மாநாட்டு ஆய்வரங்கில் ஆழமான ஆய்வுரையாற்றிய ஆராய்ச்சி மாணவி டாக்டர் சிர்.உன்ரா அவர்களுக்கு பெரியார் மணியம்மை
பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி அவர்கள் பெரியார் புத்தகங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கொலோன், ஜூலை 29 பெரியார் சுயமரியாதை தத்துவம் மற்றும் இயக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அரங்க நிகழ்வுகள் பன்னாட்டு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகளாக சிறப்பாக நடைபெற்றன.
முதல் ஆய்வரங்கின் தலைவரான தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆய்வரங்க கட்டுரைகள் பற்றிய செய்திகளுடன் சுயமரியாதை இயக்க வரலாற்றுப் பதிவுகளைப் பற்றிய ஓர் ஆய்வுரையினை தொடக்கத்தில் வழங்கினார்.
பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவரான பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் "சுயமரியாதை : சமூக மற்றும் மனித விடுதலைக்கான சிறந்த தனித்துவக் கருவி ஒரு வரலாற்று ஆய்வு" எனும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரை உரையினை வழங்கினார். அடுத்து சுவீடன் நாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ஸால்க் "சுயமரியாதை" எனும் தலைப்பில் பல்வேறு வரலாற்றுப் படைப்புக் குறிப்புகள் உள்ளடக்கிய உரையினை ஆற்றினார். பின்னர் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழக டாக்டர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவி டாக்டர் சிர்.உன்ரா "அரசர் வெளிப்படையாக இருக்கிறார் - பகுத்தறிவு, விமர்சனம் மற்றும் வீரிய அரசியல் செயல்பாடு" எனும் தலைப்பில் ஆழமான ஆய்வுரையினை வழங்கினார்.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இரண்டாம் ஆய்வரங்க நிகழ்வுகள் தொடங்கின.
இரண்டாம் ஆய்வரங்க அமர்விற்கு அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தலைமை வகித்துப் பேசினார்.
கொலோன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவரும், மாநாட்டில் வெளியிடப்பட்ட "பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம்" நூலின் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளருமான ஸ்வென் வொர்ட்மன் "வரலாற்றுக் காலங்களில் இந்தியாவில் பகுத்தறிவு" எனும் தலைப்பில் தமது ஆய்வினை வழங்கினார். கொலோன் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர் டாக்டர் உல்ப்காங்க் லைட்டோல்டு "அரசியல் அமைப்பு சாசனம் - அய்ரோப்பிய அரசியல் எண்ணங்கள்" எனும் தலைப்பில் தாம் வெளியிட உள்ள ஆராய்ச்சி நூலின் சுருக்கத்தினை உரையாக முழங்கினார். அடுத்து புலம் பெயர்ந்த ஈழத் தமிழரும், தமிழீப்போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்தவருமான டாக்டர் எஸ்.ஜே. இமானுவேல் "சுயமரியாதையும் மானுடமும்" எனும் தலைப்பில் தமது அனுபவங்களை ஆய்வுரையாக அளித்தார். பின்னர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் "பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்"தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் த. ஜெயக்குமார் "சுயமரியாதைக் கோட்பாடு - பெரியாரின் மனிதநேயப் பார்வை" எனும் தலைப்பில் பெரியாரது பொது வாழ்க்கை பற்றிய சுருக்கத்தினை ஆய்வுக் கட்டுரையில் வழங்கினார்.
நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆய்வரங்கத்தின் மூன்றாம் அமர்வு தொடங்கியது. அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் தலைமை உரையாற்றினார். அமெரிக்கா வாழ் மருத்துவர் சரோஜா இளங்கோவன், "பெரியாரும் மகளிர் அதிகாரத்துவமயமும்" எனும் தலைப்பில் தமது ஆய்வினை வழங்கினார். அடுத்து பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் எஸ்.தேவதாஸ் "பெரியார் சுயமரியாதை இயக்கம் - சமூக மாற்றத்திற்கான கருவி" எனும் தலைப்பில் கட்டுரையினை சமர்ப்பித்து உரையாற்றினார். பின்னர் திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர்
வீ. குமரேசன் "நாத்திக தத்துவ அறிஞர்கள்: பெரியார் ஈ.வெ.ராமசாமி மற்றும் பிரெட்ரிக் நீட்சே - ஓர் ஒப்பீட்டு ஆய்வு" எனும் தலைப்பில் ஓர் ஆய்வினை உரையாக அளித்தார்.
