மும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

மும்பையில் நடைபெற்ற உலக மனிதநேய மாநாடு!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 1-15 2022


கி.வீரமணி


மும்பையில் நடைபெறும் உலக மனிதநேய மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்னையிலிருந்து துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் நாற்பத்தோரு பேர் கொண்ட குழு ஒன்று 10.1.1999 அன்று மும்பை வந்தடைந்தனர். மும்பையில் தந்தை பெரியாரைத் தம் ஆசான் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்ட மனிதநேய மாண்பாளர் எம்.என்.ராய் பெயரால் அமைந்த சமூக மாற்ற மய்ய மாளிகையில், மனிதநேய மாநாடு ஜனவரி 10 முதல் 15 வரை நடைபெற்றது.
நான் 11.1.1999 அன்று பல்வேறு அறிஞர்களின் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. அதில் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் அருள்-மொழியும், திருச்சி திலகவதியும் உரை-யாற்றினார்கள். 12.1.1999இல் நடைபெற்ற கருத்தரங்க ஆய்வுரையில் கு.வெ.கி.ஆசான் உரையாற்றினார். அதற்கு அடுத்த நாள், 13.1.1999 அன்று மாநாட்டில் நான் உரையாற்றுகையில், “எம்.என்.ராயுடன் தந்தை பெரியார் கொண்டிருந்த தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். தென்னாட்டில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்துப் போராடிய மனிதநேய மாண்பாளர்களில் முதல் இடம் தந்தை பெரியாருக்கு உண்டு என்பதை விளக்கினேன்.
மாநாட்டின் நிறைவு நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் முனைவர் பு.இராசதுரை கொண்டுவந்த ஜாதி ஒழிப்புத் தீர்மானம் செயற்குழுவால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல் பாண்டியனின் மின்தொலைத் தொடர்பு சாதனங்களை பகுத்தறிவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், அ.மணிநிலவனின் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் சாமியார்களைப் பார்க்கப் போகக் கூடாது என்பதையும் தீர்மானங்-களாகக் கழகத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
தந்தை பெரியாரின் கருத்துகள், உலக மனிதநேய நன்னெறி மாநாட்டில் தீர்மானங்-களாக இடம்பெற்ற மகிழ்ச்சியில் மாநாட்டில் கலந்துகொண்ட நமது கழகக் குடும்பத்தினர் 16.1.1999 அன்று சென்னை திரும்பினர்.

நான் மும்பையில் இருக்கும்-போது, சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்கள் 12.1.1999 அன்று மரண-மடைந்தார் என்னும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மும்பையில் இருந்து விடுத்த இரங்கல் செய்தியில், “தோழர் எம்.டி.கோபாலகிருஷ்ணனின் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியும், பெரியார் திடலுக்கு நாளும் வந்து, அதன் பணிகளில் ஈடுபட்டு அதன் சாதனைகளை, பெருமைகளை உலகறியச் செய்ய, தமது உடல் உபாதைகளையெல்லாம் பொருட்படுத்தாது, அஞ்சா நெஞ்சத்துடன் பணியாற்றினார். அவரது துணைவியார் பேராசிரியை தவமணி அவர்களது சீரிய ஒத்துழைப்போடும், அவரது குடும்பத்துச் செல்வங்களின் அரவணைப்போடும், அதே
நல்லெண்ணத்துடனும் (மகன், மகள், மருமக்கள்) செய்து வந்த பாங்கை எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டும்.
மும்பை, உலக மனித நேய மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்தார். அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவாக அவர் மருத்துவமனைக்குச் செல்லும்படி நேரிட்டது.
அவரது தெளிவு, துணிவு, பொதுத்தொண்டு செய்யும் உள்ளம் பற்றி எவ்வளவோ எழுதலாம். பாழும் சாவு _ இந்தச் சொத்தை நம் இயக்கத்திடமிருந்து பறித்துவிட்டதே! என்ன செய்வது? நாம் பகுத்தறிவாளர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறித் தேற்றிக் கொள்ள வேண்டும்.
அவரின் துணைவியார் _ குடும்பத்தார் அனைவருக்கும் திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்-கிறோம். அவரின் தொண்டுக்கு நம் வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம். அவர் “மறையாத வாழ்வு பெற்ற மாவீரர்’’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம். அப்போது மும்பையில் கலந்துகொண்டிருந்த மனிதநேய மாநாட்டில், “உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள அனைத்துப் பேராளர்களும் இத்துயரச் செய்திக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஒரு நிமிடம் எழுந்து நின்று ‘எமரால்டு’ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மரியாதை செலுத்தி _ வீரவணக்கம் தெரிவித்தனர்.

