வெள்ளி, 7 ஜூன், 2019

பகுத்தறிவாளர்கள் செயல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

70 பேர் வந்துள்ளீர்கள் பயிற்சிக்கு என்றால் தலா 10 பேர் என்று கணக்கிட்டு அதனை 700 ஆக வளர்க்கவேண்டும்!
பகுத்தறிவாளர்கள் செயல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை
தஞ்சை, ஜூன் 7   பகுத்தறிவாளர் பயிற்சிப் பட்டறைக்கு 70 பேர் வந்துள்ளீர்கள் பயிற்சிக்கு என்றால், தலா 10 பேர் என்று கணக்கிட்டு அதனை 700 ஆக வளர்க்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்
19.5.2019 அன்று  தஞ்சையில் நடைபெற்ற பகுத்தறி வாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது  உரை வருமாறு: ஒரு குறுகிய கால அறிவிப்பு செய்யப்பட்டாலும், பெரியாரியல்  பகுத்தறிவாளர் கழக பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்கின்ற அருமை பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களே,
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி தோழர் அழகிரிசாமி அவர்களே,
அதேபோல, பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்குப் பொறுப்பும், கவலையும் எடுத்துக் கொண்டு எல்லாத் தோழர்களையும் ஒருங்கிணைத்த பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் அருமை நண்பர் தமிழ்ச்செல்வன் அவர்களே,
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கழகப் பொருளாளர் அருமை நண்பர் குமரேசன் அவர்களே, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே, மகளிரணி பொறுப்பாளர் தோழர் கலைச் செல்வி அவர்களே, மாணவரணி பொறுப்பாளர் தோழர் கண்மணி அவர்களே
மற்றும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வந்தி ருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலாவது, இந்த முயற்சி ஒரு நல்ல வெற்றியைத் தந்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியோடு நான் உங்களைப் பாராட்டுகின்றேன்.
ஒருங்கிணைக்காதது  பொறுப்பாளர்களுடைய  குற்றமா?
தெரிந்துகொள்ளாதது எங்களுடைய குற்றமா?
ஏனென்றால், அருமையான தோழர்கள்; இவ்வளவு தோழர்கள் இருந்தும் ஏன் பளிச்சென்று தெரியவில்லை என்பதுதான் நமக்கு வியப்பு. புதைபொருள் இலாகாவில், கீழடி அகழாய்வில் தோண்டி எடுத்ததுபோன்று இருக் கிறது. திராவிடர் நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் மிகப்பெரிய அளவில் பழைமை வாய்ந்தவை என்பதைக் கண்டுபிடித்தவுடன் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அதைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது - இவ்வளவு தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இவ் வளவு பேரையும் ஒருங்கிணைக்காதது தலைவர்களு டைய, பொறுப்பாளர்களுடைய குற்றமா? அல்லது இவ்வளவு பேர் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாதது எங்களுடைய குற்றமா? என்று எனக்கே புரியவில்லை.
எல்லா பகுதிகளிலிருந்தும் இந்தப் பட்டறைக்கு வந்திருக்கிறீர்கள். அதுவும் ஒரு குறுகிய முயற்சியில். இங்கே வந்திருக்கின்ற ஒவ்வொருவரும் மிகத் தெளிவானவர்கள். பொறுப்பாளர்களுக்கான பட்டறை யாகும் இது. பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களின் கூட்டமல்ல; பொதுக்குழு கூட்டமல்ல; முழுக்க முழுக்க பொறுப்பாளர்களாக இருந்து இன்றைக்குப் பயிற்சியா ளர்களாக உங்களை ஆக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு அருமையான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி.
எல்லோரும் பகுத்தறிவாளர்கள்,
எல்லோரும் பெரியாரிஸ்ட்!
இதிலிருந்து ஒன்றை தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 70 பேர் இங்கே வந்திருக்கிறீர்கள், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த 70 பேரையும் பார்த்தீர் களேயானால், ஒவ்வொருவரும் 10 பேருடைய, 15 பேருடைய, 20 பேருடைய பிரதிநிதி. அப்படித்தான் நான் கருதுகிறேன்.
முதல் பயிற்சியில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயமே அதுதான். நீங்கள் உங்களுடைய ஊருக்குத் திரும்பியவுடன், உடனடியாக செய்யவேண்டிய பணி என்னவென்றால், நம்மிடையே 10 கூட்டுத் தோழர்கள் இருக்கிறார்கள். நம்மில் மேல், கீழே என்றெல்லாம் கிடை யாது. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் செய் பவர்கள். எல்லோரும் பகுத்தறிவாளர்கள், எல்லோரும் பெரியா ரிஸ்ட் இதுதான் அடிப்படையான ஒரு பெரு மையான விஷயமாகும்.
ஆக, நாம் குறைந்தது 10 பேரையாவது அமைப்பில் இணைத்து பலப்படுத்தவேண்டும். அந்தந்தப் பகுதியில் ஏற்கெனவே அமைப்புகள் இருக்கும். உடனடியாகக் கலந் துரையாடல் நடத்தி இந்தப் பணியை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக மிக முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால், இங்கே 70 பேர் வந்திருக்கிறீர்கள். அதில் மூன்று பேர்தான் மகளிர். இந்த நிலைமை முற்றிலும் மாற்றி அமைக்கப்படவேண்டும்.
சமுதாயத்தில் ஒரு பெரிய மாறுதலை
செய்யவேண்டும்!
நாம் மதவாதிகளைப் பார்க்கவேண்டும்; அவர்கள் கோவிலுக்குச் செல்லுகையில், மூடத்தனமான ஒரு செயலாக இருந்தாலும், இது சரியான உவமையல்ல என்றாலும், உங்களுக்குப் புரிவதற்காகச் சொல்லுகிறேன், மதவாதிகள் எப்படி குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்லுகிறார்களோ, அதிலும் ஆண்கள் செல்வதைவிட, பெண்கள் அதிகமாகப் போவார்கள். அதேபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகளுக்குக் குடும்பம் குடும் பமாகச் செல்லுகிறார்கள். வெறும் நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டதற்கே இதுபோன்று இருக்கிறது என்றால்,  நாம் பகுத்தறிவாளர்களாக இருந்துகொண்டு, சமுதாயத்தில் ஒரு பெரிய மாறுதலை செய்யவேண்டும் என்று நாம் நினைக்கும்பொழுது, நம்முடைய தோழர்கள் குறைந்தபட்சம், அடுத்து கமிட்டிகள் போன்றவைகளில் இதை ஒரு கடமையாகக் கருதவேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு, மூன்று பேராவது பங்கேற்கவேண்டும்
பயிற்சிப் பட்டறைகள் மட்டுமல்லாமல், கூட்டங்கள் நடைபெறும்பொழுதும் அவர்கள் பங்கேற்கவேண்டும். சரி பகுதி பெண்கள் என்று சொன்னால், நம் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நம்முடைய பிள்ளைகள், துணைவியார், சகோதரி என்று வருகிறபொழுது, குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு, மூன்று பேராவது பங்கேற்கவேண்டும். நம்முடைய அமைப்பை அப்படி நீங்கள் பலப்படுத்திவிட்டீர்கள் என்றால், இரண்டு வகையில் லாபம். இயக்கத்திற்கும் லாபம்; அதைவிட உங்களுக்கும் லாபம். எப்படியென்றால், என்னங்க, இவர் எப்பொழுது பார்த்தாலும் கூட்டங்களுக்கோ, கலந்துரையாடல் களுக்கோ சென்றுவிடுகிறரே என்று உங்களுடைய துணைவியாரோ, மகளோ நினைப்பார்கள். ஆனால், இதனுடைய பெருமை என்ன? இதனுடைய லாபம் என்ன? இதனுடைய முக்கியத்துவம் என்ன? இதனால் ஏற்படுகின்ற சிறப்பு என்ன? என்று தெரியாத பெண் களுக்கு, இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொண்டால், பல பேருடைய அறிமுகம் கிடைக்கும். பல பேருடைய உறவுகள் மிஞ்சும்.
அதற்காக தோழர்கள் குடும்பம் குடும்பமாக வர வேண்டும். அது திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, பகுத்தறிவாளர் கழகமானாலும் சரி - இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம் என்று சொல்வதுபோன்று,
பெண்கள் கட்டாயமாக பங்கேற்கவேண்டும்
மிகத் தெளிவாக செய்யவேண்டிய பணி என்னவென் றால், குடும்பம் குடும்பமாக கலந்துரையாடலில் பங்கேற்க வேண்டும் என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும். பெண்கள் கட்டாயமாக பங்கேற்கவேண்டும். அந்த நிலை வந்தால்தான், நம்முடைய கொள்கையை நிலைக்க வைக்க முடியும். இல்லையென்றால், நம்மோடு சரி என்கிற நிலை வரும்.
அதுமட்டுமல்ல, அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். நம் வீட்டில் மணவிழாக்கள் நடைபெறும், நம்முடைய வீட்டில் இறப்புகள் ஏற்படும் - நல்லது கெட்டது; இன்பம் - துன்பம் எல்லாம் ஏற்படும். இவை எல்லாம் ஏற்படும்பொழுது சில சிக்கல்கள் வரும். பகுத்தறிவாளர்களாக குடும்பத்தையே நாம் ஆக்கிவிட்டோம் என்றால், நம்முடைய அப்பா - அம்மா வைதீர்களாக இருந்தால், அவர்களை விட்டு விடலாம். அவர்கள் எல்லாம் எக்ஸ்பியரி டேட் நெருங்கிக் கொண்டிருக்கின்ற மருந்து மாதிரி. அவர்களைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மனித உடல்கள் கிடைக்கவில்லை
ஆனால், நாம் அடுத்து வரப் போகின்றவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும். அப்படி மாறினால், பகுத்தறிவாளர் குடும்பத்தில் ஒருவர் இறந்தால், அவரது உடலை மருத்துவக் கல்லூரியில் வழங்கலாம்; சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை, செலவில்லை. இறந்தாலும் சமுதாயத்திற்கு பகுத்தறிவாளர்கள் பயன்படுகிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம். ஏனென்றால், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மனித உடல்கள் கிடைக்கவில்லை. ஆகவே, இதுபோன்ற பக்குவத்தை நம் குடும்பத்தாருக்குப் புரிய வைக்கவேண்டும்.
உங்களுடைய துணைவியாரையோ, மகளையோ வீட்டிலேயே விட்டுவிட்டு, நீங்கள் மட்டும் கலந்துரை யாடல் கூட்டங்களுக்கு வருகிறீர்கள். அப்படி அவர்களை  விட்டுவிட்டு வராமல், அவர்களை கொஞ்சம் வற்புறுத்தி, நம்முடைய கலந்துரையாடல் கூட்டங்களுக்கு அழைத்து வாருங்கள். அவர்களை அறிமுகப்படுத்தி வையுங்கள். இதுபோன்ற நிலைகள் வந்தால்தான், பகுத்தறிவாளர்கள் குடும்பம் என்று வரும். குடும்பம் என்று வந்துவிட்டால், குடும்ப உறவுகள் வரும். உறவுகள் வந்தால், அதில் ஏற்படுகின்ற விளைவுகள் உண்டு.
நம்முடைய பலம் எதிரிகளை திகைக்கச் செய்யும்
ஆகவே, முதற்கண் நாம் எல்லோரும் தெளிவாக இருக்கவேண்டிய விஷயம். குடும்பம், குடும்பம், குடும்பம் - கொள்கைக் குடும்பம், உறவுக்குடும்பம் - அதுமட்டுமல்ல, நாம் 10 பேர் பகுத்தறிவாளர்கள் சேர்ந்து ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம் என்றால், அந்த 10 பேரும் 10 குடும்பங்களாக மாறிவிட்டால், அது ஒரு தனி பலமாகும். எந்தக் காரியமாக இருந்தாலும், அந்த 10 குடும்பங்கள் டக்கென்று வந்து நிற்கும் என்ற நிலை வந்தால், அந்த பலம் எதிரிகளை திகைக்கச் செய்யும்.
கான்ஷிராம் தொடங்கிய பாம்செஃப் அமைப்பு
கான்ஷிராம் அவர்கள், பாம்செஃப் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பில் உள்ள வர்கள் எல்லோரும் அரசாங்கத் துறையில் பணியாற் றுபவர்கள். ஆண்டு தவறாமல் அந்த அமைப்பினர் சந்திப்பார்கள். அந்த அமைப்பிலிருந்துதான் கான்ஷி ராமே வந்தார். அவரே ஓய்வு பெற்ற அரசு அதிகாரிதான்.
அந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற பல மாநாடுகளுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். அந்த அமைப்பிலிருந்துதான் அரசியலுக்கு வந்து ஒரு கட்சியை தொடங்கி, பகுஜன் சமாஜ் கட்சி என்று பெயர் வைத்தார். உங்களுக்கெல்லாம் நான் சொல்கின்ற விஷயம் ஆச் சரியமாக இருக்கும். அந்த அமைப்பின் சார்பில் பெங் களூருவில் மாநாடு போடுவார்கள். அவர்கள் எல்லாம் பஞ்சாபில் இருப்பார்கள்; அப்படி இருந்தாலும், அவர்கள் குடும்பம் குடும்பமாக அந்த மாநாட்டில் கலந்துகொள் வார்கள். சுற்றுலா போன்று அந்த வாய்ப்பைப் பய ன்படுத்திக் கொள்வார்கள்.
அந்த அமைப்பு வளர்ந்து, ஒரு கெட்டியான அமைப் பாகி, அதிலிருந்து சிலர் வந்தார்கள். அதிலேயே சில கருத்து மாறுபாடுகள் வந்தன. அது என்னவென்றால், அரசியலுக்கு இந்த அமைப்பு சென்றால், அதனுடைய அடிக்கட்டுமானம் போய்விடும் என்று நினைத்து, அமைப் பாகவே அது இருந்தாலே போதும் என்று நினைத்தார்கள்.
பார்ப்பனர்களை சேர்த்ததால் கோளாறுகள் ஏற்பட்டன
பாம்செஃப் அமைப்பிலிருந்து சிலர் அரசியலுக்குப்  போனார்கள்; பகுஜன் சமாஜ், சர்வ ஜன் ஆகி, அந்த அமைப்பில்  பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஆகி, அதற்குப் பிறகு கோளாறுகள் ஏற்பட்டன.
அந்த பாம்செஃப் அமைப்பைச் சார்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள்.
அதுபோன்றதுதான் திராவிடர் கழகமும். பொதுவாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு, குடும்பம் குடும்பமாக பங்கேற்கி றார் களே, குடும்பம் குடும்பமாக அய்யாவிடம் இருக்கி றார்களே - பெரியாரின் பெருங்குடும்பம் என்று சொல் வதற்கு நாமெல்லாம் பெருமைப்படவேண்டும். அந்தக் குடும்பத்துப் பிள்ளைகள், அந்தக் குடும்பத்துப் பேரப் பிள்ளைகள் என்கிற பெருமையோடு இருக்கின்ற வாய்ப்புகளை முதலில் பகுத்தறிவாளர்களாக இருக்கின்ற நாம் உருவாக்கவேண்டும்.
பகுத்தறிவாளர் கழகத்திற்கான செயல் திட்டங்கள்!
அடுத்ததாக, பகுத்தறிவாளர் கழகம் வேகமாக செயல் படுவதற்காக சில திட்டங்களை வகுத்திருக்கின்றோம். புதிதாக வந்தவர்களுக்கு பல செய்திகளை நினைவூட்ட வேண்டும்.
ரேசனலிஸ்ட் ஃபாரம் என்பதை அய்யா அவர்கள், 1971 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சென்னையில் தொடங் கினார். அதுவும் திராவிடர் கழகத்தில் நேரிடையாக சேருவதற்கு யாருக்கு வாய்ப்பில்லையோ, அவர்களுக் காக ஒரு அமைப்பை உருவாக்கினார், அதுதான் பகுத்தறி வாளர் கழகம்.
ஆர்.எஸ்.எஸை எடுத்துக்கொண்டால், 1925 ஆம் ஆண்டு உருவானது. அப்பொழுது அந்த அமைப்பில் பெண்களுக்கு இடமே இல்லை.
நமக்கு நேர் எதிரான கொள்கைதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கையாகும்.
திராவிடர் கழகத்தினுடைய கொள்கை என்னவென்று சொன்னால், ஜாதி ஒழிப்பு, பிறவி பேதம் ஒழிப்பு, பெண் ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு, மூடநம்பிக் கைகளை களைதல், சம வாய்ப்பு, சமுகநீதி, வகுப்புரிமை, அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் என்று எழுதினால்,
இதற்கு நேர் எதிரானது என்னவோ, அதுதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கையாகும்.
ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்னவென்று கேட்டால், திராவிடர் கழகத்தின் கொள்கைக்கு நேர் எதிரான கொள் கைகள்தான்.
ஆக, திராவிடர் கழகம் வெளிப்படையானது.
ஆர்.எஸ்.எஸ். ரகசிய இயக்கம்.
திராவிடர் இயக்கம் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி எடுத்தவர்தான் காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சே!
ஆர்.எஸ்.எஸ். வன்முறையை நம்புவது. காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சேகூட அந்த அமைப்பில்தான் பயிற்சி எடுத்தவர். ஆனால், அதை சாமர்த்தியமாக மறுப்பார்கள். 1925 ஆம் ஆண்டில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வருகிறது
1925 ஆம் ஆண்டில்தான் சுயமரியாதை இயக்கம் வருகிறது.
1925 ஆம் ஆண்டில்தான் பொதுவுடைமை இயக்கம் வருகிறது.
ஆக, இந்த மூன்று அமைப்புகளும் ஒரே ஆண்டில்தான் தொடங்கப்பட்டன.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களுக்கு இடம் கிடையாது என்று சொன்னவுடன், பிரச்சினை ஏற்பட்டது. 11 ஆண்டுகள் கழிந்த பிறகுதான், ராஷ்ட்ரீய சேவிகா கமிட்டி என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதிலும் தந்திரமாக அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களுக்குப் பொறுப்பு கிடையாது
ஆர்.எஸ்.எஸ். என்றால், ராஷ்ட்ரிய சுய சேவக் சங்கம் என்பதன் சுருக்கம்தான்.
ராஷ்ட்ரீய சேவிகா கமிட்டி என்றால், அதுவும் ஆர்.எஸ்.எஸ். என்றுதான் வரும். இரண்டும் ஆர்.எஸ்.எஸ்தான். ஆனால், பெயர் வேறுபாடாகத் தெரியும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களுக்குப் பொறுப்பு கிடையாது. ஆனால், திராவிடர் கழகத்தில் மண்டல செயலாளர்களாக, மாநில பொறுப்பாளர்களாக மாவட்டத் தலைவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.
நாட்டில் நிறைய பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பழங்குடி மக்கள் என்று சொல்வ தில்லை. வனவாசி கல்யாண் ஆஸ்ரம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். அதாவது, காட்டு மனிதர்கள் என் கிறார்கள்.
ஒருமுறை கருநாடகாவில் உள்ள தலித் தோழர்கள் நடத்திய மாநாட்டிற்கு என்னை அழைத்திருந்தார்கள். இதுபோன்ற பெயர்களை நீக்குவதற்காகவே. வனவாசி என்று சொல்லக்கூடாது. வனவாசி என்றால், காட்டுப்பயல் என்று அர்த்தம். ஆகவே, அதுபோன்ற பெயர்களை நீக்கவேண்டும் என்பதற்காகத்தான் அந்த மாநாடு.
வனவாசி கல்யாண் ஆஸ்ரம் அமைப்பை ஏற்படுத்தி, அந்த சமுதாய மக்களை ஈர்க்கவேண்டும். அவர்களுக்கு சமஸ்கிருதம், அவர்களுக்குப் படிப்பு என்று அவர்க ளுடைய நலனுக்காகப் பாடுபடுவது போன்று காட்டுவது.
அதற்கடுத்தாக, மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு வரவேண்டும் என்று நினைத்து, அகில பாரத் வித்யார்த்தி பரிஷத் - ஏபிவிபி என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
முதலில் சாதாரண அமைப்பு - இரண்டாவது மகளிர் அமைப்பு -
அதற்கொரு துணை அமைப்புப் போன்று, அதற்கடுத்து வனவாசி கல்யாண் ஆஸ்ரம் அமைப்பு, அதற்குப் பிறகு ஏபிவிபி அமைப்பு.
அடுத்ததாக, வெளிநாட்டில் இருக்கின்றவர்களையெல் லாம் ஒன்று சேர்க்கவேண்டும். மத மாற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று நினைத்து, விசுவ இந்து பரிஷத் அமைப்பை உருவாக்கினார்கள்.
அதற்குப் பிறகு தொழிலாளர்களை எல்லாம் ஒன்று சேர்க்கவேண்டும் என்று சொல்லி, பாரதீய மஸ்தூர் சங் - பிஎம்எஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
இப்படியாக இன்னும் சில அமைப்புகளை உருவாக் கினார்கள். சமஸ்கிருத பாரதி, வித்யா பாரதி, சிஷு பந்தன் என்று நிறைய அமைப்புகளை ஏற்படுத்தினார்கள்.
நம்முடைய அமைப்புகள் ஒவ்வொன்றையும் நீங்கள் பலப்படுத்தவேண்டும்!
எதற்காக இதனை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன் என்று சொன்னால், ஆர்.எஸ்.எசைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு மரத்தினுடைய வேர் எப்படி ஆணி வேர், சல்லி வேர் என்று பலமாக இருக்கின்றவோ - அதுபோல நம்முடைய அமைப்புகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையில் நீங்கள் பலப்படுத்தும் பணிகளை செய்தீர்கள் என்றால், அந்தப் பணி நிறைவாக இருக்கும்.
பெரியாருடைய தத்துவங்கள், பெரியாருடைய கொள் கைகள், பெரியாருடைய லட்சியங்கள், பெரியாருடைய வாழ்நாள் பணிகள், பெரியாருடைய இலக்குகள் என்று வரக்கூடிய அளவிற்கு வரும்பொழுது, அந்த வாய்ப்பு களை நாம் நிலைநாட்டி, உலகளாவிய நிலைக்குச் செல்லவேண்டும்.
பிரச்சாரம் என்பது மிகவும் முக்கியம்!
நிச்சயமாக, நம்முடைய இந்தக் காலகட்டம்தான் மிகவும் முக்கியமானது. நான் பல கூட்டங்களில் அடிக்கடி சொல்வதையே இங்கேயும் நினைவூட்டுகிறேன். கொள் கைகளை உருவாக்கியவர்களைவிட, யார் மிகவும் முக்கியம் என்றால், கொள்கையை உருவாக்கியவர்கள் கொடுத்துவிடுகிறார்கள் - கஷ்டப்படுகிறார்கள், எதிர் நீச்சல் அடிக்கிறார்கள் - எல்லாவற்றையும் செய்து அதை நிலைநாட்டுகிறார்கள். ஆனால், அந்தக் கொள்கைகள் பரவவேண்டும். அப்படி பரவுவதுதானே மிக முக்கியம். ஒரு பொருளை ஒருவர் கண்டுபிடித்தால், அந்தப் பொருள் மிகப்பெரிய அளவிற்கு மக்களுக்குப் பயன்பட்டால்தானே நல்லது. ஆனால், அந்தப் பொருளை மார்க்கெட்டிங் இல்லாமல் மக்களுக்குத் தெரியப்படுத்த முடியாதல்லவா! மார்க்கெட்டிங் செய்வது மிகவும் முக்கியம்.
கிறித்துவ மதத்தை எடுத்துக்கொண்டீர்களேயானால், அப்போசல்ஸ் என்று சொல்லக்கூடியவர்கள் இருப் பார்கள். அதேமாதிரி நபிகள் நாயகம். என்னடா, மத உதாரணம் சொல்கிறாரே என்று நினைக்காதீர்கள். ஏனென்றால், அவ்வளவு ஆழமாக அவர்கள் அதை செய்து வைத்திருக்கிறார்கள். அது மனதில் ஊடுருவுகிற அளவிற்கு.
அதனால், நாம் என்ன செய்யவேண்டும் என்றால், மத நம்பிக்கைக்காரர்களின் பிரேமை அப்படியே எடுத்துக் கொண்டு, அதனுள் நம்முடைய சரக்கை வைத்தீர் களேயானால், மிகவும் சுலபமாக இருக்கும்.
ஒரு சிறிய உதாரணத்தை சொல்கிறேன் உங்களுக்கு. திருவிழாக் காலம் என்று கோடைகாலத்தைத்தான் தேர்ந் தெடுத்து இருக்கிறார்கள். ஏனென்றால், கோடை காலத் தில்தான் விடுமுறைக்காக ஊருக்கு வருவார்கள். கோடை காலத்தில்தான் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். வெளியூரில் உள்ள அனைவரும் சொந்த ஊருக்கு திருவிழாவிற்கு வருவார்கள். பெருமளவு கூட்டம் சேர்கிறது.
(தொடரும்)
- விடுதலை நாளேடு,7.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக