திங்கள், 30 டிசம்பர், 2024

தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா!

 

சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவரின் எழுச்சியுரை

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா!

டிசம்பர் 14 & 15 ஆகிய இருநாள்களும் தெலங்கானா – ஆந்திரா மாநிலங்களில் பரந்துபட்டு செயல்படும் மானவ விகாச வேதிகா எனும் மனித மேம்பாட்டு மன்றத்தின் 20-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. முதல் நாளான டிசம்பர் 14 அன்று மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் தந்தை பெரியாரின் சிலையினைக் காணொலி வாயிலாகத் தமிழர் தலைவர் திறந்து வைத்து இரண்டு நாள் நிகழ்ச்சியின் தொடக்கவுரையினை ஆற்றினார்.

தெலங்கானா – ஆந்திர மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முன்னோடி பகுத்தறிவாளர் மன்றங்களுள் மானவ விகாச வேதிகா ஓர் அமைப்பாகும். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தோடு பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து இணைந்து பல பணிகளைச் செய்து வரும் அமைப்பு இது. அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறது.

அய்தராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் பாட சிங்காரம் பகுதியில் மானவ விகாச வேதிகா அமைப்பின் திறந்த வெளி அரங்கம் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அத்துடன் உள் அரங்கமும் அலுவலகமும் கட்டப்பட்டு அந்த வளாகத்தில் சமூகப் புரட்சியாளர்களான புத்தர், மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, பாபாசாகிப் பி.ஆர். அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது சிலைகளுடன் தந்தை பெரியாரின் மார்பளவுச் சிலையும் நிறுவப்பட்டு அந்த ஆறு சிலைகளும் 20-ஆம் ஆண்டு விழாவின் தொடக்கநாள் நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டன.

                                    தெலங்கானா மாநிலத்தில் முதன்முதலாக

திறந்து வைக்கப்படும் தந்தை பெரியாரின் சிலை

ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தில் 2006–ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தின் கடற்கரை சாலையில் தந்தை பெரியாரின் முதல் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைத்திட ஆந்திர மாநில அரசின் அமைச்சர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். ஆந்திர நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) முன்னெடுப்பில் நிறுவப்பட்டது அந்தச் சிலை. பின்னர் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்குப் பின் தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்ட தந்தை பெரியாரின் முதல் சிலை திறப்பு விழா இதுவாகும். மானவ விகாச வேதிகா அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

திராவிடர் கழகம்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளில் அவருடைய சிலையினை திறக்க முடிவாகியிருந்தது. இந்த ஆண்டு தந்தை பெரியாரின் 146-ஆம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிட ஜப்பான் நாட்டு டோக்கியோ நகருக்கு தமிழர் தலைவர் சென்றதாலும், அந்த சமயம் அய்தராபாத் நகரில் பெய்த பெரும் மழையினாலும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பின்னர் தமிழர் தலைவரின் ஒப்புதல் பெற்று டிசம்பர் 14 – ஆம் நாளில் சிலை திறப்பு நிகழ்ச்சியினை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் டிசம்பர் 12 – ஆம் நாளன்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவினை வெகு விமரிசையாக தமிழ்நாடு அரசும், கேரள அரசும் வைக்கம் நகரில் ஏற்பாடு செய்திருந்தன. தந்தை பெரியாரின் கொள்கை வழித்தோன்றலான தமிழர் தலைவர் அவர்கள் அந்த நூற்றாண்டு விழாவில் முன்னிலை – சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிலையில் அய்தராபாத் நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தந்தை பெரியாரின் சிலை திறப்பு கூறியபடி நடந்தேறிட வேண்டும் எனக் கருதி காணொலி வாயிலாக சிலையினைத் திறந்து உரையாற்றிட இருப்பதை தெரிவித்து, அவ்விழாவிற்கு மானவ விகாச வேதிகா அமைப்பினரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். திராவிடர் கழகத்தின் சார்பாக பொருளாளர் வீ. குமரேசன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் இரா.மோகன் ஆகியோர் தந்தை பெரியார் சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்ச்சி

திராவிடர் கழகம்

இரண்டு நாள் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக பகுத்தறிவு, சமூகநீதி கருத்துகள் அடங்கிய பாடல்களை ஆந்திரா கலைக்குழுவினர் எழுச்சியுடன் பாடினார்கள்.

மானவ விகாச வேதிகா அமைப்பின் தெலுங்கு மாத இதழான ‘ஸ்வேதாலோசனா’ வின் இணை ஆசிரியர் அனுமந்தராவ் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மானவ விகாச வேதிகா மத்திய கமிட்டியின் தலைவர் சீனிவாசராவ் உரையாற்றினார். பின்னர் ஆறு சமூக புரட்சியாளர்களான புத்தர், மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

தந்தை பெரியாரின் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவரின் உரை

மானவ விகாச வேதிகா என்ற பெயரில் அய்தராபாத்தில் இயங்கி வரும் ஒரு அமைப்பு முழுக்க முழுக்க நம் பகுத்தறிவுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. டிசம்பர் 14 ஆம் நாளன்று இவர்கள் தங்கள் அமைப்பின் இருபதாம் ஆண்டு நிறைவை கொண்டாடினர். இந்த இரண்டு நாள் மாநாட்டின் போது தந்தை பெரியாரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஆசிரியரின் சார்பில் பொருளாளர்

வீ. குமரேசன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். காணொலி மூலம் வாழ்த்து தெரிவித்து ஆசிரியர் ஆற்றிய உரை இது:
அனைவருக்கும் வணக்கம். மானவ விகாச வேதிகா இயக்கத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள். என் உடல்நிலை காரணமாக என்னால் நேரில் கலந்துக்கொள்ள இயலவில்லை. ஆனாலும் என் மனம் தற்போது அங்கேதான் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரே கொள்கைக் குடும்பம்தான். நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். பல போராட்டங்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வந்துள்ள அமைப்பு உங்களுடையது. உங்கள் சாதனைகளைப் பாராட்ட வார்த்தைகள் போதாது. உங்களது சீரிய பணி தொடர வாழ்த்துகிறேன்.

200 ஆண்டுகளுக்கு முன் ஜோதிராவ் ஃபூலே புரட்சிகரமான இயக்கத்தை துவக்கினார். அதன்பின் பாபா சாகேப் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை மிகப்பெரிய அளவில் மக்களிடையே பரவச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களின் அடிச்சுவட்டில் நாமெல்லாம் அவர்களுடைய பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

எதிர் நீச்சல்கொந்தளிக்கும் போராட்டக் கடலில் எதிர் நீச்சல் போட்ட தந்தை பெரியாரின் சிலையை அங்கே நீங்கள் திறந்து வைப்பது குறித்து அளவற்ற மகிழ்ச்சி. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு தன் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. சமூகத் தில் பிற்போக்குத்தனமும், காலாவதியான கோட்பாடுகளும், ஜாதி மத பேதங்களும் நிறைந் திருந்த காலக்கட்டத்தில் பெரியார் துவக்கிய இயக்கம் அது. உலகில் வேறு எங்கேனும் நம் நாட்டில் நிலவுவது போன்ற ஜாதிபாகுபாடு சார்ந்த கொடுமைகள் நடப்பதுண்டா? தகுதியையும், சாதனைகளையும் பொறுத்து மனிதர்கள் மதிக்கப் படாமல், பிறப்பு சார்ந்த பேதங்களால் அவர்கள் இழிவுப் படுத்தப்பட்டு வந்த காலத்தில் பெரியார் சுயமரியாதை இயக் கத்தைத் துவக்கினார். ஜாதி அமைப்பு என்பதே மானுட ஒற்றுமைக்கும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கும் எதிரானது என்பதே உண்மை.

மனித உரிமை

ஜாதிகள் மக்களின் மானுடத்தன்மையை அழிக்கின்றன. இந்தக் கொடுமையை எதிர்த்து பெரியார் நூறு ஆண்டுகளுக்கும் முன்பே, சுயமரியாதை இயக்கம் துவங்கியதற்கு முன்பிருந்தே போராடி வந்துள்ளார். காங்கிரசுடன் அவர் இணைந்திருந்த காலக்கட்டத்திலேயே தீவிரமாக போராடிக் கொண்டிருந்தார். வைக்கம் போராட்டத்தை எவரால் மறக்க முடியும்? மகாதேவர் ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த வீதிகளில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் நடந்துச் செல்லும் உரிமையே பறிக்கப்பட்டிருந்தது. எப்படிப்பட்ட சமூக அநீதி அது! எத்தகைய கொடுமை அந்த உரிமை மறுப்பு! பெரியார் காந்தியாருக்கு கடிதம் எழுதி – “எங்கே போயிற்று மனித உரிமை?” என்று வினா எழுப்பியிருந்தார். “வைக்கம் தெருக்களில் நாய்களும், பன்றிகளும் கூட சுதந்திரமாக உலவும்போது நம் சகோதர சகோதரிகள், ஈழவ, புலையர் பிரிவைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மனிதர்களுக்கு அங்கே நடந்துச் செல்ல உரிமை இல்லையா?” என்று காந்தியாரைக் கேட்டார் பெரியார்.தீண்டத்தகாதவர்களாக புறக்கணிக்கப்பட்ட மக்களை எவரும் பார்க்கவும் கூடாது, நெருங்கவும் கூடாது என்ற அவலநிலை வைக்கத்தில் 1924 ஆம் ஆண்டில் நிலவியது வரலாற்று உண்மை. இப்படிப்பட்ட சமூக அநீதி எங்காவது நிலவியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா நண்பர்களே? மானுடத்தை சீர்குலைப்பதல்லவா இப்படிப்பட்ட கொடுமை?

தாழ்த்தப்பட்ட பிரிவினர் மிருகங்களைவிட மோசமாக நடத்தப்பட்டனர். உயர்ஜாதியினர் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை அன்போடு அணைத்துக் கொண்டு முத்தமிட்டுக் கொஞ்சி வந்தனர். ஆனால் தப்பித்தவறி தாழ்ந்த ஜாதி மனிதனைத் தொட்டுவிட நேர்ந்தால் கூட உடனே குளித்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வார்களாம். எத்தகைய கொடுமை இது உச்சி முதல் பாதம் வரை நீர் ஊற்றிக்கொண்டால்தான் ‘தீட்டு’ போகும் என்பார்களாம் அந்த உயர் ஜாதி வெறியர்கள். இதையெல்லாம் எதிர்த்து, மனிதர்களை மனிதர்களாக அனைவரையும் மதிக்க வைப்பதே எங்கள் பணி.

சமூக அநீதி

உருவத்தால் மட்டுமே மக்கள் மனிதர்களாக உள்ளனர். அவர்களுடைய அன்றாட வாழ்வில் எல்லாவிதத்திலும் இழிவு! அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வதால் என்ன பயன்? கல்வி கற்கவும் உரிமை மறுக்கப்படுவது சமூக அநீதியல்லவா? சுதந்திரம் பறிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் அன்றாடம் நிகழும் அராஜகம். சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த புதிய சமூகத்தை உருவாக்கவே நாங்கள் போராடி வருகிறோம். ஜாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் லட்சியம்.
தனி மரம் தோப்பாகாது என்பார்கள். ஓர் ஆங்கிலப் புதினத்தில் ராபின்சன் க்ரூஸோ தீவு பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அப்படிப்பட்ட ஆள் அரவமற்ற தனித் தீவிலாநாம் வாழ்கிறோம்? நாம் ஒரு சமூகத்தின் அங்கத்தினர்களாக ஒன்றுபட்டு, ஒரே குடும்பம் போல் வாழ்பவர்கள் அல்லவா? உறவினர்கள், நண்பர்கள் என்று மனிதர்கள் சூழ வாழ்ந்து வருகிறோம். எனவே சமத்துவம் நமக்கு இன்றியமையாத ஒன்று. சமமான வாய்ப்புகள் நம் அனைவருக்கும் கட்டாயத் தேவை. எனவே நாம் எல்லோருமே சமூகப் போராளிகளாக மாற வேண்டியது அவசியம்.

சமுதாய மாற்றம்

அதிகாரங்கள் இடம் மாறிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில் சமுதாய மாற்றங்களைக் காண முடியவில்லை. மறுமலர்ச்சி இன்றுவரை ஏற்படவில்லை. எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும் நிலை உருவாக, முழுமையான சமத்துவம் மலர – ஜாதிகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். இதைத்தான் தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் உட்பட பல முற்போக்குவாதத் தலைவர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். அவர்களையெல்லாம் கவுரவிக்கும் விதமாகத்தான் இன்று நீங்கள் சிறப்பாக விழா நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே பெருமிதமாக உள்ளது. பெரியாரின் உருவச் சிலையை நீங்கள் திறந்து வைப்பது எங்களுக்கு ஈடு இணையற்ற பெருமை. ஆனால் நாம் என்ன பயனை அடைந்து விட்டோம் என்றே கேட்கத் தோன்றுகிறது. ஏன் இன்னும் நம் துயரம் நீங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடை நமக்கு கிடைத்தே ஆகவேண்டும். முன்னோடியாக விளங்கிய தலைவர்களுக்குச் சிலைகள் எழுப்புவதும், மாலைகள் அணிவிப்பதும் மட்டும் போதாது. அவர்களுடைய சிந்தனைகள் மக்களைச் சென்றடையச் செய்வதே மிகவும் முக்கியம். நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் அந்தப் போராளிகளின் கொள்கைகள் பரவிப்படர நாம் செயலாற்றவேண்டும். அப்போதுதான் புதிய சமூகத்தை நம்மால் உருவாக்க இயலும். இதற்குத் தேவை அறிவியல் மனப்பான்மை. அறிவியல் கண்ணோட்டம் அவசியம் மட்டுமல்ல – அவசரமும் கூட.

அறிவியல் மனப்பான்மை

ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் முதல் குடியரசுத்தலைவர் வரை அனைவரும் அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் – “நாங்கள் அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வோம்” என்று.

அரசமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு சமீபத்தில் கொண்டாடப்பட்டபோது, அதன் முகவுரை வாசிக்கப்பட்டது. இது வெறும் ஓர் அரசியல் நிகழ்வாகவோ அரசியல் சார்ந்த சடங்காகவோ இருந்து விட்டால் போதுமா? அதற்கு ஓர் சமூக நோக்கம் தேவையல்லவா? அது என்னவாக இருக்கவேண்டும்? சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் முழுமையாக மலரச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்ட முகவுரை மூலம் நாம் உணரவேண்டும். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும் – சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி இதில் அடங்கும். இவை மூன்று வகையான நீதிகள். ஒன்றோடு மற்றொன்றை இணைத்து நாம் குழப்பிக்கொள்வதும் சரியல்ல. பொருளாதார நீதியிலிருந்து வேறுபட்டது சமூக நீதி. இவை இரண்டிலிருந்தும் மாறு பட்டது அரசியல் நீதி. அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் மட்டும் குறிப்பிடப்படவில்லை – நம் அடிப்படை கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. 51-A என்ற பிரிவு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை கொண்டு கேள்வி கேட்கும் துணிவுடனும், மனித நேய உணர்வுடனும், சீர்திருத்த நோக்கத்துடனும் வாழவேண்டும் என்பதை இந்த 51A பிரிவு வலியுறுத்தியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் இந்தக் குறிப்பிட்ட பிரிவில் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் கடந்த 75 ஆண்டு காலத்தில் எந்த அள வுக்கு இது நிறைவேறியுள்ளது என்றே கேட்கத் தோன்றுகிறதுவலியுறுத்தப்பட்ட கடமை களின்படி செயலாற்றி சிறந்த சமூகத்தை நம்மால் உருவாக்க முடிந்ததா? விடை காண முடியாத கேள்வியாகவே இது இன்றும் உள்ளது.

ஒன்றிணைந்து போராட வேண்டும்

மனிதர்கள் வருவார்கள், போவார்கள். பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் மாறி மாறி பதவி ஏற்பார்கள், விலகுவார்கள். ஆனால் நாம் காணும் மாறுதல்கள் என்ன? விளைவுகள் என்ன? நிலைமையில் மாற்றம் உண்டா? எதுவுமே இல்லை என்பதே கசப்பான உண்மையாக உள்ளது. இப்படிப்பட்ட அவலநிலையை உலகில் வேறு எங்காவது நம்மால் பார்க்க முடியுமா? எந்த ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட துயரம் உள்ளது? மனிதர்களை பார்க்கக்கூடாது, நெருங்கக் கூடாது, தீண்டக் கூடாது என்றெல்லாம் தடை விதிக்கும் நாடு உலகில் உண்டா? நாம் தான் இந்தக் கொடுமையை இன்றுவரை சகித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் முடிவு கட்டப்படவேண்டும். இந்தச் சமூக அநீதி அறவே அழிய வேண்டும். இதற்காக நாம் அனைவருமே ஒன்றிணைந்து போராட வேண்டும். இதற்கான போர் நம் மக்களின் மனங்களில் நடக்க வேண்டும்.

சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் – இம்மூன்றும் நிறைந்த சமூகம் உருவாக நாம் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.
நீங்கள் தெலங்கானாவிலும் நாங்கள் தமிழ்நாட்டிலும் இருப்பது போலவே நாட்டு மக்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் நம்நாடு ஒன்றுதான். நமக்குள் பிரிவினைகள் இல்லை. தனித்தன்மைகொண்ட நம் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒற்றுமையும், சமச்சீர் நிலையும் ஒன்றல்ல. இரண்டையும் சேர்த்து நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது. மாறுபட்ட இரண்டு அம்சங்களுமே நமக்குத் தேவை. நம்முடைய பகுத்தறிவுக் கண்ணோட்டம் மாறுபடக் கூடாது. இந்தப் பண்பு பாதுகாக்கப்பட வேண்டும். அறிவியல் பார்வை மேலும் தீவிரமடைய வேண்டும்.இனவெறி, ஜாதிவெறி, மதவெறி – இவை மூன்றுமே அடியோடு அழிய வேண்டும்.

உயிர்த் தியாகம்

தபோல்கர் போன்ற சமூகப் போராளிகளும் வேறு பல புரட்சியாளர்களும் எதற்காக உயிர்த்தியாகம் செய்தார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் சமூக விரோதிகள் அல்லர். அவர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. தேசவிரோதச் செயல் எதிலும் அவர்கள் ஈடுபடவில்லை. மக்கள் சுதந்திரமாக சுயமாகச் சிந்திக்க வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. எவருடைய கட்டுப்பாடும் இன்றி மக்கள் செயல்படவேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். ஆனால் மக்கள் அப்படி வாழ முடியாத நிலையை சில தீயசக்திகள் ஏற்படுத்திவிட்டன. இதை உணரவும் விழிப்புணர்வு அடையவும் நம் மக்கள் தவறிவிட்டனர். இந்தத் தவறுக்கு விலையாக நாம் தரப்போவது என்ன என்ற கேள்வி இத்தருணத்தில் எழுகிறது.

மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் சுதந்திரமாக சிந்திக்கவேண்டும். இந்த நோக்கம் நிறைவேற உங்களைப் போன்ற அமைப்புகள் போராடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பகுத்தறிவே நம் வாழ்வின் அடிப்படைத் தத்துவமாக இருக்க வேண்டும். ஆறறிவுள்ள மனிதனால் மட்டுமே பகுத்தறிய முடியும். எனவே அதற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அறிவியல் கண்ணோட்டமும் அறிவியலின் வளர்ச்சிக்காக அல்ல – நம் வளர்ச்சிக்காகவே.

நம்முடைய கொள்கைகளையும் திட்டங்களையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எடுத்துச் சென்று நாம் சேர்க்கவேண்டும். அவை மக்களைச் சென்றடைய வேண்டும். மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. புதிய தலைமுறையினரை விழிப்படையச் செய்ய வேண்டும். அவர்கள் வருங்காலத்தின் தூண்கள். கடுமையாக உழைக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தி நாம்பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மூடநம்பிக்கை ஒழிப்பு

நாம் வாழ்வது செயற்கை நுண்ணறிவு யுகத்தில். இருந்தாலும் தொலைகாட்சி ஒளிபரப்புகளிலும், சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறையவே இல்லை. ஜோதிடம், வாஸ்து, ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற மூட நம்பிக்கைகள் இவற் றின் மூலம் இன்றும் பரவி வருவது நம் நோக் கத்திற்கு பெரும் தடையாக உள்ளது. இந்த மடமைகளுக்கெல்லாம் எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் கிடையாது. இவற்றை யெல்லாம் ஒழிக்க நாம் போராட வேண்டும்.

அரசியல் விவாதங்களோடு நாம் நின்றுவிடக் கூடாது. பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பெண்களின் முன்னேற்றம், சமூகநீதி, ஜாதி ஒழிப்பு – இப்படி பல சவால்கள் உள்ளன. ஜாதிகளின் படிநிலையமைப்பு மிகப்பெரிய கொடுமை. உலகின் எல்லா சமூகங்களிலும் சமத்துவம் நிலவுகிறது. நம் நாட்டில் சமத்துவமின்மை மட்டுமல்ல – படிநிலை அமைப்பில் சமத்துவமின்மையும் ஏணிப்படிகள் போல் நிலவி வருகிறது. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று பிரிக்கப்பட்டு நம் மக்கள் வாழும் துயரநிலை எப்போது மாறும்? ஜாதிகள் எப்பொழுது அடியோடு ஒழியும்? நம்முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி இதுதான். ஜாதிகளின் படி நிலையமைப்பே எல்லா கொடுமைகளுக்கும் மூலகாரணம் என்று டாக்டர் அம்பேத்கரும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சமூகம் உருவாக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவோம். மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வாழ்நாள் முழுவதும் அதைத்தான் செய்து வந்தார் பெரியார். எங்கள் திராவிடர் கழகம் தமிழ்நாட்டை பெரியார்மண்ணாக, சமூகநீதி மாநிலமாக மதித்து வருகிறது. பகுத்தறிவு பரவிப் படர போராடி வருகிறோம். மனித நேயம் தழைக்க எங்களால் இயன்றதைச் செய்து வருகிறோம். மக்களை விழிப்படையச் செய்ய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தப் பணியில் உங்கள் கரங்களைப் பலப்படுத்த நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.

‘‘விடுதலை’’

எங்களுடையது மக்கள் இயக்கம். எந்தவிதமான அரசியல் ஆதாயமும் தேடாதவர்கள் நாங்கள். தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் இயங்கி வருகிறோம். எங்கள் கொள்கைகளை பரவிப்படரச் செய்ய ‘விடுதலை’ என்ற பெயரில் நாளிதழ் வெளியிட்டு வருகிறோம். மாத இதழ்களும், மாதமிருமுறை இதழ்களும் கூட கொள்கைப் பரப்புக் கருவிகளாக வெளியிட்டு வருகிறோம். எங்கள் பத்திரிகைகள் தொழில் அல்ல – அவை யாவும் எங்கள் லட்சியம் – எங்கள் உயர்ந்த நோக்கம் – எங்கள் இலக்கு.

உங்கள் பணிகளும் நல்ல பயன்களை அளிக்க என் வாழ்த்துகள். “அந்தரிகீ வந்தனம்” என்று தெலுங்கில் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் சமச்சீர் அமைப்புகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒன்றுபட்ட அமைப்புகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் போதும். எங்கள் ஒத்துழைப்பு உங்கள் அமைப்பிற்கு எப்போதும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். அன்புச் சகோதர, சகோதரிகளே, ஒரு நல்ல பொதுநோக்கத்திற்காக நீங்களும் எங்களுடன் எப்போதும் இணைந்து ஒத்துழைப்பு அளியுங்கள். நம் அனைவரின் இலக்கும் ஒன்றாக இருக்கட்டும். பழமைகளை உணவாக அல்ல – உரமாக்கிக் கொண்டு புதிய சமூகத்தை வளர்ப்போம். மூடநம்பிக்கைகளை ஒழிப்போம். எல்லாவிதமான மடமைகளையும் அழிப்போம். பகுத்தறிவு செழிக்க மேலும் தீவிரமாகப் போராடுவோம்.மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அமைப்பைச் சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். தமிழ்நாட்டிற்கு வருகை புரியுங்கள். சென்னைக்கு வந்து எங்களை நேரில் சந்தியுங்கள். எங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள். எங்களுடன் கலந்துரையாடி உங்களுக்குச் சரியென்று படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

பொது மக்களின் இயக்கம்

ஒருசில மேதைகளும், அறிஞர்களும் மட்டுமே நிறைந்ததாக எந்த ஒரு இயக்கமும் குறுகலான வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் பொதுமக்களின் இயக்கமாக அது இருக்கவேண்டும். அப்படித்தான் எங்கள் திராவிடர் கழகம் உள்ளது. உங்கள் இயக்கமும் மக்கள் இயக்கமாக மேலும் மேலும் செழித்தோங்க என் வாழ்த்துகள். மக்களை உங்கள் இயக்கம் சென்றடையச் செய்யுங்கள் என்பதே என் பணிவான வேண்டுகோள். வாழ்க பகுத்தறிவு! வாழ்க சமூகநீதி! வாழ்க சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம்! விடை பெறுகிறேன். நன்றி.
தமிழர் தலைவரின் ஆங்கில உரையினை மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோர் பார்த்து செவிமெடுத்தனர். தமிழர் தலைவரின் எழுச்சிமிகு உரை தமிழர் தலைவரின் நிகழ்ச்சியில் முத்திரை பதிவாக விளங்கியது. ஆங்கில உரையின் தெலுங்கு மொழியாக்கத்தை மானவ விகாச வேதிகா அமைப்பின் தோழர் ஒருவார் வாசித்தார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆற்றிய
உரையின் சுருக்கம்:

கருத்துச் செறிவுமிக்க தமிழர் தலைவரது உரைக்குப் பின்னர் உரையாற்றுவது சற்றுகடினம். சுருக்கமாக ஒரே ஒரு கருத்தினை மட்டும் எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன்.

தந்தை பெரியாரின் கொள்கையின் சாரம் – மனிதர் அனைவரும் சமமானவர்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட வேண்டும். இந்த கொள்கை நடைமுறைக்கு தடையாக எதுவந்தாலும், எத்தகைய பெரிய சக்தி என்று நினைக்கப்படுவது இருந்தாலும் அவையனைத்தும் தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் வாழ்வும் பணியும். மனித சமத்துவத்திற்கு எதிராக ‘கடவுள் சொன்னார்’ என்று வந்தாலும் ‘கடவுளும்’ மறுக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல; எதிர்க்கப்பட வேண்டியவர். இந்த அடிப்படையில்தான் மற்ற புரட்சியாளர்களிடமிருந்து தந்தை பெரியாரின் கொள்கையும், நடைமுறையும் வேறுபடுகிறது. மானுடம் மேம்பட முழுமையாக பயன்படுகிறது.

அண்மையில் கேரளாவில் வைக்கம் நகரில் 1924 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சத்யாக்கிரகத்தின் வெற்றி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. கோவிலில் அனைவருக்கும் நுழைவு; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சராகும் உரிமை என்று முற்போக்கு நிலவிடும் தற்போதைய நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்து செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. தீண்டாமையால் (untouchability) – தெருக்களில் நடந்து செல்லும் உரிமை மறுப்பு தாண்டவமாடியது. இதனை எதிர்த்து கேரளத்து முற்போக்கான தலைவர்கள் போராட்டத்தினை தொடங்குகிறார்கள். முதல் வாரத்திற்குள் அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுகின்றனர். போராட்டம் தோல்வி அடைந்து விடும் என்ற நிலையில் சிறையிலிருந்த தலைவர்கள் அன்றைய தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவர் பெரியாருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். வைக்கம் வந்து போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டுகின்றனர்.முதல் போராட்டம்

உடனே பெரியாரும் வைக்கம் நகருக்கு வந்து சுற்றியுள்ள பகுதிகளிலெல்லாம் தனது எழுச்சிப் பேச்சால் மக்களைத் தட்டி எழுப்பி தொய்வடைந்த போராட்டத்தை மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்றுகிறார். இரண்டு முறை கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார். அரசியல் கைதியாக அல்லாமல் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாகிறார். இறுதியில் தெருக்களில் நடக்கும் உரிமை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கிறது. வைக்கம் போராட்ட வெற்றி விழாவில் தந்தை பெரியார் பங்கேற்கிறார். இந்தியாவில் மனித உரிமைக்கான முதல் போராட்டமாக வைக்கம் போராட்டம் இடம் பெற்றது.

அந்த எழுச்சிமிகு வைக்கம் போராட்டம்தான் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களுக்கு மகாராஷ்டிரம் – ‘மகத்’ பொதுக்குளத்தில் குடிதண்ணீர் எடுக்கும் போராட்டத்தினை நடத்திட உந்து சக்தியாக விளங்கியது. இதனை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் பதிவு செய்கிறார். அந்த வரலாற்று நூலுக்கு ஒரு பெருமை உண்டு. டாக்டர் அம்பேத்கர் உயிருடன் வாழ்ந்தபொழுது அவர் படித்து ஒப்புதல் அளித்த வரலாறு நூல் தனஞ்செய் கீர் அவர்களுடையது மட்டும்தான்.

தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் இன்று நூற்றாண்டு விழாவாக உலகெங்கும் பேசப்படுகின்றது. அன்றைய அரசு பெரியாரைக் கைது செய்தது. இன்றைய அரசுகள் தந்தை பெரியாரைப் போற்றி விழா எடுக்கின்றன. இதுதான் உண்மையான புரட்சியின் வெற்றி.
இவ்வாறு கழகப் பொருளாளர் உரையாற்றினார்.

மானவ விகாச வேதிகா நிகழ்ச்சியில் விஜயவாடா நாத்திக மய்யத்தின் தலைவர்டாக்டர் சமரம், நியாந்தா மற்றும் ராஸ்மி, அனைத்து இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், செயலாளர் பேராசிரியர் முனைவர் சுதீஷ் கோடேராவ் மற்றும் பல்வேறு பகுத்தறிவாளர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மானவ விகாச வேதிகா அமைப்பின் தலைவர் சீனிவாசராவ் செயலாளர் மூர்த்தி மற்றும் அந்த அமைப்பின் தோழர்கள் வெகு சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்.

இன்றைய தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் முதல் சிலை திறப்பு நிகழ்வு என்ற நிலையில் தமிழ்நாட்டையும் கடந்து தந்தை பெரியாரின் கொள்கைகள் ஆழமாக வேர் பிடித்து பரவி வருகின்றன என்பதன் அடையாளமாகவே மானவ விகாச வேதிகா அமைப்பினர் நடத்திய நிகழ்வு அமைந்தது. உலகம் பெரியார் மயம்! பெரியார் உலக மயம் என்பதன் எதிரொலியாக – நடைமுறையாக தெலங்கானா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொகுப்பு: வீ. குமரேசன்


தந்தை பெரியாரின் சிலை நன்கொடை

நன்கொடை


அய்தராபாத் – ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் உள்ள மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். தென்காசி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும் – தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான வி. ஜெயபாலன் அவர்கள் தந்தை பெரியாரின் சிலையினை வடிவமைத்திட ஆவன செய்து – அந்தச் சிலையினை மானவ விகாச வேதிகா அமைப்பினர் நிறுவிட நன்கொடையாக வழங்கினார். நன்கொடை அளித்த விவரங்கள் பற்றிய குறிப்பு சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் சிலையினை நன்கொடையாக வழங்கிய வி. ஜெயபாலன் அவர்களுக்கு நிகழ்ச்சியில் மானவ விகாச வேதிகா அமைப்பினர் நன்றியினைத் தெரிவித்தனர்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

பெரியார் கொள்கையில் உறுதி காட்டிய வடஇந்தியர் ‘பெரியார் லலாய் சிங்!’ - பாணன்


விடுதலை ஞாயிறு மலர்

 தந்தை பெரியாரின் ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை “சச்சி ராமாயண்” என்ற பெயரில் ஹிந்தியில் கொண்டுவந்த பெருமை லலாய் சிங்கைச் சேரும்.

அவர் பெரியாரின் ‘ராமாயணப் பாத்திரங்கள்’ நூலை ஹிந்தியில் மொழிபெயர்த்ததும் வட இந்தியாவில் புயல் கிளம்பியது.

1968இல் லலாய் சிங் “தி ராமாயணா (ஏ ட்ரூ ரீடிங்)” என்ற நூலை ஹிந்தியில் மொழிபெயர்த்து “சச்சி ராமாயண்” என்ற பெயரில் வெளியிட்டார்.
வெளியான உடனேயே அந்த நூல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறும் ஹிந்துத்துவ அமைப்புகள் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தின.

அப்போதைய உத்தரப்பிரதேச அரசு போராட்டத்திற்கு அடங்கி டிசம்பர் 8, 1969 அன்று மத உணர்வுகளை புண்படுத்தும் என்ற குற்றச்சாட்டின் பேரில் புத்தகத்தை பறிமுதல் செய்தது.

லலாய் சிங் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். ஆனால் பெரியாரின் வழியில் வழக்கிற்கு அஞ்சாத லலாய் சிங் அரசை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் மாநில அரசின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறுகையில், இந்த நூல் மாநிலத்தின் பெரும்பான்மையான ஹிந்து மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்றும், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மக்கள் பெரிதும் மதிக்கும் அவதார புருஷரான ராமன், சீதை மற்றும் ஜனகன் போன்ற தெய்வீகப் பாத்திரங்களை அவதூறு செய்துள்ளார் என்றும், இந்துக்கள் வணங்கும் தெய்வங்களைக் களங்கப்படுத்தியுள்ளார் என்றும் கூறினார். எனவே இந்த புத்தகத்தைத் தடை செய்வது அவசியம் என்றார்.

இதுகுறித்து லலாய் சிங் வழக்குரைஞர் பன்வாரி லால் கூறும்போது, ‘சச்சி ராமாயண்” எனும் நூல் மூல ராமாயணத்தில் உள்ளவற்றை வைத்துத்தான் எழுதப்பட்டது. எங்கள் கருத்துகளோ திணிப்போ அதில் இல்லை என்று கூறிச் சான்றுகளை அளித்தார்.
ஜனவரி 19, 1971 அன்று அலகாபாத் நீதிமன்றம் நூலுக்கான தடை உத்தரவை ரத்து செய்து, பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து நூல்களையும் திருப்பி அளிக்குமாறும், லலாய் சிங்கிற்கு செலவாக முந்நூறு ரூபாய் வழங்குமாறும் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

லலாய் சிங் மொழி பெயர்த்து வெளியிட்ட ‘சச்சி ராமாயண்’ மூல நூல் இந்த நூல்தான் உத்தரப் பிரதேச அரசால் தடை செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் தடை விலக்கப்பட்டது.

இதன் பிறகு உத்தரப்பிரதேச அரசு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அதற்கு நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் தலைமை தாங்கினார், மற்ற இரு நீதிபதிகள் பி.என். பகவதி மற்றும் சையத் முர்தசா பசல் அலி. அமர்வு தீர்ப்பளித்தது

லலாய் சிங் யாதவ் மொழி பெயர்த்த
‘சச்சி ராமாயண்’ என்ற வடமொழி நூலை குஜராத்தி மொழியில் ‘சவ்ரத பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது

“உத்தரப்பிரதேச அரசு – எதிர் லலாய் சிங் யாதவ்” என்ற பெயரில் இந்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 16, 1976 அன்று வழங்கப்பட்டது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு புத்தக வெளியீட்டாளருக்கு ஆதரவாக இருந்தது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் சரியானதாகக் கருதி, மாநில அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
இந்து மதத்தை விட்டு

பவுத்தராக மாறிய லலாய் சிங்
அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ‘சச்சி ராமாயண்’ நூல் வழக்கை வென்ற பிறகு, லலாய் சிங் தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோரின் தலைவராக மாறினார்.

லலாய் சிங் யாதவ் 1967இல் இந்து மதத்தைத் துறந்து பவுத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். பவுத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் தனது பெயரிலிருந்து ‘யாதவ்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்.

‘யாதவ்’ என்ற வார்த்தையை நீக்கியதன் பின்னணியில் அவரது ஆழமான ஜாதி எதிர்ப்பு உணர்வு இருந்தது.

அவர் ஜாதியற்ற சமூகத்திற்காக களப்பணியாற்றினார்.
பெரியார் லலாய் சிங் இந்தியத் தலைவர்களின் வரலாற்றைத் தொடர்ந்து படிக்கத்துவங்கினார்.

பவுத்த மதத்தைப் பின்பற்றிய அசோகர் அவரது முன்மாதிரி ஆளுமைகளில் ஒருவராக இருந்தார்.

அவர் “அசோக புத்தகாலயம்” என்ற பெயரில் பதிப்பக நிறுவனத்தை நிறுவி, “சஸ்தா(புத்தர்) பிரஸ்” என்ற பெயரில் அச்சகத்தை நிறுவினார்.

அவர் அய்ந்து நாடகங்களை எழுதினார் – (1) அங்குலிமால நாடகம், இது தாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது (2) சம்பூக வதம், (3) சாந்த மாயா பலிதானம், (4) ஏகலைவன், மற்றும் (5) நாக யக்ஞ நாடகம். உரைநடையிலும் அவர் மூன்று புத்தகங்களை எழுதினார் – (1) ஒடுக்கப்பட்ட மக்களை மீதான மத அடக்குமுறை

(2) மதத்தின் பெயரால் சுரண்டப்படும் மண்ணின் மைந்தர்கள் (3) சமூக ஏற்றத்தாழ்வு எவ்வாறு ஒழிய வேண்டும்? போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

அவரது நாடகங்கள் மற்றும் இலக்கியத்தில் அவரது பங்களிப்பு குறித்து கன்வல் பாரதி எழுதுகையில், “இந்த இலக்கியம் ஹிந்தி இலக்கியத்தில் புதிய சிந்தனைப் புரட்சியின் இலக்கியமாக இருந்தது. இது இந்துக் கடவுள்கள் மற்றும் இந்துக் கலாச்சாரம் குறித்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மாற்றியது” என்கிறார்.
இது ஒரு புதிய விவாதமாக இருந்தது; இந்தி இலக்கியத்தில் புதிய கோணத்தை உருவாக்கினார்.

லலாய் சிங்கின் நூல்கள் பார்ப்பனீய அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வை ஏற்படுத்தியது. மக்களிடையே சமத்துவம், சமூகநீதிச் சிந்தனையின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

தீவிர பகுத்தறிவாதியாக, கொள்கைப்பிடிப்பில் எதற்கும் அஞ்சாதவராக, தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் லலாய் சிங் வட இந்தியாவின் பெரியாராக பிரபலமானார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான லலாய் சிங் செப்டம்பர் 1, 1921 அன்று கான்பூருக்கு அருகிலுள்ள கதாரா கிராமத்தில் பிறந்தார்.

பிற ஒடுக்கப்பட்ட தலைவர்களைப் போலவே, அவரது வாழ்க்கையும் போராட்டங்களால் நிறைந்திருந்தது. அவர் 1933இல் க்வாலியர் சமஸ்தான ஆயுதப்படை காவல்துறையில் சிப்பாயாகச் சேர்ந்தார். ஆனால், காங்கிரசின் சுயராஜ்யத்தை ஆதரித்தார். இது பிரிட்டிஷ் ஆட்சியில் குற்றமாக இருந்ததால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கத்தை எதிர்த்து அவர் குவாலியர் ராணுவ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

1946இல் அவர் க்வாலியரில் “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ராணுவம்” என்ற அமைப்பை நிறுவினார். இது ராணுவத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகச் சிப்பாய்களின் உரிமையை மீட்க உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக அவரே ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் கதர் கட்சி என்ற ஒன்றை துவக்கினார்.

அந்த அமைப்பிற்காக லலாய் சிங் ‘போர்ப்படை வீரர்கள்’ என்ற தலைப்பில் ‘சோல்ஜர் ஆஃப் தி வார்’ என்ற நூல் ஒன்றை எழுதினார்.

1946இல் ‘சிப்பாயி கி தபாஹி’ (சிப்பாயின் அழிவு) என்ற புத்தகத்தை எழுதினார். இது அச்சிடப்படவில்லை. ஆனால், தட்டச்சு செய்து சிப்பாய்களிடையே விநியோகிக்கப்பட்டது.

ராணுவத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இந்த புத்தகத்தைப் பற்றி அறிந்ததும், அவரது சிறப்பு ஆணையின் மூலம் அதை பறிமுதல் செய்தார். ‘சிப்பாயி கி தபாஹி’ உரையாடல் பாணியில் எழுதப்பட்ட புத்தகமாக இருந்தது.

இந்த நூலில் மகாத்மா ஜோதிபா பூலேவின் ‘கிசான் கா கோடா’ (விவசாயிகளின் குதிரை) மற்றும் ‘அச்சூதோன் கி கைபியத் (தீண்டத்தகாத மக்களின் நிலை)’ ஆகிய புத்தகங்களை மேற்கோள் காட்டி இருந்தார்.

லலாய் சிங் அச்சுப்பிரதியில் ஒரு உரையாடல்: ஒரு சிப்பாய்க்கும் அவரது மனைவிக்கும் இடையேயான உரையாடல் வீட்டின் ஏழ்மை நிலை குறித்து உள்ளது. “உண்மையில் புரோகிதர்கள், பாதிரிகள் மற்றும் இதர மதத் தலைவர்கள் – கற்பனையான சொர்க்கம் என்றும் நரகம் என்றும் கூறுவது எல்லாம் போலியானது” என்று மனைவியிடம் வாதிடுகிறார்.

“நாம் இருக்கும் இந்த நிலைதான் (சிப்பாயின் வீடு) உண்மையான நரகம். இந்த நரக அமைப்பிற்கான காரணம் இந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகம். எனவே, இதை எந்த நிலையிலும் மாற்ற வேண்டும்; முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ‘மக்களால் மக்களுக்கான ஆட்சி’ அமையும்போது, நமது அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்” என்று எழுதியிருந்தார்.

இந்த நூலின் வாயிலாக லலாய் சிங் சிப்பாய்களைப் புரட்சிக்கு அழைத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 29, 1947 அன்று கைது செய்யப்பட்டார். வழக்கு நடத்தப்பட்டு, அவருக்கு அய்ந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் 9 மாதங்கள் சிறையில் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து, குவாலியர் சமஸ்தானம் இந்தியாவில் இணைந்த பிறகு, ஜனவரி 12, 1948 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

1950இல் அரசு அரசுப்பணியில் இருந்து விலகி அவர் தன்னை முழுமையாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார்.

பார்ப்பனீயத்தை ஒழிக்காமல் மண்ணின் மைந்தர்களுக்கு விடுதலை சாத்தியமில்லை என்பதை ஆழமாக உணர்ந்திருந்தார். ஒரு சமூக ஆர்வலராக, எழுத்தாளராக, பதிப்பாளராக, அவர் தனது முழு வாழ்க்கையையும் பார்ப்பனீயத்தை ஒழிப்பதற்கும் மண்ணின் மைந்தர்களின் விடுதலைக்கும் அர்ப்பணித்தார். பிப்ரவரி 7, 1993 அன்று அவர் மரணமடைந்தார்.

லலாய் சிங் வழியில் அவரது குடும்பத்தினரும் அவரைப் பின்பற்றும் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் பெரியார் என்று சேர்த்துக்கொண்டே வருகின்றனர்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் - 3.8.2024

 


திருச்சி, ஆக. 7- பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் 3.8.2024 அன்று மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். வருகை தந்த அனைவரையும் பொதுச் செயலாளர் வி.மோகன் வரவேற்று பேசினார். இந்த கூட்டம் கூட்டப் பட்டதன் நோக்கம் பற்றி மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தன்னுடைய முன்னுரையில் எடுத்துரைத்தார்.

டிசம்பர் 28 , 29 திருச்சியில் நடைபெற இருக்கும் பன்னாட்டு பகுத்தறிவாளர் – நாத்திகர் – மனிதநேயர் – சுதந்திர சிந்தனையாளர் மாநாடு பற்றி விரிவான திட்ட அறிக்கையை விளக்கிப் பேசி இது தொடர்பான கருத்துகளை வருகை புரிந்தவர்களிடம் தெரிவிக்கக் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் தஞ்சை பெரியார் கண்ணன், நீடாமங்கலம் கல்யாண சுந்தரம், மன்னார்குடி கோபால், மண்ணச்சநல்லூர் முத்துசாமி, மன்னார்குடி கோவி. அழகிரி, நீடாமங்கலம் த. வீரமணி, லால்குடி வீ.அன்பு ராஜ் ஆகியோர் தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்.
திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் ,திருச்சி மாவட்ட திராவிட கழக செயலாளர் இரா மோகன்தாஸ், திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் லெ. மதிவாணன், திருச்சி மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் மன்னர் மன்னன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்கள் குறிஞ்சிப் பாடி பெரியார் செல்வம், நீடாமங்கலம் ரமேஷ், தஞ்சை கோபு. பழனிவேல், பொன்ன மராவதி சரவணன், அரியலூர் தங்க. சிவமூர்த்தி, ஆத்தூர் மாயக்கண்ணன், நாமக்கல் இளங்கோ, காளையார் கோவில் முத்துக்குமார், லால்குடி சண்முகம், பாண்டிச்சேரி ஆடிட்டர் ரஞ்சித் குமார் , நாகை முத்துகிருஷ்ணன், மதுரை பேரா. மகேந்திரன், புதுச்சேரி தலைவர் நடராஜன், ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.
தொடர்ந்து மாநில துணைத் தலைவர் ராயகிரி கே.டி.சி. குருசாமி ,சென்னை வேல்.சோ. நெடுமாறன் ஆகியோர் மாநாடு எப்படி நடைபெற வேண்டும் என்பதும் அதற்கு தங்களுடைய ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் எடுத்து கூறினார்கள்.


அதனைத் தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர் பேராசிரியர் கண்மணி ஆகியோர் மாநாட்டில் இடம் பெறவேண்டிய நிகழ்வுகள் பற்றிய தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்.
தொடர்ந்து மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, பொதுச் செயலாளர் ஆத்தூர் தமிழ் பிரபாகரன், பொதுச் செயலாளர் சென்னை வெங்கடேசன், ஊடகத்துறை தலைவர் மா.அழகிரி சாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா. நேரு ஆகியோர் தங்களது கருத்துகளையும் மாநாட்டு செயல்முறைகளையும் செய்ய வேண்டிய செயல்பாடுகளையும் பற்றிய உரை நிகழ்த்தினார்கள்.

மாநில திராவிடர் கழக தொழில் நுட்ப குழுவின் ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம் இந்த மாநாடு எப்படி இருக்க வேண்டும்என்றும், மாநாட்டு பொறுப்பு ஏற்றுள்ள பகுத்தறிவாளர் கழகம் எப்படி செயல்படும் என்பதையும் எடுத்துரைத்தார்.
அனைவரது கருத்துகளையும் தொகுத்து மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா தமிழ்ச்செல்வன் முடிவாக வழங்கினார். பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டிகள், பன்னாட்டு மாநாடு செயல்பாடுகள், பெரியார் 1000, ஆகியவை பற்றிய செய்திகளை அறிவித்தார்கள்.

நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக துணைப்பொதுச்செயலாளர் இளவரசி சங்கர் பதவி உயர்வு பெற்றமைக்கு பாராட்டு தெரிவித்து பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்தார்.
புதிதாக பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த திருவெறும்பூர் பரமசிவத்திற்கு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்தார்.

நிரல், திரள், பொருள் பற்றி திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் எடுத்துக்கூறி, மாநாடு நடைபெற தான் இதுவரை எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள், இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விரைவாக செய்ய வேண்டியதன் அவசியம், நிகழ்ச்சி எப்படி எல்லாம் இருக்கும் என்பதை எல்லாம் கோடிட்டு காட்டினார்கள் . எல்லோருடைய உழைப்பும் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் எடுத்துச் சொன்னார்கள்.
நிகழ்வை மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் ஒருங்கிணைத்தார்.
இறுதியில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.