ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பேச்சே இவரது மூச்சு(அமெரிக்க நாத்திகர் ஓப்ரா)


உலக ஊடகங்கள், முன்னணி பத்திரிகைகளால் ஆற்றல் மிக்கவர், செல்வாக்கு உள்ளவர், சக்தி வாய்ந்தவர் என்று பாராட்டப்பட்ட ஒரு பெண். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சிறு வயதிலேயே பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டவர்.
ஆனால், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைத் தலைகீழாக மாற்றி, உலகப் பிரபலங்கள் எல்லாம் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படமாட்டோமா என்று ஏக்கப்பட வைத்தவர். இந்தப் பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஓப்ரா வின்பிரே.
உலகின் மிகுந்த செல்வாக்கான பெண் இவராக இருக்கலாம் " என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பாராட்டப்பட்டவர். அதே ஓபாமா முன்னால் கால் மேல் கால் போட்டு உரையாடக்கூடிய சகஜத்தை ஓப்ரா பெற்றிருந்தார். இதற்குக் காரணம் உலகின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளராக அவர் இருந்ததுதான்.
அவருக்கு முந்தைய தலைமுறை யில் சினிமா நடிகர், நடிகைகள் பெற்றிருந்த புகழை டிவி மூலம் பெற்றவர் ஓப்ரா. 25 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்த தி ஓப்ரா வின்பிரே டாக் ஷோ'வை நிறுத்துவது பற்றி யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்த நிகழ்ச்சி அவ்வளவு புகழ் பெற்றவை.
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது, அவருடைய ஆண்டு வருமானம் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல். இப்படி உலகப் புகழ் பெற்றவராகவும், பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஓப்ரா, சிறு வயதில் தனக்கு நேர்ந்ததைப் போல மற்றக் குழந்தைகளுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதிகொண்ட வராக இருந்தார். தனது பணத்தில் பெரும் பகுதியைக் கறுப்பின ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்குச் செலவிட்டுவருகிறார்.
அதற்குக் காரணம் இருக்கிறது. வறுமை காரணமாகச் சிறு வயதில் பல நேரம் கோணிச் சாக்கே அவரது உடையாக இருந்திருக்கிறது. அப்போது பாட்டி வெர்னிடா லீயிடம் வளர்ந்தார் ஓப்ரா. அவர் அடிக்கடி வீட்டு வேலைக்குப் போய்விட்டதால், பிறகு தந்தையிடம் விடப்பட்டார்.
அங்கு நெருங்கிய உறவினர்களாலேயே பல முறை பாலியல் வன்முறைக்கு உள்ளானார். கறுப்பினப் பெண்களுக்கு அதுவே அன்றைய நியதியாக இருந்தது. பிறகு காதல் கொண்டவருடன் 14 வயதிலேயே தாயானார். ஆனால், சில நாட்களில் அக்குழந்தையைப் பறிகொடுத்தார்.
மற்றொருபுறம், சிறு வயதில் இருந்தே ஓப்ராவின் பேச்சுத்திறமையும், வாசிப்பும் மேம்பட்டிருந்தன. இந்த இரண்டையும் கொண்டு சமூகம் அவர் மீது குத்திய ஒவ்வொரு முத்திரையையும் தகர்க்க ஆரம்பித்தார்.
பேச்சுத் திறமை மூலம் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே 19 வயதில் ரேடியோ செய்தி வாசிப்பாளர் ஆனார். அந்த வருமானமும் போதாத நிலையில், அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டதன் மூலமாகக் கிடைத்த தொகை மூலம் கல்லூரி கட்டணங்களைச் செலுத்தினார்.
கொஞ்ச காலத்தில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தார். அமெரிக்காவில் அந்தக் காலத்தில் ஊரின் வாயை அடக்குவதற்காகக் கறுப்பினப் பெண்கள் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் அவர்களுக்கு, முக்கியப் பொறுப்பு கள் வழங்கப்பட்ட தில்லை. ஆனால், ஓப்ரா அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், தன் இயல்பான கடும் உழைப்பைச் செலுத்தினார்.
புகழ்பெற்ற பேச்சு
அடுத்து பால்டிமோர் தொலைக்காட்சி நிலையத்தில் வேலை பார்த்தபோது எப்படி பேட்டிகளை எடுப்பது, வி.அய்.பிக் களிடம் எப்படி தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டார். 1984இல் ஏ.எம்.சிகாகோ தொலைக்காட்சி நிறுவனமே, ஓப்ராவை வேலைக்குச் சேர அழைத்தது.
அங்கேதான் தனது அடையாளமான டாக் ஷோ நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அது மிகப் பெரிய ஹிட். அப்போது புகழ்பெற்றிருந்த பில் டொனாகு டாக் ஷோ'வை அது விஞ்சியது. டாக் ஷோவைத் தொகுத்து வழங்குவதில் தனி ஆளுமையாக வளர்ந்த பின் ஹார்ப்போ புரொட சன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, தனது நிகழ்ச்சி களைத் தானே தயாரித்தார்.
நலப்பணிகள்
தனது வருமானத்தின் பெரும் பகுதியை ஏஞ்சல் நெட்வொர்க் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார். கறுப்பினக் குழந்தைகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினாலும், இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் குழந்தைகளின் படிப்புக்கும் அவர் உதவி வருகிறார்.
தென்னாப்பிரிக்காவில் ஓப்ரா வின்பிரே பெண்கள் தலைமைப்பண்பு அமைப்பை நடத்தி வருகிறார். கறுப்பின மாணவிகளின் ஆளுமைப் பண்பை வளர்க்கும் கல்வி நிறுவனம் அது.
ஓப்ராவின் வார்த்தைகளிலேயே அவரது வாழ்க் கையைச் சொல்வதென்றால், இந்த உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது தெரியுமா? ஒருவர் தனது அணுகு முறையை மாற்றிக்கொண்டால் தங்கள் வாழ்க்கையையே மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான்.
போராட்டம் இல்லையேல் வலிமை நமக்குக் கிடைக்காது. உங்கள் மனக்காயங்களைப் புத்திக்கூர்மையாக மாற்றுங்கள். அதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம்"
-விடுதலை,10.6.14

சனி, 12 டிசம்பர், 2015

பெரியார்-நார்வே நாட்டு அறிஞர் பெருமிதம்


நார்வே, நவ.6- நார்வே நாட்டுக்காரர் தமிழ் நாட்டுக்காரர் அறவழி என்று அறிந்தவுடன், ஓ, நீங்கள் பெரியார் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்று கேட்டு அசத்தினார் நார்வே நாட்டுப் பேராசிரியர்.
இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அறவழி அவர்கள் திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பிய கடிதமும், தகவல்களும் வருமாறு: வணக்கம், என் பெயர் அறவழி. நான் நார்வே நாட்டின் பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணி யாற்றுகிறேன். பணி தொடர்பான மூன்று நாள் பயிற்சி கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அலுவலக பணி நிமித்தமாக நான் முதல் நாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை;  மறு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற போது பயிற்சியாளர்  அர்லிட் நொர்டெ பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு என்னைப்பற்றி அனைவரிடமும் அறிமுகப் படுத்தும்படி கூறினார். அதில் நான் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர். எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றதும் அவர் வியப்படைந்தார். அவரது அடுத்த கேள்வி நீங்கள் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இருந்து வந்தவரா? என்று கேட்டார். மேலும் அவர், தந்தை பெரியாரின் கருத்து களை பல காலங்களாக படித்து வருபவர் என் றும், அவரது கருத்து களை தவறாது பின் பற்றிவருவதாகவும், கூறினார்.

அதன் பிறகு நானும், அவரும் தந்தை பெரி யாரின் சிந்தனைகள் பற்றி பல கருத்துகளை பரிமாறிக் கொண் டோம். ஆனால் அவர் என்னைவிட பெரியா ரைப்பற்றி அதிகம் அறிந்துள்ளார். கருத் தரங்கம் முடிந்ததும் அவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டேன். நாங்கள் இருவரும் பேசியது மற்றும் தந்தை பெரியார் பற் றிய அர்லிட் நொர் டெவின் கருத்துகளை பெரியார் பகுத்தறிவு என்ற எனது  சமூக இணைய தளத்தில் பதியவிட்டிருந்தேன். அது உடனடியாக பல அயல்நாட்டு நண்பர் களிடம் சென்றடைந் தது. உடனடியாக இதை செய்தியாக்கி நார்வே உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு தந்தை பெரி யார் மற்றும் ஆசிரியர் வீரமணி அவர்களின் நிழற்படத்துடன் அனுப்பி வைத்தேன்.
அதை அந்த பத்திரிகை அப்படியே மறுநாள் வெளியிட்டிருந்தது.  தந்தை பெரியாரின் கருத்துகள் மற்றும் திராவிடர் கழகத்தின் சமுதாயப்பணிகள் கடல் கடந்து அய் ரோப்பிய நாடுகளிலும் மதிப்புமிக்க ஒன்றாக இருப்பதை தமிழக மக்களுக்குத் தெரி விக்கும் விதமாக இந்தச் செய்தியை தெரிவிப்ப தில் பெருமையடைகி றேன். - இவ்வாறு  அறவழி கிருபானந்தன் (பொறி யாளர் ரெனிஸெர்ச்ன் எஸ்லேவ் இரிக்ச்சன் செண்டர் நார்வே) அவர்கள் வெளியிட் டுள்ள செய்திக் குறிப் பில் தெரிவித்துள்ளார்.
-விடுதலை,6.11.13

வெள்ளி, 11 டிசம்பர், 2015

ஜெர்மனியில் - திராவிட இயக்கமும் - தந்தை பெரியாரின் கொள்கைகளையும் விளக்கி கருத்துரை


ஜெர்மனி பல்கலைக் கழகங்களின் அழைப்புகளையேற்று
திராவிட இயக்கமும் - தந்தை பெரியாரின்  கொள்கைகளையும் விளக்கி கருத்துரை

ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார்
ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் உரையாற்றுகிறார்
கொலோன் (ஜெர்மனி) ஜூன் 7-  ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகம் மற்றும் கல்வி நிறு வனங்களின் அழைப்பையேற்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ஜெர்மனி கொலோன் மய்யப் பகுதியில் உள்ள நியூமார்க்கெட் ஜோய்ஸ்ட் அருங் காட்சியகத்தில் பொது மக்களிடையே, பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்த தன்னுடைய சிறப்பான உரையை நிகழ்த்தினார். ஜெர்மனி, கொலோனில் இந்திய வார விழா நிகழ்ச்சிகளில் இவ்வாண்டு கொலோன் பல்கலைக் கழகம், கொலோன் மாநகர நிர்வாகம், இந்தியர் நலச் சங்கம் கொலோன் இணைந்து பங்கேற்று நடத்திய இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு பல்கலைக் கழகத்தில், மற்றும் பொது இடங்களான அருங்காட்சியகங்களில் இந்த வாரம் முழுமைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பல்கலைக் கழகத்தில் உள்ள பல்வேறு சிறப்பு உயராய்வுக் கல்வி மய்யங்களில் ஒன்றான தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய, இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு நிறுவனத்தால் ஏற்பாடு செய்திருந்த பொது மக்களுக்கான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி இரவு  7 மணியளவில் கொலோன் மாநகரின் மய்யப் பகுதியான நியூ மார்க்கெட்  என்னும் பகுதியில் அமைந்திருக்கும் ராட்டன்ஸ்ராட்ச் ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பொது மக்களுக்கு, ஆங்கிலத்தில் “The Dravidian Movement and Periyar’s ideology of Rationalism”
அதாவது, திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுத் தத்துவ கொள்கைகளும் என்ற தலைப்பில் உரையாற்ற சிறப்புமிகு ஏற்பாட்டினை இப்பல்கலைக் கழகம் மற்றும் மேலே குறிப்பிட்ட அமைப்புகள்  இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெரியார் மணியம்மை பல்கலை. வேந்தர் கி.வீரமணி அவர்களை  ஜெர்மனி - இந்திய நிகழ்வுகளின் ஒருங்கிணைப் பாளர் திருமதி ருத்இ.ஹீப், இந்தியர் நலச் சங்க பொதுச் செயலாளரும், கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் யுல்ரிக் நித்லஸ் ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சி சரியாக இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணியளவில் முடிவுற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஜெர்மனி - இந்திய நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர் திருமதி ருத்இ ஹீப், இந்தியர் நலச் சங்க பொதுச் செயலாளரும், கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் யுல்ரிக் நித்லஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும் வரவேற்று உரை நிகழ்த்தும் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் திருமதி ருத்இ ஹீப் அவர்கள் வரவேற்புரை ஆற்ற பேராசிரியர் யுல்ரிக் நித்லஸ் திராவிட இயக்கத்தைப் பற்றியும் தமிழர் தலைவர் அவர்களின் தலைமைத்துவத்தையும், அவர் தம் குறிப்புகளையும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. நல். இராமச்சந்திரனையும் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் தனித் தன்மைகளைப் பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்கள் அறிவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க பேரா. நல். இராமச்சந்திரன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைப் பற்றியான ஒரு விளக்க உரையை 15 நிமிடங்களில் அவையோர் புரிந்து கொள்ளுமளவிற்கு, பல்கலைக் கழகத்தைப் பற்றியும், அதன் தனித் தன்மைகளையும் விளக்கிப் பேசினார்.
பெரியார் புத்தகங்கள் விற்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பாஸ்கல் வொல்ப் ஸ்பெர்ஜர், லூகாஸ் பைபர், டிமோ பெய்ன்
இதனைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர் தமிழர் தலைவர் பெரியார் மணியம்மை  பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் தனக்களித்த தலைப்பில் கணினி மூலம் 26 பவர் பாய்ண்ட் பக்கங்களை பயன்படுத்தி படங்கள், சொற்றொடர்கள்   மூலமாக மிகச் சிறப்பான உரையை 60 நிமிடங்களில்  தனது சிறப்பான உரையை ஆற்றினார்கள். தமிழர் தலைவர் உரைக்கு அவ்வப்போது அரங்கில் கரவொலியும், வரவேற்பும் பெற்றன. சிந்தனைகளைத் தூண்டும் வண்ணம் திராவிட இயக்கத்தைப் பற்றியும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந் தனைகள், பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றியும் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மையை பெரியார் பொது மக்களுக்கு எடுத்துச் சென்ற விதங்கள், மத, சாதியின் தாக்கங்கள், சமூக ரீதியில் அறவழி மூலமாக பெற்ற வெற்றிகள், பல அரசியல் தலைவர்கள், தந்தை பெரியாரின் வெளி நாட்டுப் பயணங்கள் குறிப்பாக அய்ரோப்பிய பயணம் ஆகிய மய்யக் கருத்துக்களை உள்ளடக்கி தன்னுடைய சிறப்பான உரையை நிறைவு செய்தார்.
இறுதியில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரின் பல்வேறு சந்தேகங் களை, அவர்களின் வினாக்கள் மூலமாக வும் விடையளித்து வந்திருந்தவர்களின் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனை வருமே இதுகாரும் நாங்கள் எண்ணி யிருந்த பல தவறான கருத்துக்கள் இன்று முதல் எங்களில் இருந்து விடுபட்டு விடுதலையை அடைந்திருக்கிறோம் என்று தங்கள் மகிழ்ச்சிகளை தெரி வித்தனர்.
பல்கலைக் கழக வேந்தருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கொலோன் பல்கலைக் கழக மாணவர்கள்.
இந்திய வார விழாவாக இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கொலோன் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் யுல்ரிக் நித்லஸ் அவர்களுக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.
-விடுதலை,7.6.14

ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பு


பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பின் தலைவர் பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் திரு. சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் உள்ளனர்.
கொலோன் (ஜெர்மனி) ஜூன் 8- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கொள்கைகள் தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) 6.6.2014 (Periyar International Germany Chapter Inc) தொடங் கப்பட்டது.
ஜெர்மனி, கொலோன் மாநகரில் ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை இந்திய வாரம் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. பல்வேறு நிகழ்ச்சிகளில், ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக தமிழர் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் 3ஆம் தேதி மாலை, பொது மக்களுக்கு திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையின் தத்துவமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்தி எதிர்ப்பு இயக்கம்
4ஆம் தேதி கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பவர் பாய்ன்ட் மூலம்  ஆய்வுரை நிகழ்த்தினார்.
5ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தியயியல் மற்றும் தமிழ்த் துறை மாணவர்களுக்கு தந்தை பெரியாரின் தன்மான இயக்கமான திராவிடர் கழக வரலாற்றையும், அதன் தொடர் பணிகள் குறித்தும் மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்தார்கள்.
இப்படி பல்வேறு நிகழ்வுகளின் மூலம், தந்தை பெரியாரின் பணியினால் தமிழகத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் அடைந்திருக்கும் மாற்றங்களையும், அதனால் மக்கள் விடுதலை அடைந்த நிலையையும் அறிந்ததன் விளைவாக பெரியாரின் பணிகளை ஜெர்மனியிலும் தொடர வேண்டுகோள் விடுத்தனர்.
பெரியார் பன்னாட்டு அமைப்பு
பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களின் ஒப்புதலோடு பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்தக் கிளையின் தலைவராக பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக திரு. சுவன்வோர்ட்,  செயலாளராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட் டுள்ளார்கள்.
இந்த ஜெர்மானிய அமைப்பானது பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) வின் வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்தும் தங்கள் நாட்டில் பெரியார் தத்துவக் கொள்கைகளை அவர் காண விரும்பிய சமுதாயத்தை படைக்க, தன் பணியை செய்யும் என பொறுப்பேற்றுள்ள தலைவர், துணைத் தலைவர் மற்றும் செய லாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங் களை வழங்கியும் பாராட்டினார்கள்.
பெரியாரின் ஜெர்மன் பயணம்
இந்நிகழ்வு இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தந்தை பெரியார் அவர்கள் 1932-இல் ஜெர்மனி பயணம், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் 2014-இல் கொலோன் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது.
இவைகளை உற்று நோக் கும்போது மண்டைச் சுரப்பை உலகு தொழுவதும் இதுவே பெரியார் உலக மயமாக்கப்பட வேண்டும் என்ற உன்னத கோட்பாட்டை எடுத்துச் செல்லும் தமிழர் தலைவருக்கும், பெரியார் பெருந் தொண் டர்களுக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க பெரியார்! வளர்க அவர் தம் கொள்கை.
பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பின் தலைவராக பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக திரு. சுவன்வோர்ட், செயலாளராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-விடுதலை,8.6.14

தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகரில் பெரியார் பவன் தொடக்கம்

தந்தை பெரியார் எங்கும் தேவைப்படுகிறார்
தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகரில் பெரியார் பவன்  தொடக்கம்

கரீம்நகர், டிச.20- ஆந்திரப்பிரதேசத்தில் தெலங்கானா மாநிலத்தில் கரீம் நகரில் பெரியார் பவன் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் திறப்பு விழாவில் இந்திய நாத் திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜயகோபால் கூறும்போது, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில், தெலங்கானாவின் வரலாற் றில் முதல் முறையாக பவன் திறந்து வைக்கப் படுகிறது. பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் திறந்து வைப்பதில் மிக வும் மகிழ்வடைகிறோம் என்றார்.
பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் அமைப்பதற் கான இடம் மற்றும் மரச்சாமான்கள் முழுவ தும் கரீம்நகர் காவல் ஆய் வாளர் திரு. டி.பூமய்யா வழங்கி உள்ளார்.
அறிவியலாளர்களின் படங்கள் மற்றும் அவர் களின் சாதனைகள், புகழ் பெற்ற நாத்திகர்கள், மனித நேயம் மற்றும் பகுத்தறிவாளர்கள் ஆகியோரின் நூல்கள் பெரியார் ஈ.வெ.இராம சாமி பவனில் இடம் பெற் றுள்ளன. பகுத்தறிவுக் கருத்து களைக் கொண் டுள்ள கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் நடத்துவ தற்கு பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் பயன்படுத்தப்பட உள்ளது. திறப்பு விழா வின்போது பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும்,  தலை வர்களும் பங்கேற்றனர்.
பெரியார் பவன் திறப்பு விழாவையொட்டி செய்தி யாளர் சந்திப்பின்போது டாக்டர் டி.ஜயகோபால், டி.பூமய்யா, எஸ்.நரேந்தர், அஜய், பாலசானி மது, டாக்டர் மலையசிறீ மற் றும் பலர் பங்கேற்றனர்.
இதற்கு முன் விசாகப் பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறக்கப் பட்டுள்ளது.
தந்தை பெரியார் ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமே  சொந்தம் என்ற நிலைமாறி, இந்தியாவை யும் தாண்டி, உலகம் முழுவதற்குமே தேவைப் படும் தனிப் பெரும் சிந்தனையாளராக ஒளி வீசிக் கொண்டு இருக் கிறார்கள். உலகில் பல நாடுகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாளை யொட்டி சிறப்பாக விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அறிஞர் பெருமக்கள் அந் நிகழ்ச்சியில் தந்தை பெரி யார் தம் சிந்தனைகளை விரிவாகப் பேசுகிறார்கள்.
உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தந்தை பெரியார்பற்றி ஆய்வு செய்து பி.எச்.டி. பட்டங் களைப் பெற்றுக் கொண் டுள்ளனர். மதவாதம் மனித குலத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மதமற்ற உல கிற்கு நாட்டைக் கொண்டு செலுத்த பெரியார் தேவைப்படுகிறார்.
-விடுதலை,20.12.14

பெரியாரும் இந்தியாவின் திராவிடர் இயக்கமும்

பெரியாரும் இந்தியாவின் திராவிடர் இயக்கமும்: மதங்களின் மண்ணில் வலிமை மிக்கதோர் நாத்திகர்

அறிமுகம்: டாக்டர் ரியான் சேஃபர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு ஆய்வு மய்யத்தில் பணியாற்றும் சிறந்த ஆய்வாளர். பிஎச்.டி. ஆய்வு முடித்து விட்டுத் தற்போது முது முனைவர் (டி.லிட்) எனும் மிக உயரிய ஆய்வுப் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். வரலாற்றியல் துறை சார்ந்த பல ஆய்வுக் கட்டுரை களை ரியான் எழுதி துறை சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளை  எழுதி யுள்ளார். 2014ஆம் ஆண்டு பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி விட்டுச் சென்ற ஆய்வாளர் ரியான் அமெரிக்காவிற்குச் சென்றதும் தமிழர் தலைவரைச் சந்தித்து உரை யாடிய இனிய நிகழ்வுகளைக் கட்டுரைகளாக வடித்து ‘Free Inquiry’  எனும் ஆங்கில இதழில் வெளியிட் டுள்ளார்.
அவற்றின் தமிழாக்கம் தான் நீங்கள் படிக்கப் போவது!
‘Free Inquiry’ இது அமெரிக்கா விலிருந்து வெளிவரும் ஆங்கில இதழாகும். உலகெங்கும் அதிக அளவில் விற்பனையாகி வரும் பகுத் தறிவு இதழ் இது! மதச்சார்பற்ற மனித நேயத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மை கொண்ட சமுதாய அமைப்பிற்காகப் பாடு படுவது, பகுத் தறிவையும் மனித நேய மாண்பு களையும் கருத்துரிமையையும் பேணி வளர்ப்பது எனும் கோட் பாடுகளைக் கொண்டு இவ்விதம் இயங்கி வருகின்றது. இவ்விதழில் ஆய்வாளர் ரியான் சேஃபர் தந்தை பெரியாரைப் பற்றியும் திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் தமிழர் தலைவரைப் பற்றியும் விரிவாக எழுதிய கட்டுரைகளைத் தமிழில் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தந்தை பெரியார் உலக மயமாகி வருகிறார் என்பதற்கு தந்தை பெரி யாரைப் படிக்கிறார்கள்; பேசு கிறார்கள்; ஆய்வு செய்கிறார்கள்; நேரடியாகப் பெரியார் திடலுக்கே வந்து தலைவரைச் சந்தித்து உரை யாடி மகிழ்ந்து திரும்புகிறார்கள். (ப.கா.) இனி, கட்டுரைக்குள் செல்வோம்.
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
- பெரியார்
(தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்களுடன் ரியான் தனது கட்டுரையைத் தொடங்குகிறார்.
கடந்த அய்ம்பது ஆண்டுகளுக் கும் மேலாக, இந்தியாவின் சிறப்பு வாய்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளுக்கு உயிர்ப்பூட்டித் தூண்டுணர்வு நல்கி வருபவர் உரத்த சிந்தனையாளரான ஒரு நாத்திகர் ஆவார். முதுபெரும் சான்றோர் என்று பொருள்படும் பெயரைத் தாங்கிய பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளர்; இந்தியாவின் விடுதலைக்காகவும் சமத்துவச் சம நிலைக்காகவும் பகுத்தறிவு நெறியை மக்களிடையே பரப்புவதற்காகவும் தம்முடைய வாழ்நாளெல்லாம் போராடியவர். (பார்ப்பனிய) மேலாதிக்கத்திற்கு எதிராகவும் அதன் சாதிய முரண்பாட்டு நிலைக்கு எதி ராகவும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்தும் போராடிய பெரியார் ஏறக் குறைய இருபது முறை கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார். பகுத்தறிவு நூல்களை வெளியிட்டார் என்றும் தங்கள் ஆடைகளைத் தாங்களே நெய்து கொள்ளுமாறு மக்களைத் தூண்டினார் என்றும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. 1953இல் நடைபெற்ற புகழ்வாய்ந்த பிள்ளையார் சிலை உடைப்புப் போராட் டத்தில், பிள்ளையார் சிலைகளுக்கு எவ்விதச் சக்தியும் இல்லை என்பதை விளக்கிக் காட்டுவதற்காகப் பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்துக் காட்டினார். அதற்காக அவர்மீது சட் டத்தை மீறித் தெய்வ நிந்தனை செய்தார் என்று குற்றம் சுமத்தினார்கள்.
1967 முதற்கொண்டு தமிழ்நாட்டை ஆண்டு வரும் தி.மு.க.வும் அ.இ.அ.தி. மு.க.வும் பெரியாரை உயர்வாகப் போற்றி மதித்த போதிலும் இந்துத்துவத் தேசிய வாதிகளாலும் தென்னிந்தியாவின் உயர் சாதிப் (பார்ப்பனர்) பிரிவினராலும் பெரியார் எதிரியாகவே பார்க்கப்படுகிறார்.
வெளித் தோற்றத்திற்கு இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்று கூறப்பட் டாலும், சிறுபான்மையினரான கிறித்து வர்களும் முசுலீம்களும் சீக்கியர்களும் கணிசமான அளவு மக்கள் தொகையில் இருந்த போதிலும் இந்துத்துவம் நாடு முழுவதும் ஊடுருவிப் பரந்து கிடக்கிறது. பருவ காலங்களில் நடைபெறும் பெரிய மத விழாக்கள் தொடங்கி, கடவுள் சிலைகளை மக்களுக்குக் காட்சிப் படுத்தும் விழாக்கள் வரை இந்திய வாழ்க்கையில் இந்துத்துவம் தவிர்க்க இயலாத ஒன்றாக விளங்கி வருகிறது. இருந்த போதிலும் மாநில அரசியலில் நாத்திகம், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ளவர்களிடத்திலும் கூட, மதவாதிகள் நடத்துகின்ற அரசியல் கட்சிகளிடம் கூட பகைமை பாராட்டுவதில்லை.
தென்னிந்தி யாவில் ஒரு மாநிலமான தமிழ்நாடு - ஏழரைக் கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாடு - சிறப்பு வாய்ந்த தன் பழம் பெரும் மரபுகளையும் மொழியையும் போற்றிக் கொண்டாடி வருகிறது. இந்தப் பண்பாட்டுப் பெருமையுடன் தமிழ் மாநில அரசு, தொடர்ந்து தனக்குப் புறம்பான அயலார் ஆதிக்கத்தையும், இந்துத்துவம் தூக்கிப் பிடிக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் சாதிய அமைப்பையும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. பெரியார் ஒளிவு மறைவின்றித் தெளிவாக எழுதினார்:- நாங்கள் மதங்களையும் மதவாதிகளையும் தவறானவர்கள் என்று அவர்கள் மீது நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்; அவர்கள் மக்களின் அறிவுப் புலத்தையும் சிந்திக்கும் திறனையும், நேர்மைத் திறத்தையும், அன்பையும் இரக்க உணர்வையும் ஒற்று மையையும் சமத்துவத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியார் பிறந்தார்: ஈ.வெ.ராமசாமி தமிழ்நாட்டில் ஈரோட்டில் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் வளமிக்க ஒரு வணிகர் குடும்பத்தில் பிறந்தார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர் இளம் பருவத்திலேயே பிற சாதியைச் சேர்ந்த தன் வகுப்புத் தோழர் களைத் தொடுவதற்கும் அவர்கள் வீடு களில் தண்ணீர் வாங்கிக் குடிப்பதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துத் தன் போராட்டத்தைத் தொடங்கினார். அவருடைய முறையான கல்வி, தொடக் கப் பள்ளியோடு முடிவுக்கு வந்து விட்டது. பின்னாளில் ஊரைவிட்டுப் புறப்பட்டு, வடக்கில் கங்கைக் கரையிலுள்ள காசியைக் காண்பதற்குப் போனார்.
அவர் உயர்சாதிப் பார்ப்பனர் அல்லாதவர் என்ற காரணத்தினால் பயணத்தின் போது அவர் பசியால் வருந்த நேர்ந்தது. ஏனென்றால் வடக்கிலிருந்த சத்திரங்கள் அனைத்தும் பார்ப்பனர் அல்லாத கீழ்ச்சாதி மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இச் செயல் அவர் உள்ளத்தில் அழிக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. பின்னர் ஈரோட்டிற்குத் திரும்பி வந்த போது அவர்தம் தந்தையார் தம் வணிக நிறுவனங் களை ஈ.வெ.இராமசாமியின் பெய ருக்கு மாற்றி அவற்றை அவரிடம் ஒப்படைத்தார். 1904இல் பிளேக் நோய் மக்களை வாட்டியபோது மக்களோடி ருந்து மீட்பு வேலைகளில் ஈ.வெ.ரா. இரவு பகல் பாராது ஈடுபட்டார்.
விரைவில் இராமசாமி அரசியலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் நகராட்சி அமைப்பிலும் அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசிலும் இணைந்து பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார். 1919இல் காங்கிரஸ் அவரை வரவேற்றது. ஏனெனில் பிற கட்சிகளின் அறைகூவல்களை எதிர் கொள்வதற்கு அப்போது அக்கட்சிக் குப் பார்ப்பனரல்லாத வலிமைமிக்க ஒரு மாபெரும் தலைவர் தேவைப் பட்டார். காங்கிரசில் இணைந்தவுடன் இருமுறை அவர் கைது செய்யப் பட்டார். அடுத்த பத்து ஆண்டுகளில் அவர் பல முறை கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
நகராட்சியிலும் பிற துறைகளிலும் அவர் வகித்து வந்த பதவிகளை விட்டு விலகி மகாத்மா காந்தியார் தலை மையில் காங்கிரஸ் நடத்திய ஒத்து ழையாமை இயக்கத்தில் பங்கேற்றுத் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். ஒத்துழையாமை இயக்கம் ஆங்கி லேய நீதிமன்றங்களைப் புறக் கணித்தது; ஆங்கில நாட்டுத் துணி களை அணிய மறுத்தது; உள்நாட்டில் நெய்யப்பட்ட உடைகளை உடுத்து மாறு மக்களைக் கேட்டுக் கொண்டது.
கதர் ஆடை அணிந்தமைக்காகவும் அதைப் பரப்பியமைக்காகவும் ஈ.வெ.ரா. கைது செய்யப்பட்டார். கதர் இயக்கம் இந்தியாவில் ஆங்கிலேயரின் துணி வணிகத்தைப் பெரிதும் பாதித்தது. அதனால் அவர்கள் வெறுப்படைந் தனர். அடுத்து, கள்ளுக் கடைகளை எதிர்த்து ஈ.வெ.ரா. நடத்திய போராட் டத்திற்காகக் கைது செய்யப்பட்டார். வைக்கத்தில் உள்ள சிவன் கோவில் சாலைகளில் தீண்டத்தகாதவர்கள் நடப்பதற்கான உரிமைப் போரில் அவர் வெற்றி ஈட்டித் தந்தமைக்காக அவருக்குப் பெரும்புகழ் கிடைத்தது. மக்கள் அவரை வைக்கம் வீரர் என்று அன்புப் பெயரிட்டு அழைத்து மகிழ்ந் தார்கள். வைக்கம் போராட்டத்தின் போது அவர் இருமுறை கைது செய் யப்பட்டார். 1925இல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி தீண்டத் தகாதவர்கள் அந்தச் சாலைகளில் நடப்பதற்கான உரிமைகள் வழங்கப் பட்டன. ஈ.வெ.ரா. வைக்கம் வீரராகப் போற்றப்பட்டார்.
இந்நிகழ்வு அவரை ஒரு சமத்துவ இயக்கத்தை நோக்கி முன்னோக்கிச் செலுத்தியது.
(தொடரும்)
ஆங்கிலத்தில்: டாக்டர் ரியான் சேஃபர்

தமிழில்: டாக்டர் ப.காளிமுத்து
-விடுதலை,2.3.15
பெரியாரும் இந்தியாவின் திராவிடர் இயக்கமும்: மதங்களின் மண்ணில் வலிமை மிக்கதோர் நாத்திகர்-2

சாதிகளிடையே ஏற்றத் தாழ்வற்ற - சம உரிமையுடைய ஒரு சமநிலையைக் காண 1926இல் ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார். சாதிய வேறுபாடுகளைக் களைவதற் காக - முறையான முயற்சிகள் எவற் றையும் இந்திய தேசிய காங்கிரஸ் செய்யாத காரணத்தினால் ஏமாற்றப் பட்ட ஈ.வெ.ரா. அதிலிருந்து விலகி னார். காங்கிரசுக்கு எதிர்நிலையில் நின்ற சுயமரியாதை இயக்கம், அரசியல் இயக்கமாக அல்லாது சமூகப் புரட்சி இயக்கமாக நின்று, குழந்தைத் திருமணங்களை எதிர்த்தது;
கைம்பெண் மறுமணங்களை நாடெங் கும் நடத்தி வைத்தது; பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்று கோரியது; குலத் தொழிலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்குமாறும் அழைப்பு விடுத்தது. பகுத்தறிவையும் சமூகப் புரட்சி யையும் சுயமரியாதை இயக்கம் எவ்வாறு ஒன்றிணைத்து நடைபோட்டது என்ப தற்கு ஓர் எடுத்துக்காட்டு:- 1930இல் தேவதாசி முறையை எதிர்த்த நிகழ்வைக் குறிப்பிடலாம். ஒரு பெண் திருமணம் செய்து கொள்வது தடுக்கப்பட்டுக் கோயி லில் இந்துக் கடவுளை வாழ்நாளெல்லாம் வழிபட்டுக் கொண்டிருக்கும் முறை இது. சுயமரியாதை இயக்கத் தலைவர்களும் தேவதாசி முறையில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த பெண்களும் தேவதாசி முறையை ஒழிப்பதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்று போராடினார்கள். தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டம் வந்தபோது அதனைத் தடுப்பதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை முறியடிக்கப்பட்டன. ஆனால் சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து அதன் கொள்கைகளை இசைப் பாடல்களின் வழியாகவும் நாடகங்களின் வாயிலாகவும் இலக்கியங் களின் வழியாகவும் பொதுமக்களிடையே பரப்பிச் சமத்துவச் சமநிலைக்காகக் குரல் கொடுத்து வந்தது.
ஈ.வெ.ரா. வகுப்புரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்தார். பெரும் பான்மை மக்களை அடக்கி ஒடுக்கி அரசியல் துறை, அரசு அலுவல் துறை, கல்வித் துறை முதலான அனைத்துத் துறைகளிலும் உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தமையை அவர் வன்மை யாக எதிர்த்தார். கல்வித் துறையிலும் அரசு அலுவல்களிலும் பார்ப்பனர்கள் அனுபவித்து வந்த அதே வாய்ப்பு பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக் கும் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் ஓர் அமைப்புத் தேவை என்பதற்காக அவர் போராடினார். இக்காலகட்டத்தில் அவர் மிகுந்த துணிவுடன் இந்து மதத்தைச் சாடி வந்தார். இந்துக்களின் சட்டப் புத்தகம் எனப்படுகின்ற மனுஸ்மி ருதியை வெளிப்படையாகப் பொது இடத்தில் கொளுத்தினார். பொதுமக் களால் எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியாத சமஸ்கிருத மந்திரங்களும் பார்ப்பனரும் இல்லாத திருமணங்களை அவர் ஊக்குவித்து உயர்வுபடுத்தினார். அவர் புதிதாக உருவாக்கிய சுயமரியா தைத் திருமணங்களை முன்னின்று நடத்தினார். அது நாடெங்கும் பரவியது. 1928 முதல் 1932 வரை எட்டாயிரம் சுய மரியாதைத் திருமணங்கள் நடத்தி வைக் கப்பட்டன. இத்தகைய திருமணங்கள் ஆணும் பெண்ணும் சமம் எனும் எடுத் துக்காட்டான உறவு முறையை விளக்கின. தம் இயக்கத்தில் இணைந்து தலைமை தாங்குமாறு ஈ.வெ.ரா. பெண்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்தார். சுய மரியாதைத் திருமணங்கள் ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்து கின்றன. குடும்ப வாழ்க்கையில் கணவ னும் மனைவியும் சம பங்குடையவர்கள் என்பதை ஈ.வெ.ரா. எடுத்துரைத்தார்.
1930களில் சென்னை மாநிலத்திற்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. அடுத்து வந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது. குறிப்பிடத் தக்க இந்தியத் தலைவர்களைப் பற்றி இராமச்சந்திர குகா தொகுத்து வெளியிட் டுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளவாறு இக்காலத்தில்தான் ஈ.வெ.ரா. பெரியார் எனும் பெரும் சிறப்புக்குரியவரானார். பிரிட்டானியர்களுக்கு எதிராக அனை வரையும் ஒன்று திரட்டுதல் எனும் தன் தேசியக் கொள்கையை உறுதிப்படுத்துவ தற்காகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட (காங்கிரஸ்) அரசு, பள்ளிகளில் தேசிய மொழியாக இந்தியைக் கற்பிக்கத் தொடங்கியது. இந்திக்கு எழுந்த எதிர்ப் பினை காங்கிரஸ் அரசு குறைத்து மதிப் பிட்டு விட்டது. பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்தினார். இப்போராட்டம், தொன்மை வாய்ந்த இந்த நிலத்தின் மொழியான தமிழ் மொழியைப் பள்ளிகளில் மீண்டும் அதனி டத்தில் நிலை நிறுத்த வேண்டுமெனக் கோரியது. இதனால் சுயமரியாதை இயக் கத்தை அதனுடைய நாத்திகக் கொள்கைக் காக இதற்கு முன்னர் எதிர்த்த குழுக்கள் எல்லாம் இப்போது பெரியாருடன் இணைந்தன. முடிவில் கட்டாய இந்திச் சட்ட ஆணையை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இக்காலத்தில் பெரியாரின் அரசியலில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவர் நீதிக் கட்சியில் இணைந்தார். சோசலிசக் கொள்கை அவரை ஈர்த்தது. அய்ரோப்பியச் சுற்றுப் பயணத்தின்போது அவர் சோவியத் ஒன்றியத்திற்கும் சென்று வந்தார். ஆனால் அய்யப்பாட்டிற்குரிய சோவியத் அரசாங்கத் தார் அவரை நாட்டை விட்டு வெளியேறு மாறு கேட்டுக் கொண்டனர். இந்தியாவிற்குத் திரும்பியதும் ஓர் ஆங்கில அதிகாரியைப் பழி வாங்க அவரைக் கொலை செய்தமைக் காகப் பிரிட்டானிய அரசால் தூக்கிலிடப் பட்ட புரட்சியாளரான பகத்சிங் எழுதிய, நான் ஏன் நாத்திகனானேன்? என்னும் நூலை மறுபதிப்புப் போட்டு வெளியிட்ட மைக்காகப் பெரியார் கைது செய்யப்பட்டார்.
இந்திய விடுதலை நெருங்கிவரும் நேரத் தில் திராவிட (தமிழர்) மக்கள் நடத்தப்படும் முறைகண்டு பெரியார் அய்யப்பாடு கொண்டு 1944இல் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தார். பிற கட்சிகள் தலைமை தாங்குமாறு விடுத்த அழைப்பையெல்லாம் பெரியார் ஏற்கவில்லை. திராவிடரின் உரிமைகள் அயலவராகிய வடவரின் ஆதிக்கத்தின் கீழ் சிக்கி விடக்கூடாது என்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும் பெரியாரின் திராவிடர் கழகம், இந்தியா விலிருந்து திராவிடர்களுக்கென்று ஒரு தனி நாடு தேவை என்பதனை வலியுறுத்தியது. இந்திய விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலைக் கட்சி புறக் கணித்தது. ஆனால் பெரியார் துணிவுடனும் தெளிவுடனும் சமூக மாற்றத்திற்கான தமது கொள்கைகளை வலியுறுத்தி வந்தார். 1953ஆம் ஆண்டு தெய்வ நிந்தனைச் சட்டத்தை மீறியமைக்காகக் கைதான பெரியார், ஒரு நாத்திகன், கடவுளின் உரை களை, கட்டளைகளை ஏற்பதில்லை; அந்த உரைகளும் கட்டளைகளும் கடவுளின் பெயரால் மனிதர்கள் உருவாக்கியவை என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தம்முடைய முதுமைப் பருவத்தில் உடல் நலம் குன்றி வந்த நிலையில் தம் உழைப் பின் பயன் உண்மையில் அரசியல் மாற்ற மாக வளர்ந்து வருவதை உணர்ந்தார். 1949இல் பெரியாரால் வளர்க்கப்பட்ட அவர்தம் தலை மாணாக்கராகிய சி.என். அண்ணாதுரை, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். இதனால் ஏற்பட்ட மன அலைவும் உலைவும் பல ஆண்டுகள் நீடித்தன. இறுதியில் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டபோது வெடித்தது. (கருத்து முன்பின்னாக உள்ளது நம் கவனத்திற் குரியது) அதன்பின் அவர்தம் துணைவியார் இயக்கத்தில் மிகுந்த மதிப்பினைப் பெற்றுப் பெரியாருக்கு அடுத்த தலைவராக வளர்ந்து வந்ததை அறிய முடிகின்றது. இந்தப் பிரிவின் காரணமாகப் பெரியாரின் கொள்கைகளை நாம் விட்டு விட மாட்டோம்; தமது புதிய கட்சி அவற்றை உண்மையுடன் பின்பற்றும் என்னும் உறுதிமொழியினை அண்ணாதுரை வழங்கினார். எழுத்தாளர் பால செயராமன் குறிப்பிடுவதைப் போல, பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட அவ்வியக்கம் (தி.மு.க.) அவர்மீது கொண்ட மதிப்பின் காரணமாக அண்ணாதுரையின் கட்சி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை.
திறமைவாய்ந்த தம்முடைய அரசியல் தலைமையினால் 1967இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சராக அண்ணாதுரை பொறுப்பேற்றார். பெரியார் அரசுக்கு அறிவுரை கூறும் உயர்நிலையி லிருந்தார். மத விழாக்களுக்கு அரசு விடு முறை அளிப்பதைத் தடை செய்யும் வகை யில் பகுத்தறிவுமிக்க சட்டங்களைக் கொண்டு வருமாறு அண்ணாவின் அரசைப் பெரியார் வலியுறுத்தினார். அரசு அலுவ லகங்களில் கடவுளர் படங்களை அகற்று மாறு அரசு ஆணையிட்டது. இத்தகைய மென்மையான போக்கினால் பெரியார் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் அண்ணா துரை காலமாகிவிட்டார். அதன்பின்னர், துணிவுமிக்க நாத்திகரான கருணாநிதி தனக்கே உரித்தான தகுதிமிக்க தன்மையால் கட்சியின் தலைவராகவும் அரசின் தலைவ ராகவும் ஆனார். கருணாநிதியின் தலைமை யில் கட்சி இருந்தபோது 1972இல் மேலும் ஒரு பிளவைக் கட்சி சந்திக்க நேர்ந்தது. நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் மக்களிடம் தனக் கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தைத் தொடங் கினார். பெரியார், அண்ணா ஆகியோரின் செல்வாக்கையும் அக்கட்சி பயன்படுத்திக் கொண்டது.
இங்கிலாந்தைவிட அதிக மக்கள் தொகையைப் பெற்றுள்ள தமிழ்நாட்டை 1967லிருந்து தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள்தான் ஆண்டு வருகின்றன. பெரியாரின் மதச்சார்பற்ற மனித நேயக் கோட்பாட்டை இவை அழியாது பேணிக் காத்து வருகின்றன. திராவிடர் கழகம் எப்போதும் தேர்தலில் நிற்பதில்லை. சமு தாயச் செயற்பாடுகளிலேயே தன் கவனத்தைச் செலுத்திச் சமுதாய மாற்றத் திற்கு மக்களை ஆயத்தப்படுத்தி வருகின் றது. 1973இல் பெரியார் இயற்கை எய்திய போது அவருக்கு அரசு மரியாதை அளிக் கப்பட்டது. அவருடைய நினைவிடம் அவர்தம் ஆதரவாளர்களையும் அவருடைய பணிகளைப் புகழ்வோரையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. 90 வயதாகும் கருணாநிதி, தி.மு.க.வின் தலைவராகத் திகழ்ந்து கொண் டிருக்கிறார். மாநிலத்தின் தலைவராகவும் அவர் மதிக்கப்படுகிறார். அவர் வெளிப் படையாகவே இந்துக் கடவுளான இராமன் இருப்பைக் கேள்விக்குரியதாக்கி, யார் இந்த ராமன்? எந்தப் பொறியியல் கல்லூரியில் அவர் படித்துப் பட்டம் பெற்றார்? இவற்றிற்கு ஏதாவது சான்று இருக்கிறதா? என்று மக்களிடையே சிந்தனையைத் தூண்டி விட்டார்.
தென்னிந்திய மக்களின் வாழ்க் கையில் பெரும் மாற்றத்தை இன்றுவரை பெரியார் உருவாக்கி வருகிறார். அவருடைய மறைவிற்குப் பின் அவர்தம் வாழ்விணையர் திராவிடர் கழகத்தின் தலைவரானார். மணியம்மையார் காலத் திற்குப் பின்னர், செயல்திறம் மிக்க சிறந்த பகுத்தறிவாளரும் எழுத்தாளரும் வழக் கறிஞருமான - 80களில் நடைபோடும் கிருஷ்ணசாமி வீரமணி அவர்களால் தலைமை தாங்கி நடத்தப்பட்டு வருகின் றது. 2014ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகத்தின் தலைமை நிலையத்திற்கு நான் சென்றிருந்தபோது ஆசிரியர் கி.வீரமணி அவர்களோடு நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குள்ள பகுத்தறிவாளர் ஆய்வு நூலகம், அச்சக வசதிகள், திருமண அரங்கு, அருங்காட்சியகம், பெரியார் நினைவிடம் முதலான அனைத்தையும் நான் சுற்றிப் பார்த்தேன். பெரியார் அறக்கட்டளை பகுத்தறிவைப் பரப்புதல், பல கல்லூரி களை நிறுவிக் கல்விப் பணியாற்றுதல், மருத்துவமனைகளை நிறுவி எல்லோர்க் கும் இலவச மருத்துவ உதவியளித்தல் முதலான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. ஆனால் அது பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு வரு கின்றது. வீரமணி அவர்கள் பெரியாரின் பகுத்தறிவுத் தமிழ் நாளிதழான விடு தலையின் ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் ‘The Modern Rationalist’  எனும் ஆங்கிலப் பகுத்தறிவு இதழையும் குழந்தைகளுக் கும் இளைஞர்களுக்குமான இதழ்களை யும் அவர் வெளியிட்டு வருகின்றார். அண்மையில் ரிச்சர்டு டாக்கின்சு அவர்களின் ‘The God An Illusion’ என்ற நூலையும் பெர்ட்ரண்ட் ரசலின் ‘Why I am not a Christian?’ என்ற நூலையும் இவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.
பெரியார் தொண்டுக்கு அரசியல் ஆதரவு இருந்த போதிலும் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஊடுருவிப் பரந்து கிடக் கிறது. இந்துத்துவவாதிகளிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர் கொண்டு வருகின்றது. ஆசிரியர் வீரமணி பலமுறை தாக்குதலுக்கு உள் ளாகியுள்ளார். என்றாலும் இனப்பற்றாள ரும் சிறந்த பகுத்தறிவாளரும் நல்ல நடிகருமாகிய சத்யராஜ் அவர்களைப் போன்றோரின் துணையோடு இந்தியக் குடிமக்களைச் சீர்திருத்துவதற்கு அவர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உழைத்து வருகின்றார்.
ஈ.வெ.ராமசாமி, அவருடைய ஆதர வாளர்களுக்குச் சுயமரியாதையையும் பகுத்தறிவையும் கற்றுத்தந்த மாபெருந் தலைவர். அவரைத் திறனாய்வு செய் வோர்க்கு அவர் ஒரு நாத்திகராகவும் இந்துத்துவ எதிர்ப்புணர்வுகளைத் தூண்டி வளர்த்தவராகவும் காட்சியளிக் கிறார். என்றாலும் பெரியாரின் சமூகத் தொண்டறமும் அரசியலில் அவர் காட்டிய வழிமுறைகளுமே கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டை ஆண்டு வரும் கட்சி களுக்கு அடித்தளமாக இருந்து வருகின் றன. இத்தகைய மரபுரிமைச் செல்வத் தோடு, இந்துத்துவம் ஊடுருவியுள்ள ஒரு மாநிலத்தின் சமூக அரசியல் வாழ்க்கை யில், மதம் பொய்யானது என்று மதத்தை மறுத்துத் தூக்கியெறிந்த ஒரு நாத்திகரின் மக்கள் தொண்டு இன்றுவரை போற்றப் பட்டு வருகின்றது.
(நிறைவு)

ஆங்கிலத்தில்: டாக்டர் ரியான் சேஃபர்
தமிழில்: டாக்டர் ப.காளிமுத்து
-விடுதலை,3.3.15

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

நான் ஒரு நாத்திகன் - அய்ன்ஸ்டீன் அறிவிப்பு


அறிவியல் மேதை, அய்ன்ஸ்டைன் ஒரு நாத்திகர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அவரது கடிதமே சான்றாவணம்!
இயற்பியல் அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது கருத்துகளைப் பிரதிபலிக்கும் இரண்டு அரிய கடிதங்கள் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தன. இந்தக் கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஏலம் போகும் என்று தெரிகிறது.    இந்தக் கடிதங்களில் அய்ன்ஸ்டைனின் மனைவி மிலெவா மாரிக் மற்றும் அவரது மகன்களான ஹான்ஸ், எட்வார்ட் ஆகியோருக்கு 1949-ஆம் ஆண்டு அய்ன்ஸ்டைன் தனது கைப்பட எழுதிய கடிதமும் அடங்கும்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தனது அணுப்பிளவுக் கொள்கை மற்றும் சார்பியல் கோட்பாடு குறித்தும், மற்றும் மதம் கடவுள் குறித்த தனது நிலைப்பாட்டையும் எழுதியுள்ளார். முக்கியமாக ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் மீண்டும் பதவிக்கு வருநிலை உள்ளதால் தான் ஜெர்மன் திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கடிதம் குறித்து வரலாற்று ஆய்வாளர், மற்றும் புகழ்பெற்ற நபர்களின் கடிதங்களைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்துவரும் அமைப்பின் தலைவரான ஜோசப் மெடலினா கூறியதாவது,: அய்ன்ஸ் டைனின் புகழ்பெற்ற இக்கடிதங்கள் ஜூன் மாதம் 11-ஆம் தேதி ஏலத்திற்கு வரும், இந்தக் கடிதங்கள் அய்ன்ஸ்டைனின் கடவுள் குறித்த பார்வையைத் தெளிவாகக் கூறும் விதத்தில் உள்ளன. ஒரு தலைசிறந்த இயற்பியலாளர் கடவுள் குறித்த தனது பார்வையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும் 1945-ஆம் ஆண்டு கய் எச் ரானேர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில், நான் யூதனாக அறியப்பட்டாலும் நான் ஒரு நாத்திகனே என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் அவர் ரானேருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தான் ஒரு நாத்திகன் என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார்.
கடவுள் நம்பிக்கை என்பது குழந்தைத்தன-மானது, புரியாத வயதில் எளிதில் எதையும் நம்புவது போன்றது,  ஆனால் நாத்திகம் என்பது தெளிவான ஒரு மனநிலையில் எந்த ஒரு செயலையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுப்ப-தாகும், இங்கு நான் ஒரு கடவுள் மறுப்பாளராகவே இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
அய்ன்ஸ்டைன் தனது இளைய மகன் ஹன்ஸ்ற்கு எழுதிய கடிதத்தில் அணு குண்டு பற்றியும் அது ஹிரோஷிமா, நாகாசாகி போன்ற நகரங்களில் ஏற்படுத்திய பேரழிவு பற்றியும் குறிப்பிட்டு தனது சார்பியல் கோட்பாட்டை அதனுடன் இணைத்துத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். மற்றொரு கடித்தில் அவர் நாஜிக்களின் மோசமான நடவடிக்கையால் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர வேண்டியிருந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் பற்றியும், யூதக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் தனது கடிதத்தில் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் குடியுரிமை தொடர்பாக தனது மகனுக்கு எழுதிய கடிதம் மற்றும்  மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தனது மகனின் திருமணம் மற்றும் தனது கண்டுபிடிப்புகள் குறித்த தனது மனநிலையை எழுதியுள்ளார். இந்தக் கடிதங்கள் அனைத்தும் ஏலத்திற்கு வரும்போது  அமெரிக்க டாலர் மதிப்பில் 15,000 முதல் 25,000 டாலர் வரை விலைபோகும் என்று தெரிகிறது.
-உண்மை இதழ்,1-15.6.15

டிரஸ்ட் வழக்கில் நாம் பெற்ற வெற்றி :


(திருவாளர்கள் டி.எம். சண்முகம், சிதம்பரம் கிருஷ்ணசாமி, கே.தங்கராசு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு, செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த எதிர்மனுவின் விவரத் தொடர்ச்சி...)
ஒரே தன்மை
(9)    (நான் மேலும் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.) இந்த நிறுவனமானது (Institution) சுயமரியாதை இயக்கத்தின் லட்சியங்களைப் பிரச்சாரம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது என்ற தன்மையில் அமைந்திருப்பதால், மறைந்த பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட திராவிடர் கழகத்தின் நோக்கங்களும் அதே அடிப்படையில் அமைந்திருப்பதாலும் இரண்டும் ஒரே தன்மையுடையனவை ஆகும். எனவே இந்த நிறுவனத்தின் (Institution) உறுப்பினர்கள் திராவிடர் கழகத்தின் கொள்கை கோட்-பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள்தான் இந்த நிறுவனத்தின் நலனிலும், நடவடிக்கைகளிலும் அக்கறை கொண்டவர்கள் என்ற உரிமையைப் பாராட்ட முடியும் என்பதைச் சொல்ல நான் ஆசைப்படுகிறேன்.
மேலே விவரிக்கப்பட்டவைப்-படி பார்த்தால் இந்த வாதிகள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தோடு எந்தவிதத்திலும் சார்ந்தவர்கள் அல்ல, அதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் அல்ல. இவர்கள் பெரியாருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களும் அல்ல. முடிவாக, அவர்கள் திராவிடர் கழக இயக்கத்துடன் எல்லாவிதத் தொடர்பையும் இழந்தவர்களாகி விடுகிறார்கள்.  இந்த அடிப்படையில் உற்றுநோக்கும்போது, சட்டக்கூற்றுபடி வாதிகளின் தாவா வழக்கு (Suit) அனுமதிக்கப்-படக் கூடியதே அல்ல. அதே காரணத்திற்காக அவர்களுடைய மனுவும் சட்டப்படி செல்லத்தக்கதும் அல்ல.
(10)    மேலே கூறப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் வாதிகளால் தாக்கல் செய்யப்-பட்ட மனுவும், நல்லெண்ண அடிப்படையில் அமைந்தவை அல்ல. அதற்கு மாறாக, கெட்ட நோக்கத்தின் அடிப்படையில், திராவிடர் கழக ஸ்தாபனத்தைச் சீர்குலைக்கவும் அது அமைதியான முறையில் செயல்படுவதைத் தடுக்கவும் செய்தவைகளே ஆகும். அப்படி அவர்கள் தாவாவையோ மனுவையோ, போடுவதற்குரிய தகுதியோ, நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்ற முறையிலாவது அல்லது நிறுவனத்தின் நலனிலும் அதன் நல்ல செயல்பாட்டிலும் அக்கறை உள்ள நபர்கள் என்ற தன்மையிலோ அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
மேலே கூறப்பட்டவற்றில் இருந்து ஒருவித உண்மை யாருக்கும் புலனாகாமல் இருக்க முடியாது. தங்களுடைய கெட்ட நோக்கத்திற்காக திராவிடர் கழகத்தின் சொத்துக்களின் நிர்வாகப் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் 1975 முதல் அக்கறை காட்டி வந்தார்கள் என்பது அந்த உண்மையாகும்.
கழகத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்பட்ட 1975 முதல் இந்த நிறுவனத்தின் மீதும் குறிப்பாக திராவிடர் கழகத் தலைவருக்கு எதிர்ப்பாகவும் தங்களுக்குள்ளே ஒரு கெட்ட எண்ணத்தை அவர்கள் வளர்த்து வந்துள்ளார்கள்.
அந்தக் கெட்ட எண்ணத்தின் விளைவே அவர்களால் கொண்டுவரப்பட்ட பிரஸ்தாப தாவாவாகும். திராவிடர் கழகத்திற்கும் பெரியார் சுயமரியாதை இயக்கத்திற்கும் ஆன எதிரிகளால் தங்களுடைய சுயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளவே இந்த வாதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்கள்.
யாரை எதிர்த்து?
(11)    பெரியாருடைய மறைவிற்குப் பிறகு இந்த நிறுவனத்தின் காரியங்களை நிர்வகித்து வந்த திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையை எதிர்த்துத் தான் தாவாவில் கூறப்பட்டுள்ள காரணங்களும், அதனுடன் தாக்கல் செய்யப்-பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ள காரணங்-களும் அமைந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒருபொழுதும் கூடவில்லை என்றும் நிறுவனத்தை ஒழுங்காக நடத்திச் செல்வதற்-குரிய சாதாரண காரியங்களைக் கவனித்து நடக்கவில்லை என்றும் வாதிகளால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எனவே அவை மறுக்கப்படுகின்றன. அதுபோலவே, இந்த நிறுவனத்தின் பேரவை கூடவில்லை என்றும், எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகும். பேரவைக் கூட்டம் கீழ்க்கண்டவாறு கூடி, கூட்டத்தின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்-பட்டிருக்கின்றன.
ஆண்டு    பேரவைக்கூட்டம் கூடிய தேதி
1975-76               11-4-1975
1976-77               20-2-1977
1977-78              28-5-1977
நிர்வாகக் குழு கூட்டம்
அதுபோலவே நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டமும் முறையாகவே கூடி நிறுவனத்தின் செயல்முறைத் திட்டங்களைக் கவனித்து கூட்டத்தின் நடவடிக்கைகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்திச் செல்லவும், நிர்வாகத்தின் நலனில் அக்கறை காட்டவுமான முறையில் நிர்வாகக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், மறைந்த திருமதி ஈ.வெ.ரா. மணியம்மையார் நிறுவனத்தின் காரியங்களை நல்ல முறையில் செயல்-படுத்தவில்லை என்று எதிர்ப்புத் தெரிவிப்-பதற்கான வாய்ப்பு இருப்பதற்கு இடமில்லை. நிறுவனத்தின் காரியங்களைச் செயல்-படுத்துவதில் திருமதி ஈ.வெ.ரா. மணியம்மை எவ்விதமான எதேச்சாதிகாரப் போக்கையும் கடைப்பிடிக்கவில்லை.
நிறுவனத்தின் உறுப்பினர்-கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். வாதிகளைப் பொறுத்தவரையில் எதிர்ப்பைத் தெரிவிக்க அவர்களுக்கு எவ்விதத் தகுதியும் இல்லை; உண்மையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. கழகத்திற்குச் சம்பந்த-மில்லாதவர்களும் தொடர்பு இல்லாதவர்களும் கோர்ட்டாரவர்கள் மனதில் கழகத்தின் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்தப் பயங்கரமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்கள். கழகத்தி-லிருந்து அவர்கள் விலக்கப்பட்டார்கள் என்ற விவகாரம் 1974லும், 1975லும் முடிந்துபோன உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். (Fait Accompli).
(12)    நிறுவனத்தின் சொத்துகளும், கணக்கு-களும் நிறுவனத்துக்காக நிர்வகிக்கப்-பட-வில்லை என்றும் நிறுவனத்தின் உண்மையான வருவாய் கணக்கில் கொண்டு வரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆதாரம் இல்லை
இந்தக் குற்றச்சாட்டுகள் எவ்விதப் பொருளும் இல்லாதவை. வாதிகளால் ஒப்புக் கொண்டபடி இந்த நிறுவனம் வருமானவரி போடப்பட்டுள்ள நிறுவனமாகும். வருமானவரி அதிகாரியாலும், அவருக்கு மேல் உள்ள உதவி கமிஷனராலும் 1956_1957லிருந்து 1974_1975 வரை உட்பட்ட ஆண்டுகளுக்குரிய வருமானவரி நிர்ணயிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்-பட்டுள்ளன. வருமானவரி இவ்வளவு-தான் என்பதை, சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜூ-களும் நிர்வாகத்தின் வரவு செலவுக் கணக்குகளடங்கிய அறிக்கைகளும், இன்னும் பல ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே, வருமான வரிக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்-பட்டன.
உண்மையான வருவாய்க்கு சரியான கணக்குக் காட்டவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இது மேலெழுந்த வாரியாகவும், விவரங்கள் இல்லாமலும் சொல்லப்பட்டவை-யாகும். இது ஒரு சாரம் இல்லாத குற்றச்சாட்டு. பிரதிவாதிகள் தங்களுக்குள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள், கெட்ட நடவடிக்கையில் இறங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
நிர்வாகம்
(13)    அதுபோலவே இந்த நிறுவனம் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் ஆதாரமற்றதாகும். இந்த நிறுவனத்தின் சொத்துகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்கின்ற குற்றச்-சாட்டும் அடிப்படையற்றதாகும். இந்த நிறுவனத்தின் சொத்துகள் பெரும்பாலும் சென்னை, திருச்சி, ஈரோடு போன்ற நகரங்களில் உள்ளன. அவை பெரும்பாலும் மாநில, மத்திய அரசாங்க அலுவல்களுக்கும், மற்றும் பிரசித்திப்பெற்ற நிறுவனங்களாகிய பாரி கம்பெனிக்கும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கும் (எம்.எம்.டிஏ.) இதுபோன்ற நிறுவனங்களுக்கும் பெரும்பாலும் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன.
எனவே அரசாங்க அலுவலகங்களுக்கும், மற்ற பிரசித்திப் பெற்ற நிறுவனங்களுக்கும் வாடகைக்கு விடப்பட்ட சொத்துகள் சரியான முறையில் பராமரிக்கப்பட-வில்லை என்று கூறும் குற்றச்சாட்டு புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும்!
அதுபோலவே வாடகைக்காரர்களிடம் வசூலிக்கப்-படும் தொகை கணக்கில் கொண்டுவரப்-படவில்லை என்கின்ற குற்றச்-சாட்டு சரியானதல்ல; ஆதாரங்களைக் கொண்டதுமல்ல. எனவே அந்தக் குற்றச்-சாட்டும் மறுக்கப்படுகிறது. நிறுவனத்திற்குரிய சொத்துகளில் 75 சதவீதம் மாநில, மத்திய அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடப்-பட்டுள்ளது. ஒருசில சொத்துகளைத் தவிர மற்றவை எல்லாம் புகழ்பெற்ற கம்பெனி-களுக்கும், கார்ப்பரேஷனுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் நிறுவனமோ அல்லது இரண்டாவது பிரதிவாதியோ அவர்களிடமிருந்து வாடகை வாங்கி அதைக் கணக்கில் கொண்டுவராமல் இருக்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டு கெட்ட எண்ணத்துடனும் கோர்ட்டார் உள்ளத்தில் தவறான எண்ணத்தை உண்டாக்குவதற்காகவும் சொல்லப்பட்டவையாகும்.
(14)    அடுத்த குற்றச்சாட்டு என்னவென்றால், பெரியார் மறைவுக்குப் பிறகு புரோ நோட்டுகள் (Pronotes) என் பெயரிலோ, என்னால் நியமிக்கப்பட்டவர்கள் பெயரிலோ (Nominees) எழுதி வாங்கி, அந்தப் பணத்தைத் தவறான முறையில் அபகரித்துக் கொள்வதற்காகும் என்ற குற்றச்சாட்டு. இது துளியும் ஆதாரமற்றதாகும்.
கோர்ட்டார் அவர்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணம் ஏற்படுத்தும்வகையில் புனைந்து கூறப்பட்டதாகும்.
இப்படிப்பட்ட பயங்கரக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எவ்வித ஆதாரத்தையும் இதற்கும் காட்டப்-படவில்லை. தாவா மனுவுடன் இணைக்கப்-பட்ட தஸ்தாவேஜூகள் பட்டியலில் இந்த புரோ நோட்டுக்களை 3, 4, 5 அய்ட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது அய்ட்டத்தில் அடங்கியுள்ள புரோ நோட்டு 20.2.1972ஆம் தேதியை உடையதாகும். அதுவும் தீர்ந்து போன (பைசலாகிவிட்ட) புரோ நோட்டாகும். இந்தப் புரோ நோட்டுக்கும், இவர்களால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. 4ஆவது புரோ நோட்டு 7.3.1972ஆம் தேதியிலும் 5ஆவது புரோ நோட்டு 20.3.1972ஆம் தேதியிலும் நிறுவனத்தின் பெயருக்கு எழுதப்பட்டதாகும். இந்தப் புரோ நோட்டுகள் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மைக்கு ஸ்தாபனத்தின் செயலாளர் என்ற பொறுப்பில் எழுதிக் கொடுக்கப்பட்டவைகளாகும். இவை காலாவதியாகின்ற தேதிகளில், இவற்றுக்குப் பதிலாக புதிய புரோ நோட்டுகள் 7.3.1975லும், 20.3.1975லும் நிறுவனத்தின் செயலாளரான ஈ.வெ.ரா. மணியம்மை பெயராலும் (அதே நபர்களால்) புதுப்பிக்கப்பட்டுள்ளன. வாதிகள் கொண்டு வந்த குற்றச்சாட்டுகளில் இந்த இரண்டு புரோ நோட்டுகளும் குறிப்பிடப்-பட்டுள்ளன.
எனவே இரண்டாவது பிரதிவாதி இந்தப் புரோ நோட்டிலுள்ள பணத்தைத் தவறான முறையில் பயன்படுத்த ஏதுவாகும் என்பதற்கு எந்தவித ஆதாரத்தையும் காட்ட--வில்லை. பெரியார் மறைவுக்குப் பிறகு திருமதி ஈ.வெ.ரா. மணியம்மை அந்த நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் நிர்வாகக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டபடியோ, அல்லது ஒப்புதல் அளித்தபடியோதான் திருமதி மணியம்மை அவர்கள் எந்த முடிவுகளையும், செயல்களையும் புரிந்தார்கள். 16.3.1978இல் ஏற்பட்ட திருமதி மணியம்மையார் அவர்கள் மறைவுக்குப் பிறகு நான் இந்த நிறுவனத்தின் செயலாளராக 19.3.1978 முதல் ஆனேன்.
இந்த நிறுவனத்தின் செயலாளர் பதவியை ஏற்பதற்கு முன்பு, நான் இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தேன். இந்த நிறுவனத்தின் செயல்முறைத் திட்டத்தின்படி தலைவர் பொறுப்பில் இருந்த என்னால், வாதிகள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுப்-படி நடந்திருக்க முடியாது. ஏனென்றால் அப்போது திருமதி மணியம்மையார் அவர்கள் இந்த நிறுவனத்தின செயலாளராவார். இந்த நிறுவனத்தின் செயல்களும், நடவடிக்கைகளும் நிர்வாகக் குழுவால் கவனிக்கப்பட்டு வந்தன.
(15)    மேலும் கூறப்பட்ட குற்றச்சாட்டானது, இந்த நிறுவனத்தினுடைய வருமானவரி பாக்கி ரூ. 65 லட்சம் வரை சென்றுவிட்டது என்றும் பாக்கி இவ்வளவு அதிகமானதற்குக் காரணம் என்னுடையதும், திருமதி மணியம்மையுடையது-மான கவனக் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் சட்ட விதி 2 (a)(viii) பிரிவில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்காக செலவிடப்படும் செலவை வருமான வரியி-லிருந்து விலக்கு அளிக்கும்படி இந்த அப்பலேட் உதவி கமிஷனர் (நிறுவனம் செய்த அப்பீலில்) வருமான வரி அதிகாரிகளுக்கு உத்திரவு பிறப்பித்தார். இந்த உத்திரவுகள் அமல்படுத்தப்-படும் நிலையில் இருக்கின்றன. அப்பலேட் உதவி கமிஷனருடைய உத்திரவுகள் செயலாக்கப்-பட்டால் இந்த நிறுவனத்திற்குரிய வருமான வரித் தொகை 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகைக்கு வரலாம். 65 லட்சம் ரூபாய்க்கு வருமானவரி கட்ட வேண்டும் என்று இந்த நிறுவனத்திற்கு ஒருபோதும் நிர்ணயிக்கப்-படவில்லை. இந்த நிறுவனத்திற்குரிய வருமான வரி பெரியார் அவர்களது ஆயுட்காலத்திலேயே வருமானவரி இலாகாவினரால் போடப்-பட்டதாகும். என்றாலும் திருமதி மணியம்மை-யாரால் அப்பலேட் உதவி கமிஷனருக்கும், வருமானவரி அப்பலேட் டிரிபூனலுக்கும் அப்பீல் செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பலேட் வருமானவரி உதவி கமிஷனர், வருமானவரி கட்டுவதற்குரிய அடிப்படை வாய்ப்புகளைக் குறைத்து உத்திரவிட்டார். இத்தகைய சூழ்நிலையில் ஏதோ இந்த நிறுவனம் ஒரு பெரிய வருமான வரி பாக்கியைக் கட்டவேண்டிய நிலையில் இருக்கிறது என்று ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகும்.
வரிகள்
(16) இந்த நிறுவனத்திற்குரிய வரிகளும் சொத்து வரிகளும் கட்டப்படாமல் பாக்கியாக இருக்கின்றன என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இந்த நிறுவனம் வரிகளைக் கட்டுவதில் மிகவும் முறையாக நடந்து வருகிறது. பெரியாரின் மறைவுக்குப் பிறகு திருமதி மணியம்மையார் முயற்சியினால் வருமான வரியைக் குறைப்பதற்கு வரி விதிக்கும் அதிகாரிகளிடம் உரிய விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.
சொத்து-களை அட்டாச் செய்வோம் என்று வருமான வரி அதிகாரிகள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளைச் சமாளித்து வருமான வரித் துறைக்கு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு வரிப்பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. பிறகு ஏற்பட்ட பேச்சுவார்த்தையின்படி மாத ரூபாய் 12,000 வரி பாக்கியாக கட்டுவது என்று ஓர் உடன்பாடும் ஏற்பட்டது. அந்த உடன்-பாட்டின்படி, 1978 பிப்ரவரி முதல் மாதம் 12,000 ரூபாய் கட்டப்பட்டும் வருகிறது. இந்தச் சூழ்நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் மிகவும் நிதானத்துடன் நடந்து கொண்டு, இந்த நிறுவனத்திற்குரிய வாடகைகளை வாங்குவதின் மீது போடப்-பட்டிருந்த அட்டாச்மெண்டுகளை நீக்கி இந்த நிறுவனம் தன்னுடைய அன்றாட அலுவல்-களைக் கவனிப்பதற்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் வருவாயான ஏறத்தாழ  45,000 ரூபாயில் 33,000 ரூபாயை அறப்பணிகளுக்கும், நல்வழி காரியங்களுக்கும் பிரச்சாரக் காரியங்களுக்கும் செலவழிக்கப்பட்டு வருகிறது. இது மெமோரண்டம் ஆப் அசோசியேஷனில் குறிப்பிட்டுள்ள-படி இந்த நிறுவனம் உயர்நிலைப் பள்ளிகளையும், பயிற்சிப் பள்ளிகளையும், அனாதை இல்லங்களையும், நூலகங்களையும் நடத்திக் கொண்டு வருவதோடு இயக்கப் பிரச்சாரக் காரியங்-களையும் நடப்பதற்கு விடுதலை, உண்மை என்ற பத்திரிகைகளை நடத்தி வருகிறது. இதற்கு மேலும் பல புத்தகங்களும், துண்டறிக்கைகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் அடங்கியுள்ள பல பிரிவுகள் நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்பட்டு, கொடுக்க வேண்டிய தொகைகள் அவ்வப்போது காலதாமதமின்றி பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த குற்றச்சாட்டான, இந்த நிறுவனத்தின் சொத்துகளை பராதீனம் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. உண்மையில் இந்த நிறுவனத்தின் சொத்துகள் பெரும்பாலும் வருமான வரித்துறையால் அட்டாச் செய்யப்பட்டவைகளாகும். இந்த நிலையில் இந்தச் சொத்துகளைக் கைப்பற்றுதல் என்ற பிரச்சினைக்கே இடமில்லை!
(17)  1962இல் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான விடுதலை பத்திரிகையை நடத்தக்கூடிய பொறுப்பு தந்தை பெரியார் அவர்களால் என்னிடம் ஒப்படைக்கப்-பட்டது. அப்போது அந்தப் பத்திரிகை மூடப்படும் நிலையில் இருந்தது. நான் என்னுடைய உண்மையான உழைப்பினைத் தந்து அதை இன்னும் நடத்திக் கொண்டு வருகிறேன். அது இன்னும் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வமான  ஏடாக நடந்து வருகிறது. நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் பாராட்டி, மறைந்த தந்தை பெரியார் அவர்கள் 10.08.62, 06.06.64 விடுதலை இதழ்களில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். பெரியார் ஆயுட் காலத்தில் நான் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். திருமதி மணியம்மையார் ஆயுட் காலத்திலும் அந்தப் பதவியைத் தொடர்ந்து வகித்து வந்தேன். தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்க பொதுக் கருத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரையில் பெரியாருடைய ஆயுட் காலத்தில் 1971இல் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராக (டிரஸ்டியாக) நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
பெரியார் அவர்கள் மறைவுக்குப் பிறகு இந்த நிறுவனத்தில் ஆயுட்கால உறுப்பினராக ஆக்கப்பட்டு நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒன்று கூற விழைகிறேன். நீண்ட நாட்களாக மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையையும், திருமதி மணியம்மையாருடைய நம்பிக்கையையும் நான் பெற்று வந்திருக்கிறேன். என் மீது ஏற்பட்ட இந்த நம்பிக்கைக்கு ஏற்ப இந்த நிறுவனத்தின் காரியங்களை என்னுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தி கவனித்து வருகிறேன். இந்த நிறுவனத்தின் ஆயுட்கால செயலாளராக 19.3.78முதல் நான் ஆனபிறகும் மனுதாரர்கள் மனுவில் கூறியுள்ள கோரிக்கை-களை நிறைவேற்றும் வண்ணம் நான் இந்த நிறுவனத்தை தவறான வழிகளில் நடத்திக் கொண்டிருந்திருக்க  முடியாது. நடந்திருக்கும் அளவுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. அதற்குரிய கால அவகாசம் கிடையாதே!
(18) செக்ஷன் 92 (C.P.C.)யின் கீழ் போடப்பட்டுள்ள தாவாவிலும் அதற்கிடையில் அட்வகேட்- ரிசீவரை (Advocate receiver) நியமிக்க வேண்டும் என்றும், இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவிலும் கோரப்பட்டுள்ளது. இவை நல்ல எண்ணத்தின் அடிப்படையில் எழுந்தவைகள் அல்ல. ஏற்கெனவே கூறியபடி வாதிகள் போட்டிக் கட்சியை ஏற்படுத்தி, அதற்கும் திராவிடர் கழகம் என்றே பெயர் வைத்து அழைக்கிறார்கள்.
திராவிடர் கழகத்தின் தலைமை, ஏற்பட்டுள்ள மாறுதலில் ஒருங்கிணைந்து தன்னைத் தயார் செய்து கொள்ள முற்பட்டு தொடர்ந்து செயலாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மணியம்மையாரின் மறைவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வாதிகள் செயல்படுகிறார்கள். மேலும் கழகத்தினுடையவும் நிறுவனத்தினுடையவும் செயல்முறையைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
தாக்கல் செய்யப்பட்ட தாவா மனுவை உற்று நோக்கினாலும், மனுவுக்கு ஆதாரமாகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தைக் கவனித்தாலும், அய்யந் திரிபு அற ஓர் உண்மை புலனாகும். அதாவது இந்த வாதிகள், குட்டையைக் குழப்பி அதில் ஏதாவது சிறு மீன், பெருமீன் கிடைக்காதா, அப்படி ஏதாவது சிறு தவறுகளோ அல்லது குறைபாடுகளோ இந்த நிறுவனத்திலோ அல்லது இந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் முறையிலோ இருந்தால், அதைக் கொண்டு, தங்களுடைய உள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கில் இம்முயற்சியில் இறங்கியுள்ளார்கள். மேலும் அவர்களால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு-களில் ஏதாவது ஒன்றுக்கு ஆதாரமோ அடிப்படையோ இல்லை என்பதிலிருந்து அவர்களுடைய உள்ளெண்ணம் தெரியாமல் போகாது.
மாறாக, போதிய ஆதாரங்களை கோர்ட்டார் முன்னிலையில் இந்த எதிர் உறுதிமொழிப் பத்திரத்தின் (Counter affidavit)  மூலம் பிரதிவாதிகளாகிய நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம். ஏன் இவ்வளவு ஆதாரங்-களைத் தாக்கல் செய்திருக்கிறோம் என்றால், வாதிகள் தங்களுடைய தாவா மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிரூபிக்க மட்டுமல்ல; கோர்ட்டார் அவர்கள் பிரதிவாதிகளாகிய எங்கள் நல்லெண்ணத்தை, திருப்தி அடையுமளவுக்கு அறிந்து கொள்வதற்கே ஆகும். அதுவும் இந்த நிறுவனம் ஒரு அறக்கட்டளை நிறுவனமாகும். எனவே இந்த மனுக்கள் மூலம் நாங்கள் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், மேலே எடுத்துக் கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் வாதிகளால்-தாக்கல்செய்யப்பட்ட தாவாவையும், மனுக்-களையும் உற்று நோக்கி, சீர்தூக்கிப் பார்த்து, இந்த இடைக்கால மனுவைத் தள்ளுபடி செய்து, எங்களுக்கு செலவுத் தொகை கிடைக்குமாறு உத்திரவிட வேண்டிக் கொள்கிறோம்.
(19) Letters Patent-ல் கண்டுள்ள 12ஆவது உட்பிரிவின் கீழும் சிவில் சட்டம் (Procedure Code) 92ஆவது பிரிவின் கீழும் வாதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வழக்காடும் வாய்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதிவாதிகள் விண்ணப்பித்துக் கொள்ளும் உரிமையைப் பயன்படுத்த உள்ளேன் என்பதையும் சமூகம் கோர்ட்டார் அவர்களுக்கு பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.
(20)    மேற்கண்ட காரணங்களுக்காகவும், சூழ்நிலையிலும், மேன்மைதங்கிய கோர்ட்டார் அவர்கள் இடைக்கால உத்திரவிற்கான வாதிகளின் மனுவைத் தள்ளுபடிசெய்து, எங்களுக்கு செலவுத் தொகையையும் அனுமதித்து, நீதி வழங்க வேண்டும் என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
சென்னையில் 12.4.1978இல் என்னுடைய வழக்குரைஞர் முன்னிலையில் உறுதிமொழி கூறி என்னால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
நினைவுகள் நீளும்...
-உண்மை இதழ்,1-15.1.15