வெள்ளி, 15 டிசம்பர், 2017

கருத்தரங்கம் * கவியரங்கம் * பெரியார் விருதளிப்பு சிங்கப்பூரில் பெண்களே நடத்திய பெரியார் விழா

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கா.தனலட்சுமி பங்கேற்று கருத்துரை
யாரையும் நெருங்கவிடாதபடி தலைமைக்கான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொள்பவர் பெரியாரே! 
சிங்கப்பூர் பெரியார் விழாவில் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா உரை வீச்சு



நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கா.தனலெட்சுமி அவர்களுக்கு திருமதி மலையரசி சிறப்பு செய்து நினைவு பரிசு வழங்குகிறார். பேராசிரியை முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களுக்கு திருமதி கவிதா மாறன் சிறப்பு செய்கிறார்.




பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் 
திருமதி.தமிழ்ச்செல்வி முனைவர் பர்வீன் சுல்தானாவிற்கு நினைவு பரிசு


சிங்கப்பூர்,நவ.24சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கா.தனலட்சுமி விழாவில் கலந்துகொண்டு கருத்துரை யாற்றினார் ‘‘என் பிள்ளைப் பருவத்திலிருந்து  பல தலைவர்களை ரோல் மாடல்களாக நான் கொண்டிருந் தாலும் யாரையும் பக்கத்தில் நெருங்க விடாதபடியான தலைமைக்கான ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டி ருக்கும் ஒரே தலைவர் தந்தை பெரியாரே'' என்றார் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா.

‘‘பெரியாரும் - பெண்கள் முன்னேற்றமும்'' என்ற தலைப்பில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிறப்பாக நடை பெற்றது.

நூலக வாரிய அதிகாரி 
திருச்செல்வி

பெரியார் சமூக சேவை மன்றத்தின் பணிகளை பற்றிய காணொலியுடன் தொடங்கிய விழாவில் நெறியாளர் சிங்கப் பூர் நூலக வாரிய அதிகாரி திருச்செல்வி அறிமுக உரையில்,

பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் உரிமை, மனித சமத்துவம் என எக்காலத்துக்கும் எச்சமுகத்திற்கும் பொருந் தும்  பல கருத்துகளை ஆழமாக விதைத்தவர் பெரியார், அவர்களை கொண்டாடும் இன்றைய நிகழ்ச்சியில் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக வரவேற்கிறோம் என்று கூறி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் விழாவை தொடங்கினார்.

வரவேற்புரையாற்றிய 
தமிழ்ச்செல்வி



திருவாட்டி செண்பகவள்ளி திருவேங்கடம் அவர்களை பாராட்டி பெரியார் விருதினை சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் குமாரி கா.தனலட்சுமி வழங்குகிறார். உடன் பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி மலையரசி.


பாவேந்தர் எழுதிய பாமாலையுடன் அனைவரையும் வரவேற்ற பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி.தமிழ்ச்செல்வி தன்னுடைய உரையில்

பயிர்போன்றார் உழவர்க்குப்
பால்போன்றார் குழந்தைகட்குப் 
பசும்பாற்கட்டித் தயிர் போன்றார் பசித்தவர்க்குத் 
தாய்போன்றார் ஏழையர்க்குத் 
தகுந்தவர்க்கு செயிர்தீர்க்க வந்த தவம் போன்றார், 
செந்தமிழ்நாட்டிற் பிறந்த மக்கட் கெல்லாம் உயிர்                           போன்றார்!
இங்குவந்தார், யாம் கண்ட மகிழ்ச்சிக்கோர் உவமை                         யுண்டோ!
பெரியாருக்கு பாவேந்தர் எழுதிய பாமாலை
யார் இந்த பெரியார்.
மனிதநேயம்மிக்கவர். சமூகநீதிகாத்தவர். 
பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்து 
பெண்களுக்காக உரக்ககுரல் கொடுத்தவர் 
என்றா சொல்வார்கள்.....

பெரியாரா அவர் கடவுள் மறுப்பாளர் ஆயிற்றே என்று ஒற்றை வாக்கியத்தில் அல்லவா முடித்து விடுவார்கள்.

பெரியாரின் சீர்திருத்த சமூகநீதி கொள்கைகளை பரப்ப விரும்பாத ஒரு சாரார் அவரின் பெருமையை புகழை சிறப்பை புரட்சியை கெடுக்கும் விதமாக ஒன்றைமட்டுமே பரப்பியதே இந்த கடவுள் மறுப்பாளர்.

பெரியார் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு தத்துவம், சமூகநீதி, சமத்துவம், மனிதநேயம் அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவர் நடத்திய போராட்டங்களே சான்று. அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரின் பிரச்சார பயணங் களும் மேடை முழக்கங்களும் சான்று. புரட்சி, போராட்டங்கள் வழி தன் வாழ்விலே விடிவும் கண்டு விளைவுகளையும் கண்டவர் உலகிலேயே தந்தை பெரியார் மட்டும்தான்.

அவர் மறைந்து நாற்பத்தி நான்கு ஆண்டுகள் ஆனாலும் சமூகநீதிக்கு.. மனிதநேயத்திற்கு எப்போதெல்லாம் பாதிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அங்கு பெரியாரின் கொள்கை கள் முன்னெடுத்து சொல்லப்படுகின்றன.

அதன் வெளிப்பாடு, இந்த ஆண்டு தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்த நாளுக்கு, ஏராளமானோர் மதங்களை கடந்து ஜாதிகளை கடந்து மொழிகளைக் கடந்து நாடுகளைக் கடந்து சமூக வலைத்தளங்களான facebook, twitter, Whatsapp இல் HBD periyar என்றும் “Periyar 139” என்றும் hashtag செய்து அதை ஒரு பெரிய ட்ரெண்டாக ஆக்கி னார்கள்.    அதில்  அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்த தோடு அவரது கொள்கைகளைளையும் பொன்மொழி களையும் பதிவிட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கடவுள் மறுப்பா ளர்களோ, பெரியார் இயக்கத்தை சேர்ந்தவர்களோ கிடை யாது. பலதரப்பட்ட மக்கள், மனிதநேய, சமூகநீதி, சமத்துவ சிந்தனையுடையவர்கள்.

அதனால் பெரியார் நேற்றல்ல... இன்றல்ல...  நாளையல்ல.. என்றுமே தேவைபடுவார்.. .போற்றப்படுவார்... 2000 ஆண்டு களுக்கு முன்னால் எழுதப்பட்ட திருக்குறள் எப்படி எக்காலத் திற்கும் பொருந்துமோ அதேபோல புரட்சியாளர் சாதனையா ளர் பெண்கள் முன்னேற்றத்திற்கு போராடியவர் என்று பன்முகம் கொண்ட பெரியாரின் சமூகநீதி சுயமரியாதை சீர் திருத்தக் கொள்கைகள் என்றும் பொருந்தும். போற்றப்படும்.   என்று கூறி வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.

பெரியார் 
கவிதை அரங்கம்

‘‘அன்னையுமானவன்'' என்ற தலைப்பில் பெரியாரை பற்றி மிகச்சிறப்பாக கவிதை வாசித்தார்கவிஞர் சுபா செந்தில்குமார்.

மாணவி குந்தவி



‘‘இளையர் பார்வையில் பெரியார்'' என்ற தலைப்பில்  சிம் பல்கலைக் கழக மாணவி குந்தவி பேசும் போது எங்கள் வீட்டில் இரண்டு பெரியார் படங்கள் மாட்டி இருக்கும். சிறு வயதில் ஒரு முறை நான் அம்மாவிடம் யார் இவர் என்று கேட்டேன்? அப்போது அம்மா எனக்கு பெரியாரை அறி முகப்படுத்தினார். அது முதல் நான் பெரியாரை அறிந்து வருகிறேன். அவரால் தான் நாம் இங்கு நின்று பேசுகிறோம்.பெண்ணியம்பற்றி பேசுவதென்றால் என் மனதிற்குள் முதலில் வருவது பெரியார்தான்.

இன்றைய காலத்தில் நாம் சமூக செயல்பாடுகளில் இயங்குவதற்கு இணையத்தில் பல வழிகள் இருக்கிறது. இணையத்தில் இயக்கங்களே உருவாகிறது. ஆனால், இவை எதுவுமே இல்லாமல் யாருடைய உதவியையும் எதிர் பார்க் காமல் தனியாகவே பெரியார் இயக்கம் தொடங்கி பல சமூக சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளார்.  அதில் மிக முக்கிய மானது பெண்களுக்கான உரிமை. பெரியார் வெறும் பெண் விடுதலை அடைந்தால் மட்டும் போதும் என்று கூறவில்லை, பெண்கள் கல்வி கற்க வேண்டும் அதன் வழியே தங்களின் உரிமையை பெற்றிட வேண்டும் என்று உழைத்தார். சமு தாயம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் பெண்களுக்கு சமஉரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெரியார் கூறியவற்றை எடுத்துக் கூறி தன்னுடைய உரையை நிறைவுசெய்தார். (பெரியாரை பற்றி முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார் என்பது கூடுதல் சிறப்பு).

‘‘பெரியாரும் - கோசாவும்'' 
கவிதை நாடகம்

பெரியாரையும், பெரியாரின் தொண்டர் தமிழவேள்



முனைவர் இரத்தின.வேங்கடேசன் அவர்களுக்கு பெரியார் விருதினை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் முனைவர் பர்வீன் சுல்தானா வழங்குகிறார்.


கோ.சாரங்கபாணியையும் நினைவு கூறும் வகையில் ‘‘பெரியாரும்- கோசாவும்'' என்ற கவிதை வடிவிலான நாட கத்தை சிங்கப்பூர் அதிபதி நாடகக்குழுவினர் நடத்தினார்கள்.  பெரியாரின் கருத்துகளை பின்பற்றி சிங்கப்பூரில் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் நடத்திய பத்திரிக்கைகளையும் உழைப்பையும் அதனால் தமிழர்கள் முன்னேற்றம் அடைந் ததை எடுத்துக்கூறும் விதமாக சிறப்பாக இருந்தது நாடகம். இறுதியாக தமிழர்கள் முன்னேற வேண்டும், முன்னேறிய பின் தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்று மாணவர்கள் கூறி நாடகத்தை முடித்தது சிறப்பு. திரு.புகழேந்தி எழுதி இயக்கிய நாடகத்தில் எட்டு வயது முதல் பதினைந்து வயதுக்குட்பட்ட மாணவ சிறுவர்கள் சிறுமிகள் நடித்து பாராட்டைப் பெற்றனர்.

மலையரசி



விழாக் குழுவின் தலைவரும், மன்றத்தின் செயற்குழு உறுப்பினருமான  திருமதி. மலையரசி  தலைமையுரையில் பேசும் போது, பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை யற்ற சுய சிந்தனையாளர். ஓர் ஆதிக்கத்தின் ஆணி வேரையே அசைத்தவர். மக்கட்தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்களின் அடிமைத்தனத்தை, இழிவு நிலையை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. பெண் என்ப வள் ஓர் உயிர் உள்ள மனித பிறவி என்பதை எண்ணிப் பார்க்கவும் இல்லை.

ஆனால் பெரியார்தான், தான் ஓர் ஆண் என்பதையும் பொருட்படுத்தாமல் பெண்கள் முன்னேற்றத்திற்காக கடுமை யாக போராடினார். அளப்பரிய தொண்டாற்றினார். பெண் களின் நலவாழ்விற்கு எதுவெல்லாம் தடைக்கற்கள் என்பதை கூர்மையாக சிந்தித்தார், பேசினார்,  எழுதினார். கற்பு/ ஒழுக் கம் பெண்களுக்கு மட்டும் அல்ல; அது ஆண்களுக்கும் இருக்க வேண்டுமென்று ஆராய்ந்து புதியதோர் விளக் கத்தைச் சொன்னார். ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் எல்லாம் உள்ளதோ, அவை எல்லாம் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்றார்.

நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் ஒரு குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டுமென்று-பெண் கல்வியை வற்புறுத்தினார்.

பெண் ஆணுக்கு சமம் என்பதில் உறுதியாக இருந்தார். ஆண் ஆதிக்கத்தின் தீவிரம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஓங்கி குரல் கொடுத்தார். அதனால் அவரை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்கள், தவறான பிரச்சாரங்கள் கிளம்பின. பெரியார் எதற்கும் அஞ்சாமல் பெண்கள் என்ன நம்மை விடத் தாழ்ந்தவர்களா? அவர்கள் மட்டும் ஏன் அடிமைகளாக இருக்க வேண்டும்? என்று பெண்களுக்குப் போடப்பட்டிருந்த ஒவ்வொரு அடிமைச் சங்கிலியையும் உடைத்தெறிந்தார்.



1909 ஆம் ஆண்டில் விதவை மறுமணத்தை நடத்தி வைத்து புரட்சியை உண்டாக்கினார்.

1929 ஆம் ஆண்டு நடந்த ஒரு மாநாட்டில் பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டுமென்று வலியுறுத்தினார். திருமணத் தைச் சீர்திருத்தம் செய்தார்.  அதைப்பதிவு செய்ய வேண்டு மென்றார். கணவன் மனைவி என்பவர்கள் நண்பர்களைப் போல பழகவேண்டு மென்று கூறினார். சீர்திருத்தத் திரு மணத்தை இங்கும் பதிவு செய்யவேண்டுமென்று தமிழர் சீர்திருத்த சங்கமும், திராவிடர் கழகமும் தனித்தனியே ஒரு வேண்டுக்கோளை சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு அனுப் பியது. அதை சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது.

பெண்களின் சகல பரிமாணங்களின் மாற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் தேவையானவற்றை பட்டியல் இட்டார்,  பெரியாரின் சிந்தனையும், எண்ணமும் பெண்ணினத்தின் உயர்விற்காகவே இருந்தது. அதை நன்றியோடு போற்றும் விதமாக ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பெண்கள் மாநாட்டில் பெண்களால் “பெரியார்” என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.

இன்று ஊடகத்தின் வழியாக பாகிஸ்தானில் மலாலா, டில்லியில் மருத்துவ மாணவி, தமிழ்நாட்டில் அனிதாயென்று உலகத்தில் எங்கெல்லாம் பெண்களுக்கு தொடர்ந்து வன் முறைகளும், கொடுமைகளும், அநீதிகளும் நடக்கின்றனவோ, அதைப்பார்த்ததும் ஆவேசத்துடன், கோபத்துடன் நாம் நமது உணர்வைப் பதிவேற்றம் செய்கிறோம்.  சுமார் நூறு ஆண்டு களுக்கு முன் பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடிய தந்தை பெரியார் பழைமைவாதிகளின் எதிர்ப்பை எப்படி யெல்லாம் எதிர்கொண்டிருப்பார், எத்துணை கல்வீச்சுவாங்கி இருப்பார் என்பதை பெண்கள் உணர வேண்டும், நினைத்துப் பார்க்கவேண்டும்.

பொதுவாகவே தந்தையின் மீது மகள் தான் அதிக பாசத் தையும், அன்பையும் வைத்திருப்பாள். தந்தையும் தன்மகளின் வளமான வாழ்வைப் பார்த்து மனம் மகிழ்ந்து நிற்பார். தந்தை பெரியார் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றியுள்ள பணி மகத்தானது. பெரியார் இல்லாமல் இருந் திருந்தால், இன்று பெண்கள் மேடை ஏறி இருக்க முடியாது. சிங்கப்பூரின் 8 ஆவது அதிபராக ஹாலிமாயாக்கோப் அவர்கள் பதவி வகிக்கும் தருணத்தில் பெண்களால் பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்துக் கொண்டிருப்பது பாராட்டிற்குரியது.

அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் நம்மை சூழ்ந்திருந்த இருளைப் போக்கினார். ஆனால் சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள்தான் மனித இனத்தின் அறியாமை யென்ற இருளுக்கு பகுத்தறிவு என்கிற வெளிச் சத்தைக் காட்டினார்.

இக்கால பெண்களோடு, ஆண்களும் பெரியாரைப் படிக்கவேண்டும்.

பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும். பெரியார் எக்காலத்திற்கும் தேவையான மாமருந்து. என்று கூறி சிறப் பானதொரு தலைமையுரையை வழங்கினார்.
மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்

மன்றத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்மொழிப் போட்டிகள் 2017இல் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினர் சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கா.தனலட்சுமி அவர்கள் வழங்க மாணவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர் குமாரி தனலட்சுமி



விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிங்கப் பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கா.தனலட்சுமி உரையாற்றும்போது,

பெண்கள் முன்னேற்றம் பற்றிய  ஒரு விழிப்புணர்வை வளர்ப்பதற்கும், வாழ்க்கையில், சமுதாயத்தில் மற்றும் உலக ளாவிய ரீதியாகவும் பெண்களின் பெரும் பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்கு அவர்களுக்குரிய உரிமையை அளிப்பதை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவுக்காக உங்கள் குழுவினருக்கு என் இதயப்பூர்வமான நன்றி.

இங்கு சிங்கப்பூரில் நாம் எவ்வளவு நல்வாய்ப்பு பெற்றவர் களாக இருக்கிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக நான் இவ்விழாவில் கலந்துக்கொள்வதை கருதுகிறேன். இங்கு சிங்கப்பூரில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கையில் நாம் செய்யும் தேர்வுகள் ஆகியவற்றிற்கான சம வாய்ப்புகள் உள்ளது.  அதே நேரத்தில்  பழங்காலத்தில், பெரியாரின் காலத்தில் இருந்த பெண்களின் வருத்தமான நிலை பற்றியும், பெண் களின் விடுதலையைப் பற்றியும், அவர்களின் போராட்டத் தினையும் அதற்கானபெரியாரின் உழைப்பினையும் இன் றைய தலைமுறையினருக்கு

குறைந்தபட்சம் தெரிவிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி இருக்கிறது.

பெரியார், இந்த நவீன காலத்திற்கு ஏற்ப இருந்தார், இன்னும் இருக்கிறார். மேலும் அவர் உலகம் முழுவதும் உள்ள ஆண்கள் எப்படி பெண்களை மதிப்புடன் மரியாதை யுடன் நடத்த வேண்டும், அவர்களின் பங்களிப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற சமூகத்தை வடிவமைப்பதில்  பெரியார் ஒரு முன் மாதிரியாகவும் இருக்கிறார்.

இந்த ஆண்டு நிகழ்விற்கான ஏற்பாட்டுக் குழு அனைத் தும் பெண்களை உள்ளடக்கியதாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன், சமூகத்திற்காக இந்த விழாவை ஏற்பாடு செய்ய முன்வந்ததற்காக இந்த பெண்களுக்கு என் இதயம் கனிந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  இது "பெண்களுக்காக பெண்களே நடத்தும் பெண்களுடைய விழாவாகும். இது போன்ற நிகழ்ச்சிகளை பெண்களே முன்னின்று நடத்துவதற்கு  கண்டிப்பாக முன்வரவேண்டும்.  சமுதாயத்திற்கு நல்லது செய்வதற்கு சமமான திறன் உடையவர்கள் பெண்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பெரியார் ஒரு பெரிய மனிதர் மற்றும் தலைவர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் பெண்கள் உரிமைகள் மற்றும் முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல சமூக பிரச்சினைகளில் பங்காற்றியுள்ளார்.

‘‘பெண்களிடமிருந்து சமையல் கரண்டியை அகற்றிவிட்டு அவர்களுக்கு ஒரு புத்தகம் கொடுக்க வேண்டும்'' என்கிறார் பெரியார். அவர் ஒரு எளிய சொற்பொழிவு முறையில் பெண்கள் கல்வி கற்க வேண்டிய முக்கியத்துவத்தை வலி யுறுத்தினார் என்று கூறினார்.

‘Periyar’s Pearls of Wisdom’த்தில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பெரியார் கூறுகிறார்  "ஒவ்வொரு பெண்மணியும் தனக்கு ஒரு பொருத்தமான வேலைகளை கற்றுக் கொள்ள வேண்டும், அதனால் அவள் சம்பாதிக்க முடியும். அவள் குறைந்தபட்சம்  அவள் வாழ்வதற்காக வருமானம் ஈட்ட முடியுமானால். எந்த ஒரு கணவனும் அவளை அடிமையாக நடத்த மாட்டான்.''

‘‘பெண்கள் கல்வியைப் பெறுவதை ஏன் தடுத்திருக் கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாடு ஆகும். இன்றும் இந்த நிலைமை இருந்து வருகிறது. முக்கியமாக ஆப்பிரிக்க கண்டத்தின் பல பகுதிகளிலும், இந்தியாவின் சில பகுதி களிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் பெண்கள் பள்ளிக்கு செல்லாதபடி தடுக்கப்படுகிறார்கள்.

பெண்கள் கல்வி கற்பதை தொடர வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அறிவைப் பெறுவதற்கு மட்டுமல்ல £மல், வேலையிடத்தில் உகந்த அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புடன் வேலை செய்வதற்கு.



சிங்கப்பூர் அதிபதி நாடகக் குழுவினரின் ‘‘பெரியாரும் - கோசாவும்'' கவிதை நாடகம்


ஆண்கள் மற்றும் பெண்கள் தாங்கள் உடுத்தும் ஆடை களை கொண்டு தங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற  கருத்துக்கள் நம் சமூகத்தில் உள்ளன. ஒரே மாதிரியான பாலின வேறுபாடுகளால் நாம் கட்டுப்படுத்தப்படக்கூடாது. பெண்களுக்கு (Barbie dolls or colour pink and Men do not mean “Racing Cars” and colour blue) பார்பி பொம்மைகள் அல்லது இளஞ்சிவப்பு வண்ணம் என்றும்  ஆண்களுக்கு "பந்தய கார்கள்" மற்றும் நீலவண்ணம் என்றும் அர்த்தம் இல்லை. இவைகள்  மிகச்சிறிய வயதில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதிரியான விளையாட்டுகள் மற்றும் வண்ணங்கள்.

சிங்கப்பூரில் கடந்த 50 ஆண்டுகள் இடைவெளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான பாலின இடைவெளி குறைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக 1996ஆம் ஆண்டு  அமைக்கப்பட்ட The Inter-Ministry Committee (IMC) on CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination against Women) என்ற 14 அமைச் சகங்கள் மற்றும் பொதுத்துறை  நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பு  மேற்பார்வையிடுகிறது. இது பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை  ஒருங் கிணைக்கிறது. மேலும் சிங்கப்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவை மேம்படுத்த சட்டம் மற்றும் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிங்கப் பூரில் பல்வேறு துறைகளில் பெண்களால் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றிருக்கிறோம்.  அதில் நாம் இப்போது பெருமை கொள் ளக்கூடிய வகையில் சிங்கப்பூரில் முதலாவது பெண் அதிபராக திருவாட்டி ஹலிமாயாக்கோப் இருக்கிறார். ஒரு சிறிய நாட்டில் சிறுபான்மை சமூகத்தில் இருந்து முதல் பெண் அதிபரை நாம் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் அதற்கு ஏற்ற வகையில் பல இனத்தவர்களிடமிருந்து  தகுதிப் படைத்தவரை தேர்வு செய்யும் முறை சிங்கப்பூரில் இருக்கிறது, மேலும் சிங்கப்பூரில் சமத்துவமாக மதிக்கும் பண்பினை பல உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.

இறுதியாக, நான் பெரியார் கூறியதை  மேற்கோள் காட்டி முடிக்கிறேன்: "பெண்கள் தங்களை தாங்களாகவே அடிமை களாக கருதுவதை மாற்றிகொள்ள வேண்டும்." என்று கூறி இருக்கிறார். இன்றைய காலத்திலும் இக்கருத்து மிக ஆழ்ந்த மற்றும் மிகவும் பொருத்தமானது. முழுக்க ஆங்கிலத்திலேயே உரையாற்றினார் என்பது சிறப்பு. [அவரின் முழு உரை தனியாக வெளிவரும்].

பகுத்தறிவாளர் கழகத்தின் 
‘‘பெரியார்'' விருது

சிங்கப்பூரில் சிறப்பாக பாவேந்தர் பாரதிதாசன் விழாவை ஆண்டு தோறும் நடத்தி தமிழ்ப்பணி தொண்டாற்றி வரும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் அவர்களை பாராட்டி, கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் 126 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், அவருக்கு ‘‘பெரியார் விருது'' வழங்கப் பட்டது. சென்னையில் 29.4.2016 அன்று நடைபெற்ற அவ் விழாவில் முனைவர் இரத்தின வேங்கடேசன் கலந்து கொள்ளவில்லை என்பதால் அந்த ‘‘பெரியார் விருதி''னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், தமிழகத்திலிருந்து சிறப் புரையாற்ற வருகை புரிந்த முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள்  இவ்விழாவில் முனைவர் இரத்தின வேங்கடேசன்  அவர்களுக்கு வழங்கினார். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைசெல்வம் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். முன்னதாக முனைவர் இரத்தின வேங்க டேசன் அவர்களை பாராட்டி பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

அவர்களின் வாழ்த்துரை காணொலியில் ஒளிப்பரப்பப்பட்டது.

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ‘‘பெரியார்'' விருது

இதுவரை சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக வழங்கப்படும் பெரியார் விருது,  சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கும், தமிழ் சமூகத்துக்கும் தொண்டாற்றி வருபவர் களை பாராட்டி பெரியார் விருது வழங்கப்பட்டு வந்தது.  ஆனால் இந்தாண்டு பெரியாரின் மனித நேய சிந்தனையை முன்னிலைப்படுத்தி சிங்கப்பூரில் மனிதநேயப் பணியில் சிறப்பாக தொண்டாற்றி வருபவரை தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டது. அதன்படி சிங்கப்பூரில் 42 ஆண்டுகளாக 43 ஆதரவற்ற பிள்ளைகளை எடுத்து வளர்த்து வளர்ப்பு அன்னையாக வாழ்ந்து வரும் திருவாட்டி செண்பகவள்ளி திருவேங்கடம் அவர்களை பாராட்டி பெரியார் விருதினை சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி

கா.தனலட்சுமி அவர்கள் வழங்கினார்கள். திருமதி மலையரசி சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். முன்னதாக அவரை பற்றிய சிறப்பு குறிப்புகளை திருமதி தமிழ்ச் செல்வி வாசித்தார். (திருமதி மலையரசி அவர்களின் பெற்றோர் குஞ்சம்மாள் - மீ.முருகு சீனிவாசன் குடும்பத்தின் சார்பாக செண்பவள்ளி திருவேங்கடத்திற்கு அன்பளிப்பு வழங்கப் பட்டது).

சிறப்புரை

முனைவர் பர்வீன் சுல்தானா



இறுதியாக சிறப்பாக உரையாற்றிய பேராசிரியை முனை வர் பர்வீன் சுல்தானா அவர்கள், மிகுந்த எழுச்சியுடன் நன்றியுடன் தன்னுடைய சிறப்புரையில்,

‘‘மானமும் அறிவும்'' என்ற ஒற்றை வாக்கியத்தின் மூலமாக என் சிந்தனைக்குள் சென்று கலவரத்தை ஏற் படுத்தியவர் தந்தை பெரியார். இதை இந்த மேடைக்காக நான் சொல்லவில்லை. 43 அகவையை கடந்துள்ள நான், சென்னை பல்கலைக் கழகத்தின்கீழ் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணி புரிகிறேன் என்றால், சுயமரியாதையுடன் உலகத்தை வலம் வருகிற ஒரு சொற்பொழிவாளராக இருக்கிறேன் என்றால், இந்த வினாடியில் உங்கள் முன்னால் இப்படி தைரியமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு மிக முக்கிய சமூக காரணியாக இருக்கக்கூடிய என் அனைத்து நன்றிக்கும் உரியவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் என்ற ஒற்றை மனிதன் இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு உங்கள் முன்னால் நான் இல்லை.நான் என்னுடைய உரையை இங்கு வந்திருக்கும் குழந்தை களிடமிருந்து தொடங்குகிறேன். எனக்கு உங்கள் வயதி லிருந்து பல ஹீரோக்கள் இருந்தார்கள். அந்த ஹீரோக்கள் பட்டியிலில் என் தந்தையில் தொடங்கி பிரபாகரன், சதாம் உசைன், யாசர் அராபத், சேகுவேரா, விவேகானந்தர் போன்றவர்கள் எல்லாம் இருக்கக்கூடிய அந்த நிலையில், முழுமையை நாடி நான் பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த வினாடி வரை, என் பிள்ளை பருவம் முதல் இந்த வயதுவரைக்கும் எனக்குள் முழு ஆளுமை செலுத்திக் கொண்டு வேறு யாரையும் பக்கத்தில் நெருங்கவிடாதபடிக்கு அந்த தலைமைக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கக்கூடிய ஒரே தலைவர் தந்தை பெரியார் என்றார்.

‘‘பாரதி கண்ட புதுமை பெண்'' என்று எல்லோரும் சொல் வார்கள். காரணம், பாரதியார் புதுமைப் பெண்களை குறித்து ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். அதில் அவர் நிறைய விசயங் களை எழுதி இருக்கிறார். அந்த விசயங்களில் பாரதி மவுனம் சாதிக்கிற சில விசயங்களும் உண்டு. பெண்கள்குறித்து பாரதி மவுனம் சாதிக்கின்ற அந்த விசயத்தில்தான் இந்த சமூகம் குளிர் காய்ந்துக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் அந்த மவுனத்திற்கு வெடி வைத்தவர். அந்த வெடிப்பின் சிதறலின் ஒரு வெளிச்சத்தை காட்டிவிடக்கூடாது  என்பதில் இந்த சமுதாயம் மிக கவனமாக இருக்கிறது. அதனால்தான், ‘‘தந்தை பெரியார் கண்ட புதுமை பெண்'' என்று யாரும் சொல்வ தில்லை. 1925ஆம் ஆண்டு பெரியார் தொடங்கிய சுயமரி யாதை இயக்கம் என்பது ஜாதி மறுப்புக்காக வந்தது மட்டுமல்ல முதன் முதலில் அவர் எண்ணத்தில் தோன்றிய விதை - பெண் விடுதலை. பெண் விடுதலைக்காக முன் னெடுக்கப்பட்டதுதான் சுயமரியாதை இயக்கம் என்பதனை இன்றைய குழந்தைகள், இளைஞர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

“ஒரு தேசத்தில் ஜாதி இல்லாமல் போனால் முதன் முதலில் பயன்பட போகிறவர்கள் யார் என்று சொன்னால், ‘‘பெண்கள்” என்று பெரியார் கூறுகிறார் என்று கூறி,  பெரியாரை பற்றி பல தகவல்களை சுவைப்பட ஒரு படத்தின் டிரையிலர் போன்று விறுவிறுப்பாக எடுத்துக்கூறி சுமார் ஒன்றே கால் மணி நேரம் உரையாற்றி, வந்திருந்த அனை வருக்கும் பெரியாரைப்பற்றி ஒரு எளிய புரிதலை ஏற்படுத் தினார். இப்படி சொல்வது மிகையல்ல காரணம் அரங்கத்தின் 300 இருக்கைகளும் நிரம்பி மக்கள் படிகட்டுகளில் அமர்ந்து சுமார் 400 பேர் அவரின் உரை முடியும் வரை, அமர்ந்திருந்து கேட்டு விடைபெற்றார்கள். [அவரின் முழு உரை பின்னர் தனியாக வெளிவரும்].

கவிதா மாறன் நன்றியுரை



முன்னதாக பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி கவிதாமாறன் நன்றியுரை வழங்கினார். வந்திருந்த அனைவரின் பாராட்டுகளுடன் விழா இனிதே நிறைவுற்றது.
விழாவில் பங்கேற்றோர்
நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மன்றத்தின் புரவலர்கள் தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன்,  புதுமைத்தேனி மா.அன்பழகன், மூத்த விரிவுரையாளர்

ச.ரத்னக்குமார், தலைவர் வீ.கலைச்செல்வம், துணைத் தலைவர் மதியரசன், பொருளாளர் நா.மாறன், செயலாளர் க.பூபாலன், இராஜராஜன், எம்.இலியாஸ், ராமன், மனோகர், இளையமதி, சவுந்தர்ராஜ், மூர்த்தி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவின் தலைவர் கமலக்கண்ணன், பழனி, திருமதி பர்வீன்பானு,  திருமதி கவுரி, பெரியார் பிஞ்சு ஆதவன், கவிநிதி, இனியநிலா, கல்லூரி மாணவர்கள் குந்தவி, வானதி, வளவன், தோழர்கள் தியாக இரமேஷ், தங்கமணி, ராஜராஜன், செந்துரை மதியழகன், சேதுஜகதீசன், அறிவரசு. ஜகன்தங்க துரை, நரசிம்மன், கார்த்திக் ராமசாமி, கதிராமங்கலம் கலியபெருமாள், கஸ்தூரிபாய், சோமு ரவிச்சந்திரன் மற்றும் பல இயக்கத் தோழர்கள்  கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தார்கள்.

செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்



சிங்கப்பூரில் பெரியார் விழா 2017 இல் பங்கேற்ற பார்வையாளர்கள் (12.11.2017)


அன்னையுமானவன்...
- கவிஞர் சுபாசெந்தில்குமார்



தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
என்ற பாரதிதாசனின் பாடலுடன்
சுயமரியாதை தோழர்களுக்கு
என் மரியாதையை உரித்தாக்கி
தொடங்குகின்றேன்
மூவாயிரம் ஆண்டு அடிமைத் தனத்தின்
முதுமையை விரட்டியடித்த இளம்கிழம் பெரியார்
சாதிய வேறுபாடுகளை வேரறுத்த
சமூகநீதியின் ஆணிவேர் பெரியார்
வேதங்கள் ஒலித்த வீதிகளில்
சுயமரியாதையின் சுரம் பாடியவர் பெரியார்
பகுத்தறிவை தரிசிக்கவெனவே
மறுக்கப்பட்ட ஆலயங்களில்
திறக்கப்பட்ட ஒவ்வொரு கதவும் பெரியார்
நாற்றமெடுத்த ஏற்றத்தாழ்வுகளை விரட்ட
மூத்திரச் சட்டியோடு அலைந்த
அறச்சீற்றம் பெரியார்
தந்தை பெரியாரெனில்
மணியம்மை அன்னைதான்.
அந்தப் பெரியார்தானே
ஆணாதிக்கத்தின் கொம்புகள் முறித்து
பெண்ணினத்திற்கு முதுகெலும்பு செய்தவர்?
விலக்கி வைக்கப்பட்ட விதவைகளையும்
விலைமாதர்களையும் - அவர்
வீதிக்கு அழைத்த அந்த வேளையில்தான்
மரிக்கத் தொடங்கியது
மஞ்சள், குங்குமத்தின் மகிமை
கதியற்ற பெண்களுக்கு அவரால்
விடுதிகள் கட்டப்பட்ட அவ்வேளையில்தானே
விதியற்று இடியத் தொடங்கின
இருண்ட சமையலறைகள்.
அதுசரி...
சின்னராயம்மாள் கதை தெரியுமா உங்களுக்கு?
முற்றும் தளர்ந்த முதியவன் ஒருவனுக்கு
மூன்றாம் தாரமாய் வாழ்க்கைப்பட்டு
பச்சிளம் குழந்தை வேண்டுமென
படுக்கைக்கு அழைக்கப்பட்டவள்.
வெடுக்கென உயர்ந்தது கிழவனின் கைத்தடி
படுக்கையறையில் விழுந்தது பகுத்தறிவின் இடி
வீடு துறந்து விடுதி புகுந்தாள் சின்னராயம்மாள்
விடுதி திறந்து வீதிகளுக்குள் புகுந்தது பெண்விடுதலை.
ஆம்..
இப்படித்தான் பிறந்தனர் பெரியாரின் பிரதிகள்..
இப்படித்தான் ஒலித்தன சுயமரியாதையின் குரல்கள்..
அவர் மட்டுமா பேசினார்?
குலத்தின் பெயரால் தாசியென
குந்தகம் விளைவித்த வேதகுலத்தின் வேர்களில்
கந்தகத்தை ஊற்றிய டாக்டர் முத்துலெட்சுமி
பிறிதொரு நாளில் அவரே
பிழன்று பேசி
பெண்ணிற்கு வேண்டும் சமயக்கல்வி என்றபோது
குடியரசில் குரலுயர்த்தி கொந்தளித்த தி.சு.மாசிலாமணி
இருமனம் சேரா திருமணம் முறித்து
மறுமணம் செய்த சுயமரியாதைத் தோழர் சுலோசனா
சிதம்பரனாரை மணந்த சிவகாமி
கவனிக்கவும்...
சிதம்பரனாரை மணந்த சிவகாமி
இவர்கள்
பலதாரம் புரிந்த ஆன்மீக அவதாரங்கள் அல்ல 
கைம்பெண் மறுமணம் அருளிய கருப்புஅவதாரங்கள். 
ஆம்..
இப்படித்தான் பிறந்தனர் பெரியாரின் பிரதிகள்..
இப்படித்தான் ஒலித்தன சுயமரியாதையின் குரல்கள்..
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு தளத்திலிருந்தும்
ஓங்கி ஒலித்தன அக்குரல்கள்
மனுதர்மத்தின் பெயரால்
மறுக்கப்பட்ட குரலெல்லாம்
மானுடத்தின் குரல்வளை நசுக்கப்படுவதை பேசின
மறுமணம் பேசின
சீர்திருத்த திருமணம் பேசின
ஒரு பாலுக்கே உரித்தான கற்பை கயமை என்று பேசின
இருபாலருக்கும் உரித்தான செல்வம் உரிமை என்று பேசின
கல்வியின் அவசியம் பேசின..
கருத்தடையின் தேவையை பேசின.
இப்படி
பெண்ணினத்திற்காய் பேசிய
அனைத்து குரல்களிலும் - ஓர்
அன்னையின் குரல் இருந்தது.
அதுவே
பெரியாராகவும் இருந்தது.

- விடுதலை நாளேடு,24.11.17