செவ்வாய், 26 நவம்பர், 2019

மலேசியாவில் பெரியார் பன்னாட்டமைப்புPeriyar International உருவாக்கம்

மலேசிய திராவிடர் இயக்க வரலாற்றில் புதியதோர் மறுமலர்ச்சி சகாப்தம் உதயம்!

நமது சிறப்புச் செய்தியாளர்

பிரிந்த அமைப்புகள் சேர்ந்த பெரியாரிய கூட்டமைப்பு பிறந்தது!

மலேசிய திருநாட்டில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியரின் வரலாற்றுப் பெருமைமிகு சாதனை

மலேசியாவில் பெரியார் பன்னாட்டமைப்பு

Periyar International உருவாக்கம்

அமெரிக்க சிகாகோவைத் தலைநகரமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டு, டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் சரோஜா இளங்கோவன், டெக்சாஸ் பேராசிரியர் டாக்டர் இலக்குவன்தமிழ், சிகாகோ பாபு, பேராசிரியர் டாக்டர் அரசு செல்லையா ஆகியோரின் அரிய முயற்சியால் தொடங்கப் பெற்று, இன்று பல மாநிலங்களிலும், பல நாடுகளிலும் அமைப்புகளை உருவாக்கி சமூகத் தொண்டு நிறுவனமாக நடக்கும் பெரியார் பன்னாட்டமைப்பு மலேசியாவிலும் ஆசிரியர் முன்னிலையில் 24.11.2019  அன்று உருவாக்கப்பட்டது.

மானமிகு தோழர் மா.கோவிந்தசாமி எம்.ஏ., அவர்கள் தலைவராகவும், மானமிகு கே.ஆர்.ஆர்.அன்பழகன் பி.ஏ., அவர்கள் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். விரிவாக்கம் தொடரவிருக்கிறது என்பதும் கூட்டம் முடிந்த பின் அமைந்த முடிவில் ஒன்றாகும்.

கோலாலம்பூர் (கோலக்கிள்ளான்), நவ.26- 24.11.2019, ஞாயிறு காலை 11 மணியளவில் மலேசிய திராவிடர் இயக்க வரலாற்றில் ஓர் புதிய அத்தியாயம் இணைக் கப்பட்டது. மறக்க முடியாத பொன்னாளாகும் அந்நாள்!

ஆம்! புரட்சிக்கவிஞர் அவர்கள் கொட்டிய கவிதை முரசொலிக்கு விளக்கம் அளிக்கும் இலக்கிய மாக இயக்க நடவடிக்கைகள் அமைந்தன!

‘‘இங்குள திராவிடர் ஒன்றாதல் கண்டே எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்'' என்று கூவி முழங்கும் வண்ணம் சில ஆண்டுகளாகப் பிரிந்து கிடந்த கழகக் கொள்கைக் குடும்பத்தினர் மீண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் பல அமைப்புகளாக இருப் பவர்கள் ஓர்  அணியில் நிற்க - பெரியாரிய கூட்ட மைப்பை உருவாக்க அனைவரும் இசைந்தனர், ஒன்று கூடினர்.

கழகத் தலைவர் ஆசிரியர் தங்கியிருந்த கோலக் கிள்ளான் (Port klang) துறைமுக நகரின் கிரிஸ்டல் கிரவுன் பிளாசா ஓட்டலில் இரண்டாம் தள அரங்கத்தில் மலேசிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களான தேசியத் தலைவர் பினாங்கு அண்ணாமலை, பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் மற்றும் பொறுப் பாளர்கள் இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த பெரியார் பெருந் தொண்டர்கள், திராவிடர் இயக்க செயல் வீரர்கள் - மானமிகு சுயமரியாதைக்கா£ரர்கள் என அனைத்து அமைப்பினரும் முதல் முறையாக கிரவுன் பிளாசா ஓட்டலில்  Harbour Crew No.217, Persiaran Raja Muda musa, 4200 Pelabuhan Klang - Selangor என்ற அரங்கில் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துறவாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துகளை ஒத்த குரலில் பரிமாறிக் கொண்டு புதிய சரித்திரத்தின் - முதல் வரிகளை எழுதத் தொடங்கினர்.

அதற்குமுன் கோலக் கிள்ளான் நகரில் பல ஆண்டு காலமாக சிறப்பாக நடைபெற்றுவரும் திருவள்ளுவர் மண்டபம் - மன்றம் நூலகம் சென்று காலை 10 மணி யளவில் திருவள்ளுவர் சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்தார். அதன் முக்கிய பொறுப்பா ளர்கள் திரு.இராமன் தலைமையில் ஆசிரியரை வரவேற்றனர்.

சுமார் 20, 25 ஆண்டுகளுக்குமுன் இதே மண்ட பத்தில் வந்து பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டதையும், நடிகவேள் எம்ஆர்.இராதா அவர்களை அழைத்து திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி இதே மண்டபத்தில் உரையாற்றிட வைத்ததுமான பழைய நினைவுகள்பற்றி சிறிது நேரம் உரையாடி ஆசிரியரை வாழ்த்தினர். அவர்களிடமிருந்து விடை பெற்றார். ஆசிரியருடன் கே.ஆர்.ஆர்.அன்பழகன், வெற்றி முனியாண்டி, சிங்கப்பூர் இராஜா ராமன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

அதேநேரத்தில் கிரவுன் பிளாசா ஓட்டலின் இரண் டாவது தளமான அதே அரங்கத்தில் மலேசிய திராவிடர் கழகத்தின் மத்திய செயலவைக் கூட்டம் அதன் தேசியத் தலைவர் மானமிகு ச.த.அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம் அவர் கள் மலேசிய திராவிடர் கழகத்தின் முக்கிய செயல வைப் பொறுப்பாளர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய பின், கடந்த கூட்ட குறிப்புகளை முன்வைத்தும், தேசிய பொருளாளர் கு.கிருட்டிணன் அவர்கள்  கணக்கறிக்கை தாக்கல் செய்தும், கழக நிலை குறித்து கலந்து உரையாடியும், கழகப் பொருட் கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும், கழக செயல் நடவடிக்கை குறித்து முடிவெடுத்தும் பல்வேறு கருத்து களைப் பரிமாறிக் கொண்டனர். தேசிய துணைப் பொதுச்செயலாளர் மானமிகு ச.நாகேந்திரன் அனை வருக்கும் நன்றி கூறி, காலை 11 மணியளவில் அந்தக் கலந்துறவாடல் நடவடிக்கைகளை முடித்துக் கொண் டனர்.

அதன் பிறகு அதே அரங்கில் சிறப்பு வருகை தந்த தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் ஒன்று திரண்டு அரங்கில் கூடி வரவேற்றனர்.

1. மலேசிய திராவிடர் கழகம் சார்பில்...

மானமிகு தோழர்களான

1. ச.த.அண்ணாமலை, தலைவர்

2. சா.பாரதி, துணைத் தலைவர்

3. பொன்.பொன்வாசகம், பொதுச்செயலாளர்

4. வீ.இளங்கோ, உதவித் தலைவர்

5. கு.கிருட்டிணன், பொருளாளர்

6. மு.இராதாகிருட்டிணன், அமைப்புச் செயலாளர்

மற்றும் முன்னாள் துணைத் தலைவர், பொருளாளர் தாப்பா கெங்கையா, அர்ச்சுனன், மகளிரணி தோழர் கள், முதுபெரும் பெரியார் தொண்டர் பெரியசாமி மற்றும் தோழர்கள்.

2. மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகம்

மானமிகு தோழர்கள்

1. இ.ரெசு.முத்தய்யா, ஆலோசகர்,

2. நாக.பஞ்சு, தலைவர்

3. ச.அன்பரசன், பொதுச்செயலாளர்

3. பேராக் மாநில பெரியார் பாசறை

மானமிகு தோழர்கள்

1. வா.அமுதவாணன், தலைவர்

2. த.சி.முனியரசன், துணைத் தலைவர்

3. அ.அல்லிமலர், பொருளாளர்

4. க.மணிமாலா, மகளிர் தலைவி

4. மலேசியத் தமிழர் தன்மான இயக்கம்

மானமிகு தோழர்கள்

1. கெ.வாசு, தலைவர்

2. மரு.கிருட்டிணன், உதவித் தலைவர்

3. மு.மணிமாறன், செயலவை உறுப்பினர்

4. ம.பத்துமாலை, செயலவை உறுப்பினர்

5. சிறப்பு  அழைப்பாளர்கள் (மேலே காட்டிய) ம.தி.க.வின் பல உறுப்பினர்கள், பெரியாரிஸ்டுகள் கூடுதலாக

மானமிகுவாளர்கள்

1. கோவிந்தசாமி

2. கே.ஆர்.ஆர்.அன்பழகன்

3. வெற்றி முனியாண்டி மற்றும் பல மகளிரணித் தோழர்கள்

கூட்டத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியரை ம.தி.க.வின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் வரவேற்றும், இந்தக் காலகட்டத்தில் மலேசிய மண்ணில் பெரியார் கொள்கைக்கு எதிரான பிற்போக்கு ஜாதி, மதவாத சக்திகளும் மற்றும் பல போலி தேசியங்களும் கழகப் பிரச்சாரத்திற்கு எதிராக வும், தந்தை பெரியார் கொள்கை முதன்முதலாக வேரூன்றிய மலேசிய மண்ணிலிருந்து அகற்றிட முயன்றும், அவற்றை முறியடித்து எவரும் கனவுகூட காண முடியாதபடிச் செய்வோம். நாம் அனைவரும் இந்த பெரியாரிய கூட்டமைப்புப்பில் பங்கேற்ற திராவிடர் இயக்கங்கள் ஓர் அணியில் திரண்டு கொள்கை பரப்பும் தொண்டறப் பணியில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகும் என்பதைக் கூறி, இந்தத் திட்டத்தை முன்மொழிந்தார்; அதனை அத்துணை அமைப்புகளின் சார்பிலும் தோழர்கள் நாகபஞ்சு, ரெசு.முத்தய்யா, அமுதவாணன்,  கெ.வாசு, கிருட்டி ணன் முதலிய அனைவரும் ஒத்த குரலில் அதே கருத்தைப் பிரதிபலித்து சிறு சிறு விளக்க உறுதி உரையாற்றினர்.

தனியாக வந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பெரியசாமி அவர்களும், மற்ற நண்பர் களும் பிசிறு தட்டாமல், ஒரே குரலில் இந்த ஒருங் கிணைப்பை வரவேற்றார்கள்.

அதன்பின் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலை வரும், ‘விடுதலை' ஆசிரியருமான கி.வீரமணி அவர் கள் மிகுந்த மகிழ்ச்சித் ததும்பும் உற்சாகத்துடன் உரையாற்றினார்.

‘‘இன்று தான் அடையும் மகிழ்ச்சியை என்றும் அடைந்ததில்லை என்றும், வரும் டிசம்பர் 2 இல் 86 வயதுடன் செல்லும் தான், 26 வயது இளைஞனைப் போல திரும்பக் கூடிய தெம்பையும், பலத்தையும், மகிழ்ச்சியையும் நீங்கள் இந்த ஒற்றுமை உணர்வின் மூலம் தந்துள்ளமைக்கு எனது தலைதாழ்ந்த நன் றியை, பாராட்டை உங்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு அமைப்பினருக்கும் தெரிவித்துக் கொள் ளுகிறேன்.

‘‘நீரடித்து நீர் விலகாது'' என்ற பழமொழியை உண்மை என்று காட்டியுள்ளீர்கள். நடந்தவைகள் நடந்தவைகளாகவும், கடந்தவைகளாகவும் இருக்கட் டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக அமை யட்டும்.

நம்முடைய பிரிவுகள்பற்றி யாரும் இனி கவலைப் படத் தேவையில்லை. இன்று வளர்ந்து பக்குவப்பட் டுள்ளோம் மீண்டும் காலம் கனியும் - அப்போது ஒரே கழகமாகவும் மீண்டும் இந்த பெரியாரின் பெரும் கொள்கைக் குடும்பம் ஒன்று சேருவது நிச்சயம் - உறுதியும்கூட!

நம்மிடையேயான சிறு கருத்து மாறுபாடுகள் பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.

ஓர் குடும்பம் என்றால், எல்லாம் இருக்கும்; அப் பனுக்கும், மகனுக்கும், அண்ணனுக்கும், தம்பிக்கும், ஏன் கணவனுக்கும், மனைவிக்கும், துணைவனுக்கும், துணைவிக்கும்கூட கருத்து மாறுபாடு வரத்தானே செய்கிறது?

அதனால், உறவு பறிபோய்விடுமா?

உறவை யாராவது பறித்துத்தான் விட முடியுமா?

பெரியார் பெருந்தொண்டர்களாகிய நாம் அனை வரும் இதை மனதில் நிறுத்தினால் எல்லாம் நொடிப் பொழுதில் மறைந்துவிடும்!

கருத்து மாறுபாடுகள் என்பவை எப்போதும் மறையக் கூடியவை, கருத்து வேறுபாடுகளின் தன் மையோ வேறு.

நமக்குள்ளே வந்து தலையை நீட்டியது கருத்து மாறுபாடுகளே தவிர, வேறுபாடுகள் அல்ல தோழர்களே!

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நமது தொண்டை மானம் பாராத தொண்டு என்றும், நன்றி எதிர்பாராத் தொண்டு என்றும் கூறிடு வார்.

1330 குறள்களிலேயே அய்யாவுக்கு மிகவும் பிடித்த குறள்,

‘‘குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்''

என்ற குறள்தான் என்பதை நன்கு அறிந்தவர் கள்தான் நீங்கள் அனைவரும்.

நம் கொள்கை எதிரிகளின் துள்ளலும், எள்ளலும், கிள்ளலும்பற்றி மட்டுமே யோசியுங்கள். நம்முள் வீரமும், செயல் திறனும் பன்மடங்கு பெருகி ‘விஸ்வ ரூபம்' எடுப்பது உறுதி!

அதன்முன் எவரும் வாலாட்ட முடியாது! அய்யா சொன்ன அறிவுரையை என்றும் மனதில் நிறுத்துங்கள்.

‘‘எது நம்மைப் பிரிக்கின்றதோ அதை அலட்சி யப்படுத்துங்கள் - பொருட்படுத்தாதீர்கள்.

எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப் படுத்துங்கள், ஆழப்படுத்துங்கள்!

வெற்றி நம் மடியில்  வந்து தானே விழும்!''

எனது அன்பான வேண்டுகோளை ஏற்று ஒருங் கிணைந்து - முதல் கட்டமாக செயல்பட முன்வந்த அனைவருக்கும் எமது நன்றி.

இந்நாட்டில் பழைய அந்த சுயமரியாதைச் சுடரொளிகள் 70 ஆண்டுகளுக்கு மேலே தங்களது தியாகத்தால், துன்பத்தால், எதிர்ப்புகளை உரமாக்கி, நம் கொள்கைப் பயிர்களைச் செழிக்க வைத்தனர்.

அவர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்! வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தந்தை பெரியாரின் 46 ஆவது நினைவு நாளை நீங்கள் அத்துணை அமைப்புகளும் ஓர் மேடையில் - ஓர் குடையின்கீழ் நின்று நடத்தி கொள்கைப் பிரகடனத்தை முழங்கி, பணியைத் திட்டமிட்டு செய்யத் தொடங்குங்கள்.

தமிழ்நாடு  என்றும் உங்களுக்கு, உங்கள் பணிக்கு உறுதுணையாக நிற்கும். என்றும் தொடர்புடன் இருங்கள் - வளர்த்துக் கொள்ளுங்கள் - பயிற்சி முகாம் தேவை என்றால், எங்கள் விருந்தினர்களான இளைஞர்களை அழைத்து வாருங்கள் - இருகரம் ஏந்தி உங்களை வரவேற்போம் - ஏற்பாடு செய்வோம் - என்றும் நாம் ஒரே குடும்பம், சுயமரியாதைப் பல்கலைக் கழகக் குடும்பம்!'' என்று உருக்கமுடன் பேசினார்கள்.

‘‘வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தந்தை பெரியாரின் நினைவு நாளை நடத்த மாந்த நேய திராவிடர் கழ கத்தினர் கேட்டனர்; மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித் தோம்.

எங்கே, எந்த கழக நிகழ்ச்சி என்றாலும், கொள்கைப் பிரச்சாரம் என்றாலும், ஓர் அணியாய் திரண்டு அங்கே  சென்று பெரியாரின் இராணுவ சிப்பாய்களாக நிற்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் ஒருவரை ஒருவர் விமர் சிக்கவே கூடாது என்பதில் உறுதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோள்''  என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அனைவரும் வழிமொழிந்து வரவேற்று, அய்யா நினைவு நாளையே, கொள்கைப் பிரச்சாரத்தின் திருப்ப நாளாகும் என்றனர்.

இறுதியில் மலேசியக் கழகத் தலைவர் ச.த.அண்ணாமலை தமிழ்நாடு கழகத்தின் பெரியார் உலக முயற்சிகளைப் பாராட்டினார்; விளக்கிக் கூறு மாறு ஆசிரியரைக் கேட்டுக்கொண்டார்.

‘‘கொள்கை விளக்க இயக்க வெளியீடுகளை, இந்நாட்டுக்குத் தேவையான நூல்களை - பகுத்தறிவு வெளியீடுகளைப் பரப்பும் திட்டத்தைக் கைக்கொள் ளும், ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல் போன்ற கருத்துள்ள நூல்களை பெரியார் எழுத்து, பேச்சுகளையும், கழக வெளியீடுகள் பரப்பும் திட்டத் தையும் சிறப்புற செயல்படுத்தவேண்டும்'' என்றார்.

‘‘அடிப்படையில் நமது இயக்கம் ஒரு பிரச்சார இயக்கமே! வன்முறையிலோ, தீவிரவாதத்திலோ, பயங்கரவாதத்திலோ, இரகசிய வழிகளிலோ நம்பிக் கையில்லா அமைதிப் புரட்சி இயக்கம், அறிவுப் புரட்சி இயக்கம் என்பதை பிரச்சாரத்தில் தெளிவுபடுத்துங்கள்'' என்று விளக்கமாக எடுத்துரைத்தார். வந்திருந்த  அத்துணைத் தோழர்களுக்கும் பகல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தய்யன், தமிழ்நாடு கழக வெளியீடுகளை முதல் நாள் திருமண வீட்டிலும், கழகக் கலந்துறவாடலிலும் பரப்பும் கடமையை சிறப்பாகச் செய்தார்.

- விடுதலை நாளேடு, 26.11.19

விருதுநகர் பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டின் 21 தீர்மானங்கள்

'நீட்', 'டெட்' போன்ற தேர்வுகளை நீக்குக!

புதிய தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் கைவிடுக!!

ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு தேவை

விருதுநகர், நவ. 17- 'நீட்', 'டெட்' போன்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள் கையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும், ஜாதி வாரி சுடுகாடு கூடாது என்பது உள்பட 21 தீர்மானங்கள் விருதுநகரில் நடைபெற்ற (16.11.2019) பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

முன்மொழிந்தவர்: பெரம்பலூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராஜன்

விருது பெற்றமைக்குப் பாராட்டு

அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மனிதநேய சங்கத்தின் சார்பில்  (Humanist Association) 
திரா விடர் கழகத் தலைவர் - பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' (Humanist Life Time Achievment Award) விருது வழங்கியமைக்கு இம்மாநாடு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதுடன், விருது பெற்ற தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இம்மாநாடு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

முன்மொழிந்தவர்: பகுத்தறிவாளர் கழக

மாநிலத் துணைத் தலைவர் ஆ.சரவணன்

தேவையற்ற ஒன்று!

கடவுள் வாழ்த்து என்பது தேவையற்ற ஒன்று. அதற் குப் பதிலாக மக்கள் வேறுபாடின்றி மகிழ்ச்சியாகவும், ஒற்றுமை யாகவும் வாழ்ந்திட விழைவதாகப் பாடல் அமையலாம் என்று பகுத்தறிவாளர் கழக மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்  3:

முன்மொழிந்தவர்: பகுத்தறிவு ஆசிரியரணி

மாநில அமைப்பாளர் வா.தமிழ்ப் பிரபாகரன்

பாடத் திட்டத்தில் புராணம்,

இதிகாசங்கள் இடம்பெறக்கூடாது!

விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) திட்டவட்டமாகக் கூறுவதால், பாடத் திட்டங்களில் விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிரான புராணம், இதிகாசம் மற்ற மதக் கற்பனைகள் போன்றவை இடம்பெறாமல் செய்யவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்  4:

முன்மொழிந்தவர்: தருமபுரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் மாரி.கருணாநிதி

பாடத் திட்டத்தில் திருக்குறள்

திருக்குறளை தொடக்கப் பள்ளிமுதல் பட்ட மேற்படிப்பு வரை முக்கியமாக இடம்பெறச் செய்ய ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தியாவின் எல்லா மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் பாடத் திட்டங்களில் இடம்பெறச் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. பேருந்துகளில் மறுபடியும் திருக்குறள் இடம்பெறச் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்  5:

முன்மொழிந்தவர்: மேட்டூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக தலைவர் அன்புமதி

ஜாதியைக் குறிக்கும்

சின்னங்களை தடை செய்க!

ஜாதியைக் குறிக்கும் வகையிலும், வெளிப்படுத்தும் வகையிலும் வண்ணக் கயிறுகளைக் கையில் கட்டிக் கொண்டு மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு வரும் விபரீதப் போக்கை உடனடியாகத் தடை செய்யவேண்டும் என்று தமிழக அரசின் கல்வித் துறையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

முன்மொழிந்தவர்: தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சிவக்குமார்

மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதம்

மதச்சார்பற்ற அரசின் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசின் ஆணைப்படி எந்தவிதமான கடவுள் படங்களோ, பூஜை களோ இடம்பெறக்கூடாது - அப்படி மீறி நடந்தால் அது சட்ட விரோதம் என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

புதிதாக அரசு அலுவலகங்கள் கட்டும்போது பூமி பூஜை என்ற பெயரால் மதச் சடங்குகளை நடத்துவது, மழை பெய்வதற்காக யாகம் நடத்தச் சொல்லி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ததும், அப்படிப்பட்ட யாகங்களில் அமைச்சர்கள் பங்கேற்றதும் அப்பட்டமான சட்ட மீறலும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், கண்டிக்கத்தக்கதுமாகும் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமானதால் அத்தகைய மதச் சடங்குகளை நிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

முன்மொழிந்தவர்: புதுக்கோட்டை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.மலர்மன்னன்

நடைபாதைக் கோவில்களை அகற்றுக!

