வெள்ளி, 11 டிசம்பர், 2015

ஜெர்மனியில் - திராவிட இயக்கமும் - தந்தை பெரியாரின் கொள்கைகளையும் விளக்கி கருத்துரை


ஜெர்மனி பல்கலைக் கழகங்களின் அழைப்புகளையேற்று
திராவிட இயக்கமும் - தந்தை பெரியாரின்  கொள்கைகளையும் விளக்கி கருத்துரை

ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார்
ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் உரையாற்றுகிறார்
கொலோன் (ஜெர்மனி) ஜூன் 7-  ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகம் மற்றும் கல்வி நிறு வனங்களின் அழைப்பையேற்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ஜெர்மனி கொலோன் மய்யப் பகுதியில் உள்ள நியூமார்க்கெட் ஜோய்ஸ்ட் அருங் காட்சியகத்தில் பொது மக்களிடையே, பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்த தன்னுடைய சிறப்பான உரையை நிகழ்த்தினார். ஜெர்மனி, கொலோனில் இந்திய வார விழா நிகழ்ச்சிகளில் இவ்வாண்டு கொலோன் பல்கலைக் கழகம், கொலோன் மாநகர நிர்வாகம், இந்தியர் நலச் சங்கம் கொலோன் இணைந்து பங்கேற்று நடத்திய இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு பல்கலைக் கழகத்தில், மற்றும் பொது இடங்களான அருங்காட்சியகங்களில் இந்த வாரம் முழுமைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பல்கலைக் கழகத்தில் உள்ள பல்வேறு சிறப்பு உயராய்வுக் கல்வி மய்யங்களில் ஒன்றான தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய, இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு நிறுவனத்தால் ஏற்பாடு செய்திருந்த பொது மக்களுக்கான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி இரவு  7 மணியளவில் கொலோன் மாநகரின் மய்யப் பகுதியான நியூ மார்க்கெட்  என்னும் பகுதியில் அமைந்திருக்கும் ராட்டன்ஸ்ராட்ச் ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பொது மக்களுக்கு, ஆங்கிலத்தில் “The Dravidian Movement and Periyar’s ideology of Rationalism”
அதாவது, திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுத் தத்துவ கொள்கைகளும் என்ற தலைப்பில் உரையாற்ற சிறப்புமிகு ஏற்பாட்டினை இப்பல்கலைக் கழகம் மற்றும் மேலே குறிப்பிட்ட அமைப்புகள்  இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தன.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெரியார் மணியம்மை பல்கலை. வேந்தர் கி.வீரமணி அவர்களை  ஜெர்மனி - இந்திய நிகழ்வுகளின் ஒருங்கிணைப் பாளர் திருமதி ருத்இ.ஹீப், இந்தியர் நலச் சங்க பொதுச் செயலாளரும், கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் யுல்ரிக் நித்லஸ் ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சி சரியாக இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணியளவில் முடிவுற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஜெர்மனி - இந்திய நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர் திருமதி ருத்இ ஹீப், இந்தியர் நலச் சங்க பொதுச் செயலாளரும், கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் யுல்ரிக் நித்லஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும் வரவேற்று உரை நிகழ்த்தும் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் திருமதி ருத்இ ஹீப் அவர்கள் வரவேற்புரை ஆற்ற பேராசிரியர் யுல்ரிக் நித்லஸ் திராவிட இயக்கத்தைப் பற்றியும் தமிழர் தலைவர் அவர்களின் தலைமைத்துவத்தையும், அவர் தம் குறிப்புகளையும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. நல். இராமச்சந்திரனையும் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் தனித் தன்மைகளைப் பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்கள் அறிவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க பேரா. நல். இராமச்சந்திரன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைப் பற்றியான ஒரு விளக்க உரையை 15 நிமிடங்களில் அவையோர் புரிந்து கொள்ளுமளவிற்கு, பல்கலைக் கழகத்தைப் பற்றியும், அதன் தனித் தன்மைகளையும் விளக்கிப் பேசினார்.
பெரியார் புத்தகங்கள் விற்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பாஸ்கல் வொல்ப் ஸ்பெர்ஜர், லூகாஸ் பைபர், டிமோ பெய்ன்
இதனைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர் தமிழர் தலைவர் பெரியார் மணியம்மை  பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் தனக்களித்த தலைப்பில் கணினி மூலம் 26 பவர் பாய்ண்ட் பக்கங்களை பயன்படுத்தி படங்கள், சொற்றொடர்கள்   மூலமாக மிகச் சிறப்பான உரையை 60 நிமிடங்களில்  தனது சிறப்பான உரையை ஆற்றினார்கள். தமிழர் தலைவர் உரைக்கு அவ்வப்போது அரங்கில் கரவொலியும், வரவேற்பும் பெற்றன. சிந்தனைகளைத் தூண்டும் வண்ணம் திராவிட இயக்கத்தைப் பற்றியும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந் தனைகள், பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றியும் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மையை பெரியார் பொது மக்களுக்கு எடுத்துச் சென்ற விதங்கள், மத, சாதியின் தாக்கங்கள், சமூக ரீதியில் அறவழி மூலமாக பெற்ற வெற்றிகள், பல அரசியல் தலைவர்கள், தந்தை பெரியாரின் வெளி நாட்டுப் பயணங்கள் குறிப்பாக அய்ரோப்பிய பயணம் ஆகிய மய்யக் கருத்துக்களை உள்ளடக்கி தன்னுடைய சிறப்பான உரையை நிறைவு செய்தார்.
இறுதியில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரின் பல்வேறு சந்தேகங் களை, அவர்களின் வினாக்கள் மூலமாக வும் விடையளித்து வந்திருந்தவர்களின் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனை வருமே இதுகாரும் நாங்கள் எண்ணி யிருந்த பல தவறான கருத்துக்கள் இன்று முதல் எங்களில் இருந்து விடுபட்டு விடுதலையை அடைந்திருக்கிறோம் என்று தங்கள் மகிழ்ச்சிகளை தெரி வித்தனர்.
பல்கலைக் கழக வேந்தருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கொலோன் பல்கலைக் கழக மாணவர்கள்.
இந்திய வார விழாவாக இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கொலோன் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் யுல்ரிக் நித்லஸ் அவர்களுக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.
-விடுதலை,7.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக