ஞாயிறு, 15 மார்ச், 2015

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு காரணம்

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு காரணம்: தந்தை பெரியார்

இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற முட்டாள் தனம் முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வருகிறது. இதை மாற்றக் கூடாதது என்று சொல்கின்றோமே தவிர, உணவை, உடையை, மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னோர்கள் பழமையைக் கடைபிடிப்பது கிடையாது.
விளக்கெண்ணெய் அகல் விளக்கைத் தூக்கிக் குப்பை யிலெறிந்துவிட்டு மனிதன் மின்சார விளக்கைப் பயன்படுத்து கின்றானே தவிர, முன்னோர்கள் காலத்திலிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன்படுத்துவது கிடையாதே!
இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோதம் என்று சொல்லி மனிதனின் சிந் தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது.
ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழையும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.
உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின்தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத்தறி விருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன்னோர் - பெரியோர் என்கிற காரியங்களில் பயன்படுத் தாததே என்பது புலப்படுகிறது. பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவதாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான்.
அப்போது அவன் பகுத்தறிவுவாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என்கின்றேன்.
குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக் கின்றனர். எதற்காக ஒருவன் மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் என்கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலை யெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான்.
ஆகையால்தான் மனிதனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட் டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென்கிறோம்.
நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய் தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும்.
இந்து மதம் இருப்பதால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக்கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானு மில்லை, பறையனுமில்லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!
இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்?
மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளிவான விளக்கம் இல்லை. இவற்றிலிருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.
சிந்திக்காததனாலே எவன் அதை உபயோகப்படுத்திக் கொண்டு வாழ்கின் றானோஅவன்தான் நம்மையெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக்கின்றான். மற்ற வற்றில் பகுத்தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத் திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.
நாம் கடவுள் இல்லை என்று சொன்னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.
பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்ப வில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில் லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கை யற்றவனையெல்லாம் கொலை செய்திருக்கிறார்களே!
சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தனர்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல  வேண் டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்றுதானே?
துலுக் கன் முஸ்லிம் அல்லாத வர்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்? 1920இல் மலையாளத்தில் மாப்பிள்ளா கலகம் ஏற்பட்டதே மதத்தைப் பரப்புவ தற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடுமை யைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள் தான் உண்டு என்று சொன்னார். அதற் காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கை யற்றவர்களை அழித்து ஒழித்துத் தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக்கின்றார்கள்.
நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக் கிடையே இருக்கிற மடமை, முட்டாள் தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர் களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள் வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதேயாகும் என எடுத்துரைத்தார்.
10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின்
.தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971).