நடைபாதைக் கோவில்களையும், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எழுப்பப்பட்டுள்ள அனைத்து மதக் கோவில்களை யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், மத்திய - மாநில அரசுகளின் சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் உடனே நீக்கிட ஆவன செய்யப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

முன்மொழிந்தவர்: பகுத்தறிவு ஆசிரியரணி

மாநில அமைப்பாளர் சி.இரமேஷ்

‘நீட்', தேசிய கல்வியை ரத்து செய்யவேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2019 என்பது பல மாநிலங்கள், பல மொழிகள், பல இனங்கள், பல்வேறு பருவ நிலைகளைக் கொண்ட ஒரு துணைக் கண்டத்திற்குப் பொருந்தாது என்று இம்மாநாடு திட்டவட்டமாக அறிவிக்கிறது.

மாநிலக் கல்வி உரிமை பறிப்புக்கான திட்டமே இந்தக் கல்விக் கொள்கை என்று இம்மாநாடு தெரிவிக்கிறது.

மூன்றாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகளைத் திணிப்பது 5 மற்றும் 8 ஆம் வகுப்புப் பிள்ளைகளுக்கு அரசு பொதுத் தேர்வு என்பது குழந்தைத் தொழிலாளர் கொடுமை என்னும் குற்றத்தின்கீழ் வரக்கூடியது என்று இம்மாநாடு திட்டவட்டமாகக் கருதுகிறது - இத்திட்டத்தை உடனே கைவிடுமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் உறுதியாக நின்று, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவை முற்றிலும் நிராகரிக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

‘நீட்' என்பது எந்த வகையிலும் நீடிக்க அருகதையற்றது - சமூகநீதியின் குரல் வளையை நெரித்துக் கொல்லக் கூடியதேயாகும். அதனை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,081 சீட்டுகள் உள்ளன. இதில் 3,033 பேர் பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்' பயிற்சி வகுப்பு சென்று வந்தவர்கள். பயிற்சிக்குச் செல்லாத மீதமுள்ள 48 பேர்களில் பெற்றோர்கள் படித்தவர்கள் பெரும் செல்வந்தர்கள்.

இதில் ஒரே ஒருமுறை ‘நீட்' தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்தவர்கள் 1,026.

மீதமுள்ள 2007 பேர் இரண்டுக்கு மேற்பட்ட முறை பயிற்சி மய்யங்களுக்குச் சென்று பயிற்சி பெற்று ‘நீட்' தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள்.

‘நீட்' தேர்வு முடிந்த பிறகு, நாளிதழ்களில் முழு பக்கம் வரும் விளம்பரங்களைக் கொடுக்கும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணமாகப் பெறுகின்றனர்.

இது இந்த (2019-2020) ஆண்டு ரூ.13 லட்சம் முதல் ரூ.17 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 7 மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களில் அனைவருமே பெரும் செல்வந்தர்கள்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 210-க்கும் மேல் ஆகும்.

‘நீட்' ஆள் மாறாட்டம் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதாகவும், இதில் 300 பேருக்கும் மேல் ஈடுபட்டனர் என்றும் கேரளாவைச் சேர்ந்த ‘நீட்' மோசடி வழக்கில் கைதான ‘நீட்' பயிற்சி மய்யம் நடத்தும் நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமூகநீதிக்கு விரோதமான - படித்தவர்கள், பணக்காரர் களுக்கு வசதியான - ஊழல் நிறைந்த ‘நீட்'டினை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

மாநில அரசும் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களின் அடிப்படையில் மீண்டும் ஒரு மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசை வற்புறுத்தவேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9:

முன்மொழிந்தவர்: திருப்பத்தூர் மாவட்டப் பகுத்தறிவு  ஆசிரியரணித் தலைவர் இரா.பழனி

பொருளாதார அளவுகோல் ஏற்கத்தக்கதல்ல!

இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட - சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்கிற அளவுகோலே சரியானது என்பதால், எந்த வடிவத்திலும் பொருளாதார அளவுகோல் என்பது ஏற்கத்தக்கதல்ல - அது சமூக நீதியின் நோக்கத்தையே சிதற அடிக்கக்கூடியது என்று இம்மாநாடு திட்டவட்டமாக தெரிவிக்கிறது - பொருளாதார அளவுகோலை அறவே விலக்கி வைக்குமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10:

முன்மொழிந்தவர்: திருவள்ளூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கி.எழில்

தனியார்த் துறைகளிலும்

இட ஒதுக்கீடு தேவை!

விதி விலக்குகள் ஏதுமின்றி அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்றும், மிக முக்கிய மாக தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் அளிக் கப்பட வேண்டும் என்றும்,  இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

கடவுள் வாழ்த்து தேவையில்லை

பாடத்திட்டத்தில் புராண இதிகாசங்களை நீக்குக

நடைபாதைக் கோயில்களை அகற்றுக

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் ஏற்கத்தக்கதல்ல

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக

ஒரே சுடுகாடு தேவை!

தீர்மானம் எண் 11:

முன்மொழிந்தவர்: தருமபுரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கதிர்.செந்தில்

கல்வியை மீண்டும் மாநிலப்

பட்டியலுக்குக் கொண்டு வருக!

கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கானதோர் தீர் மானத்தை உடனே நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12:

முன்மொழிந்தவர்: கல்லக்குறிச்சி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீ.முருகேசன்

பெண்களுக்கான 33 விழுக்காடு சட்டம்!

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் 33 விழுக் காடு பெண்களுக்கான இட  ஒதுக்கீடு சட்டத்தை மேலும் காலதாமதம் செய்யாமல் நிறைவேற்றவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 13:

முன்மொழிந்தவர்: தஞ்சை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ச.அழகிரி

தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிதி!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை எந்த  காரணத்தை முன்னிட்டும் வேறு துறைக்குச் செலவழிக்கக் கூடாது என்று இம்மாநாடு மாநில அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 14:

முன்மொழிந்தவர்: அரியலூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க.சிவமூர்த்தி

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள விடுதிகள் போதிய பராமரிப்பு இன்றி, அலங் கோலமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்கும் கட்டடம் நல்ல வசதியுடன், தக்கப் பராமரிப்புடன் பேணப்படுவது அவசியம் என்றும், அவர்களுக்கான உணவு விடயத்திலும் தக்க கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பெண்கள் தங்குவதற்கான விடுதிகளை போதுமான அளவில் அரசே உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 15:

முன்மொழிந்தவர்: தென்காசி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ம.இராசையா

மாணவர்களுக்கு யோகா என்ற பெயரால்....

மாணவர்களுக்கு யோகா என்ற பெயரால் மத ரீதியான சடங்குகளை உள்ளே நுழைக்கக் கூடாது என்றும் இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 16:

முன்மொழிந்தவர்: திருநெல்வேலி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.வேல்முருகன்

விளையாட்டுக்கு உரிய முக்கியத்துவம் தேவை!

பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியமானதோர் இடம் அளிக்கப்படவேண்டும் என்றும், வெறும் மனப்பாட படிப்பு, அதன்மூலம் பெறும் மதிப்பெண்தான் மாணவர்களின் தகுதி என்ற முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான முறையில் கல்வி திட்டம், கற்பித்தல் முறையை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் இம்மாநாடு அறிவுறுத்துகிறது.

தீர்மானம் எண் 17:

முன்மொழிந்தவர்: மன்னார்குடி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அழகிரி

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைத் திணிக்காதீர்!

குழந்தைகள் கைப்பேசியின் பொம்மைகளாக மாறாமல், பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் கடவுள், மதம், மூடநம்பிக்கைகளை அவர்களின் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கவேண்டாம் என்றும் பெற்றோர்களையும், உறவினர்களையும் இம்மாநாடு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது. ஆடம்பர நுகர்வு கலாச்சாரத்துக்கும் அவர்களை ஆட்படுத்தவேண்டாம் என்றும், பதப்படுத்தப்பட்ட வசீகரமான முறையில் டின்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள்மீதான ஆர்வம் பிள்ளைகளுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை என்றும் இம்மாநாடு தன் வேண்டுகோளாக வைக்கிறது.

தீர்மானம் எண் 18:

முன்மொழிந்தவர்: பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.திராவிடச் செல்வன்

குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டுக!

குழந்தைகளுக்கு தாய், தந்தையர் பெயர்களின் முதல் எழுத்தை இணைத்து (இனிஷியல்) தமிழில் பெயர் சூட்டுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 19:

முன்மொழிந்தவர்: தென்சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.மாணிக்கம்

சுடுகாட்டில் வேறுபாடு வேண்டாம்!

ஜாதிக்கு ஒரு சுடுகாடு, இடுகாடு என்பது ஒழிக்கப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு - இடுகாடு அமைக்கப்படுதல் வேண்டும் என்றும், மின் தகன ஏற்பாட்டை எல்லா இடங்களிலும் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 20:

முன்மொழிந்தவர்: விருதுநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.அசோக்

ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பினை உறுதி செய்க!

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைக் கொலை செய்யும் போக்கு நாளும் அதிகரித்துவருவதற்கு முடிவு கட்டப்படவேண்டும் என்றும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கென்று காவல்துறையில் தனி வசதி  செய்யப்படவேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வர சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 21:

முன்மொழிந்தவர்: நாமக்கல் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வழக்குரைஞர் இளங்கோ

மறு தேர்வுகள் தேவையில்லை

ஆசிரியர் பயிற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு மறுதேர்வு (டெட்) என்பது அவசியமற்றது என்றும், சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கும், வெளிநாடுகள் சென்று மருத்துவம் படிப்போர்க்கும் மறுதேர்வு என்பதெல்லாம் தேவை யற்ற நிர்பந்தம் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்போர் நுழை வுத் தேர்வு எழுதவேண்டும் என்பதும், கலைக்கல்லூரிகளில் சேருவதற்கும் நுழைவுத் தேர்வு என்பதெல்லாம் வளர்ந்துவரும் முதல் தலைமுறையினரையும், கிராமப்புற ஏழை, எளிய வர்களையும் ஒடுக்கும் ஏற்பாடு என்று இம்மாநாடு கருதுகிறது. இதனைக் கைவிடுமாறும் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- விடுதலை நாளேடு, 17.11.19

தமிழர் தலைவரின் விருதுநகர் பிரகடனம்

'நீட்' - தேசிய கல்வி இரண்டையும் எதிர்த்து தமிழ்நாட்டில் களங்கள் அமைக்கப்படும்!

அடுத்த இரு மாதங்களிலும் இதே பணி தான் எங்களுக்கு

தமிழர் தலைவரின் விருதுநகர் பிரகடனம்

விருதுநகர், நவ.17 ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைக் குழி தோண்டிப் புதைக்கும் 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வு - குலக் கல்வியின் மறுபதிப்பான தேசிய கல்விக் கொள்கை - இவை இரண்டையும் எதிர்த்து - தமிழ்நாட்டில் களங்கள் காண்போம் -அடுத்துஇரு மாதங்களிலும் திராவிடர் கழகத்தின் முக்கிய பணி இதுதான். இதனை விருதுநகர் பிரகடனமாக அறிவிக்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு விருதுநகரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நேற்று (16.11.2019) முழு நாள் மாநாடாக வரலாற்று சிறப்புடன் நடந்தேறியது.

திறந்த வெளி மாநாடு

மாலை - திறந்தவெளி மாநாடாக விருதுநகர் மாவட்ட நூலகக் கட்டடம் அருகில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.

மாநாட்டின் நிறைவுரையாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

1970இல் தந்தை பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழாவின் தொடக்க விழா மாநாடு இன்று காலை முதல் வெகு சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

காவல்துறையினரின் கவனத்துக்கு...

அதனுடைய நிறைவு நிகழ்ச்சியாக இது திறந்த வெளிமாநாடாக - பொதுக் கூட்டமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக அயராது உழைத்த தோழர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கின்றேன்.

இடையில் காவல்துறை கொடுத்த தொல்லைகள், இடர்ப் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல; சட்டத்திற்குக் கட்டுப்பட்டு  நடக்கக் கூடியவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள். திராவிடர் கழகம் நடத்தும் பொதுக் கூட்டங்களிலோ, மாநாடு களிலோ திராவிடர் கழகத்தால் ஒரு சிறு அளவுக்குக்கூட சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51கி-லீ என்ற  பிரிவின் அடிப்படை உரிமை என்ற பகுதி என்ன கூறுகிறது? விஞ்ஞான மனப்பான்மையை, எதையும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் உரிமையை, மனிதநேயத்தை, சீர்திருத்த உணர்வைப் பரப்ப வேண்டிய - முன்னோக்கிச் செலுத்த வேண்டிய கடமையை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறதா இல்லையா?

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதைப் பரப்பும் பணியில் நாங்கள் ஈடுபட்டால், அதற்கு முட்டுக்கட்டை போடலாமா? காவல்துறை அனுமதி மறுக்கலாமா?

சட்டத்தை மதிக்க வேண்டியது காவல்துறையின் கடமையல்லவா?

நாங்கள் சமூக நீதிக்காகப் பாடுபடுகிறோம் - போராடுகிறோம் என்றால்எங்கள் குடும்பத்திற்காகவா? ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காகத் தானே! காவல்துறையில் பணியாற்றுவோரே  - உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் பாடுபடுகிறோம். (கைதட்டல்) என்பதை மறந்து விடாதீர்கள்!

திராவிடர் கழகம் என்பது சமுதாயப் புரட்சி இயக்கம். ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் கூட நிற்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்ட இயக்கம். கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே எங்களிடத்தில் இடம் இல்லை.

தந்தை பெரியார் பற்றி அறிஞர் அண்ணா கூறுவார், "தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார். அவர் வகுப்புகள், மாலை நேரங்களில் மைதானங்களில் நடைபெறும்" என்றாரே.

பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் திறந்து வைத்தார்.

மதத்தைப் பற்றிப் பேசக் கூடாதா?

மதத்தைப் பற்றிப் பேசக் கூடாது என்று எழுதிக் கொடுக்கிறார்கள் காவல்துறையினர். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யும் உரிமை - கருத்துரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. சட்டப்படி அதைத் தடுக்கும் அதிகாரம் காவல்துறைக்குக் கிடையவே கிடையாது.

ஏன் இந்து மதத்தை எதிர்க்கிறோம்? இந்து மதத்தின் மிக முக்கியமான சாஸ்திரம் மனுதர்மம். அதன் எட்டாவது அத்தியாயம் - 415ஆம் சுலோகம் என்ன கூறுகிறது? சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று எழுதப்பட்டிருக்கிறதே! இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

நாம் விபச்சாரி மக்களா?

நம் எல்லோரையும் விபச்சாரி மக்கள் - சூத்திரர்கள் என்று கூறும் மதம் தேவையா? வங்காளக் குடா கடலில் அதனை வீசி எறிய வேண்டாமா?

மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் அறவாணன் அவர்கள் 'தமிழன் அடிமையானது எவ்வாறு?' என்ற ஓர் அருமையான நூலினை எழுதியுள்ளார்.

1901ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழர்களில் படித்தவர்கள் ஒரு சதவீதத் துக்குக் குறைவு என்று ஆதாரத்துடன் கூறியுள்ளாரே -

இன்று இந்த நிலை மாற்றத்திற்கு யார் காரணம்? பாடு பட்டவர்கள் யார்? போராடியவர்கள் யார்? சிறை சென்ற வர்கள் யார்? காவல்துறையிலும் அதிகாரிகளாக எங்கள் தமிழர் வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் யார்?

வரலாறு படைத்த

விருதுநகர்

1970ஆம் ஆண்டில் தந்தை பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் 50ஆம் ஆண்டு (பொன் விழா) தொடக்க விழா மாநாடு பச்சைத் தமிழர் - கல்வி வள்ளல் காமராசர் பிறந்த விருதுநகரில் நேற்று வெகு எழுச்சியுடனும், நேர்த்தியுடனும் நடைபெற்றது. மாநாட்டையொட்டி, நகரில் எப்பக்கம் திரும்பினாலும் கொடி!  கொடி!! திராவிடர் கழகக் கொடி மயம்தான் - கொடியோர் செயல் அறவே பறக்கும் கொடி - திராவிடர் கழகக் கொடி! எந்த மாநாட்டிலும் இவ்வளவுக் கொடிகளைக் கண்டதில்லை.  ஊரே வாய் விட்டுப் பேசும் அளவுக்கு இந்தக் கொடிக் காடு காற்றில் அசைந்தாடி  மாநாட்டிற்கு வரவேற்பு பதாகைகளாகக் கட்டியம் கூறின. சுவர் எழுத்துகளும் எங்குப் பார்த்தாலும்; ஓவியர் சுந்தரப் பிரபாகரனின் கை வண்ணம் பளிச்! பளிச்!

வண்ண வண்ண சுவரொட்டிகள் எங்கும் கண் சிமிட்டின. பொது மக்களுக்கு வரவேற்பு சுவரொட்டி தனி முத்திரை. முற்பகல் மாநாடு விருதுநகர் இராம மூர்த்தி சாலையில் நடுநாயகமாக அமைந்துள்ள எஸ்.எஸ்.கே. சரஸ்வதி திருமண மண்டபத்தில் எவ்விதத்திலும் தொய்வின்றி அடர்த்தியாக நிகழ்ச்சிகள் அணி வகுத்தன. கீழ்த்தளத்தில் பகுத்தறிவுப் பொருட் காட்சி பொது மக்களைக் கவர்ந்தது.

மண்டபம் நிரம்பி வழிய வெளியிலும் மக்கள் பார்க்கும் வண்ணம் ஒலி ஒளி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சின்ன சின்ன விடயங்களில் கூடக் கவனம் செலுத்தப்பட்டு எதிலும் நிறைவு என்ற முத்திரை ஜொலித்தது.

கடைவீதி வசூல் என்பது வெறும் பண வசூல் மட்டுமல்ல - மாநாட்டுக்குத் தலைசிறந்த விளம்பர யுத்தி அது. அதனை நமது இளைஞரணி தோழர்கள் சிறப்பாகவே செய்தனர்.

மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் அ.சுரேஷ், மன்னார்குடி மாவட்ட துணைச் செயலாளர் விக்கிரவாண்டி வீ.புட்பநாதன், விருதுநகர் செந்தில், விருதுநகர் கணேசமூர்த்தி, தஞ்சை யோவான்குமார், தஞ்சை குமார், ஏ.பிரகாஷ், அருப்புக்கோட்டை திருவள் ளுவர், அருப்புக்கோட்டை ராஜேந்திரன், கிருஷ்ண மூர்த்தி, தென்காசி வே.முருகன், விருத்தாசலம் பிரவீன் குமார். (இவர்களுக்குக் கழகத் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்).

மாலையில் நடைபெற்ற திறந்த வெளி மாநாட்டில் மக்கள் வெள்ளம் அலை பாய்ந்தது. போடப்பட்ட நாற் காலிகள் போதாது என்று மேலும் மேலும் நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு, போடப்பட்டுக் கொண்டே இருந்தன.

கழகத் தோழர்களைத் தவிர பொது மக்களின் கூட்டம் பெரும் அளவில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. பல இளைஞர்கள் கழகத்தில் இணைந்து கொள்ள பொறுப்பாளர்களிடம் தங்கள் தொலைப்பேசி எண் களையும் தாமாக முன் வந்து  கொடுத்தனர்.

நீதிக்கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு (இருநாள்) 1931இல் விருதுநகர் ஆர்.கே. சண்முகம் தலைமையில் நடைபெற்ற சிறப்புக்குரியது.

அந்த ஊரில் தான் இந்த மாநாடு வரலாற்றைப் படைத்தது - வந்திருந்தவர்களை விருந்தினர்களாகக் கருதி, முற்பகல் மாநாடு நடைபெற்ற -  மண்டபத்தின் கீழ்பகுதியில் மதிய உணவளித்து உபசரித்தது கூடுதல் சிறப்பாகும். விருதுநகர் பகுத்தறிவாளர் கழக மாநாடு வெற்றி முரசொலித்தது என்று மனந்திறந்து பாராட்டலாம்!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை

ஒழித்தது யார்?

1952களில் ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வரவில்லையா? அதனை எதிர்த்து ஒழித்தது யார்? தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தானே. அதற்குத் தமிழர்கள் அனைவரும் உறுதுணையாக நிற்கவில்லையா?

அந்தக் குலக் கல்வி திட்டம் ஒழிக்கப்படாமல் இருந் திருந்தால் தமிழர்கள் அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ்.,களாகவும், டாக்டர்களாகவும், நீதிபதிகளாகவும் வந்திருக்க முடியுமா?

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம்

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததே அதனை ஒழித்தது யார்? நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராகவிருந்த போது தந்தை பெரியார் அழுத்தமாகக்குரல் கொடுத்த நிலையில், அந்தத் தடையை நீக்கவில்லையா? சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்ற நிலையை அன்று நீக்காமல் இருந்திருந்தால், தமிழர் களில் இன்றைக்கு இத்தனை டாக்டர்களைப் பார்த்திருக்க முடியுமா?

எத்தனை ஆண்டு காலமாக சரஸ்வதி பூசை கொண்டாடிக் கொண்டிருந்தோம்? பாட்டி சரஸ்வதிக்கு சரஸ்வதி என்று கையெழுத்துப் போடத் தெரியுமா?

இந்த மாநாட்டில் முக்கியமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 21 தீர்மானங்களும் முக்கியம்தான். அதனுள் முக்கியமானது 'நீட்'டை ஒழிப்பது - புதிய கல்விக் கொள்கையை ஒழிப்பது என்பதாகும்.

மாணவர்களே, பெற்றோர்களே!

மாணவர்களே, பெற்றோர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!! 'நீட்'  என்னும் கொடுவாள் நம் தலைக்கு மேல் தொங்குகிறது. நடைபெற்ற 'நீட்' தேர்வுகளில் நம் பிள்ளைகள் மிகவும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். 'நீட்' கோச்சிங்குக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து எல்லோ ராலும் செல்ல முடியுமா?

நாட்டில் எத்தனையோ கல்வித் திட்டங்கள் இருக்கும் போது  -  சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் 'நீட்' என்ற நுழைவுத் தேர்வை நடத்தினால்  யாருக்கு சாதகமாக இருக்கும்? என்பதை எண்ணிப் பாருங்கள். 'நீட்' தேர்வில் எத்தனை எத்தனை ஊழல்கள், ஆள் மாறாட்டங்கள், எத்தனைத் தற்கொலைகள்!  சிந்திக்க வேண்டாமா?

'நீட்' எழுதாமல் டாக்டர்கள் ஆனவர்கள்

புகழோடு விளங்கவில்லையா?

உலகம் பூராவும் தமிழ்நாட்டில் படித்துப் பட்டம் பெற்ற டாக்டர்கள் புகழோடு விளங்குகிறார்கள். அவர்கள் எல்லாம் 'நீட்' எழுதிதான் டாக்டர்கள் ஆனார்களா? நமக்கு முன்  சிறப்பாகப் பேசினாரே நமது டாக்டர் ஷாலினி, அவர் 'நீட்' எழுதிதான் டாக்டர்ஆனாரா?

விண்வெளியில் சாதனைகளை நிகழ்த்தும் நமது சிவனும், மயில்சாமி அண்ணாதுரையும் கிராமப்புறப் பள்ளிகளில் படித்து இன்றைக்குப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளாக ஜொலிக்க வில்லையா? இவர்கள் 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வு எழுதிதான் இந்த அளவுக்கு உயர்ந்தார்களா?

'நீட்' ஒரு சூழ்ச்சிப் பொறி!

'நீட்' என்பதுஒரு சூழ்ச்சிப் பொறி! முதல் தலைமுறையாக தத்தித் தத்திப் படித்து டாக்டராக வேண்டும் என்று துடிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணத்தைத் தடை செய்யும் சூழ்ச்சியாகும் - படுகுழியாகும்.

புதிய கல்வியாம்! 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகள் எல்லாம் அரசாங்க தேர்வுகளாம். இவை எல்லாம் தேவையா? தேர்வைக் கண்டு அஞ்சும், வெறுக்கும் ஒரு மன நிலைக்கு மாணவர்களை ஆளாக்கலாமா?

இந்த விருது நகர்  பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் விருதுநகர் பிரகடனமாகவே இதை அறிவிக்கிறோம்.

போரட்டம்! போராட்டம்!! போராட்டம்!!!

'நீட்'டை - தேசிய கல்விக் கொள்கையை ஒழிக்கும் போராட் டத்தைத் தொடங்குவோம் - அதற் கான களங்களை அமைப்போம். இன்னும் இரு மாதங்களில் இதற் கொரு முடிவைக் காண்போம்.

சமூகநீதியில் அனைவரையும் ஒருங்கிணைப்போம். மாணவர்கள், பெற்றோர்கள் அனைத்துத் தரப் பினரின் பொதுப் பிரச்சினை இது.

'நீட்'டை ஒழிக்கா விட்டால் மறு படியும் நாம் மனுதர்ம காலத்திற்குத் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? உயர் ஜாதியில் ஏழையாக இருப்பவர்களுக்கு

10 சதவீத இடஒதுக்கீடாம், அரச மைப்புச் சட்டத்தில் இதற்கு இடம் உண்டா? பொருளாதார அளவு கோல் செல்லாது என்று ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்புக் கூறவில்லையா?

யாருக்கான ஆட்சி?

சட்டத்தையும் புறந்தள்ளி, உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்காமல் உயர் ஜாதியினர்மீது அக்கறை கொள்ளும்  மத்திய பிஜேபி யாருக்கானஆட்சி?

அருமைப் பெரு மக்களே புரிந்து கொள்வீர்!

இம்மாநாட்டில் நிறை வேற்றப் பட்டுள்ள தீர்மானத்தை செயல்படுத்த ஆதரவு தாரீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

தொகுப்பு: மின்சாரம்

பகுத்தறிவாளர் கழகப் பொன் விழா தொடக்க மாநாட்டு

பகுத்தறிவாளர் கழகப் பொன் விழா தொடக்க மாநாட்டில் திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் நிறைவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரைகேட்கத் திரண்டிருந்தோர் (விருதுநகர், 16.11.2019)

மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை

திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசாவிற்கு இல.திருப்பதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நல்லதம்பியும், மருத்துவர் ஷாலினிக்கு ஆதவனும் பயனாடை அணிவித்தனர்.

ஊடகவியலாளர் திருமாவேலன், இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் நரேந்திர நாயக், டென்மார்க்கைச் சேர்ந்த கணித மேதை கிறிஸ்டி கேரன், கேரள யுத்தி வாதி சங்க தலைவர் சுகுமாரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் சிறப்புச் செய்தார்.

 

தமிழர் தலைவருக்கு போடி மாவட்டக் கழகத்தின் சார்பில் ரகுநாகநாதன் குடும்பத்தினர் ஏலக்காய் மாலை அணிவித்தனர்.

 - விடுதலை நாளேடு 17 1119

எழுச்சியுடன் தொடங்கியது பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு

விருதுநகர், நவ.16 பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு இன்று (16.9.2019) விருதுநகரில் காலை தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.

விருதுநகர் ராமமூர்த்தி சாலை எஸ்எஸ்கே சரஸ்வதி திருமண அரங்கில் சுயமரியாதைச் சுடரொளிகள் வடசேரி இளங்கோவன், புதுவை மு.ந.நடராசன், தூத்துக்குடி பொறியாளர் சி.மனோகரன், விருதுநகர் அ.வெங்கடாசலபதி நினைவரங்கத்தில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் அணிவகுத்து நடைபெற்றன.

கலைநிகழ்ச்சி

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக பகுத்தறிவு கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

‘தாமிரபரணி கலைக்குழு’வினர் கலை நிகழ்ச்சியை பல்சுவை நிகழ்ச்சியாக வழங்கினர்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநில செயலாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் கலைநிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

மாநாட்டுத் திறப்பு

மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர், மாநாட்டு வரவேற்புக்குழு செய லாளர் கா.நல்லதம்பி வரவேற்றார்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செய லாளர் இரா.தமிழ்செல்வன் இணைப்புரை வழங்கினார்.

புயல் சுகுமார், ந.காமராசு, ச.அழகிரி, தங்க.வீரமணி, ஆடிட்டர் சண்முகம், வி.மோகன், கு.பெரியார், கருணா, முழுமதி, சீ.தங்கதுரை, உ.சிவதாணு, கு.ரஞ்சித் குமார், நெ.நடராசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாநாட்டின் தலைவரை முன் மொழிந்து மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் கோபு.பழனிவேல் உரையாற்றினார்.

அ.மன்னர்மன்னன், குடந்தை மோகன், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், புதுவை நடராசன்,  இர.கிருட்டினமூர்த்தி, புலவர் இரா.சாமிநாதன் மற்றும் ந.ஆனந்தம், ஜி.எஸ்.எஸ். நல்லசிவம், கவிஞர் அறிவுடைநம்பி, கோவி.கோபால்,  பெ. ரமேஷ், இரா.வாசுதேவன், தங்க.சிவ மூர்த்தி, இரா.சிவக்குமார்ஆகியோர் வழி மொழிந்தார்கள்.

பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி தலைமையேற்று உரை யாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

படத்திறப்பு

பன்னாட்டளவில் பகுத்தறிவு நெறி பரப்பிய அறிஞர் பெருமக்களின் படங் களைக் கொண்ட பகுத்தறிவுப்போராளிகள் படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றினார்.

தந்தைபெரியார் படத்தைத் திறந்து வைத்து பேராசிரியர் க.அருணன் உரை யாற்றினார்.

அறிவியல் கண்காட்சி திறப்பு

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்  அறிவியல் கண்காட்சியைத் திறந்துவைத்து உரையாற்றினார்.

கருத்தரங்கம்

‘புதியதோர் உலகு செய்வோம்’ தலைப் பில் கருத்தரங்கம்  பகுத்தறிவு எழுத்தாளர்  மன்றத் தலைவர் வா.நேரு தலைமையில் நடைபெற்றது.

பா.இரா.இராமதுரை, கோவி.அன்பு மதி, ஆர்.பெரியார்செல்வன்,  கே.எம்.கருப் பண்ணசாமி,  வீ.சுப்ரமணி,  ச.தருமராஜ், பெ.நடராசன், ச.பால்ராசு முன்னிலை வகித்தனர்.

ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கருத்தரங்க தொடக்க உரையாற்றினார்.

‘பெரியாரை உலகமயமாக்குவோம்’ தலைப்பில், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணித் தலைவர் பேராசிரியர் ப.காளிமுத்து, ‘ஜாதி ஒழிப்பு’ தலைப்பில், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநில செயலாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், ‘முறியடிப்போம் மூட நம்பிக்கைகளை’ தலைப்பில் திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ‘மதவெறி மாய்ப்போம்’ தலைப்பில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன், ‘பெண் விடுதலை நோக்கி,பாலியல் சமத்துவம்’ தலைப்பில் திராவிடர் கழக மாநில மகளிரணி அமைப்பாளர் பேரா சிரியர் மு.சு.கண்மணி ஆகியோர் கருத் தரங்க உரையாற்றினார்கள்.

மாநாட்டில் அறிஞர் பெருமக்கள்

இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் முனைவர் நரேந்திரநாயக், 2019ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்றவரும், பெரியார் பன்னாட்டமைப்பு ஜெர்மனி கிளை பொறுப்பாளரும், ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமாகிய உல்ரிக் நிக்லஸ், கேரள மாநில பகுத்தறி வாளர் திருவனந்தபுரம் சுகுமாறன் தனு வச்சாபுரம் உள்ளிட்ட அறிஞர் பெரு மக்கள் நாடுமுழுவதுமிருந்து மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்கள்.

மாநாட்டு அரங்கில் தமிழர் தலைவர்

மாநாட்டின் அரங்கில் குடும்பம் குடும்பமாக இருந்த கழகத் தோழர்களுக்கு புன்னகையுடன் வணக்கம் தெரிவித்து மகிழ்ச்சி பொங்க உற்சாகத்துடன்  அனைவரிடமும் கைகுலுக்கி நலன் விசாரித்தபடி திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்தார்கள்.

தந்தை பெரியார் வாழ்க, தந்தை பெரியாரை உலகமயமாக்கும் தலைவர் வீரமணி வாழ்க, உலகப்பகுத்தறிவாளர் களின் தலைவர் வீரமணி வாழ்க, அமெ ரிக்காவில் மனிதநேய வாழ்நாள் சாதனை யாளர் விருது பெற்ற தலைவர் வீரமணி வாழ்க, தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு வீரமணி வாழ்க, உலக நாத்திகர்களின் ஒப்பற்ற தலைவர் வீரமணி வாழ்க உள் ளிட்ட கழகத் தோழர்களின் வரவேற்பு முழக்கங்கள் வானைப்பிளந்தன.

மாநாட்டு அரங்கில் இருந்த பகுத்தறி வாளர்கள், பன்னாட்டு அறிஞர் பெரு மக்கள் கழகத் தோழர்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினர்.

நாத்திகர்கள்தான் நீண்ட நாள்கள் வாழ்வார்கள் என்பதற்கு உதாரணமாக ஏராளமானோர் இருக்கிறார்கள். விருதுநகரில் நமது கழகத்திற்கு தக்க ஆலோசனைகளை வழங்கிவரும் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் சகோதரர் பேராசிரியர் திருமாறன் (வயது 94) - செந்தாமரை இணையருக்கு பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா மாநாட்டில் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன் முக்கிய பொறுப்பாளர்கள் (விருதுநகர், 16.11.2019).

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க விழா மாநாட்டில் பங்கேற்க விருதுநகருக்கு வந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (விருதுநகர், 16.11.2019)

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க விழா மாநாட்டில் திரண்டிருந்தோர் (விருதுநகர், 16.11.2019)

- விடுதலை நாளேடு, 16 11.19

பகுத்தறிவாளர் கழக பொன் விழா மாநாடு - கருத்தரங்கம், பட்டிமன்றம்

பகுத்தறிவுப் பிரச்சாரம் உடனடி தேவை.... ஆண்களுக்கா? - பெண்களுக்கா? என்ற பட்டிமன்றத்தின் நடுவர் ஊடகவியலாளர் கோவி. லெனின் உரையாற்றினார்.உடன்: 'ஆண்களிடமே' என்ற அணியில் உரையாற்றிய பா.மணியம்மை, இறைவி, இன்பக்கனி, தே.அ. ஓவியா, 'பெண்களிடமே' என்ற அணியில் உரையாற்றிய அதிரடி க. அன்பழகன், இரா. பெரியார்செல்வன், வெ. குமாரராசா, அறவரசன் மற்றும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், சி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

- விடுதலை நாளேடு 19 11 19

வியாழன், 21 நவம்பர், 2019

பெரியார் பன்னாட்டு அமைப்பு செயல்படுவது எப்படி?

கொள்கையில் சமரசம் இல்லை - நாட்டிற்கேற்ப அணுகுமுறையில் மாற்றம் இருக்கலாம்!

பெரியார் பன்னாட்டமைப்பின் வெள்ளி விழாவிற்கு தமிழர் தலைவர் வாழ்த்து

சென்னை, நவ.13  பெரியார் பன்னாட்டமைப்பு - கொள்கையில் சமரசமின்றி அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப அணுகுமுறையில் மாற்றம் இருக் கலாம் என்று பெரியார் பன்னாட்டமைப்பின் வெள்ளி விழாவிற்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து அனுப்பியுள்ளார்.

பெரியார் பன்னாட்டமைப்பின் வெள்ளி விழா

பெரியார் பன்னாட்டமைப்பின் வெள்ளி விழா விற்காக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம்   வாழ்த்துரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சிகாகோ சோம.இளங்கோவன் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை காணொலிமூலம் தொடர்பு கொண்டார்.

(மலேசியா, சிங்கப்பூர், குவைத், இந்தியா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அமைப்பின் பொறுப்பாளர்களும் பங்கேற்ற ஒரு அருமையான வெள்ளி விழா காணொலி இது).

டாக்டர் சோம.இளங்கோவன்: ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

தமிழர் தலைவர்:  வணக்கம்.

டாக்டர் சோம.இளங்கோவன்: பெரியார் பன் னாட்டமைப்பின் வெள்ளி விழா நடைபெறவிருக்கிறது.  அடுத்த திட்டங்கள்பற்றி ஒரு பல்வழி அழைப்பு.  செயல்திட்டங்கள்பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களுடைய வாழ்த்துரை யுடன் தொடங்கவிருக்கிறோம்.

அய்யா அவர்கள் வாழ்த்துரையை தொடங்கலாம்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த் துரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம்.

25 ஆண்டுகள் -

எல்லையற்ற மகிழ்ச்சி

பெரியார் பன்னாட்டமைப்பு என்ற இந்த அமைப்பு நவம்பர் 13, 1994 ஆம் ஆண்டு சிகாகோவிற்கு வந்திருந்த நம்முடைய அருமை சமூகநீதிப் போராளி சந்திரஜித் யாதவ் அவர்களும், நானும், அதேபோல, டெபுடி அய்கமிஷனர், இந்தியாவும் இணைந்து, டாக்டர் சோம.இளங்கோவன்  அவர்களும், அவரு டைய தோழர்களும் உருவாக்கிய அந்த அமைப்பிற்கு 25 ஆண்டுகள் ஓடிவிட்டன என்று நினைக்கின்ற பொழுது, எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகின்றோம்.

25 ஆண்டுகாலத்தில், அவர்கள் விதைத்து, அதை ‘‘உழவாரம் செய்து'', ஒரு பெரிய அறுவடையை அண்மையில் நடைபெற்ற  வாசிங்டன் மாநாட்டின் மூலமாக நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது இந்த வெள்ளிவிழாவினுடைய சிறப்புகளில் தலைசிறந்த ஒரு சிறப்பாகும்.

அதோடு, அதற்காக உழைக்கக்கூடிய நண்பர்கள், அமெரிக்காவில் நான் பார்த்தவுடன், ஏராளமான அளவிற்கு, மிகப்பெரிய அளவில், பக்குவப்படுத்தப் பட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில், மிகச் சிறந்ததொரு அருமையான பெரியாரிஸ்டுகளாக இரு பாலரும் உருவாக்கப்பட்டு இருப்பது, எல்லையற்ற மகிழ்ச்சியை எங்களுக்கு, குறிப்பாக தலைமையகத் திற்கு, தமிழ்நாட்டில் இருக்கிறவர்களுக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், என்னை பொறுத்தவரையில், இந்த வெள்ளி விழாவில் கலந்து கொள்வதிலே, உங்களோடு உரையாடுவதிலே பல நாட்டுத் தோழர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறோம்.

தஞ்சையில், 1975 ஆம் ஆண்டு!

எனக்கு ஏற்படுகின்ற எல்லையற்ற மகிழ்ச்சி என்னவென்றால், பெரியாரின் வாழ்நாள் மாணவனா கிய நான், பெரியார் அமைப்பினுடைய சுயமரியாதை  இயக்க பொன்விழா மாநாட்டினை  அன்னை மணியம் மையாரின் தலைமையில், தஞ்சையில் 1975 ஆம் ஆண்டு நடத்திய பெருமை, வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அதற்கடுத்து, அன்னை மணியம்மையார் அவர் கள் இல்லை என்ற அந்த வேதனையான சூழ்நிலை இருந்தாலும், 1978 ஆம் ஆண்டில், ஓராண்டு முழு வதும் கழக சார்பில் தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை - நாடு முழுவதும் அரசு சார்பாக - (அப்பொழுது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல மைச்சராக இருந்தார்; அரசும் ஓராண்டு விழா நடத்தியது) நடந்தது.

அந்த அரசில் சில சாதனைகளும் உண்டு; வேதனைகளும் உண்டு. சாதனைகள், எழுத்துச் சீர்திருத்தம் போன்றவை; வேதனைகள், 9 ஆயிரம் ரூபாய் வருமானம் வரம்பு போன்றவை; அதிலே போராடி நாம் வெற்றி பெற்றோம்.

எனவே, அந்த நூற்றாண்டிற்கு ஒரு தனி முத்திரை உண்டு.

அன்னை மணியம்மையாரின்

நூற்றாண்டு விழா!

அதுபோலவே, அதற்கடுத்து அன்னையார்  அவர் களுடைய நூற்றாண்டு விழாவினை, அம்மா அவர்கள் இல்லாத நிலையில், கடந்த 2019 மார்ச் 10 ஆம் தேதி வேலூரில் தொடங்கி நாம் நடத்தினோம்.

அதற்கு முன் ஒரு சிறப்பு என்னவென்று சொன்னால், திராவிடர் கழகத்தின் பொன்விழா. இந்த விழாக்கள் எல்லாம், எளிய தொண்டன் காலத்தில், எனக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. என்னை மேலும் உற்சாகப்படுத்தி, பணியாற்றக்கூடிய உங்களைப் போன்றவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது, வயதை மறந்து, சூழ்நிலைகளை மறந்து, எதிர்ப்பை மறந்து தொண்டாற்றக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை, ஒரு பேறு என்று மகிழக்கூடிய அளவிற்கு வாய்ப்பைத் தந்திருக்கிறது.

நம் கழகத்தினுடைய பொன்விழா, சென்னையில் 1994 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதே ஆண்டில் தான், சிகாகோவில் நம்முடைய பெரியார் பன்னாட்ட மைப்பு தொடங்கப்பட்டது. நம்முடைய கழகப் பொன்விழாவினை, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை அழைத்து நாம் நடத்தினோம்.

மிகப்பெரிய வாய்ப்பு என்னவென்றால்,  69 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறுவதற்கு கையெழுத்துப் போட்டு, தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார் குடியரசுத் தலைவர். அதற்குப் பதிலளித்தார், மிகச் சிறப்பாக வி.பி.சிங் அவர்கள்.

அதற்கடுத்தபடியாக, அம்மா அவர்களுடைய நூற்றாண்டு விழா வேலூரில்.

அதற்கடுத்து, சிறப்பானது, நம்முடைய இயக்கத் தின் பவள விழா ஆகஸ்ட் 27 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்றது.

அதற்கடுத்து இப்பொழுது, பெரியார் இன்டர் நேசனல் என்று, தந்தை பெரியாரை உலகமயமாக்கி, உலகெங்கும் பெரியார், அவருடைய மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்ற வாய்ப்பைப் பெற்ற, பெரியார் இன்டர்நேசனலுக்கு வெள்ளி விழா.

6, 7 விழாக்கள் இன்றைக்கு விழாமல்

நம்மை உயர்த்தியிருக்கிறது

ஆகவே, 6, 7 விழாக்கள் இன்றைக்கு விழாமல் நம்மை உயர்த்தியிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

தனி ஒருவனுக்கு, ஒரு பெரியார் தொண்டனுக்கு இதைவிட பெரிய விருதுகள் வேறு எதுவுமே தேவையில்லை.

கட்டுப்பாடோடு இந்த இயக்கம், கொள்கை, போராட்ட வடிவம் இவை அத்தனையும் தாண்டி, உலகம் முழுவதும் நடைபோடுகிறது.

பெரியார் இன்டர்நேசனல், சிங்கப்பூரில் கலைச் செல்வன் போன்றவர்களின் தலைமையில் சிறப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

குவைத்தில், செல்லபெருமாள் போன்றவர் களுடைய தலைமையில் நடைபெறுகிறது.

அதேபோல, இங்கிலாந்தில் நடக்கிறது.

அதுபோலவே, மற்ற மற்ற நாடுகளில், நடக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி, தோழர் இளங்கோவன் அவர்களும், தோழர் இலக்குவன் தமிழ் அவர்களும் மிகப்பெரிய அளவிற்கு, சமூகநீதி விருது என்ற ஒன்றை உரு வாக்கி, உலகம் முழுவதும் பெரியாரைக் கொண்டு போய், பெரியார் தொண்டர்களைக் கொண்டு போய், பெரியார் கொள்கைகளைக் கொண்டு போய் நிலை நிறுத்துவதற்கு முன்னோட்டமாக இவை அத்தனையும் அமைந்திருப்பது

பாராட்டத்தகுந்தது.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

எனவே, முதலில் உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பெரியார் பெருந்தொண்டர்கள் நேரிடையாக வாழ்த்தாவிட்டாலும்கூட, இந்தக் காணொலி காட்சி மூலமாக அனைவரையும் வாழ்த்துகிறோம்.

உங்கள் தொண்டு தொடரவேண்டும். உங்கள் தொண்டு ஒரு புதிய தளத்திற்கு, நம்முடைய இயக் கத்தை, பெரியாரை, பெரியாருடைய கொள்கையை அழைத்துப் போகக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக் கிறது.