- கட்டுரையின் ஒரு பகுதி...

ஞாயிறு, 5 மார்ச், 2023

கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதிக்கு மும்பையில் விருது

 

மும்பையில் நடைபெற்ற ராஷ்டிய சமாஜ் தொழிலாளர் அமைப்பின் சார்பில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வங்கித்துறை ஊழியர்களின் நலனுக்காக பல்வேறுவகையில் செயல்பட்ட யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வங்கி ஊழியர் அமைப்பின் செயலாளருமான கோ.கருணநிதி அவர் களுக்கு ராஷ்டிரிய சமாஜ் யஷ்வந்த் கவுரவ் விருது 2023 வழங்கி சிறப்பித்தனர். 

விருது வழங்கும் விழாவில் ஆந்திர மாநில மேனாள் தலைமை நீதிபதி மற்றும் சித்தராமானந்த சுவாமிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விருதினை வழங்கினர். 

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய 

கோ.கருணாநிதி சமுகநீதிக் களத்தில் தந்தை பெரியாரின் பங்கும் அதன் பலன் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிப்பது குறித்து உரையாற்றினார்.

புதன், 28 நவம்பர், 2018

மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)



சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.



மாநாட்டில் திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்புரையாற்றினார்.



மும்பை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பெரியார் & அம்பேத்கர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயனாடை அணிவித்து தந்தை பெரியார் சிலையினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன், மகாத்மா ஜோதிபா ஃபுலே அறக்கட்டளை நீதாபாய் புலே ஆகியோர் வழங்கினர்.

-  விடுதலை நாளேடு, 25.11.18

* நீதித்துறையிலும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை - தேவை!

நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் படம் திறந்திடுக!

சமூகநீதி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.

புரட்சியாளர் மகாத்மா ஜோதிபா ஃபுலேவின் அய்ந்தாம் தலைமுறையினரான நீதாபாய் புலே அவர்களுக்கு கழகத்தின் சார்பில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி சிறப்பித்தார். வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், மும்பை ரவிச்சந்திரன் உடன் உள்ளனர்.

மும்பை, நவ.27 தனியார் துறைகளில் இடஒதுக்கீடு, தந்தைபெரியார் படம் நாடாளுமன்றத்தில் திறப்பு உள்ளிட்ட ஒன்பது (நவமணி) அரிய தீர்மானங்கள் மும்பையில் நடை பெற்ற சமூக நீதி மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டன. அனைத்து தீர்மானங்களையும் மகளிரணியினர் முன்மொழிந்தனர்.

மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  (24-11-2018 சனிக் கிழமை மாலை நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

சமுக நீதி தொடர்பான இடஒதுக்கீடு முறைமைகளைச் சட்டமாக்கி 9-ஆம் அட்டவணையில் சேர்த்திடுக :-

நடுவணரசில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 60 (அறுபது) ஆண்டுகளுக்கும் மேலாகவும், பிற்படுத்தப்பட் டோருக்கு 1993ஆம் ஆண்டு முதலும் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் இருப்பினும், பல மாநிலங்களிலும், மத்திய ஆட்சியிலும் வெறும் அரசின் ஆணை மூலமாக மட்டுமே இந்த இடஒதுக்கீடு தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பு வந்தாலும், உடனே நீதிமன்றம் தலையிடும் போக்கு அதிகரித்துவரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, அவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்க்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. சிறீவள்ளி தயாளன்

தீர்மானம் வழிமொழிந்தவர் : மானமிகு இ.அந்தோணி,

தீர்மானம் 2

தனியார் துறையில் இடஒதுக்கீடு:-

புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக, மத்திய மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தனியார் துறை அரசாங்கத்தால் வெகுவாக ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, அதிகம் பாதிக்கப்படுவோர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தபட்ட, பழங்குடியின மக்கள் தான்.  தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில், உயர் பதவிகளில் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாய்ப்பு என்பது குதிரைக் கொம்பே என்ற நிலைதான் உள்ளது.

தனியார் துறை என்றாலும், அரசின் அனைத்துச் சலுகைகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகவே சமூகப் பொறுப்பு தனியார் துறை நிறுவனங்களுக்கு கட்டாயம் உண்டு என்பதால் மேலைநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இடஒதுக்கீடு நேர்மறை செயல்பாடு நடைமுறையில் உள்ளது. அதே போன்று, இந்தியாவிலும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு முறையே 27, 15, 7.5 விழுக் காடு இடஒதுக்கீடு அளித்திட வகை செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியு றுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. பொன்மாலா ஆரிய சங்காரன்

தீர்மானம் வழிமொழிந்தவர்: மானமிகு அ.கண்ணன்

தீர்மானம் : 3

நீதித் துறையில் இட ஒதுக்கீடு :-

நீதிபதிகள் நியமனங்களில் கீழமை நீதிமன்றங்களில் தற் போது இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் இட ஒதுக்கீடு முறை இல்லை. தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ள 28 நீதிபதிகளில் (மொத்தம் 31 பதவிகள்) ஒருவர் கூட தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அல்ல. பிற்படுத்தப்பட்ட சமுகத்திலிருந்து ஒரே ஒருவர் மட்டும் நீதிபதியாக பதவி வகிக்கின்றார்.  இந்திய நாட்டு மக்கள் தொகையில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் தொகை 80 விழுக்காடு என்ற நிலையில் உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் இதுகாறும் வழங்கபட வில்லை.

உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் பெரும் பான்மையினர் மேல்ஜாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என்பது ஓர் அதிர்ச்சியானத் தகவலாகும். எனவே இந்தியாவின் அனைத்து நீதி மன்றங்களிலும் இந்திய அரசமைப்பில் வழங்கப் பட்டி ருக்கும் இட ஒதுக்கீடு முறை காழ்ப்புணர்வின்றி நடைமுறைப் படுத்தப் பட்டு, உரிய விகிதாச்சார அடிப்படையில் நியமனங்கள் செய்யப் பட  வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. நங்கை குமணராசன்

தீர்மானம் வழிமொழிந்தவர் : மானமிகு வெ.சித்தார்த்தன்

தீர்மானம் : 4

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு

நிரந்தர விலக்கு வேண்டும்:-

சூத்திரனுக்கு கல்வி மறுக்கும் மனு சாஸ்திரத்தின் புதிய வடிவம் தாம் நீட் தேர்வு. பணம் படைத்தவன் வீட்டுப் பிள் ளைகள் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற  நிலையை உருவாக்கியதன் மூலம் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை நிரந்தர மாக்கி சமூக நீதிக்கு எதிரான செயலின் வடிவமே நீட் தேர்வு.

நீட் தேர்வு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தன் 92 ஆவது அறிக்கையில் விருப்பமில்லாத மாநிலங்களை விட்டுவிட்டுக் கல்வி நீட் தேர்வை அமல் படுத்தலாம் என்று அறிக்கை அளித்தப் பின்னரும் நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குக் கோரியும் கல்வியை மாநில அரசின் பட்டியலில் சேர்க்கவும் உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன் மொழிந்தவர் : திருமதி ஜூலியட் இரவிச் சந்திரன்.

வழிமொழிந்தவர்கள்: மானமிகு ஜே.வில்சன்; அ.இராதா கிருட்டிணன்

தீர்மானம்- 5

வெளிமாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு:-

இந்தியாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சமுக நிலையின் காரணமாக வாழ்வாதரம் தேடி 100 ஆண்டுகளுக்கு முன்னரே பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். எனினும், இந்திய அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப் பட்டுள்ள கல்வி, வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு இந்த மக்களுக்கு புலம் பெயர்ந்த மாநிலங்களில் மறுக்கப் படுகிறது. இது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான ஓர் உரிமை மறுப்பு என்று கூடச் சொல்லலாம்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்கள் கலைஞர் மு. கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோர் மகராஷ்ட்ரா மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இது மட்டுமின்றி மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் திருவாளர்கள் பி.சவுந்திர ராஜன், சி.குப்புசாமி ஆகியோர் நாடாளு மன்றத்திலும் பேசியுள்ளனர். மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத்தின் ஒரே தமிழ் சட்டமன்ற உறுப்பினரான கேப்டன் தமிழ்ச்செல்வன் அவர்களும் மகாராஷ்டிரா சட்ட மன்றத்தில் குரல் எழுப்பியதுடன், முதல்வரிடமும் பல முறை வலியுறுத்தியுள்ளார். இவர்களுக்கு இம்மாநாடு நன்றி தெரிவிப்பதுடன், வெளிமாநிலங்களில் வாழும் மக்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின் படி இட ஒதுக்கீடு முறையை அமல் செய்திட உரிய சட்டத் திருத்ததை முன்னெடுக்குமாறு மகராஷ்டிர மாநில அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. பேரரசி காமராசு

வழிமொழிந்தவர்கள்: மானமிகு சங்கர் திராவிட். மு.சசிகுமார்

தீர்மானம்: 6

ஆணவப் படுகொலைகளுக்கு முடிவு கட்டுக.

காதல் திருமணங்கள் சாதி மறுப்பு திருமணங்களாகும் போது ஆதிக்கச் சாதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபடு கின்றனர். தமிழகத்தில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற சாதிய ஆணவப் படுகொலைகள் வன்மையாக கண்டிக்கத் தக்கன. அச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர் : திருமதி. உமா கணேசன்

வழிமொழிந்தவர்கள்: மானமிகு இசக்கிப் பாண்டியன், பரமசிவம்

தீர்மானம்: 7

கிரீமிலேயர் முறையை நீக்குக:-

மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப் பட வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்த பிறகும் இதுவரை பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு 12  விழுக்காடு அளவிலேயே உள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) புகுத்தப்பட்டதும் இதற்கொரு முக்கிய காரணமாகும். அர சமைப்புச் சட்டத்தில் எங்கும் காணப் படாத இந்த கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-8

நாடாளுமன்றத்தில்

தந்தை பெரியார் படத்தினைத் திறந்திடுக !

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பாடுபட்டதற்காக இந்திய அரசால் தாமிரப் பட்டயம் அளித்தும் அவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டும், 125 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டும், மதிப்பளிக்கப்பட்டவரும் அய்.நா,வின் யுனஸ்கோ அமைப்பின் சார்பில் பாராட்டு விருது அளிக்கப்பட்டவரும், மக்கள் மத்தியில் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பரப்புரை செய்து பெருவெற்றி கண்ட புரட்சியாளரும் பெண்ணுரிமைக்கான உயர் சிந்தனை களைக் கூறியவரும், போராடிப் பல உரிமைகளை அவர் களுக்கு ஈட்டித் தந்தவரும், சமூக நீதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு இந்திய அரசமைப்புச்சட்டத்தில் முதல் திருத்தம் மூலம் நாடு முழுவதும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படுவதற்கு முழு முதல் காரணமாக இருந்தவரும்,  பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் உருவப் படத்தினை நாடாளுமன்றத்தில் திறக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும்  தந்தை பெரியார் பெயரில் ஆய்வுத்துறை ஒன்று தொடங்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 9

நீதி மன்ற தீர்ப்புகளை

மத ஈடுபாடுகளின்றி நிறைவேற்றிடுக!

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று பாலினப் பாகுபாடு இன்றி வழிபடும் உரிமையை உச்ச நீதிமன்றம் தனது    தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்புக்கு எதிராக சட்டத்தினை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு கோவிலுக்கு வழிபட வரும் பெண்களை வழிமறித்து  உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதித்துச் செயல்பட மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, காங்கிரசு உள் ளிட்ட கட்சிகள் மற்றும் இந்துமத அமைப்புகளின் அண்மைக் கால நடவடிக்கைகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

வாக்கு வங்கி அரசியலுக்காக மத உணர்வுகளைத் தூண்டி சட்டத்தைக் கையிலெடுக்கும் போக்கும் அதற்குத் துணைபோகின்ற அரசியல் கட்சிகள், குறிப்பாக தேசியக் கட்சிகள் என்று பறைசாற்றிக்கொள்ளும் பா.ஜ.க.; காங்கிரசு, நடவடிக்கைகள் இந்தியாவின் மதச் சார்பற்ற கொள்கைக்கும், மாநிலங்களின் இறையாண்மைக்கும் பெரும் தீங்காக அமையும் என்பதையும் இம்மாநாடு கவலையுடன் சுட்டிக் காட்டுவதுடன் அவ்வாறு செயல் படும் அரசியல் கட்சிகள் இந்திய நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி கருதி இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்த்திடுமாறு வேண்டுகின்றது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மும்பையில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்றோர்

-  விடுதலை நாளேடு, 27.11.18

திங்கள், 19 நவம்பர், 2018

மும்பையில் நவ. 24 மாநில சமூகநீதி மாநாடு



மும்பை, நவ.17 மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்  மாநில மாநில சமூகநீதி மாநாடு 24.11.2018 அன்று நடைபெறுகிறது.

மும்பை செம்பூர் ஆர்.சி.மார்க் பைன் ஆர்ட்ஸ் ஆடிட்டோரியம் சிவசாமி குளிர் அரங்கத்தில் 24.11.2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சமூகநீதி மாநாடு தொடங்குகிறது.

சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.அன் பழகன்  நினைவரங்கத்தில் மும்பை பகுத் தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தலைமையில் மாநில சமூக நீதி மாநாடு (ஜாதி தீண்டாமை ஒழிப்பு) நடைபெறுகிறது.

மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் வரவேற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் புதிய மாதவி நெறியாள்கையில், மும்பை புறநகர் திமுக சொற்பொழிவாளர் முகமது அலி ஜின்னா  மாநாட்டின் தொடக்க வுரையாற்றுகிறார்.

புனே மகாத்மா ஃபுலே அறக்கட்டளை நீதிபாய் புலே, நாசிக் சந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன், எம்அய்டிசி தலைமை நிர்வாக அதிகாரி பொன்.அன்பழகன் அய்.ஏ.எஸ், மும்பை சயான், கோலிவாடா தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன், மராட்டிய மாநிலத் தமிழ்ச்சங்கத் தலைவர் எஸ்.அண்ணாமலை, மராட்டிய மாநில விடுதலை சிறுத்தைகள் அமைப்புச்செயலாளர் து.ஆ.கனகராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

‘ஏன் அவர் பெரியார்?’ தலைப்பில் தலை மைக்கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் கருத்துரையாற்றுகிறார்.

படத்திறப்பு


தந்தை பெரியார் படத்தை இரத்தினம் தொல்காப்பியன், புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை புஷ்பம் பொற்கோ, மகாத்மா ஜோதிபா ஃபுலே படத்தை சற்குணம் ஆரிய சங்காரன், சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் படத்தை தவமணி சண்முகராசன் ஆகியோர் திறந்துவைக்கிறார்கள்.

பரிசளிப்பு


பெரியார், அம்பேத்கர் வினா விடைப் போட்டியில் பங்கேற்ற மும்பை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர்களுக்கு மும்பை திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டுகிறார்.

விருது அளிப்பு


திராவிடப் பெருந்தகை விருது நிகழ்வில் மும்பை புறநகர் திமுக முன்னாள் அவைத் தலைவர் வி.தேவதாசன் கலந்துகொள்கிறார்.

மாநாட்டுத் தீர்மான அரங்கம்


சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மாலா ஆரிய சங்காரன், உமா கணேசன், ஜூலியட் இரவிச்சந்திரன், பேரரசி காமராசு ஆகியோர் தீர்மானங்களை முன்மொழி கிறார்கள்.

ஜாதி, மத வாதத்தை முறியடிப்போம்,


சமூக நீதிக் கொடியை உயர்த்திப்


பிடிப்போம் உரைவீச்சு


கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை புறநகர் மாவட்டச் செயலாளர் அலிசேக் மீரான், மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச் சாமி, மராத்திய தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேரா.சமீரா மீரான், விடுதலை சிறுத் தைகள் கட்சி மும்பை மாநகர செயலாளர் த.சு.சாலமன் இராசா ஆகியோர் உரையாற்று கின்றனர்.

மாநாட்டின் சிறப்புரை


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் மாநாட்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

மாநாட்டின் முடிவில் ஆர்.பரமசிவம், மு.சசிகுமார்  நன்றி கூறுகின்றனர்.

நவ.25 இல்


‘இடஒதுக்கீடு அறைகூவல்களும், பணிகளும்’-கருத்தரங்கம்


மும்பை மாத்துங்கா சி.ஆர். புதிய பூக்கடை, தெலங் சாலையில் குஜராத்தி சேவா மண்டலில் மும்பை பகுத்தறிவாளர் கழகம், மும்பை திராவிடர் கழகம் சார்பில் ‘இட ஒதுக்கீடு அறைகூவல்களும், பணிகளும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ஏ.இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார்.

மராட்டிய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் டாக்டர் பி.அன்பழகன் அய்.ஏ.எஸ்., நாசிக் சந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன், குஜராத் வருமான வரித்துறை இணை ஆணையர் நாத்திகர் மற்றும் பவுத்த நெறியாளர் அரவிந்த் சொந்தாக்கே அய்.ஆர்.எஸ், மும்பை தமிழ் எழுத்தாளர்கள் சங்க அமைப்புச் செயலாளர் அமலா ஸ்டான்லி, திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மும்பை டாடா சமூக அறிவியல் பயிலகம் பேராசிரியர் ஏ.ராமய்யா ஆகியோர் கருத்தரங்க உரையாற்றுகின்றனர்.

கருத்தரங்க முடிவில்மும்பை யூனியன் வங்கி முதன்மை மேலாளர் (ஓய்வு) எஸ்.நல்லசேகரன் நன்றி கூறுகிறார்.

மராட்டிய மாநில திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மராட்டிய மாநிலத் தமிழ்ச்சங்கம், மும்பை எழுத்தாளர்கள் சங்கம், புனே மகாத்மா ஃபுலே அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சமூக நீதி மாநாடு மற்றும் இடஒதுக்கீடு குறித்த கருத்தரங்கில் பெருந் திரளாக கலந்துகொள்கின்றனர்.

- விடுதலை நாளேடு, 17.11.18