செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

டில்லியில் சமூகநீதிக்கான கி.வீரமணி விருது: பணியின்போதும், ஓய்வுக்குப் பிறகும் சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்களுக்கு வழங்கப்பட்டது



புதுடில்லி, பிப்.6 புதுடில்லியில் அரசமைப்புச் சட்ட மன்றத்தில் (Constitution Club) உள்ள துணை சபாநாயகர் (Deputy Speaker) அரங்கில் 2018 ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது' வழங்கும் விழா நடைபெற்றது. அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மய்யம் ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதிக்காகப் பாடுபட்ட சான்றோர், போராளிகள், தலைவர்களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி வருகிறது.

1996 ஆம் ஆண்டு விருது வழங்குவது தொடங்கப்பட்டு, இதுவரை 2018 ஆம் ஆண்டுக்கான விருதுவரை மொத்தம் 10 பெருமக்களுக்கு சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு, மொழி, இனம் பாகுபாடு எதுவும் இன்றி, இந்தியாவில், தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சார்ந்த தலைவர்களுக்கும், சிங்கப்பூர், மியான்மா, குவைத், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சமூகநீதிக்குப் பங்காற்றிய பெருமக்களுக்கும் இதுவரை விருது வழங்கப் பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதுடில்லியில் 5.2.2019 அன்று பிற்பகல் நடைபெற்ற சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, இந்த விருதினை 2009 ஆம் ஆண்டு வழங்கப் பெற்றவரும், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவரும், கருநாடக மாநில அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்ம குமார் தலைமை வகித்தார்.

விருதினை நிறுவிய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் சமூகநீதிக்கான வீரமணி விருது நிறுவப்பட்ட வரலாறு, விருது வழங்கப் படுவதன் நோக்கம்பற்றி எடுத்துக் கூறி, 2018 ஆம் ஆண்டுக்கான விருதினை பி.எஸ்.கிருஷ்ணனுக்கு வழங்கப்படுவதன் சிறப்புப்பற்றி உரையாற்றினார்.

விருது வழங்கல்




ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.  அதிகாரி பூபீந்தர்சிங் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.


2018 ஆம் ஆண்டு சமூகநீதிக்கான கி.வீரமணி விரு தினை' (K.Veeramani Award for Social Justice) பணி நிறைவு பெற்ற, மத்திய அரசின் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குப் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் விருதுக் குழுவின் சார்பாக டாக்டர் சோம.இளங்கோவன் வழங்கினார்.

விருது மடலினையும், விருதுத் தொகையான ரூ.1 லட்சத்திற்கான வங்கி வரைவோலையும் வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டபொழுது பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் இருவருக்கும் சேர்த்து சிறப்பு செய்யப்பட்டது. அவர்களது மகளும் உடன் இருந்தார். விருது வழங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

விருது வழங்கும் நிகழ்வின் சிறப்புரையினை மத்திய அரசின் மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் பூபீந்தர்சிங் வழங்கினார்.

தமிழர் தலைவரின் பாராட்டுரை


நிறைவாக விருது பெற்ற பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சமூகநீதிக்காக ஆற்றிய பணிபற்றி எடுத்துக்கூறி, பாராட்டித் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

அவர் தமது பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:

சமூகநீதிக்கான விருதினை பெரியார் பன்னாட்டு மய்யம், என்னுடைய பெயரில் நிறுவிய நேரத்தில், நான் எனது பெயரில் விருது அமையப் பெறுவது வேண்டாம்; சமூகநீதிக்காக களம் அமைத்து 95 ஆண்டுகாலம் போரா டிய தந்தை பெரியாரது பெயரில்தான் விருது அமையப் பெறவேண்டும் என அழுத்தமாக எடுத்துக் கூறினேன்.

தந்தை பெரியார் போற்றி காத்து வந்த சமூகநீதிச் சுடரை, அவர்தம் கொள்கையினை, அவரது காலத்திற்குப் பின் யார் எடுத்துச் செல்லுகிறார்கள் என்பதை உலகினர் அறிந்து கொள்வதன் பேரில் ஓர் அடையாளமாக எனது பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான டாக்டர் சோம.இளங்கோவன் மற்றும் டாக்டர் இலக்குவன்தமிழ் ஆகியோர் கூறினர். விருது பெயரில் தந்தை பெரியாரும், அவர் ஏற்றிப் பாதுகாத்திட்ட சமூகநீதிக் கொள்கையும் உள்ளடக்கம் என விளக்கமளித்தனர்.



சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள்,  பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் (டில்லி, 5.2.2019).


1970 களில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணியினை மண்டல் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கியது. நாடெங்கும் பயணம் செய்து குழுவின் தலைவர் மண்டலும், குழுவின் உறுப்பினர்களும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்தறிந்து, உண்மை நிலைபற்றி ஆய்வு செய்து 1980 ஆம் ஆண்டில் அறிக்கையை அளித்தனர். அரசிடம் அளிக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையினைப் பிரசுரிக்க, பலவிதமான தடைகளை அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகளில் உயர்ஜாதியினர் ஏற்படுத்தினர். பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது.  1990 ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபொழுதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த சமயம் அதிகார நிலையில்  அரசின் செயலாளராக இருந்து நிலவி வந்த நடைமுறைக்கான தடைகளைக் களைந்து பரிந்துரைக்கு ஆதரவாக இருந்து சமூகநீதிக் கொள்கைபற்றிய புரிதலுடன், அவசியம் கருதி உறுதுணையாக இருந்தார்- இந்த நிகழ்வின் விருதாளர்  பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். பி.எஸ்.கிருஷ் ணன் அவர்களின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக  இருந்தார் - பணி நிறைவு பெற்ற நிலையிலும் சமூகநீதிப் பணிகளில் அக்கறைகாட்டிப் பாடுபட்டு வருபவர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினர் மேம்பாட்டுக்காக இன்றளவும் பாடுபட்டு வருகிறார். சமூகநீதிக்கான அறைகூவல்கள் எழும்பொழுதெல்லாம் உரிய வகையில் விளக்கமளித்து, தனது அதிகார வர்க்கப் பணியில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள் வாயிலாக உண்மை நிலையினை உணர்த்தி வருகிறார். தற்பொழுது மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதியினரில் ஏழை(?)களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடுபற்றிய கருத்தினையும் கூறி, இட ஒதுக்கீட்டுக் கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கான கோட்பாடு; உயர்ஜாதியினருக்கானது அல்ல என்று குரல் கொடுத்து வருகிறார். இப்படி ஒடுக்கப்பட்ட மக் களுக்காகப் பாடுபட்டுவரும் பி.எஸ்.கிருஷ்ணன் முற்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். அப்படிப்பட்டவரின் ஓய்வு என்பது தனது அரசுப் பணிக்குத்தான், தான் குரல் கொடுத்துவரும் சமூகநீதிக் கொள்கைக்கு அல்ல என்பதாகும். உடலால் சற்று முதுநிலை அடைந்தாலும், உள்ளத்தால் இளைஞரைப்போல சமூகநீதிக்காகப் பணியாற்றிவரும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போற்றிப் பாராட்டுகிறோம். அவரது பணி தொடர்க என வாழ்த்துகிறோம்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்படும் விழா விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங் கோவன், து.ராஜா, அரிபிரசாத் மற்றும் சமூகநீதிக்கான வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாக அறக்கட்டளையாளர் - உயர்நீதிமன்ற முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ், வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், மத்திய அரசின் மேனாள் உயரதிகாரிகள், டில்லி மற்றும் ஜவகர்லால் நேரு பல் கலைக் கழக மாணவர்கள், பேராசிரியப் பெருமக்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த திராவிடர் கழக வழக்குரைஞர்கள், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் எனப் பலதரப்பட்டோரும் வருகை தந்திருந்தனர். வடமாநிலத்தில், டில்லி தலை நகரில் சமூகநீதிபற்றிய ஒரு விழிப்புணர்வு, இன்றைய பொருத்தப்பாடுபற்றிய விளக்கும் நிகழ்ச்சியாக சமூகநீதிக் கான கி.வீரமணி விருது வழங்கிடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சமூகநீதி விரு தாளரும், செயல்பாட்டாளருமான கோ.கருணாநிதி நன்றி கூறி நிறைவு செய்தார்.

- விடுதலை நாளேடு, 6.2.19

பொதுத் துறைகளில் பணிபுரிவோர் மத அடையாளங்களை கொண்டிருக்கக்கூடாது

சுவிட்சர்லாந்தில் மதச்சார்பின்மைக்கான சட்டம்  பொதுமக்கள் வாக்கெடுப்பில் 55 சதவிகிதம் ஆதரவு




2012-2016 ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி ஜெனீவாவில் மதமற்றவர்கள் 38 விழுக்காடு, ரோமன் கத்தோலிக்கர்கள் 35 விழுக்காடு, புரோட்டஸ்ட்ன்ட் 10 விழுக்காடு, பிற கிறித்தவ பிரிவு 6 விழுக்காடு, முசுலீம்கள் 6 விழுக்காடு, பிற மதத்தவர்கள் 6 விழுக்காடு உள்ளனர்.


ஜெனீவா, பிப்.12 சுவிட்சர்லாந்து நாட்டில் அரசுத் துறைகளில் நியமிக்கப்படும் அலுவலர்கள், பொதுத் துறைகளில் பணியாற்றுவோர் எவரும் எந்தவித மத அடையாளங்களையும் கொண்டிருக்கக் கூடாது.மதஅடையாளச்சின்னங்கள், மத உடைகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில்மதச்சார்பின்மைக்கானசட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.10.2.2019அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 55 விழுக் காட்டுக்கும் மேல் வாக்குகள் சட்டத்துக்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப்உள்ளிட்டமதஅடையாளங் களைவெளிப்படுத்துகின்றஉடைகளை பள்ளிகளில்  ஆசிரியர்கள் அணிந்திருக்கக் கூடாதுஎன்று ஜெனீவாவில் ஏற்கெனவே தடை போடப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மக்களிடையே நேரடியாக தொடர் பிலுள்ள பொதுத்துறை ஊழியர்கள் அனைவரும் இப்புதிய சட்டத்தின்படி, மத அடையாளச் சின்னங்கள் மற்றும் மத அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய உடைகளை உடுத் தக்கூடாது என்று அச்சட்டத்தில் கூறப்பட் டுள்ளது.

இசுலாமிய மற்றும் கிறித்தவ மத நிறுவனங்கள் இச்சட்டத்துக்கு எதிராக களமிறங்கனாலும்,சுவிட்சர்லாந்து நாட் டின் புகழ்பெற்ற ஜனநாயக முறையில் மக்களே நேரடியாக வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். அந்த வகையிலேயே 55 விழுக்காட்டினர் மதசார்பற்ற சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ள னர்.

சுவிட்சர்லாந்துநாட்டின் அரசமைப் புச்சட்டத்துக்குமாறானதாகவும்,அய் ரோப் பியசமூகத்தில் மனித உரிமை களுக்குஎதிரானதாகவும்  புதிய சட்டம் உள்ளதாக பசுமைக் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர் சபைன் தைகேமவ்னின் கூறுகிறார்.  நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றார். இவர் முசுலீம் பெண்கள் அணிகின்ற முகத்தை மூடுகின்ற உடையை அணிந்தவர்.

பசுமைக்கட்சி, பெண்ணிய அமைப் புகள், முசுலீம் அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் மதச்சார்பற்ற சட்டத்துக்கு எதிராக உள்ளன. பாகுபாடுகளுடன், இசு லாமிய எதிர்ப்புணர்வுடன் புதிய சட்டம் இருப்பதாகவும், குறிப்பாக முகத்தை மூடுகின்ற பெண்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்ப்பாளர்கள் கூறு கின்றனர்.

1907ஆம் ஆண்டிலிருந்து சுவிட்சர் லாந்து நாட்டில் நடைமுறையிலுள்ள அரசமைப்புச் சட்டத்தில் தற்போது திருத்தம்மேற்கொள்ளப்பட்டு,மதச் சார்பற்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்துநாட்டில்நிறைவேற் றப்பட்டுள்ள மதச்சார்பற்ற சட்டம் குறித்து அரசுடன்  மத அமைப்புகள்  விவாதிக்கலாம். பொது இடங்களில் மதத்தை வெளிப்படுத்துவோர் எண் ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான ஒத் துழைப்பதற்கான நடவடிக்கையை மேற் கொள்ளலாம் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.இதன்மூலம்,மதநம் பிக்கையாளர்கள்மற்றும்மதநம்பிக்கை இல்லாதவர்கள் குறித்து அரசமைப்புச்சட்டம் கூறுகின்ற  மதம் குறித்த உரிமைகள், வரையறைகள் குறித்து விளக்கமளிக்க உதவும் என்கின்றனர் மதச்சார்பற்ற சட்டத்தை ஆதரிக்கும் தரப்பினர்.

-  விடுதலை நாளேடு, 12.2.19

புதன், 6 பிப்ரவரி, 2019

டில்லி பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை


"தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஆழ்கடல் போன்றது உயர்வு - தாழ்வினை நீக்கி மானுடத்தை மாண்புறச் செய்வது!''

டில்லி பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை




புதுடில்லி, பிப்.5 டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை ஏற்பாடு செய்த சிறப்புக்  கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்'' எனும் தலைப்பில் ஆழமானதொரு உரையினை ஆற்றினார்.

அன்று (23.11.1946) சேலம்' நகராட்சி கலைக் கல்லூரியில் தத்துவ விளக்கம்' எனும் தலைப்பில் தந்தை பெரியார் ஆழமானதொரு உரையாற்றினார். இன்று (4.2.2019) டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்'' எனும் தலைப்பில் பெரியார்தம் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் ஆசிரியர்  ஆழமானதொரு விளக்க உரையினை வழங்கினார்.

டில்லி பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தத்துவத் துறையின் பேரா சிரியர் பி.கேசவகுமார் தலைமை வகித்தார். முனைவர் ஆயிசா கவுதம் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

டில்லி பல்கலைக் கழக மாணவர்கள், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், சட்டம் பயிலும் மாணவர்கள் மற்றும் பல துறை சார்ந்த பேராசிரியப் பெரு மக்கள் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் தமிழர் தலைவர் உரையினை செவிமடுத்தனர்.

மேலும் கூட்டத்தில்  கருநாடக மாநில மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்மகுமார் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் தமிழர் தலைவரது உரையினைக் கேட்க வருகை தந்திருந்தனர். ஏறக்குறைய 70 நிமிடங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்பற்றி விளக்க உரையாற்றினார். அதற்கடுத்து 20 நிமிடங்கள் வருகை தந்தோரின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் விடையளித்தார்.

தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்ட சில செய்திகள்:



தந்தை பெரியார் தமது தொடக்க நிலைக் கல்வியைக் கூட முடிக்காதவர். சுயசிந்தனையாளர். அந்த சிந்தனைகள் இன்று பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களையும் தாண்டி கற்றறிந்த சான்றோர் மத்தியில் பேசப்பட்டும், ஆய்வு செய்யப்பட்டும் வரும் நிலை இன்று உருவாகி உள்ளது. பெரியாரது குடும்பம் மத நம்பிக்கை, சடங்குகளைக் கடைப்பிடித்து பழுத்த கடவுள் நம்பிக்கையாளர்கள் உள்ள குடும்பம் ஆகும். அத்தகைய குடும்பத்தில் அந்த நம்பிக்கையிலிருந்து விலகி நின்று அதன் பாதிப்பு தனது செயல்களில் இல்லாதபடி இயல்பாகவே தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

மனித சமுதாயம் ஏற்றத் தாழ்வின்றி சமத்துவமாக வாழவேண்டும்; எல்லோருக்கும் எல்லாம்' என்பதாக இருக்கவேண்டும் எனும் எண்ணங்கள் சிறு வயதிலிருந்தே  அவரிடம் தென்படத் தொடங்கியது. பிறப்பின் அடிப் படையில் மனிதர்கள் பாகுபடுத்தப்பட்டு, ஜாதி அடையாளத்துடன் இழிவுபடுத்தப்படுவது பெரியாரது மனத்தில் ஆழமாக பதிந்துவிட்டது. தொடக்கக் கல்வி பயின்ற காலத்தில், தாகத்திற்குத் தண்ணீர் வேண்டி, உயர்ஜாதி குடும்பத்திடமும், தாழ்த்தப்பட்ட ஜாதி குடும் பத்திடமும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவர் பாகுபாட்டுடன் நடத்தப்பட்ட விதம் பின்னாளில் சுயமரி யாதைத் தத்துவத்தை மானுட குலத்திற்கே வழங்கிட வைத்தது. எதையும் ஏன்? எதற்கு? யாரால்?' எனும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்ந்து உண்மை நிலையினை அறிந்து கொள்ளும் உளப்பாங்கினை அவரிடம் உருவாக வைத்தது. 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என எளிமையாக, அழகாக அந்த நேரத்தில் ஓர் ஆழமான தத்துவ வெளிப்பாட்டை மானுட குலத்திற்கு வழங்கிட வைத்தது. சுயமரியாதையும் (மானமும்), பகுத்தறிவும் (அறிவும்) ஒவ்வொரு மனிதருக்கும் உண்மையான அழகை வழங்கிடும் தன்மை வாய்ந்தது.' இதை உணராத நிலையில்தான் மனிதர்களிடம் உயர்வு - தாழ்வு நிலை ஏற்பட்டு, மனிதரை மனிதர் இழிவுபடுத்திடும் நிலை, அடக்குமுறை, அடிமைப்படுத்தி வைக்கும் சுரண்டல் நிலை உருவானது.

இந்த மாபெரும் உலகளாவிய பொருத்தப்பாடு கொண்ட மனிதநேய தத்துவத்தை வெறும் அறிவுசார் கூற்றாக மட்டும் பெரியார் வழங்கிடவில்லை. அதனை மனிதரிடம் உணரச் செய்து அவர்களை மேம்படச் செய்வதற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். அத்தகைய பிரச்சாரம் பரந்துபட்ட அளவில் நடைபெறவேண்டும். தனது காலத்திற்குப் பின்பும் தொடர்ந்திடவேண்டும் எனக் கருதி அதற்காக ஓர் அமைப்பினை உருவாக்கினார். காரணம், பல நூற்றாண்டுகள் மனிதரிடம் நிலவி வரும் உயர்வு - தாழ்வு பெரும்பாலான உழைக்கும் மக்களை அடிமைப்படுத்திடும் நிலை ஒரு மனிதரது வாழ்நாள் காலத்தில் மாறிவிட முடியாது. சமூகத்தில் நிலவிடும் அடக்குமுறையினை பாதுகாத்து வரும் ஆதிக்கவாதிகள் அவ்வளவு எளிதாக மாறுபவர்கள் அல்ல; ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவினைப் பயன்படுத்தும் நிலை உருவாகும்பொழுதுதான் அவர்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்பதால், இயக்கம் சார்ந்த செயல்பாட்டை போராட்டம், பிரச்சாரம் என்ற வழிமுறைகளில் வன்முறைக்கு இடமின்றி அமைத்துக் கொண்டார்.

இந்த நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை' பெறுவதைவிட, முன்னுரிமை பெறவேண்டியது சமூக விடுதலை' எனக் கருதியதால், சமத்துவம், ஒடுக்கப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் என நடைமுறை காணவேண்டும் என்ற நோக்கில்தான் 1919 இல் காங்கிரசு கட்சியில் பெரியார் சேர்ந்தார். தனது எதிர்பார்ப்பு நிறைவேறாது என அவருக்குக் கிடைத்த அனுபவங்களினால் 1925 இல் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.

தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்திட தனியாக அமைப்பினை உருவாக்கினார். சுயமரியாதை இயக்கம் என தொடக்கக் காலத்தில் அழைக்கப்பட்டாலும், தனது பிரச்சார வல்லமையால், விடா முயற்சியால் அந்த அமைப்பு மாபெரும் இயக்கமாக  - சுயமரியாதை இயக்கமாக உருவெடுக்க கடுமையாக உழைத்து பெரியார் சமுதாயப் பணி ஆற்றினார்.

சமூகநீதியை முன்னெடுத்து, பார்ப்பனர் அல்லாத இயக்கமாக உருவான நீதிக்கட்சி அன்றைய சென்னை ராஜதானியில் 1920ஆம் ஆண்டில் ஆட்சியில் அமர்ந்தது. தந்தை பெரியார் காங்கிரசுக் கட்சியில் வலியுறுத்தி, நடைமுறைப்படுத்த முடியாத 'வகுப்புவாரி உரிமை" 1928ஆம் ஆண்டு அரசாணையாக உருவானது. இந்த நிலை ஆட்சியில் உள்ளோருக்கு ஏற்பட்டதற்கு தந்தை பெரியாரின் பிரச்சாரமும் முக்கிய காரணமாக இருந்தது. ஆட்சி, அதிகாரம் இவற்றில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் தந்தை பெரியாரிடம் அறவே இல்லை. ஆட்சியில் உள்ளோருக்கு அழுத்தம் அளித்து, மக்களிடம் தனது கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டி, அதன் மூலம் ஆட்சியில் உள்ளோரை சமூகநீதித் தளத்தில் நெறிப்படுத்துவதை தந்தை பெரியார் தமக்கான அணுகுமுறையாகக் கடைப்பிடித்து வந்தார். இன்றளவும் அவர் ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கம், பின்னாளில் நீதிக்கட்சியையும் சேர்த்துக் கொண்டு, 1944இல் "திராவிடர் கழகமாக" இன்றுள்ள அமைப்பு அடையாளத்துக்கு வந்தது.

முதல் அரசமைப்புத் திருத்தச் சட்டம்




டில்லியில் தமிழர் தலைவர் அவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, ரவிவர்மகுமார், கோ. கருணாநிதி மற்றும் வழக்குரைஞர்கள் சந்தித்தனர். கழகப் பொருளாளர் வீ. குமரேசன் உடனுள்ளார். (4.2.2019)


'நாடு அரசியல் விடுதலை பெற்று கல்வி, வேலை வாய்ப்புகளில் சமத்துவ நிலை வர வேண்டும்' என்ற இயக்கத்தில் நடைமுறையில் இருந்து வந்த "வகுப்புரிமை ஆணை" செல்லாது; அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத் தப்படும் 'பாகுபாடுபடுத்தல் கூடாது' எனும் நெறிக்குப் புறம்பானது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. உடனே, அன்றைய சென்னை மாகாணத்தில் - கேரளா, கருநாடகா, ஒருங்கிணைந்த ஆந்திரா ஆகியவற்றில் சில பகுதிகளை  உள்ளடக்கிய தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்தி, மத்தியில் ஆட்சி புரிந்தவர்களின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தின் மூலம் 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்" என்பது 'இடஒதுக்கீடு' எனும் நிலையில் தொடர்ந்திட முடிந்தது. விடுதலை பெற்ற இந்தியா முழுமைக்கும் 'இடஒதுக்கீடு' நடைமுறையில் வர வழிவகுக்கும் அரசமைப்புச் சட்ட முதல் திருத்த விதிகள் தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் மூலமாகத்தான் ஏற்பட்டது. தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது இயக்கம், ஒடுக்கப்பட்ட வகுப்பினரான பிற்படுத்தப்பட் டோருக்கு 'இடஒதுக்கீடு' நாடு தழுவிய அளவில் மத்திய அரசுப் பணியில் கிடைப்பதற்கு வழி அமைத்தது. மண்டல் குழு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் அதனைத் தூசு தட்டி வி.பி. சிங் பிரதமராக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு முதல் முறையாக நாடு தழுவிய அளவில் மத்திய அரசுத் துறைகளில் கிடைத்திட 'திராவிடர் கழகம்' எடுத்த முயற்சிகள் பெரிதும் காரணமாக அமைந்தது. 'தந்தைபெரியாரின் சமூகநீதிக் கொள்கைகள்' நடைமுறைக்கு வருகின்றது என வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் பிரகடனம் செய்தார்.  சமத்துவம் என்பது கல்வி, வேலை வாய்ப்புகளில் மட்டுமல்ல, தனி மனித கொள்கைகளிலும், சமுதாய நிகழ்ச்சிகளிலும் ஏற்பட வேண்டும் என சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்தினை தந்தை பெரியார் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார்.

'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்'


கோயில்களில் உயர்ஜாதியினருள் பார்ப்பனர் மட்டும் அர்ச்சகர் என்பது பாகுபாட்டின் ஒரு அம்சம். மற்ற 'பக்தன் தொட்டால் தீட்டாகிவிடும்' என்ற நிலை சமத்துவத்துக்கு எதிரான நிலை எனக் கருதி, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்' என  அதற்காகப் போராட்டம் நடத்தினார் தந்தை பெரியார். ஆட்சி மாற்றங்கள், அரசு கொண்டு வந்த ஆணை மீது நீதிமன்றத்தில் முறையீடு என பல தடைகளைத் தாண்டி  அண்மையில் நடைமுறைக்கு வந்தது. உரிய ஆகம பயிற்சிபெற்ற பார்ப்பனர் அல்லாதார், சமூகத்தின் ஆயத்தத்தில் உள்ளோர் அர்ச்சகராக கேரளா, தமிழ்நாடு கோயில்களில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இப்படி சமூக இழிவுகளை தீண்டாமை (Untouchability) பாராமை (Unseeability) பொருண்மை (Unapproachability) என அனைத்துத் தளத்திலும் பாகுபாட்டை ஒழித்திடும் மகத்தான பணியில் அமைந்த முதல் சட்ட வெற்றியினை தந்தை பெரியார் தனது வாழ்நாளிலேயே காண முடிந்தது.

தந்தை பெரியாருக்குக் கிடைத்த சிறப்புகள்


சுயமரியாதை பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி சமுதாயத்தில் ஓர் அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியாருக்கு இந்திய அரசு அவரது பிறந்தநாள் நூற்றாண்டில் (1879-1979) சிறப்பு அஞ்சல் தலையினை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. பெரியாரது 125ஆம் பிறந்த நாளில் இந்திய அரசு சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட்டு பெரியார்தம் பெருமைக்குச் சிறப்புச் சேர்த்தது. உலகளவிய பன்னாட்டு அமைப்பினை அய்க்கிய நாடுகள் சங்கத்தின் பிரிவான யுனெஸ்கோ அமைப்பு 1970-இல் தந்தை பெரியார் உயிரோடு இருந்த காலத்திலேயே "தென் ஆசியாவின் சாக்ரடீஸ்' புத்துலக தீர்க்கதரிசி' என விருது வழங்கி கவுரவித்தது.


தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவத்தால் மானுடம் முழுமையும் பயன் பெறும் என்பதை 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இலக்கியமாக்கினார். இன்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, குவைத், மலேசியா, சிங்கப்பூர், மியான்மா எனப் பல நாடுகளிலும் பெரியாரது சுயமரியாதைத் தத்துவம் பல்கிப் பெருகி போற்றப்பட்டு வருகிறது. 2017இல் ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. 2019 செப்டம்பரில் அமெரிக்கா - மேரிலெண்ட் மாண்ட்கேரியர் கல்லூரியில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பன்னாட்டு இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது.

மனித நேய வரலாற்றில் 21ஆம் நூற்றாண்டும், வரும் நூற்றாண்டுகளும் பெரியாரது சுயமரியாதைத் தத்துவத்தின் பல்வேறு பரிமாணங்களில் பயன்பெற முடியும். பெரியார் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், அவரது சமுதாயப் பணி, இந்நாடு தழுவிய அளவில் நிகழ்ந்திருந்தாலும் அவரது 'சுயமரியாதைத் தத்துவம்" உலகளாவிய அளவில் மானிடரை நெறிப்படுத்த வல்லது. பெரியார் வாழ்க! சுயமரியாதைத் தத்துவம் பரவிடுக! பகுத்தறிவுப் பயன்பாடு செழுமையாக அமைக!

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் நன்றி நவிலலை சந்தீப் யாதவ் வழங்கினார்.

வருகையாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு தமிழர் தலைவர் விளக்கமாக விடை அளித்தார். தமிழர் தலைவர்
-  விடுதலை நாளேடு, 5.2.19