நாத்திகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாத்திகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 மார்ச், 2021

திருச்சியில் நாத்திகர்களின் சங்கமம் -2011

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

ஆந்திர கோரா நாத்திக மய்யத்தின் 80ஆவது ஆண்டு விழா - 11ஆவது உலக நாத்திகர் மாநாடு

மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும் நிலைமையினை உருவாக்க உறுதி பூணுவோம்
விஜயவாடா உலக நாத்திகர் மாநாட்டில்  தமிழர் தலைவர் சூளுரை
விஜயவாடா, ஜன.5 ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்றுள்ளார். நாத்திக மய்யத்தின் 80ஆம் ஆண்டு நிறைவில் நடத்தப்படும் 11ஆவது உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் இன்று (5.1.2020) பிற்பகலில் சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதற்கு முன்னர், நாத்திக மய்யத்தின் பொறுப்பாளர் டாக்டர் சமரம் கோரா புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி நூலகத்திற்கு தமிழர் தலைவரை அழைத்துச் சென்று, அதனை மேலும் செழுமைப்படுத்த தமிழர் தலைவரின் ஆலோ சனைகளை கேட்டறிந்தார். தந்தை பெரியாரின்  புத்தகங்களை கணினி மூலம் தொடர்பு கொண்டு படித்திட உரிய அனுமதி தர வேண்டியும் தமிழர் தலைவரிடம் கேட்டார். தமிழர் தலைவரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலகமும், விஜயவாடா நாத்திக மய்யமும் இணைந்து உலகம் முழுவதும் நாத்திக மனிதநேய கருத்துகள் பரவிட, பயன்பட செயல்பட வேண்டும்  என்று தமிழர் தலைவர் தமது விருப்பத்தினையும் தெரிவித்தார்.
நாத்திக மய்யத்தில் காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்
முற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சிறிய தொரு உரையாற்றிட அழைக்கப்பட்டார். அப் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்ட தாவது: இந்த நாட்டில் ஜாதி மனிதர்களை பிளவு படுத்துகிறது. மதங்கள் மனிதரை வேறுபடுத்து கின்றன. உலகளவில் தீவிரவாதம் அதிகரித்து மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருக்கிறது. இந் நிலைக்கு ஒரே தீர்வு மனிதநேயத்தை வலியுறுத்தும் நாத்திகமே, சுயமரியாதை பகுத்தறிவுக் கொள்கைகளே!
தந்தை பெரியார் அரங்கத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழக இலக்கியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலக  மாந்தரையே ஒரே குலமாக கருதிய போக்கு நிலவியது. அப்படிப்பட்ட மனிதநேயம் சார்ந்த மனப்பான்மை, அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்கிட இந்த உலக நாத்திகர் மாநாடு வலு  சேர்க்கும்; நாம் அனைவரும் வலிமை சேர்ப்போம். நாத்திகக் கருத்துகள் தழைத்தோங்கும் பொழுது மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும். அத்தகைய நிலை மையினை உருவாக்க உறுதி பூணுவோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நாத்திகத்தின் பல்வேறு கூறுகள், கடைப் பிடிக்கப்பட தேவையான அணுகுமுறைகள் பற்றிய தலைப்புகளில் உரை வீச்சு ஆற்றப்பட்டு வருகிறது.

உலக நாத்திக மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு விஜயவாடா ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு...

பஞ்சாபிலிருந்து மாநாட்டிற்கு வருகைதந்த நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருடன்...

கோரா உலக நாத்திக ஆராய்ச்சி நூலகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்...

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெரியார் நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்


- விடுதலை நாளேடு,5.1.2020

புதன், 20 ஜூன், 2018

உலகளவில் நாத்திகர்கள்



உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது.

globalnation.inquirer.net இணையத்தில் (9.5.2018) இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கேல்லப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் 2017ஆம் ஆண்டுவரை பன்னாட்ட ளவில் 68 நாடுகளில் சுமார் 68,000பேரிடம் மத நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் மத நம்பிக்கையற்றவர்கள்குறித்து புள்ளிவிவரம் திரட்டப்பட்டது.

சீனாவில் 67 விழுக்காட்டினர் நாத்திகர்கள்


அப்புள்ளிவிவரத்தின்படி, சீனாவில் 67 விழுக்காட்டினர் மத நம்பிக்கையற்ற நாத்தி கர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பத்துபேரில் ஏழு பேர் நாத்திகர்களாக உள்ளனர்.  வேறு எந்த நாட்டையும்விட, இருமடங்கு அளவில் 23 விழுக்காட்டினர் மத மற்றவர்களாக அறிவித்துக்கொண்டுள்ளனர்.

சீனாவில் 9 விழுக்காட்டினர் மட்டுமே தங்களை மத நம்பிக்கை கொண்டவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து நாடுவாரியாக நாத்திகர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

ஜப்பான் நாட்டில் 29 விழுக்காடு, சுலோவேனியா நாட்டில் 28 விழுக்காடு, செக் குடியரசில் 25 விழுக்காடு, தென்கொரியாவில் 23 விழுக்காடு, அய்ரோப்பிய நாடுகளான பெல்ஜியம் 21 விழுக்காடு, பிரான்சு 21 விழுக்காடு, சுவீடன் 18 விழுக்காடு, அய்ஸ்லாந்து 17 விழுக்காடு அளவில் நாத் திகர்களாக தங்களை அறிவித்துக்கொண் டுள்ளனர்.

நம்பிக்கையில் பல விதங்கள்


மதநம்பிக்கையைச் சார்ந்துள்ளவர்களாக 62 விழுக்காட்டினர் தங்களை மதநம்பிக்கை உள்ளவர்கள் என்று கூறியுள்ளனர். மத நம்பிக்கை உள்ளவர்களிடையே ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்புபவர்களாக 74 விழுக்காட்டினரும், கடவுள் நம்பிக்கை யாளர்களாக 71 விழுக்காட்டினரும், சொர்க்கம் என்று இருப்பதாக நம்புபவர்களாக 56 விழுக்காட்டினரும், மறுபிறப்பு உள்ளதாக 54 விழுக்காட்டினரும், நரகம் என்ற ஒன்று இருப்பதாக 49 விழுக்காட்டினரும் உள்ளதாக புள்ளி விவரத் தகவல் கூறுகிறது.

வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப் பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களிடையே மதம், கடவுள், ஆன்மா, சொர்க்கம், நரகம் ஆகிய நம்பிக்கைகள் மிகுந்துள்ளதாக கேல்லப் இன்டர்நேஷனல் நிறுவனப் புள்ளிவிவரத்தகவல் கூறுகிறது. மங்கோலியா நாட்டில் 8 விழுக்காடு, வியட்நாம் 6 விழுக்காடு, இந்தியா 2 விழுக்காடு, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்தில் ஒரு விழுக்காடு நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள் இருப்பதாக புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.

ஆக, மதத்தை நம்புவோரிடையே ஆன்மா, சொர்க்கம், மறுபிறப்பு, நரகம், கடவுள் ஆகிய கருத்துகளை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள் என்று இப்புள்ளி விவரத்தகவல்கள் மூலம் தெரிகிறது.

வருவாய், கல்வி, சமூக பண்புநலன்கள் பெருக நாத்திகம்


புள்ளிவிவரத் தகவலின்படி, மதநம்பிக்கை குறைவாக உள்ள நிலையில் வருவாய் மற்றும் கல்வி நிலை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.

மத நம்பிக்கை சார்ந்தவர்களிடையே குறைவான வருவாய் கொண்டவர்களாக 66 விழுக்காடும்,

மத நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர் களில்  50 விழுக்காட்டளவில் அதிக வருவாய் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

அதேபோன்று மத நம்பிக்கை மிகுந்தவர்களிடையே 83 விழுக்காட்டளவில் கல்வி நிலையில் குறைந்து காணப்படு வதாகவும், மதநம்பிக்கையற்றவர்களிடையே  49 விழுக்காட்டளவில் கல்விநிலையில் உயர்ந்து காணப்படுவதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. புள்ளிவிவரத்தின்படி, மதம் சார்ந்த நம்பிக்கை மற்றும் சமுதாயத்தில் மக்களின் பண்புநலன்களிடையே ஒப்பீட்டளவில் வயது, வருவாய், கல்வி நிலை உள்ளிட்டவற்றில் மதநம்பிக்கை இல்லாதவர்களின் நிலை ஓங்கியும், மத நம்பிக்கையாளர்களின் நிலை குறைந்தும் காணப்படுகிறது. மேலும் இளைஞர்கள் ஒரே மதத்தைச் சார்ந்திராமல், பன்மத நம்பிக்கையாளர்களாக அதிகரித்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சமுதாயத்தில் மதத்தை ஏற்றுக்கொள்வதில் கூட, கல்வியின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாக  தகவல்கள் கூறுகின்றன.

பன்னாட்டளவில் தனிமனிதர்களின் வாழ்வில் மதம் பொருந்தக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் வரலாற்றைப் பொருத்தவரையிலும்கூட,கல்விநிலைமட்டுமே குறிப்பிடத்தக்க மதிப்புகளை பெறுவதாக இருந்து வருகிறது.

- இவ்வாறு புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது

- விடுதலை ஞாயிறுமலர், 12.5.18

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

உலக நாத்திகர் மாநாட்டுப் பிரகடனம்!

நீதி, சமத்துவம், அறிவியல், மனிதநேயம் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றுக்காக நம்முடைய குரல் உலகெங்கும் ஒலிக்கும்!"
உலக நாத்திகர் மாநாட்டுப் பிரகடனம்!
திருச்சி, ஜன.9 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகம், சிறுகனூர் பெரியார் உலகம்,  திருச்சி பெரியார் மாளிகை ஆகிய இடங்களில் உலக நாத்திகர் மாநாடு ஜனவரி 5,6 & 7 ஆகிய மூன்று நாள்களில் மிகவும் எழுச்சியுடன் திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு கருத்தரங்க உரை, ஆய்வுரைகளை வழங்கினார்கள். மாநாட்டின் நிறைவு நாளில் உலக நாத்திகர் மாநாட்டுப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
திராவிடர் கழகம், விஜயவாடா -  நாத்திகர் மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் ஆகியோர் இணைந்து திருச்சியில் 2018 ஜனவரி 5,6 & 7 நாள்களில் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டில், நாத்திகர், மனிதநேயர், பகுத்தறிவாளர் சுதந்திர சிந்தனையாளர்கள் மற்றும் ஒத்த கருத்துடையோர் ஆகிய நாங்கள் பிரகடனப்படுத்தி உறுதி கூறுகிறோம்.
சிறார்களும் இளைஞர்களும்தான் உலக மக்களில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். அவர்களிடம் நிலவும் தளைகளான அறியாமை, கல்வியறிவின்மை, மூடநம்பிக்கையொட்டிய பழக்கங்கள் ஆகியவைகளிட மிருந்து அவர்களை விடுதலை செய்திட வேண்டும். திறனாய்தல் மற்றும் தடையற்ற கேட்டறிதல் ஆகியவற்றை அவர்களுக்குப் புகட்டிட வேண்டும். இதனால் அறிவியல் மனப்பான்மை அவர்களிடம் பெருகி, பகுத்தறிவு மற்றும் நன்னெறி சார்ந்து வாழ்ந்திட வழி ஏற்படும்.
நாத்திகர், மனிதநேயர் மற்றும் பகுத்தறிவாளர் ஆகியோருக்கு எதிரான சகிப்புத் தன்மையின்மை, கொடுமைகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
மதவாத அடிப்படையாளர்களின் நடவடிக்கைகளால் இளைஞர்கள், தீவிரவாதத்திற்குப் பலியாகிக் கொண்டு வருகிறார்கள்.
மூடநம்பிக்கைப் பழக்க வழக்கங்களாலும் மோசடி செய்திடும் சாமியார்களாலும், குழந்தைகளின், பெண்களின், ஒட்டு மொத்த சமுதாயத்தினரின் நலமும் நல்வாழ்வும் பாதிக்கப்படுகின்றன.
பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒரின, ஈரின, பால் மாற்றின மக்கள் அனைவரும் சம உரிமை படைத்தவர்கள்;  பாகுபடுத்தி வேறுபடுத்தும் விலங்கிலிருந்து விடுபட வேண்டியவர்கள். அவர்களுடைய சமத்துவத்திற்கும் சம உரிமைக்கும் பாடுபடுவோம்!
மதச்சார்பின்மை மற்றும் தளையற்ற சிந்தனையினை வளர்த்தெடுப்போம்!
சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக ஏவப்படும் அனைத்துவித கொடுமை களையும் அறவே நீக்கிடுவோம்!
அனைவரையும் போலவே, நாத்திகர்களும், மனிதநேயர்களும், பகுத்தறிவாளர்களும் தளையற்ற சிந்தனையாளர்களும் சம உரிமை படைத்தவர்கள் என்பதை உறுதி செய்து, அதனை, ஆளும் அரசினர்தம் கருத்திற்கு, கவனத்திற்கு கொண்டு செல்ல  உரியன செய்வோம்!
மதத்தையும், அரசையும் பிரித்துப் பார்த்தல், மதத்தையும் அரசியலையும் பிரித்தல், மதத்தையும் கல்வியையும் மற்றும் மதத்தையும் அரசாட்சியையும் பிரித்துப் பார்க்கும் கருத்துக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்போம்!
கல்வி புகட்டுவதிலும் இளைஞர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனையை வளர்ப்பதிலும், அரசினர் முக்கிய பங்கு ஆற்றிட வேண்டுகிறோம்.
நாத்திகம், மனிதநேயம் ஒரு வாழ்க்கை முறை என்னும் கருத்தோட்டத்துடன், திறனாய்வு, அறிவியல் மனப்பான்மை, உய்த்து அறியும் கேள்வி உணர்வுகளை வளர்த்திடுவோம்!
அனைத்து மனிதர்களுக்குமான கண்ணியத்தினை சுயமரியாதையினை உயர்த்திப் பிடிப்போம்!
நன்னெறி என்பது ஒரு சமூக அவசியம், அதன்மீது மத முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பதை உறுதிப் படுத்துவோம்!
உலகெங்கிலும் உள்ள தெய்வ நிந்தனைச் சட்டங்களை நீக்கிட உரத்தக் குரல் கொடுப்போம்!
'தீண்டாமை' கொடுமையினை உள்ளடக்கிய ஜாதி முறையினை, இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கிட வேண்டுகிறோம்!
பகுத்தறிவு சார்ந்த ஒப்புரவு சமூகத்தை உருவாக்கிட  அனைத்து நாத்திகர்கள், மனிதநேயர்கள், சீர்திருத்தவாதிகள் எடுக்கும் முயற்சிகளை செயல்களைப் போற்றுவோம்!
2018 ஜனவரி 7 ஆம் நாளான இன்று  நீதி, சமத்துவம், மனிதநேயம், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு மற்றும்  கேள்வி கேட்டிடும் உரிமைகளின் - உணர்வு எழுச்சிக் குரலே இந்தப் பிரகடனம் என்று உலகுக்கு அறிவிக்கிறோம்.
- உலக நாத்திகர் மாநாட்டுப் பேராளர்கள்
இவ்வாறு உலக நாத்திகர் மாநாட்டில் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் உணர்ச்சி மிகுதியுடன் பிரகடனத்தை ஆதரித்து பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.
இந்தப் பிரகடனத்தை மாநாட்டு வரவேற்பு குழு சார்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் முன்மொழிய, மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று பெரும் கரஒலி எழுப்பி வரவேற்றனர்.
(பிரகடனத்தின் ஆங்கில வாசகங்கள் 3ஆம் பக்கம் காண்க)
-விடுதலை நாளேடு, 9.1.18

செவ்வாய், 23 ஜனவரி, 2018

நாளேடுகள் பார்வையில் உலக நாத்திகர் மாநாடு

ஜூனியர் விகடன்' பார்வையில்




‘நக்கீரன்'  பார்வையில்


 




- விடுதலை நாளேடு, 13.1.18

திங்கள், 22 ஜனவரி, 2018

உலக நாத்திகர் மாநாட்டு-3

ஆயுதத்தால் வெல்லப்படுவதல்ல உலகம்

நாத்திகம் - அதன் மனிதநேயமே நம்பிக்கை ஒளி!

தமிழர் தலைவர் தலைமை உரை

- தொகுப்பு: மின்சாரம்



உலகை வெல்லுவது ஆயுதம் அல்ல - நாத்திகம் அதன் மனிதநேயமே மானுடத்திற்கு நம்பிக்கை ஒளி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

திருச்சி பெரியார் மாளிகை வளாகத்தில் நேற்று (6.1.2018) மாலை நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்தின் சுருக்கம் வருமாறு:

உலகத்தின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் இந்த உலக நாத்திகர் மாநாட்டுக்கு வருகை தந்துள்ளீர்கள். அதற்காக நாங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் பேசும் மொழிகள், தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி, இந்தி, மராட்டிய மொழிகளாக இருக்கலாம் - ஆனால் நம்மை இணைப்பது மனிதநேயம், மனித சமத்துவம் என்னும் பொது மொழி. இவற்றிற்காக நாம்  கொண்டிருக்கும் மகத்தான தத்துவம் தான் நாத்திகம்.

நமது அன்பு செல்வம் கவிஞர் கனிமொழி சில அருமை யான கேள்விகளை முன் வைத்தார். ஒக்கிப் புயலால் மீனவர்கள் நூற்றுக்கணக்கில் மரணம் அடைந்தார்களே - அவர்களை இழந்து குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளானார்களே அவர்களை எந்தக் கடவுள் காப்பாற்றியது என்ற நியாயமான கேள்விகளைக் கேட்டார்.

இதற்குத் தந்தை பெரியார் கேட்ட இன்னொரு கேள்வி யில் பதில் இருக்கிறது.  தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் நம்மை எப்படி காப்பாற்றுவார் என்ற கேள்வியை முன் வைத்தார் தந்தை பெரியார்.

கோயிலில் திருட்டிலிருந்து சிலைகளைக் காப்பாற்றுவ தற்கே காவல் துறையில் தனிப் பிரிவே இருக்கிறது.

எல்லாம் கடவுள் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது என்கிற - பக்தனைப் பார்த்து தந்தை பெரியார் கேட்டார்; "நீ வீட்டை விட்டு  வெளியே வரும்போது, கதவைப் பூட்டினாயா? பூட்டாமல் வந்தாயா? அவனன்றி ஓரணுவும் அசையாது என்றால் திருட்டுக்கு யார் பொறுப்பு? கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் தானே வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்தாய்?" என்று தந்தை பெரியார் கேட்பார். எந்தப் பக்தன் பதில் சொன்னான்?

மக்கள் தொகை கட்டுப்பாடு - ஃபேமிலி பிளானிங் என்பதற்காக மருத்துவத்துறை இருக்கிறது.

கடவுள் தான் பிள்ளைகளைக் கொடுப்பான் என்றால் அதனைத் தடுப்பது இந்தத் துறை தானே! மருத்துவத் துறை என்பது ஆன்டி காட் - தீயணைப்புத் துறை என்பதும் அக்னி பகவானுக்கு எதிரிதானே - அதுவும் ஆன்டிகாட் தானே! தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பேசும்போது கடவுளை எதிர்க்கும் நாத்திகர்களே என்று விளித்துதான், தன் பேச்சைத் தொடங்கினார் பெரியார்.

கடவுள் எதிர்ப்பு என்பது வெறும் மூடநம்பிக்கை எதிர்ப்பு மட்டுமல்ல; அந்தக் கடவுள்தான் ஜாதி - தீண்டாமைக்குக் காரணம், பெண்ணடிமைக்குக் காரணம். இவற்றை ஒழிக்க விரும்புவோர் யாராகவிருந்தாலும் அவற்றிற்கு மூல காரணமான கடவுளை - அதன் மீதான நம்பிக்கையை எதிர்த்து தானே ஆக வேண்டும்?

இந்த மாநாட்டைப்பற்றிக்கூட சொல்லுவார்கள், எழுதுவார்கள். பார்த்தீர்களா? பார்த்தீர்களா - இந்து மதக் கடவுளைப் பற்றி தானே பேசினார்கள், முசுலிம்களைப் பற்றி கிறித்தவர்களைப்பற்றிப் பேசினார்களா என்று கேட்பார்கள்.

நூற்றுக்கு 80 சதவீதத்துக்கு மேலிருக்கிற மக்களைப் பாதிக்கும் மதத்தைப்பற்றியும், கடவுளைப் பற்றியும் தானே முன்னுரிமை கொடுத்துப் பேச முடியும்?

லண்டனிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் பிரதி நிதிகள் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கேளுங்கள், நீங்கள் எந்த மதத்தைப் பற்றி, கடவுளைப் பற்றி விமர்சிப்பீர்கள் என்று கேட்டால் கட்டாயம் கிறித்தவ மதத்தை  பற்றிதான் விமர்சிப்போம் என்பர்; "நீங்கள் ஏன் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதில்லை" என்று அவர்கள் நாட்டில் யாரும் கேட்க மாட்டார்கள்.

நாத்திகவாதிகளாகிய நமக்கு ஒழுக்கம் முக்கியம். மத நம்பிக்கைவாதிக்கு அது முக்கியமல்ல. எந்தக் குற்றத்தையும் செய்து விட்டு எளிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம். குற்றம் செய்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் நாத்திகவாதியின் கருத்து.

 

இதுதான் பக்தி வளர்க்கும் ஒழுக்கம்!

இன்றைக்கு மாலையில் வெளி வந்துள்ள ஓர் ஏட்டில் ஒரு செய்தி. திருமங்கை ஆழ்வார் என்ற பக்தனைப்பற்றி  - சோழப் பேரரசின் தளபதியாக இருந்த திருமங்கை, சிறீ ரெங்கநாதன் கோயிலுக்கு மதில் சுவர் எழுப்பிட வழிப்பறியில்  ஈடுபட்டனாம். இது அய்பிசி 420படி குற்றம் அல்லவா? ரெங்கநாதன் கடவுள் என்ன செய்தாராம்? அவன் திருட்டைக் கண்டுபிடிக்க மாறுவேடம் போட்டுச் சென்றபோது அந்தத் ரெங்கநாதக் கடவுளிடமே வழிப்பறி செய்தானாம். அவன் பக்தியை மெச்சி அவன் காதில் 'ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை ஓதினானாம். அன்றுமுதல் திருமங்கைக்கு ஆழ்வார் பட்டம். திருட்டுப் பயலுக்குப் பெயர் திருமங்கை ஆழ்வாராம் (பலத்த சிரிப்பு, கைதட்டல்). இதுதான் பக்தி வளர்க்கும் ஒழுக்கம்.

(திருச்சிப் பொதுக் கூட்டத்தில்

தமிழர் தலைவர் கி. வீரமணி 6.1.2018)

கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாதவர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். மும்பையில் நரேந்திர தபோல்கர், கோவிந்தபன்சாரே, கருநாடகத்தில் கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய பகுத்தறிவாளர்களை இந்துத்துவ வெறியர்கள் சுட்டுக் கொல்லவில்லையா? தமிழ்நாட்டில் கோவையில் பாரூக் என்பவரை மதவெறியர்கள் படுகொலை செய்யவில்லையா? என் உயிருக்கே அய்ந்து முறை குறி வைத்தார்களே!

மம்சாபுரத்தில் - தம்மம்பட்டியில் - சென்னையில் என்று  குறி வைத்தனர். அதற்காக அஞ்சி ஒதுங்கி விடவில்லையே! தந்தை பெரியார் கொடுத்த அந்தக் கொள்கைச் சுடரை ஏந்திச் சென்று கொண்டுதான் உள்ளேன். நல்ல பொருளுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார்.

நாத்திகமே மானுடத்தின் நம்பிக்கை என்பதுதான் நமது மானுடக் கொள்கை, ஆயுதத்தால் வெல்லப்படுவதல்ல உலகம். மனிதநேயமான நாத்திகக் கொள்கையே உலகை வெல்லும். மனித சமூகத்துக்கு, அமைதிக்கு அதுதான் தேவை.

மதங்களால் சிந்தப்பட்ட குருதியே அதிகம்

எந்த கடவுள் மக்களைக் காப்பாற்றுகிறது?

கவிஞர் கனிமொழி எம்.பி. கர்ச்சனை

திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டுக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள்; மகிழ்ச்சியாக இருக்கிறது.

உலகில் பல மதங்கள் இருக்கின்றன. அவை மனிதனைப் பிரிக்கின்றன. ஆனால் நாத்திகம்தான் மனிதர்களை இணைக்கிறது. மதநம்பிக்கைவாதிகள் கடவுளிடம் சென்று, கடவுளே எனக்கு இதைக் கொடு - அதைக் கொடு என்று கேட்கிறார்கள். ஆனால், ஒரு பகுத்தறிவுவாதியோ அறிவைத் தேடிச் செல்லுகின்றான்.

திருச்சியில் பெரியார் மாளிகைக்கு வரும் பொழுது எங்கள் தாத்தா வீட்டுக்கு வந்த உணர்வைப் பெறுகிறோம். விடை பெறும்போது உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு செல்லும் உணர்வைப் பெறுகிறோம்.

ஆசிரியர் அவர்கள் எனது ஆசான் - குரு என்று கூடச் சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு மாநாட்டில் பங்கேற்க எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பெருமையாகக் கருதுகிறேன். நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அறிஞர் பெரு மக்களுக்கெல்லாம் என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரென்றால் வெறும் கடவுள் மறுப்பாளர் என்று மட்டும் பார்க்கிறார்கள். அவர் ஏன் கடவுளை மறுக்கிறார் என்பதுதான் முக்கியம்.

மதமும், கடவுளும் மனிதர்களுக்குள் பேதத்தை விதைக்கிறது - கலகங்களை உருவாக்குகிறது. பெண்ணடி¬மையை வலியுறுத்துகிறது. அடக்கு முறைக்கு ஆயுதமாக இருக்கிறது.

அங்கே தான் பெரியார் கடவுள் மறுப்பாளர், மத எதிர்ப்பாளராக வெடிக்கிறார்.

மனிதனுக்கு பகுத்தறிவு தேவை - சுயமரியாதை தேவை, மனிதநேயம் தான் மக்களை இணைக்கும் என்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?

ஆண் - பெண் சமத்துவத்துக்கு உறுதி கூறும் ஒரே ஒரு மதம் உலகில் உண்டா? பெண்கள் உரிமைக்குத் தடையாக இருப்பது - தாய்மைக்குக் காரணமாக இருக்கக் கூடியதையே தூக்கி எறி என்று சொன்ன ஒரே தலைவர் உலகில் தந்தை பெரியார்தான்.

கீதையைப் பற்றி உயர்வாக சொல்லுவார்கள். உண்மையைச் சொல்லப் போனால் ஜாதியை உண்டாக்கியதும், அதற்கு நியாயம் கற்பிப்பதும் கீதைதான்.

உலக யுத்தங்களை விட மனித ரத்தம் சிந்தப்பட்டது மதங்களால் தான்  - மதச்சண்டைகளால்தானே!

பெண்ணுரிமைக்கு எதிராக இருப்பவர்கள் ஆண்களும், கடவுள்களும்தான்.

மனிதனுக்கு எவ்வளவு துயரங்கள், இயற்கைச் சீற்றம்  - எவ்வளவு மனிதர்கள் சாகிறார்கள் - எந்தக் கடவுள் காப்பாற்றியது? கடவுள் மக்களைக் காப்பாற்ற இருக்கிறதா - தண்டனை கொடுக்க இருக்கிறதா?

திரைப் படத்தில்தான் இயக்குநர் கதாநாயகனையும், வில்லனையும் உருவாக்குகிறார் என்றால் அந்த வேலையை கடவுள் ஏன் செய்ய வேண்டும்?

வறுமையையும், நோயையும் கடவுள் ஏன் கொடுக்க வேண்டும்? தாய்த் தந்தைமார்களின் தவறுகளால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக ஒரு குழந்தை ஏன் பிறக்க வேண்டும் -இதற்கெல்லாம் கடவுள் பொறுப்பாளியில்லையா?

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் சில கமிட்டிகளில் நியமனம் செய்வார்கள். வெங்கையா நாயுடு தலைமையிலான உள்துறைக் கமிட்டியில் நானிருந்தேன். திருப்பதிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது, நானும் சென்றேன். நீண்ட கியூவில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் நின்றார்கள். பல மணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் எங்களுக்கெல்லாம் சிறப்புத் தரிசனமாம். என்னோடு வந்திருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "உங்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லை. இங்கே பார்த்தீர்களா இவ்வளவுப் பெரிய கூட்டத்தை" என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன். "கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்றால் தரிசனத்தில்கூட ஏனிந்த ஏற்றத் தாழ்வு என்று கேட்டு விட்டு - அதோ ஏழுமலையானுக்கு பெரிய உண்டியல் - பக்தர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள். பக்கத்தில் ஏன் ஸ்டன் துப்பாக்கியோடு போலீஸ்காரர் ஒருவர் உண்டியலுக்குப் பாதுகாப்பு? ஏழுமலையானுக்கு சக்தியில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது" என்று கேட்டேன்.

நாம் இத்தகைய மாநாடுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள்  அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் கையை இன்னொருவர் பிடித்து, இணைத்துக் கொண்டே பணியாற்றிட வேண்டும்.

ஆணவக் கொலைகளும், ஜாதி மத அடிப்படை வாதங்களும் தகர்க்கப்பட மனிதநேயத்தையும், பகுத்தறிவையும் மக்களிடம் விதைத்துக் கொண்டே இருப்போம் - இருக்க வேண்டும் என்றார் கவிஞர் கனிமொழி.

மதவாதத்தைத் தடுப்பதுதான் பொருள் முதல் வாதம்

மனிதநேயம் என்பதுதான் நாத்திகம் - அறிவியல்வாதம்

எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் சிந்தனை சீற்றம்

உலகின் 18 நாடுகளிலிருந்து 500க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க உலக நாத்திகர் மாநாட்டில் எனக்கும் ஒரு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு என்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் மனிதநேயமும், அமைதியும், சகோதரத்துவமும் காப்பாற்றப்பட நாத்திகக் கொள்கையை உயர்த்திப் பிடிக்க இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

பகுத்தறிவுப் பகலவனாகிய தந்தை பெரியார் அவர்கள் - கடவுள் மறுப்பாளரான முழு நாத்திகரான தந்தை பெரியார்  அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். கடைசி வரை அவர் ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கின. குரலில் கம்பீரம் இருந்தது. கடைசி வரை பிரியாணி சாப்பிடும் அளவுக்கு செரிமானப் பிரச்சினைகள் ஏதுமில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள ஆத்திகப் பெரு மக்களை நாம் பார்க்கிறோம். பெரியார் அளவுக்கு நீண்ட காலம் அவர்களால் வாழ முடிவதில்லை.

சர்வ சக்தி கடவுள் என்கிறார்கள் அந்தக் கடவுளால் தந்தை பெரியாரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

 





 

- விடுதலை நாளேடு,7.1.18