ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பெரியார் திடல் பொது அரங்கம். பொது இடத்திலே எல்லோரும் இருக்க வேண்டும்.

நற்கருத்துகளைப் பரப்புவதாக நாட்டியக் கலை அமைய வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

சென்னை, டிச. 31
- சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயா சார்பில், உலக சாதனையாக, தொடர்ந்து, 15 மணி நேரம் பரத நாட்டியத் திருவிழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (30.12.2015) நடைபெற்றது.
காலை 5 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரை தொடர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்று உலக சாதனை படைத்துள்ளது. நிகழ்ச்சியின் இறுதி யில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு நாட்டியம் ஆடிய குழந்தைகள் மற்றும் குழுவினர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பாராட்டிப் பேசினார்.
தமிழர் தலைவர் பாராட்டு
தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:
உலகம் இதுவரை காணாத சாதனை என்கிற பெருமைக்குரிய 14 மணிநேரத்துக்கு தொடர்ந்து ஆடி சாதனை செய்தது இந்த பெரியார் திடலிலே ஒரு பெரிய வரலாற்று நிகழ்ச்சியாகும்.
இது ஓர் எதிர்பாராத வாய்ப்பு எனக்கு. எதிர்பார்க் கவே இல்லை. வாழ்க்கையில் எதிர்பாராது கிடைக்கின்ற இன்பத்துக்கு இணையே இல்லை. உங்கள் முகங்களை எல்லாம் பார்க்கின்ற போது, நீங்கள் ஆடிய ஆட்டத் தையெல்லாம் சுவைக்கின்றபோது, மறக்க முடியாத அனுபவம் ஏற்பட்டிருக்கின்றது.
நல்ல பூக்கள் பூத்துக் குலுங்குகின்ற பூந்தோட்டத் திலே, நடுவிலே சென்றால், எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுமோ அதுபோல, சிரித்த மலர்களாக, நீங்கள் ஆடியது, குழந்தைகளாக ஆடவில்லை, மலர்களாக ஆடி, நீங்கள் எங்களை தென்றலைப்போல மகிழ் வித்திருக்கிறீர்கள்.
உங்களைத் தயாரித்திருக்கிற தோட்டக்காரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. மிகப்பெரிய அளவுக்கு இந்த நிகழ்ச்சியிலே வித்தியாசமாக இருக்கிறது. என்னடா இது? கருப்புச் சட்டைக்காரர்கூட இங்குவந்து உட்கார்ந்திருக்கிறாரே? இவரும் சேர்ந்திருக்கிறாரே என்று கூட நினைக்கலாம்.
தமிழ் இணைக்கிறது
நம்மை எது பிரிக்கிறது என்பது முக்கியமல்ல. எது  இணைக்கிறது என்பதுதான் முக்கியமானது. அந்த அடிப்படையிலே கலை நம் எல்லோரையும் இணைக் கிறது. தமிழ் இணைக்கிறது. ஆதிகாலத்து மனிதன் முதன்முதலிலே அவன் இருந்த நேரத்திலேகூட பாட்டுப்பாடினான்.
பிறகு ஆட்டம் ஆடினான். எனவே, அந்த ஆட்டமும், பாட்டும்தான் வாழ்க்கையிலே நாம் இளைப்பாறுவதற்கு புத்துணர்வு ஊட்டுவதற்கு மிகப்பெரிய மாமருந்து. அதை இந்த செல்வங்கள் தந்திருக்கிறார்கள். காலை 5 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடத்தியிருக்கிறார்கள் என்றால்,
இதில் உலக வரலாற்றில் நீங்கள் இடம் பிடித்திருக் கிறீர்கள் என்று சொன்னால், இந்தப் பெருமையை, இந்தத் துணிவை மேலும்மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும். இதை தயாரித்தவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனவே, இப்படிப்பட்ட இந்த முயற்சி சிறப்பாக இருக்க வேண்டும்.
இது ஒரு பொது அரங்கம்!
இங்கே சொன்னார்கள், இந்த அரங்கத்தை சிறப்பாக கொடுத்தீர்கள் என்று. இந்த அரங்கத்தில் உள்ளே வந் தீர்கள் என்றால், சரசுவதி இருக்கிறது, மற்றது எல்லாம் இருக்கிறதே இவர்கள் எல்லாம் மாறிவிட்டார்களா என்று சிலபேர் நினைக்கலாம். நாங்களும் மாறவில்லை, அவர்களும் மாறவில்லை.
அவரவர்கள் கொள்கை அவர்களிடம் இருக்கிறது. ஆனாலும், தந்தை பெரியார் அவர்கள் இந்த அரங்கத்தை உருவாக்கியபோது ஒன்றைச் சொன்னார்கள்.
எவ்வளவு மாறுபட்ட கருத்து உள்ளவர்கள், வேறுபட்ட கொள்கை உள்ளவர்களுக்குகூட இது பொது அரங்கம். பொது இடத்திலே எல்லோரும் இருக்க வேண்டும்.  என்னைத் தாக்கிப் பேசுகிறவர் களாக இருந்தால்கூட அவர்களுக்கும் நீங்கள் கொடுக்கவேண்டும் என்று எங்கள் தொண்டர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.
இன்றைக்கு இந்த அரங்கம், ஒரு பொது அரங்கம், இது அழகாக இருக்கிறதோ இல் லையோ, நீங்கள் இதை அழகு படுத்தியிருக்கிறீர்கள். அதற்காக நன்றி. நன்கு பயிற்சி அளித்துள்ளீர்கள். இந்த பிள்ளைகள் இன்னும் சிறப்பாக உருவாக வேண்டும். நாங்கள் களைப்பில்லாமல் போராடுபவர்கள். நீங்கள் களைப்பில்லாமல் ஆடுகிறவர்கள். அந்த வகையிலே மகிழ்ச்சிக்குரியவர்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்த நாட்டியப் பேரொளிகளாக சிறந்து விளங்க வேண்டும். நாட்டிய செல்வங்கள் பெருக வேண்டும். அதன்மூலம் நல்ல கருத்துகள் மக்களுக்கு செல்ல வேண்டும். வாழ்க்கையிலே எல்லா கோணத்திலும் இருக்கின்ற செய்திகளையெல்லாம் எடுத்துச்சொல்லி,
‘செம்மொழி’ நடனத்தை பார்க்கிறபோது, எம்மொழி எவ்வளவு பெரிய சிறப்பான மொழி என்பதை குறுகிய காலத்திலே எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். உங்களைத் தயாரித் திருக்கிற அத்துணை ஆசிரியர்களுக்கும் எங்கள் அன்பான பாராட்டுகள். மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்.  வாழ்த்துகள். வாழ்க, வளர்க. நன்றி, வணக்கம். வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு!
- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டிப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியிலே உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளி நாயகம்,  தொழிலதிபர்  வி.ஜி.சந்தோஷம், சட்டக்கதிர் ஆசிரியர் வி.ஆர்.எஸ். சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பரத நாட்டிய நிகழ்ச்சி, 'அமெஸிங் வேல்டு ரெக்கார்டு' நிறுவனத்தில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. கடந்த, ஆண்டான 2014இல், சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயாவைச் சேர்ந்த மாணவியர், தொடர்ந்து, 12 மணி நேரம் நடனம் ஆடி, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனையில் இடம் பிடித்தனர். அந்த சாதனையை, இப்போது அவர்களே முறியடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,31.12.15

சனி, 13 பிப்ரவரி, 2016

இடைவிடாத போர் நடக்க வேண்டும்!


நமது கல்விப் புரட்சி வேலைகளில், மக்களை மயக்கும் மதத்தோடு போர் புரிவது ஒரு முக்கிய வேலையாகும். இந்தப் போர் இடைவிடாமல், அமைப்புத் திட்டத்தோடும் உறுதியாய் நடத்தப்பட வேண்டும். தொழிலாளருடைய ஆதிக்கத்தில் கோயிலுக்கு அரசாங்கம் எவ்வித ஆதரவும் அளிக்கக் கூடாது.
பாதிரிக் கூட்டங்கள் புரட்சிக்கு விரோதமாகச் செய்து வரும் வேலைகளைக் கண்டிப்பதுடன் அடக்க வேண்டும்.
ஆனால், அதே சமயத்தில் மதத்திற்கு விரோதமான பிரச்சாரம் நடத்துவதற்கு சாத்தியமான முயற்சிகள் எல்லாம் செய்யப்படும். கோயிலுக்கு ஏற்பட்டிருக்கும் பெருமையும் செல்வாக்கும் ஒழிக்கப்படும்.
- 1908ஆம் ஆண்டு சர்வதேச பொதுவுடைமைக் கட்சியின் 6ஆவது உலக காங்கிரசில் லெனின் பேச்சு.
-விடுதலை,11.12.15