ஆய்வரங்கத்தில் பங்கேற்ற ஒவ்வொரு அறிஞர், சான்றோர், செயல்பாட்டாளர்களின் ஆய்வுரைக்குப் பின்னர் பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு, ஆய்வுரையினர் விளக்கம் அளித்தனர்.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நடைபெற்ற கலந்துறவாடல் களத்தில் பேராளர்கள் பங்கேற்றனர். தொடக்க உரையினை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆற்றினார். பின்னர் குவைத் புரட்சி மேதை தந்தை பெரியார் நூலகத்தின் சார்பில் பங்கேற்ற கவிஞர் லதாராணி பூங்காவனம் உரையாற்றினார். "சமூகப் புரட்சி 1929 சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டு தீர்மானங்கள் - நடைமுறை ஆக்கங்கள்" எனும் தலைப்பில் களத்தில் பங்கேற்றோர் கருத்துரை வழங்கினர். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி "சுயமரியாதை இயக்கம்" பற்றிய தம் ஆங்கிலக் கவிதையினை வாசித்தார்.
நிறைவாக கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வரலாற்றுக் குறிப்புகளுடன் தமது தலைமை உரையினை உணர்ச்சிப் பெருக்குடன் வழங்கினார். நிகழ்ச்சியினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தொகுத்தளித்தார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக பேராளர்களின் ஆர்வமிகு பங்கேற்புடன் நிறைவடைந்தன.
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன் ஆய்வுரையாற்றுகிறார்
ஜெர்மனியில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
கொலோன், ஜூலை 29 பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி. அந்தக் கொள்கையைப் பின்பற்றினால், வாழ்க்கையில் தோல்வி ஏற்படுவதற்கே இடம் இல்லை. பெரியார் கொள்கைகள் இன்றைக்கு உலகம் முழுவதும் தேவைப்படுகின்ற, மனித சமுதாயத்தை வழிநடத்துகின்ற ஒரு கொள்கைவழியாக இருக்கிறது. அந்தக் கொள்கை வழியை நாம் பின்பற்றுவோம் - தொடருவோம் என்றார் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் (28.7.2017) இரண்டாவது நாள் நிகழ்வான கலந்துறவாடல் நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவரது உரை வருமாறு:
மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு மாநாட்டிலே எளியவன் ஆகிய நான் உரையாற்றக்கூடிய இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த அனைவருக்கும் முதலில் என்னுடைய வணக்கத்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் - அன்னை மணியம்மையாருக்கு வீர வணக்கம்!
என்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன், நம்முடைய சமுதாயத்தில் அடிமட்டத்தில் இழிவையே சுவையாக, ருசியாகக் கருதி வாழ்ந்த சமுதாயத்தில் ஒரு தன்மான உணர்ச்சியை உண்டாக்கி, ஒரு வாழ்க்கை நெறியை நமக்கெல்லாம் உருவாக்கிக் கொடுத்த தந்தை பெரியார் அவர்களுக்கு வீர வணக்கத்தைத் செலுத்துகிறேன்.
அவரை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, தன்னுடைய வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்து, தன்னுடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டு தந்தை பெரியாரை வாழ வைத்த அன்னை மணியம்மையார் அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.
தமிழர் தலைவருக்கு நன்றி!
தந்தை பெரியார் அவர்களுக்குப் பின்னால், இந்த இயக்கம் இருக்குமா? என்று கேள்வி கேட்டவர்கள் உண்டு. இருக்கக்கூடாது என்று ஆசைப்பட்டவர்கள் உண்டு. இவர்கள் மத்தியில் இந்த இயக்கம் இருக்கும் - இன்னும் சிறப்பாக இருக்கும். தந்தை பெரியாரின் கொள்கைகளை உலக முழுவதும் பரப்புகின்ற வகையில் இருக்கும். ஜெர்மனியில் மாநாடு நடக்கிறது என்கின்ற அளவிற்கு இந்த இயக்கத்தை வளர்த்த இயக்கத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் காலங்கடந்தும்
வெற்றி பெற்றிருக்கிறார்
ஜெர்மனிக்கு தந்தை பெரியார் அவர்கள் ஒரு பார்வையாளராக வந்தார். நம்முடைய தலைவர் அவர்கள் சொன்னதுபோல, பார்வையாளராக வந்த அந்தத் தலைவருக்கு, அந்த ஜெர்மனியில், அவரையே கருப்பொருளாகக் கொண்டு ஒரு மாநாடு நடைபெறுகிறது என்று சொன்னால், உள்ளபடியே தந்தை பெரியார் காலங்கடந்தும் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் கண்டிப்பாக சொல்லவேண்டும்.
தந்தை பெரியாருக்கு, ஞானகுரு என்று யாரும் கிடையாது. தனக்குத் தானே குரு என்ற நிலையை அவர் ஏற்படுத்திக் கொடுத்தவர். திருவள்ளுவரைப்பற்றி சொல்லும்பொழுதுகூட, நான் சொன்ன கருத்தை திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார் என்று சொல்வாரே தவிர, திருவள்ளுவர் சொன்ன கருத்தை நான் சொல்கிறேன் என்று என்றைக்குமே அவர் சொல்லியது கிடையாது. அது உண்மை. அழகுக்காக சொல்லப்பட்ட கருத்தல்ல அது. அந்த மாபெரும் தலைவருடைய சிந்தனைகள் இன்றைக்கு உலகிற்கே தேவைப்படுகின்ற ஒரு காலகட்டம்.
மதவாதம் இன்றைக்கு உலகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப்பற்றி கேட்க வேண்டியதேயில்லை. ஆகவே, ஒரு சுயமரியாதைப் பகுத்தறிவு சமுதாயத்தை - ஒப்புயர்வு சமுதாயத்தை உலகத்தில் உண்டாக்குவதற்கான ஒரே தத்துவத்தை கொடுத்த தலைவர் தந்தை பெரியார் என்பதை உலகம் முழுவதும் நாம் கொண்டு செல்கின்றோம்.
அதுவும் இந்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இருக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமிருக்க முடியாது.
தந்தை பெரியாருடைய கருத்தை உலகம் முழுவதும் பரவச் செய்வதற்காக, பெரியார் பன்னாட்டு மய்யம் என்கிற அமைப்பை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும், குறிப்பாக அந்த அமைப்பைச் சிறப்பாக நடத்தக்கூடிய நம்முடைய டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் இலக்குவன்தமிழ் போன்றவர்களுக்கும் இந்த நேரத்தில் நாம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் நகராட்சித் தலைவராக இருந்தபொழுதுகூட, கொங்கப் பறைத் தெரு என்று இருந்த தாழ்த்தப்பட்டவர் தெருவுக்கு, திருவள்ளுவர் தெரு என்று பெயர் சூட்டியவர்.
அவர் காங்கிரசுக்குச் சென்றதுகூட என்ன காரணம் என்றால், காந்தியாருடைய நிர்மாணத் திட்டங்கள்தான். அதுதான் அவரைக் கவர்ந்து இழுத்தது. சுதந்திர இந்தியாவிற்காகப் பாடுபடுகின்றோம் என்பதைவிட, காந்தியாரின் நிர்மாணத் திட்டம் அவரைக் கவர்ந்தது. அதே காந்திதான், வர்ணாசிரமத் தருமத்தைக் காப்பாற்றுவதுதான் எனது பணி; ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவதுதான் எனது பணி என்று சொன்னபோது, அதே காந்தியாரை, முகத்துக்கு முகம் எதிர்த்தவரும் தந்தை பெரியார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ராமாயணத்தையும், மனுதர்மத்தையும் ஒழிப்பேன் என்று குரல் கொடுத்தவர்
காங்கிரசு கட்சியில் இருந்தபோது, 1922 ஆம் ஆண்டில், திருப்பூரில் நடைபெற்ற மாநாட்டில், ராமாயணத்தையும், மனுதர்மத்தையும் ஒழிப்பேன் என்று குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்.
அப்பொழுது ராஜாஜி அவர்கள், தந்தை பெரியாரைப் பார்த்து, ‘‘நாயக்கரே, இது ஹெவி டோஸ்'' என்று சொன்னபொழுது,
‘‘சில முட்டாள்களுக்கு ஹெவி டோஸ் என்ன? சாதாரண டோஸ் என்ன?'' என்று சொன்னவர் தந்தை பெரியார்.
ஆகவே, எப்பொழுதுமே அவர் தனித்தன்மை வாய்ந்த தலைவராகவே தந்தை பெரியார் அவர்கள் என்றைக்கும் இருந்திருக்கின்றார் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
தன்னுடைய லட்சியத்திற்காக அனைத்து விலைகளையும் கொடுத்தார்
தந்தை பெரியாருக்கு உள்ள மிக முக்கியமான சிறப்பு, அவரே தத்துவத்தை உண்டாக்கினார்; அவரே அந்தப் பிரச்சாரக் களத்தில் முதன்மையான பிரச்சாரகராக இருந்தார். அவரே ஓர் இயக்கமாக இருந்தார். அவரே ஒரு களப் பணியாளராக இருந்தார். அவரே அந்த லட்சியத்திற்குக் கொடுக்கவேண்டிய அனைத்து விலை களையும் கொடுக்கவேண்டியவராக இருந்தார். இது தந்தை பெரியாருக்கு உள்ள ஒரு தனிச் சிறப்பாகும்.
மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் முற்போக்குக் கருத்துகளை உருவாக்கியிருக்கலாம். பின்னாளில் வந்தவர்கள்தான் அதனைப் பிரச்சாரம் செய்தார்கள்; அமைப்புகளை உண்டாக்கினார்கள்.
ஆனால், தந்தை பெரியார் அவரே கருத்துருவாகவும், அவரே பிரச்சாரகராகவும், அவரே களப் பணியாளராகவும், அவரே தான் பாடுபட்டதினுடைய பலனை நேரில் அனுபவித்த தலைவராகவும் தந்தை பெரியார் ஒருவர்தான் இருந்திருக்கிறார் என்பதை நாம் இந்த நேரத்தில் சொல்லியாகவேண்டும்.
இன்னொன்று, குறிப்பாக சொல்லவேண்டுமானால், இந்திய துணைக் கண்டத்தில் பல சீர்திருத்த அமைப்புகள், பல சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. ஆனால், அந்தத் தலைவர்களின் மறைவிற்குப் பின்னால், அந்த அமைப்புகள் இருக்கின்றனவா என்பது ஒரு கேள்விக்குறி.
ஆயிரங்கால் சிங்கமாக
சிலிர்த்து எழுகின்றது
நாராயண குரு ஏற்படுத்திய எஸ்.என்.டி.பி. அமைப்பு எங்கே இருக்கிறது?
மகாராஷ்டிராவில் மாநிலத்தில் உண்டாக்கப்பட்ட ஓமியோபதி அமைப்பு எங்கே இருக்கிறது?
ஏன் அம்பேத்கர் அவர்கள் அமைப்புகூட தமிழ் நாட்டிலோ, இந்தியாவிலோ வலிமையாக இருக்கிறதா என்றால், இல்லை.
ஆனால், தந்தை பெரியாருடைய இயக்கம், அவரு டைய மறைவிற்குப் பின்னால் பல மடங்கு வீறுகொண்டு ஆயிரங்கால் சிங்கமாக சிலிர்த்து எழுகின்றது என்றால், அதற்கான அமைப்பையும், அதற்கான தலைமையையும் உருவாக்கிக் கொடுத்த பெருமை தந்தை பெரியாருக்கு மட்டும்தான் உண்டு.
ஆகவே, தந்தை பெரியாருடைய பணிகள் என்று சொல்லும்பொழுது, கருத்து மட்டுமல்ல, தனக்குப் பின்னாலும் அந்த இயக்கம் இருக்கவேண்டும் - அந்தப் பணிகள் தொடரவேண்டும் - பிரச்சாரம் நடக்கவேண்டும் என்கிற முறையையும், அமைப்பையும், அதற்கான சரியான தலைமையையும் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கியதால்தான், இந்த இயக்கம் உலக இயக்கமாக இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் குறிப்பிடவேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.
செங்கற்பட்டு முதல் மாகாண மாநாடு
1929 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்கள் செங்கற்பட்டு முதல் மாகாண மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதற்குமுன் யாராலும் சிந்திக்கப்பட்டு இருக்கிறதா? அமைப்பு ரீதியாக சொல்லப்பட்டு இருக்கிறதா? என்றால், நிச்சயமாக இல்லை.
அதற்கு ஓராண்டிற்குமுன், தென்னிந்திய சீர்திருத் தக்காரர்கள் மாநாடு என்று தந்தை பெரியார் தலை மையில் நடத்தப்பட்டது.
அந்த மாநாட்டிலும், செங்கற்பட்டு மாநாட்டிற்கு முன்னோடியாக பல தீவிரமான தீர்மானங்கள், புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில், அவருடைய பிரச்சாரங்கள் எவ்வளவோ வெற்றி பெற்றிருக்கின்றன என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை எடுத்துச் சொல்ல முடியும். சுயமரியாதைத் திருமணம் என்கிற மேடையைப் பயன்படுத்தி, குறிப்பாக தந்தை பெரியார் சொல்வார், நான் மாநாடு போட்டால், உங்களில் பலர் வரமாட்டீர்கள்; நான் கூட்டம் நடத்தினால், உங்களில் பலர் வரமாட்டீர்கள். இந்த இடம் மணமக்களின் உறவினர்கள் வரக்கூடிய இடம். நாம் அதிகமாக சந்திக்க வாய்ப்புள்ள இடம். ஆகவே, இங்கு வந்திருக்கின்ற மக்கள் மத்தியில், இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்தவில்லையானால், என்னைவிட பைத்தியக்காரன் வேறு யார் இருப்பான் என்று சொல்வார்.
அய்ந்தரை மணிநேரம் பேசிய பெரியார்
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், வேலூர் மாவட்டத்தில், வாழ்குடை என்ற ஊரில் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய ஒரு திருமணத்தில் அய்ந்தரை மணிநேரம் பேசினார் என்றால், யாரும் நம்பமாட்டார்கள், கட்டை வண்டியில் பயணம் செய்து!
