புதன், 28 நவம்பர், 2018

மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.மாநாட்டில் திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்புரையாற்றினார்.மும்பை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பெரியார் & அம்பேத்கர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயனாடை அணிவித்து தந்தை பெரியார் சிலையினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன், மகாத்மா ஜோதிபா ஃபுலே அறக்கட்டளை நீதாபாய் புலே ஆகியோர் வழங்கினர்.

-  விடுதலை நாளேடு, 25.11.18

* நீதித்துறையிலும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை - தேவை!

நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் படம் திறந்திடுக!

சமூகநீதி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.

புரட்சியாளர் மகாத்மா ஜோதிபா ஃபுலேவின் அய்ந்தாம் தலைமுறையினரான நீதாபாய் புலே அவர்களுக்கு கழகத்தின் சார்பில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி சிறப்பித்தார். வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், மும்பை ரவிச்சந்திரன் உடன் உள்ளனர்.

மும்பை, நவ.27 தனியார் துறைகளில் இடஒதுக்கீடு, தந்தைபெரியார் படம் நாடாளுமன்றத்தில் திறப்பு உள்ளிட்ட ஒன்பது (நவமணி) அரிய தீர்மானங்கள் மும்பையில் நடை பெற்ற சமூக நீதி மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டன. அனைத்து தீர்மானங்களையும் மகளிரணியினர் முன்மொழிந்தனர்.

மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  (24-11-2018 சனிக் கிழமை மாலை நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

சமுக நீதி தொடர்பான இடஒதுக்கீடு முறைமைகளைச் சட்டமாக்கி 9-ஆம் அட்டவணையில் சேர்த்திடுக :-

நடுவணரசில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 60 (அறுபது) ஆண்டுகளுக்கும் மேலாகவும், பிற்படுத்தப்பட் டோருக்கு 1993ஆம் ஆண்டு முதலும் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் இருப்பினும், பல மாநிலங்களிலும், மத்திய ஆட்சியிலும் வெறும் அரசின் ஆணை மூலமாக மட்டுமே இந்த இடஒதுக்கீடு தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பு வந்தாலும், உடனே நீதிமன்றம் தலையிடும் போக்கு அதிகரித்துவரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, அவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்க்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. சிறீவள்ளி தயாளன்

தீர்மானம் வழிமொழிந்தவர் : மானமிகு இ.அந்தோணி,

தீர்மானம் 2

தனியார் துறையில் இடஒதுக்கீடு:-

புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக, மத்திய மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தனியார் துறை அரசாங்கத்தால் வெகுவாக ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, அதிகம் பாதிக்கப்படுவோர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தபட்ட, பழங்குடியின மக்கள் தான்.  தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில், உயர் பதவிகளில் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாய்ப்பு என்பது குதிரைக் கொம்பே என்ற நிலைதான் உள்ளது.

தனியார் துறை என்றாலும், அரசின் அனைத்துச் சலுகைகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகவே சமூகப் பொறுப்பு தனியார் துறை நிறுவனங்களுக்கு கட்டாயம் உண்டு என்பதால் மேலைநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இடஒதுக்கீடு நேர்மறை செயல்பாடு நடைமுறையில் உள்ளது. அதே போன்று, இந்தியாவிலும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு முறையே 27, 15, 7.5 விழுக் காடு இடஒதுக்கீடு அளித்திட வகை செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியு றுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. பொன்மாலா ஆரிய சங்காரன்

தீர்மானம் வழிமொழிந்தவர்: மானமிகு அ.கண்ணன்

தீர்மானம் : 3

நீதித் துறையில் இட ஒதுக்கீடு :-

நீதிபதிகள் நியமனங்களில் கீழமை நீதிமன்றங்களில் தற் போது இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் இட ஒதுக்கீடு முறை இல்லை. தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ள 28 நீதிபதிகளில் (மொத்தம் 31 பதவிகள்) ஒருவர் கூட தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அல்ல. பிற்படுத்தப்பட்ட சமுகத்திலிருந்து ஒரே ஒருவர் மட்டும் நீதிபதியாக பதவி வகிக்கின்றார்.  இந்திய நாட்டு மக்கள் தொகையில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் தொகை 80 விழுக்காடு என்ற நிலையில் உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் இதுகாறும் வழங்கபட வில்லை.

உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் பெரும் பான்மையினர் மேல்ஜாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என்பது ஓர் அதிர்ச்சியானத் தகவலாகும். எனவே இந்தியாவின் அனைத்து நீதி மன்றங்களிலும் இந்திய அரசமைப்பில் வழங்கப் பட்டி ருக்கும் இட ஒதுக்கீடு முறை காழ்ப்புணர்வின்றி நடைமுறைப் படுத்தப் பட்டு, உரிய விகிதாச்சார அடிப்படையில் நியமனங்கள் செய்யப் பட  வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. நங்கை குமணராசன்

தீர்மானம் வழிமொழிந்தவர் : மானமிகு வெ.சித்தார்த்தன்

தீர்மானம் : 4

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு

நிரந்தர விலக்கு வேண்டும்:-

சூத்திரனுக்கு கல்வி மறுக்கும் மனு சாஸ்திரத்தின் புதிய வடிவம் தாம் நீட் தேர்வு. பணம் படைத்தவன் வீட்டுப் பிள் ளைகள் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற  நிலையை உருவாக்கியதன் மூலம் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை நிரந்தர மாக்கி சமூக நீதிக்கு எதிரான செயலின் வடிவமே நீட் தேர்வு.

நீட் தேர்வு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தன் 92 ஆவது அறிக்கையில் விருப்பமில்லாத மாநிலங்களை விட்டுவிட்டுக் கல்வி நீட் தேர்வை அமல் படுத்தலாம் என்று அறிக்கை அளித்தப் பின்னரும் நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குக் கோரியும் கல்வியை மாநில அரசின் பட்டியலில் சேர்க்கவும் உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன் மொழிந்தவர் : திருமதி ஜூலியட் இரவிச் சந்திரன்.

வழிமொழிந்தவர்கள்: மானமிகு ஜே.வில்சன்; அ.இராதா கிருட்டிணன்

தீர்மானம்- 5

வெளிமாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு:-

இந்தியாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சமுக நிலையின் காரணமாக வாழ்வாதரம் தேடி 100 ஆண்டுகளுக்கு முன்னரே பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். எனினும், இந்திய அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப் பட்டுள்ள கல்வி, வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு இந்த மக்களுக்கு புலம் பெயர்ந்த மாநிலங்களில் மறுக்கப் படுகிறது. இது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான ஓர் உரிமை மறுப்பு என்று கூடச் சொல்லலாம்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்கள் கலைஞர் மு. கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோர் மகராஷ்ட்ரா மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இது மட்டுமின்றி மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் திருவாளர்கள் பி.சவுந்திர ராஜன், சி.குப்புசாமி ஆகியோர் நாடாளு மன்றத்திலும் பேசியுள்ளனர். மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத்தின் ஒரே தமிழ் சட்டமன்ற உறுப்பினரான கேப்டன் தமிழ்ச்செல்வன் அவர்களும் மகாராஷ்டிரா சட்ட மன்றத்தில் குரல் எழுப்பியதுடன், முதல்வரிடமும் பல முறை வலியுறுத்தியுள்ளார். இவர்களுக்கு இம்மாநாடு நன்றி தெரிவிப்பதுடன், வெளிமாநிலங்களில் வாழும் மக்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின் படி இட ஒதுக்கீடு முறையை அமல் செய்திட உரிய சட்டத் திருத்ததை முன்னெடுக்குமாறு மகராஷ்டிர மாநில அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. பேரரசி காமராசு

வழிமொழிந்தவர்கள்: மானமிகு சங்கர் திராவிட். மு.சசிகுமார்

தீர்மானம்: 6

ஆணவப் படுகொலைகளுக்கு முடிவு கட்டுக.

காதல் திருமணங்கள் சாதி மறுப்பு திருமணங்களாகும் போது ஆதிக்கச் சாதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபடு கின்றனர். தமிழகத்தில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற சாதிய ஆணவப் படுகொலைகள் வன்மையாக கண்டிக்கத் தக்கன. அச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர் : திருமதி. உமா கணேசன்

வழிமொழிந்தவர்கள்: மானமிகு இசக்கிப் பாண்டியன், பரமசிவம்

தீர்மானம்: 7

கிரீமிலேயர் முறையை நீக்குக:-

மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப் பட வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்த பிறகும் இதுவரை பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு 12  விழுக்காடு அளவிலேயே உள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) புகுத்தப்பட்டதும் இதற்கொரு முக்கிய காரணமாகும். அர சமைப்புச் சட்டத்தில் எங்கும் காணப் படாத இந்த கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-8

நாடாளுமன்றத்தில்

தந்தை பெரியார் படத்தினைத் திறந்திடுக !

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பாடுபட்டதற்காக இந்திய அரசால் தாமிரப் பட்டயம் அளித்தும் அவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டும், 125 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டும், மதிப்பளிக்கப்பட்டவரும் அய்.நா,வின் யுனஸ்கோ அமைப்பின் சார்பில் பாராட்டு விருது அளிக்கப்பட்டவரும், மக்கள் மத்தியில் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பரப்புரை செய்து பெருவெற்றி கண்ட புரட்சியாளரும் பெண்ணுரிமைக்கான உயர் சிந்தனை களைக் கூறியவரும், போராடிப் பல உரிமைகளை அவர் களுக்கு ஈட்டித் தந்தவரும், சமூக நீதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு இந்திய அரசமைப்புச்சட்டத்தில் முதல் திருத்தம் மூலம் நாடு முழுவதும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படுவதற்கு முழு முதல் காரணமாக இருந்தவரும்,  பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் உருவப் படத்தினை நாடாளுமன்றத்தில் திறக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும்  தந்தை பெரியார் பெயரில் ஆய்வுத்துறை ஒன்று தொடங்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 9

நீதி மன்ற தீர்ப்புகளை

மத ஈடுபாடுகளின்றி நிறைவேற்றிடுக!

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று பாலினப் பாகுபாடு இன்றி வழிபடும் உரிமையை உச்ச நீதிமன்றம் தனது    தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்புக்கு எதிராக சட்டத்தினை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு கோவிலுக்கு வழிபட வரும் பெண்களை வழிமறித்து  உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதித்துச் செயல்பட மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, காங்கிரசு உள் ளிட்ட கட்சிகள் மற்றும் இந்துமத அமைப்புகளின் அண்மைக் கால நடவடிக்கைகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

வாக்கு வங்கி அரசியலுக்காக மத உணர்வுகளைத் தூண்டி சட்டத்தைக் கையிலெடுக்கும் போக்கும் அதற்குத் துணைபோகின்ற அரசியல் கட்சிகள், குறிப்பாக தேசியக் கட்சிகள் என்று பறைசாற்றிக்கொள்ளும் பா.ஜ.க.; காங்கிரசு, நடவடிக்கைகள் இந்தியாவின் மதச் சார்பற்ற கொள்கைக்கும், மாநிலங்களின் இறையாண்மைக்கும் பெரும் தீங்காக அமையும் என்பதையும் இம்மாநாடு கவலையுடன் சுட்டிக் காட்டுவதுடன் அவ்வாறு செயல் படும் அரசியல் கட்சிகள் இந்திய நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி கருதி இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்த்திடுமாறு வேண்டுகின்றது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மும்பையில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்றோர்

-  விடுதலை நாளேடு, 27.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக