புதன், 15 மார்ச், 2017

சதியை ஒழித்த பகுத்தறிவாளர் - மரகதமணி
மனிதன் இவ்வுலகத்தில் அனுபவிக்கும் வாழ்க்கை இன்ப துன்பங்கள் அனைத்தும் தான் இறந்த பிறகு மேல் உலகத்தில் தேவைப்படுகின்றன என்று கருதினர் பழங்குடி மக்கள். இத்தகைய நம்பிக்கையின் காரணமாக மன்னன் இறந்தால் அவன் மனைவிமார்கள், வைப்பாட்டிகள், மந்திரிகள் அவனுக்கு பணவிடை செய்த ஆட்கள், மன்னன் பயன்படுத்திய குதிரை, படைக்கலங்கள் முதலியவைகளையும் அவனுடன் சேர்த்து எரித்தோ அல்லது புதைத்தோ வந்தனர். இத்தகைய செயலுக்கு (ஹரா_கிரி) என்று பெயர்.

இவற்றின் சாயலாகச் சதி என்று தோன்றி கணவன் இறந்தால் மனைவியையும் சேர்த்து நெருப்பில் தள்ளி எரித்தால் அவர் கற்புடையவள் என்று கூறினர். சூடு பொறுக்காமல் அந்த பெண் அலறும் சப்தம் கொஞ்சம்கூடக் கேட்காமல் இருக்க தாரை, தப்பட்டை போன்றவை அடித்துக் கொண்டே இருந்தனர். விருப்பம் இல்லாத மனைவிமார்களை நெருப்பில் தள்ளி சாம்பலாக்கினர். இந்தக் கொடிய வழக்கத்தை முஸ்லீம் மன்னர்களும் தடுக்க முயன்றிருக்கிறார்கள். முகமது பின் துக்ளக், சிக்கந்தர், அக்பர், ஜகாங்கீர், அவுரங்கசீப் போன்ற பல இஸ்லாமிய மன்னர்கள் உடன்கட்டை ஏறுதலையும், குழந்தை மணம், பலதார மணம், வரதட்சனை வாங்குதல் போன்றவற்றிற்கு தடை விதிக்க முயன்றனர்.

இதுபோன்ற கொடுமையான செயல்களைக் கண்டு ஆங்கிலேயர்கள் வருத்தமும் அருவருப்பும் கொண்டனர். இந்தியாவில் இருக்கின்ற காட்டு-மிராண்டித் தன்மைகளை அவ்வப்போது அரசாங்கத்திற்குச் சொல்லி தீர்வு காண முயன்றனர். ஆனால், இந்துக்கள் மனது புண்பட்டு குழப்பம் ஏற்படுமோ என்று அஞ்சி பணியாட்களை வைத்து பிரச்சாரம் செய்தனர்.

இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து நாட்டில் தீவிர சிந்தனையாளர் அல்லது பகுத்தறிவாளர் குழு ஒன்று உருவானது. பெந்தாமும், ஜேம்ஸ்மில்லும் இப்பகுத்தறிவு இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களாக இருந்தனர். இவர்களின் கொள்கை-களை விளக்கும் மாணவர்களாக மெக்காலே, வில்லியம் பெண்டிங், சார்லஸ் டிரெவெலின் இருந்தனர். இவர்களில் வில்லியம் பெண்டிங் 1828 முதல் 1835 வரை கவர்னர் ஜெனரலாக இருந்தார். இந்தியாவின் எல்லா முன்னேற்றத்திற்கும் ஆங்கில மொழியே திறவுகோல் என்று எண்ணி இந்தியாவில் சமூக சீர்திருத்தம், அறிவு வளர்ச்சிக்கான காரியங்களிலும் தீவிரமாக செயல்பட்டார்.

இராஜாராம்மோகன்ராய் தன் அண்ணன் இறந்தபோது அண்ணிக்கு ஏற்பட்ட கொடுமை-களைக் கண்டு அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று எண்ணினார். அங்குள்ள விதவைகள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். சதி என்பதைப் பற்றிப் புத்தகம் எழுதினார். இந்தக் காலகட்டத்தில்தான் தீவிர முற்போக்குவாதியும் பென்தாம், ஜேஸ்மில் ஆகியவர்களின் பயன் மதிப்புக் கொள்கையை பின்பற்றுபவருமான வில்லியம் பெண்டிங் துணிந்து செயலில் ஈடுபட்டார்.

பிரிட்டிஷ் அரசாங்கமும் சதியை படிப்படி-யாகவும் விரைவாகவும் ஒழிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாய் கட்டளை இட்டு இருந்தது. ஆனால், பகுத்தறிவாளரான வில்லியம் பெண்டிங் பிரபுவோ காலம் தாழ்த்தாமல் உடனடியாக செயல்பட்டார்.

1829 டிசம்பர் 4ஆம் தேதி ஒழுங்குமுறை சட்டம் இயற்றினார். இச்சட்டத்தின்படி சதிக்கு உதவி புரிந்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். இந்துப் பெண்களை உயிரோடு எரிப்பது, புதைப்பது தண்டனைக்குரிய பெருங்குற்றம் என்று கைவிடச் செய்தார்.

1830 சென்னை, பம்பாய் போன்ற சமஸ்தானங்-களில் பெண்டிங் செயலை ஆதரித்து சதியை ஒழித்தனர்.

இந்தியாவின் மதப் பழக்கவழக்கங்களில் தலையிடாமல் மற்ற ஆங்கிலேய ஆட்சியர்கள் அனைவரும் அஞ்சிய நேரத்தில் பகுத்தறிவாளர் வில்லியம் பெண்டிங் அதைத் துணிந்து செய்தார்.

“எனது சொந்த நலனையே நோக்குமிடத்து இந்துக்களின் பழக்கவழக்கங்களில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது என்பதை நான் நன்கு அறிவேன். ஆயினும் நாகரிகம், கருணை ஆகியவற்றினை கருதும்போது உடன்கட்டை ஏறும் வழக்கத்தினை சட்டத்தின் மூலம் ஒழிப்பதே சிறப்பு’’ என்று 1830, ஜனவரி 2ஆம் தேதி பெண்டிங் தன் கருத்தை வெளியிட்டார். ஸீ

-உண்மை,1-15.3.17