ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

நாத்திக நன்னெறியின் அழைப்பு!

"மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கிறது" என்றார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் உலகத் தலைவர் தந்தை பெரியார்.
பகுத்தறிவின் சீலத்திற்கு இதைவிட சிறந்த வரைபடத்தை எங்கே காண்போம் - எங்கே காண்போம்?
இன்னொன்றும் முக்கியம், மிக முக்கியம்!
"மக்களை எந்தக் காரியத்திற்கு வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால், அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும், அது மன்னிக்க முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வதென்னவென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாக ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள்கிறேன்" (விடுதலை, 4.4.1968) - என்றும் தத்துவச் சுரங்கம் தந்தை பெரியார் தம் சிந்தனைப் பெட்டகத்திலிருந்து அள்ளித் தந்துள்ளார்.
இது ஏதோ தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட சூரணங்கள் என்று நினைக்கத் தேவையில்லை. உலக மாந்தர்தம் சீர்கெட்ட சிந்தனையிருட்டை விரட்டி, புத்துலகப் பூங்காவுக்கு அழைத்து வரும் தூண்டா விளக்காகும்.
ஒரு காசுக்குப் பெறாத கடவுளைக் கட்டிக்கொண்டு அழவில்லையா? மதியை மயக்கும் அபினாம் மதத்தின் அழுக்குச் சேற்றில் ஆனந்த குளியல் போடவில்லையா?
மதக் குருமார்களின் சுரண்டலுக்கும், சூழ்ச்சிக்கும் தன்னை விற்கும் தக்கை மனிதர்களாகத் தவழ்வதைக் காண முடியவில்லையா?
சாத்திர சம்பிரதாய மூடச் சாக்கடையில் புழுக்களாகக் குதித்தாடவில்லையா?
யதார்த்தமான இன்ப நடப்பு வாழ்வை - இல்லாத வாழ்வாக - ஏக்கம் நிறைந்த வாழ்வாக - நினைத்து, இடி வீழ்ந்த குட்டிச் சுவராக தாவாயில் கைகளை வைத்துக் கைதியாக மனிதன் கிடக்கவில்லையா?
இல்லாத சொர்க்க இன்பத்தை எண்ணி எண்ணி இருக்கிற வாழ்வைத் தொலைத்துக்கொண்டிருக்கும் தொல்லை விலங்குகளைத் தம் மூளையில் மாட்டிக்கொண்டு மூலையில் குப்பைபோல ஒதுங்கி, ஒடுங்கிக் கிடக்கவில்லையா?
பஞ்சமா பாதகங்களையும் பட்டியல் போட்டு மனிதனைச் செய்யவிட்டு, பாவ மன்னிப்புப் பட்டிகளையும், பிராயச்சித்தம் ஏற்பாடுகளையும், கழுவாய் தேடும் கணவாய்களையும் திறந்து வைத்து, மக்களின் ஒழுக்கத்தைக் களவாடி, மனிதன் சட்டைப் பைக்குள்ளிருக்கும் பணத்தையும், காலத்தையும் பட்டப் பகலில் திருடும் நிலை நாட்டில் நிகழவில்லையா?
இந்தக் கசமாலக் குட்டைகளிலிருந்து மக்களை மீட்டெடுப்பது எப்படி? கற்பனை இருட்டிலிருந்து வெளிச்சமான நிஜ உலகிற்குக் கூப்பிடுவது எப்படி? அதற்கு என்ன மார்க்கம்?
நன்னெறி பகுத்தறிவு - பகுத்தறிவு! நன்னெறிப் பாதை - நாத்திக நன்னெறியே!
மனிதநேயத்தின் அடிப்படையில் மக்களைக் கூவிக் கூவி அழைக்கும் கொள்கை இது.
நம்பு - நம்பினால் மோட்சம்! நம்பாவிட்டால் நரகம் என்று அச்சுறுத்தும் - பேராசையைத் தூண்டும் ஆபாசப் புத்தி இங்கு இல்லை.
இது ஒரு நேர் வழி! இன்ப வாழ்வைத் தரும் புது வழி!!
அறிவாளிகள் நாட்டில் அதிகம் இருக்க முடியாது. படிப்பாளிகள் வேறு, அறிவாளிகள் வேறு! மூளை உள்ளவர்கள் வேறு - அந்த மூளையைச் சதா செயல்பட வைக்கும் சாதனை மனிதர்கள் வேறு!
இவர்கள் எண்ணிக்கையில் எத்தனைப் பேர் என்பது முக்கியமல்ல! அணுகூட சிறியதுதான், ஆற்றல் மிக்கது! மடிக்கணிப் பொறி கையடக்கத்திற்குள் வந்து மாபெரும் உலகப் பரப்பைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தவில்லையா?
ஆம், அந்தச் சிறுபான்மை எண்ணிக்கை நாத்திகர்கள்தான் இந்த மூட உலகப் பந்தைப் புரட்டிப் போடவேண்டியவர்கள்.
மாற்றம் நிகழாமல் இல்லை. இங்கிலாந்து நாட்டில் அரசுப் பேருந்துகளில் நாத்திகப் பிரச்சார விளம்பரப் பலகைகளைக் காண முடிகிறது.
உருத்திராட்சக் கொட்டை மகிமை என்று லண்டன் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட விளம்பரம் தடைபடுத்தப்பட்டதே!
(தமிழ்நாட்டின் ஊடகங்களை நினைத்தால் வெட்கம்தான் - அதுவும் மாறும் - அல்லது மாற்றுவோம்!).
உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேதானிருக்கிறது - இதோ ஒரு பட்டியல் (விழுக்காட்டில்):
1. சுவீடன் -    46.85
2. வியட்நாடம்    -    81
3. டென்மார்க்    -    43.80
4. நார்வே -    31.72
5. ஜப்பான்    -    64.65
6. செக் குடியரசு    -    54.61
7. பின்லாந்து    -    26.80
8. பிரான்சு    -    43.54
9. தென்கொரியா -    30.52
10. எஸ்டோனியா    -    94
(டைம்ஸ் ஆஃப் இந்தியா, 5.6.2010)
இப்பொழுது இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிலும்கூட கடவுள் மறுப்புக் கொள்கை உள்ள இளைஞர்கள் திரள ஆரம்பித்துவிட்டனர்.
(தினமணிக்கதிர், 19.9.2010)
நாத்திகம் பரவப் பரவத்தான் நாட்டு மக்கள் மத்தியிலும் சகோதரத்துவமும், சமத்துவமும் கைகோத்து நல்லாட்சி புரியும்.

திருச்சியில் ஜனவரி 7 முதல் 9 முடிய திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் - விஜயவாடா கோரா நாத்திக மய்யமும் இணைந்து நடத்தவிருக்கும் உலக நாத்திகர் மாநாடு - இந்த வகையிலே புதிய திருப்பத்தை அளிக்கப் போகிறது.
முக்கியமாக புதிய தலைமுறையினரே, முனைந்து வாருங்கள்!
இளைஞர்களே - உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முற்போக்குக் கொள்கை மாநாடு உங்களின் கைகளைக் குலுக்கிடக் கூப்பிடுகிறது.
"பெரியாரே ஒளி!" என்றார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். இதில் எண்ணற்ற சிந்தனை விதைகள் முளைத்து முறுவலிக்கின்றன!
ஒளியில்லா வாழ்வும் ஒரு வாழ்வா? பாழ் செய்யும் மதமும் ஒரு மார்க்கமா?
மறுபரிசீலனை செய்திட அழைக்கிறது திருச்சிராப்பள்ளி! மறுக்காமல் வாருங்கள்,
மாற்றத்தைக் காணுங்கள்!
எங்களுக்காக அல்ல,
உங்களுக்காக -
உங்கள் சந்ததிகளின்
மறுமலர்ச்சிக்காக!
நாத்திகப் பேரறிஞர்கள் - நன்மார்க்கம் காட்ட கூடுகிறார்கள் - கூடுகிறார்கள் - நீங்கள் கூட வேண்டாமா?
-மின்சாரம் -
-விடுதலை,31.12.10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக