ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

உலக நாத்திகர் மாநாட்டுப் பிரகடனம்!

நீதி, சமத்துவம், அறிவியல், மனிதநேயம் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றுக்காக நம்முடைய குரல் உலகெங்கும் ஒலிக்கும்!"
உலக நாத்திகர் மாநாட்டுப் பிரகடனம்!
திருச்சி, ஜன.9 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகம், சிறுகனூர் பெரியார் உலகம்,  திருச்சி பெரியார் மாளிகை ஆகிய இடங்களில் உலக நாத்திகர் மாநாடு ஜனவரி 5,6 & 7 ஆகிய மூன்று நாள்களில் மிகவும் எழுச்சியுடன் திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு கருத்தரங்க உரை, ஆய்வுரைகளை வழங்கினார்கள். மாநாட்டின் நிறைவு நாளில் உலக நாத்திகர் மாநாட்டுப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
திராவிடர் கழகம், விஜயவாடா -  நாத்திகர் மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் ஆகியோர் இணைந்து திருச்சியில் 2018 ஜனவரி 5,6 & 7 நாள்களில் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டில், நாத்திகர், மனிதநேயர், பகுத்தறிவாளர் சுதந்திர சிந்தனையாளர்கள் மற்றும் ஒத்த கருத்துடையோர் ஆகிய நாங்கள் பிரகடனப்படுத்தி உறுதி கூறுகிறோம்.
சிறார்களும் இளைஞர்களும்தான் உலக மக்களில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். அவர்களிடம் நிலவும் தளைகளான அறியாமை, கல்வியறிவின்மை, மூடநம்பிக்கையொட்டிய பழக்கங்கள் ஆகியவைகளிட மிருந்து அவர்களை விடுதலை செய்திட வேண்டும். திறனாய்தல் மற்றும் தடையற்ற கேட்டறிதல் ஆகியவற்றை அவர்களுக்குப் புகட்டிட வேண்டும். இதனால் அறிவியல் மனப்பான்மை அவர்களிடம் பெருகி, பகுத்தறிவு மற்றும் நன்னெறி சார்ந்து வாழ்ந்திட வழி ஏற்படும்.
நாத்திகர், மனிதநேயர் மற்றும் பகுத்தறிவாளர் ஆகியோருக்கு எதிரான சகிப்புத் தன்மையின்மை, கொடுமைகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
மதவாத அடிப்படையாளர்களின் நடவடிக்கைகளால் இளைஞர்கள், தீவிரவாதத்திற்குப் பலியாகிக் கொண்டு வருகிறார்கள்.
மூடநம்பிக்கைப் பழக்க வழக்கங்களாலும் மோசடி செய்திடும் சாமியார்களாலும், குழந்தைகளின், பெண்களின், ஒட்டு மொத்த சமுதாயத்தினரின் நலமும் நல்வாழ்வும் பாதிக்கப்படுகின்றன.
பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒரின, ஈரின, பால் மாற்றின மக்கள் அனைவரும் சம உரிமை படைத்தவர்கள்;  பாகுபடுத்தி வேறுபடுத்தும் விலங்கிலிருந்து விடுபட வேண்டியவர்கள். அவர்களுடைய சமத்துவத்திற்கும் சம உரிமைக்கும் பாடுபடுவோம்!
மதச்சார்பின்மை மற்றும் தளையற்ற சிந்தனையினை வளர்த்தெடுப்போம்!
சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக ஏவப்படும் அனைத்துவித கொடுமை களையும் அறவே நீக்கிடுவோம்!
அனைவரையும் போலவே, நாத்திகர்களும், மனிதநேயர்களும், பகுத்தறிவாளர்களும் தளையற்ற சிந்தனையாளர்களும் சம உரிமை படைத்தவர்கள் என்பதை உறுதி செய்து, அதனை, ஆளும் அரசினர்தம் கருத்திற்கு, கவனத்திற்கு கொண்டு செல்ல  உரியன செய்வோம்!
மதத்தையும், அரசையும் பிரித்துப் பார்த்தல், மதத்தையும் அரசியலையும் பிரித்தல், மதத்தையும் கல்வியையும் மற்றும் மதத்தையும் அரசாட்சியையும் பிரித்துப் பார்க்கும் கருத்துக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்போம்!
கல்வி புகட்டுவதிலும் இளைஞர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனையை வளர்ப்பதிலும், அரசினர் முக்கிய பங்கு ஆற்றிட வேண்டுகிறோம்.
நாத்திகம், மனிதநேயம் ஒரு வாழ்க்கை முறை என்னும் கருத்தோட்டத்துடன், திறனாய்வு, அறிவியல் மனப்பான்மை, உய்த்து அறியும் கேள்வி உணர்வுகளை வளர்த்திடுவோம்!
அனைத்து மனிதர்களுக்குமான கண்ணியத்தினை சுயமரியாதையினை உயர்த்திப் பிடிப்போம்!
நன்னெறி என்பது ஒரு சமூக அவசியம், அதன்மீது மத முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பதை உறுதிப் படுத்துவோம்!
உலகெங்கிலும் உள்ள தெய்வ நிந்தனைச் சட்டங்களை நீக்கிட உரத்தக் குரல் கொடுப்போம்!
'தீண்டாமை' கொடுமையினை உள்ளடக்கிய ஜாதி முறையினை, இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கிட வேண்டுகிறோம்!
பகுத்தறிவு சார்ந்த ஒப்புரவு சமூகத்தை உருவாக்கிட  அனைத்து நாத்திகர்கள், மனிதநேயர்கள், சீர்திருத்தவாதிகள் எடுக்கும் முயற்சிகளை செயல்களைப் போற்றுவோம்!
2018 ஜனவரி 7 ஆம் நாளான இன்று  நீதி, சமத்துவம், மனிதநேயம், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு மற்றும்  கேள்வி கேட்டிடும் உரிமைகளின் - உணர்வு எழுச்சிக் குரலே இந்தப் பிரகடனம் என்று உலகுக்கு அறிவிக்கிறோம்.
- உலக நாத்திகர் மாநாட்டுப் பேராளர்கள்
இவ்வாறு உலக நாத்திகர் மாநாட்டில் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் உணர்ச்சி மிகுதியுடன் பிரகடனத்தை ஆதரித்து பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.
இந்தப் பிரகடனத்தை மாநாட்டு வரவேற்பு குழு சார்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் முன்மொழிய, மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று பெரும் கரஒலி எழுப்பி வரவேற்றனர்.
(பிரகடனத்தின் ஆங்கில வாசகங்கள் 3ஆம் பக்கம் காண்க)
-விடுதலை நாளேடு, 9.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக