடலில் 17.08.2019 (சனிக் கிழமை) அன்று பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது தலைமையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்களின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இரங்கல் தீர்மானம்
பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் புதுவை மானமிகு மு. ந. நடராசன் 24.07.2019 அன்று வாகன விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராமல் காலமானார். பகுத்தறிவாளர் கழகத்திற்கு புதுவை மு.ந. நடராசன் அவர்கள் ஆற்றிய நீண்ட கால களப்பணி - குறிப்பாக தந்தை பெரியார்தம் கருத் துகளை சிறுசிறு பிரசுரங்களாக பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கிய பணி போற்றுதலுக்குரியது. அவரது மறைவிற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வீரவணக்கத்தினை செலுத்துகிறது.
தீர்மானம் எண் 1:
தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு
பன்னெடுங்காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கடந்த சில ஆண்டு களாகத்தான் தந்தை பெரியார் ஆற்றிய சமுதாயப் பணியினால் கல்வி கற்று முன்னேறி வருகின்றனர். ஒடுக்கப்பட்டோர் சமத்துவ நிலை யினை எட்டுவதற்குத் தடங்கலாகவும், மீண்டும் வேதகால பாரம்பரியக் கல்வி முறையினை நுழைக்கும் விதமாகவும், கல்வி கற்றிடும் மாணவர்களைப் பாகுபடுத்தி மீண்டும் குடும்பத் தொழி லையையே மேற்கொள்ளும் வகையிலும் குலக்கல்விக்கு வித்திடுவதற்கு ஏதுவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை (2019) யினை இந்தக் கூட்டம் கடுமை யாக எதிர்க்கிறது. ஏற்கெனவே கல்விக் கொள்கை குறித்து கருத்துகளை மய்ய அரசுக்கு தெரிவித்த நிலை யிலும், கல்விக் கொள்கை நடைமுறையினால் வரும் ஆபத்தினை, கல்விப் புல பேரழிவினை விளக்கி மாவட்டம் தோறும் கருத்தரங்கங்களை உரிய கல்வி யாளர்களது, கருத்தாளர் களது பங்கேற்புடன் நடத்திட இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப் படுகிறது.
தீர்மானம் எண் 2:
பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கையில் கயிறு கட்டிக் கொள்ளும்  வழக்கத்தினை நீக்குதல்
பள்ளிக் கூடங்களில் பயிலும் மாணவர்களி டையே ஜாதி அடையாளத்தைத் தூண்டுகின்ற வகையில் பல வண்ணங்களில் கயிறு கட்டிக் கொள்ளும் வழக்கத்தை தடுத்திட தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையே சுற்ற றிக்கை அனுப்பியது. தனக்குத் தெரியாமல் சுற்றறிக்கை வெளிவந்து விட்டது என துறையின் அமைச்சர் கூறியது ஜாதி பாகுபாட்டை கடைப்பிடித்திட வலியுறுத்துவதாகவே உள்ளதை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது’ என பறைசாற்றி வரும் நிலையில் ஜாதிமுறையே ஒழிக்கப்பட வேண்டும்; அதுதான் மக்களிடம் சமத்துவத்தை உருவாக் கிடும் எனும் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பற்றிய பிரச்சாரத்தை மேலும் வலுவாக நடத்திட இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
மேலும் பள்ளி மாணவர்கள் கையில் கயிறு கட்டுவதால் அந்த இடங்களில் கிருமிகள் தங்கி உடல் நலத்தை பாதித்துவிடும் என்பது அறிவியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே கையில் கயிறு கட்டுவது ஜாதி ஒழிப்பு, அறிவியல் விழிப்புணர்வு சார்ந்தவை என்ற நிலைகளில் அதுகுறித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட வேண்டும்.
தீர்மானம் 3:
மூடநம்பிக்கை ஒழிப்பு
தீவிரப் பிரச்சாரம்
மூடநம்பிக்கை என்பது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதாகும். மானுட முன் னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ள மூட நம்பிக்கை ஒழிப்பு பற்றி தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப் பாக மாண வர்கள், இளைஞர்கள் மத்தியில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற வேண்டும். மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத் தில் அறிவியல் சார்ந்த கருத்துகளை எடுத் துரைத்து கேட்பவர் மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரச்சாரம் செய்திட வேண்டும். பகுத் தறிவு ஆசிரியரணியினர் மூடநம்பிக்கை ஒழிப் புப் பிரச்சாரத்தில் பெரும் கவனம் செலுத்திட முன்வர வேண்டும்.
அந்தந்தப் பகுதியில் நிலவிடும் மூடநம்பிக் கைகளை எதிர்த்து அறிவுப் பூர்வ பிரச்சாரத்தினை பகுத்தறிவு ஆசிரியரணி முதன்மைப் பணியாக ஏற்று நடத்திட வேண்டும் என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் எண் 4:
அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திட,
அறிவியல் சார்ந்த அணுகுமுறைக்கான
பிரச்சாரம்
இந்திய அரசியலைமைப்புச் சட்டம் அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பதையும், எதையும் கேள் விக்கு உட்படுத்திப் பார்க்கும் அணுகுமுறையினையும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாகக் கூறுகிறது. அடிப்படைக் கடமையானது நடைமுறையாகிட மக்களிடம் அறிவியல் கண்ணோட்டம் பெருகிட வேண்டும். பழக்க வழக்கங்கள் நம்பிக்கை சார்ந்தது எனும் பழமைவாதம் மக்கள் மனதிலிருந்து நீக்கப்பட வேண்டும். மானுடம் வளர்ந்து முன்னேறியது நம்பிக்கை சார்ந்தவைகளால் அல்ல; அறிவியல் வளர்ச் சியே அதற்கு அடிப்படை எனும் உண்மை விளக்கப்பட வேண்டும். பகுத்தறிவாளர் கழகமும், ஆசிரி யரணியும் இணைந்து அறிவியல் அரங்கினை நடத்திடவும் சிறிய அளவில் அறிவியல் உண்மைகளை செயல் விளக்கங்கள் மூலமும் எடுத்துக் காட்டவும், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் பற்றிய நம்பிக்கை சார்ந்த மனநிலையினை வான அறிவியல் உண்மை கொண்டு விளக்கிடவும் அறிவியல் அறிஞர்களின் பிறந்த நாள்களை அறிவியல் மனப்பான்மை வளர்த் திடும் நிகழ்ச்சியாக நடத்திடவும் முன்வர வேண்டும்.
இந்தியாவிலிருந்து சந்திரனில் இறங்கிட ஆளில்லாத விண்கலமான சந்திராயான் 2 ஏவப்பட்டு வெற்றிகரமாக விண்வெளியில் பய ணித்து வருகிறது. சந்திராயன் 2 விண்கலம் சந்திரனில் இறங்கிடும் அந்த நிகழ்வினை வெற்றி விழாவாக அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திடும் விழாவாக நடத்தி பிரச்சாரப் பணியினை பகுத்தறிவு ஆசிரியரணி மேற்கொள்ள இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 5:
‘பெரியார் 1000’ வினா-விடை போட்டி நடத்துதல்
கடந்த காலங்களில் பகுத்தறிவாளர் கழக முன்னெ டுப்பில் ‘பெரியார் 1000’ வினா - விடை போட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளி மாணவ மாண வியர்க்கு நடத்தப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கியதும், வெற்றி பெற்ற முதன்மையரை டில்லி வரை அறிவியல் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றதும் உண்டு. இந்த ஆண்டும் ‘பெரியார் 1000’ போட்டி நிகழ்ச்சிகளை பகுத் தறிவாளர் கழகமும், தஞ்சை-வல்லம் பெரியார் மணி யம்மை அறிவியல் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மன்றமும் இணைந்து தமிழகமெங்கும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 2019 அக்டோபர் 14-21 நாள்களில் தமிழகம் முழுவதும் போட்டியினை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் ‘பெரியார் 1000’ போட்டியினை அதிகமான அளவில் மாணவ மாணவியர் பங்கேற்றிடும் வகையில் நடத்தி முடித்திட இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 6:
பகுத்தறிவாளர் கழக
பொன்விழா மாநாடு (1970-2019)
மிகவும் தொலைநோக்குடன் அலுவலகப் பணிபுரி வோரும் பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட என 1970 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் மாநில அரசு அங்கீகாரத்துடன் பகுத்தறிவாளர் கழகத்தினை தந்தை பெரியார் தொடங்கினார். தொடக்க நாள் முதற்கொண்டு பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலராக இருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டி நடத்தி வருகிறார். அரசு உயர்நிலைப் பணிக்கு வந்த பல அய்.ஏ.எஸ். அதிகாரிகள், துணைவேந்தர் பொறுப்பிற்கு வந்த கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் உறுப்பி னர்களாகவும் பொறுப்பாளர்களாகவும் இருந்து பணி யாற்றிய அமைப்பு பகுத்தறிவாளர் கழகமாகும். பிற மாநி லங்களோடு ஒப்பிடும்பொழுது பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய தளங்களில் தமிழ்நாடு மட்டும் முன்ன ணியில் இருப்பதற்கு பகுத்தறிவாளர் கழகம் ஆற்றிவரும் பணியும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தகைய கழகம் அய்ம்பதாவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.
பகுத்தறிவாளர் கழகத்தின் பொன் விழாவினை விருதுநகரில் இந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் நாள் நடத்திட முடிவு செய்யப்படுகிறது. பகுத்தறிவாளர் கழகத்தின் அய்ம்பது ஆண்டுகால சாதனைகளை பறைசாற்றும் நிகழ்ச்சியாக பொன்விழா நடைபெற உள்ளது. பகுத்தறி வாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ஆகிய மூன்று அணியினைச் சார்ந்தோர் முழுமையான ஈடுபாட்டுடன் குடும்ப விழா போல பொன்விழாவினை சிறப்பாக நடத்திட வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 7:
அமெரிக்கா - வாஷிங்டன், மேரிலேண்டில்
சுயமரியாதை மனிதநேய பன்னாட்டு மாநாடு
தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகமயப் படுத்திடும் பணிகளுள் ஒன்றாக பன்னாட்டு பெரியார் சுயமரியாதை இயக்க மாநாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன. 2017 ஆம் ஆண்டு ஜெர்மனி-கோலோன் பல்கலைக் கழகத்தில் முதலாம் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. இரண்டாம் பன்னாட்டு மாநாடு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் D.C. - மேரிலாந்தில் 2019 செப்டம்பர் 21 & 22 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. ‘மனிதநேயமும் சுயமரியாதையும்’ என்பதை மய்யக் கருத்தாகக் கொண்டு நடைபெறும் அமெரிக்க மாநாட்டினை அமெரிக்க மனிதநேயர் அமைப் பும் (American Humanist Association), பெரியார் பன்னாட்டு மய்யமும் (Periyar International, USA) இணைந்து நடத்திட உள்ளன. ‘சுயமரியாதைமிகு மனிதநேயம்’ (Self Respective Humanism) உலகமெலாம் பரவிட வகை செய்திடும் வகையில் மாநாட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க பன்னாட்டு சுயமரியாதை மனிதநேய மாநாடு வெற்றிகரமாக நடைபெற இந்தக் கூட்டம் ஆதரவினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 8:
ஜனவரி 2020 இல் விஜயவாடாவில்
நாத்திகர் உலக மாநாடு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யத்தினர் தொடர்ந்து உலக நாத்திகர் மாநாட்டை நடத்தி வருகின்றனர். திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்துடன் இணைந்து திருச்சியில் 2011 & 2019 ஆம் ஆண்டுகளில் உலக நாத்திகர் மாநாடு வெகுசிறப்பாக நடத்தப்பட்டது. அடுத்த உலக நாத்திகர் மாநாடு ஜனவரி 4-5, 2020 ஆகிய நாள்களில் விஜயவாடாவில் நடை பெறவுள்ளது. நமது புரவலர் தமிழர் தலைவர் 2020 - உலக நாத்திகர் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ஒவ்வொரு முறையும் விஜயவாடாவில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட் டிற்கு பெரும் எண்ணிக்கையில் பேராளர்களாக பங் கேற்பது வழக்கமே. வர இருக்கின்ற உலக நாத்திகர் மாநாட்டிலும் தோழர்கள் பெருமளவில் பங்கேற்று பல் வேறு நாடுகளிலிருந்து வருகை தரவுள்ள நாத்திகர் அமைப்பினருடன் கலந்துறவாடும் வகையில் இப்பொழு திருந்தே ஆயத்தப் பணிகளைத் தொடங்கிடவும் இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் எண் 9:
‘மந்திரமா? தந்திரமா?’
பயிற்சிப் பட்டறை
பகுத்தறிவுப் பிரச்சாரத்தினை நேரடியான கருத்தியல் அழுத்தத்துடன் மேற்கொள்வதோடு, நடைமுறை பழக் கத்தினை சுட்டிக் காட்டி மக்களிடம் பகுத்தறிவு உணர் வினை மேம்படச் செய்யும் பிரச்சார அணுகுமுறைகளுள் ஒன்று, ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சி ஆகும். ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியினை நடத்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் மாஜிக் நடத்திடும் நிபுணர்களை உருவாக்கிட வேண்டும். ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியினை நடத்திடுவதற்கு முறையான பயிற்சியினை வழங்கிட மாநில அளவில் பட்டறை நடத்தப்படவுள்ளது. அந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றிட உரியவர்களை அந்தந்தப் பகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் தெரிந் தெடுத்து அனுப்பிடவும், பயிற்சி பெற்றோரை தொடர்ந்து பழக்கப்படுத்தி அதன் மூலம் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சி அந்தப் பகுதியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்திலும் தவறாமல் இடம்பெற வேண்டும் என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 10:
போலி அறிவியலை தூக்கிப் பிடிக்கும்
காவிக்கட்சி ஆட்சியாளர்கள்
சங்கப் பரிவாரக் கட்சியினைச் சார்ந்த அமைச்சர்கள் - மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் இன்று உள்ளோர், நேற்று இருந்தோர் எனப் பலரும் அறிவியலுக்குப் புறம் பாக வெறும் புராண அடிப்படையில், வெறும் நம்பிக்கை சார்ந்த, தாம் பழக்க வழக்கத்தில் கடைப்பிடிக்கிறோம் என்பதற்காக பல்வேறு போலி அறிவியல் (pseudo science) கருத்துகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அண்மையில் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. மேனாள் அமைச்சர் அறிவியலுக்குப் புறம்பாக பசுமாடு மூச்சை வெளிவிடும் பொழுது ஆக்ஸிஜனை அளிக்கிறது என்ற கருத்தினை வெளியிட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யாசிங் தாகூர், ‘பசு மூத்திரம்’, மகளிரின் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய மருத்துவப் பண்பு உடையது என கூச்சமில்லாமல் கூறிவருகிறார்.
இவர்களது ஒரே நோக்கம் ‘பசுமாட்டு’ மகாத்மியத்தை தூக்கிப் பிடித்து ‘இந்துத்துவா’ கருத்திற்கு வலுசேர்த்திட வேண்டும் என்பதே. இத்தகைய போலி அறிவியல் கருத்துகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து, மக்களிடம் எடுத்துச் சென்று அறிவியல் சார்ந்த சிந்தனைகளை பெருக்கிடவும், ஆட்சியாளர்களிடம் குடிகொண்டுள்ள பிற்போக்குத் தனமான கருத்துகளை முறியடித்திடவும் இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் எண் 11:
சமுக ஊடக வழி பிரச்சாரத்திற்கான
பயிற்சிப் பட்டறை:
சமுக ஊடகங்களில் உடனுக்குடன் செய்திகளைச் சென்று சேர்த்திடும் வழிமுறைகள் பல பெருகிவருகின்றன, முகநூல், சுட்டுரை, கட்செவி என பலதரப்பட்ட சமுக ஊடகங்களில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கருத்துப் பதிவினை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய தோழர்களை நெறிப்படுத்திடவும், புதிய தோழர்கள் பங்கேற்று பிரச்சாரம் செய்திடவும் சமுக ஊடகப் பயிற்சி பட்டறையினை நடத்துவது என இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஈடுபாடு கொள்ளச் செய்திடும் வகையில் பயிற்சியாளரைத் தெரிந்தெடுத் திடவும், பயிற்சிப்பட்டறையினை இவ்வாண்டு இறுதிக் குள் நடத்திடவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 12:
இயக்க ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல்,‘The Modern Rationalist’
ஏடு சந்தா சேர்ப்பு இயக்க நிறைவு
தந்தை பெரியார் நிறுவிய இயக்கத்திற்கு உள்ள பிரச்சாரப் பலங்களுள் முதன்மையானது பத்திரிகைக் கட்டமைப்பு ஆகும் - நாளிதழ், மாதமிருமுறை, மாத ஏடுகள் நடத்துவது. ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ என ஒவ்வொரு ஏடும் பிரச்சாரத் தன்மையில் தனித்துவம் கொண்டவை; நீடித்த, நிலைந்த பகுத்தறிவுக் கருத்தியலை உருவாக்கிட வல்லவை. பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனம் சார்பாக வெளியிடப்படும் இந்த ஏடுகளுக்கு சந்தா சேர்க்கும் பணியினை இயல்பான தொடர்பணியாக பகுத்தறிவாளர் கழக, ஆசிரியரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் மேற்கொள்ள வேண்டும். நம் இயக்கத்தின் ஒரே ஆங்கில ஏடான ‘The Modern Rationalist’ க்கு சந்தா சேர்த்திடும் சிறப்புப் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. அந்தந்தப் பகுதியில் எட்டப்பட வேண்டிய சந்தா அளவும் தெரிவித்தாகிவிட்டது. தொடர்ந்து விஸி சந்தா சேர்க்கும் பணியினைச் செய்து தந்தை பெரியாரின் 140-ஆம் பிறந்த நாளில் (செப்டம்பர் 17, 2019) நிறைவாக முடித்து தலைமையிடத்தில் சந்தா சேர்த்த விவரங்களை அளித்திட இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் எண் 13:
மோடி அவர்களின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வலியுறுத்திடும் உரை
எந்த ஒரு பொருளாதார வளர்ச்சித் திட்டமும் மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கும் நிலையில்தான் முழு அளவில் பலனளிக்கும். இதை தொலைநோக்குப் பார் வையுடன், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி கவனம் செலுத் தாத காலத்திலேயே மக்கள் தொகையினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்; அதைவிட பெண்களின் விடுதலைக்கு ‘கர்ப்ப ஆட்சி’ என்பது அவர்களை முன்னேற்ற வாழ்விற்கு பயன்பட வேண்டும்; என குடும்பக்கட்டுப்பாட்டினை வலியுறுத்தி 1930-களிலேயே தந்தை பெரியார் தமது கூட்டங்களிளெல்லாம் பிரச்சாரம் செய்து வந்தார். அதன் முழுப் பலனை இப்பொழுது தமிழ்நாடு பெற்று வருகிறது.
இருப்பினும் மத அடிப்படையில் மக்கள்தொகைப் பெருக்கம் வேண்டி இந்துத்துவவாதிகள் இந்துக்கள் அதிக எண்ணிக்கை அளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வெளிப்படையாக பேசி வருகின்றனர். மத்திய அரசு எடுத்துவரும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் முழுப்பயன் நாட்டு மக்களுக்கு கிடைக்காத வகையில் தடைபோட்டு வருகிறார்கள்.
மதவாதிகளின் இந்தப் பிரச்சாரத்திற்கு எதிராக தந்தை பெரியார் வலியுறுத்தி வந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஆதரிக்கும் வகையில் நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் இந்த ஆண்டு விடுதலை நாளில் டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றிடும் பொழுது ‘மக்கள் தொகை கட்டுப்பாடு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது’ என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அவர்களின் மக்கள் தொகைக் கட்டுப் பாட்டை வலியுறுத்திடும் பேச்சினை இந்தக் கூட்டம் பெரிதும் வரவேற்கிறது.
அந்த வகையில் மத்திய அரசின் குடும்பக்கட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் வலுவாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில கலந்துரையாடல்

சென்னை, ஆக. 18- பகுத்தறி வாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அள விலான கலந்துரையாடல் கூட்டம் 17.8.2019 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை, பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகப் புர வலர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடந்தது.
ஆசிரியரணி மாநில அமைப்பாளர் எஸ்.அருள் செல்வன் வரவேற்புரையாற் றினார். கூட்டத்தில் பழனி மாவட்ட ப.க தலைவர் ச.திராவிடச்செல்வன், வட சென்னை மாவட்ட தலைவர் கோவி.கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் மு.இரா.மாணிக்கம், தாம் பரம் மாவட்ட செயலாளர் அ.சிவக்குமார், தென் சென்னை மாவட்ட செயலா ளர் பா.வேணுகோபால், திரு வள்ளூர் மாவட்ட செயலா ளர் சி.நீ.வீரமணி, தலைவர் கி.எழில், புதுச்சேரி தலைவர் கு.ரஞ்சித்குமார், செயலாளர் நெ.நடராசன், மேட்டூர் தலைவர் கோவி.அன்புமதி, கும்மிடிப்பூண்டி செயலாளர் டி.இருதயராஜ், மயிலாடு துறை செயலாளர் அ.சாமி துரை, திருவாரூர் மாவட்ட தலைவர் இரா.சிவக்குமார், திருவாரூர் நகர தலைவர் சு.ராஜேஷ், ஆவடி மாவட்ட அமைப்பாளர் இரா.பகுத்த றிவு, திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பா.வெங் கட்ராமன், செய்யாறு மாவட்ட தலைவர் வி.வெங் கட்ராமன், ஈரோடு தலைவர் ப.மோகனசுந்தர்ராஜ், லால் குடி மாவட்டம் மு.முத்து சாமி, ஆசிரியரணி தருமபுரி மாவட்ட தலைவர் இரெ.கிருட்டிணகிரி, லால்குடி தலைவர் அ.சண்முகம், பகுத் தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர்கள் கா.நல்லதம்பி, கே.டி.சி.குருசாமி, அண்ணா.சரவணன், அ.தா. சண்முகசுந்தரம், அ.சரவ ணன், ச.மணிவண்ணன், தரும.வீரமணி ஆகியோர் பேசினார்கள். பகுத்தறிவா ளர் கழக மாநில பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன் உரையாற் றினார். மாநில பகுத்தறிவா ளர் கழக பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் நிகழ்ச் சியை ஒருங்கிணைத்தார்.
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழ கிரிசாமி தீர்மானங்களை முன்மொழிந்தார். திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரே சன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உரையாற்றினர். பகுத்தறிவாளர் கழகப் புர வலர் தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் வழிகாட்டுதல் உரை வழங்கினார். மாநிலத் துணைத் தலைவர் கே.டி.சி. குருசாமி நன்றி கூறினார்.
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர் ந.அண்ணாதுரை தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியரவர் களுக்கு பயனாடை அணி வித்தார். கூட்டத்தில் அறிவிக் கப்பட்ட பொறுப்பாளர்கள்
புதுவை மாநிலம்
மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்: கு.ரஞ்சித் குமார் (புதுச்சேரி), புதுச்சேரி ப.க தலைவர்: நெ.நடராசன், புதுச்சேரி ப.க செயலாளர் கே.எம்.ராஜன்
சிதம்பரம் கழக மாவட்டம்
ப.க மாவட்ட தலைவர்: பூ.வே.அசோக்குமார், செய லாளர்: கே.செந்தில்குமார், அமைப்பாளர் ப.முனுசாமி
அரியலூர் மாவட்டம்
ப.க மாவட்ட தலைவர்: தங்க.சிவமூர்த்தி, செயலாளர்: துரை.சுதாகர், ஆசிரியரணி மாவட்ட தலைவர்: இரா.இராசேந்திரன், செயலாளர்: சீ.நீதிபதி
விழுப்புரம் மாவட்டம்
மாவட்ட ப.க தலைவர்: வே.ரகுநாதன், கல்லக்குறிச்சி மாவட்ட தலைவர்: பெ.எழி லரசன், மாவட்ட செயலாளர்: வீர.முருகேசன்
தென்சென்னை மாவட்டம்
மாவட்ட தலைவர்: மு. இரா.மாணிக்கம், செயலா ளர்: பா.வேணுகோபால்
ஆவடி மாவட்டம்
பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர்: இரா.பகுத்தறிவு
விடுதலை நாளேடு, 18.8.19

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 17.08.2019 சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் 1.30 மணி வரை


இடம்: பெரியார் திடல், சென்னை


தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி(புரவலர், பகுத்தறிவாளர் கழகம்)


கருத்துரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)


பொருள்:


பெரியார் 1000 வினா-விடை போட்டி நடத்துதல்


பகுத்தறிவாளர் கழக பொன் விழா


புதிய கல்விக் கொள்கையை கண்டித்து கருத்தரங்குகள் நடத்துதல்


பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பை வலுப்படுத்துதல்


மாவட்ட அளவில் தொடர் கூட்டங்களை நடத்துதல்


அமைப்புப் பணிகள், இன்ன பிற...


வேண்டல்:


மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் தவறாத வருகை


கூட்டம் குறித்த நேரத்தில் துவங்க வசதியாக காலை 10.45 மணிக்கு இருக்கையில் இருக்க கேட்டுக்கொள்கிறோம்.


குறிப்பு: மாவட்ட பொறுப்பாளர்கள் கடந்த மாநில கூட்டத்திற்கு பின்பு மாவட்ட அளவில் நடந்த நிகழ்ச்சிகள்  பற்றிய அறிக்கையினை தமிழர் தலைவர் அவர்களிடம் அளிக்க தயாராக வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


விழைவு: மா.அழகிரிசாமி (தலைவர்)


இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர்)


சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர்)


- விடுதலை நாளேடு, 12.8.19