அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)
கி.வீரமணி
மும்பையில் நடைபெறும் உலக மனிதநேய மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்னையிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் நாற்பத்தோரு பேர் கொண்ட குழு ஒன்று 10.1.1999 அன்று மும்பை வந்தடைந்தனர். மும்பையில் தந்தை பெரியாரைத் தம் ஆசான் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்ட மனிதநேய மாண்பாளர் எம்.என்.ராய் பெயரால் அமைந்த சமூக மாற்ற மய்ய மாளிகையில், மனிதநேய மாநாடு ஜனவரி 10 முதல் 15 வரை நடைபெற்றது.
நான் 11.1.1999 அன்று பல்வேறு அறிஞர்களின் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. அதில் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் அருள்-மொழியும், திருச்சி திலகவதியும் உரை-யாற்றினார்கள். 12.1.1999இல் நடைபெற்ற கருத்தரங்க ஆய்வுரையில் கு.வெ.கி.ஆசான் உரையாற்றினார். அதற்கு அடுத்த நாள், 13.1.1999 அன்று மாநாட்டில் நான் உரையாற்றுகையில், “எம்.என்.ராயுடன் தந்தை பெரியார் கொண்டிருந்த தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். தென்னாட்டில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்துப் போராடிய மனிதநேய மாண்பாளர்களில் முதல் இடம் தந்தை பெரியாருக்கு உண்டு என்பதை விளக்கினேன்.
மாநாட்டின் நிறைவு நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் முனைவர் பு.இராசதுரை கொண்டுவந்த ஜாதி ஒழிப்புத் தீர்மானம் செயற்குழுவால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல் பாண்டியனின் மின்தொலைத் தொடர்பு சாதனங்களை பகுத்தறிவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், அ.மணிநிலவனின் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் சாமியார்களைப் பார்க்கப் போகக் கூடாது என்பதையும் தீர்மானங்-களாகக் கழகத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
தந்தை பெரியாரின் கருத்துகள், உலக மனிதநேய நன்னெறி மாநாட்டில் தீர்மானங்-களாக இடம்பெற்ற மகிழ்ச்சியில் மாநாட்டில் கலந்துகொண்ட நமது கழகக் குடும்பத்தினர் 16.1.1999 அன்று சென்னை திரும்பினர்.
நான் மும்பையில் இருக்கும்-போது, சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்கள் 12.1.1999 அன்று மரண-மடைந்தார் என்னும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மும்பையில் இருந்து விடுத்த இரங்கல் செய்தியில், “தோழர் எம்.டி.கோபாலகிருஷ்ணனின் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியும், பெரியார் திடலுக்கு நாளும் வந்து, அதன் பணிகளில் ஈடுபட்டு அதன் சாதனைகளை, பெருமைகளை உலகறியச் செய்ய, தமது உடல் உபாதைகளையெல்லாம் பொருட்படுத்தாது, அஞ்சா நெஞ்சத்துடன் பணியாற்றினார். அவரது துணைவியார் பேராசிரியை தவமணி அவர்களது சீரிய ஒத்துழைப்போடும், அவரது குடும்பத்துச் செல்வங்களின் அரவணைப்போடும், அதே
நல்லெண்ணத்துடனும் (மகன், மகள், மருமக்கள்) செய்து வந்த பாங்கை எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டும்.
மும்பை, உலக மனித நேய மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்தார். அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவாக அவர் மருத்துவமனைக்குச் செல்லும்படி நேரிட்டது.
அவரது தெளிவு, துணிவு, பொதுத்தொண்டு செய்யும் உள்ளம் பற்றி எவ்வளவோ எழுதலாம். பாழும் சாவு _ இந்தச் சொத்தை நம் இயக்கத்திடமிருந்து பறித்துவிட்டதே! என்ன செய்வது? நாம் பகுத்தறிவாளர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறித் தேற்றிக் கொள்ள வேண்டும்.
அவரின் துணைவியார் _ குடும்பத்தார் அனைவருக்கும் திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்-கிறோம். அவரின் தொண்டுக்கு நம் வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம். அவர் “மறையாத வாழ்வு பெற்ற மாவீரர்’’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம். அப்போது மும்பையில் கலந்துகொண்டிருந்த மனிதநேய மாநாட்டில், “உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள அனைத்துப் பேராளர்களும் இத்துயரச் செய்திக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஒரு நிமிடம் எழுந்து நின்று ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மரியாதை செலுத்தி _ வீரவணக்கம் தெரிவித்தனர்.
- கட்டுரையின் ஒரு பகுதி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக