செவ்வாய், 26 நவம்பர், 2019

தமிழர் தலைவரின் விருதுநகர் பிரகடனம்

'நீட்' - தேசிய கல்வி இரண்டையும் எதிர்த்து தமிழ்நாட்டில் களங்கள் அமைக்கப்படும்!

அடுத்த இரு மாதங்களிலும் இதே பணி தான் எங்களுக்கு

தமிழர் தலைவரின் விருதுநகர் பிரகடனம்

விருதுநகர், நவ.17 ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைக் குழி தோண்டிப் புதைக்கும் 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வு - குலக் கல்வியின் மறுபதிப்பான தேசிய கல்விக் கொள்கை - இவை இரண்டையும் எதிர்த்து - தமிழ்நாட்டில் களங்கள் காண்போம் -அடுத்துஇரு மாதங்களிலும் திராவிடர் கழகத்தின் முக்கிய பணி இதுதான். இதனை விருதுநகர் பிரகடனமாக அறிவிக்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு விருதுநகரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நேற்று (16.11.2019) முழு நாள் மாநாடாக வரலாற்று சிறப்புடன் நடந்தேறியது.

திறந்த வெளி மாநாடு

மாலை - திறந்தவெளி மாநாடாக விருதுநகர் மாவட்ட நூலகக் கட்டடம் அருகில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.

மாநாட்டின் நிறைவுரையாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

1970இல் தந்தை பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழாவின் தொடக்க விழா மாநாடு இன்று காலை முதல் வெகு சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

காவல்துறையினரின் கவனத்துக்கு...

அதனுடைய நிறைவு நிகழ்ச்சியாக இது திறந்த வெளிமாநாடாக - பொதுக் கூட்டமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக அயராது உழைத்த தோழர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கின்றேன்.

இடையில் காவல்துறை கொடுத்த தொல்லைகள், இடர்ப் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல; சட்டத்திற்குக் கட்டுப்பட்டு  நடக்கக் கூடியவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள். திராவிடர் கழகம் நடத்தும் பொதுக் கூட்டங்களிலோ, மாநாடு களிலோ திராவிடர் கழகத்தால் ஒரு சிறு அளவுக்குக்கூட சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51கி-லீ என்ற  பிரிவின் அடிப்படை உரிமை என்ற பகுதி என்ன கூறுகிறது? விஞ்ஞான மனப்பான்மையை, எதையும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் உரிமையை, மனிதநேயத்தை, சீர்திருத்த உணர்வைப் பரப்ப வேண்டிய - முன்னோக்கிச் செலுத்த வேண்டிய கடமையை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறதா இல்லையா?

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதைப் பரப்பும் பணியில் நாங்கள் ஈடுபட்டால், அதற்கு முட்டுக்கட்டை போடலாமா? காவல்துறை அனுமதி மறுக்கலாமா?

சட்டத்தை மதிக்க வேண்டியது காவல்துறையின் கடமையல்லவா?

நாங்கள் சமூக நீதிக்காகப் பாடுபடுகிறோம் - போராடுகிறோம் என்றால்எங்கள் குடும்பத்திற்காகவா? ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காகத் தானே! காவல்துறையில் பணியாற்றுவோரே  - உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் பாடுபடுகிறோம். (கைதட்டல்) என்பதை மறந்து விடாதீர்கள்!

திராவிடர் கழகம் என்பது சமுதாயப் புரட்சி இயக்கம். ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் கூட நிற்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்ட இயக்கம். கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே எங்களிடத்தில் இடம் இல்லை.

தந்தை பெரியார் பற்றி அறிஞர் அண்ணா கூறுவார், "தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார். அவர் வகுப்புகள், மாலை நேரங்களில் மைதானங்களில் நடைபெறும்" என்றாரே.

பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் திறந்து வைத்தார்.

மதத்தைப் பற்றிப் பேசக் கூடாதா?

மதத்தைப் பற்றிப் பேசக் கூடாது என்று எழுதிக் கொடுக்கிறார்கள் காவல்துறையினர். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யும் உரிமை - கருத்துரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. சட்டப்படி அதைத் தடுக்கும் அதிகாரம் காவல்துறைக்குக் கிடையவே கிடையாது.

ஏன் இந்து மதத்தை எதிர்க்கிறோம்? இந்து மதத்தின் மிக முக்கியமான சாஸ்திரம் மனுதர்மம். அதன் எட்டாவது அத்தியாயம் - 415ஆம் சுலோகம் என்ன கூறுகிறது? சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று எழுதப்பட்டிருக்கிறதே! இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

நாம் விபச்சாரி மக்களா?

நம் எல்லோரையும் விபச்சாரி மக்கள் - சூத்திரர்கள் என்று கூறும் மதம் தேவையா? வங்காளக் குடா கடலில் அதனை வீசி எறிய வேண்டாமா?

மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் அறவாணன் அவர்கள் 'தமிழன் அடிமையானது எவ்வாறு?' என்ற ஓர் அருமையான நூலினை எழுதியுள்ளார்.

1901ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழர்களில் படித்தவர்கள் ஒரு சதவீதத் துக்குக் குறைவு என்று ஆதாரத்துடன் கூறியுள்ளாரே -

இன்று இந்த நிலை மாற்றத்திற்கு யார் காரணம்? பாடு பட்டவர்கள் யார்? போராடியவர்கள் யார்? சிறை சென்ற வர்கள் யார்? காவல்துறையிலும் அதிகாரிகளாக எங்கள் தமிழர் வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் யார்?

வரலாறு படைத்த

விருதுநகர்

1970ஆம் ஆண்டில் தந்தை பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் 50ஆம் ஆண்டு (பொன் விழா) தொடக்க விழா மாநாடு பச்சைத் தமிழர் - கல்வி வள்ளல் காமராசர் பிறந்த விருதுநகரில் நேற்று வெகு எழுச்சியுடனும், நேர்த்தியுடனும் நடைபெற்றது. மாநாட்டையொட்டி, நகரில் எப்பக்கம் திரும்பினாலும் கொடி!  கொடி!! திராவிடர் கழகக் கொடி மயம்தான் - கொடியோர் செயல் அறவே பறக்கும் கொடி - திராவிடர் கழகக் கொடி! எந்த மாநாட்டிலும் இவ்வளவுக் கொடிகளைக் கண்டதில்லை.  ஊரே வாய் விட்டுப் பேசும் அளவுக்கு இந்தக் கொடிக் காடு காற்றில் அசைந்தாடி  மாநாட்டிற்கு வரவேற்பு பதாகைகளாகக் கட்டியம் கூறின. சுவர் எழுத்துகளும் எங்குப் பார்த்தாலும்; ஓவியர் சுந்தரப் பிரபாகரனின் கை வண்ணம் பளிச்! பளிச்!

வண்ண வண்ண சுவரொட்டிகள் எங்கும் கண் சிமிட்டின. பொது மக்களுக்கு வரவேற்பு சுவரொட்டி தனி முத்திரை. முற்பகல் மாநாடு விருதுநகர் இராம மூர்த்தி சாலையில் நடுநாயகமாக அமைந்துள்ள எஸ்.எஸ்.கே. சரஸ்வதி திருமண மண்டபத்தில் எவ்விதத்திலும் தொய்வின்றி அடர்த்தியாக நிகழ்ச்சிகள் அணி வகுத்தன. கீழ்த்தளத்தில் பகுத்தறிவுப் பொருட் காட்சி பொது மக்களைக் கவர்ந்தது.

மண்டபம் நிரம்பி வழிய வெளியிலும் மக்கள் பார்க்கும் வண்ணம் ஒலி ஒளி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சின்ன சின்ன விடயங்களில் கூடக் கவனம் செலுத்தப்பட்டு எதிலும் நிறைவு என்ற முத்திரை ஜொலித்தது.

கடைவீதி வசூல் என்பது வெறும் பண வசூல் மட்டுமல்ல - மாநாட்டுக்குத் தலைசிறந்த விளம்பர யுத்தி அது. அதனை நமது இளைஞரணி தோழர்கள் சிறப்பாகவே செய்தனர்.

மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் அ.சுரேஷ், மன்னார்குடி மாவட்ட துணைச் செயலாளர் விக்கிரவாண்டி வீ.புட்பநாதன், விருதுநகர் செந்தில், விருதுநகர் கணேசமூர்த்தி, தஞ்சை யோவான்குமார், தஞ்சை குமார், ஏ.பிரகாஷ், அருப்புக்கோட்டை திருவள் ளுவர், அருப்புக்கோட்டை ராஜேந்திரன், கிருஷ்ண மூர்த்தி, தென்காசி வே.முருகன், விருத்தாசலம் பிரவீன் குமார். (இவர்களுக்குக் கழகத் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்).

மாலையில் நடைபெற்ற திறந்த வெளி மாநாட்டில் மக்கள் வெள்ளம் அலை பாய்ந்தது. போடப்பட்ட நாற் காலிகள் போதாது என்று மேலும் மேலும் நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு, போடப்பட்டுக் கொண்டே இருந்தன.

கழகத் தோழர்களைத் தவிர பொது மக்களின் கூட்டம் பெரும் அளவில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. பல இளைஞர்கள் கழகத்தில் இணைந்து கொள்ள பொறுப்பாளர்களிடம் தங்கள் தொலைப்பேசி எண் களையும் தாமாக முன் வந்து  கொடுத்தனர்.

நீதிக்கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு (இருநாள்) 1931இல் விருதுநகர் ஆர்.கே. சண்முகம் தலைமையில் நடைபெற்ற சிறப்புக்குரியது.

அந்த ஊரில் தான் இந்த மாநாடு வரலாற்றைப் படைத்தது - வந்திருந்தவர்களை விருந்தினர்களாகக் கருதி, முற்பகல் மாநாடு நடைபெற்ற -  மண்டபத்தின் கீழ்பகுதியில் மதிய உணவளித்து உபசரித்தது கூடுதல் சிறப்பாகும். விருதுநகர் பகுத்தறிவாளர் கழக மாநாடு வெற்றி முரசொலித்தது என்று மனந்திறந்து பாராட்டலாம்!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை

ஒழித்தது யார்?

1952களில் ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வரவில்லையா? அதனை எதிர்த்து ஒழித்தது யார்? தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தானே. அதற்குத் தமிழர்கள் அனைவரும் உறுதுணையாக நிற்கவில்லையா?

அந்தக் குலக் கல்வி திட்டம் ஒழிக்கப்படாமல் இருந் திருந்தால் தமிழர்கள் அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ்.,களாகவும், டாக்டர்களாகவும், நீதிபதிகளாகவும் வந்திருக்க முடியுமா?

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம்

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததே அதனை ஒழித்தது யார்? நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராகவிருந்த போது தந்தை பெரியார் அழுத்தமாகக்குரல் கொடுத்த நிலையில், அந்தத் தடையை நீக்கவில்லையா? சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்ற நிலையை அன்று நீக்காமல் இருந்திருந்தால், தமிழர் களில் இன்றைக்கு இத்தனை டாக்டர்களைப் பார்த்திருக்க முடியுமா?

எத்தனை ஆண்டு காலமாக சரஸ்வதி பூசை கொண்டாடிக் கொண்டிருந்தோம்? பாட்டி சரஸ்வதிக்கு சரஸ்வதி என்று கையெழுத்துப் போடத் தெரியுமா?

இந்த மாநாட்டில் முக்கியமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 21 தீர்மானங்களும் முக்கியம்தான். அதனுள் முக்கியமானது 'நீட்'டை ஒழிப்பது - புதிய கல்விக் கொள்கையை ஒழிப்பது என்பதாகும்.

மாணவர்களே, பெற்றோர்களே!

மாணவர்களே, பெற்றோர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!! 'நீட்'  என்னும் கொடுவாள் நம் தலைக்கு மேல் தொங்குகிறது. நடைபெற்ற 'நீட்' தேர்வுகளில் நம் பிள்ளைகள் மிகவும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். 'நீட்' கோச்சிங்குக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து எல்லோ ராலும் செல்ல முடியுமா?

நாட்டில் எத்தனையோ கல்வித் திட்டங்கள் இருக்கும் போது  -  சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் 'நீட்' என்ற நுழைவுத் தேர்வை நடத்தினால்  யாருக்கு சாதகமாக இருக்கும்? என்பதை எண்ணிப் பாருங்கள். 'நீட்' தேர்வில் எத்தனை எத்தனை ஊழல்கள், ஆள் மாறாட்டங்கள், எத்தனைத் தற்கொலைகள்!  சிந்திக்க வேண்டாமா?

'நீட்' எழுதாமல் டாக்டர்கள் ஆனவர்கள்

புகழோடு விளங்கவில்லையா?

உலகம் பூராவும் தமிழ்நாட்டில் படித்துப் பட்டம் பெற்ற டாக்டர்கள் புகழோடு விளங்குகிறார்கள். அவர்கள் எல்லாம் 'நீட்' எழுதிதான் டாக்டர்கள் ஆனார்களா? நமக்கு முன்  சிறப்பாகப் பேசினாரே நமது டாக்டர் ஷாலினி, அவர் 'நீட்' எழுதிதான் டாக்டர்ஆனாரா?

விண்வெளியில் சாதனைகளை நிகழ்த்தும் நமது சிவனும், மயில்சாமி அண்ணாதுரையும் கிராமப்புறப் பள்ளிகளில் படித்து இன்றைக்குப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளாக ஜொலிக்க வில்லையா? இவர்கள் 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வு எழுதிதான் இந்த அளவுக்கு உயர்ந்தார்களா?

'நீட்' ஒரு சூழ்ச்சிப் பொறி!

'நீட்' என்பதுஒரு சூழ்ச்சிப் பொறி! முதல் தலைமுறையாக தத்தித் தத்திப் படித்து டாக்டராக வேண்டும் என்று துடிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணத்தைத் தடை செய்யும் சூழ்ச்சியாகும் - படுகுழியாகும்.

புதிய கல்வியாம்! 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகள் எல்லாம் அரசாங்க தேர்வுகளாம். இவை எல்லாம் தேவையா? தேர்வைக் கண்டு அஞ்சும், வெறுக்கும் ஒரு மன நிலைக்கு மாணவர்களை ஆளாக்கலாமா?

இந்த விருது நகர்  பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் விருதுநகர் பிரகடனமாகவே இதை அறிவிக்கிறோம்.

போரட்டம்! போராட்டம்!! போராட்டம்!!!

'நீட்'டை - தேசிய கல்விக் கொள்கையை ஒழிக்கும் போராட் டத்தைத் தொடங்குவோம் - அதற் கான களங்களை அமைப்போம். இன்னும் இரு மாதங்களில் இதற் கொரு முடிவைக் காண்போம்.

சமூகநீதியில் அனைவரையும் ஒருங்கிணைப்போம். மாணவர்கள், பெற்றோர்கள் அனைத்துத் தரப் பினரின் பொதுப் பிரச்சினை இது.

'நீட்'டை ஒழிக்கா விட்டால் மறு படியும் நாம் மனுதர்ம காலத்திற்குத் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? உயர் ஜாதியில் ஏழையாக இருப்பவர்களுக்கு

10 சதவீத இடஒதுக்கீடாம், அரச மைப்புச் சட்டத்தில் இதற்கு இடம் உண்டா? பொருளாதார அளவு கோல் செல்லாது என்று ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்புக் கூறவில்லையா?

யாருக்கான ஆட்சி?

சட்டத்தையும் புறந்தள்ளி, உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்காமல் உயர் ஜாதியினர்மீது அக்கறை கொள்ளும்  மத்திய பிஜேபி யாருக்கானஆட்சி?

அருமைப் பெரு மக்களே புரிந்து கொள்வீர்!

இம்மாநாட்டில் நிறை வேற்றப் பட்டுள்ள தீர்மானத்தை செயல்படுத்த ஆதரவு தாரீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

தொகுப்பு: மின்சாரம்

பகுத்தறிவாளர் கழகப் பொன் விழா தொடக்க மாநாட்டு

பகுத்தறிவாளர் கழகப் பொன் விழா தொடக்க மாநாட்டில் திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் நிறைவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரைகேட்கத் திரண்டிருந்தோர் (விருதுநகர், 16.11.2019)

மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை

திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசாவிற்கு இல.திருப்பதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நல்லதம்பியும், மருத்துவர் ஷாலினிக்கு ஆதவனும் பயனாடை அணிவித்தனர்.

ஊடகவியலாளர் திருமாவேலன், இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் நரேந்திர நாயக், டென்மார்க்கைச் சேர்ந்த கணித மேதை கிறிஸ்டி கேரன், கேரள யுத்தி வாதி சங்க தலைவர் சுகுமாரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் சிறப்புச் செய்தார்.

 

தமிழர் தலைவருக்கு போடி மாவட்டக் கழகத்தின் சார்பில் ரகுநாகநாதன் குடும்பத்தினர் ஏலக்காய் மாலை அணிவித்தனர்.

 - விடுதலை நாளேடு 17 1119

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக