வியாழன், 31 ஜனவரி, 2019

பிப்.5 இல் புதுடில்லியில் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் ‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’ வழங்கும் விழாபுதுடில்லி, ஜன.30 புது டில்லியில் நாடாளுமன்றம் எதிரில்  கான்ஸ்டிடியூசனல் கிளப்சபாநாயகர் அரங்கில் 5.2.2019 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது' வழங்கும் விழா நடைபெறுகிறது. மத்திய அரசின் சமூக நலத்துறை மேனாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.சமூகநீதிக்கான


கி.வீரமணி விருது


அமெரிக்காவில் சிகாகோ இல்லினாய்சில் பெரியார் பன்னாட்டு மய்யம் 13.11.1994இல் தொடங்கப் பட்டது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் மேனாள் மத்திய அமைச்சரும், புதுடில்லி சமூகநீதி மய்யத்தின் தலைவருமாகிய (மறைந்த) சந்திரஜித்யாதவ் தொடங்கிவைத்தார்.

சீர்திருத்த செம்மல், புரட்சியாளர் தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றி வருகின்ற வெளிநாடுவாழ் தொண்டர்களால் ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ அளிக்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்களத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பணிகளை மதிக்கும் வண்ணம், அவர் பெயரில் ஆண்டுதோறும் சமூக நீதி விருது அளிக்கப்பட்டு வருகிறது.

சமூகநீதிக்காகபங்களிப்பும், பணியும் ஆற்றி வந்துள்ளவர்களை அடையாளம் கண்டு, அப்பணி யில் அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தவும், சமூக நீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்விருது அளிக்கப்பட்டு வருகிறது.

சமூக சமத்துவம், மரியாதை, மனிதப்பெருமை களை மறுத்து வருகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இந்தியாவில் களம்கண்டுவருபவராகிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், சமூக நீதிக்காக பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் பெரியார் பன்னாட்டு மய்யம் சிகாகோ சார்பில் ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

நாடு, மதம்,  ஜாதி,  மொழி, பாலினம், மாற்றுத் திறனாளி பொருளாதார நிலை, குடும்பப் பின் னணி, அரசியல் பார்வை என சமூக அரசியல், பொரு ளாதாரம் உள்ளிட்ட எவ்விதத்திலும் பேதங்களின்றி விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’ அளிக்கப்பட்டு வருகிறது.இதுவரை


விருது பெற்றவர்கள்


மேனாள் பிரதமர் வி.பி.சிங், அகில இந்திய காங்கிரசு கட்சி மேனாள் தலைவர் சீதாராம் கேசரி, மேனாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ், உத்தரப்பிரதேச மேனாள் முதல்வர் செல்வி மாயாவதி, சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.டி.மூர்த்தி, தமிழ்நாடு காங்கிரசு கட்சி மேனாள் தலைவர் ஜி.கே.மூப்பனார், ஆந்திர உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி, மியான்மா யாங்கூன் வீராமுனுசாமி, மேனாள் முதல்வர் கலைஞர், கருநாடக மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமார், குவைத் சமூக சேவகர் செல்லபெருமாள், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, சிங்கப்பூர் பெரியார் கம்யூனிட்டி சர்வீஸ் கலைச்செல்வன், பிற்படுத்தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளர் விஅனுமந்த ராவ், மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன்புஜ்பல், ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் தானேஸ்வர்சாகு, பீகார் முதல்வர் நித்திஷ்குமார், இலண்டன் கிரோய்டான் துணை மேயர்,  மைக்கேல் செல்வநாயகம் ஆகியோருக்கு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழா புதுடில் லியில் நடைபெறுகிறது. மத்திய அரசின் சமூக நலத்துறை மேனாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது.

- விடுதலை நாளேடு, 30.1.19

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பிற மாநிலங்களில் தந்தை பெரியார் விழா

தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில்  தந்தை பெரியார் 45ஆம் நினைவு நாள் கூட்டங்கள்
விசாகப்பட்டினம், ஜன.4 தெலங்கானா மாநிலத்தில் நாத்திக மக்கள் சங்கத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 45ஆம் நினைவு நாள் கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

விசாகப்பட்டினம்


நாத்திக மக்கள் சங்கத்தின் சார்பில் ஜீடி சாரய்யா பேசும்போது, இந்துமதம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் சமத்துவமின்மைக்கு எதிராக, ஜாதிக்கு எதிராக, பெண்களின் உரிமைகளுக்காக போராடி வென்றவர் தந்தைபெரியார் என்று குறிப்பிட்டார்.  அதன்காரணமாகவே, தந்தை பெரியாரை அய்க்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பு போற்றிப்பாராட்டி, நவீன சாக்ரட்டீசாக, மனித உரிமைப் போராளியாக அடையாளப்படுத்தியது

வடஇந்தியாவில் சமூகப்பணிகளுக்கான அமைப்புகள் மற்றும் பகுத்தறிவு நாத்திக இயக்கங்கள் சமுதாய மாற்றத்துக்கான அடித்தளமிட்டு முன்னேற்றமடையச் செய்து வந்துள்ளன. சுயமரியாதை இயக்கத்தை நிறுவி பரப்புரை மேற்கொண்டவர் தந்தை பெரியார் என்று கூட்டத்தில் பேசிய பல்வேறு அமைப்பினரும் குறிப்பிட்டனர்.

நாட்டின் பாதுகாப்பு என்கிற பெயரால், இந்துத்துவ வன்முறைகள் அதிகரித்து ஜனநாயகத்தை அழிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  நாத்திக மக்கள் சங்கம் சார்பில் கூறுகையில், மதமற்றவர்களாக லட்சக்கணக்கானவர்கள் தங்களை அறிவித்துக்கொள்வதற்கு தந்தைபெரியார் வழிகாட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். பெண்கள் முற்போக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் லட்சுமி பேசுகையில், கவுரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே போன்றவர்களை இந்துத்துவம்தான் கொலை செய்துள்ளது. அதுதான் இந்துத்துவப் பாசிசத்தின் உச்சமாக உள்ளது. தலித்தா முத்தி அமைப்பின் சார்பில் வெங்கடரமணா கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் கூறுகையில், மராட்டிய மாநிலத்தில் கோரேகான் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்மீது நடத்திய மோசமான தாக்குதலுக்கு மதத்தின் தீமையாகிய ஜாதிமுறையே ஆணிவேராகும். மூடநம்பிக்கைகள் மற்றும் ஜாதிக்கு எதிராக நாம் போராடவேண்டும் என்று கூறினார்.

ஜம்மிகுண்டா


தெலங்கானா மாவட்டத்தில்  கரீம் நகரிலுள்ள ஜம்மி குண்டாவில் நாத்திக மக்கள் சங்கத்தின் சார்பில்  தந்தை பெரியார் 45 ஆம் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. நாத்திக மக்கள் சங்கத்தின் கரீம் நகர் மாவட்டச் செயலாளர்  ராஜூ மற்றும் பாரத், ராஜூ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பெதாபள்ளி


கோதாவரிகனி மாவட்டம் பெதாபள்ளியில்  தந்தை பெரியார் 45ஆம் நினைவுநாள் கூட்டம் நடைபெற்றது.

கோதா வரிகனி மாவட்டத் தலைவர் ராஜலிங்கம் சிறப் புரையாற்றினார். செயலாளர் சுசித்ரா, ராஜமவுலி, மல்லண்ணா உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

- விடுதலை நாளேடு, 4.1.19