ஒன்றே ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். நான் எப்பொழுதும் பெரியாருடைய வாழ்நாள் மாணவன். அந்த வகையிலே அய்யா அவர்கள் வேறு எந்தத் தலைவரும், எந்த சிந்தனையாளரும் சொல் லாத அளவிற்கு கருத்துகளை மிக ஆழமாக எழுதுகிறார். எப்பொழுது?

நம்மைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்தில்!

தந்தை பெரியார் பேசுகிறார்!

கேட்போம் - பாடம் கேட்பதுபோல!

22.3.1931 ஆம் ஆண்டு ‘குடிஅரசில்',  தன்னுடைய தொண்டர்கள் இந்தப் பணிக்கு வருகிறவர்கள், அவர்கள் சர்வதேச ரீதியாக இருந்தாலும் சரி, உள் ளூரில் இருந்து உலகம் முழுவதும் வரக்கூடியவர்கள் எப்படிப்பட்ட பக்குவப்பட்டவர்களாக இருந்தால், இந்தப் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று அவர்கள் சொல்வதை, இன்றைக்கு ஒரு ‘மெசேஜ்' ஒரு முக்கியமான செய்தியாக இந்த வெள்ளி விழாவில் நான் உங்கள் முன் படைக்க விரும்புகிறேன்.

‘‘எவன் ஒருவன் தனது தொண்டின் பயனாய் பெரிதும் வெறுக்கப்படுகின்றானோ, வையப் படுகின்றானோ, சபிக்கப்படுகின்றானோ, பழி சுமத்தி தனிப்பட்ட முறையில் எதிர்ப்பிரச்சாரம் செய்யப்படுகின்றானோ, அவனது தொண்டு தான் பெரும்பாலும் உண்மையானதாகவும், பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க முடியும் என்பதும் அந்தப்படிக்கில்லாமல் அறிவற்ற மக்களாலும், சுய நலக்காரர்களாலும் அக்கிரம மாய் ஆதிக்கம் பெற்றானோ, பலனடைந்து வருபவர்களாலும் பகுத்தறிந்து மூட நம்பிக் கைக்காரர்களாலும் சமய சஞ்சீவிகளாலும் எவனொருவன் தனது தொண்டின் பயனால் பெரிதும் போற்றப்படுகின்றானோ,  கொண்டா டப்படுகின்றனோ அவனது  தொண்டானது பெரிதும் பயனற்றதும்,  உண்மைக்கும், நியாயத் திற்கும் எதிரானதுமாகவும் இருந்தாகவேண்டும் என்பது நமது தெளிவு. ''

இதைவிட ஒரு இயக்கத்தினுடைய கர்த்தா, கொள்கையை உருவாக்கியவர் நமக்குத் தருகின்ற எச்சரிக்கை, யார் உங்களைப் பாராட்டுகிறார்கள்? யார்  உங்களை எதிர்க்கிறார்கள்? இதிலே தெளிவாக இருக்கும் என்று சொல்லும்பொழுது,

மேலும் பெரியார் சொல்கிறார்,

‘‘ஆகவே, மனிதன்தான் செய்யும் பொதுநல சேவை இன்னது என்பதாக தீர்மானிக்கும் முன்பாக, அது உண்மையாகவே பொதுமக் களுக்குப் பயன்பட வேண்டியதாய் இருக்க வேண்டுமென்று கருதுகின்றவனாகவும், அதனால் தனக்கு வரும் எவ்வித கெடுதியையும், பழியையும் தாங்கி அலட்சியமாய்க் கருதக் கூடியவனாகவும் இருக்க வேண்டியதோடு, அத்தொண்டின் பயனாய் அவன் சுயநலக் காரர்களால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர் களால் அக்கிரமமாய் ஆதிக்கம் செலுத்தி அனுபவிப்பவர்களால் அறிவற்ற பாமர மக்களால் போற்றப்படாமல், புகழப்படாமல் இருக்கின்றோமா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும்.''

இதுதான் நமக்கு வாழ்நாள் முழுவதும் ‘‘கைடு லைன்'' - ஆணைகள்.

 

வெள்ளி விழா செய்தி!

இதை பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சார்ந்த, தெளிவுள்ள கொள்கையாளர்களாக, அந்தத் தூதுவர்களாக, இந்தக் கொள்கையை எடுத்துச் செல்லக்கூடியவர்களாக இருக்கக்கூடிய நீங்கள் இதைத்தான் வெள்ளி விழா செய்தியாகக் கொள்ளவேண்டும்.

எந்த அளவிற்கு நாம் தூற்றப்படுகிறோம் என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள். எந்த அளவிற்கு மற்றவர்களால் குறை சொல்லப்படு கிறோம் என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

அறிவற்றவர்களுடைய பாராட்டைவிட, நமக்குப் பழிப்பு வந்தால், நாம் சரியான பாதையில் செல்லுகிறோம் என்று அதற்குப் பொருள் என்று மிகத் தெளிவாக அய்யா எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவேதான், அந்தக் கொள்கையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை அவர்கள் உருவாக்கினார்கள்.

பேதம் நீக்கிய வாழ்வு -

பெண்ணடிமை நீக்கிய வாழ்வு!

அடுத்தபடியாக, பெரியார் இன்டர்நேசனல் - பெரியாருடைய தேவை என்ன? உலகளாவிய நிலை - சிங்கப்பூருக்கு என்ன தேவை? அமெரிக்காவிற்கு என்ன தேவை? என்று சொன்னால், பேதம் நீக்கிய வாழ்வு - பெண்ணடிமை நீக்கிய வாழ்வு - இப்படி ஒவ்வொன்றும் வரவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவில், அவருடைய கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்.

அய்யா அவர்கள், ஆறு துறைகளில் தன்னுடைய பணியை தொடங்கினார்கள்.

பிறவி பேத ஒழிப்பு. அதாவது ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு - இரண்டுமே பிறவி பேதம். அந்தப் பிறவி பேத ஒழிப்பு.

இரண்டாவது, சமூகநீதி - அனைவருக்கும் அனைத்தும். மிக எளிமையாக சொல்லியிருக்கிறார். இது எல்லா நாட்டிற்கும் பொருந்த வேண்டிய விஷய மாகும். இது தமிழ்நாட்டிற்கோ, இந்தியாவிற்கோ மட்டும் பொருந்தக் கூடிய ஒரு செய்தியல்ல.

அதற்கடுத்து பார்த்தீர்களேயானால், பாலியல் நீதி.

அதற்கடுத்து மனித உரிமை காப்பு. அதற்கு எங்கெங்கு ஆபத்து ஏற்படுகின்றதோ அதை நாம் பாதுகாக்கவேண்டும், நீதியின் பக்கம் நின்று, நியாயத்தின் பக்கம் நின்று.

அதற்கடுத்து, மூடநம்பிக்கைகளை எதிர்க்கக் கூடிய பகுத்தறிவு வாதம்.

ஒரே மாமருந்து தந்தை பெரியார்

அதேபோல, ‘‘செக்குலரிசம்'' என்ற மதச்சார் பின்மைக்கு எதிரான மதவெறி, மனிதர்களை ஆட்டிப் படைக்கக்கூடாது. ஜாதி வெறி எவ்வளவு மோசமோ, அதுபோல,  மதவெறி என்பது உலகளாவிய நிலையில் இன்றைக்குப் புதுப்புது வடிவத்தில் வருகின்றபொழுது, இவைகளுக்கெல்லாம் ஒரே மாமருந்து தந்தை பெரியார் என்கிற மாமருந்து ஆகும்.

பெரியார் இன்டர்நேசனல் என்பது உலகளாவிய அளவிற்கு இன்றைக்குத் தேவைப்படுகிறது. உல களா விய அளவிற்கு அதனுடைய பணி பரப்பப்பட வேண்டும்.

எப்பொழுதுமே மருந்தைக் கண்டுபிடித்தவர்கள்  எவருமே மருந்தை பரப்புவதில்லை. தத்துவங்களைக் கொடுத்த தலைவர்கள், எப்பொழுதுமே அவர்களே பரப்புவதில்லை; அவர்களுடைய தொண்டர்கள்தான் பரப்புவார்கள். அந்த வகையில், நாம் இதை மிகத் தெளிவாகப் பரப்பவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லி,

நீங்கள் சில வழிமுறைகளைக் கையாளவேண்டும் என்று நான் சொல்கிறேன்.

சூழ்நிலைக்கேற்ப

நடந்துகொள்ளவேண்டும்

பிறகு நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

பெரியார் இன்டர்நேசனலின் அடிப்படை கொள்கைகள், தேவை என்று சொல்கின்றபொழுது, அந்தந்த நாட்டில் எவை எவை பிரச்சினையோ, எந்த சூழ் நிலையோ அதற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும்.

அடிப்படைக் கொள்கையில் நாம் சமரசம் செய்து கொள்ள  வேண்டியதில்லை. ஆனால், அந்தக் கொள்கையை அடையக் கூடிய திட்டங்கள் இருக்கிறதே,  அந்த நெறிமுறைகளில் மாற்றங்களை செய்துகொள்ளலாம்.

ஏனென்றால், ஒரு நாட்டிற்குப் பொருந்துவது, ஒரு சமூகத்திற்குப் பொருந்துவது, இன்னொரு நாட் டிற்கோ,  இன்னொரு சமூகத்திற்கோ பொருந்தாது.

ஆகவேதான் பிரச்சினைகள் வெவ்வேறு வடி வங்களில் வரும்; வெவ்வேறு வழியில் வரும். பெரும் பாலும், நம்முடைய மக்கள் எங்கு போனாலும், ஜாதி யைத் தூக்கிப் போகிறார்கள்; பெண்ணடிமையைத் தூக்கிப் போகிறார்கள். இவை ஒரு பக்கத்தில் இருந் தாலும்,

மனித உரிமைகள் என்று வரும்பொழுது,

பகுத்தறிவு என்று வரும்பொழுது,

மூடநம்பிக்கைகள் என்று வரும்பொழுது

வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். அந்தந்த நாட்டில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். அந்தக் கட் டுப்பாடு, அந்த அரசாங்க முறைகள், அவைகளுக்கும் நாம் ஒத்துப்போய், மிகச் சாமர்த்தியமாக நம்முடைய இயக்கத்தைக் கொண்டு செலுத்தவேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமாகும்.

குறையைப் பார்க்காதீர்கள்;

நிறையை பாருங்கள்!

எனவேதான், சில அமைப்பு முறைகளைச் சொல் லுகிறோம்.

வாய்ப்பு இடங்களில், 5 பேர் இருந்தால், ஒரு கிளை அமைப்பை அமைத்துவிடுங்கள். ஒருவர், இருவர் இருந்தால், ‘‘ஒருங்கிணைப்பாளர்'' என்ற அளவில் செய்யுங்கள். ஒருவருக்கொருவர் அடிக்கடி தொடர்பு கொள் ளுங்கள். ‘‘தன்முனைப்பு இல்லாமல்'' பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரிடத்திலும் குறைபாடுகள் உண்டு. குறையை நீங்கள் பார்க்காதீர்கள். அவர் களிடத்தில் ஒரே ஒரு விழுக்காடு நிறை இருந்தால், அந்த நிறையை மட்டும் நீங்கள் பெரிதாக்கி, அதை வைத்து அவரை ஈர்த்து, பெரிதாக்கிக் கொள்ளுங்கள்.

எனவே, விரோதிகளை நண்பர்களாக ஆக்குங்கள்; நண்பர்களை பகைவர்களாக ஆக்காதீர்கள். இது மிகமிக முக்கியமாகும். அதற்கடுத்து,

இப்பொழுது நீங்கள் எப்படி மாநாடு நடத்தினீர் களோ, அதேபோல, ரீஜினல் கான்பரன்சஸ் கன்வன் சன்ஸ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, பல முக்கிய தலைப்புகள், அந்ததந்த நாட்டிற்கு, உங்கள் நாட்டிற்கு எப்பொழுது, என்ன தேவையோ, அந்தந்த நாட்டிற் குரியதை தெளிவாக செய்யலாம்.

இன்டர்நேசனல் ஹியூமனிசம் அசோசியேசன்

உதாரணத்திற்கு, ஆபிரகாம் லிங்கன், பிளவரி, அடிமைத்தனத்தை ஒழித்த நாள் என்று சொல்லி, அமெரிக்கர்களையும் அழைத்து, சிறப்பாக, பெரியார் இன்டர்நேசனல் ஹியூமனிசம் அசோசியேசன் - அதுபோல ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து நடத்துங்கள்.

இதிலே மட்டும் அவர்கள் ஒன்றுபட்டால் போதும்; மற்றவற்றில் அவர்கள் மாறுபட்டால், அதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

அதேபோல, பகுத்தறிவு, மூடநம்பிக்கையின் எதிர்ப்பு நாள்.

இங்கர்சால்.

இங்கர்சாலைப்பற்றி அமெரிக்க மக்களே மறந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் பெரியார் எப்படி 1930 ஆம் ஆண்டில், இங்கர்சாலைப்பற்றி சொன்னார்கள் என்பதைப்பற்றி சொல்லுங்கள்.

அதுபோலவே, மார்ட்டின் லூதர்கிங் அவர்கள், எப்படி உரிமைக்காகப் போராடினார்களோ, அவரை முன்னிலைப்படுத்தி, பெரியாருக்கும், மார்ட்டின் லூதர் கிங்கிற்கும் என்னென்ன வாய்ப்பு. பெரியார் இன்டர்நேசனல் எப்படி மனித உரிமைக்காக, அவர் களோடு தோளோடு தோள் நிற்பதற்குத் தயாராக இருக்கிறது என்கிற நம்பிக்கையை ஊட்டுங்கள்.

அதுபோலவே, பெண்களுக்கான சிறப்பான வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

வாசிங்டன் மாநாடு

பெரிய சாதனையை செய்திருக்கிறது

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு என்பது சிறப்பான திட்டம்.

ஜெர்மனி மாநாட்டைவிட, வாசிங்டன் மாநாடு பெரிய சாதனையை செய்திருக்கிறது. நல்ல வெற்றி யைத் தந்திருக்கிறது.

அதைவிட மிக அருமையான வாய்ப்பு என்ன வென்று சொன்னால், சில நாள்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னின்ன நிகழ்ச்சிகள் அங்கங்கே நடத்தவேண்டும்.

சிகாகோவில், பாஸ்டனில், நியூஜெர்சியில், கலிபோர்னியாவில், சான்பிரான்சிஸ்கோவில் என்று எங்கெங்கே வாய்ப்பு இருக்கிறதோ அங்கே நடத் தக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.

இணைய தளம் என்பது இன்றைக்கு மிகவும் முக்கியமாகும். கணினி துறையில் நீங்கள் சிறந்து விளங்குகின்ற காரணத்தால், அதிலே என்னென்ன புதுமைகளைப் புகுத்தி, பெரியாருடைய கருத்து களைக் கொண்டு செல்லலாம் என்பதில் மிகச் சிறப்பான வகையில் பணிகளை மேற்கொள்ளுங்கள்.

மிகச் சிறப்பான வகையில், அங்கங்கே அமைப்பு களை உருவாக்குங்கள்.

உதாரணமாக, சிங்கப்பூரில் தமிழர் பேரவை என்ற பெயரில் அமைப்பு இருக்கின்றது. அதில் எல்லா அமைப்புகளும் இருக்கின்றன. அதில், நம்முடைய பெரியார் அமைப்பும் இருக்கிறது.

அதுபோன்று, எங்கெங்கே எதை எதை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

மலேசியாவில், அன்பழகன் இருக்கிறார் என்றால், அவர் எந் தெந்த அமைப்பிலே அதை செய்ய வேண்டும்; செய்ய முடியும் என்று முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

உதாரணமாக, நம்முடைய கருணாநிதி அவர்கள், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில், சீக்கிய பெருமக்கள், இசுலாமிய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். நம்முடைய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பழைய மாணவிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்களையும் அடையாளம் கண்டு, அவர்களையும் இதனோடு இணையுங்கள். அதன் மூலமாக நம்முடைய பயணம், இலகுவான பயணமாக இருக்கும். இதை நீங்கள் தொடர்ந்து செய்யக்கூடிய வாய்ப் பைப் பெறுங்கள்.

மூன்று காரணங்களை சொன்னார்கள்

இன்னும் ஒன்றை சொல்லி, என் னுரையை நிறைவு செய்யவிருக் கிறேன்.

அது என்னவென்று சொன் னால்,

என்னை அவர்கள் பாராட்டி, விருது அளித்தபொழுது, அதற்கு நான் நன்றி செலுத்தவேண்டும்; அதனுடைய பெருமை உங்கள் எல்லோருக்கும் உண்டு.

அந்த சைட்டேசன் என்பதில் மூன்று காரணங்களை சொன் னார்கள்.

ஒன்று,

அவருடைய சிந்தனை.

பெரியாரை சொல்லுகிறார்கள் என்றுதான் நான் கொள்ளுகிறேன், என்னை அல்ல.

இரண்டு,

எழுத்துக்கள்.

மூன்றாவது,

ஆக்டிவிசம் (செயல்பாடு).

எனவே, அமைப்பு ரீதியாக நாம் தெளிவாக வேண்டும். நம்முடைய தோழர்களிடம் சிறுசிறு கருத்து மாறுபாடுகள் இருக்கும். அதைப் பெரிதாக்க வேண்டாம், தயவு செய்து. அதுதான் என்னுடைய பணிவன்பான வேண்டுகோளாகும்.

யாரையும் நீங்கள் இழக்காதீர்கள்

யாரையும் புறந்தள்ளாதீர்கள்.

ஒரு சிறு புள்ளியாக இருந்தாலும், அதை பெரி தாக்கிக் காட்டவேண்டும். அதுதான் பெரியார் அவர் களுடைய முறை. ஷ்தமிழகத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் எல் லோருமே அதில் மிகப்பெரிய அளவிற்கு இருக் கிறோம்.

புதிய நண்பர்களை அழைத்து,

வாய்ப்புகளைக் கொடுக்கவேண்டும்!

அமெரிக்காவினுடைய ஹியூமனிசம் அசோசியே சனை இப்பொழுது இணைத்தது என்பது மிகப்பெரிய செயலாகும்.

உதாரணமாக, நம்முடைய இலக்குவன்தமிழ் அவர்கள், புதிய நண்பர்களையெல்லாம் அழைத்து வந்து, அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அது போன்று நிறைய அளவிற்கு புதிய நண்பர்களை அழைத்து, வாய்ப்புகளைக் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொருவரையும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் தயாராக்குங்கள்.

அங்கே அமைதியாக இருந்து செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. பெரிய அளவிற்கு எங்களைப் போன்று போராட்டக் களத்தில் இறங்கக் கூடிய வேலைகள் கிடையாது உங்களுக்கு. ஆகவே, அதனை நீங்கள் தெளிவாகச் செய்யுங்கள்.

நம்முடைய எண்ணத்தில்,

ரத்தத்தில் ஊறிவிட வேண்டும்

இறுதியாக ஒன்றைச் சொல்லுகிறேன்,

‘‘புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி''

என்று சொன்னபொழுது,

பெரியாரிடம் கேட்டார்கள், இது மதம் சார்ந்ததாக இருக்கிறதே, இதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள் கிறீர்கள்? என்று.

அதற்குத் தந்தை பெரியார்  விளக்கம் சொன்னார்,

அது மதம் சார்ந்ததல்ல. பகுத்தறிவு - யதார்த்தம் என்று.

‘புத்தம்'  என்பது தலைமை - ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு நான் இருக்கிறேன், என்னை ஒப்ப டைத்துக் கொள்கிறேன்.

தம்மம் என்பது கொள்கை - அந்தக் கொள்கையை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

மூன்றாவது சங்கம் - நிறுவனம், அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

எனவே, மேற்கண்ட மூன்றும் நம்முடைய எண் ணத்தில், ரத்தத்தில் ஊறிவிட வேண்டும்.

யாரையும் கடுமையாக விமர்சிக்காதீர்கள்.

அதோடு, யாரையும் கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்காதீர்கள். ஏனென்றால், அவர்களையே நாம் மறுபடியும் சந்திக்கவேண்டிய அவசியம்  இருக்கும்.

தமிழகத்தில், நம்மை விட்டு வெளியேறியவர்கள், என்னைக் கடுமையாகப் பேசியவர்கள், திராவிடர் கழகத்தைப்பற்றி கடுமையாக விமர்சித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு நெருங்கி வருகிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்?

நாம் அவர்களுக்குப் பதில் சொன்னதே கிடையாது. ஒரு உதாரணத்திற்காகத்தான் இதை நான் சொல் கிறேன்.

ஆகவேதான், தயவு செய்து, தள்ளி இருக்கிற வர்களாக இருந்தாலும், அவர்களை நெருக்குங்கள்; அழைத்து வாருங்கள், வாய்ப்பைத் தாருங்கள். புதிதாக வருகின்றவர்களுக்கு கதவைத் திறங்கள். மற்றவர்களை மனந்திறந்து பாராட்டுங்கள். அதன் மூலமாக இந்த நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக செய்யக் கூடிய வாய்ப்புகளைப் பெறுங்கள்.

வியப்படையக் கூடிய அளவிற்கு செய்யுங்கள்

ஒரு நல்ல இணைய தளத்தை உருவாக்கி, உங்களுடைய பணிகள் என்ன என்பதை சரியாகச் செய்து, விளம்பரம் செய்யாமல் பெரியார் இன்டர்நேசனல் என்று சொன்னால், வியப்படையக் கூடிய அளவிற்கு செய்யுங்கள்.

வாழ்க பெரியார்! வளர்க வெள்ளி விழா காணும் உங்களுக்கு மீண்டும் திராவிடர் கழகத்தின் சார்பில், எங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

இடையூறுகளைத் தாண்டும், தாங்கும் தடந்தோள்கள் உண்டு!

உங்களுடைய லட்சியப் பயணம் தொடரட்டும்!

எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும், அதனைத் தாண்டி, தடைக்கற்கள் உண்டென்றாலும், அதனைத் தாண்டும், தாங்கும் தடந்தோள்கள் உண்டு என்று காட்டுங்கள்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு தொடக்க விழா நிகழ்ச்சிபற்றி ‘‘இண்டியன் டிரிபியூன்'' (சிகாகோ பதிப்பு) நாளிதழில் வெளிவந்த செய்தி (19.11.1994)

- விடுதலை நாளேடு 13 11 19