இப்பொழுது அய்ந்து நிமிடம் பேசினாலே பார்வை யாளர்கள் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அய்ந்தரை மணிநேரம் பேசியிருக்கிறார். அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
சுயமரியாதைத் திருமண மேடையை ஒரு சமூகப் புரட்சிக்கான கருவியாக மாற்றி வெற்றி பெற்றவர் உலகத்திலேயே தந்தை பெரியாரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
தாலி என்பது ஒரு லைசென்ஸ்
அந்தத் திருமணத்தில் கான்ஸ்டபிளாகப் பணி யாற்றுகின்ற மணமகன் கிருஷ்ணசாமி தாலியைக் கட்டிவிட்டார். தாலியைக் கட்டிய பிறகு, தந்தை பெரியார் அவர்கள் தாலியைப்பற்றி பேச ஆரம்பித்தார்.
உங்களுக்கெல்லாம் தெரியும், முனிசிபாலிட்டியில் சில நாய்களை மட்டும் பிடிக்கமாட்டார்கள். ஏனென்றால், அதற்கு லைசென்ஸ்
இருக்கும். அதேபோல, இந்தத் தாலி என்பதும் ஒரு லைசென்ஸ்; பெண்ணுக்குக் கட்டப்பட்ட ஒரு லைசென்ஸ். யாரும் விண்ணப்பம் போடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தாலி என்று தந்தை பெரியார் சொன்னார்.
பெரியார் இப்படி சொன்னவுடன், அந்த மணமகன், மணமகள் காதில் ஏதோ சொல்கிறார். அடுத்த நிமிடத்திலேயே அந்த மணமகள், தன்னுடைய கழுத்தில் கட்டப்பட்ட தாலியை மேஜையில் தூக்கி எறிகிறாள்.
உலகத்தில் இப்படிப்பட்ட ஒரு புரட்சி - எங்கேயாவது கற்பனையாகவாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்றால், நிச்சயமாக இல்லை. இது மிகப்பெரிய புரட்சி. இவற்றையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சர்வ சாதாரணமாக செய்திருக்கிறார்.
1928 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டைப் பக்கத்தில் சுற்றநத்தம் என்ற ஊரில், சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்தினார்.
உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும், இரண்டு மணமகள், ஒரு மணமகன். அன்றைக்கு அது புரட்சி. தந்தை பெரியார் அவர்கள் வறட்டுத்தனமாக இந்த இயக்கத்தை நடத்தவில்லை. அன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதவர் தலைமையில் ஒரு திருமணம் நடந்தால், அந்தக் காலகட்டத்தில் அது மாற்றம்.
சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லாதவை என்று தீர்ப்பு
அப்படியாக இருந்து 1927 ஆம் ஆண்டிலிருந்து 1967 ஆம் ஆண்டுவரை 40 ஆண்டுகள் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லாதவை!
நம்முடைய தலைவருடைய ஆசிரியர் அவர் களுடைய மாமனார் -மாமியார் ஆகியோரின் திருமண வழக்கில்தான், உயர்நீதிமன்றம் சுயமரியாதைத் திரு மணம் செல்லாது என்று ஒரு ஆணையைப் பிறப்பித்தது.
நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும். 40 ஆண்டுகளாக நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்ற நிலை இருந்தபொழுதுகூட, சட்டம் என்ன சொல்கிறது என்பதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுடைய தலைவர் பெரியார் என்ன சொல்கிறார் என்பதுதான் முக்கியம் என்று லட்சக்கணக்கில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்களே இந்தப் புரட்சியையும் தந்தை பெரியார் அவர்களால்தான் நடத்த முடிந்தது என்பதை இந்த நேரத்தில் நான் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
வள்ளுவரையும் மிஞ்சி குறைந்த சொற்களால்...
திருவள்ளுவரைப்பற்றி சொல்லும்பொழுது, குறைந்த சொற்களில் விரிந்த கருத்தைச் சொன்னவர் என்று.
படுகைக் குளத்தில் ஏழு கடல் புகுத்தியது என்று சொல்வார்கள். ஏழு சொல்லால், உலகை அளந்தவர் என்று சொல்வார்கள்.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அதையும் தாண்டி, நான்கே சொற்களால், இந்த உலகை அளந் திருக்கிறார்கள்.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று!
அதைவிட மூன்று சொல்லில்,
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! என்று. இப்படி வள்ளுவரையும் மிஞ்சி குறைந்த சொற்களால், நிறைந்த கருத்துகளை எடுத்துச் சொன்னவர் தந்தை பெரியார் என்பதையும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
தந்தை பெரியாருடைய தாக்கம் எப்படிப்பட்டது என்றால், ஆந்திராவில் என்.டி.ஆர். அவர்கள் கட்சியை ஆரம்பித்தபொழுதுகூட, நான் ஒரு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பிக்கிறேன் என்றுதான் ஆரம்பித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்குமுன் பீகாரில் நடைபெற்ற பேரணிக்குப் பெயர்கூட ‘‘சுய அபிமான்'' என்றுதான் பெயர் கொடுத்தார்கள்.
நாடாளுமன்றத்தில் பதிவு
அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் மதச் சார்பின்மையைப்பற்றி ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டு, கடுமையான வாதம் நடைபெற்றது. அப்பொழுது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய காங்கிரசைச் சேர்ந்த மல்லிகார்ஜுனே கார்கே சொன்னார்,
நாங்கள் எல்லாம் யார் என்று சொன்னால், நாங்கள் எல்லாம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். மதச்சார்பின்மையை எதிர்க்கின்றவர்களாகிய நீங்கள் எல்லாம் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் - கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று நாடாளு மன்றத்திலே பதிவு செய்தார் என்றால் பார்த்துக் கொள் ளுங்கள்.
சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ தந்தை பெரியார் அவர்கள் சென்றதில்லை, ஆனால், எல்லா இடங்களிலும் தந்தை பெரியார் இருக்கிறார்.
ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை
ஒருமுறை தமிழக சட்டமன்றத்தில், அண்ணா அவர்களைப் பார்த்து சட்டமன்ற உறுப்பினர் முனுஆதி என்பவர் ஒரு கேள்வி கேட்டார்,
‘‘பெரியாருக்கு தியாகி மானியம் கொடுப்பீர்களா?'' என்று கேட்டார்.
உடனே அண்ணா சொன்னார், இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னார்.
ஆட்சிக்குச் செல்லவில்லை தந்தை பெரியார். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள், பெரியார் என்ன சொன்னார், பெரியாருடைய கருத்து என்ன என்கிற தாக்கம் - ஓர் ஆட்சியை வெளியில் இருந்து வழி நடத்திய ஒரு மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
ஒரு சட்டம் உருவாவதற்கு முன்னர்கூட, இதில் பெரியாருடைய கருத்து என்னவாக இருக்கும்? என்று முன்னெச்சரிக்கையான யோசனையோடுதான் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும் என்ற நிலைதான் இன்றைக்கு இருந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில், தந்தை பெரியார் அவர்கள், ஆட்சியில், அரசியலில் இல்லாவிட்டாலும், தந்தை பெரியாருடைய கருத்து என்பது ஆட்சியை வழிநடத்தக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.
ராமசாமிமீது செருப்பா என்று
ராமனை செருப்பாலடித்தனர்!
1971 ஆம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டு ஊர்வலம் சென்று கொண்டிருந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் வாகனத்தில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது ஜனசங்கத்துக்காரர்கள், பெரியார்மீது செருப்பை வீசினார்கள். பெரியார் சென்ற வாகனம் சென்றுவிட்டதால், பின்னால் வந்த ராமன் படத்தினை வைத்து ஊர்வலம் சென்ற வாகனத்தின்மீது விழுந்தது. நம்முடைய தோழர்கள் அந்த செருப்பை எடுத்துக்கொண்டு, எங்கள் தலைவர் ராமசாமிமீது செருப்பை அடித்தீர்களா? உங்கள் ராமனை செருப்பால் அடிக்கிறோம் பாருங்கள் என்று அடித்தார்கள்.
தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்!
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அது தேர்தல் பிரச்சாரமாக மாற்றப்பட்டது. ராமன்தான் தேர்தலில் நிற்பதுபோல பிரச்சாரம். ராஜாஜியும் - காமராசரும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். கோவில் கதவு அளவில், சுவரொட்டியை அச்சடித்து ஒட்டினார்கள், பெரியார் ராமனை செருப்பால் அடிப்பதுபோலவும், கலைஞர் அவர்கள் சபாஷ், சபாஷ் என்று சொல்வதுபோலவும்.
தந்தை பெரியாரின் மகிழ்ச்சி!
அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்,
‘‘எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய பிரச்சாரத்தை அவன் செலவில், அதுவும் கோவில் கதவு அளவிற்கு சுவரொட்டி அடித்து, அவனே பசை காய்ச்சி தமிழ்நாடு முழுவதும் ஒட்டி வைத்திருக்கிறார்களே, இது எவ்வளவு பெரிய வெற்றி என்றார்.
தி.மு.க.வினர்கூட அப்பொழுது பயந்தார்கள். இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். தி.மு.க.வும் - காங்கிரசும் கூட்டணி வைத்து அந்தத் தேர்தலை சந்தித்தார்கள்.
60 ஆண்டுகளாக செருப்பாலடிக்கிறாரே!
இந்திரா காந்தியிடம், ‘இந்து' பத்திரிகையாளர் கேள்வி கேட்டார் - சென்னை மாநிலத்தில் உங்கள் கூட்டணி வெற்றி பெறுவதாக இருந்தது. ஆனால், இப்பொழுது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதால், தோல்வி அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதே என்றார்.
உடனே இந்திரா காந்தி அம்மையார்,
என்ன நிகழ்ச்சி ஏற்பட்டது? என்று கேட்கிறார்.
ராமனை செருப்பால் அடித்துவிட்டார்கள்.
யார் அடித்தார்கள்?
பெரியார் ஈ.வெ.ராமசாமி அடித்துவிட்டார்.
ஓ, நாயக்கர். அவர் 60 ஆண்டுகளாக அல்லவா அடித்துக் கொண்டிருக்கிறார்; இப்பொழுது என்ன புதிதாகவா அடிக்கிறார் என்றார்.
தேர்தலில் வெற்றி பெறுவோமா என்று கலைஞரே கூட நினைத்தார்.
அன்றைக்குத் தலைமைச் செயலாளராக இருந்தவர், காமராசரைப் போய் சந்தித்துப் பயனாடையும் அணிவித்தார், முதலமைச்சராகப் போகிறார் என்று.
அமைச்சரவை பட்டியலையும் தயார் செய்து விட்டார்கள்.
ராமனை செருப்பால் அடிப்பதற்குமுன் 138;
செருப்பால் அடித்த பிறகு 184
அப்பொழுது வாக்குப் பெட்டியில் விழுந்த வாக்கு களை எண்ணினார்கள். முடிவு என்னவென்றால்,
ராமனை செருப்பால் அடிப்பதற்குமுன் தி.மு.க. 138 இடங்கள்; ராமனை செருப்பால் அடித்த பிறகு 184 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.
ராஜாஜியின் கடிதம்!
ராஜாஜி கையெழுத்துப்போட்டு கடிதம் எழுதினார்,
‘
‘இந்த நாடு, ஆஸ்திகர்கள் வாழ தகுதியிழந்து விட்டது. மகாபுருஷர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறத் திட்டமிட்டுவிட்டோம்.''
இந்த மக்களிடம், பெரியாருடைய கருத்து, இந்தக் கருத்துதான் நம்மை வாழ வைத்தது என்கிற நன்றி உணர்ச்சி இருக்கிறது. அவர்கள் டாக்டர்களாக இருக்க லாம், பொறியாளர்களாக இருக்கலாம் - யாராக இருந் தாலும் - நாம் இந்த நிலைக்கு வந்ததற்கு, நாம் கல்வி பெற்றதற்குக் காரணம் தந்தை பெரியார் என்கிற எண்ணம் இன்றைக்கு வரை இந்த நாட்டு மக்களிடம் இருப்பதை நாம் நிச்சயமாக யாரும் மறந்துவிட முடியாது.
ஹிரேன் முகர்ஜியின்
கேள்வியும் - பதிலும்!
அந்த அளவிற்கு, தந்தை பெரியாருடைய கருத்துகள் இன்றைக்கு மக்கள் மத்தியில் வேரூன்றி நிலைப் பெற்றிருக்கின்றன. அவர் காலத்தை வென்ற தலைவராக இருந்தார்.
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும், சுயமரியாதைச் சுடரொளியுமான கே.டி.கே. தங்கமணி பாரட்லா அவர்கள் - சிறந்த நாடாளுமன்றவாதி என்று போற்றப்படும் ஹிரேன் முகர்ஜி அவர்களைச் சந்தித்தபோது,
500 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படும் புரட்சியாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற வினாவைத் தொடுத்தபோது,
தோழர் கே.டி.கே. தெரிவித்த பதில், அவரைத் திருப்திபடுத்தவில்லை.
கடைசியில், ஹிரேன் முகர்ஜி அவர்கள், தான் எழுப்பிய வினாவுக்கு, அவரே பதிலும் கூறிவிட்டார்.
ஒருவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி; மற்றொருவர் ம.சிங்காரவேலர் என்று பதில் சொன்னார்.
காலத்தை வெல்லக்கூடிய அந்த சூழ்நிலை இன்றைக்கு வந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
தந்தை பெரியாருடைய கருத்து என்பது, ஏதோ கடவுள் இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை என்பது மட்டுமல்ல.
பெரியாருடைய அணுகுமுறை என்பது வேறு; கொள்கை என்பது வேறு
தந்தை பெரியாருடைய அடிப்படை கருத்து என்பது பேதமற்ற இடம்தான் மேலான, திருப்தியான இடம். அந்த நிலைக்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ - அது கடவுளாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், சாஸ்திரமாக இருந்தாலும், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டமாக இருந்தாலும் தந்தை பெரியார் எதிர்த்திருக்கிறார், எரித்திருக்கிறார்.
அவருடைய எண்ணம் என்பது மனித சமுதாயம் சமத்துவமாக வாழவேண்டும். சுயமரியாதையோடு வாழவேண்டும். ஆண் என்றால், எஜமானன், பெண் என்றால் அடிமை என்கிற தன்மை ஒழிக்கப்படவேண்டும். அதற்குத் தடையாக எது இருந்தாலும், அதனை அழிப்பது, ஒழிப்பது என்பதுதான்.
பெரியாருடைய அணுகுமுறை என்பது வேறு; கொள்கை என்பது வேறு. பலர் இதனைப் புரிந்துகொள்ளாமல், தந்தை பெரியாருடைய அணுகு முறையையே கொள்கையாகக் கருதி, பெரியார் தோற்று விட்டார் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், பெரியாரைப் பொறுத்தவரையில், அவருடைய கொள்கை என்பது வாழ்க்கை நெறி.
ஓராண்டில் 188 நாள்கள் வீண்!
ஒரு புள்ளி விவரம் வெளிவந்திருக்கிறது. மத காரணங்களுக்காகவும், நேர்த்திக் கடன்களுக்காகவும், பண்டிகைகளுக்காகவும், ஆண்டில் 365 நாள்களில், மனிதன் செலவு செய்யும் நேரம் 188 நாள்கள். வீணாக, நம்முடைய நேரத்தையும், காலத்தையும் மதக் காரியங்களுக்காக மக்கள் வீணடித்துக் கொண் டிருக்கிறார்கள்.
பெரியார் தொண்டர்களுக்கு லாபம்; மதவாதிகளுக்கு நட்டம்!
பெரியாருடைய தொண்டர்கள், பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இதெல்லாம் லாபம். மதவாதிகளுக்கு நட்டம். பெரியாருடைய கணக்கேட்டில், லாபத்தைத் தவிர நட்டம் என்பதே கிடையாது.
நாங்கள்கூட பல பேரிடம் நன்கொடைகளைத் திரட் டும்பொழுது, - கொள்கைவாதிகளாக இருப்போரிடம், நீங்கள் ஒன்றும் உங்களுடைய பணத்தைக் கொடுக்கவேண்டாம் - பெரியார் கொடுத்த பணத்தைக் கொடுங்கள். ஏனென்றால், நீங்கள் மதவாதியாக இருந்தால் எவ்வளவு செலவு செய்திருப்பீர்கள்? நீங்கள் பகுத்தறிவுவாதியாக இருப்பதினால் அந்தப் பணம் மிச்சம்தானே - அந்தப் பணத்தில் கொஞ்சம் கொடுங்கள் என்போம். அதுதான் உண்மை.
நாம் எல்லாம் இவ்வளவு மகிழ்ச்சியாக, இவ்வளவு செழிப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றால், தந்தை பெரியார் அவர்கள் தொண்டின் பிச்சை. அதற்காக நாம் காலம் முழுவதும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.
பெரியார் கொள்கை என்பது
ஒரு வாழ்க்கை நெறி
பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி. அந்தக் கொள்கையைப் பின்பற்றினால், வாழ்க்கையில் தோல்வி ஏற்படுவதற்கே இடம் இல்லை. ஆகவே, இந்தக் கொள்கைகள் இன்றைக்கு உலகம் முழுவதும் தேவைப்படுகின்ற, மனித சமுதாயத்தை வழிநடத்துகின்ற ஒரு கொள்கை வழியாக இருக்கிறது. அந்தக் கொள்கை வழியை நாம் பின்பற்றுவோம், தொடருவோம் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
- இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார்.
மத காரணங்களுக்காகவும், நேர்த்திக் கடன்களுக்காகவும், பண்டிகைகளுக்காகவும், ஆண்டில் 365 நாள்களில், மனிதன் செலவு செய்யும் நேரம் 188 நாள்கள். வீணாக, நம்முடைய நேரத்தையும், காலத்தையும் மதக் காரியங்களுக்காக மக்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியாருடைய தொண்டர்கள், பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இதெல்லாம் லாபம். மதவாதிகளுக்கு நட்டம். பெரியாருடைய கணக்கேட்டில், லாபத்தைத் தவிர நட்டம் என்பதே கிடையாது.
-விடுதலை,29.7.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக