திங்கள், 10 ஜூன், 2019

2020 ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா ஆண்டு மூன்று நாள்கள் மிக விரிவாக நடத்திடத் திட்டமிடுவோம்!

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் அறிவிப்பு




தஞ்சை, ஜூன் 10   பகுத்தறிவாளர் பயிற்சிப் பட்டறைக்கு 70 பேர் வந்துள்ளீர்கள் பயிற்சிக்கு என்றால், தலா 10 பேர் என்று கணக்கிட்டு அதனை 700 ஆக வளர்க்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்


19.5.2019 அன்று  தஞ்சையில் நடைபெற்ற பகுத்தறி வாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  7.6.2019 அன்று விடுதலை'யில்  வெளிவந்த அவரது  உரையின் தொடர்ச்சி வருமாறு:

12 மாதங்களுக்கும் 12 நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இருக்கவேண்டும்


மாதம் மாதம் ஏதாவது ஒன்றைச் சொல்லி மதநம் பிக்கையை ஊட்டுகிறார்கள். இப்பொழுது அட்சய திருதியை என்று சொல்கிறார்கள். இதே முறையை நாம் செய்யவேண்டும். இந்த மாதம் இந்தக் கலந்துரையாடல், அடுத்த மாதம் அந்தக் கலந்துரையாடல் என்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கலந்துரையாடலை, சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நிகழ்ச்சிகள் - 12 மாதங்களுக்கும் 12 நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். ஒரு இயக்கம் என்றால், இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும்.

உங்களுக்கு ஒரு கேள்வி எழும் - என்னங்க தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க முடியுமா? எங்களுக்கும் வேலையில்லையா? வியாபாரம் இல்லையா? உத்தி யோகம் இல்லையா? என்று நீங்கள் நினைக்கலாம். தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள், இந்த வேலையை செய்வது மிகவும் சுலபம். எப்படி என்று கேட்டால், நெட் ஓர்க்கிங் - ஒருவரே எல்லோரையும் அழைத்துக் கொண் டிருக்கக்கூடாது. உதாரணத்திற்கு அண்ணா சரவணனிடம் சொல்லிவிட்டால், அவர் தருமபுரி மாவட்டம் முழுவதும், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சொல்லி விடுவார். அதுபோன்று செய்வது சுலபம். இன்னொருவரிடம் சொன் னால், அவர் நான்கு மாவட்டங்களுக்குச் சொல்லி விடுவார்.

நம்முடைய அமைப்பை பலப்படுத்தி, நெட் ஒர்க்கிங் போன்று அமைக்கவேண்டும்!


முதலில் நம்முடைய அமைப்பை பலப்படுத்தி, நெட் ஒர்க்கிங் போன்று அமைத்துவிட்டால், இயங்குவது சுலபமாகிவிடும். ஒருவருடைய வீட்டில் அய்ந்து பேரை, 10 பேரை அழைத்து விவாதம் செய்கிறோம் என்றால், அடுத்த நாள் இன்னொருவருடைய வீட்டில், அதற்கடுத்த நாள் இன்னொருவருடைய வீட்டில் என்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தீர்கள் என்றால்,  அந்த 5 பேருக்கோ, 10 பேருக்கோ தேநீர் வழங்குவதிலோ, சிற்றுண்டி வழங்கு வதிலோ சிரமமாக நினைக்காமல், மகிழ்ச்சியாக நினைப் போம். இதுபோன்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அமைப்புகளை அமைத்தால்தான், இயக்கம் பலப்படும்.

என்னங்க, ஒருவர், இருவர்தான் இருக்கிறோம். யாரும் வரவில்லை என்று சொல்லக்கூடாது. ஒருவர்தான் இருக் கிறார் என்று சொல்பவர்கள், கொஞ்சம் திரும்பிப் பாருங் கள். அய்யா தன்னந்தனியராகத்தான் ஆரம் பித்தார்.

தந்தை பெரியாரின் துணிச்சல், வைராக்கியம் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டும்!


என்னையே நம்பி, இப்பெரும் பணியை ஏற்றேன் என்றார் அய்யா.

நான் யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை. யார் இயக்கத்திற்கு வருகிறார்கள்; யார் இயக்கத்தைவிட்டுப் போகிறார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நான் ஒருவனே போதும். குடிஅரசு' பத்திரிகையா? விற்பனையாகிறதா? இல்லையா? என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நான் ஒருவனே எழுதி, நானே அச்சடித்து, நானே படிப்பேன். விற்கவில்லை என்பதற்காக, அதனை நிறுத்த மாட்டேன்'' என்பார்.

அதேபோன்று, ஒவ்வொருவரிடமும் அந்த வைராக் கியம், அந்தத் துணிச்சல் இருக்கவேண்டும்.

பெரியாருக்கு எவ்வளவு தொல்லைகள், துரோகங்கள் இருந்தன. அதை நினைத்துக்கொண்டு அவர் விரக்தி யடைந்து போயிருந்தார் என்றால், இன்றைக்கு இந்த நாடு முன்னேறி இருக்க முடியுமா? இந்த சமுதாயம் மாற்றம் அடைந்திருக்குமா? என்பதை நன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

அய்யாவினுடைய வாழ்க்கை நமக்கு ஓர் எடுத்துக்காட்டு


அய்யாவை எண்ணிப் பாருங்கள். அய்யாவினுடைய வாழ்க்கை நமக்கு ஓர் எடுத்துக்காட்டு. அனுபவங்களை நாம் இரண்டு வகையாக வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்று, நாம் செய்கின்ற தவறுகளின் மூலமாகப் படிப்பினைப் பெறலாம். இரண்டாவதாக அடுத்தவர்கள் செய்கின்ற தவறுகளின் மூலமாகவும் படிப்பினைப் பெறலாம். அதேபோன்று நாம் செய்கின்ற சாதனை, மற்ற வர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். மற்றவர் களுடைய சாதனை நமக்கு உற்சாகத்தை ஊட்டக்கூடி யதாக இருக்கும். ஆகவேதான், சிறப்பான வகையில் அதுபோன்ற முறையில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.

பகுத்தறிவாளர் கழகம் என்பது திராவிடர் கழகத்தினுடைய ஒரு பெரிய இணை அமைப்பு


பகுத்தறிவாளர் கழகம் என்பது திராவிடர் கழகத் தினுடைய ஒரு பெரிய இணை அமைப்பு என்றுதான் சொல்வேன். துணை அமைப்பு என்றுகூட சொல்ல மாட்டேன்.

ஒன்றுக்கொன்று அவை இணை அமைப்புகள். இந்த அமைப்பிற்கு அந்த அமைப்பு தேவை. அந்த அமைப் பிற்கு இந்த அமைப்பு தேவை.

நேரிடையாக திராவிடர் கழகத்தில் இருக்கக்கூடிய வர்கள் எல்லோரும் பகுத்தறிவாளர்கள்தான். பகுத்தறி வாளர்களாக இருந்தால்தான், திராவிடர் கழகத்தில் இருக்க முடியும்.

ஆனால், எல்லா பகுத்தறிவாளர்களும், திராவிடர் கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. அதுதான் மிகவும் முக்கியம். காரணம் என்னவென்றால், அவர்கள் திராவிடர் கழகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பார்கள். கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள்; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் என்பதுபோன்று இருப்பார்கள்.

பகுத்தறிவாளர் கழகத்தில் ஒரு பேம்லட் தயாரிக்கவேண்டும்


ஆனாலும், பகுத்தறிவாளர் கழகம் என்ன செய்ய வேண்டும் என்றால், ஒரு யூனிட் - ஒரு  அலகுக்குகீழ் அவர்கள் எல்லோரையும் கொண்டு வரவேண்டும். அப்பொழுதுதான் செயல்படுத்த முடியும். அப்போதுதான் அதற்குப் பலம் வரும். ஆகவே, அந்தப் பலத்தை நீங்கள் எல்லோரும் தயார்படுத்திக் கொடுக்கக் கூடிய அந்த வாய்ப்பை இதன்மூலம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்பு என்பது அதுதான்.

இதை நாம் பதிவு செய்வது மட்டுமல்ல; பல பேருக்கு எப்பொழுது பதிவு செய்யவேண்டும் என்பதுகூட தெரி யாதவர்கள் இருப்பார்கள். அதற்கான புத்தகங்கள் எல்லாம்கூட இருக்கிறது.

பகுத்தறிவாளர் கழகத்தில் ஒரு பேம்லட் தயாரிக்க வேண்டும். ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரு போல்டர் தயாரிக்கவேண்டும். ஆற்றல் ரீதியாக அது இருக்க வேண்டும். அதில், இதுவரை நாம் என்னென்ன சாதனை களை செய்திருக்கிறோம் என்று சொல்லவேண்டும். பகுத்தறிவாளர் கழகம், இவ்வளவு கிளைகள் இருக்கின்றன, இன்னின்ன சாதனைகளை செய்திருக்கிறோம் என்று தெரியப்படுத்தவேண்டும்.

மாதம் ஒருமுறை சந்திக்கவேண்டும்!


மாதம் ஒருமுறை, ரோட்டரி கிளப் போன்று, லைன்ஸ் கிளப் போன்று சந்திக்கவேண்டும். வியாழக்கிழமை தோறும் சந்திக்கவேண்டும் என்று வருகைப் பதிவேடு வைத்திருக்கிறார்கள். அதற்காகவே எல்லோரும் செல் கிறார்கள். போகவில்லை என்றால், அட்டெண்டன்ஸ் குறைந்துவிடும் என்கிறார்கள். ஆனால், இங்கே பகுத்தறி வாளர் கழகம்தானே, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். நமக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும், அந்தக் கட்டுப்பாட்டை நாம் உருவாக்கினோம் என்றால், மிகத் தெளிவாக இருக்கும்.

1920 ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தின் 50 ஆம் ஆண்டு விழா


1970, நவம்பர் 20 ஆம் தேதி பகுத்தறிவாளர் கழகத்தை ஆரம்பித்திருக்கின்றோம். 1920 ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தின் 50 ஆம் ஆண்டு விழா. இது 49 ஆம் ஆண்டாகும். 50 ஆம் ஆண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடத்தவேண்டும். அந்த விழாவினை இரண்டு, மூன்று  நாள்களாக நடத்தவேண்டும். வெளிநாட்டுக்கார்கள், வெளி மாநிலக்காரர்களுக்காக ஒரு நாள் விழாவும், அதுபோலவே, அடுத்த நாள் உள்நாடுகளில் இருப்ப வர்களுக்கு இரண்டாவது நாள்; மூன்றாவது நாளில், மகளிரணி, மாணவரணி போன்றவர்களுக்கு என்று அந்த விழாக்களை சிறப்பாக நடத்தவேண்டும்.

பகுத்தறிவு சிந்தனை, விஞ்ஞான கண்காட்சி போன்ற வற்றை அந்த விழாக்களில் சிறப்பாக நடத்தவேண்டும்.

இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இருக்கின்றன. அதற்குள்ளாகவே நாம் என்ன திட்டமிடுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.

பகுத்தறிவாளர் கழக  கருத்தரங்கத்தின்மூலமாக....


இந்தக் கூட்டத்தில் நாம் இறுதி முடிவு எடுப்பது ஒரு முடிவானதாக இருக்கவேண்டும். எப்படி திராவிடர் கழகத்தினுடைய பவள விழா மாநாடு சேலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடத்துவோம் என்று  அறிவித்தோமோ, அதுபோன்று நீங்கள் என்ன முடி வெடுக்கவேண்டும் என்றால், 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பகுத்தறிவாளர் கழகத்தின் பொன் விழா மாநாட்டினை மிகப்பெரிய அளவிற்கு நடத்துவதற்கு முடிவு செய்தோம் என்று இந்த பகுத்தறிவாளர் கழக கருத்தரங்கத்தின்மூலமாக உருவாக்கிக் கொண்டு, அதை நோக்கி சென்று கொண்டிருக்கவேண்டும்.

அந்த மாநாட்டிற்காக மலர் தயார் செய்வது, விளம் பரங்களை வாங்குவது என்பது போன்ற பணிகளை செய்யவேண்டும். இது ஒரு சிறிய உதாரணம்.

ஆக, பகுத்தறிவாளர் கழகம் 1970 ஆம் ஆண்டில் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.

நன்மையும் இருந்தது; தீமையும் இருந்தது!


ஒரு செய்தியை இடைச்செருகலாக உங்களுக்குச் சொல்லவேண்டும். அது என்னவென்றால்,

பகுத்தறிவாளர் கழகம் தொடங்கியபொழுது, அதற்குத் தலைவரை நியமிக்கும்பொழுது, பதவியில் இருந்தவர் களை நியமித்தோம். அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தலைவராக இருந்தார்கள். அதில், நன்மையும் இருந்தது; தீமையும் இருந்தது.

என்ன நன்மை? என்ன தீமை? என்று நீங்கள் கேட்கலாம். இது நம்முடைய கலந்துரையாடல், இங்கே மனம் திறந்து பேசவேண்டும்.

அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் பகுத்தறிவாளர் கழகத்தில் தலைவராக இருந்தார்களா என்று நீங்கள் வியப்படையலாம். நம்முடைய ஆட்கள் இவ்வளவு பேர் படித்தவர்கள் இருக்கிறார்களா? இவ்வளவு பேர் பெரியார் சிந்தனையோடு இருக்கிறார்களா? என்று நிறைய பேர் அதிசியப்படுகின்ற அளவிற்கு இருந்தது.

அரசு ஊழியர்களும், மற்றவர்களும் பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினர்களாக சேரவேண்டும் என்று வந் தார்கள். பகுத்தறிவு எல்லோருக்கும் உண்டு. ஆறறிவு உள்ள மனிதர்கள் எல்லோரும் பகுத்தறிவுவாதிகள்தான். ஆனால், பகுத்தறிவு ஆளவேண்டும். ஒருமுறை அகில இந்திய வானொலியில், மாணவர்கள், இளைஞர்களுக்காக பேசவேண்டும் என்று என்னை அழைத்திருந்தார்கள். அப்பொழுது இரண்டு கல்லூரி மாணவிகளை என்னிடம் கேள்வி கேட்கச் சொல்லியிருந்தார்கள்.

நீங்கள் மட்டும் பகுத்தறிவாளர்கள் என்று சொன்னால், மற்றவர்களுக்குப் பகுத்தறிவு இல்லையா?


ஒரு கல்லூரி மாணவி என்னைப் பார்த்து, ஏங்க, எல்லோருக்கும்தான் பகுத்தறிவு இருக்கிறதே? நீங்கள் மட்டும் பகுத்தறிவாளர்கள் என்று சொன்னால், மற்றவர் களுக்குப் பகுத்தறிவு இல்லையா?'' என்று கேட்டார்.

நான் உடனே, இந்தக் கேள்வியை வரவேற்கிறேன். நல்ல கேள்வி, பாராட்டவேண்டிய கேள்வி. எல்லோரும் பகுத்தறிவு உள்ளவர்கள்தான். நாங்கள் ஏன் பகுத்தறி வாளர்கள் என்று சொல்கிறோம் என்றால், அதற்குத் தனித்தன்மை உண்டு.

ஒருவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்பொழுது, மலத்தையோ அல்லது சாணியையோ மிதித்துக் கொண்டால், அவன் என்ன நினைக்கிறான், அய்யய்யோ, இதை மிதித்துவிட்டோமே உடனே காலை கழுவிக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்து காலை கழுவிக் கொண்டு சென்றால், அது பகுத்தறிவு.

இதற்கு முன் மிதித்ததும் சாணிதான், இதுவும் சாணிதான் என்று சொல்லக்கூடிய துணிச்சல்!


இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும், அதே ஆள், சாணியைப் பிடித்து, அதற்கு மேல் கொஞ்சம் அருகம் புல்லை வைத்து, இதுதான் பிள்ளையார் என்று சொல்லி, தோப்புக் கரணம் போடுகிறாரே, அவர் பகுத்தறிவாளர் அல்ல. அந்த இடத்தில் தோப்புக் கரணம் போடாமல், அந்த சாணியைப் பார்த்தும், இதற்கு முன் மிதித்ததும் சாணிதான், இதுவும் சாணிதான் என்று சொல்லக்கூடிய துணிச்சல் யாருக்கு இருக்கிறதோ, அவர்தான் பகுத்தறிவாளர்'' என்று சொன்னேன்.

நன்றாக புரிந்தது என்று அந்த மாணவிகள் சொன் னார்கள்.

போலி பகுத்தறிவாளர்களை வடிகட்டக் கூடிய வாய்ப்பு தானாகவே கிடைத்தது


அதுபோன்று, நாம் பகுத்தறிவாளர் என்று வருகின்றபொழுது, பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களில் சில பேர், அய்.ஏ.எஸ். அதிகாரி தலைவராக இருந்த பொழுது, அவரிடம் பதவி உயர்வு கேட்பதற்காகவும், மாறுதல் கேட்பதற்காகவும் வந்துவிட்டார்கள். நல்ல வாய்ப்பாக எமர்ஜென்சி வந்தது - என்னடா, நல்ல வாய்ப்பு என்ற சொல் சரியா என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம். என்ன நல்ல வாய்ப்பு என்று சொன்னேன் என்றால், யார் உண்மையான பகுத்தறிவாளர்களோ, அவர்கள் மட்டும் அந்த அமைப்பில் இருந்தார்கள். யார் போலி பகுத்தறிவாளர்களோ, அவர்களை வடிகட்டக் கூடிய வாய்ப்புத் தானாகவே கிடைத்தது.

பெரியார் இல்லை என்றால், நாம் மானமும், அறிவும் பெற்றவராக இருக்க முடியாது!


நாம் ஆளுங்கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ இல்லை. இவ்வளவு பேர் இங்கே வந்திருக்கிறீர்கள் என்றால், அது இயல்பான சிந்தனையால்தான். பெரியார் இல்லை என்றால், நாம் மனிதனாக இருக்க முடியாது. பெரியார் இல்லை என்றால், நாம் மானமும், அறிவும் பெற்றவராக இருக்க முடியாது என்ற எண்ணத்தோடு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள்.

ஆகவே, நம்முடைய பணிகள் என்பது இருக்கிறதே, திட்டமிட்டு செயலாற்றவேண்டும். அமைப்புகளை பலப்படுத்தவேண்டும். இந்த 70 பேரும் ஊருக்குச் சென்ற வுடன், குறைந்த பட்சம் 70 கிளைகளை நாங்கள் உருவாக் குவோம் என்று நீங்கள் தெளிவாக செயல்படவேண்டும்.

ஒவ்வொருவரும் நேரிடையாக ஒரு நகலை பகுத் தறிவாளர் கழகத் தலைவர் அழகிரிசாமிக்கு அனுப்பி விட்டு, இன்னொரு நகலை பகுத்தறிவாளர் கழகப் புரவலருக்கு அனுப்பவேண்டும்.

70 பேர் வந்தார்கள், 70 கிளைகளை ஆரம்பித் திருக்கிறார்கள் என்று நவம்பர் மாதத்திற்குள் செய்ய வேண்டும். ஏன் நவம்பர் மாதத்திற்குள் என்று சொல்கி றோம் என்றால், நவம்பர் மாதத்தில்தான் பகுத்தறிவாளர் கழகத்தைப் பதிவு செய்தோம். நவம்பர் புரட்சி' என்றே சொல்லலாம்.

வைதீகர்கள் செய்வதுபோன்றே நாமும் மாதம்தோறும், டிசம்பர் மாதத்தில் ஒரு வேலை - ஜனவரி மாதம் பொங்கல் விழா கொண்டாடுகின்ற வேலை. 12 மாதமும் 12 வேலைகள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ் வொரு விழாக்கள். அதுபோன்று, போட்டி போட்டுக் கொண்டு செயல்படவேண்டும்.

பிரச்சார யுக்தி;  கொள்கைப் பிரச்சாரம் என்பது இதுதான்!


பக்தர்களைப் பாருங்கள், ஏகாதேசி, தூவாதேசி, மார்கழி திருவிழா என்று ஏதாவது ஒன்றை சொல்லி விழாக்களை வைக்கிறார்கள்.  ஏனென்றால், அய்யாதான் சொல்வார், சர்வ வல்லமை படைத்த கடவுளுக்கே ஏன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழா வைத்து கும்பிடவேண்டுமென சொல்கிறார்கள் என்றால், அப்படி விழா எடுக்கவில்லையென்றால், மக்கள் கடவுள்களை' மறந்துவிடுவார்கள். அதுதான் பிரச்சார யுக்தி.  கொள்கைப் பிரச்சாரம் என்பது இதுதான்.

உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன், திராவிடர் கழகத் தோழர்களிடம் கூடுமானவரையில் இணைந்து பணியாற்றுங்கள். சில இடங்களில் திராவிடர் கழகத் துக்காரர்கள், எங்களை மீறி எப்படி அமைப்பு வைக்க லாம்; நாங்கள்தானே எல்லாம்'' என்று சொல்வார்கள். அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம், எங்களு டைய கவனத்திற்கு அதைக் கொண்டு வாருங்கள்.

இணை கோடுகள் நாம்; இரண்டு தண்டவாளத்தின்மேல் ரயில் செல்வதுபோன்று, இணை அமைப்புகள் என்று நம் தோழர்களோடு இணைந்து உற்சாகமாக செயல்படலாம்.

பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கும் - திராவிடர் கழகத் தோழர்களுக்கும் உள்ள வித்தியாசம்!


ஒரே வித்தியாசம் என்னவென்றால், திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டை அணிந்திருப்பார்கள். ஆனால், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கட்டாயமாக கருப்புச் சட்டை போடவேண்டிய அவசியமில்லை.

அடுத்தாக, திராவிடர் கழகத்துக்காரர்கள் போராட்டம் என்றால், சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாராக இருப்பார்கள். ஆனால், நீங்கள் யாரும் சிறைச்சாலைக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இப் பொழுது ஆசிரியர்கள், அரசுத் துறையைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி, சிறைச்சாலைக்குச் செல்வது என்பது சாதாரணமாகப் போய்விட்டது. அது வேறு விஷயம். அதோடு உங்களை ஒப்பிடத் தயாராக இல்லை.

நீங்கள் எந்த அளவிற்கு உங்கள் எல்லைக்குள் நின்று உதவி செய்ய முடியுமோ, அந்த உதவியை அதிக பட்சம் திராவிடர் கழகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.

உதாரணமாக நேரிடையாக ஒருவரால் வர முடியாது. ஆனால், நேரிடையாக வர முடியாவிட்டாலும், ஒரு நூறு ரூபாயை செலவு செய்யலாம் என்று நினைத்தால், விடுதலை பத்திரிகையில் தலையங்கம், சமுகநீதியைப் பற்றியோ, மூடநம்பிக்கையைப்பற்றி, பகுத்தறிவைப்பற் றியோ வந்திருக்கிறது என்றால், அந்தத் தலையங்கத்தையே துண்டறிக்கையாக நாம் அடித்து வெளியிடுகிறோம் என்றால், அந்தத் துண்டறிக்கையை நீங்கள் வாங்கி விநியோகம் செய்யலாம். திராவிடர் கழகத்துக்காரர்கள் போராட்டம் நடத்தி சிறைக்குச் செல்கிறார்களோ அந்தத் தோழர்களுக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்தால்கூட, அது உங்களுடைய பங்களிப்பாக இருக்கும்.

தவறாமல் நம்முடைய ஏடுகளுக்கு சந்தாதாரர்களாக ஆவது என்பது மிகவும் முக்கியம்!


ஆகவே, இணைந்து பணியாற்றுதல். கட்டாயம், தவறாமல் நம்முடைய ஏடுகளுக்கு சந்தாதாரர்களாக ஆவது என்பதை பகுத்தறிவாளர்கள் ஒரு கட்டாயக் கடமையாக நினைக்கவேண்டும்.

விடுதலை', உண்மை', தி மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு' ஆகிய இதழ்கள் உங்கள் இல்லத்திற்கு கட்டாயமாக வரவேண்டும்.

சில பேர் இவ்வளவு தொகை கட்டுவதற்கு என்னுடைய பட்ஜெட்டில் இடமில்லை என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கலாம்.

அப்படி முடியாது என்று சொல்பவர்கள், ஒரு ஊரில் நான்கு  குடும்பங்கள், நான்கு தோழர்கள் சேர்ந்து ஒவ் வொருவரும் ஒவ்வொரு இதழ்களுக்கு சந்தாக்களைக் கட்டி, ஒவ்வொருவரும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாமே!.

(தொடரும்)

-  விடுதலை நாளேடு, 10.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக