சனி, 5 செப்டம்பர், 2015

அறிவுலக மேதை இங்கர்சால்


இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 11ஆம் நாள் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தில் ட்ரெஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தை ரெவரெட்ஜான் இங்கர்சால் ஒரு பாதிரியார். அவருடைய தாய் மேரி லிவிங்ஸ்டோன், இங்கர்சால் இரண்டு வயது குழந்தையாய் இருக்கும்போதே இறந்துவிட்டார். இவரது தந்தை வேதநூலில் உள்ளதை அப்படியே நம்பக் கூடியவர்.
இங்கர்சால் தந்தையின் அறிவுரைப்படி வேதநூலை முழுமையாகப் படித்தார். ஆனால், சிந்தனை செய்துகொண்டே படித்தார். தனக்குள் கேள்விகளை எழுப்பினார். அதனால் அவருள் பல அய்யங்கள் எழுந்தன. படிப்பு போலவே விளையாட்டிலும், சிரித்து மகிழ்வதிலும் ஆர்வம் உடையவராய் இருந்தார்.
தனது 19ஆம் வயதிலே சிறந்த பாடல்களை எழுதினார். 20ஆம் வயதில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசக் கல்வியளித்தார். சட்டம் படித்து 1854இல் வழக்கறிஞரானார். அடிமைத்தனத்திற்கு எதிராய் முழங்கினார்.
1862இல் பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட ஈவா பார்க்கரை மணந்தார். 1863 முதல் வழக்கறிஞர் தொழிலைச் சிறப்புடன் செய்தார். தமது 34ஆம் வயதில் இல்லினாய்ஸ் பகுதியின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார்.
1877இல் மனிதன், மங்கை, குழந்தை, அவர்தம் சுதந்திரம் என்னும் தலைப்பில் ஒர் அரிய சொற்பொழிவாற்றினார். 1897இல் நான் ஏன் நம்பிக்கையற்றவன் என்னும் சிறந்த சொற்பொழிவாற்றினார். மனிதரை சீர்திருத்தும் விதம் என்பது அவரது மற்றொரு சிறந்த உரை.
மனிதன் கடவுளை நேசிப்பதைவிட மனைவியை நேசிப்பதே சிறந்தது என்றார்.
தான் ஈட்டிய செல்வத்தின ஒரு பகுதியை  பிறருக்குக் கொடுத்து உதவினார்.
21.07.1899இல் உயிர் நீத்தார். எச்சடங்கும் இன்றி இறுதியடக்கம் செய்யப்பட்டது. அவரது நூலிலிருந்து சில பக்கங்கள் மட்டும் படிக்கப்பட்டன.
1911ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடைய உருவச் சிலை பியோரியா என்ற ஊரில் திறக்கப்பட்டது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இங்கர்சாலைப்பற்றி பரப்புரைச் செய்தவர் தந்தை பெரியார். உலகளவில் இம்முயற்சியை எவரும் செய்தாரில்லை.
1.    மதம் என்றால் என்ன?
2.    கடவுள் கவலையற்றவன் நான் ஏன்?
3.    வால்டையரின் வாழ்க்கைச் சரித்திரம்.
4.    கடவுள்கள்
5.    பேய், பூதம், பிசாசு அல்லது ஆவி
6.    மனிதன் மங்கை, குழந்தை அவர்தம் சுதந்திரம்.
7.    எவ்வழி (Which Way?)
ஆகியவை இவரது சிந்தனைப் பேழைகளாகும்.
தற்போது இங்கர்சால் களஞ்சியம் என்ற பெயரில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இங்கர்சால் பற்றிய ஓர் ஆவணத் தொகுப்பை வெளியிடவுள்ளார் என்பது உலகப் பகுத்தறிவாளர்களுக்கு உவப்பளிக்கும் செய்தியாகும். வாழ்க இங்கர்சால் பெருமை; வளர்க அவரின் கொள்கை வாரிசுகள்.
-உண்மை,16-31.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக