வியாழன், 29 ஏப்ரல், 2021

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு, சென்னை பெரியார் திடல் 10.1.1996


உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு சென்னை பெரியார் திடலில் 10.1.1996 அன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது. மாநாட்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பெரியார் பிஞ்சுகள், இளைஞரணி, மகளிரணியினர், மாணவரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர்கள் என அனைவரும் கழகக் கொடியினை உயர்த்திப் பிடித்தவண்ணம் கலந்துகொண்டனர். ‘தீ மிதி’ நிகழ்வும், மாநாட்டு மேடையில் நடைபெற்றது. திராவிடர் கழக அமைப்பாளர் பேபி சமரசத்தின் மகன் செல்வன் எழிலனுக்கும், ஒசூர் மாணிக்கவாசகம் தனலட்சுமி ஆகியோரின் செல்வி செந்துவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து திருமணம் நடத்தி வைத்தேன்.

மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நடிகர் இனமுரசு சத்யராஜ், எம்.டி.கோபால கிருட்டினன், ஆந்திர மாநிலம் விஜயவாடா, கோரா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் இலவணம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாத்திக அமைப்பின் அதிகாரப் பூர்வப் பங்கேற்பாளரான நார்மன் டெய்லர், அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி பார்பராஸ் டாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ராங்க் ஷீட், லண்டனைச் சேர்ந்த பிரிட்டீஷ் ஹுமனிஸ்ட் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ஹாரி ஸ்டோப்ஸ் ரோப் ஆகியோர் உரையாற்றினார்கள். முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுத் தலைமை உரையாற்றுகையில், “ஒரு காலத்தில் ரசல், இங்கர்சால் போன்றவர்களை நாம் இங்குக் கொண்டு வந்தோம். இன்று தந்தை பெரியாரை பிற நாட்டவர்கள் கொண்டு செல்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சிக்குரிய திருப்பம்! தந்தை பெரியாரின் தத்துவம். தலைமுறை இடைவெளி யில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய இயக்கம், தமிழகத்தைத் தாண்டி, எல்லைகளைக் கடந்து உலக மானிட இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’’ என்பன போன்ற தந்தை பெரியாரின் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாட்டினைத் தொடர்ந்து, 11.1.1996 அன்று தஞ்சை வல்லத்தில் பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் Lasse Siren (Finland), Harie Bols (Holland), Robyn Johannes (Belgium), Robert Morgan (U.S.), Pertti Holopa Nien (Sweedish), Herma Mittendorff (Holland), Eric Jacob (Germany), Norman Taylor (Australia), G.Lavanam (Vijayawada), Everelt Cross ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டாகத் தந்தை பெரியார் முழு உருவச் சிலையினைத் திறந்து வைத்தனர். அறிஞர்களின் ஆங்கில உரையினை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் மொழிபெயர்த்துக் கூறினார். நிகழ்வில் நிறைவுரையாற்றுகையில், “சிலை அமைப்புக் குழுவினருக்கும், கழகத் தோழர்களும், சிலையினை அன்பளிப்பாக வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கு.தங்கமுத்து, ஏணிப்படி அமைத்துத் தந்த கல்வி வள்ளல் ‘வீகேயென் கண்ணப்பன், சிலையின் அடிபீடத்தை சிறப்பாக உருவாக்கித் தந்த ஈஸ்வரனார், வேழவேந்தன் ஆகியோருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தேன். நமது அழைப்பின் பேரில் கலந்துகொண்ட பன்னாட்டு நாத்திகர்களுக்கு நினைவுப் பரிசளித்து, பாராட்டையும் தெரிவித்து, பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் காலத்தைக் கடந்து என்றும் நாட்டிற்குத் தேவை’’ என பல கருத்துகளை கூறினேன். பன்னாட்டு நாத்திகர்களை வழி நெடுக கழகத் தோழர்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 16- 30 .21

சனி, 24 ஏப்ரல், 2021

நான்காவது நான்காவது உலக நாத்திகர் மாநாடு!


உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

நான்காவது உலக நாத்திகர் மாநாடு ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிளில் நாத்திக கேந்திரத்தில் 4.1.1996 அன்று துவங்கியது. மாநாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாத்திகர்களும், அறிஞர்களும் வந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து நம் கழகத் தோழர்கள் உள்பட 108 நாத்திகர்களுடன் கலந்து கொண்டோம். முதல் நாள் நிகழ்வில் வரவேற்புரையாற்றுகையில், “தந்தை பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை விரிவாக எடுத்துரைத்தேன். மனித நேயத்தை வலியுறுத்தி பெரியார் ஆற்றிய தொண்டினை விளக்கிப் பேசினேன். இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான சாதனங்களை தமக்குச் சாதகமாக்கி அஞ்ஞானத்தைப் பரப்புவதற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திப் பேசினேன். அந்த வரவேற்பு உரையோடு மாநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்திற்கு மாநாட்டில் முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ள பத்து யோசனைகளையும் முன்வைத்து அதனை இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.’’ அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு வந்திருந்த இங்கிலாந்து மனிதநேய சங்கத்தின் தலைவர் சர்.ஹெர்மன் பான்டி தலைமை உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த கார்ட்டூனிஸ்ட் மற்றும் பத்திரிகையாளர் அபு ஆபிரகாம், வி.சோபனதிரீஸ்வரராவ், சரசுவதி கோரா, கே.சுப்பாராஜு, விஜயவாடா நகர மேயர் டி.வெங்கடேசுவரராவ், பன்னாட்டு மனிதநேய கழகத்தின் தலைவர் ஜேன் லைன் வில்சன், அமெரிக்காவின் நாத்திகத் தலைவர் லீபேக்கர், ஆஸ்திரேலிய நாத்திக சங்கத்தின் பிரதிநிதி நார்மன் டைலர், அய்ரோப்பிய நாத்திக சங்கத்தின் உபதலைவர் ராபின் ஜோகன்னஸ் எனப் பல முக்கியமானோர் வந்திருந்தனர். அவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தையும் செய்துகொண்டோம்.

இரண்டாம் நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த நாத்திக அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டின் குறிக்கோளாக, “நம்பிக்கையான எதிர்காலத்திற்குப் பயனுள்ள நாத்திகம்’’“Positive Atheism for a Positive Future” என்கிற குறிக்கோளை முன்வைத்து மாநாடு நடைபெற்றது. கழகத்தின் சார்பில் வந்திருந்த ராஜதுரை, அருள்மொழி, சுனந்தா சேத், டாக்டர் நடராசன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். ஒரிசாவிலிருந்து வந்து உரையாற்றிய பேராசிரியர் ந.ராமச்சந்திரா தந்தை பெரியாரின் கருத்துகளால் நாத்திகவாதி ஆனதைச் சுட்டிக்காட்டினார். தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை, தான் மேற்கொண்டதாகக் கூறினார்.

மாநாட்டின் இறுதி நாளில் நிறைவுரையாற்றுகையில், “மாநாட்டில் பங்கு கொண்டு உரையாற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த செய்தியைப் படித்து மிகவும் வியந்து அதனை பெரியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். தந்தை பெரியார் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு மிகவும் நிதானமாக, “மூடநம்பிக்கை என்பது இந்திய நாட்டிற்கு மட்டுமே உரித்தானது அல்ல; அது அமெரிக்கா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது’’ என என்னிடம் குறிப்பிட்டார். ஆகவே, இந்த மாநாட்டின் தத்துவமாக, மனித நேயத்தை, நாத்திகத்தைப் பரப்புகின்ற ஒளிவிளக்குகளாக நாம் செல்ல வேண்டும். சுயமரியாதை கொண்ட வாழ்க்கையை அமைத்திட நாம் அனைவரும் கூட்டுப் போராளிகளாக இருப்போம். என்னிடம் பல வெளிநாட்டு நண்பர்கள், திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிந்துள்ளதற்கான காரணத்தைக் கேட்டனர். இந்தச் சமுதாயம் இன்றும் இருளில் உள்ளதை உலகுக்குத் தெரிவிக்கின்ற வகையில் நாங்கள் கருஞ்சட்டை அணிகிறோம் என்றேன். நாம் ஒரு அமைதியான புரட்சியைச் செய்கிறோம். பெரியார், கோரா, எம்.என்.ராய் ஆகியோரது கருத்துகளே நம்மை வழிநடத்துகின்றன.

சுயமரியாதை, மனிதநேயம், பகுத்தறிவுச் சிந்தனைகள் ஆகிய இவையே உலகுக்கு வழிகாட்டக்கூடியவை! புதிய உலகை உருவாக்குவோம். இந்தப் பணியில் திராவிடர் கழகம் தனது முழு ஈடுபாட்டையும் செலுத்தும். வாழ்க பெரியார்!’’ என்பன போன்ற பல கருத்துகளை மாநாட்டில் தெரிவித்து நிறைவு செய்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 16-30.21

புதன், 21 ஏப்ரல், 2021

சார்லஸ்_பிராட்லா பிரிட்டனில் மிகவும் போற்றத்தக்க நாத்திகர்.

.நாத்திகம் பேசியதால் 
பதவியேற்பு நிறுத்தப்பட்டு 
நான்கு முறை நடந்த 
மறுதேர்தல்களிலும் வென்ற
#பிடிவாத_பிராட்லா 

இவரின் பிடிவாதத்தால் பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது தெரியமா...??*

சார்லஸ்_பிராட்லா பிரிட்டனில் மிகவும் போற்றத்தக்க நாத்திகர்.

அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத்
தேர்வு செய்யப்பட்டார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப் பட்டபோது, #கடவுளின்_சாட்சியாக என்று சொல்லிப் பதவி ஏற்குமாறு கூறினார்கள்.  ஆனால் அவரோ,

"இல்லாத கடவுளை நான்
சாட்சிக்கு அழைத்துவர முடியாது" 

என்று கூறி, கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள உறுதியாக மறுத்துவிட்டார்.

"உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை; இந்தப் பேரவை நம்புகிறது, இந்த நாட்டின் அரசியல்சாசனம் நம்புகிறது, அதற்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்; எனவே, 'கடவுள் சாட்சியாக' என்று கூறித்தான் நீங்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதற்கு நீங்கள் மறுப்பீர் களேயானால் உங்கள் தேர்வு ரத்து செய்யப்படும்" 

என்றார்கள். அதற்கு சார்லஸ் பிராட்லா,

"இந்த அவையின் ஆயுள்காலம் ஐந்து
ஆண்டுகள்தான்; இந்த ஐந்து ஆண்டுக ளுக்காக என் ஆயுள்முழுவதும் நான் கட்டிக்காத்துவரும் என்கொள்கைகளை
விட்டுவிடமுடியாது; என் தேர்வை நீங்கள் ரத்துசெய்ய விரும்பினால், தாராளமாக நீங்கள் ரத்து செய்து
கொள்ளுங்கள்" 

என்று கூறிவிட்டார். கொஞ்சமும் தயவுதாட்சண்யம் இல்லாமல், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட  அவரது தேர்வை ரத்து செய்தார்கள். அவருடைய தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடந்தது; மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்; மீண்டும் வெற்றிபெற்றார்; மீண்டும் அதே பிரச்சனை!

"எனக்கென்று ஒரு கொள்கை - ஒரு நம்பிக்கை இருக்கிறது அதை எந்தக்
காரணத்திற்காகவும் என்னால் விட்டுத்தர இயலாது"

என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் பிராட்லா. மீண்டும் அவர்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் அவர்
தொகுதிக்குத் தேர்தல் நடந்தது; மூன்றாவது முறையும் பிராட்லா போட்டியிட்டார்; இந்த முறை முந்தைய இரண்டுமுறை வாங்கிய வாக்குகளைவிட 
அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிராட்லா!

இம்முறை கெஞ்ச ஆரம்பித்தார்கள்: 

"தயவுசெய்து பிடிவாதம் பிடிக்காமல் இந்த அவையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்"

என்றார்கள்; பிராட்லா மிகவும் உறுதியாகச் சொன்னார், 

"நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் என்
தொகுதிமக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்; என் தேர்வை ரத்துசெய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்;
அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை இழிவு செய்கிறீர்கள்; அவர்களுடைய தன்மானத்திற்கே சவால் விடுகிறீர்கள்"

என்று கடுமை காட்டிய பிராட்லா, "இதற்குமேல் பேச என்னிடம் எதுவுமில்லை"  

என்று கூறி அமர்ந்துவிட்டார். இந்தமுறை பிரிட்டன் பாராளுமன்றம் பணிந்தது. 

"தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டுமன்றி மனசாட்சியின் பெயராலும் பதவிஏற்கலாம்" 

என்று பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. இன்று பகுத்தறிவுவாதிகள் மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சாரலஸ் பிராட்லாதான் காரணம். 

🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾
-வெற்றிவேந்தன் முகநூல் பக்கம், 21.4.20