செவ்வாய், 31 ஜனவரி, 2017

மதமற்றவர்  என்று தம்மை அறிவித்துக்கொள்ளும் உரிமை

மதமற்றவர்  என்று தம்மை அறிவித்துக்கொள்ளும் உரிமை தனி மனிதனுக்கு உண்டு;  அதில் அரசு தலையிட முடியாது!

மும்பை உயர்நீதிமன்றத்தின் முற்போக்கான தீர்ப்பு

தமிழர் தலைவர் வரவேற்று அறிக்கை!

மும்பை, செப்.24- தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; அதில் தலை யிட யாருக்கும் உரிமை கிடையாது என்று மண்டையில் அடித்ததுபோல மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித் துள்ளது.

இந்தியாவில் உள்ள எவரிடமும் அவர் தனது மதம்பற்றிக் குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற திட்டவட்ட மான தீர்ப்பு ஒன்றை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று (23.9.2014) அளித்து வரலாறு படைத்துள்ளது!

இயேசுவை நம்புபவர்கள் - ஆனால் கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள்

கிறித்துவ மதப் பிரிவில் ஒன்றான Full Gospel Church of God என்ற அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அவர் கள் ஏசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள்தான்; ஆனால், கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள் என்ற நிலைப்பாடு உடையவர்கள்!

அம்மூவர் (டாக்டர் ரஞ்சித் மொய்ட்டி, கிஷோர் நசாரே, சுபாஷ் ரணவேர் என்பவர்கள்) மராத்திய அரசின் அச்சகப் பதிவிதழில் (கெசட்டில்) நாங்கள் கிறிஸ்துவர்கள் அல்ல; எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று வெளியிட (கட்டணம் கட்டி) விண்ணப்பித்திருந்தார்கள்.

நீதிமன்றத்தில் மனு

அவர்களது விண்ணப்பங்களை மராத்திய அரசும், அச்சகத் துறையும் ஏற்று வெளியிட மறுத்துவிட்டன. அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.

எனவே, அவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) ஒன்றினைத் தாக்கல் செய்து, நீதி கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் அபய் ஒக்கா, ஜஸ்டீஸ் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மேற்கூறியவாறு, அரசு யாரையும் மதத்தைப் போடவேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது, தங்களுக்கு மதமில்லை (‘‘No Religion’’) என்று  அறிவிப்பதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்து விட்டனர்!

மதம் என்ற கேள்விக்கு நேராக அரசின் எந்த மனுவையும், பூர்த்தி செய்யும்போது மதமற்றவர் எனக் குறிப்பிடலாம் - இத்தீர்ப்பின்மூலம் என்பது சட்டப்படி தெளிவாக்கப்பட்ட தனி மனித உரிமையாகிவிட்டது!

ஆணித்தரமான தீர்ப்பு!

எனக்கு எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லை; நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல என்று கூறும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு என்று ஆணியடித்த தீர்ப்பை மிகச் சிறப்பாக நாட்டோருக்கு அளித்துள்ளது!

மதச்சார்பற்ற (செக்குலர்) அரசின் கீழுள்ள மக்கள் மதங்களைச் சாராதவராகவோ, மதம் பிடிக்காதவர் களாகவோ இருக்க முழு உரிமையுடையவர்கள் ஆவார் கள் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது - இத்தீர்ப்பின் மூலம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25 ஆம் பிரிவின்கீழ் இவ் வுரிமை - அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்!

நாட்டில் மதங்களால் ஏற்பட்ட நன்மைகள் ஏதாவது இருப்பின், அது துளியளவே; ஆனால் தீமைகளோ மலையளவு!

வரலாற்றில் ரத்த ஆறு எப்பொழுதெல்லாம் ஓடியதாகக் கூறப்படுகிறதோ, காட்டப்படுகிறதோ அவை மதங்களால் உருவான சண்டைகளால்தானே!

மதங்களால் ஏற்படும் வன்முறைகள்!

புனிதப் போர்கள், சிலுவைப் போர்கள் எல்லாம் நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா? மதங்களைப் பரப்பிட வாள் முனையைத்தானே பல மதங்கள் இன்றளவும் நம்புகின்றன?

ஈராக்மீது போர் தொடுத்து சதாம் உசேனை அழித்த (ஜூனியர்) ஜார்ஜ் புஷ் - கடவுள் தான் இந்தப் போரை நடத்தும்படி தனக்குக் கட்டளையிட்டார் என்று புளுகவில்லையா? கடவுள், மதத்தினால் மனிதகுலம் பெற்ற நன்மைகள் இவை!

மதங்களின் அடிப்படைவாதிகள் (Fundamentalists) என்ற வெறியர்கள் தலிபான் போன்றவர்கள் - மற்ற பிரிவினர், கிறித் துவ, ஹிந்துமத சாமியார், சாமியாரிணிகளும் எவ்வளவு வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்!

பாபர் மசூதி இடிப்பும், அதன் எதிர்விளைவுகள் எவ்வளவு கொலை, கொள்ளைகள், உயிர்ச்சேதங்கள், அமைதியற்ற கொடுமைகளை இன்றளவும் உருவாக்கிக் கொண்டுள்ளன!
இந்து மதம் சகிப்புத் தன்மையுடைய மதமாம்! நேற்று முன்தினம் வந்த நீதிமன்ற வழக்கு என்ன? அதே மதத்தின் ஒரு பிரிவினர் ஊர்வலம் போனால், வைணவப் பிரிவின் மற்றொரு கடவுள் சிலையை திரை போட்டு மூடி, கதவை சாத்திய கேலிக் கூத்தைப் பார்க்கவில்லையா? அடிதடி நடக்கவில்லையா? வழக்கு மன்றத்தில் நிலுவையில் இப்பிரச்சினை இருக்கிறதே! இதுதான் சகிப்புத்தன்மையின் அடையாளமா? வெட்கமாக இல்லையா?

உண்ணுதலில், உடுத்துவதில், எண்ணுதலில் எல்லாம் அன்றாட வாழ்க்கையில்கூட மதம் புகுந்து மனிதர்களி டையே வேற்றுமையைத்தானே உருவாக்கியுள்ளது!

யானைக்குப் பிடிக்கும் மதத்தைவிட ஆபத்தானது!

யானைக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேட்டைவிட, மக்களுக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேடுகளை, கலவரங்களை நாடு அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது!

எனவே, மதமற்ற மக்களாக வாழுங்கள், மதம் பிடிக்காத மனிதநேயம் உள்ளவர்களாக மாறுங்கள் தோழர்களே, தோழியர்களே!

கி.வீரமணி    
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
24.9.2014

-விடுதலை

திங்கள், 30 ஜனவரி, 2017

மௌலான முகம்மதலி




மௌலான முகம்மதலி அவர்கள் லண்டனில் காலமாய் விட்டதைக் கேட்டு வருந்தாதார் யாருமே இருக்க மாட்டார்கள்.  அவர் ஒரு உண்மையான வீரர்.  தனக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாய் வெளியில் சொல்லு பவர்களில் அவரும் ஒருவர், ஏழை மக்களை ஏமாற்றி பணக்காரர்களும், படித்தவர்களும் அனுபவிக்கும் போக்கிய மாகிய சுயராஜ்யம் அவருக்கு எப்போதுமே பிடிக்காது.
தேசியப் பிரபலத்துக்காக தனது சமூக நலனை விட்டுக்கொடுக்கும் கொலைபாதகத்தனம் அவரிடம் கிடையவேகிடையாது.  தான் சாகப்போவது உறுதி யென்று தெரிந்தே சீமைக்குப் போய் தனது கட்சித் தொண்டை ஆற்றிவிட்டு சாகத் துணிந்தவர். அவர் சீமைக்குப் போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் செத்திருக்க மாட்டார்.
அவர் ஈரோட்டிற்கு வந்திருந்த போது சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு நன்றாய் ஞாபகமிருக்கின்றது அதாவது,
நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் போவதைச் சிலர் ஆச்சரியமாய் கருதுகிறார்கள்.  ஆனால் நானோ, நேற்று இருந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே! என்பதை ஒரு ஆச்சரியமாய்க் கருதுகிறேன். என்று சொன்னார்.
சாவது அதுவும் எந்த நிமிஷத்திலும் சாவது தான் கிரமம் என்றும் உண்மையென்றும் முடிவு செய்து கொண்டு சாகாமல் இருக்கும் ஒவ்வொரு வினாடியையும் லாபமாய் கருதிக்கொண்டு சாவதற்கு வருத்தப்படாமலும், கவலைப் படாமலும் இருக்கவேண்டும் என்கின்ற இயற்கையைக் கண்டுபிடித்து கவலையற்றிருந்தவர் அவரேயாவர்.  வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் மிக்க பிடிவாதமும் உறுதியும் கொண்டவர்.
அன்றியும் முதலில் நான் முஸ்லீம், பிறகுதான் நான் இந்தியன் என்று அடிக்கடி சொல்லுபவர்.  தன்னைப்பற்றி தனது எதிரிகள் எவ்வளவோ பழிகளைக்கட்டிவிட்டும் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டுமே என்கின்ற லட்சியம் கூட இல்லாமல் மற்றவர்கள் என்ன நினைப் பார்கள் என்று கூட லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி நடக்கும் வீரகுணமுடையவர்.  இவ்வருங் குணங்கள் கொண்ட ஒரு கலங்கா வீரர் மாண்டது உலக இயற்கையே யாயினும் வருந்தாமல் இருக்க முடியாது.
குடிஅரசு -  துணைத்தலையங்கம் - 11.01.1931
விடுதலை.27.9.14

வெள்ளி, 27 ஜனவரி, 2017

ரசல்




பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், 3ஆவது "ஏர்ல்" ரசல் (Bertrand Arthur William Russell, 3rd Earl Russell,1872-1970) ஒரு பிரித்தானிய மெய் யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்க வாதி), சமூக சீர்திருத்த வாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் பெரும்பாலும் இங்கி லாந்தில் தன் வாழ்க் கையைக் கழித்தாலும், வேல்சில் மறைந்தார்.

ரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப் பாளர், தடையிலா வணி கத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் தள்ளப் பட்டார். இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தவர். அணுகுண்டு கைவிடுதலை ஆதரித் தவர், அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தவர்.

ரசலுக்கு, "அவருடைய பலதரப்பட்ட, முக்கியமான எழுத்துகளில் மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காக வும்" 1950 இல், இலக்கியத் திற்கான நோபல் பரிசு கிடைத்தது".

ரசலின் மதம் பற்றிய கருத்துகள் `நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை` `மதம், இத்தியாதி ,பற்றிய இதர கட்டுரைகள்` என்ற இரு நூல்களில் காணப் படும். நான் ஏன் கிருஸ் துவன் இல்லை என்கிற தலைப்பில் 1927ல் மார்ச் மாதம் ஆறாம் நாளில் பாட்டர்சீ நகர மாளி கையில் தேசீய மதசார்பற்ற சங்கத்தின் தெற்கு லண் டன் கிளையின்சார்பில் உரை ஆற்றினர், ஓராண்டு கழித்து அது துண்டு வெளியீடாக வந்தது. அதில் கடவுள் நம்பிக்கை யின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையி யல் பற்றியும் பேசுகிறார்.

(தமிழில் மொழிபெயர்த்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி யிட்டது) நான் மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பி னாலும், கடவுள் உண்டு என நம்பினேன் , ஏனெனில் முதல் காரணி வாதம் கிழிக்க முடியாத தாக தோன்றியது.

18ஆம் வயதில், கேம்ப்ரிட்ஜ் செல்லும் முன்பு, மில்லின் சுயசரிதையை படித்தேன், அதில் அவர் தந்தை `என்னை செய்தவர் யார்` என்பதற்கு பதில் இல்லை, ஏனெனில் அது `கடவுளை யார் செய்தனர்` என்ற கேள்விக்கு அழைத்துச் செல்லும் என சொல்வதாக படித்தேன். அதிலிருந்து முதல் காரணி வாதத்தை கைவிட்டு, நாத்திகனா னேன்.

(பெர்ட்ரண்டு ரசல் - சுயசரிதை - ப 36) (இன்று ரசல் பிறப்பு -1872)

- மயிலாடன்
-விடுதலை,18.5.14

வியாழன், 26 ஜனவரி, 2017

நேருவின் பஜனை?

நேருவைப் பொறுத்தவரையில் அவர் முழுக்க முழுக்க ஒரு பகுத்தறிவு வாதியாகவே கடைசிவரை வாழ்ந்து மறைந்தார். சந்தர்ப்பங்கள் நேரும் போதெல்லாம், தான் ஒரு கடவுள் மறுப்பாளர் - மதவெறுப்பாளர் என்பதை முத்தி ரைப்படுத்தியே காட்டி வந்தார். தான் எழுதி வைத்த உயிலில் கூட அதை உறுதிப்படுத்தி இருந்தார்.
ஆனால் நேரு இறந்த பிறகு என்ன நடந்தது? அவர் சாவுமாட்டில் பஜகோவிந்தங்கள் என்ன - வேதப் பாரா யணங்கள் என்ன - கொஞ்ச நஞ்சமல்ல.
ஆச்சாரியார் அவர்களோ நேருவைவிட ஒரு பக்தி மானைக் காண்பதரிது என்று எழுதினார்.
அகில இந்திய வானொலியோ ‘நேரு தினமும் பஜனை செய்வார் என்றும், தனக்கு மனநிம்மதி இல்லாத போதெல்லாம் பஜனையில் ஈடுபடுவார்' என்றும் ஒலி பரப்புச் செய்தது.
இதை வானொலியில் கேட்ட ‘பிளிட்ஸ்’ ஏடு தனது நிருபரை அனுப்பி, நேருவின் பேரர்களான ராஜிவ், சஞ்சய் ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, அவர்கள் அதை வன்மையாக மறுத்து இருக்கிறார்கள்.
‘‘எங்கள் தாத்தாவுக்கு கடவுள், மதம் என்றால் அறவே பிடிக்காது என்று பதில் கூறி இருக்கிறார்கள்.’’
தங்கள் முகத்தை இப்போது எங்கே கொண்டு போய் வைக்கப்போகிறார்கள் இந்தப் புனைசுருட்டுப் பூசுரர்கள்?
கேவலம் இப்படியும் ஒரு பிழைப்பு நடத்திட வேண்டுமா இந்தக் கேடுகெட்ட மதவாதிகள்?

கடவுள் காப்பாற்றமாட்டார்!
சோமநாதபுரத்தில் இருந்த மிகப்பெரிய கோயிலில் பல நூற்றாண்டுகளாகப் பக்தர் களால் அளிக்கப்பட்ட செல்வம் குவிந்து கிடந்தது. கஜினி முகம்மது அங்குச் சென்ற காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டார் களாம்.
ஏதாவது அற்புதம் நிகழும், தாங்கள் வழிபடும் தெய்வம் தங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் பக்தர்களின் கற்பனையாலன்றி மக்கள் உலகில் அற்புதம் நிகழ்வது அபூர்வமாகத் தானே இருக்கிறது. ஆகவே அற்புதம் ஒன்றும் நிகழவில்லை. முகம்மது கோயிலை இடித்துப் பாழாக்கினான். பொருளைச் சூறையாடினான். நிகழாத அற்புதம் நிகழும் என்று நம்பியிருந்த 50,000 பேர் அவனால் கொல்லப் பட்டனர்.
நேரு எழுதிய
உலக வரலாறு


நேருபற்றி... 

இந்துக்கள் தங்களுடைய மதமே சிறந்தது எனக் கருது கிறார்கள். முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் தங்கள் தங்கள் தர்மமே மேலானது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் நாம் எந்த மதத்தைத் தழுவுவது என்று அக்பர் ஒருமுறை கேட்டதாக கிறிஸ்துவப் பாதிரிகள் சொல்லுகிறார்கள். அக் பருடைய கேள்வி நியாயமானது. ஆனால் அது கிறிஸ்தவ பாதிரிகளுக்கு பிடிக்கவில்லை. தங்கள் குறிப்பேட்டில்,
“எல்லா நாத்திகர்களுக்குரிய பொதுவான குற்றம் அக்பரிடத்தும் காணப்படுகிறது நாத்திகர் தங்கள் பகுத்தறிவை மதநம்பிக்கைகளுக்கு கீழ்ப்படுத்த மறுக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள். ஒரு நாத்திகனுக்குரிய லட்சணம் இதுவாயின் இத்தகைய நாத்திகர்களின் தொகை பெருகுவதால் நாட்டுக்கு நன்மையே தவிர வேறில்லை.
- ஜவகர்லால் நேரு (உலக சரித்திரம் - பக்கம் 157)
காந்தியார் புகுத்திய குழப்பம்!
ஒத்துழையாமை இயக்கத்தில் காந்தியார் மதத்தைப் புகுத்தினார். ஆனால் எனது தந்தை, தேச பந்துதாஸ், லாலாஜி ஆகியோர் அரசியல் பிரச்சினைகளை மதச் சார்பற்ற முறை யில் தான் அணுக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் பொது வாழ்வில் மதத்தைப் புகுத்தியதே இல்லை.
நமது அரசியலில் இந்த மதம் புகுந்து வளர்வது கண்டு எனக்குக் கவலை ஏற்பட்டது. அரசியலில் மதம் புகுவது எனக்குப் பிடிக்கவே இல்லை. மவுல்விகளும், மவுலானாக் களும், சுவாமிகளும் மேடைப் பேச்சில் பரப்பிய கருத்துகள் கெடுதியை உண்டாக்கக் கூடியவை. அவர்கள் நாட்டின் சரித்திரம். பொருளாதாரம், சமூக அமைப்பு பற்றிய உண்மை களைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பி தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.
- ஜவகர்லால் நேரு (உலக சரித்திரம் - பக்கம் 139)

-விடுதலை,19.11.16

சனி, 7 ஜனவரி, 2017

ஆந்திராவில் பெரியார் கொள்கை முழக்கம்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதி புத்தர் சிலை வளாகத்தை
‘பெரியார் உலகம்’ பணிக் குழுவினர் பார்வை
ஆந்திராவில் பெரியார் கொள்கை முழக்கம்
புத்தர் பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அமராவதியில் ஆந்திர மாநில தலைநகர் உருவாகி வருகிறது. அதற்கு முன்பே பிரம்மாண்டமான 130 அடி உயரமுள்ள புத்தர் சிலை கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைக்கப் பட்டு அந்த வளாகம் புத்தர் பற்றிய செய்திகளை விளக்கும் கூடமாக விளங்கி வருகிறது.
திருச்சி - சிறுகனூரில் அமைக்கப்பட வுள்ள ‘பெரியார் உலகம்’ பற்றிய அமைப்புக்காக உதவிடும் குறிப்புகள் மற்றும் அவை தொடர் பான பணிகள் பற்றி அறிந்து ஆய்ந்திட திரா விடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் தலைமையில், குழுவினர் விஜய வாடா - அமராவதிக்கு 4.1.2017 அன்று சென்றிருந்தனர். குழுவில் பொறியாளர் மற்றும் கட்டட கலை நிபுணர் முனைவர் சுந்தரராசுலு அங்கம் வகித்தார்.
புத்தர் சிலை மற்றும் வளாகத்
தினை பார்வையிட்டு அவை பற்றிய
செய்திகளை,  சிலை அமைப்பதற்கு அங்கிருந்த ஆய் வாளர்கள் எடுத்திட்ட முயற்சிகள் பற்றியும் அறிந்து வந்தனர்.
புத்தர் சிலை அமைப்பின் பொறுப் பாளராக, தனிப்பட்ட முயற்சி மேற் கொண்ட ஆந்திர மாநில சுற்றுலாத் துறையின் துணை இயக்குநர் மல்லிகார்ஜூன் அவர்கள், பொதுச் செயலாளர் மற்றும் குழுவினருக்கு சிலை அமைப்பு தொடக்கம் முதல் நிறைவு வரை  அவரால் எடுத்திட்ட முயற்சிகள் மற்றும் விளைவுகள் பற்றி எடுத்துரைத்தார்.
‘பெரியார் உலகம்’ அமைத்திடுவதில் தமக்கும் ஆர்வம் உள்ளதைத் தெரிவித்த அவர் ‘பெரியார் உலகம்’ நிறுவிடும் பணியில் தொழில் நுட்ப அடிப்படையில் ஆலோசனை வழங்கிட அணியமாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் உறுதியளித்தார்.
அமராவதி சென்ற ‘பெரியார் உலகம்’ நிறுவிடும் ஆயத்தக் குழு வினை, சமூகநீதி அமைப்பின் தேசியத் தலைவர் சங்கர்ராவ் மற்றும் வழக் குரைஞர் ராமகோடீஸ்வர ராவ் வர வேற்று ஆவன உதவி அளித்தனர்.
மேலும் இந்திய நாத்திக சங்கத்தின் துணை அமைப்பான மாணவர் அறி வியல் மன்றத்தின் தலைவர் நரேஷ் பைரி மற்றும் அவரது அமைப்பினர் விஜயவாடாவில் குழுவினரை வர வேற்று பணிமுடித்துக் கிளம்பும் வரை உதவிகரமாக உடனிருந்தனர்.
அமராவதியில் அமையப்பெற்ற புத்தர் சிலை அமைப்பில் கிடைத்த பட்டறிவினை அறிந்து ‘பெரியார் உல கம்’ பல மடங்கு சிறப்புடன் அமைத்திடும் எண்ணம் மேலோங்கிடும் வகையில் அரிய ஆலோசனைகள் மற்றும் நேரடி செய்திகளுடன் குழு வினர் சென்னை திரும்பினர்.
இந்த பயணத்தில் கிடைத்த ஒரு மணிநேரத்தில் விஜயவாடாவில் அமைந்துள்ள அரசு சமூகநலத்துறை பெண்கள் இல்லப் பள்ளிகளில் சுமார் 500 மாணவியர்களிடையே உரையாடி பெரியார் பற்றி கூறி அவர்களுக்கு மன எழுச்சியை ஊட்டி வரும் பெரியார் வினா - விடைப் போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து விட்டு வந்தார்கள்.
-விடுதலை,7.1.17