வெள்ளி, 24 நவம்பர், 2023

புதுச்சேரியில் மாநில பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்ட எழுச்சி!(புதிய பொறுப்பாளர்கள்)


பகுத்தறிவாளர் கழக பல்வேறு அணிகளும் பங்கேற்பு!

தமிழர் தலைவர்  தலைமையேற்று சிறப்புரை

8

புதுச்சேரி, நவ. 24 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரி யரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை மாநில, மாவட்ட பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரியில் நடை பெற்றது. 

2023 நவம்பர் 19ஆம் தேதி காலை ஆசிரியர் புதுச்சேரி எல்லையில் மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி அன்பரசன், புதுச்சேரி நெ.நடராசன், இராசா, திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பழனி, சிவராசன் ஆகியோரது தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப் பட்டார்.

விடுதியிலிருந்து  ஆசிரியர் புறப்பட்டு புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் படிப்பக கட்டடத்தை பார்வை யிட்டு அதனை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத் தினார்.

கலந்துரையாடல் கூட்ட அரங்கில் காலை 7 மணி முதலே தோழர்கள் வருகை புரிய தொடங்கினர். 100 பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வருகை தந்த தோழர்கள் காலை உணவை உண்டனர். தொடந்து 9 மணிக்கு அரங்கில் வருகைப் பதிவு தொடங்கியது. 

காலை 10 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பையர் தெரு, தென்றல் அரங்கில் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.

பகுத்தறிவாளர் கழக மாவட்டங்கள் வருகை பதிவுக்காக ஆறு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு இருவர் அமர்தப்பட்டு அவர்களிடம் மாவட்ட வாரியாக பதிவுத்தாள் வழங்கப்பட்டு வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. 

ஒவ்வொருவரும் தமது வருகையை பதிவிட்டதும் அவர்களுக்கு பேட்ஜ் மற்றும் பகுத்தறிவாளர் கழக இலச் சினை பொறிக்கப்பட்ட பேனா வழங்கப்பட்டது. பதிவு செய் தவர்கள் அரங்கத்தில் அமர்ந்தவுடன் கூட்டம் தொடங் கியது.

கூட்டம் நடைபெற்ற வீதி ஆரம்பத்திலிருந்து ஆசிரியர் அவர்களை மாநில ப.க. தலைவர் தமிழ்ச்செல்வன், புதுவை நடராஜன், மற்றும்தோழர்களோடும், துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர் அவர்களது தலைமையில் பறை இசை முழங்கிட, பெரிய மேளம் அதிர்ந்திட, மாடாட் டம், மயிலாட்டம் நடத்தியும் அரங்கிற்கு அழைத்துவந்தனர்.

10

காலை 10.15 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பையர் தெரு, தென்றல் அரங்கில் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக புரவலர் “தகைசால் தமிழர்” ஆசிரியர் கி.வீரமணி தலைமை ஏற்றார்கள்.

அனைவரையும் வரவேற்று புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் நெ.நடராசன் உரையாற்றினார்.

தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்ட அமைப்பின் செயல்பாடுகளை சுருக்கமாக எடுத்துரைத் தனர்.

கோவை சின்னதுரை, கோபி குப்புசாமி, மயிலாடுதுறை செல்லதுரை, விருத்தாசலம் ராஜா, தேனி முருகன், வட சென்னை கோபால், தென்சென்னை மாணிக்கம், இராம நாதபுரம் பேரின்பம், செய்யாறு வெங்கட்ராமன், செஞ்சி திருநாவுக்கரசு, குடந்தை பேரா. சேதுராமன், கிருட்டினகிரி கிருட்டிணன், சேலம் வீரமணி ராஜூ, திருப்பத்தூர் திருப்பதி, சிவகங்கை இராசாங்கம், அரூர் ராசேந்திரன், திண்டிவனம் ஏழுமலை, ஆத்தூர் முருகானந்தம், காஞ்சிபுரம் சிதம்பரநாதன், தூத்துக்குடி பொன்ராஜ், திருவொற் றியூர் ஆசைத்தம்பி, அரியலூர் தங்க.சிவமூர்த்தி, கும்மிடிப் பூண்டி டார்வி, திருவண்ணாமலை வெங்கட்ராமன், புதுக்கோட்டை மலர் மன்னன்,தருமபுரி அண்ணாதுரை, ஆவடி கார்த்திகேயன், தஞ்சாவூர் அழகிரி, சிதம்பரம் நெடுமாறன், திருவாரூர் ஈவேரா, மன்னார்குடி கவுதமன், அறந்தாங்கி அம்பிகாபதி, செங்கல்பட்டு சிவக்குமார், மேட்டூர் அன்புமதி, திருச்சி மலர் மன்னன், காளையார் கோயில் முத்துகுமார் ஆகியோர் தங்களது மாவட்டங்களின் செயல்பாடுகளை பதிவு செய்தனர்.

தொடர்ந்து பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, ஆசிரியரணி தலைவர் தமிழ் பிரபாகரன், ஊடகப்பிரிவு தலைவர் அழகிரிசாமி,எழுத்தாளர் மன்றம் தலைவர் நேரு, பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்.

கடந்த காலங்களில் குறிப்பிடத்தகுந்த வகையில் பகுத்தறிவாளர் கழகத்தில் செயலாற்றியவர்களுக்கு பகுத் தறிவாளர் கழக புரவலர் பயனாடை அணிவித்து சிறப்பித் தார்கள்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர்கள் வேண்மாள் நன்னன், வேல்.சோ. நெடுமாறன், இல. மேக நாதன், ஆடிட்டர் இரஞ்சித்குமார், தஞ்சை கோபு.பழனி வேல், பொன்னமராவதி ஆ.சரவணன் ஆகியோரும், மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

தஞ்சாவூர், அரூர், சேலம், கும்பகோணம், புதுச்சேரி, விழுப்புரம், மன்னார்குடி, செங்கல்பட்டு, திருச்சி, ஆவடி  ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கும், காளை யார் கோயில் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்தார்கள்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்களை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் படித்தார்.

9

பெரியார் -1000 தேர்வு தொடர்புடைய அறிவிப்பையும், தேர்வு முறையையும் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் பவர் பாயிண்ட் மூலம் விளக்கத்தினை அளித்தார்கள்.

ஆசிரியர் வந்தவுடன் திராவிடர் கழக பொதுச்செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தனது உரையை வழங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார். ஆசிரியர் அவர்களது பணி பற்றி உருக்கமாக எடுத்துரைத்தார். 

தொடந்து பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தனது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி பதிவு செய்தார். 

அவரைத் தொடர்ந்து திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் உரையாற்றினார். தனது உரையில் பகுத்தறி வாளர் கழகம் ஏன் என்பதையும், THE RATIONALAISTS’ FORUM என்பதன் விளக்கத்தையும் கூறி, ஆசிரியரின் கனவான ‘பெரியார் உலகம்’ பற்றி கூறினார்.

தனது உரையில் மனிதம் பற்றி எடுத்துரைத்தார்.. பகுத்தறிவாளர் கழகம் தொடங்கிய நிகழ்வை தந்தை பெரியார் “மனிதர்கள் கழகம்“ தொடங்கியதாக  நினைவு கூர்ந்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்புகளைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

51A [H]  பற்றியும், அதனை பொதுவெளியில் எடுத்து சொல்வதும் நாம் தான் என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்.

“எதையும் நான் சொன்னேன் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே.. உன் அறிவைப் பயன்படுத்தி அது சரி என்றால் ஏற்றுக்கொள்” இல்லையென்றால் விடு என்று அய்யா என்பதையும், அது தொடர்பாக குடியாத்தம் கல் லூரியில் நடைபெற்ற நிகழ்வையும் குறிப்பிட்டு பேசினார்.

அறிவுச்சுதந்திரம் என்பது பற்றி எடுத்துச்சொன்னார். அதை வளர்ப்பது பகுத்தறிவாளர் கழகம் என்பதையும் எடுத்துக்கூறினார்.

மூடநம்பிக்கையை தோலுரித்துக்காட்டி பேசினார். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது பற்றி பேசினார்.

‘இனி வரும் உலகம்’ நூலில் உள்ள அய்யாவின்  கருத்துகளை எடுத்துக்காட்டினார்.

பெரியாரின் பெருந்தொண்டு காலத்துக்கும் பயன் தரும்.நேர்மை பற்றி தந்தை பெரியார் கூறியது என்ன என்பதை எடுத்துக்கூறினார்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் நேர்மையான வாழ்க்கை என்பதாகும்.

பகுத்தறிவாளர் கழகம் அமைப்புகளைப் பற்றி கூறினார். அமைப்புகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.

பகுத்தறிவாளர் கழகத்தில் மகளிர் அதிகமாக சேர்க்கப் பட வேண்டும் என்பதையும் கூறினார்.

பகுத்தறிவாளர் கழக இலச்சினை பற்றி அழகாக எடுத் துக் கூறினார். கேள்விக்குறி என்பதை அழகாக விளக்கிக் கூறினார். சமூக வலைதளங்களைப் பற்றி கூறினார்.

புதிய உற்சாகத்துடன் செயல்படுங்கள்.என்று கூறி முடித்தார்.

இறுதியில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் 46 மாவட்டத்திலிருந்து 250-க்கும் அதிகமான மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.


தீர்மானங்கள் - திட்டங்கள்!

1. அனைத்து மாவட்டங்களிலும் அமைப்புகளை ஏற்படுத்துதல்

2. பல்வேறு கட்சிகளில் இருந்தாலும் பகுத்தறி வாளர்களை ஒருங்கிணைத்தல்.

3. பெண்கள் அதிகம் சேர்க்கப்பட வேண்டும்.

4. ஒன்றிய, மாநில அரசுகளில் பணியாற்றும் பகுத்தறி வாளர்களை அடையாளம் காணுதல் - அங்கு பணி யாற்றுவோரில் ஒருவர் கிடைத்தாலும், அவரை அமைப் பாளராக்கி, அவர் மூலம் சம்பந்தப்பட்ட, அலுவலகத் திலிருந்து தோழர்களை பகுத்தறிவாளர் கழகத்திற்கு கொண்டு வருதல்.

5. பெயரளவுக்கு அமைப்புகள் இல்லாமல், அவை செயல்படும் வகையில் மாநிலப் பொறுப்பாளருடன் தொடர்புகள் அறுபடாமல் இருக்க வேண்டும்.

6. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற தலை வர்களின் பிறந்த நாளில் மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துதல்.

7. பள்ளிகளில் “மந்திரமா தந்திரமா” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தல். 

8. மாவட்டந்தோறும், அடுத்து ஒன்றியந் தோறும் அறிவியல் பகுத்தறிவுக் கண்காட்சிகளை நடத்துதல்.

9. மாநில மாவட்ட அமைப்புகளில் உரிய பதிவேடுகள்.

10. மாவட்டங்களில் பகுத்தறிவுக் கருத்தரங்கம் - பயிற்சிப் பட்டறை நடத்துதல்.

11. பகுத்தறிவு ஏடுகளைப் பரப்புதல்

12. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு நடத்துதல்

13. மாதம் ஒரு முறை மாவட்டங்களில் பகுத்தறி வாளர்களின் கலந்துரையாடல் கூட்டமும், 3 மாதத்திற்கு ஒருமுறை குடும்ப சந்திப்பு நடத்துவது.

14. அரசியல் பிரச்சினைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளல்.

15. பகுத்தறிவாளருக்கான இலச்சினை (பேட்ஜ்) தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்குதல்.

16. அகில இந்திய பகுத்தறிவாளர் அமைப்பில் (FIRA)  தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் பங்கை மேன்மைப் படுத்தி - தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை உறுதி செய்தல் - அத்தகைய நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் பிரதி நிதிகள் பங்கேற்று தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர் செயல் பாடுகளை விளக்குதல்.

17. பெரியார் பன்னாட்டு அமைப்பு வெளிநாடுகளில் நடத்தும் மாநாடுகளில் வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்றல்.

18. பெரியார்-1000 நிகழ்ச்சியில் மாணவர்கள் அதிகம் பேர் பங்கேற்க ஆவன செய்தல்.

19. மூடநம்பிக்கையால் சில பல செயல்பாடுகள் நடைபெறும் இடங்களுக்கு உரியவர்களை தகுதியானவர் களை அழைத்துச் சென்று, அப்பகுதியில் உள்ள இளை ஞர்கள், மாணவர்களைப் பயன்படுத்தி விளக்கங்களை அளித்தல்.

20. பகுத்தறிவு ஆசிரியர் அணியோடு இணைந்து செயல்படுதல்.

21. கலைநிகழ்ச்சிக் குழு ஒன்றை உருவாக்குதல்.

22. எழுத்தாளர்கள், பேச்சாளர்களை அடையாளம் கண்டு பயன்படுத்தல். ஊடகத் துறையில் பங்கேற்று விவாத அரங்கில் பங்கேற்கப் பயற்சி அளித்தல்.

23. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தல்.

மேற்கண்ட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத் துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.


பகுத்தறிவாளர் கழகம்

THE RATIONALISTS’ FORUM

புரவலர் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

மாநிலத் தலைவர்: இரா. தமிழ்ச்செல்வன்

பொதுச்செயலாளர்கள்: வி.மோகன், 

ஆ.வெங்கடேசன் (தலைமை நிலையம்), 

வா.தமிழ் பிரபாகரன் (ஆசிரியர்கள் பிரிவு) 

மாநில பொருளாளர்: முனைவர் சி. தமிழ்ச்செல்வன்

மாநில துணைத்தலைவர்கள்: கே.டி.சி. குருசாமி, இல.மேகநாதன்,  வேல்.சோ.நெடுமாறன், வேண்மாள் நன்னன், ந.கரிகாலன், பேரா. முனைவர் நா.சுலோச்சனா, பேரா.முனைவர் எஸ்.அருள்செல்வன்.

மாநில துணைப் பொதுச்செயலாளர்கள்: (பயிற்சி வகுப்புகள்) :  

அண்ணா சரவணன், பேரா. மு.சு.கண்மணி, வி.இளவரசி சங்கர்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்: 

முனைவர் வா.நேரு (மாநில தலைவர் )

கோ.ஒளிவண்ணன் (மாநில துணைத்தலைவர்), ம.கவிதா (மாநில துணைத்தலைவர்), 

செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநில செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர்)

பகுத்தறிவு ஊடகப் பிரிவு: மா. அழகிரிசாமி (தலைவர்), ஆவடி ரா.முருகேசன் (செயலாளர் ).

பகுத்தறிவு கலைத்துறை: மு.கலைவாணன் (தலைவர்), மாரி. கருணாநிதி (செயலாளர்)


பகுத்தறிவாளர் கழகம்: 

மாநில அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு மாவட்டங்கள்

அ.தா.சண்முகசுந்தரம் - தென்சென்னை, சோழிங்கநல்லூர், தாம்பரம்

கோவி.கோபால் - திருவொற்றியூர், ஆவடி, வடசென்னை

கு.ரஞ்சித்குமார் - திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம்

இரா.பெரியார் செல்வம் - கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்

தங்க.சிவமூர்த்தி - அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி

அ.சண்முகம் - துறையூர், லால்குடி

கோபு.பழனிவேல் - தஞ்சை, கும்பகோணம், திருச்சி

சி.இரமேஷ் - மன்னார்குடி, பட்டுக்கோட்டை

ஆ.சரவணன் - புதுக்கோட்டை, அறந்தாங்கி, இராமநாதபுரம்

ஒ.முத்துக்குமார் - காரைக்குடி, சிவகங்கை, 

இரா.முத்துக்கிருஷ்ணன் - காரைக்கால், நாகப்பட்டினம்

புயல். சு.குமார் - மயிலாடுதுறை, திருவாரூர்

பேரா.சி. மகேந்திரன் - உசிலம்பட்டி, மேலூர், மதுரை

வ.மாரிமுத்து - திண்டுக்கல், பழனி, கம்பம், தேனி

ஆலடி எழில்வாணன் - இராஜபாளையம், தென்காசி, விருதுநகர்

இரா.முத்துகணேஷ் - திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி

தரும.வீரமணி - கோவை, பொள்ளாச்சி, நீலமலை, மேட்டுப்பாளையம்

வழக்குரைஞர் ப.இளங்கோ - தாராபுரம், நாமக்கல், கரூர்

அ.குப்புசாமி - ஈரோடு, கோபி, திருப்பூர்

இரா.மாயக்கண்ணன் - சேலம், மேட்டூர், ஆத்தூர் 

ந.அண்ணாதுரை - ஓசூர், கிருட்டினகிரி, தருமபுரி, அரூர்

இர.அன்பரசன் - திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை

காஞ்சி. பா.கதிரவன் - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செய்யாறு

சி.நீ.வீரமணி - திருவள்ளூர், ராணிப்பேட்டை, கும்மிடிப்பூண்டி

திங்கள், 29 மே, 2023

எழுச்சியுடன் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக தொடர் கலந்துரையாடல் கூட்டங்கள்

  

அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

17

6.05.2023 அன்று காலை 10:30 மணிக்கு அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம், அரியலூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.  மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவமூர்த்தி தலைமையில் மண்டல கழக செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், அமைப்பாளர் ரெத்தின.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் அனைவரையும் மாவட்ட ப.க. செயலாளர் துரை.சுதாகர் வரவேற்று உரையாற் றினார்.

தொடர்ந்து, மாநில ப.க.துணைத்தலைவர் கோபு.பழனிவேல் கூட்டத்தின் நோக்கமான ‘‘வைக்கம் போராட்ட நூற்றூண்டுவிழா, இயக்க செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை பற்றியும். பகுத்தறிவுச் சிந்தனை யாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் “பெரியார் பேசுகிறார்” என்ற தலைப்பில் மாதக்கூட்டங்கள் நடத்துவது, திருக் குறள், புரட்சிக்கவிஞர் - பற்றிய இலக்கிய வட்டங்களின் மூலம் மாணவர்களிடம் பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டி இளம் தலைமுறைகளை பெரியார் வழியில் அடையாளப்படுத்த வேண்டும் என்றும், இயக்க உறுப் பினர்களை ஆண், பெண் பேதமின்றி அதிகரித்து இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் எனவும் உரை யாற்றினார்.

தொடர்ந்து, தங்களை அறிமுகம் செய்து கொண்டு உரையாற்றியவர்கள்: இர.இராமச்சந்திரன், ஒன்றிய கழகத் தலைவர். சி.சிவக்கொழுந்து, த.சுப்பராயன், இரா.ராசாராம், மு.முத்தமிழ்செல்வன், இராசா.செல்வ குமார், மு.கோபாலகிருஷ்ணன், கே.வெள்ளமுத்து, மு.ஜெயராஜ்.

பொதுச்செயலாளர் வி.மோகன் தமதுரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகத்தை எந்த அளவு வலிமையுள்ள அமைப்பாக நாம் உருவாக்குகிறோமோ, அந்த அளவு நம் எதிர்கால தலைமுறைக்கு வலிமையான சுயமரி யாதை, பகுத்தறிவு, இன உணர்வுள்ள அடித்தளத்தை அமைக்கிறோம் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும்'' என்றார். 

தொடர்ந்து, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் நிறைவுரையாற்றினார். அவரது உரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகம், என்பது திராவிடர் கழகத்திற்கு ஓர் அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும்  அமைப் பாகும். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும். பகுத்தறி வாளர் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர்களையும், ஆதர வளிக்கும் தோழர்களையும் அடிக்கடி சந்தித்து உரையாட வேண்டும். நம் பணி என்பது போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று மட்டுமே இல்லாமல் ,அறிவுப் பூர்வமான சமூகத்தை அமைப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். வாசகர் வட்டம், இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், கருத்தரங்கம் நடத்துதல். நூல் திறனாய்வு செய்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். பெரியார் 1000 வினா - விடைத்தேர்வுகள் மூலம் மாணவர்களிடம் பெரியாரியலை கொண்டு செல்ல வேண்டும்.  சமூக வலைதளங்களின் மூலம் பெரியாரியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலோடு பரப்பிட வேண்டும். பகுத் தறிவாளர் கழகத்திற்கு அதிக உறுப்பினர்கள் சேர்ப் பதன் மூலம்தான் ஜாதி, மதச்சிந்தனைகளை கட்டு டைக்க முடியும். மூட நம்பிக்கையையும், பெண்ண டிமைத் தனத்தையும் ஒழிக்க முடியும்.  அதற்கு பகுத்தறிவாளர் கழகம் பரவலாக்கப்பட வேண்டும்'' என்று தனது உரையை முடித்து புதிய பொறுப்பாளர் களை அறிவித்தார்.

 இறுதியில் தோழர் சா.பகுத்தறிவாளன் நன்றி கூறியபின் கூட்டம் நிறைவடைந்தது.


குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

18

6.5.2023 அன்று மாலை 6.30 மணிக்கு கும்ப கோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந் துரையாடல் கூட்டம் குடந்தை பெரியார் மாளிகை கூட்ட அரங்கத்தில் மாவட்ட கழக. செயலாளர் முனை வர் பேராசிரியர் சேதுராமன் வரவேற்புரையுடன் தொடங்கியது. மாவட்ட ப.க. தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட கழக செயலாளர் சு.துரைராசு ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

தொடர்ந்து, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் தன்னை தோழர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு, கூட்டத்தின் நோக்கமான “வைக்கம் நூற்றூண்டு விழா” நடத்துதல், உறுப்பினர் சேர்க் கையை அதிகப்படுத்துதல், குடந்தையில் மீண்டும் “பெரியார் பேசுகிறார்” கூட்டத்தை நடத்துதல்'' போன்றவற்றை மய்யப் பொருளாக வைத்து உரை யாற்றினார்,

19

தொடர்ந்து, ஒவ்வொரு தோழர்களும் தங்களை அறிமுக செய்து கொண்டு இயக்கத்தின் செயல் பாடுகள், தாங்கள் ஆற்றியச் செயல்பாடுகள் குறித்தும் தோழர்கள் இராம.புகழ், வி.சி.க.செல்வராஜ், ப.தியாக ராசன், மாவட்டப.க. அமைப்பாளர் சு.திருஞான சம்பந்தம், சேகர், துகிலிதமிழ்மணி, வலங்கைமான் ஒன்றிய செயலாளர் க.பவானிசங்கர், மீன்சுருட்டி சேக்கிழார், மேனாள் கழக மாவட்ட செயலாளர் மில்லர். சுவாமிமலை ஞானம், பாபநாசம், ஒன்றிய கழகத் தலைவர் சு.கலியமூர்த்தி, கபிஸ்தலம் ஏ.கைலா சம், மகளிரணி எம்.திரிபுரசுந்தரி, கி.இந்திரா அ.சங்கர், ச.திராவிட ராஜேஷ், வே.குணசேகரன், குடந்தை ஒன்றிய கழகத் தலைவர் ஜில்ராஜ், இளஞ்சேட் ஜென்னி, சோழபுரம் மதியழகன், திருநாகேஸ்வரம் சிவக்குமார், தமிழ்வேந்தன், இரமேஷ், பாபநாசம் சங்கர், கோவி.பெரியார்கண்ணன், கு.ரியாஸ் கி.செல்வ ராசன், முனைவர் பிரபாகரன், என்.காமராசு, குடந்தை மாநகர கழகத் தலைவர் வழக்குரைஞர் இரமேஷ் க.வளர்தமிழ், தே.அகல்யா, மண்டல கழக செயலாளர். க.குருசாமி ஆகியோர் உரையாற்றினர். 

தொடர்ந்து, பொதுச்செயலாளர் வி.மோகன் உரை யாற்றினார். அவர் தமதுரையில், ‘‘கும்பகோணம் எப் போதுமே பல வரலாறுகளை படைத்த ஊர். திராவிட மாணவர் கழகம் தோன்றுவதற்கு அடித்தளமிட்ட ஊர். பல மாநாடுகளை நடத்திய ஊர், இவ்வூர் மத வாதிகளும், மனுதர்மவாதிகளும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த திட்டமிடும் பகுதி. ஆனால், பெரியார் காலம் முதல் நம் தமிழர் தலைவரின் வழிகாட்டுதலுடன் என்றும் இது திராவிடமண், சுயமரியாதை, பகுத்தறிவு, இன உணர்வை வளர்க்கும் மண். இங்கு நம்முடைய பிரச்சாரத்தின் மூலம் பகுத்தறிவாளர் கழகத்தை வளர்த்தெடுப்போம், எதிர்கால நம் தலைமுறைக்கு பெரியாரியலை பரப்புவோம், வாசகர் வட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்'' என்று கூறிமுடித்தார்.

20
தொடர்ந்து, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் உரையாற்றினார். அவரது உரையில், கும்ப கோணம் என்பது, திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத ஊர். குடந்தை கல்லூரியில் நடந்த மாணவர் எழுச்சிதான் திராவிட மாணவர் கழகத்தின் மூலம் பார்ப்பனர்களின் ஜாதி, திமிரை அடக்கியது. நம் இயக்கம். பல வகையில் பிரச்சாரப் பணிகளைச் செய்தாலும், இன்னமும் மகாமக குளத்தின் மூலம் மூடநம்பிக்கைகளைப் பரப்பியும், அரசும் பல கோடிக்கணக்கான தொகைகளை செலவு செய்து அறி வியலுக்குப் புறம்பான கதைகளைக் கூறி மக்களை திசை திருப்புகின்றனர்.  அதை நாம் முறியடிக்க வேண்டும்.  எதிர்கால சமூகம் அறிவு வழியில் செல் வதற்கு பெரியார் கருத்துகளை நாம் தொடர்ந்து பிரச் சாரம் செய்து, ஒத்தக்கருத்துள்ள முற்போக்குச் சிந் தனையாளர்களை அடையாளம் கண்டு பகுத்தறி வாளர் கழகத்தை வலிமை பெற செய்வோம். ஆசிரி யர் தமிழர் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு செய லாக்கம் தருவோம்'' என்று கூறி புதிய பொறுப்பாளர் களை அறிவித்தார். இறுதியில் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.


 பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்


21

7.5.2023 அன்று காலை 11 மணிக்கு பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் மெரினா ஓட்டல் அரங்கத்தில் மாவட்ட ப.க. தலைவர் ஆ.இரத் தினசபாபதி தலைமையில், மாவட்ட கழகத் தலைவர் பெ.வீரைய்யன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.காம ராசு, பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

கூட்டத்தின் நோக்கமான வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, உறுப்பினர் சேர்க்கை, அமைப்பு களை விரிவுப்படுத்துதல் பற்றி மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் தொடக்கவுரையாற்றினார்.  
22

வருகை தந்த தோழர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டும், கூட்டத்தின் பொருள் சார்ந்தும், அமைப்பின் வளர்ச்சிக்கு  அவரவர்கள் நல்ல செயல் திட்டங்களைக் கூறிக் கீழ்க்காணும் தோழர்கள் நகர தலைவர் சிற்பி.சேகர், மதுக்கூர் ஒன்றிய ப.க. தலைவர் நாராயணன், நகர அமைப்பாளர் அ.இரவிக்குமார், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் சு.நடராசன், மாவட்ட ப.க. பொறுப்பாளர் மாணிக்க சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் சி.ரெங்கசாமி, க.சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, ஒன்றிய கழகத் தலைவர் ரெ.வீரமணி, பள்ளத்தூர் சண்முக வேல், சொக்கனாவூர் கு.சிவாஜி, சேது ஒன்றிய தலை வர் சி.செகநாதன், காசாங்காடு திருமேனி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து.துரைராசு, ஆசிரியர் வீர.முருகேசன், ப.க. அமைப்பாளர் கனக.இராமச்சந்திரன், மண்டலக்கோட்டை சரவணன், புல வஞ்சி பெ.அண்ணாதுரை, கருப்பூர் சி.முருகேசன், பேராவூரணி வசி, உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தொடர்ந்து, திராவிடர் கழக மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர். அதிரடி அன்பழகன் உரையாற்றும் போது, ‘‘சுயமரியாதை இயக்கம், பட்டுக்கோட்டையில் பகுத்தறிவாளர் கழக தொடக்கம், மாநாடு, ஊர்வலம், போன்ற செயல்களை செய்திட்ட பட்டுக்கோட்டை சதாசிவத்தின் தொடர் பிரச்சாரத்தால் இப்பகுதியில் உருவானப் பேச்சாளர் களில் நானும் ஒருவன், பட்டுக்கோட்டை சுயமரி யாதைக் கோட்டை பகுத்தறிவுக் கோட்டையாகும்.  

தந்தை பெரியார் காலத்திலிருந்து, அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற பல நூறு இளைஞர்களை உருவாக்கிய இயக்கம்தான். இன்றும் நம் தமிழர் தலைவர் ஆசிரியர் காலத்திலும் இப்பகுதி பகுத்தறிவுக் கோட்டையாகத் தான் திகழ்கிறது. 


குறிப்பாக நம் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை போன்றவர்களை பகுத்தறி வாளர்களாக உருவாக்கியதும் நம் தொடர் பிரச்சாரம் தான்.  எனவே, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முன்னெடுப் போம்'' என்று பேசினார்.
23

பொதுச்செயலாளர் வி.மோகன் தமதுரையில்  தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுடன் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்தி, நம் அமைப்பை வளர்த்திட தோழர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும் என உரையாற்றினார்.

நிறைவாக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் தமதுரையில், ‘‘அமைப்பை கட்டமைக்க தோழர்களின் சந்திப்பும் - மாதாந்திரக் கூட்டமும் அவசியம்.  மேலும், மாதந்தோறும் “பெரியார் பேசுகிறார்” என்ற தொடர் கூட்டங்கள்மூலம் புதிய தோழர்களை உருவாக்கி பகுத்தறிவாளர்கழகத்தை வலிமைப்படுத்த வேண்டும். நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எண்ண ஒட்டத்திற்கு செயலாக்கம் தருவோம்'' என்று கூறி புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார்.  மாவட்ட ப.க அமைப்பாளர் ஆசிரியர் வீர.முருகேசன் நன்றி கூறினார்.

மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

7.5.2023 அன்று மாலை 6.30 மணிக்கு மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ப.க. தலைவர் வை.கவுதமன் தலைமையில் மாவட்ட கழகத் தலைவர் சித்தார்த்தன், மாவட்ட கழக செயலாளர் கோ.கணேசன், மாவட்ட ப.க. செயலாளர் உ.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அடுத்து, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் கூட்டத்தின் நோக்கமான “வைக்கம் நூற்றாண்டு விழா”உறுப்பினர் சேர்க்கை, மாதாந்திர தொடர் கூட்டங்கள் நடத்துவது போன்றவைப்பற்றிக் கூறி இது தொடர்பாகவும், அமைப்பு வளர்ச்சிப் பற்றியும் தோழர்கள் உரையாற்ற வேண்டும் என கூறினார். 

தொடர்ந்து, மாவட்ட ப.க.ஆசிரியரணி செயலாளர் இரா.கோபால், மாவட்ட கழக துணைத் தலைவர் ந.இன்பக்கடல், நகர ப.க. தலைவர் கோவி.அழகிரி, நகர கழக செயலாளர் மு.இராமதாஸ், ஒன்றிய கழகத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், பேராசிரியர் பு.காமராசு, ஒன்றிய ப.க. செயலாளர் வே.வினோத், மாவட்ட ஆசிரியரணி தலைவர் த.வீரமணி, செ.இராமலிங்கம், ஆசிரியர் ஜெ.அருளரசன், மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், அழகேசன், எம்.பி.குமார்,  சிவா.வணங்காகுடி, மு.சந்திரசேகரன், ந.இந்திரஜித், த.சத்தியமூர்த்தி, அ.குணசேகரன், இரா.வெங்கட்ராமன், மாவட்ட கழக அமைப்பாளர் அன் பழகன், மா.மணிகண்டன், மு.சந்திரபோஸ் ஆகி யோரின் உரைக்குப்பின் தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் பேசும்போது, பகுத்தறிவாளர் கழகம் என்பது, திராவிடர் கழகத்திற்கு ஓர் அடித்தள மான அமைப்பாகும்.  நம் படிப்பகத்தில் முன்பு போல் மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற வேண்டும், அதற்கு என் முழு ஒத்துழைப்பைத் தருகிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து, பொதுச்செயலாளர் வி.மோகன் உரை யாற்றிய போது, ‘‘பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களை நாம் அடிக்கடி சந்தித்து கலந்துரையாட வேண்டும். நாம் இன்று அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் தந்தை பெரியார், நம் ஆசிரியர் அவர்களின் தொடர் போராட்டத்தால் கிடைத்த பலன்கள். அதை நாம் பாதுகாக்க வேண்டும். பெரியாரின் பணிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம். இல்லையென் றால் நம் அடுத்த தலைமுறை மிகப் பெரிய பாதிப்பு களைச் சந்திக்கும்'' என்று எச்சரிக்கை விடுத்து நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் பகுத்தறிவாளர் கழகத்தை வளர்க்கப் பாடுபடுவோம் என்று உரை யாற்றினார். 

முன்னிலை வகித்த மாவட்ட கழக  தலைவர் சித்தார்த்தன், தனது உரையில், ‘‘பகுத்தறிவாளர் கழகத்தோடு, திராவிடர் கழகமும் இணைந்து ஒரு குழு அமைத்து இந்த மாதத்திலிருந்தே, இதே பெரியார் படிப்பகத்தில் “பெரியார் பேசுகிறார்” என்ற நிகழ்வை நடத்துவோம்''  என்று அறிவித்தார்.

நிறைவுரையாக மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் உரையாற்றும் போது, ‘‘அனைத்துத் தோழர் களின் உரைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மாவட்ட கழகத் தலைவர் அவர்களின் அறிவிப்பானது மாதாந்திரக் கூட்டம் நடத்துவோம் என்பதை எண்ணி மகிழ்கிறேன். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடு களும், செஞ்சி மாநாட்டிற்கு அதிக நன்கொடையும் அளித்த மாவட்ட தோழர்களைப் பாராட்டுவதோடு சிறிய மாவட்டமாக இருந்தாலும், செயல் திட்டத்தில் மிகப்பெரிய மாவட்டம் மன்னை மாவட்டமாகும். நல்ல பொறுப்பாளர்களைப் பெற்றுள்ள தோழர்கள் நீங்கள். உங்களின் செயல்பாடுகளால் பகுத்தறிவாளர் கழகத்தை வலிமையான அமைப்பாக உருவாக்குவோம். நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் சிந்தனைக்கு செயலாக்கம் தருவோம்'' என்று கூறி, புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார். இறுதியில் நகர ப.க. செயலாளர் பேராசிரியர் பு.காமராசு நன்றி கூற கூட்டம் மகிழ்வுடன் நிறைபெற்றது.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 

7
தாம்பரம், ஏப். 20- 14.4.2023 அன்று, தாம்பரம் பேருந்து நிலைய பெரியார் புத்தக நிலையத்தில், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அண் ணல் அம்பேத்கரின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சிறப்பு கலந்துரை யாடல் கூட்டம் மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பி.கரிகாலன் தலைமை  வகித்தார். தாம்பரம் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தாம்ப ரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அனை வரையும் வரவேற்று,  அறிமுக உரை ஆற்றினார். அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறினார். பின்னர் இரா.சு.உத்ராபழனிசாமி உரையாற்றினார்.

“1929 - நாசிக்கில் நடைபெற்ற ஒடுக் கப்பட்டோர் மாநாடு குறித்தும் அதில் தந்தை பெரியாரின் கடிதத்தை அம் பேத்கர் படித்தது குறித்தும், அம்பேத் கரும், பெரியாரும் எவ்வாறு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட் டனர் என்பது குறித்தும் பேசினர். கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் அண்ணா துரை உரையாற்றுகையில், மனித சமூ கம் எப்படி, இப்படி அடிமையாக்கப் பட்டது என்றும், பழைமையான மக்கள் தங்கள் தேவைக்காக கற்பனை செய்து வைத்திருந்த சொர்க்கம், நரகத் தைப் பற்றியும், அதனைப் பார்ப்பனர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு மக் களை அடிமைப்படுத்தினர் என்பதை யும், அதற்காக எதிர்ப் போராட்டம் நடத்திய அம்பேத்கரின் அர்ப்பணிப்பு களையும் எடுத்துக் கூறினார்.

குணசேகரன் பேசும்போது, “தற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும், இந்து மதத்தில் உள்ள இடர்ப்பாடுகளும், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளால் இந்து மதத்தில் இருந்து மன வேதனையுடன், வெளியேறி  அண்ணல் அம்பேத்கர் புத்தமதத்தை தழுவியதையும்“ விளக்கி உரை ஆற்றினார். 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட புதிய தோழர் பழனிசாமி பேசும் போது:-

நிர்மலா:- அம்பேத்கர் பெண்களுக்காக போராடியதையும், பெண்களுக்கு வாங்கிக் கொடுத்த முன்னுரிமைகளையும் குறிப்பிட்டுப் பேசினார்.

தாம்பரம் மாவட்ட தலைவர் முத் தையன்:- தன் வாழ்வில் பார்ப்பனர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும், தன் தந்தை அரசு வேலை செய்தாலும் பார்ப்பனரிடம் வேலை செய்யும் போதும், அந்த பார்ப்பனரின் குழந்தை கள் தன் தந்தையிடம் நடந்துகொண்ட முறையைக் கண்டு சிறு வயதிலேயே மனதில் ஏற்பட்ட வேதனை குறித்தும், அந்தக் காலகட்டத்தில் ‘விடுதலை’ பத்திரிகை மூலமாக பெரியாரின் கருத் துகளை தெரிந்துகொண்டு சுயமரி யாதை எவ்வளவு முக்கியம் என்று உரிமைகளை இழந்த காலகட்டத்தில் அம்பேத்கர் பட்ட பாடுகளையும் வேத னையோடு வெளிப்படுத்தினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் த
லைவர் பி.கரிகாலன் மற்றும் ஆவடி தமிழ்ச்செல்வன், கூடுவாஞ்சேரி மா.ராசு ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக நன்றியுரை ஆற்றிய தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அருணா பத்மாசூரன் லாகூர் மாநாடு குறித்தும், அம்பேத்கரின் மன உறுதியையும், அம்பேத்கர் இந்தக் காலகட்டத்திலும் போற்றப்பட வேண்டிய, தேவையான தலைவர் என்பது குறித்தும் பேசி, அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத் தினை நிறைவு செய்தார்.

கருப்பைய்யா மற்றும் கழகத் தோழர் கள் பலரும் இக்கலந்துரையாடல் கூட் டத்தில் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

பகுத்தறிவாளர் கழகம் துவக்கம்! - தந்தை பெரியார்

 

பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவாளர் கழகம் துவக்கம்!

2022 பெரியார் ஜூன் 16-30 2022

தந்தை பெரியார்

இன்றைய தினம் இங்கு பகுத்தறிவாளர் கழகம் என்னும் பெயரால் ஆரம்பிக்கப் பட்டிருக்கிற இக்கழகத்தினைத் துவக்கும் வகையில் இப்பெரும் கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல அறிஞர்கள் சிறந்த கருத்துரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு 30, 40 வருடங்-களுக்கு முன்பே உயர்ந்த பேச்சாளர்-களாகவும் மக்களுக்கேற்ப கருத்துகளை எடுத்துச் சொல்வதில் தேர்ந்தவர்களாகவும் இருந்தவர்-கள் இருவர். ஒருவர் அண்ணா அவர்கள், அடுத்து நாவல ரவர்கள். அண்ணா அவர்கள் நகைச் சுவையோடு, அடுக்குத் தொடரோடு எடுத்துச் சொல்வார்கள்; நாவலரவர்கள் புள்ளி விவரங்களோடு மக்களுக்குப் புரியும் தன்மையில் பேசக் கூடியவராவார்கள். இவர்கள் இருவரது பேச்சுகளைக் கேட்பதற்காகவென்று மக்கள் அதிகமாகக் கூடுவார்கள்.

மனிதனா-மிருகமா?
அமெரிக்காக்காரன் சந்திரமண்டலத்திற்கு சென்று வர சாதனம் கண்டுபிடித்ததைப்போல நாம் சிறந்த காரியமாக பகுத்தறிவாளர் கழகம் என்கின்ற இதனைக் கண்டுபிடித்திருக்கிறோம்; மக்களுக்கு அறிவை எடுத்துச் சொல்கிற – மிருகமாக இருக்கிற மக்களை மனிதர்களாக்குகிற இயக்கம் என்பதுதான் இதற்குப் பொருள். பகுத்தறிவுச்- சிந்தனை _ தாராள சுதந்திர நோக்குள்ளவன்தான் மனிதன். இவை இல்லாத மற்றவை மிருகங்கள். நாம் ஏறக்குறைய அப்படித்தான் இருந்து வருகின்றோம். இப்போதுதான் மனிதரா-கின்றோம். இந்த நாட்டில் இத்துறையில் பாடுபட யாருமே தோன்றவில்லை.
«««
இந்த இயக்கம் வளருமேயானால் மேனாட்டு-காரர்களை விட அதிகமாக நாம் வளருவோம். அறிவில் மட்டுமல்ல, பல அதிசய அற்புதங்களையும் காணுவோம். நமது நாட்டில் அறிவுள்ள மனிதன் என்று சொல்ல ஒரு ஆளில்லை. படித்தவர்கள், பணம் படைத்தவர்-கள், பெருமை பெற்றவர்கள் இருக்கலாம். அறிவாளி என்று சொல்லும் படியாக ஓர் ஆள் கிடையாது. நம் சமுதாய மக்களிடையில் இன உணர்வு நட்பு இல்லாமல் போய் விட்டது. பொது உணர்ச்சி இல்லாமல் போய்விட்டது. இந்த ஸ்தாபனத்தை நல்ல வண்ணம் வளர்க்க வேண்டும். தமிழர்கள் எல்லோரும் அங்கத்தினர்-களாக வேண்டும். தங்கள் மனைவிமார்களையும் இதில் சேர்க்க வேண்டும். பிரச்சார ஸ்தாபனம் ஒன்று இதற்காகத் துவக்க வேண்டும். பத்திரிகைகள் ஆரம்பிக்க வேண்டும். நிறைய புத்தகங்கள் போடவேண்டும். தாங்களாகவும் மற்றவர்களை அழைத்தும் பிரச்சாரம் செய்து, மக்களைப் பகுத்தறிவாளர்-களாக்க வேண்டும்.

ஒழுக்கம் நாணயம் வேண்டும்
இதற்கு மரியாதை வேண்டுமானால் இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒழுக்கம், நாணயம் வேண்டும். நாம் தீவிரமான கருத்துகளை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். நம்மிடம் ஒழுக்கம், நாணயம் இல்லையென்றால் மதிப்பிருக்காது. இப்போது நாங்கள் “கடவுள் இல்லை- கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்கு-கிறவன் காட்டுமிராண்டி” என்கின்றோம்.
முட்டாளை முட்டாள் என்று சொல்வதில், திருடனை திருடன் என்று சொல்வதில் என்ன தவறு என்று கேட்கிறேன். யாராவது நீங்கள்தான் சொல்லுங்களேன்? கடவுளை நம்புகிறவன் முட்டாளாக இல்லாவிட்டால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொள்வானா?

மறு பிறப்பும் பிதிர்லோகமும் முரண் அல்லவா?
அடுத்த ஜன்மத்கில் நாயாக, கழுதையாகப் பிறப்பாய் என்கிறான். பிறகு பிதிர்லோகத்தில் ஆத்மா தங்கி இருக்கிறது, அதற்கு உணவுக்கு அரிசி, உப்பு, புளி அனுப்ப வேண்டு மென்கின்றான். பெரிய எம்.ஏ., பி.ஏ., டாக்டர் படித்தவனெல்லாம் இதை நம்பித்தானே தெவசம் கொடுக்கின்றான், கருமாதி செய்கின்றான். நாமிங்கு கடவுள் மறுப்புச் சொல்வது போன்று ஒவ்வொரு நாட்டிலும் இது போல் செய்கிறார்கள்.

விழிப்பூட்டும் ஏடுகள் வேண்டும்!
நானும் காலம் சென்ற இராமநாதன் அவர்களும் பாரிசுக்கு ஒரு நாத்திக சங்கத்திற்கு சென்றிருந்தோம். அவர்கள் ஒரு பத்திரிகை நடத்துகிறார்கள். அந்தப் பத்திரிகையின் தலைப்பில் ஒரு சிலுவையைப் போட்டு அதை ஒரு மனிதன் இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியைக் காலால் மிதித்துக் கொண்டு மறுபகுதியைக் கையால் பிடித்து இழுப்பது போலப் படம் போட்டிருக்கிறார்கள். அப்படம்தான் அந்தப் பத்திரிகையின் “எம்பிளம்” ஆகும். அப்போதே அப்பத்திரிகை 50, 60 ஆயிரம் போகிறது என்றார்கள். அது போன்று இங்கும் நிறைய பத்திரிகைகள் தோன்ற வேண்டும்.

கடவுளை முழுமையாக நம்புகிறவர் யாரும் இல்லை!
மனிதன் – அறிவோடு சாமியை நம்பினால் பரவாயில்லை, முட்டாள்தனத்தோடு நம்பு-கின்றான். அதனால் இவன் மடையனாவ-தோடு இவன் மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர, அது சர்வசக்தி-யுள்ளது என்று சொல்கிறானே தவிர, அதன்படி எவனாவது ஒருவன் நடந்து கொள்கிறானா என்று கேட்கிறேன்…
சங்கராச்சாரியைச் சொன்னாலும் சரி, மடாதிபதியானாலும் சரி, பெரிய பக்தனானாலும் சரி ஒருவனைச் சொல்லுங்கள், -எவன் கடவுள் சர்வ சக்தியுள்ளது என்று நம்புகின்றான்? ஒருவன் கூட இல்லையே!

அடிமையாக நாமிருக்கிறோம்
தீவிரமான காரியங்களில் ஈடுபடுகிற நம்மீது சிறு குற்றம்கூட இருக்கக் கூடாது. நமது சமுதாயம் ஒன்றுபட வேண்டும். அதற்காகப் பாடுபடவேண்டும். நமக்கு ஒரு குறிப்பு மோனோகிராம் (பேட்ஜ்) இருக்க வேண்டும். மேல் நாடுகளில் இதுபோன்ற இயக்கங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் சட்டையின் ஒரு பகுதியில் அணிந்திருப்பார்கள். அதுபோன்று இந்தக் கழகத்தினைச் சார்ந்த அங்கத்தினர்கள் அணிந்து கொள்ள வேண்டும்.
«««
அதுபோன்று இக்கழகத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்-கொருவர் அண்ணன் தம்பிபோல் பழக வேண்டும். நமது நிலை என்ன? நமது நாட்டின் பெயர் இந்தியா; நமது மதத்தின் பெயர் இந்து. இதற்கு எந்த ஆதாரமும் இருக்கிறதா என்றால் இல்லை. இந்நாட்டிற்குரிய நமக்கென்று எதுவுமே இல்லை. அனாமதேயமாக இருக்கி றோம். அரசியலிலும் அனாமதேயமாக இருக்-கிறோம். நமக்கென்று நாம் எதையும் செய்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.

நடித்தால் போதும்
நாமெல்லாம் சகோதரர்கள் என்கின்ற உணர்ச்சி வர வேண்டும். இதனால் சிலருக்குத் தொல்லை வரலாம். தியாகம் செய்தாக வேண்டும். நம்மவன் என்றால் அன்பாய் நடந்து கொள்ள வேண்டும் தம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். பகுத்தறிவின் பெயரால் நாடகங்கள் நடத்த வேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் மூலம் நடத்துவதில் அண்ணா முக்கியமான பாகத்தில் நடிப்பார் 3_4 ஆயிரம் வசூலாகும். நமது கடவுள் கதைகளை – உள்ளபடி நடித்தால் போதும்- _ அறிவோடு பார்ப்பவன் நிச்சயம் திருந்துவான். இதற்கு ஒரு நிதி திரட்ட வேண்டும். பத்திரிகை சம்பந்தமாக நண்பர் திரு. வீரமணி அவர்கள் உதவி செய்வார்கள். (‘விடுதலை’ 23.9.1970)

தந்தை பெரியார் தந்த நிதியுதவி!
பகுத்தறிவாளர் கழகத்தைத் துவக்கி வைத்து அறிவுரை ஆற்றிய வணக்கத்திற்குரிய தந்தை பெரியார் அவர்கள் கழகத்தின் வளர்ச்சிக்காக கழகத்தின் தலைவர் திரு.சி.டி.நடராசன் அவர்களிடம் 1000 ரூபாயை நன்கொடையாக அளித்தார்கள். தொடர்ந்து அய்யா அவர்கள் பேசுகையில் கழகம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பலவகையில் வலிவுடன் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் துவங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்-தினார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல்., கருத்தரங்கு-கள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரச்சார நாடகங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் பகுத்தறிவாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் (ணினீதீறீமீனீ) ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள்.
கூட்டத்தில் தோழர்கள் துண்டேந்தி-யமைக்கு ஆதரவாக ரூபாய் 129_30 காசு வசூலாகியது. (‘விடுதலை’ – 7.9.1970)

நாகபுரி சமூகநீதி மாநாடு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 1-15 2022

நாகபுரி சமூகநீதி மாநாடு
கி.வீரமணி

மகாத்மா ஜோதிபா பூலே துவக்கிய சத்திய சோதக் சமாஜ் அமைப்பின் 125ஆம் ஆண்டு விழா, சமூக நீதி மாநாடு ஆகிய விழாக்கள் நாகபுரி, நேஷனல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பெற்ற டாக்டர் பஞ்சாப் ராவ் தேஷ்முக் உள்ளரங்கத்தில் மிகச் சிறப்பான முறையில் 9.1.1990 அன்று காலை 10:00 மணியளவில் துவங்கியது.
மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை-யிலிருந்து ராஜதானி ரயில் மூலம் 9.1.1999 அன்று அதிகாலை 3:45 மணிக்கு நாகபுரி ரயில் நிலையத்திற்குச் சென்று சேர்ந்தேன். சத்திய சோதக் சமாஜ் சங்க முக்கிய நிருவாகி டாக்டர் காம்ப்ளே மற்றும் உறுப்பினர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர். பின்னர் நாகபுரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நடக்கவிருக்கும் இரண்டு நாள் மாநாடுகள் பற்றி அச்சங்கத்தின் தலைவர் நாகேஷ் சவுத்ரி விளக்கமாகக் கூறிச் சென்றார்.
முதல் நாள் மாநாட்டுக்குத் தலைமை விருந்தினராக, மாநாட்டின் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அரங்கினுள் நுழையும்போது அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து வரவேற்றது அவர்கள் நம் இயக்கத்தின் மீது கொண்ட மரியாதையை உணர்த்தியது.
சமூகநீதி முன்னோடித் தலைவர்கள் மகாத்மா ஜோதிபா பூலே, தந்தை பெரியார் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் படங்களுக்கு நாகபுரி பல்கலைக்-கழகத் துணைவேந்தர் டாக்டர் பேரா.பால்சந்திர-சோப்னேவும் நாகேஷ் சவுத்ரியும் மலர் தூவி, வீர வணக்கம் செய்தனர். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக வரவேற்புப் பாடல் அங்குள்ள மாணவிகளால் பாடப்பட்டது.
பின்னர் மாநாட்டின் வரவேற்புரையை சங்கத்தின் தலைவர் திரு. நாகேஷ் சவுத்திரி ஆற்றினார். சங்க உறுப்பினர் பேராசிரியர் சுதாகர் மொக்டே, தலைமை விருந்தினரான ‘எனது வாழ்க்கைக் குறிப்பினை’ மிகத் தெளிவாகவும், விவரித்தும் மாநாட்டுப் பேராளர்கள் அனைவரின் கரவொலிக்கிடையே வழங்கி, ஆங்கிலத்திலும் மராட்டியத்திலும் மொழிபெயர்த்து பெருமைப்படுத்தினார்கள்.

பின்னர் மாநாட்டில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு மாணவிகள் பூச்செண்டு கொடுத்துச் சிறப்பித்தார்கள். ஆங்கிலம் மற்றும் மராத்தியில் தயாரிக்கப்பட்ட, ‘எனது வாழ்க்கைக் குறிப்பை’ உள்ளடக்கிய கண்ணாடிப் பேழையினையும் அளித்து சிறப்பித்தார்கள்.
அதையடுத்து மாநாட்டின் தலைவர் பேரா.சோப்னே துவக்க உரையாற்றினார். அவர் தமது உரையில், “மகாத்மா ஜோதிபா பூலே, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் அளப்பரிய பணிக் கொடை-களைப் பாராட்டி, அவர்களின் உழைப்பினால்-தான் இந்த அளவிற்கு சமுதாய மாற்றம் ஏற்பட்டு உயர்வடைந்திருக்கிறது. திரு.வீரமணி அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தலைசிறந்த சமூகநீதித் தலைவர்களில் முதல் இடத்தைப் பெற்றுத் திகழ்கிறார்கள் என்று சொன்னால், அது ஏதோ வார்த்தைக்காக அல்ல. அதற்கு அவர் முழுத் தகுதியும் பெற்றிருக்கிறார் என்றே நான் பொருள் கொள்கிறேன்.
அவருடைய இடைவிடாத நன்றி பாராத உழைப்புக்குக் காரணம், அவர் நம்முடைய சமூகநீதிப் போராளிகளான ஜோதிபா பூலே, தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் தத்துவங்களிலிருந்தும், கொள்கைகளிருந்தும் எள் முனையளவுகூட பிறழாமல் தன் பணியினைச் செய்து வருவதால்தான். தலைவர் வீரமணி அவர்கள் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கும் இவையே காரணம் என்றவர், பெரியார் சுயமரியாதை அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் 44 நிறுவனங்களைக் கூறி, மிகவும் பெருமைப்-படுகின்ற அளவுக்கு அவை சிறப்பாக வளர்க்கப்பட்டுள்ளன என்று சொன்னால், அதற்குக் காரணம் தலைவர் வீரமணியே ஆவார்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார். தலைமையுரையைத் தொடர்ந்து நான் துவக்க உரையை ஆங்கிலத்தில் ஆற்றினேன். அதை மராட்டியத்தில் சிறப்பாக தோழர் ஒருவர் மொழிபெயர்த்தார்.

மும்பையில் நடைபெற்ற உலக மனிதநேய மாநாடு!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 1-15 2022


கி.வீரமணி


மும்பையில் நடைபெறும் உலக மனிதநேய மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்னையிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் நாற்பத்தோரு பேர் கொண்ட குழு ஒன்று 10.1.1999 அன்று மும்பை வந்தடைந்தனர். மும்பையில் தந்தை பெரியாரைத் தம் ஆசான் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்ட மனிதநேய மாண்பாளர் எம்.என்.ராய் பெயரால் அமைந்த சமூக மாற்ற மய்ய மாளிகையில், மனிதநேய மாநாடு ஜனவரி 10 முதல் 15 வரை நடைபெற்றது.
நான் 11.1.1999 அன்று பல்வேறு அறிஞர்களின் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. அதில் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் அருள்-மொழியும், திருச்சி திலகவதியும் உரை-யாற்றினார்கள். 12.1.1999இல் நடைபெற்ற கருத்தரங்க ஆய்வுரையில் கு.வெ.கி.ஆசான் உரையாற்றினார். அதற்கு அடுத்த நாள், 13.1.1999 அன்று மாநாட்டில் நான் உரையாற்றுகையில், “எம்.என்.ராயுடன் தந்தை பெரியார் கொண்டிருந்த தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். தென்னாட்டில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்துப் போராடிய மனிதநேய மாண்பாளர்களில் முதல் இடம் தந்தை பெரியாருக்கு உண்டு என்பதை விளக்கினேன்.
மாநாட்டின் நிறைவு நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் முனைவர் பு.இராசதுரை கொண்டுவந்த ஜாதி ஒழிப்புத் தீர்மானம் செயற்குழுவால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல் பாண்டியனின் மின்தொலைத் தொடர்பு சாதனங்களை பகுத்தறிவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், அ.மணிநிலவனின் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் சாமியார்களைப் பார்க்கப் போகக் கூடாது என்பதையும் தீர்மானங்-களாகக் கழகத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
தந்தை பெரியாரின் கருத்துகள், உலக மனிதநேய நன்னெறி மாநாட்டில் தீர்மானங்-களாக இடம்பெற்ற மகிழ்ச்சியில் மாநாட்டில் கலந்துகொண்ட நமது கழகக் குடும்பத்தினர் 16.1.1999 அன்று சென்னை திரும்பினர்.

நான் மும்பையில் இருக்கும்-போது, சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்கள் 12.1.1999 அன்று மரண-மடைந்தார் என்னும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மும்பையில் இருந்து விடுத்த இரங்கல் செய்தியில், “தோழர் எம்.டி.கோபாலகிருஷ்ணனின் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியும், பெரியார் திடலுக்கு நாளும் வந்து, அதன் பணிகளில் ஈடுபட்டு அதன் சாதனைகளை, பெருமைகளை உலகறியச் செய்ய, தமது உடல் உபாதைகளையெல்லாம் பொருட்படுத்தாது, அஞ்சா நெஞ்சத்துடன் பணியாற்றினார். அவரது துணைவியார் பேராசிரியை தவமணி அவர்களது சீரிய ஒத்துழைப்போடும், அவரது குடும்பத்துச் செல்வங்களின் அரவணைப்போடும், அதே
நல்லெண்ணத்துடனும் (மகன், மகள், மருமக்கள்) செய்து வந்த பாங்கை எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டும்.
மும்பை, உலக மனித நேய மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்தார். அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவாக அவர் மருத்துவமனைக்குச் செல்லும்படி நேரிட்டது.
அவரது தெளிவு, துணிவு, பொதுத்தொண்டு செய்யும் உள்ளம் பற்றி எவ்வளவோ எழுதலாம். பாழும் சாவு _ இந்தச் சொத்தை நம் இயக்கத்திடமிருந்து பறித்துவிட்டதே! என்ன செய்வது? நாம் பகுத்தறிவாளர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறித் தேற்றிக் கொள்ள வேண்டும்.
அவரின் துணைவியார் _ குடும்பத்தார் அனைவருக்கும் திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்-கிறோம். அவரின் தொண்டுக்கு நம் வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம். அவர் “மறையாத வாழ்வு பெற்ற மாவீரர்’’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம். அப்போது மும்பையில் கலந்துகொண்டிருந்த மனிதநேய மாநாட்டில், “உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள அனைத்துப் பேராளர்களும் இத்துயரச் செய்திக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஒரு நிமிடம் எழுந்து நின்று ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மரியாதை செலுத்தி _ வீரவணக்கம் தெரிவித்தனர்.

- கட்டுரையின் ஒரு பகுதி...

சனி, 18 மார்ச், 2023

சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு விருது வழங்கப்பட்டது

 கயானா மேனாள் பிரதமர் & அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி இருவருக்கும் சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு விருது வழங்கப்பட்டது

"தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய பெரியாரது சிந்தனைகள் வளர்ந்து பரவி 

வெளிநாடுகளில் விழுதுகளாக சிறப்புடன் விளங்குகின்றனர்" 

விருதுகளை வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுரை 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசியல் அறிவியல் ஆய்வு மய்யம்  சார்பில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பன்னாட்டு சமூக நீதி விருது வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர.ராதா மன்றத்தில் 10.11.2023 அன்று மாலை நடைபெற்றது. 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசியல் அறிவியல் ஆய்வு மய்யம்  மற்றும் சென்னை வளர்ச்சி கழகம் இணைந்து நடத்தப்பட்ட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சிறுபான்மைத் துறை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்தார்.

விருது பெற்றவர் பற்றிய குறிப்புகள்

விழாவில் 2020ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விருதினை பெறும் மொரிசியஸ் நாட்டு மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான வீ.அன்புராஜ் வாசித்தார்.

2021 ஆண்டுக்கான சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விருதினைப் பெறும் கயானா நாட்டு மேனாள் பிரதமர் மற்றும் பொறுப்பு அதிபர் பதவி வகித்தவருமான டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் வாசித்தார்.

விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் சிறப்பு

விழாவிற்குத் தலைமைவகித்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களுக்கு வேந்தர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

விருதாளர்களுக்கு வேந்தர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து விருதுடன் நினைவுப்பரிசு மற்றும் இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

வேந்தர் ஆசிரியர் அவர்களுக்கும், விருதாளர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத்

விருதினை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் சென்னை வளர்ச்சி மன்றத்தின் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்கள், "சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி" விருதுபற்றிய உருவாக்கம், கடந்த காலத்தில் விருது வழங்கப்பட்ட பெருமக்கள் பற்றி அறிமுக உரையாற்றினார். 2020ஆம் ஆண்டுக்கான விருது மொரிசியஸ் நாட்டு மேனாள் தலைவர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களுக்கும், 2021ஆம் ஆண்டுக்கான விருது கயானா  நாட்டு மேனாள் பிரதமர் பொறுப்பு அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களுக்கும் வழங்கப்படவிருப்பதாக அறிவித்தார். விருதுகளை பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஆசிரியர் டாக்டர் 

கி.வீரமணி அவர்கள் வழங்கி பெருமைப்படுத்துவார்கள் எனக் கூறினார்.

விருது வழங்கிடும் நிகழ்ச்சியின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் கே.எஸ். மஸ்தான்

விருது வழங்கிடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலம் மற்றும் அயலகத் தமிழர் நல்வாழ்வு அமைச்சர் மாண்புமிகு கே.எஸ். மஸ்தான் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் உரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது: 

அமைச்சர் என்கிற நிலையை உயர்த்திக்கொடுத்து இந்த நிகழ்ச்சியில் உங்களோடு கலந்துகொள்கிற வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த அரங்கத்தினுள் வரும்போது எங்களுக்குள் இருக்கின்ற உணர்வுகள், சிறிய வயதில் படிக்கிற காலத்தில் பள்ளிப்படிப்பு படிக்கின்ற காலத்தில், தந்தைபெரியார் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் தம்முடைய பயணத்தை மேற்கொள்கிற நேரத்தில், நான் செஞ்சிக் கூட்டத்தில், அவர் வாகனத்திலிருந்து பேசுகின்ற நேரத்தில் மண் தரையில் அமர்ந்து அவர் பேசியதை முதலிலே மனதிலே பதியவைத்தவன். நல்ல வெய்யில் நேரம். மதிய நேரத்தில் வந்துவிட்டார். அப்போது எல்லாரும் நிழலுக்காக ஓரம் ஒதுங்கி நிற்கிறார்கள். பிள்ளைகளெல்லாம் நாங்கள் எதிரில் உட்கார்ந்துவிட்டோம்.

அன்று ஒரு வார்த்தை சொன்னார் தந்தை பெரியார். இன்றைக்கும் அது நினைவில் இருக்கிறது.

என்னுடைய பேச்சை ஏற்கெனவே கேட்டு செயல் படுத்துவதற்கு தயாராக இருப்பவர்கள், நேரத்தை வீணாக்க வேண்டாம். உங்களுடைய வேலைகளை போய்ப்பார்க்கலாம். 

என்னுடைய பேச்சைக் கேட்டு எதிர்காலத்தில் செயல்படுத்துபவர்கள் மட்டும் இங்கே இருந்தால் போதும் என்றார்.

அந்த வெய்யிலில் ஓரம்பாரம் இருந்தவர்கள் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு பள்ளிப் பிள்ளைகளுடன் சேர்ந்து பெரியவர்கள் எல்லாரும் உட்கார்ந்து தந்தைபெரியார் பேச்சைக் கேட்டார்கள். இன்றைக்கும் அது மனதிலே அப்படியே இருக்கிறது.

ஒரு மனிதன் எந்தக்காலத்திலும், எந்த செயலில் ஈடுபட்டாலும், ஏன், எதற்கு என்று சிந்தித்து செயல்படச் சொல்லி அவருடைய தலைமையுரையைத் துவக்கினார்.

ஒரு மனிதனுக்கு எந்தக் காலக்கட்டத்திலேயும் சலிப்பு இருக்கக்கூடாது, அது தற்கொலைக்கு சமம் என்றும் அங்கே எடுத்துரைத்தார்.

மனிதனுக்கு அழகு மானமும் அறிவும் என்றும் அங்கே தந்தை பெரியார் தனது உரையில் சொன்னார்.

இதெல்லாம் மனதிலே பதிந்த காரணத்தினால், எதைப்பற்றியும் எப்போதும் கவலைப்படாமல், இன் றைக்கு வரையிலும் அந்த சுயமரியாதை கருத்துகளை ஏற்று தன்மானத்தைக் காக்கக்கூடிய - எந்த நிலையில் அந்தக் கூட்டங்கள் இருந்தாலும், அதில் கலந்து கொள்கின்ற ஓர் உணர்வோடு என்னை அதில் ஈர்ப்புடன் இணைத்துக்கொள்கிறேன்.

நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஒரு காலக் கட்டத்திலே தென்னார்க்காடு ஒன்றுபட்ட மாவட்டத்தில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். 

அப்போது எங்களுக்கு மாவட்டச்செயலாளர் செஞ்சி இராமச்சந்திரன். நான் செஞ்சி பேரூர் தி.மு.கழகத்தி னுடைய செயலாளர். 

விழுப்புரத்திலிருந்து வளவனூர் பகுதியில் நம் முடைய ஆசிரியர் அவர்கள் பிரச்சாரத்தை மேற் கொள்கிற நேரத்தில், அப்போது அந்தக் கூட்டத்துக்கு நாங்கள் போகவில்லை, விழுப்புரத்தில் இருக்கிறோம். விழுப்புரம் பயணியர் விடுதியில் ஆசிரியர் அவர்களை சந்தித்தோம். அந்த கூட்டம் சிறிது தடைபட்டது என்பதை கேள்விப்பட்டதும், நாங்கள் சென்றோம். சென்றவுடன் ஆசிரியர், ‘இல்லை, நான் பேசிவிட்டுத் தான் செல்வேன் என்று பிடிவாதமாக சொல்லும்போது, நாங்கள் அன்புக்கட்டளை இட்டோம். பேசினால் ஒரு இடம்தான் பேசப்போகிறீர்கள், நாளை மாலை இதே நேரத்திலே ஆரம்பித்து வளவனூர் முழுக்க நீங்கள் சுற்றி பேசிவரலாம் என்று சொன்னவுடனே - எந்த காலக்கட்டத்திலேயும் ஒத்துக்கொள்ளவே மாட்டார் என்று கூட இருந்தவர்கள் எல்லாம் சொன்னார்கள் - எப்படி நீங்கள் சொன்னீங்க, ஒத்துக்கொண்டார் என்றார்கள்.

அன்று இரவு இருந்து மறுநாள் மாலை 3 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரையிலும் எந்த ஊரிலே அந்த பிரச்சாரத்துக்கு தடை ஏற்பட்டதோ, அந்த ஊரிலே ஒரு நபர்கூட வீட்டுக்குள்ளே இல்லாமல், வீட்டு வாசலில் நின்று, ஒவ்வொரு வீதியாக சென்று குறைந்தது 5 இடத்திலே பேசினார். அது ஒரு பேரூராட்சிதான் சின்ன ஊருதான்.

அங்கே பேசும்போது, ஒட்டுமொத்த கிராமத்திலிருப்பவர்களும் அவர் பேச்சைக் கேட்கின்ற நிலை.

அப்போது பெண் அடிமைத்தனம் பற்றி பேசினார். பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும். பாரதி கண்ட புதுமைப்பெண்களைப் படைக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்.

நம்வீட்டில் பிறக்கின்ற பெண் குழந்தைகளை பெற்ற தாய் தந்தையே உதாசீனப்படுத்துவது எந்த விதத்திலே நியாயம் என்றெல்லாம் பல்வேறு கருத்துகளை அங்கே வலியுறுத்திப் பேசினார்.

இதற்கெல்லாம் உங்களுக்கு விடை காண வேண்டும் என்று சொன்னால், நம்வீட்டு பிள்ளைகளை நீங்கள் கல்வி கற்கச் செய்ய வேண்டும். 

படித்தால்தான் இந்த சமுதாயத்தில் சம நிலைக்கு சம தகுதியைப் பெற முடியும் என்று இந்த தத்துவத்தினுடைய பேச்சுகள் எல்லாம் இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழன்  தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்காக இன்றைக்கு உருவாக்கப்பட்டிருப்பதன் அடித்தளம்தான் தந்தை பெரியாருடைய கருத்துகள், பெரியாருடைய பயணம். அதைத்தொடர்ந்து நம்முடைய ஆசிரியர்  90 வயதிலும் விடா முயற்சியாக அவருடைய பயணம் உள்ளது.

எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முத் தமிழறிஞர் கலைஞரின் பெயரில் விருது வழங்குகின்ற விழாவில் ஒரு சாதாரண தொண்டனான எனக்கு அந்த வாய்ப்பினை வழங்குகின்ற நேரத்தில், உண்மையிலேயே இதுதான் கொள்கைக்கும், இலட்சியத்துக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி என்பதை நான் உணர்ந்து இவர்களை வாழ்த்த வயதில்லாவிட்டாலும், சுயமரியாதை கருத்துகளோடு சொல்லும்போது, வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை, மனதுதான் தேவை என்று நம்முடைய கருத்துகள் சொல்லப்படுகின்ற அந்த நிலையில், நம்முடைய விருதுகளை பெறுபவர் களை, டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களையும், டாக்டர் மோசெஸ் வீராசாமி நாகமுத்து அவர்களையும் தமிழ் இனத்தின் சார்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக உங்கள் அனைவரையும் வாழ்த்தி, உங்களுடைய பணிசிறக்க வாழ்த்துகிறோம். 

தமிழர்கள் உலகமெங்கும் வாழ்கிற நிலையில், பல்வேறு பொறுப்புகளில் அங்கே தலைசிறந்து வாழு கின்ற ஒரு மாபெரும் பொறுப்பினை தமிழர்கள் ஏற்றிருக்கிறார்கள் என்பதை நாம் உணர்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் கே.எஸ். மஸ்தான் தனது உரையில் குறிப்பிட்டார்.   

மொரிசியஸ் நாட்டு 

டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி

இந்தச் சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இது என் மூதாதை யர்கள் வாழ்ந்த மண். இங்கே திரு. வீரமணி அவர்களின் கரங்களால் "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பன்னாட்டு சமூகநீதி 2020" ஆண்டுக்கான விருதைப் பெறுவது எனக்கு பெருமைக்குரிய விஷயம். இந்த அங்கீகாரத் திற்கும் கவுரவத்திற்கும் என் மனமார்ந்த நன்றியை அரசியல் அறிவியல் ஆய்வு மய்யத்திற்கும் சென்னை வளர்ச்சிக் கழகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருடனும் என் தொடர்பும், நல்லுறவும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகம் ஆற்றி வரும் நற்பணிகள் பாராட்டுக்குரியவை. கலைஞர் கருணாநிதி அவர்களும் பொது மக்கள் வாழ்வில் வளம் பெற்று முன்னேற பாடுபட்டதை எவராலும் மறக்க முடியாது. சமூகநீதிக்காக மேலும் கடுமையாக உழைத்து பொதுப் பணி புரிய உங்கள் மூலமாக எனக்கு அதிக உற்சாகம் ஏற்படுகிறது. ஒடுக்கப்பட்ட சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காக போராட நீங்கள் அனைவரும் என்னை ஊக்குவித்துள்ளீர்கள்.

 கயானா நாட்டின் மேனாள் பிரதம அமைச்சர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களுக்கு 2021 ஆண்டுக்கான சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ளது எனக்கு அளவற்ற மகிழ்ச்சி தருகிறது.

உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள். இந்த 2023 புத்தாண்டில் உங்கள் அனை வரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். இனிவரும் நாட்களில் நாம் அனைவரும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி சமூகநீதியை நிலைநாட்ட உறுதியளிப்போம். நன்றி.

கயானா நாட்டு 

டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து

2021ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றுக் கொண்ட கயானா நாட்டு மேனாள் பிரதமரும்  அந்த நாட்டு பொறுப்பு அதிபர் பதவியில் இருந்தவருமான டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து தமது உரையில் குறிப்பிட்டதாவது:

டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சமூகநீதிக்கான விருதினை பெறும் வேளையில் மாபெரும் தலைவரும், கொள்கையாளரும், தனித்துவமிக்க பெருந்தகையாள ருமான ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடுவதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். ஆசிரியரைச் சந்தித்து உரையாடிய நேரம் - சில நிமிடங்களே என்றாலும், எனது வாழ்வில் இருந்த ஒரு வெற்றிடம் நீங்கியதாக - நிரப்பப்பட்டதாக உணர் கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, சமூகநீதிக்காக, பெண்கள் விடுதலைக்காக பாடுபட்ட பெரிய தலைவர் தந்தை பெரியார் என்பதை அறிவேன்.

1860களில் - அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த மலபார் பகுதியிலிருந்து கயானா சென்றனர் எனது மூதாதையர்கள். என்னுடைய தந்தையார் பெயரும் இராமசாமி ஆகும். இன்று அனுபவ பூர்வமாக ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியார் எந்த அளவிற்கு உழைத்திருக்கிறார் என்பதை இங்கு வருகை தந்து உணர முடிகிறது; அறிய முடிகிறது.

1971ஆம் ஆண்டில் ஒரு செய்தியாளராகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டேன். போராட்ட வாழ்வையே பொது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டேன். பொது வாழ்க்கையாக போராட்ட வாழ்வு எனும் பொழுது ஆசிரியர் கி. வீரமணி அவர்களைத்தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவரைப் போல பொது வாழ்க்கையில் இழிவைச்  சந்தித்தவர்கள் யாருமில்லை என்றுதான் கூற வேண்டும்! அப்படிப்பட்டவர் இன்று மக்களால் போற்றப்படும் உயர்நிலையில் இருக்கிறார்.

பெரியார் ஜாதி அமைப்பு முறைக்கு எதிராக போராடினார். ஜாதி அமைப்பு என்பதே நாகரிக உலகில் ஒருவித நோய் போன்றது. அப்படிப்பட்ட தலைவரிடம் பாடம் பயின்றவர் ஆசிரியர் அவர்கள். ஆசிரியர் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. சந்தித்த வேளையில் கற்றுக் கொள்கின்றோம்.

கயானாவில் ஏழை மக்களுக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு வாதிடும், போராடும் பணியை மேற்கொண்டேன். அந்த மக்களுக்கு  ஓரளவு நம்பிக்கையையுடன் பணி செய்து வருகிறோம். உங்களது போராட்ட வரலாறு குறித்து அறியும் பொழுது நான் மிகவும் எளிமையாளனாகி விடுகிறேன்.

உலகம் மாறி வந்தநிலையில் 1961 ஆம் ஆண்டு முதல் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக பங்கேற்றேன். புரட்சியாளர்களெல்லாம் ஜனநாயகப் பாதையை தெரிவு செய்து கொண்ட காலம். கயானா நாடு எண்ணெய் வளமும், எரிவாயு வளமும் மிக்க நாடு. வனவளமும் மிகுதியாகக் கொண்ட நாடு. எனவே வெளிநாடுகளுக்கு அரிய பொருள்களை ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டும் நிலையில் உள்ள நாடு. ஆப்பிரிக்க வழி சமுதாயத்தினரும் இந்திய வழி சமுதாயத்தினரும் பெரும்பான்மையாக வாழும் நாடு - கயானா. இரண்டு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டு சமுதாய ஒற்றுமை இல்லா நிலைமை நிலவி வந்தது. இடதுசாரி சிந்தனைக்கு ஆட்பட்ட நான் இந்திய வாழ் சமுதாயத்தினருக்காக - அவர்தம் உரிமைக்காகப் பாடுபட்டு செடி ஜாகன் (Cheddi Jagan)  தலைமையில் அரசியல் தலைமை ஆட்சி அதிகாரத் தலைமையில் பங்கேற்றேன். பின்னர் கூட்டணி அரசிலும் அங்கம் வகித்தேன். பின்னர் வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் ஊடுருவலால் அதிகாரத்தை இழந்தாலும், மக்களின் உரிமைக்காக களத்தில் நிற்கிறோம்; போராடிக் கொண்டும் இருக்கிறோம். எங்களது வாழ்க்கையில் மதம் மாறும் நிலைமை ஏற்படாது. பின்னாளில் மத உணர்வு நம்மை - மனிதரைப் பிரிக்கிறது என அறிந்து கொண்டோம். கூட்டுறவால் பண்பாடு காக்கப்படும். கூட்டாட்சியால் பண்பாட்டில் பல தரப்பட்ட பண்பாட்டு ஒருமைப்பாட்டால் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை காண முடியும் என்ற நிலையில் உள்ளோம்.

பெருமை மிக்க, சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விருது பெற்றதை பெருமையாகக் கருதுகிறோம். தந்தை பெரியாரைப் பின்பற்றுவோம். தவறான வழியில் நிச்சயம் பயணிக்க மாட்டோம்.  விருதினை வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி; அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து தமது உரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் 

வாழ்த்து - பாராட்டுரை

'சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி'  விருது' வழங்கப்படும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 25 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை உடையது. தொடக்கத்தில் பெண்களுக்கான முதல் பொறியியல் கல்லூரி எனும் சிறப்பினை உலக அளவில் பெற்ற கல்வி நிறுவனம் அது. அப்பொழுது கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (Memorandum of Understanding)  பொழுது 'பெண்களுக்கு மட்டுமான  பொறியியல் கல்லூரியா? என வியப்புடன் வெளிநாட்டவர் அதன் சிறப்புக் குறித்து கேட்டறிவார்கள்.

தந்தை பெரியார், அவருக்குப்பின், அன்னை மணியம்மையார், அவர்களுடைய சொந்த  நிதி, சொத்து ஆதாரங்களைக் கொண்டும், பொது மக்களிடமிருந்து பெற்ற நன்கொடையைக் கொண்டும் தொடங்கப்பட்ட கல்லூரி அது. பின்னாளில் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உருவெடுத்தது.

விருதுப் பெயரான 'டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி', அவர்கள் தந்தை பெரியாரால் கொள்கை வடிவமாக வார்த்து எடுக்கப்பட்டவர். அதற்கு  முன்னர் அறிஞர் அண்ணா, தந்தை பெரியாரிடம் கொள்கை மாணாக்கராக இருந்த முதற் சீடர். பெரியாரிடம் கொள்கைப் பாடம் பயின்றவர்கள் பின்னாளில் 'முதல் அமைச்சர்' எனும் அரசியல் ஆட்சி அதிகார உயர்நிலைக்குச் சென்றார்கள். ஆனால் தந்தை பெரியார் ஆட்சி, அதிகாரத்தை தான் அடைய விரும்பவில்லை. ஆட்சி, அதிகாரம் பலமுறை அவரிடம் வந்து நின்ற வேளைகளிலும் அதை மறுத்தவர் பெரியார். அன்றாடம் மக்களைச் சந்தித்து, கருத்துரு வாக்கத்திற்கு பரப்புரை செய்து அதிகாரம் மிக்க மக்களை நாளெல்லாம் ஆட்சி செய்தவர்;  வழி நடத்தியவர் தந்தை பெரியார்.

மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பெரிதும் பொருளாதாரத் தளத்தில் ஏற்பட்டவையே. ஆனால் இந்த மண்ணில் ஏற்பட்டுள்ளது சமூக முன்னேற்றத்துடன் கூடிய பொருளாதார முன்னேற்றம்.

விருது பெற்றுள்ள வெளிநாட்டு வாழ் பெரு மக்களாகிய நீங்கள் பல்வேறு உயர் பொறுப்புகளில், உங்கள் நாடுகளில் இருந்தாலும், பண்பாட்டுப் பாரம் பரியத்தில் நீங்கள் எங்களது சொந்தங்கள்; உறவுக் குரியவர்கள். பெரியார் மாபெரும் மனித மாண்பாளர். அவர் பள்ளிக்கூட வாசலை முழுமையாக சென்றடைந்த தில்லை. ஆனால் அவரது பெயரால் பெரும் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்கள் இன்று உருவாகியுள்ளன. பெரியாரது சிந்தனைகள் சுய சிந்தனைகள், சுதந்திர சிந்தனைகள் - அவை குறித்து உயர்நிலை ஆராய்ச்சிகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. ஆய்வுப் புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

பெரியார், சிந்தனையோடு நின்றவரில்லை; சிந்தித் ததை மக்களிடம் எடுத்துச் சொன்னார். பரப்புரை செய்த தோடு மட்டும் நிறுத்திக் கொண்டவரல்ல; சிந்தனைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவர். தானே முன்வந்து நடைமுறையாக்கியவர்.

இந்த மண்ணில் மனிதநேயத் தலைவர்கள் களம் கண்டாலும் அவரது சிந்தனைகள் உலகளாவியவை. உலக மக்களை மேன்மைப்படுத்திடும் மனிதநேயம் சார்ந்தவை. இங்கு பெரியாரின் சிந்தனை வேர்கள் ஆழமாகச் சென்று நிலைத்து பரவியதால் அந்த மரத்தின் விழுதுகள் உலகெங்கும்  உள்ளன. பயனளித்து வருகின்றன. அப்படிப்பட்ட விழுதுகளின் வெளிப்பாடாக அடையாளச் சின்னமாக இன்று விருது பெற்ற நீங்கள் விளங்குகின்றீர்கள்.

1929களின் தொடக்கத்தில் தந்தை பெரியார், அன்றைய மலேயா நாட்டிற்குச் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர் நாடுகள்) சென்றிருந்தார். மலேய மண்ணில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக, ரப்பர் மலைத் தோட்டங்களில் உழைத்த மக்களாக தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அவர் களையெல்லாம் தேடிச் சென்று சந்தித்து உறவாடினார்; அறிவுரை வழங்கினார். "நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாகச் செலவழியுங்கள்; உங்களது பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுங்கள்; அதுதான் நிலையானது; உயர்வானது. எந்த நாட்டில் வாழ்கின்றீர்களோ அந்த நாட்டிற்குச் சொந்தமானவர்கள் நீங்கள்; நீங்கள் வாழும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்" என்று தமிழர்களுக்கு பாடம் போன்று எடுத்துரைத்தார். அதன் விளைவு இன்று மலேசியா, சிங்கப்பூர் பலவிதங்களில் முன்னேற்றம் கண்டு உலகளாவிய வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு வாழும் தமிழர்களும் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

விருதினைப் பெற்றுள்ள கயானா நாட்டு மேனாள் பிரதமர் நாகமுத்து அவர்கள் ஒரு சிறந்த சமூகப் போராளி; மாணவப் பருவம் தொட்டு போராளியாக இருந்தவர்; இன்றைக்கும் போராளியாக தொடர்பவர்; வாழ்ந்து வருபவர். நாடுகள் நம்மைப் பிரிக்கலாம்; நாடுகளுக்கிடையே நிலவிடும் அரசியல் சூழல்கள் நம்மை இடைவெளிப்படுத்தலாம். ஆனால் நம்முடைய பண்பாடு என்றென்றைக்கும் நம்மை இணைத்திடும்; பிணைத்திடும்; உறவுகளை நீடிக்க - நிலைத்திருக்க வைத்திடும்.

விருது பெற்ற மற்றொரு அரசியல் ஆளுமை டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி  மொரிசியஸ் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். அரசியல் சூழலில் தனித்துவத்துடன் விளங்கிடும் தமிழர் பாரம்பரியத்தில் வந்த தகைமையாளர். பண்பாட்டை மறக்காத பண்பாளர். வேர்களைத் தேடி, உறவு காட்டி வரும் விழுது போன்றவர் - இன்று சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விருதினைப் பெற்றுள்ளார். எப்பொழுதும் போல் உறவுகள் தொடர்ந்திட வேண்டும். 

பெரியார் திடல் உங்களுக்கான வீடு. எப்பொழுது வந்தாலும் தமிழ்நாடு உங்களது முன்னோர்கள் தடம் பதித்து வாழ்ந்த தாயகம் - தாய்வீடு போன்றது பெரியார் திடல். 

சமூகநீதி விருதினை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் உரியவர்களுக்கு வழங்கிடும் அரும் பணியினைச் செய்து வரும் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்கள் ஒரு பாலம் போன்றவர். நல்ல தொடர்பாளர் பெரும் ஒருங்கிணைப்பாளர், உலகெங்கிலும் வாழும் தமிழ் வழிச் சமுதாயச் சொந்தங்களை பிணைக்கும் ஆற்றலாளர்; விளம்பரமில்லாமல் சமுதாயப் பணியினைச் செய்து வரும் சிறப்புக்குரியவர். தொடர்ந்து இந்தப் பணியினைப் பரந்துபட்டு உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறோம்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு இந்தி யாவின் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆறு முறை வருகை தந்துள்ளார். குடியரசுத் தலைவராக இருந்த பொழுதும் வருகை தந்துள்ளார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஒரு உயர் கல்வி நிறுவனம் மட்டுமல்ல; பொது மக்களுக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை வழங்கி வரும் மக்கள் பல்கலைக் கழகமுமாகும். பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள 69 கிராமங்களில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், கல்வி சார்ந்த அடிப்படைக் கட்டமைப்புகளை  வழங்கிடும் புரா  (Providing Urban Amenities to Rural Areas - 'PURA') எனும் வளர்ச்சித் திட்டத்தை பல ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புறத்தில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் ஊரகப் பகுதியில் வாழ்பவர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதே புரா (PURA)  திட்டத்தின் நோக்கம்.  

பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த கலாம் அவர்கள் இப்படிப்பட்ட சிந்தனையைக் கொண்டு பல இடங்களில் தான் பேசி வந்துள்ளதாகவும் - தற்பொழுது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மூலம் அந்த சிந்தனைகள் நடைமுறை கண்டு வருவதை பார்த்து மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் இந்த புரா திட்டத்தினை - 'பெரியார் புரா'  - திட்டத்தினை நாட்டின், உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும்  தூதுவராக இருக்க விரும்பினார் - பெரியார் புரா தூதுவராகவும் விளங்கினார்.

அனைவருக்கும் அனைத்தும்; அனைவரும் சமம்; அனைவருக்கும் சம வாய்ப்பு; சம வசதி இருப்பதே பெரியார் புராவின் கோட்பாடு. பெரியார் 60 ஆண்டு களுக்கு முன்பு கூறிய இந்த நிலையை இன்று 'திராவிட மாடல்' ஆட்சி நடத்தி வரும் மாண்பமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவ மாணவியர் 10,000க்கும் மேற்பட்டோர் உலகின் பல பகுதிகளில் பல நிறுவனப் பொறுப்புகளில் உள்ளனர், சிறந்து விளங்குகின்றனர். கல்வி, சமத்துவம் மட்டுமல்ல; கல்வியின் மூலம் உயர்நிலை, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளித்திடும் நிலையினை உருவாக்கியதில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு பெரும் பங்கு உண்டு.

அரசியல் அடிமைத்தனம் பல நாடுகளில் உண்டு. சமூக அடிமைத்தனமும் மிகப் பல நாடுகளில் நிலவுகிறது. பண்பாட்டு அடிமைத்தனத்தினைத் தகர்த்து, வெளிக்கிளம்பிய, மனிதநேயம் புகட்டிய பெரியாரின் தத்துவம் வளர்ந்து வரும் நிலையில் உள்ளோம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, சமத்துவ பண்பாட்டை பிரதிபலித் திட, நடைமுறையாக்கிட பெரியார் சிந்தனைகளை உலகெங்கிலும் பரப்பிட வேண்டும். இன்றைக்கு விருது பெற்ற பெரு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்; நிச்சயம் இருப்பார்கள் என்று நன்றி கூறி அப்பெருமக்களைப் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ். வேலுசாமி நன்றி கூறினார்.

விருது வழங்கிடும் நிகழ்வில் 

கலந்து கொண்டோர்

ரஷ்ய தூதரக அலுவலர் திமித்ரி ஏ.ஷெசெர்பினின், மேனாள் துணைவேந்தர் திருவாசகம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர்கள் த.வீரசேகரன், சு.குமாரதேவன், 

பா.மணியம்மை, பொறியாளர் ச.இன்பக்கனி, தே.செ.கோபால், ஜெயராமன், சோ.சுரேஷ், பெரியார் மாணாக்கன், தொண்டறம், உடுமலை வடிவேல், அன்பு செல்வன், சா.தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

(விருது பெற்ற பெருமக்கள் மற்றும் அந்த நாட்டு தமிழ்வழி சமுதாயத்தைச் சார்ந்தோர் தமிழ் மொழியை முழுமையாகப் புரிந்து பேசிட, இயலாத நிலையில் அவர்களுக்கு விளங்கிடும் வகையில், 75 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் ஆங்கிலத்திலேயே நடந்தேறியது. அந்த உரைகளின் தமிழாக்கச் சுருக்கமே இது)