திங்கள், 21 ஆகஸ்ட், 2017

திருச்சியில் 2018 ஜனவரி 5, 6 & 7 நாள்களில் உலக நாத்திகர் மாநாடு தி.க. - ப.க. பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு



திருச்சி, ஆக.19 திருச்சி - பெரியார் மாளி கையில் 18.8.2017 அன்று மாலையில் திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மண்டலத்தினைச் சார்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய தமிழர் தலைவர் ஆசிரியர் திருச்சியில் 2018ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாள்களில் உலக நாத்திகர் மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

உலக நாத்திகர் மாநாடு

உலக நாத்திகர் மாநாடு ஏற்பாடுகள் மற்றும் நடைபெறும் விதம் பற்றி தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்  ஆகிய பெரியார் இயக்க அமைப்புகளுடன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நாத்திகர் கோரா நிறுவிய நாத்திகர் மய்யமும் இணைந்து உலக நாத்திகர் மாநாட்டினை நடத்திட உள்ளன. மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், நாட்டின் அனைத்து மாநிலஙகளிலிருந்தும் நாத்திக அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நாத்திக அமைப்பினர் மிகப் பலராக கலந்து கொள்ள விருக்கின்றனர்.

நாத்திகத்தை நன்னெறி என சிந்தித்து, இயக்கம் கண்டு, அதனையே வாழ்க்கை முறை யாக கடைப்பிடிக்கச் செய்தவர். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார்.  உலகின் பல பகுதிகளில் உள்ள நாத்திக அமைப்புகளுக்கும் இந்த மண்ணில் தந்தை பெரியார் தோற்றுவித்த நாத்திகர் இயக்கத்திற்கும் செயல்பாட்டில் மாறுபாடு உள்ளது. பிறநாடுகளில் கடவுள் மறுப்பு எனும் ‘நாத்திகம்‘   கொள்கை அளவில் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நாட்டுச் சமூகச் சூழலில், கடந்து வந்த வரலாறு முற்றிலும் வேறானது. பிறப்பின் அடிப்படையில் மனிதர் களை பேதப்படுத்தி, ஏற்றத் தாழ்வுகளை உரு வாக்கி அதனையே நிலைப்படுத்திட, எதிர்ப்பு ஏதுமின்றி பெரும்பாலான உழைக்கும் மக்கள் கடைப்பிடித்திட ‘கடவுள் கொள்கை’ கடைப்பிடிக்கப்படுகிறது. பிறவி பேதத்தை தான்தான் ஏற்படுத்தியதாக  கடவுள் பிரகடனப் படுத்தியதாக கற்பிக்கப்பட்டது.  இந்தப் பிறவி பேதம் கடவுள் ஏற்படுத் தியதாகக் கற்பிக்கப் பட்டது.  அந்தப் பேதத்தை நீக்கிடும் ஆற்றல் தனக்கு இல்லை என கடவுளே ஒப்புதல் அளித்த தாகவும் வலியுறுத்தப்பட்டது. சமூக ஏற்றத் தாழ்வுகளை நிலைப்படுத்திட, தொடர்ந்திட இந்த மண்ணில் கடவுள் கொள்கை கற்பிக்கப் பட்டு வளர்க்கப்பட்டது. ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி சமூகத்தில் சமத்துவத்தை, சம  வாய்ப் பினை அனைவருக்கும் வழங்கிட நாத்திகக் கொள்கைகளை தந்தை பெரியார் வலியுறுத் தினார். 

எத்தனையோ பேர் நாத்திகக் கொள்கை களை எடுத்துச் சொன்னாலும், அதனை வாழ் வியல் நெறியாக, மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டி சமூகப் புரட்சியினை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் ஆவார். அப்படிப்பட்ட தத்துவ நெறியாளர் தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற உள்ளது.

நாத்திகம் - மேற்கிற்கும் முன்னோடி கிழக்கு

நாத்திகத் தத்துவம் என்பது மேற்கத்திய நாடுகளில் உருவானதாக கருதப்படுகிறது. அது குறித்த நூல்களும் அதிக அளவில் மேற்கத்திய அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மை வரலாறு அதுவல்ல;  மேற்கத்திய நாடுகளிலெல்லாம் நாத்திகர் கொள்கை உருவாவதற்கு முன்பே - இந்த நாட்டில் - ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே - கவுதம புத்தர் பிறப்பதற்கு முன்னரே நாத்திகக் கொள்கைகள், கடவுள் மறுப்பு வலியுறுத்தப்பட்டடு வந்துள்ளது. புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து, கபிலர் எனும் நாத்திக அறிஞர் பெயரால் அமைந்தது. ஓர் ஊரின் பெயரையே நாத்திக அறிஞர் பெயரால் ஏற்படுத்துவது எனும் நிலையில் அந்தக் காலத்தில் நாத்திகக் கருத்துகள் எந்த அளவுக்கு பலப்பட்டிருக்க வேண்டும்; பரவலாக் கப்பட்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது. 

மேலும் சார்வாகர் வலியுத்திய நாத்திகக் கருத்து பரந்துப்பட்டு சமூகத்தில் கோலோச்சி யுள்ளன. இன்றும் கருத்துச் செறிவுடன் விளக்க மாய் பேசுபவரை ‘பிரகஸ்பதி’ என விளித்திடும் வழக்கம் நிலவிவருவது, அந்த நாள்களில் ‘பிரகஸ்பதி’ எனும் நாத்திக அறிஞர் பெற்றிருந்த பெருமையினை, சமூகத்தினர் நாத்திக கொள்கை யினைப் போற்றிய செயலாக கருதப்படல் வேண்டும்.  அந்த வகையில் உலகிற்கே நாத்தி கத்தை தொடக்க காலம் முதலே வலியுறுத்திய மண் இந்த மண் என்பதை பறை சாற்றும் வகையில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டு நிகழ்ச்சிகள்

மூன்று நாள்கள் நடைபெறவுள்ள உலக நாத்திகர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெறும். முதல் நாள் தொடக்க விழா மற்றும் பன்னாட்டு நாத்திக அறிஞர்கள், ஆய்வறிஞர்களின் கட்டுரை வாசிப்பு, அதைத் தொடர்ந்து கட்டுரைச் செய்திகள் குறித்த விவாதம் நடைபெறும்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி முற்பகலில் தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெறும். மாநாட்டு பேராளர்கள் மாநாட்டு நினைவாக சுற்றுச் சூழலுக்கு ஆக்கம் கூட்டுகின்ற வகையில் மரக்கன்றுகளை பல்கலைக்கழக வளாகத்தில் நடுவார்கள். பல் கலைக் கழகத்தினை பார்வையிடும் அவர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கட்டுரை அரங்கம், பல்கலைக்கழகத்தில் நடைபெறும். பிற்பகல் நிகழ்வாக திருச்சியில் மாலையில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெறும். ஊர்வலத்தின் நிறைவில் திறந்த வெளி அரங்கில் பன்னாட்டு நாத்திக அறிஞர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

மூன்றாம் நாள் நிகழ்வில் ஆய்வுக்கட்டுரை வாசிப்பு மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாள்களும் தொடர் நிகழ்ச்சிகளுக்கிடையே நாத்திகக் கருத்துகளை வலியுறுத்திடும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாநாட்டினை ஒட்டி அறிவியல் கண்காட்சி மற்றும் திருச்சி - சிறுகனூரில் அமைந்திட உள்ள ‘பெரியார்’ உலகம் பற்றியகாட்சி அரங்கமும் ஏற்பாடு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு நிகழ் வாக மாணவர் அரங்கம் மற்றும் இளைஞர் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இளைய தலை முறையினர் பங்கேற்கும் நிகழ்ச்சியும் உண்டு.

பன்னாட்டு கட்டுரைப் போட்டி

உலகின் பல பகுதிகளிலிருந்தும் மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கும் ‘பன்னாட்டு கட்டுரைப் போட்டியும்‘ உலக நாத்திக மாநாட்டினை ஒட்டி நடைபெறும். முப்பாலாரும் பங்கேற்கும் கட்டு ரைப் போட்டிகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும். வெற்றி பெற்றோருக்கு மாநாட்டு அரங்கிலேயே பரிசுத்தொகை வழங்கப்படும்.
மாநாட்டு சிறப்பாக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் உறுதுணையுடன் நடைபெற பல்வேறு ஏற்பாடு மற்றும் நிர்வாகக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கழகத் தோழர்கள் தங்களது பங்களிப்பினை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றியோர்

தமிழர் தலைவரது உரைக்குப் பின்னர், உலக நாத்திகர் மாநாட்டில் தங்களது பங்கேற்பு மற்றும் பங்களிப்பு பற்றி பொறுப்பாளர்கள் உரை யாற்றினர்.

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், மண்டலப் பொறுப்பாளர்கள்: திருச்சி தலைவர் மு.நற்குணன், திருச்சி செயலாளர் ப.ஆல்பர்ட், தஞ்சை செயலாளர் மு.அய்யனார், புதுக்கோட்டை தலைவர் பெ.இராவணன், அரியலூர் தலைவர் சி.காமராசு, மாநில மகளிரணிச் செயலாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட பொறுப்பாளர்கள் திருச்சி தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தஞ்சை தலைவர் சி.அமர்சிங், புதுக்கோட்டை தலைவர் அறிவொளி, கரூர் தலைவர் ப.குமாரசாமி, பெரம்பலூர் தலைவர் தங்கராசு, குடந்தை தலைவர்  .................., பட்டுக்கோட்டை செயலாளர் பெ.வீரய்யன், அறந்தாங்கி தலைவர் க.மாரிமுத்து, லால்குடி தலைவர் தே.வால்டர், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள்: மாநில செயல் தலைவர் தகடூர் தமிழ்செல்வி, மாநில துணைத் தலைவர் வடசேரி வ.இளங்கோவன், மாநில பொதுச்செயலாளர் அழகர்சாமி, மாநில ஆசிரியரணி அமைப்பாளர் இரமேசு ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில் பங்கேற்ற பிற பொறுப்பாளர்கள்

அரியலூர் மண்டலச் செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்டப் பொறுப்பாளர்கள்: திருச்சி செயலாளர் இரா.மோகன்தாசு, தஞ்சை செயலாளர் அ.அருணகிரி, லால்குடி செயலாளர் ஆ.அங்கமுத்து, கும்பகோணம் செயலாளர் உள்ளிக்கடை துரைராஜன், அரியலூர்  தலைவர் நீலமேகம், பகுத்தறிவாளர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள்: தஞ்சை தலைவர் காமராசு, பெரம்பலூர் தலைவர் தங்கராசு, பெரம்பலூர் மாநகரம் மருதை, பெரம்பலூர் தலைவர் நடராசன், புதுக்கோட்டைதலைவர் சரவணன், தருமபுரி தலைவர் கதிர்.செந்தில், அரியலூர் தலைவர் தங்க.சிவமூர்த்தி, திராவிடர் கழக மாநில இளைஞரணி, துணைச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜெர்மன் மாநாடு பன்னாட்டு கட்டுரைப் போட்டி வெற்றியாளர் - பங்கேற்பாளர்களுக்கு  சான்றிதழ் வழங்கல்

கடந்த 2017 ஜூலை 27, 28 & 29 ஆகிய நாட்களில் ஜெர்மனி - கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநட்டினை ஒட்டி நடைபெற்ற இளைஞர்களுக்கான பன்னாட்டு கட்டுரைப்  போட்டி நடத்தப்பட்டது. வெற்றியாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டனர்.

திருச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் மூன்றாம் பரிசு பெற்ற பவதாரணி மற்றும் பங்கேற்ற 11 மாணவர்களுக்கு  பங்கேற்புச் சான்றிதழும்,  நினைவுப்பரிசாக Collected Works of PERIYAR E.V.R. எனும் ஆங்கில புத்தகமும் வழங்கப்பட்டன. பன்னாட்டு கட்டுரை போட்டியினை நடத்திய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவனின் சிறிய உரைக்குப் பின்னர், சான்றிதழினை அவர் வழங்கிட தமிழர் தலைவர் நினைவுப் பரிசாக புத்தகத்தினை மாணவர்களுக்கு வழங்கினர். பங்கேற்ற மாணவர்களுள் 10 பேர் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், ஒருவர் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆவார். மருந்தியல் கல்லூரி மாணவர்களை ஊக்கப்டுத்தி, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க துணைபுரிந்த பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.செந்தாமரை மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கடவுள் மறுப்பு முழக்கத்தினை கூறி திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் தொடங்கிட, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்தார். நிறைவாக திருச்சி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் இரா.மோகன்தாசு நன்றி கூறினர். கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் உணவருந்திச் சென்றனர்.
-விடுதலை,19.8.17

ஜெர்மனி மாநாட்டுக்குச் சென்ற பேராளர்களுக்குப் பாராட்டு


“உலகத் தலைவர் பெரியார்”, “ஜாதி ஒழிப்புப் புரட்சி”
நூல்கள் வெளியீட்டு விழா - பெரும் திரளாக மக்கள் வருகை



தமிழர் தலைவர் ஜெர்மன் மாநாட்டு வெற்றிக்கு உழைத்தோரைப் பாராட்டிப் பேசினார்.

சென்னை, ஆக. 21- ஜெர்மனி-கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக் கப் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்ற பேராளர்க ளுக்குப் பாராட்டும், நூல் வெளியீட்டு விழாவும் வெகு சிறப்புடன் நடைபெற்றது - பல்துறைப் பெரு மக்கள் ஏராளமாக வந்திருந்தனர்.

ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தில்  கடந்த ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாள்கள் நடை பெற்ற பெரியார் பன்னாட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் பங்கேற்ற பேராளர்களுக்கு பாராட்டுவிழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (20.8.2017) மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

மாநாட்டுக் காட்சிப்பதிவு

விழாவில் பெரியார் பன்னாட்டு சுயமரியாதை இயக்க  மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் காட்சிப்பதிவு திரையிடப்பட்டது. காண்போரை மாநாட்டு அரங்கத்தில் அமர்ந்து காண்பதுபோன்ற உணர்வை அளிக்கும் வண்ணம் மிகச்சிறப்பாக அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு காட்சி களாக திரையிடப்பட்டன.

நூல்கள் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய  உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு’ (தொகுதி 6) மற்றும் தந்தை பெரியார் பேச்சுகள், எழுத்துகளைக் கொண்ட தொகுப்பு நூலாக  ஜாதி ஒழிப்புப் புரட்சி  நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. இரண்டு நூல்களின் மதிப்பு ரூ.770, விழாவையொட்டி ரூ.600க்கு வழங்கப்பட்டது. ஏராளமானவர்கள் பெரி தும் ஆர்வத்துடன் உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டார்கள்.

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 6)  நூலை வரியியல் வல்லுநர் ச.இராசரத் தினம் வெளியிட்டு உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

ஜாதி ஒழிப்புப் புரட்சி  நூலை  கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட்டார்¢. அரூர் இராஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

நூலினை வெளியிட்ட கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் உள்ளிட்ட பேராளர்களுக்கும், தந்தை பெரியார் கொள்கைகளை பன்னாட்டளவில் பரப்பி வருகின்ற அவர்தம் பணிகளுக்கும் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.

ஜெர்மனி மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட பன்னாட்டு கட்டுரைப்போட்டியில் மருத்துவர் பிரியதரிசினி இராஜேந்திரன் முதல் இடம் பெற்றார். பேராசிரியர் நாகநாதன் மகன் மருத்துவர் எழிலன் வாழ்விணை யரான டாக்டர் பிரியதரிசினிக்கு 500 டாலர் முதல் பரிசுத் தொகையை பெரியார் பன்னாட்ட மைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் வழங் கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப் பரிசு மற்றும் இயக்க வெளியீடுகளை வழங்கிப் பாராட்டினார்.

அதேபோல் இரண்டாம் பரிசு பெற்ற உதயக்கு மாருக்கு பரிசு அளிக்கப்பட்டது.  போட்டியில் பங் கேற்ற 35 பேரில் சி.துரை, சி.ரம்யா உள்ளிட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டு

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் மருத் துவர் சிகாகோ இளங்கோவனின் பணிகளைப்பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

பெரியார் பன்னாட்டமைப்பின் ஜெர்மன்  கிளை யின் தலைவர் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் பணி களைப் பாராட்டி கழகப்பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி பயனாடை அணிவித்தார். நினை வுப் பரிசை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கினார்.

சுயமரியாதை இயக்கம் எனும் தலைப்பில் முதன் முதலில் ஆய்வு செய்த பேராசிரியர் முனைவர் ந.க. மங்கள முருகேசன் பணியைப்பாராட்டி மயிலை நா. கிருஷ்ணன் பயனாடை அணிவித்தார். தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் நினைவுப்பரிசை வழங்கினார்.

பெரியார் சுயமரியாதை  ஆங்கில நூலை எழுதிய பேராசிரியர் முனைவர் அ.அய்யாசாமி அவர்களைப் பாராட்டி பேராசிரியர் முனைவர் நாகநாதன் பயனாடை அணி வித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினை வுப்பரிசை வழங்கினார்.

நூற்றாண்டில் திராவிடன் இதழ்  நூலாசிரியர், ஆய்வியல் நிறைஞர் இரா.பகுத்தறிவு அவர்களைப் பாராட்டி புலவர் பா.வீரமணி பயனாடை அணிவித் தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப் பரிசை வழங்கினார்.

பெரியார் பன்னாட்டு சுயமரியாதை மாநாட்டின் நிகழ்வுகளை பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ள கழகத்தின் மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பணியைப்பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்தார்.

மாநாட்டின் அத்துணை சிறப்புக்கும் காரணமான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாநாட்டின் வெற்றி மகிழ்வில் பயனாடை அணிவிக்கப்பட்டது டாக்டர் சோம.இளங்கோவன் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
பேராளர்களுக்குப் பாராட்டு

மாநாட்டில் பங்கேற்ற பேராளர்களாகிய 92 வயது கணேசன், திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரி யர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார். மேலும், அனைத்து பேராளர்களுக்கும் கழகப்பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

தங்க.தனலட்சுமி, கொடுங்கையூர் கோ.தங்கமணி, வெற்றிசெல்வி கலி.பூங்குன்றன், தாம்பரம் பி.சி. செயராமன், தாம்பரம்  மாவட்டத் தலைவர் ப.முத் தய்யன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன், அரக்கோணம் கு.சோமசுந்தரம்,  கோபிசெட்டிப் பாளையம் இராஜமாணிக்கம், செம்பனார்கோயில் அன்பழகன், கரூர் வழக்குரைஞர் இராசசேகரன், கள் ளக்குறிச்சி ம.சுப்பராயன், மதுரை முனியசாமி, எழுத் தாளர் கலைச்செல்வன், வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன், அமைப்புச்செயலாளர் ஊமை.செயரா மன்,   பகுத்தறிவாளர் கழக செயலவைத் தலைவர் தகடூர் தமிழ்செல்வி, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, குவைத் பெரியார் நூலகம் லதாராணி, அரூர் பகுத்தறிவாளர் இராசேந்திரன், காரைக்கால் நாராயணசாமி, முனைவர் தேவதாஸ், திருவாரூர் கோவிந்தராஜன், பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் உதவியாளர் தேசிங், மருத்துவர் சரோஜா இளங்கோவன் மற்றும் மோகனா வீரமணி அம்மையார் ஆகியோருக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ், மருத்துவர் சோம.இளங்கோவன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு தங்க.தனலட்சுமி பயனாடை அணிவித்து பாராட்டி மகிழ்ந்தார். திருச்சியில் 2018ஆம் ஆண்டு சனவரியில் நடைபெற உள்ள உலக நாத்திகர் மாநாட்டு நிதியாக தங்க.தனலட்சுமி, தங்கமணி இணையினர் ரூபாய் 10ஆயிரம் தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் எழுதிய நாகம்மையார் வாழ்க்கை வரலாறு நூல் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.

பெரியார் திடலில் இயங்கிவருகின்ற பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு குருதிஅழுத்த சோதனைக்கருவியை பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்  மகள், மருமகன் வழங்கினார்கள்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை பட்டயம் பகுதிநேர படிப்புகுறித்த அறிவிப்பை முனைவர் தேவதாஸ் வெளியிட்டார்

பாராட்டப்பட்ட பேராளர்கள் உரை

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர்  மருத்துவர் சோம.இளங்கோவன் (யு.எஸ்.ஏ-.), பெரியார் பன்னாட்டமைப்பு ஜெர்மனி கிளைத் தலைவர் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ், பேராசிரியர் அ.அய்யாசாமி, முனைவர் ந.க.மங்கள முருகேசன், ஆய்வியல் நிறைஞர் இரா.பகுத்தறிவு ஆகியோர் உரையாற்றினார்கள்.

விழா நிறைவாக  உலகெங்கும் பெரியார்  எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

விழா முடிவில் மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறினார்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, வடசென்னை பகுத்தறிவாளர்கழகம் தங்க.தனலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், புதுவை மாநிலத் தலைவர் சிவ. வீரமணி, மதுரை முனியசாமி, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், கோவிந்தராஜ், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் ச.இ.இன்பக்கனி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செந்துறை இராசேந்திரன், கொடுங்கையூர் தி.சே.கோபால், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன், அரக்கோணம் கு.சோமசுந்தரம், லதாராணி, பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் புதுவை நடராசன், பகுத்தறிவாளர் கழக செயலவைத் தலைவர் தகடூர் தமிழ்செல்வி, அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், சைதை மதியழகன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் நாத்திகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் காரைக்குடி சாமி.திராவிடமணி, க.பார்வதி, திருவாரூர் மண்டலத் தலைவர் ஜெகதீசன், திருவண்ணாமலை கவுதமன், செம்பனார்கோயில் அனபழகன், மருத்துவர் க.வீரமுத்து உள்ளிட்ட ஏராளமானவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டார்கள்.



.





-விடுதலை,21.8.17

சனி, 19 ஆகஸ்ட், 2017

நாத்திகம் பற்றி  வெளிநாட்டு அறிஞர்கள் 


* நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன். 
(ஜான் புச்சன், ஸ்காட்லாந்து, வரலாற்று ஆசிரியர்)

* நான் ஒரு நாத்திகன் பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
(க்ளாரென்ஸ்டாரோ, வழக்கறிஞர்)

* தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே, வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
(ஆம்ப் ரோஸ் பியர்ஸ், அமெரிக்க எழுத்தாளர்)

* கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள் களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
(ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப் பெயர் கொண்ட என்றி வீலர் ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்)

* கடவுள் என்பது அகராதியில் கடவு(வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது
(சாமுவேல் பட்லர், ஆங்கில நாவலாசிரியர்)

* மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது. 
(ஃப்ரங்களின், அமெரிக்க விஞ்ஞானி)

* இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல. இல்லாத ஒன்றே கடவுள்.
(கூர்மான்ட், ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)  
-விடுதலை,11.8.17

இங்கர்சால்

இராபர்ட் கிரீன் இங்கர் சாலின் தந்தை ஒரு கிறித்தவ சபை போதகராவார். சிறுவயதி லிருந்தே கூரிய சிந்தனைத் திறன் பெற்றவ ராக திகழ்ந்தார். உயர்கல்விக்குப் பின் சட்டப் படிப்பை பயின்றார். அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது படைத்தளபதியாக பணியாற்றி னார். போர் முடிந்ததும் அரசிய லில் நுழைந்தார்.

கடவுளே இவ்வுலகைப் படைத்தார், சில விதிகளை வகுத்தார், மனிதர்களைப் பல கீன மானவர்களாகவும், அறி யாமையில் உழல்பவர்களாக வும் விட்டு விட்டார் என்பன போன்ற சிந்த னைகளைக் கண்டு சீறினா£ர். மனிதர்கள் இவ்வுலகில் துன்பப் பட்டாலும், மறுஉலகில் இன்பம் பெறுவர் எனும் நம்பிக்கையையும், துன் பம் மனிதனை தூய்மை யாக் கும் போன்ற கோட்பாடுகளை யும் குறித்து வைத்துத் தாக்கி னார். அவரது கொள்கைப் பிடிப்பின் காரணமாகவும், நேர் மையினாலும், திறமையினா லும் இல்லியான்ஸ் மகாணத்தின் ஆளுநராகும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போது அரசியல் தலைவர்களின் பிரதிநிதிகள் இங்கர்சாலை சந்தித்து தங்கள் சமயம் சார்ந்த விமர்சனங் களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே தங் களது பெயரை ஆளுநர் பதவிக்கு பரிந்துரைப் போம் என்றனர்; கொள்கைக்கு முன் கோட்டை முக்கியமல்ல என்று கர்ச்சித்தார்.

மனிதர்கள் மீதுகொள்ளும் அன்பே உலகிலேயே தலை சிறந்த கொள்கை என்றார். இறை நம்பிக்கை, போதனை, பிரார்த் தனை இவற்றைவிட மனிதர் களை அன்பு செய்வதே உயர்ந் தது என வாதிட்டார். மனிதனை நேசிப் பதே முக்கியம் என்றார்.

பெரும்பாலான கடவுள் களை ஆண்களாக படைத்தது ஏன் என்று கேட்டார். பெண் களை தொடர்ந்து ஆண் களுக்கு அடங்கி உள்ளவர் களாக வைத்துக்கொள்ளுவதற் கான ஒரு ஏற்பாடே மதமும், கடவுளும் என்றார்.  இங்கர்சால் பகுத்தறிவு அறிஞராக மட்டுமல் லாமல் பகுத் தறிவுக் கருத்துப் பரப்புரையாளராகவும் விளங்கி னார். அவரது கூட்டங்களுக்கு வரும் மக்கள் வெள்ளத்தால் மதகுரு மார்க ளுக்கு பெரும் அச்சமூட்டுப வராக இங்கர்சால் இருந்தார். கடவுள் நம்பிக் கையாளர்களும் பெருந்திர ளாகக் கட்டணம் கொடுத்து இங்கர்சாலின் உரை வீச்சினைக் கேட்கக் காத்திருந் தனர்.

ஒருமுறை ஞானஸ்தானம் பற்றிய உங்களது கருத்து என்ன? என்று இங்கர்சாலிடம் கேட்ட பொழுது ஞானஸ் தானத்தை விட சோப்புஸ்தானம் சிறந்தது எனப் பளிச்சென பதில் கூறினார். கேலி, நகைச்சுவை அவர் உரையில் ததும்பும்.

மனிதநேய மாண்பாளர் இங்கர்சால்  1899ஆம் ஆண்டு மறைந்தார்.

தந்தை பெரியார் கொள்கை யைப் பெரும்பாலும் ஒத்ததாக இருந்தது இங்கர்சாலின் கருத்து. தந்தை பெரியார் போலவே பிரச்சாரத்தின்மூலம் பெரும் மாற்றத்தைக் கண்ட மாமேதை இங்கர்சால்.

இன்று அவர் பிறந்த நாள் (1883)

- மயிலாடன்

-விடுதலை,11.8.17

புதன், 9 ஆகஸ்ட், 2017

ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு




-விடுதலை,9.8.17

ஜெர்மனி பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு

காவிரிக்கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் 
ஜெர்மனி ரைன் நதிக்கரையில் கிளைத்தன!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை


ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற "பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில்" காவிரிக் கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ஜெர்மனி ரைன் நதிக் கரையில் கிளைத்தன! என இம்மாநாட்டை தலைமையேற்று நடத்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:-
2017 ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாள்களும் பெரியார் தொண்டர்கள், பெரியார் மாணாக்கர்கள், பெரியார் பற்றாளர்கள், கருஞ்சட்டையினர், பகுத்தறிவாளர்கள், திராவிடர் இயக்கத்தினர் ஆகியோர் தம் வாழ்வில் தனிப் பெரும் திருவிழா நாள்கள் ஆகும்!
உண்ணத் தெவிட்டாத
உன்னத மருந்து
காரணம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பும் (றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ), தமிழகத்தின் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து ஜெர்மனியில் கொலோன் நகரத்தில் உள்ள கொலோன் பல்கலைக்கழக வளாகத்தில் "பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு" என்ற தலைப்பில் பெரியார் தந்த தத்துவங்களின் மய்யமான சுயமரியாதைக் கொள்கை - லட்சியத்தினை முன்னிறுத்தி, பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளை முன்னெடுத்து நடத்திய மூன்று நாள் மாநாடும், அதன் ஆழமான கருத்தரங்கக் கட்டுரைகளும், கருத்துரைகளும் பகுத்தறிவாளர் - சுயமரியாதை இயக்கத்தவர்களின் உண்ணத் தெவிட்டாத உன்னத மருந்தேயாகும், அரிய உணவு ஆகும்!
தனி வரலாறு படைத்தது!
ஜெர்மன் பல்கலைக்கழக தமிழாராய்ச்சித் துறைத் தலைவரும், ஜெர்மனி பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவராக சிறப்புடன் செயல்படுபவருமான பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் அம்மையார் அவர்கள் தலைமையில் அமைந்த வரவேற்புக் குழுவினர் அம்மாநாட்டினை மூன்று நாள்களிலும் நடத்திய ஒழுங்கும், கட்டுப்பாடும், செறிவும் நாம் அனைவரும் மூக்கில் விரலை வைத்து வியக்கத்தக்க வகையில் நடந்தேறி தனி வரலாறு படைத்தன! அம்மாநாட்டில், இதுவரை
கண்டறியாதன கண்டோம்!
கேட்டறியாதன கேட்டோம்!!
உணர்ந்தறியாதன உணர்ந்தோம்!
எம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனான யான் அம்மாநாட்டில் தலைமை தாங்கும் வாய்ப்புப் பெற்றமை எனக்கு பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பெற்றதையும் விட கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு பெரியார் மாணவனுக்கு இதைவிடப் பேறு  வேறு ஏது?
பெரியார் பன்னாட்டு அமைப்பினருக்கு எமது தலைதாழ்ந்த நன்றிப் பெருக்கு உரியதாகும்.
இவ்வாண்டல்ல; இரண்டாயிரம் - புத்தாயிரத்தில் நம் இலக்கு - "பெரியாரை உலக மயமாக்குவோம்" என்பதாகும்!
அது கனவல்ல; கானல் நீரல்ல! இதோ செயல் வடிவம்!
ரைன் நதிக்கரையில்
2017இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு. அதுவும் விஞ்ஞானிகளையும், தத்துவ மேதைகளையும், வரலாற்றுப் புரட்சியாளர்களையும் தந்த ஜெர்மனி நாட்டின் ரைன் நதிக்கரையில்...!
காவிரிக் கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ஜெர்மனி ரைன் நதிக்கரையில் கிளைத்தன!
பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான மானமிகு டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சரோஜா இளங்கோவன், டாக்டர் திருமதி - திரு. சித்தானந்தம் சதாசிவம் போன்றவர்கள் பங்கு பெற்றதும், பல்வேறு கருத்துரைகளை அளித்ததும்,
இங்கிலாந்து நாட்டின் கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் மானமிகு தோழர் மைக்கேல் செல்வநாயகம் அவர்கள் கலந்து கொண்டதும் (அவர்தான் இவ்வாண்டு பெரியார் பன்னாட்டு அமைப்பின் இங்கிலாந்து கிளைக்கு தலைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளவர்), கொலோன் பல்கலைக்கழக மாணவர்கள், பிராங்க்பர்ட்டில் பணியாற்றும் பெரியார் கொள்கைப் பற்றாளர்கள், பிரான்சின் பாரிசிலிருந்து வந்த பெரியார் பற்றாளர் திருமதி. சுசிலா எத்துவால் உள்ளிட்ட ஏராளமான பன்னாட்டு பேராளர்கள் பங்கேற்றது பெருமகிழ்வுக்குரிய செய்தியாகும்.
தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, கழக வெளியுறவுச் செயலாளர் தோழர் வீ.குமரேசன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், டாக்டர் எஸ்.தேவதாஸ், டாக்டர் த.ஜெயக்குமார், ஆய்வாளர் எம்.விஜயானந்த், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் எஸ்.எஸ்.சுந்தரம், முனைவர் ஆ.கலைச்செல்வன், கவிஞர் லதாராணி, 92 வயதினை எட்டிய மூத்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கணேசன் ஆகியோருடன் மொத்தம் 8 மகளிர் உள்பட 41 பேர், பேராளர்களாக கலந்து கொண்டது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
சுயமரியாதை 
ஒளி விளக்காக!
தந்தை பெரியார்தம் சுயமரியாதைக் கொள்கையின் தேவை, சிறப்பு பற்றி சுவீடன் நாட்டு உபாசலா பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டர் சால்க் (இவர் வாழ்விணையருடன் வந்து கலந்து கொண்டார் - தமிழ் அறிந்த பேராசிரியரும் கூட) கொலோன் பல்கலைக் கழகத்தில் மாணவியாகப் பயின்று டாக்டர் பட்டம் பெற்று பணியாற்றி வரும் தோழர் டாக்டர் சிர்.உன்ரா, கொலோன் பல்கலைக்கழக அறிவியல் துறை பேராசிரியரும், மேற்சொன்னவரின் வழிகாட்டிப் பேராசிரியருமான டாக்டர் உல்ப் காங்க், தந்தை பெரியார் பெண்ணுரிமை, மனித நேயம் பற்றிய ஈழத்தில் பிறந்து, ஜெர்மனியில் பல்லாண்டாக வாழும் தமிழறிஞர், சமூக சேவையாளர், பேராயர் இமானுவேல் பாதிரியார் அவர்களின் உரை, அவ்வுரையில் முகமூடிகள் கழற்றப்பட வேண்டும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வர பெரியார் சுயமரியாதை ஒளி விளக்காக பயன்படும் என்று விளக்கிய கருத்துரைகள் மறக்க முடியாத பரவசம் தந்த பாடங்கள்!
பெரியார் என்ற கருத்துக்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்கள் ஜொலித்தன!
மாநாட்டின் மூன்றாம் நாளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தந்தை பெரியாரின் கொள்கைகள், தத்துவங்கள் உலக மயமாக உறுதியேற்ற வரலாற்று முக்கியமான தீர்மானம் ஆகும்! ஈராண்டுக்கொரு முறை வெவ்வேறு நாடுகளில் இம்மாநாடுகள் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த மாநாடு 
அமெரிக்காவில்
டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் அடுத்த மாநாடு (2019) அமெரிக்காவில் நடைபெறும் எனக் கூறி, வாய்ப்பை மற்றவர்களிடமிருந்து தட்டிப் பறித்துக் கொண்டார்.
ஜெர்மனி மொழியில் பெரியார் நூல்களை மொழியாக்கம் செய்து உதவிய பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மென், கொலோன் பல்கலைக்கழக தமிழாய்வுத் துறையைச் சேர்ந்த கிளாடியா ஆகியோரும் அரும்பணியாற்றினர்.
இவர்கள்தம் வழிகாட்டியான பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ், பெரியார் வாழ்க்கைக் குறிப்புகளை ஜெர்மனி மொழியாக்கம் செய்த நூலும், பேராசிரியர் அய்யாசாமியின் ஆங்கிலக் கட்டுரை - சுயமரியாதை இயக்கம் பற்றியும், அய்யா நினைவிடக் கல்வெட்டு வாசகங்கள். கருத்து மொழிகளடங்கிய ஆங்கில வெளியிடப்பட்டன.
மாநாட்டின் இறுதியில் பெரியார் தொண்டர்கள் இம்மாநாட்டிற்கு வந்து கலந்துறவாடி, கருத்துப் பரிமாற்றப் பருகுதலின் பின் "25 வயது வாலிபர்களாகவே நாடு திரும்புகிறோம்" என்ற உணர்வுடன் புத்தாக்கம் பெற்றனர். ஜெர்மனி பெரியார் குடும்பத்திற்கு நமது நன்றி! நன்றி!! எனத் தெரிவித்தது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.
“விரிவான நடவடிக்கைகள் பின்!".
சென்னை                                                                                                                       தலைவர்
7.8.2017                                                                                                                   திராவிடர் கழகம்

ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு-2




-விடுதலை,7.8.17

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

ஜெர்மனியில் தந்தை பெரியார்


கவிஞர் கலி. பூங்குன்றன்



இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் சென்ற ஜெர்மனிக்கு அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் தமிழ் நாட்டிலிருந்து 41 பேராளர்கள் வரும் 26ஆம் தேதி பிற்பகல் புறப்படுகின்றனர்.

எதற்காக? ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாள்களிலும் நடைபெறும் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்கத்தான் செல்லுகின்றனர்.

எதற்காக? மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று 60 ஆண்டுகளுக்கு முன் பாடினாரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - அந்தத் தலைவரின் தத்துவத்தை மய்யப் பொருளாக வைத்து நடத்தப்பட உள்ள மாநாட்டில் பங்கு கொள்ளத்தான் செல்லு கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, தமிழ்நாடு, பிரான்சு முதலிய நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் பங்கேற்க இருக் கின்றனர். தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கத் தத்துவம் குறித்து ஆய்வுக் கட் டுரைகளை அளிக்க இருக்கின்றனர்.(Inter National Conference on Periyar Self Respect Movement)

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள் ஒரு முறை சொன்னார். “திரு. இராமசாமி நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லி மெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?” என்று சொன்னார்.

நான்காம் வகுப்புப் படித்த தலைவரின் கொள்கைச் சித்தாந்தங்களை நாடுகளைத் தாண்டிப் பரப்பிட பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar InterNational) அமெரிக் காவின் சிகாகோ நகரில் உருவாக்கப்பட்டது (13.11.1994).

இன்று அமெரிக்கா, லண்டன், பிரான்சு, மியான்மா, சிங்கப்பூர், துபாய், குவைத், ஜெர்மனி முதலிய நாடுகளில் கிளை பரப்பி அய்யாவின் கருத்துக்களைப் பரப்பும் அரும் பணியில், பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெர்மனியில் 2014 ஜூன் 6ஆம் தேதி உருவாக்கப்பட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளையின் தலைவராக பேராசிரியர் டாக்டர் யுர்லிக் நிக்லசு, துணைத் தலைவராக கவன்வோர்ட், செயலாளராக கிளவுடியா வெப்பர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
2014 ஜூன் மாதம் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவ லரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் மானமிகு கி. வீரமணி சென்றார்.

ஜூன் 3ஆம் தேதி மாலை “திராவிட இயக்கமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைத் தத்துவமும்” எனும் தலைப்பில் அரிய உரையாற்றினார்.

மறுநாள் கொலோன் பல்கலைக் கழகத்தில் (4.6.2014) “இந்தி எதிர்ப்பு இயக்கம்” எனும் தலைப்பில் மாணவர் களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் “பவர் பாய்ண்ட்” வழி ஆய்வுரை வழங்கினார்.

ஓர் இணையருக்குச் சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். அங்கு சென்றபோது தான் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளை தொடங்கப் பட்டது.

இந்தப் பெரியார் பன்னாட்டு  அமைப்பு தான் ஆண்டுதோறும் “சமூக நீதிக்கான வீரமணி விருதை” வழங்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 17 பேருக்கு அளிக் கப்பட்டுள்ளது.

ஜெர்மனி மாநாட்டிலும் இறுதி நாளன்று (29.7.2017) மைக்கேல் செல்வநாயகம் (துணைமேயர், கிராட்டன் மாநகராட்சி இங்கிலாந்து) அவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட உள்ளது.

(விரிவான நிகழ்ச்சி நிரல் 13ஆம் பக்கத்தில் காண்க!)

50 ஆண்டுகளுக்கு முன் இதே ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் உலகத் தத்துவ அறிஞர்களின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டைப் பொறுப் பேற்று நடத்தியவர் உலகப் பேரறிஞர் என்று போற்றப்படும் வால்டர் ரூபன்; மாநாட்டின் ஓய்வு நேர இடைவேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா உள்ளிட்ட சில இந்திய அறிஞர்களுடன் உரையாடினார்.

அப்பொழுது வால்டர் ரூபன் ஒரு வினாவை முன் வைத்தார்.

“இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத  மகத்தான மானுட ஆளுமையாளர் யார்? (Who is the Unpreceded  Human Personality of the Present India?)என்பதுதான் அந்த அர்த்தமிக்க வினா.

காந்தி என்றனர், நேரு என்றனர். அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை அந்தப் பேரறிஞர்.

“நீங்களே சொல்லி விடுங்கள்” என்றனர் அந்த உரையாடலிலே பங்கு கொண்ட இந்திய அறிஞர்ப் பெரு மக்கள்.

உலகப் பேரறிஞர் வால்டர் ரூபன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம் அல்லது வைதீகம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக, மூர்க்கமாகப் போராடுகிறவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி தான்!” என்று பட்டை தீட்டிய வகையில் பதில் அளித்தார் அந்தப் பேரறிஞர்.

இந்தத் தகவலைத் தெரிவித்தவர் யார் தெரியுமா? சாகித்ய அகாடமியின் முக்கியப் பொறுப்பாளரும், பிரபல எழுத்தாளருமான பொன்னீலன் அவர்கள்.

தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் என்பது உலகளாவிய “பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்” என்ற கருப்பொருளைக் கொண்ட தாகும்.

2017 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு மய்ய மாநாட்டுக்குச் செல்லுகிறோம் என்றால் இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அந்நாட்டுக்குச் சென்றதை எண்ணிப் பார்க்கிறோம். 19.5.1932 முதல் 14.6.1932 வரை 27 நாள்கள் ஜெர்மனியிலே எஸ். இராமநாதன், இராமு ஆகியோர்களுடன் தந்தை பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

தந்தை பெரியார் சென்ற அம்மண்ணுக்கு தமிழர் தலைவர் தலைமையில் 41 இருபால் தோழர்களும் பயணிக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரியதே!

பன்னாட்டு அறிஞர் பெரு மக்கள் தந்தை பெரியார்தம் சுயமரியாதை  இயக்கத் தத்துவத்தின் மீது ஆய்வுரைகளை வழங்க உள்ளனர்.

பெரியார் காணும் சுயமரியாதை எத்த கையது என்பதை படம்பிடிக்கக் காத்திருக் கின்றனர். தந்தை பெரியார் பார்வையில் உலக விழிப்புக்கும், மாற்றத்திற்குமான பல அரிய சிந்தனை வித்துகளை எதிர்ப் பார்க்கலாம்.

26 ஜூலையில் புறப்படும் தோழர்கள் சில அய்ரோப்பிய நாடுகளிலும் (சுவிட்சர் லாந்து, இத்தாலி, பாரீஸ்) சுற்றுப்பயணம் சென்று  ஆகஸ்ட் 8ஆம் தேதி பிற்பகல் சென்னை திரும்புவர்.

தந்தை பெரியார்பற்றி பழி தூற்றும் தக்கைகளின் கண்கள் இதற்குப் பிறகாவது திறந்து புத்தி தெளிவு கொண்டால்  மகிழ்ச்சியே!
பார்ப்பனர்கள் பதைப்பது புரிகிறது - பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று ஆக்கிக் கொண்டு, அவர்களின் தொங்கு சதைகளாக இருக்கின்றவர்கள் தான் திருந்த வேண்டும். எங்கே பார்ப்போம்!
-விடுதலை ஞாயிறு மலர்,22.7.17