வியாழன், 25 ஜூன், 2015

சூனியமும் புராதன மதங்களும்!

  

வெள்ளி, 14 பிப்ரவரி 2014   

சூனிய வித்தையை விடுவதென்றால் நமது புண்ணிய புராதன நூல்களைத் தூர எறிவதாகும் என்று சர்.தாமஸ் மோர் கூறினார். என்னுடைய அபிப்பிராயத்தில் அவர் கூறியது முற்றிலும் சரியே.
ஜான் வெஸ்லி என்பவர் பேய் பிசாசுகளிலும், சூனிய வித்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இது சம்பந்தமான சட்டங்கள் எல்லாம் இங்கிலாந்தில் ரத்தாகி அநேக ஆண்டுகளுக்குப் பின்னும் இவர் தம் நம்பிக்கையை வற்புறுத்தியிருக்கிறார். இந்த ஜான் வெஸ்லி என்பவர்தான் முதன் முதலாக நூதன மாதிரி கோவில் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ இங்கிலாந்தில் ஒரு பெண் சூனிய வித்தைக்காரி என்பதற்காகவும், அவள் நரியாக மாறினாள் என்பதற்காகவும் குற்றம் சாற்றப்பட்டாள். இந்த நிலையில் அவளைச் சில நாய்கள் கடித்துவிட்டன. நியாய ஸ்தலத்தின் உத்திரவின்படி ஏற்பட்ட மூன்று பேர் கூடிய கமிட்டியார் அவளைச் சோதனை செய்தனர்.
அவர்கள் அவளுடைய ஆடையை விலக்கி சூனியக் காரியின் சூட்சம ஸ்தானத்தைத் தேடினார்கள். அதாவது, அந்த விசேஷ இடத்தில் குண்டூசியால் குத்தினால் வேதனை உண்டாகாதாம். அவள் தான் ஒரு போதும் நரியாக மாறின தில்லை என்று மறுத்தாள். கமிட்டியார்கள் செய்த சிபார்சின் பேரில் அவள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப் பட்டாள்.
இவ்வட்டூழியங்கள் எல்லாம் (இங்கிலீஷ் சர்ச்சிலிருந்து பிறந்தவர்களான) ப்யூரிட்டன் பிரதர்ஸ் என்று சொல்லப் பட்ட கடவுளை வணங்க தைரியமாக கடல் கடந்து இங்கிலாந்தி லிருந்து அமெரிக்கா சென்று தம் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய கிறிஸ்தவர்களால் செய்யப்பட்டன.
கோடைகாலத்தில் பனியுண்டாக்கியதற்காகவும், மூடு பனியால் விளை பொருள்களைக் கெடுத்ததாகவும், புயல், பீர், சாராயம் முதலியன கசப்படைந்ததற்காகவும், ஒரு பாவமும் அறியாத மனிதர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். எவனும் எந்தக் குற்றத்துக்காவது உள்ளாகி தண்டனை அடையாமல் இருக்க முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டிக்கப் பட்டனர். எல்லோருடைய ஜீவனும் ஆபத்துக் கிடமான தாகவே இருந்தது.
ஒவ்வொருவனும் மற்றவனுடைய இரக்கத்தை எதிர்பார்த்தவனாக இருந்தான். இந்த நம்பிக்கை பேய், பிசாசு உண்டு; சூனிய வித்தை உண்டு; சூனிய வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிக வேரூன்றி இருந்தபடியால் இதன் உண்மையைச் சந்தேகிக்கும் எவன்பேரிலும் அவ நம்பிக்கை வைக்கப்பட்டது. பேய், பிசாசு இல்லை என்று எவன் சொன்னாலும் அவனைத் தெய்வ நிந்தனையுடைய துஷ்டன் என இகழ்ந்து வந்தனர்.
(கர்னல் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய பேய்-பூதம் பிசாசு என்ற நூலில்) தகவல்: குன்னம் ராமண்ணா