புதன், 19 ஜூன், 2019

எவ்வித சடங்குகளும் இன்றி அரசுமரியாதையையும் மறுத்து பகுத்தறிவாளர் கிரீஷின் இறுதி நிகழ்வு



பெங்களூரு, ஜூன் 12 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது “வெறுப் புணர்வுக் கெதிராக வாக்களியுங்கள்”  என்று பகிரங்கமாக மோடி அரசுக்கெதிராக அறைகூவல் விடுத்த வரும், ஆனந்த் டெல்டும்ப்டே போன்ற அறிவுத் துறையினரை அர்பன் நக்சல்கள் என்ற பெயரில் மோடி அரசு பழிவாங்கல் நடவடிக்கைக்கு இரையாக்கிய போது தானும் ஓர் ‘அர்பன் நக்சல்’ என்று பகிரங் கமாக அறிவித்துக்கொண்டவருமான புகழ்பெற்ற நாடகாசிரியர், நடிகர், திரைப் பட இயக்குநர், பாரதீய ஞானபீட விருது பெற்ற கிரிஷ் கர்னார்ட்  காலமானார் (19 மே1938 - 10 ஜூன் 2019).

யயாதி, ஹயவதனா, துக்ளக், நாகமண்டலா, தலெதண்டெ போன்ற நாடகங்களை எழுதி இந்திய நாடகங்களின் முகவரியை மாற்றியவர்.  தொன்மங்களை, வரலாற்றுப் போக்குகளை மறுவாசிப்புக் குட்படுத்தி சமகாலக் கண்கொண்டு அவற்றில் பொதிந்துள்ள இருத்தலியக் கேள்விகளை அலசுகிற அவரது நாட கங்கள் இந்திய  நாடகங்களின் எல்லைகளை விரிவு செய்வதாயிருந்தன.

சம்ஸ் காரா, ஒந்தனொந்து காலதள்ளி, மந்தன், நிஷாந்த், போன்ற படங்களின் மூலம் திரைக்கதையாசிரியராகவும் வம்ச விரு சக்‌ஷா, உத்சவ் போன்ற படங்களின் திரை இயக்குநராகவும் பணியாற்றி இந்தியாவின் நியோ ரியலிச திரை இயக்கத்திற்கு வலு சேர்த்தவர்.

கடந்த பல ஆண்டுகளாய் மேலெ ழுந்து வரும் பாசிச அபாயத்திற்கெதிராய் உரத்து குரல் கொடுத்தவர்.

நரேந்திர தபோல்கர், கல்புர்கி, பன் சாரே, கவுரி லங்கேஷ் என சங்கப் பரி வாரத்தின் கொல்லப்பட வேண்டிய வர்களின் வரிசையில் கிரீஷ் கர்னார்ட் பெயரும் இருந்ததை உளவுத்துறை சுட்டிக் காட்டியபோதும் அதிகாரத்திற் கெதிராக உண்மைகளை உரத்துப் பேசுகிறவராயிருந்தார்.

அவரது இருப்பும் பன்முகப் பங்களிப் பும் முன்னிலும் கூடுதலாக தேவைப் படுகிற இக்காலத்தில் மறைந்துள்ளார்.
-  விடுதலை நாளேடு, 12.6.19

செவ்வாய், 11 ஜூன், 2019

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் உரை

நமது முதல் தேவை - இரண்டாவது தேவை - மூன்றாவது தேவை


பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!!


இந்தப் பயிற்சிப் பட்டறை பயனுள்ள பட்டறையாகட்டும்!




தஞ்சை, ஜூன் 11   பகுத்தறிவாளர்களுக்கு முதல் தேவை, இரண்டாம் தேவை, மூன்றாம் தேவை பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்


19.5.2019 அன்று  தஞ்சையில் நடைபெற்ற பகுத்தறி வாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது  உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இன்றைக்கு நம்முடைய தோழர்கள் நல்ல வசதி யாகத்தான் இருக்கிறார்கள். அதைவிட வாகனங்கள் வைத்திருக்கிறார்கள், அதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச் சியாக இருக்கிறது. ஒரு காலத்தில் இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களே மிகக் குறைவாக இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு கார் வைத்திருப்பவர்கள் நிறைய  பேர் இருக்கிறார்கள். இது பெருமையான செய்திதான். அவர்கள் வசதியாக இருக்கிறார்களே என்று யாரும் பொறாமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. வசதி என்பதுபற்றி நான் அடிக்கடி உதாரணம் சொல்வேன்.

என்னுடைய சுயநலத்தைக் கருதியாவது


அவருடைய நலம் ஓங்கவேண்டும்!


என் கூட இருக்கும் நண்பர் பழனிசாமி அவர்கள் கார் வாங்கியிருக்கிறார் என்றால், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம், பெருமையான விஷயம். அவர் களுடைய வாழ்க்கையில் திட்டமிட்டு வாழ்ந்திருக் கிறார்கள்.

சாதாரணமாக நம் கூட இருந்தார் அவர். அவர் கார் வாங்கிவிட்டாரே என்று நினைக்கவேண்டிய அவசிய மில்லை.

என் கூட இருக்கும் நண்பர் கார் வாங்கினால்தான், நல்லது. ஏனென்றால், என்னுடைய கார் பழுதாகிவிட்டு நின்றிருந்தால், அவர் எனக்கு லிப்ட் கொடுப்பார். என்னு டைய சுயநலத்தைக் கருதியாவது அவருடைய நலம் ஓங்கவேண்டும் என்று சிந்திக்கவேண்டும்.

நம்முடைய தோழர்கள் வசதியாக வாழ்வதற்கு நம்மால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால், அதைப் பெருமையோடு செய்யவேண்டும். சிலர் வசதியான பிறகு அவர்கள் பயன்பட மாட்டார்கள். அவர்களை கழிவுப் பொருள்கள் பட்டியலில் வைத்துவிடுங்கள்.

கமிட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என்றால், அவருடைய காரை எடுத்துக்கொண்டு நான்கு பேர் செல் லலாம். பெட்ரோல் போடுவதற்குப் பணம் இல்லையா? அந்த நான்கு பேருமே பகிர்ந்துகொள்ளலாம். வாடகைக் காரை எடுத்துக்கொண்டு போவதைவிட, இதுபோன்று செய்தால் நல்லது.

நாம் சிக்கனக்காரர்கள்; எளிமையானவர்களாக இருந்தாலும், வாய்ப்பிருக்கும்பொழுது சந்திக்கவேண்டும். பல்வேறு துறைகளில் ஊடுருவவேண்டும். நம்முடைய தோழர்கள் எங்கே இருந்தாலும், அமைப்புகளில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழையவேண்டும். பகுத்தறி வாளர்களுக்கு அது மிகவும் சுலபம்.

நான்கு நாள் தொடர்ந்து விடுதலை படித்தார்கள் என்றால், மனமாற்றம் ஏற்படும்


ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்றால், அங்கே ஆசிரியர் அமைப்பு என்ற ஒன்று இருக்கும். அதில் நம்முடைய பிரபாகரன் போன்றவர்கள் பொறுப்பாளராக இருந்தால், அது நமக்கு நல்ல லாபம்தான். எப்படி என்றால், அந்த அமைப்பில் இருக்கிறவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யலாம். 10 பேரிடம் விடுதலை சந்தா வாங்கலாம். மாடர்ன் ரேசனலிஸ்ட் படியுங்கள் என்று சொல்லலாம். நீங்கள் எங்களுடைய மாநாட்டிற்கு வந்து வேடிக்கை பாருங்கள் என்று சொல்லலாம். அவர்கள் நான்கு நாள் தொடர்ந்து விடுதலை படித்தார்கள் என்றால், அவர்களுக்கு மனமாற்றங்கள் ஏற்படும். ஆகவே, அது போன்று தோழர்கள் செய்யவேண்டும்.

அதிகாரிகளை அரவணைத்து பெரியார் மயமாக்குதல். இது மிகவும் முக்கியம்.

பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் பல பதவிகளில் இருக் கிறீர்கள். உள்ளூர் அதிகாரிகளாக இருப்பவர்களிடம் திராவிடர் கழகத்துக்காரர்கள் செல்ல மாட்டார்கள். ஆனால், குறைந்த பட்சம் நீங்கள் உங்கள் அலுவலக அதிகாரிகளிடம் நெருக்கமாக இருந்தீர்களேயானால், காரியங்கள் பலவற்றை சாதிப்பதற்கு வசதியாக இருக்கும். அரசுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், அதிகாரிகள்தான் மிக முக்கியமானவர்கள்.

வாழ்வியல் சிந்தனைகள் நூலை கொடுங்கள்!


அந்த அதிகாரிகளிடம் அரவணைத்துப் பழகி நம்முடைய இயக்க நூல்களைக் கொடுக்கவேண்டும். முதலில் வாழ்வியல் சிந்தனை நூலை கொடுக்கவேண்டும். எடுத்தவுடன், கடவுள் மறுப்பு ஏன்? என்ற நூலைக் கொடுக்கக்கூடாது. பெரியாருடைய கொள்கைகள் வெற்றி பெற்றதற்குக் காரணமே, நல்ல மருத்துவர் அவர்; சிறந்த மருந்து. நோயாளி, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவருக்குக் கடுமையான மருந்தை கொடுக்கக் கூடாது.

நாடியைப் பிடித்துப் பார்த்து, அதற்கேற்றாற்போல் மருந்து கொடுக்கவேண்டும். மருந்து நல்ல மருந்துதான். இருந்தாலும், இரண்டு மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. முதலில் கால் மாத்திரை, பிறகு அரை மாத்திரை, அதன் பிறகு ஒரு மாத்திரை என்று கொடுக்கவேண்டும்.

முனிசிபாலிட்டியில் நாய்க்கு லைசென்ஸ் கட்டுவதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்!


சுயமரியாதைத் திருமணம் எப்படி வெற்றி அடைந்தது? பார்ப்பானை மட்டும் நீக்கிக் கொண்டு, என்னை முன் னிறுத்து என்று சொன்னார் முதலில். சரி என்று மண விழாவிற்கு அழைத்துச் சென்றார்கள், அங்கே சென்று பேசும்போது, எதற்காக இங்கே பானை, சட்டியெல்லாம், உங்களுக்குப் புத்தி இருக்கிறதா? கேட்டார்.

அவர் சொல்வது சரிதானே என்று யோசனை செய்து, தாலி மட்டும் கட்டிக் கொள்கிறோமே என்று சொன்னார்கள்.

பரவாயில்லை, தாலியைக் கட்டிக் கொள்ளுங்கள் என்று சொல்லி, தாலியை எடுத்துக்கொடுத்துவிட்டு,  நாய்க்கு லைசென்ஸ் கட்டுவது போன்றதுதானே; முனிசி பாலிட்டியில் நாய்க்கு லைசென்ஸ் கட்டுவதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார்.

அதையும் அவர்கள் சிரித்துக்கொண்டே கேட்டார்கள். பெரியார் கூற்று சரிதானே, என்று சொல்லி, அந்தத் தாலியைக் கழற்றிவிடலாமே என்று வந்தார்கள். அதுதான் தாலி அகற்றும் நிகழ்ச்சி.

நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள், படிப்படியாக வந்து கடைசியில் கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

என்னிடம் சிலர், நீங்கள் எல்லா மணவிழாக்களுக்கும் செல்லக்கூடாது. ராகு காலத்தில் நடத்தப்படும் மண விழாக்களுக்கு மட்டும் கலந்துகொள்ளவேண்டும். அந்த ஆள் நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து உங்களிடம் மணவிழாவிற்குத் தேதி கேட்கிறார் என்பார்கள்.

உண்மைதான்! அந்த மணவிழாவில் இரண்டு குடும் பங்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறது. ஒன்று, நம்முடைய சுயமரியாதைக் குடும்பம். இன்னொன்று அப்படியில் லையே! அவர்கள் நம்முடைய வழிக்கு வரும்பொழுது, அவர்களுடைய வழிக்கு நாம் செல்லவேண்டும் அல் லவா! அணுகுமுறைதான் மிகவும் முக்கியம்.

‘விடுதலை'க்கு ஆயுள் சந்தா கட்டினார் வைரமுத்து

ஆண்டாள் பிரச்சினைக்கு முன் வைரமுத்து அவர்கள், நம்மை இந்த அளவிற்குப் புரிந்துகொண்டாரா? என்று தெரியவில்லை. ஆண்டாள் நெருக்கடி வந்தவுடன், அதைப்பற்றி விடுதலையில் நாம் எழுதியவுடன், விடு தலைக்கு ஆயுள் சந்தா கட்டினார் வைரமுத்து. விடுதலை யினுடைய பெருமையை அவர் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

திருச்சியில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் ‘‘தமிழாற்றுப் படை'' தலைப்பில் பேசினார்.

நாமம் என்றால், மோசடி என்றுதானே அர்த்தம்


எடுத்த எடுப்பிலேயே 100-க்கு 100 நம்மாட்களாக ஆகவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நாமம் போட்டவர்களாக இருந்தாலும் சரி, பட்டை போட்ட வர்களாக இருந்தாலும் சரி, அவர்களை அழைத்து வாருங்கள்; நம்முடைய கூட்டங்களில் அமர்ந்து நாம் என்ன பேசுகிறோம் என்று கேட்கட்டும்.

கடன் வாங்கி ஏமாற்றியவர்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள்; ‘‘என்னை நாமம் போடலாம் என்று நினைக்கிறாயா?'' என்றால், நாமம் என்றால், மோசடி என்றுதானே அர்த்தம் என்று நாம் பேசினால், அவர்களுக்கே வெட்கமாக இருக்கும்.

ஆகவே, நம்முடைய பிரச்சாரம், பிரச்சாரத்தினுடைய முறை மிக எளிதாக இருக்கவேண்டும். அரவணைத்து பொதுவானவர்களை ஆதரவாளர்களாக மாற்றுவது.

அய்ந்தாவது, உணர்வாளர்களை அடையாளம் காணுவது.

அலுவலகத்தில், நட்பில். பார்ப்பனர்கள் அப்படித் தானே செய்கிறார்கள்.

எது நம்மைப் பிரிக்கிறதோ, அது நமக்கு முக்கிய

மல்ல -

எது நம்மை இணைக்கிறதோ, அதை அகலப்படுத்த வேண்டும்.

இந்த அணுகுமுறை நம்முடைய செயல்வீரர்களிடமும், பொறுப்பாளர்களிடமும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

சாதனையாளர்களை கொண்டாடுதல்: நம்மவர்கள் சாதனை செய்தால், பகுத்தறிவாளர்கள் கழகத்தில் பாராட் டுங்கள்; பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டுங்கள்; புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவில் பாராட்டுங்கள். அப்படி பாராட்டினால், நம் இயக்கத்தோடு தொடர்பில் லாமல் இருந்தவர்கள், ‘‘ஓகோ இந்த அமைப்பிற்கு இவ்வளவு சிறப்பு இருக்கிறதா?'' என்று அவர்களே நம் இயக்கத்தைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள்.

நோபல் பரிசைவிட உங்களுடைய


பாராட்டு பெரிதாகத் தெரியும்!


அதுமட்டுமல்லாமல், குழந்தைகளாக இருந்தாலும், அவர்களைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டவேண்டும். உங்களுடைய துணைவியார் சமைத்து வைத்த சமை யலை சாப்பிட்டுவிட்டு, நன்றாக இருக்கிறது என்று சொல்லவேண்டும். அப்படி சொன்னீர்கள் என்றால், அவர்களுக்கு நோபல் பரிசைவிட பெரிதாகத் தெரியும் அந்தப் பாராட்டு.

நாங்கள் நடைமுறையில் பார்த்த விஷயம். பெரியார் அய்யாவோடு விருந்துக்குச் சென்றால், அங்கே வைக்கப் பட்ட உணவு மிகவும் காரமாக இருக்கும்; அய்யா அதனை மிகவும் ரசித்து சாப்பிடுவார்; ஏனென்றால், விருந்துக்கு அழைத்தவர் மனம் கஷ்டப்படக்கூடாது என்று நினைப் பார்கள்.

குடும்பத்தை பகுத்தறிவு குடும்பமாக வைத்துக் கொள்ளவேண்டும். இல்லை என்றால், நம் நெற்றியில் ஒற்றை ரூபாயை வைத்துவிடுவார்கள். நாமம் போட்டு விடுவார்கள், விபூதி பூசிவிடுவார்கள். பிறகு வைகுண்ட பதவி, சிவலோக  பதவிதான். ஆகவேதான் உங்களுடைய குடும்பத்தை பகுத்தறிவு குடும்பமாக மாற்றவேண்டும்.

அடுத்ததாக, உங்களுடைய குழந்தைகளுக்குத் தமிழ் பெயர்களை சூட்டவேண்டும்.

ஆரியர்கள் வடமொழி ஆதிக்கத்தை செய்ததோடு மட்டுமல்லாமல், நம்மைக் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். சூத்திரன் என்று சொன்னால், எப்படி தாசி மகன் என்று அர்த்தமோ. வடமொழி பெயர்களை தமிழ்ப்படுத்தி பார்த்தால், மிகவும் அசிங்கமாக இருக்கும்.

உங்களுடைய குழந்தைகளுக்கு


தமிழ்ப் பெயர்களை வையுங்கள்!


ஆதிகேசவன் என்றால் என்ன அர்த்தம்; ஆதி என்றால் என்ன? கேசவன் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியும். அதேபோன்று உங்களுடைய குழந்தைகளுக்கு உஷ், புஷ் என்று பெயர் வைக்க வேண்டாம். நல்ல தமிழ்ப் பெயர்களாக வைக்கவேண்டும்.  வடமொழியில் பெயர் வைத்திருந்தாலும், அந்தப் பெயர்களை மாற்றிக் கொள்ளவேண்டும்.

இது தமிழ் இன உணர்வுக்காக மட்டுமல்ல, மானமும், அறிவும் உடையவர்களாக நாம் இருக்கவேண்டும். ஆகவே, குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள்!

மணவிழாவில் பார்ப்பனீயத்தை நீக்குங்கள்! நம்மாட் கள் என்ன சொல்கிறார்கள், ‘‘என்னங்க செய்வது, பெண் நல்ல இடம்; அவர்கள் மணவிழாவிற்கு அய்யர் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களே'' என்று நம்மிடம் கேட்கிறார்கள்.

நாங்கள் என்ன செய்ய முடியும்? அவர்களை கட்சியை விட்டு நீக்கிவிடுவோம் என்றா சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாது.

எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமோ, அதற்கு முன்னுரிமை கொடுங்கள்!


நமக்கு இரட்டை குதிரை சவாரி இருக்கிறது. அதனால்தான் அந்த சிக்கல். இந்த அந்தஸ்து இருக்கிற மாப்பிள்ளை வேண்டும்; பெண்  வேண்டும் என்றால், இந்தக் குதிரையிலும் சவாரி செய்யவேண்டும்; அந்தக் குதிரையிலும் சவாரி செய்யவேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்? கொள்கை என்றால், கொள்கைதான். எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமோ, அதற்கு முன்னுரிமை கொடுங்கள்!

நிர்வாணமாக வந்தால்தான், மணவிழா நடைபெறும் என்றால், அதற்காக நாம் நிர்வாணத்தை ஆதரிப்போமா? அதுபோன்று, கொள்கை இல்லாமல் இருந்தால் என் னாகும் என்று நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆகவேதான், கூடுமானவரையில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஒரு குடும்பத்தில் பெண்கள் உறுதியாக இருந்தால், ‘‘அது முடியாதுங்க, வேறு மாப்பிள்ளை பார்த்துக் கொள்ளலாம்; வேறு பெண்ணை பார்த்துக் கொள்ளலாம்'' என்று சொல்லக் கூடிய அளவிற்கு மிகத் தெளிவாக இருப்பார்கள்.

மரண வாக்குமூலத்தைத் தெளிவுபடுத்துங்கள். மரண வாக்குமூலம் என்பதை எல்லோரும் எழுதி வைக்க வேண்டும்.

சுயமரியாதைக்காரர்களாக,


பகுத்தறிவாளர்களாக இறக்கவேண்டும்


நாம் பிறக்கும்பொழுது சுயமரியாதைக்காரர்களாகப் பிறந்தோமா என்றால், இல்லை. ஆனால், இறக்கும் பொழுது  நிச்சயமாக சுயமரியாதைக்காரர்களாக, பகுத்தறி வாளர்களாக இறக்கவேண்டும்.

சுயமரியாதை வாழ்வு சுக வாழ்வு! ஆகவே, அந்த வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதேபோன்று, இறுதியாக, பகுத்தறிவாளர் கழகம் என்றால், கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்று ஆராய்ச்சி செய்வது இல்லை. ஏன் கடவுள் மறுப்புக்குச் சென்றார் பெரியார்? ஜாதிக்கு முட்டுக் கொடுப்பது கடவுள்; மூடநம்பிக்கைகளை சொல்லித்தான் கடவுளை கற்பித் தார்கள். மனிதன் உண்டாக்கி இருந்தால், எப்பொழுதோ ஜாதியை அழித்திருப்பார்கள். கடவுள் உண்டாக்கியது என்று சொல்லியதால்தான் மலைத்துப் போய் நிற்கிறான்.

எனவேதான், நம்மைப் பொறுத்தவரையில், கடவுள் மறுப்பு என்பதை காரண காரியத்துடன் செய்கிறோம்.

கடவுளை மற - மனிதனை நினை என்று சொல்வார் தந்தை பெரியார்.

மனித சமுதாயத்திற்கு எது எதுவெல்லாம் தேவையோ, அந்தப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாம் போராட வேண்டும். பல்வேறு ரூபத்தில், பல்வேறு இடங்களில் இருக்கலாம்.

நல்ல பேச்சாளராக, நல்ல எழுத்தாளராக,


நல்ல சிந்தனையாளராக...


எனவே, தோழர்களே! உங்களைப் பொறுத்தவரையில் இந்த பயிற்சி முகாமை நீங்கள் சிறப்பாக நடத்தவேண்டும்.

யார் யாருக்கெல்லாம் எழுதக் கூடிய திறமை இருக் கிறதோ, எழுதுங்கள்! பாடக் கூடிய திறமை இருப்பவர்கள் பாடுங்கள்.  பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் சிறந்த பேச்சாளராக வர முடியும். அதற்குப் பயிற்சிதான் மிகவும் முக்கியம். நல்ல பேச்சாளராக, நல்ல எழுத்தாளராக, நல்ல சிந்தனையாளராக நீங்கள் வரவேண்டும்.

இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன். நம்முடைய இயக்க நூல்களைப் பரப்பவேண்டும்.

நம்முடைய தோழர்கள் எல்லாம் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ வாசகர் வட்டத்தை உருவாக்கி நீங்கள் சந்திக்கவேண்டும்.

‘‘பகுத்தறிவு ஏன்? எதற்காக?''


அந்த வாசகர் வட்டத்தில், பெரியார் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, உதாரணமாக ‘‘பகுத்தறிவு ஏன்? எதற்காக?'' என்ற நூல். இந்த நூல் பல பதிப்புகள் வெளி வந்திருக்கின்றன. அதிலுள்ள கட்டுரைத் தொகுப்புகள் மிக அருமையான கட்டுரைத் தொகுப்புகள். 2006 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டிற்குள் 10 பதிப்புகள் வெளிவந்துள்ளன.

நம் தோழர்கள் அய்ந்து பேரோ, 10 பேரோ அமர்ந்துகொண்டு, ஒருவர் சத்தம் போட்டு இந்த நூலைப் படிக்கவேண்டும். அய்ந்து பேரோ, 10 பேரோ அந்தப் புத்தகங்களை வைத்திருக்கவேண்டும். அவர் படிக்க படிக்க, அதைப் பார்த்துக் கொண்டே வரவேண்டும். அந்தக் கருத்துகளை உள்வாங்கவேண்டும். நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வதற்கு இது மிகவும் அவசிய மாகும்.

அந்த நூலில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைச்  சொல்கிறேன்.

பிறப்புரிமையும், அதன் தடைகளும்!

சமயச் சீர்திருத்தம்

சமதர்மமும் நாஸ்திகமும்

பகுத்தறிவும் நாஸ்திகமும்

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொடுமைகள்

பகுத்தறிவும், நடுவுநிலைமையும்

பகுத்தறிவை அடிமைப்படுத்தும் மதம்

பகுத்தறிவால் மனிதன் தொல்லைப்படுகிறான்

ஒரு சந்தேகம்!

மனிதன் ஒரு ஜீவப் பிராணியே!

மனுநீதியின் மறுபதிப்பே தற்போதைய சுயராஜ்ய நிர்மாணம்

53 ஆண்டு பகுத்தறிவுப் பயணம்

அறிவுக்கு வேலை தாருங்கள்!

குறைந்தபட்சம், முதல் பாடப் புத்தகம் என்ன என்று எடுத்துக்கொண்டால், பகுத்தறிவு இயக்கம் என்றால் என்ன? பகுத்தறிவினுடைய தன்மை என்ன? ஏன் பகுத்தறிவாளர் கழகம் என்று சொல்கிறோம்? என்றால், ஒரு சிறிய விளக்கத்தைச் சொல்கிறேன்.

தந்தை பெரியாருடைய சிந்தனை இருக்கிறதே அது, ஒப்பற்ற பகுத்தறிவு பகலவன் என்று ஏன் அவர்களை நாம் பாராட்டுகிறோம்?

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார்!

புரட்சிக்கவிஞர் பாடல்!

உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.

“ஆயிரம் ஆண்டெனும்  மூதாட்டியவள்

அணிந்திராத அணியாவார் அறிந்திராத அறிவாவார்

கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு

எதிர்பார்க்கும் தலைவராவார்

கழறவோ அவர் பெயர்தான் இராமசாமி''

புரட்சிக்கவிஞர் எழுதியது இது.

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி, அணிந்திராத அணியாவார். அறிந்திராத அறிவாவார்.

அந்த நூலில் பதிப்புரையில் எழுதியிருப்பதைப் படிக்கிறேன்.

‘‘மனிதன், தனக்கு என்ற ஏற்படுத்திக் கொண்ட கடவுள், மதம், மதக் கட்டளை, கடவுள் கட்டளை எல்லாவற்றையும் பெரிதும் இயற்கைக்கும், உண்மைக்கும் விரோதமாகவும், அனுபவத்திற்கு முடியாததாகவும் கற்பித்துக் கொண்டான்.

இந்தத் தவறுதலோடு மாத்திரம் நிற்காமல், மனித சமுகத்தையே தேசம், பாஷை, மதம், ஜாதி என்பவைகளால் பிரிந்து வேற்றுமைப்படுத்திக் கொண்டான்.

அதோடு நிற்காமல், பல மதங்கள், பல கடவுள்கள், பல வேதங்கள் என்பனவாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களுடன் கற்பித்துக் கொண்டான். இவற்றில் ஒன்றுக்காவது பகுத்தறிவைச் சுதந்திரமாகப் பயன்படுத்த உரிமை இல்லாதவனாகி விட்டான்! வஸ்துக்களை (உடை மைகளை) ‘உனது', ‘எனது' என்று பிரித்துக் கொண்டான்.

மனிதனின் ஓய்வு எல்லாம் மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி, அடிமைத்தனத்திற்குப் போவதற்கே பயன் பட்டதே தவிர, பகுத்தறிவால் பயன்படவோ மேன்மை யடையவோ முடியவில்லை!

மனித சமுக நன்மைக்காக - அதாவது மக்கள் சமுகம் சரீர உழைப்பினின்றும், கால தாமதத்திலிருந்து காப் பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக் கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக் கத்திற்கு ஆளாகி, உழைப்பாளி - பாட்டாளிகளுக்குப் பட்டினியாக்கப் பயன்படுத்தப்படுகிறதோ,

அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும், திருப் தியையும் கவலையற்ற தன்மையையும் உண்டாக்கித் தீரவேண்டிய பகுத்தறிவாளனது, சிலருடைய ஆதிக்கத் திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவ லையையும், தரித்திரத்தையும் (ஏழ்மை - வறுமை) கொடுக்கவே பயன்படுகிறது!

முதன்முதலில் மனிதன் தவறிப் போன இடம் இதுவேயாகும்!''

தந்தை பெரியார், 26.5.1935 இல்

திண்டிவனத்தில் ஆற்றிய உரை

மனிதன் தவறிப் போன இடம் எது?  பெரியார் என்ன சொல்கிறார் என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

எனவே தோழர்களே, இதுபோன்ற நூல்களைப் படியுங்கள். விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு ஆகிய இயக்க இதழ்களை தாய்மார்கள், குழந்தைகள் மத்தியில் பரப்புங்கள்.

நம்முடைய இயக்கம் அடிப்படையில்


ஒரு பிரச்சார இயக்கம்


அவ்வப்பொழுது தேவையான பிரச்சாரங்களை செய்யுங்கள். நம்முடைய இயக்கம் அடிப்படையில் ஒரு பிரச்சார இயக்கம்.

எனவே,

முதல் தேவை பிரச்சாரம்!

இரண்டாவது தேவை பிரச்சாரம்!!

மூன்றாவது தேவை பிரச்சாரம்!!!

எனவே, அதனை செய்யுங்கள். இந்தப் பயிற்சிப் பட்டறை பயனுள்ள பட்டறையாகட்டும் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கும், வந்திருக்கின்ற உங் களுக்கும்,

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 11. 6 .2019