- செ.ர. பார்த்தசாரதி

2360 ஆண்டுகளுக்கு முன்பாக (பொ.மு. 341) கிரேக்கத்தில் மத்தியதரைக் கடலில் உள்ள ‘சுவர்ல சாமோஸ்’ என்கிற சின்னஞ் சிறு தீவில் ‘பிளாட்டோ’ மறைந்து அய்ந்து ஆண்டுகள் கழித்து ‘அரிஸ்டாட்டில்’ காலத்தில் ‘எபிகூரஸ்’ பிறந்துள்ளார்.
இவரின் தந்தையார் பெயர் ‘நியோக்ளீஸ்ய (பள்ளி ஆசிரியர்), தாயார் பெயர் ‘காரஸ்ட்ராட்டா’ ஆகும்.
‘டெமோகிரேடர்ஸ்ய மற்றும் ‘பிளாட்டோ’வின் சீடர்களிடம் தத்துவம் பயின்றார்.
எபிகூரஸ் முதலாவதாக தத்துவப் பள்ளியை ‘மைட்டிலீன்’ மற்றும் ‘லாம் சக’சில் நிறுவினார்.
பின்னர் பொ.மு.306இல் ஏதன்சுக்கு சென்று சமூக நல்லிணக்கத்துடன் கூடிய தத்துவப் பயிற்சித் தோட்டத்தை உருவாக்கினார்.
அவரது தாயார் ‘மந்திரம் தந்திரம்’ என்ற பெயரில் நோய்களைத் தீர்க்கும்போது உடன் இருந்ததால், மந்திரம் என்பதெல்லாம் பொய் என்பதை புரிந்து கொண்டார்.
கடவுளுக்கும், மனிதனுக்கும் தொடர்பில்லை; கடவுள் அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார், நம்மை பார்க்க அவருக்கு நேரமில்லை, நாம்தான் நம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கடவுளின் பேரால் நடப்பதாக சொல்லப்படுபவை அனைத்தும் இட்டுக்கட்டபட்டவைகளே!
கோள்கள், விண்மீன்களால் மனித வாழ்க்கையில் எந்த விளைவும் உண்டாகாது!
விதி என்றும், மறுபிறப்பு என்றும் எதுவும் கிடையாது!
இந்த வாழ்க்கையே உண்மை; இன்பமாக வாழ வேண்டும்; எளிமையாக வாழ வேண்டும்; தேவையான அளவே உண்ண வேண்டும்; மது அருந்துவது கூடாது, மிதமிஞ்சிய கேளிக்கை கூடாது. இன்பமாக இருந்தால் உடலும் இன்பமாக (நலமாக) இருக்கும்! என அறிவுரைகளை கூறியுள்ளார்.
ஆனால், எதிரிகள் அவரின் கருத்துகளை வேண்டுமென்றே திரித்து வந்துள்ளனர். எபிகூரஸ் சிந்தனைகளை பின்பற்றுபவர்களை ‘எபிகூரியன்’ (Epicurean) என்று அழைப்பார்கள். ஆனால், ஆங்கிலத்தில் ‘எபிகூரியன்’ என்ற சொல்லை அற்ப ஆசைகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்கள், பெருந்தீனிக் காரர்கள், ஆடம்பரகாரர்கள், கேளிக்கைகளில் திளைப்பவர்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள்.
‘இந்த உலகமும், கோள்களும், விண்மீன்களும், பேரண்டமும், அணுக் களாலும், அணுக்களின் திரட்சியாளுமே உண்டாகியுள்ளது’ என்கிறார்.
நாம் காணும் பொருள்களும், உயிரினங்களும், ஏன் மனிதனும் கூட அணுக்களின் கூட்டணியினால் உண்டானது என்கிறார்.
பேரண்டம் முழுக்க கண்ணுக்கு தெரியாத அணுக்களால் நிரப்பப் பட்டுள்ளது.
அனைத்து பொருள்களும் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களுக்குள் உள்ள அணுக்கள் ஒரு வரையறைக்குள் இயங்குகின்றன.
எந்தப் பொருளும் தடை இல்லாதவரை இயங்கிக் கொண்டே இருக்கும். அப்படியே தடை உண்டானாலும் மறு திசையில் பயணிக்கும்.
அணுக்கள் சிதைந்தாலும் வேறு வடிவத்தில் தோன்றும், இல்லாததிலிருந்து எதுவும் தோன்றாது.
நம் புவியைப் போல் வேறு புவிகளும் இருக்கக்கூடும், அதில் இங்குள்ள உயிரினங்கள் போலவோ அல்லது வேறு வகையில் கூட இருக்கலாம்.
இப்படி பல கொள்கைகளை எந்தக் கருவிகளும் இல்லாத நிலையில் ஆய்ந்துணர்ந்து கூறியுள்ளார்.
தனியாக பயிற்சி கூடம் அமைத்து இக் கொள்கைகளை பயிற்றுவித்து வந்தார்.
இந்தப் பயிற்சிக் கூடத்தில் கல்வி மறுக்கப்பட்ட பெண் இனத்தையும் சேர்த்துக் கொண்டு பயிற்றுவித்தார்.
இங்கு பயிற்சி பெற்று சென்றவர்கள் பல பகுதிகளுக்கும் சென்று அவரின் கொள்கைகளை பரப்பினர். பல நாடுகளிலும் அவரின் தத்துவங்களை பின்பற்றினர். கிறிஸ்தவ மதம் தோன்றிய பின் எபிகூரஸின் தத்துவங்கள் மறைக்கப்பட்டன, அழிக்கப்பட்டன.
எபிகூரஸ் 37 ஆய்வு நூல்களை எழுதி இருந்தாலும் அவைகள் நமக்கு கிடைக்கப்பெறவில்லை. 300க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளதாக தெரியவருகிறது.
எதிரிகளின் கருத்துக்களில் இருந்தும், நூல்களில் இருந்தும் அவரைப் பற்றிய விமர்சனங்களாலும், அவரின் கருத்துக்களை அறிய முடிகிறது.
பொ.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘டியோஜெனிஸ் லார்டியஸ்’ என்பவர் எழுதிய நூலில், எபிகூரஸ் தனது மூன்று சீடர்களுக்கு எழுதிய கடிதம் இடம்பெற்றுள்ளது.
‘ஹெரோடோட்டஸ்’க்கு எழுதிய கடிதம் மூலம் ‘மீவியற்பியல்'(metaphysics) அதாவது “இருப்பு பொருளியல்’ பற்றிய சுருக்க கருத்து தெரிய வருகிறது.
‘பைத்தோக்கிள்சு’க்கு எழுதிய கடிதம் மூலம் ‘வானிலை நிகழ்வுகளுக்கான அணு விளக்கம்’ தெரிய வருகிறது.
‘மெனோசியஸு’க்கு எழுதிய கடிதம் மூலம் எபிகூரசின் நெறிமுறைகள் சுருக்கமாக தெரிய வருகிறது.
கடவுள் என்று ஒன்று இல்லை என்பதற்கான ஆய்வு முடிவு கருத்துகளை கூறிய எபிகூரஸ், “கடவுளுக்கும் மனிதனுக்கும் தொடர்பில்லை; கடவுள் அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார், நம்மை பார்க்க அவருக்கு நேரமில்லை. நாம் தான் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும்” என்ற கருத்தையும் முன் வைக்கிறார்.
கடவுள் மறுப்பு தத்துவத்தை நேரடியாக முன் வைத்தால் உயிருக்கு ஆபத்து வரும் என்ற நிலை இருந்ததால், ‘பயனற்ற கடவுள்’ என்று கூறி ‘பாதுகாப்பு தேடிக்கொண்டார்’ என்றுதான் தோன்றுகிறது.
தனது 72ஆவது வயதில் (பொ.மு. 270) முதுமையாலும் சிறுநீரக கல் நோயாலும் எபிகூரஸ் மறைவுற்றார்.
தந்தை பெரியாரின் ‘மெட்டீரியலிசம் அல்லது பிருகிருதிவாதம்’ என்ற நூலின் ஒரு பகுதியில் எபிகூரஸ்யின் ‘மீவியற்பியல்’ (metaphysics) கருத்துகள் பல இடம் பெற்றுள்ளன.
- விடுதலை ஞாயிறு மலர், 30.08.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக