சனி, 5 செப்டம்பர், 2015

நடைபாதைக் கோயில்களை இடித்துத்தள்ள, தமிழக அரசின் உத்தரவு.


அய்யாவின் அடிச்சுவட்டில் ... 136

பகலவன் பாருக்கே சொந்தம்
அதன்பிறகு, நடைபாதைக் கோயில்களை இடித்துத்தள்ள, தமிழக அரசின் உத்தரவு. அன்றே விடுதலையில் வெளியிட்டோம். அரசு ஆணையானது, நமக்கு எல்லோருக்கும் பயன்படும் என்பதால் இங்கே அதன் சுருக்கத்தைத் தருகிறேன்.
தமிழ்நாடு அரசு
கிராம வளர்ச்சி, உள்ளாட்சித் துறை
ஜி.ஓ.எம்.எஸ். எண் 1052; 28 மே 1973
உத்தரவு:
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சாலைகளில் அங்கீகாரமின்றி கட்டப்படும் கோயில்களைத் தடுப்பது குறித்து, கடந்த சில காலங்களாகவே அரசு பரிசீலித்து வந்துள்ளது. பொதுவாக சாலை ஓரங்களில் அமைக்கப்படும் கோயில்கள் உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெறாமலே அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த கோயில்கள் ஒரே இரவில் எழுப்பப்பட்டு விடுவதால் கட்டப்படும் நிலையிலேயே அதை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.
1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகரசபைகள் சட்டம், 1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டப்படி, பொதுமக்கள் வழிபாட்டுக்காகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு கீழ்க்கண்ட விதிகள் இன்னும் அமுலில் இருந்து கொண்டிருக்கின்றன.
1920ஆம் ஆண்டு தமிழ்நாடு, மாவட்ட நகரசபைகளின் சட்டம் 191வது பிரிவும், 1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டம் 230வது பிரிவும், இந்த கட்டிடங்களை முறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை அரசுக்கு வழங்குகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகரசபைகளின் 1920ஆம் ஆண்டு சட்டம், கட்டிட விதிகள் பிரிவு 6(4)ன்படி மாவட்ட ஆட்சித்தலைவரின் முன் அனுமதியின்றி, மத சம்பந்தப்பட்டவைகளுக்கோ, பொதுவழிபாட்டுக்கோ, கட்டிடங்கள் கட்டுவதற்கு எந்த இடத்தையும் பயன்படுத்தக் கூடாது. அப்படிக் கட்டுவதனால் பொதுமக்கள் அமைதிக்கோ, சட்ட ஒழுங்கிற்கோ ஆபத்து வரும் என்ற நோக்கத்தோடு அனுமதியளிக்க மறுத்தால், மாவட்ட ஆட்சித்தலைவரின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசுக்கு அப்பீல் செய்யலாம். அரசு சரி என்று உணர்ந்தால் அனுமதி கொடுக்கலாம்.
1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி விதிகளின்படி:--_
(1) (IV): பொதுமக்கள் வழிபாட்டுக்காக கட்டிடம் கட்டப் பட்டால், அதனால் பொது அமைதிக்கு பாதகமில்லை என்று போலீஸ் கமிஷனரிடமிருந்து சர்டிபிகேட் பெற்றாக வேண்டும். விண்ணப்பம் மறுக்கப்பட்டால் அரசுக்கு விண்ணப் பிக்கலாம். அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.
நகரசபை இடத் திலோ, மாநகராட்சி இடத்திலோ இது போன்ற கட்டிடங் களுக்கு, அரசாங்க நகரசபை நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்ற அடிப்படையில் நிராகரிக்க முடியும்.
அரசுக்கோ, நகரசபைகளுக்கோ சொந்தமான இடங்களில், பொதுநோக்கத்துக்காக சாலை ஓரங்களில் கட்டப்பட உத்தேசித்திருக்கும் எந்த கட்டிடத்திற்கும் அனுமதி மறுக்கலாம். சாலை ஓரங்களில் உள்ள கோயில்களை இந்த முறையில் தடுக்கலாம்.
இதன் பிறகு, 7.10.1978இல் சென்னை தியாகராயர் நகர் பெரியார் நினைவு திடலில், திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபாதை கோயில்களை அகற்றக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் எஸ்.பி. தெட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், நான் மற்றும் ஜனசக்தி ஆசிரியர் தா. பாண்டியன், மேயர் வேலூர் நாராயணன், குணசீலன், சைதை எம்.பி. பாலு மற்றும் பார்வதி கணேசன், திருவண்ணாமலை கண்ணன் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள். ஏராளமான பொதுமக்கள் கழக தோழியர்கள் மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபாதைக் கோயில்களை அகற்றக்கோரி நடைபெற்ற கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று 1973ஆம் ஆண்டு, மே மாதம் 28ஆம் தேதியே தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆணை எண்_1052. இவ்வளவு தெளிவாக அரசு ஆணை இருக்கும்பொழுது நடைபாதைக் கோயில்களை அகற்றுவதில் என்ன தவறு? ஏன் தயக்கம்? கோயிலையும் பக்தியையும் காப்பாற்றினால்தான், தங்களுடைய ஆதிக்கம் கெட்டியாக இருக்க முடியும் என்பதில் பார்ப்பனர்கள் அக்கறையுடன் இருக்கிறார்கள்.
புதுப்புதுக் கோயில்களை எப்படியும் உண்டாக்குவதிலே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமே _ இதே, பகுதியிலே பார்ப்பனர்கள் சேர்ந்துகொண்டு திடீர்ப் பிள்ளையாரை உண்டாக்கவில்லையா?
அது எப்படி உண்டானது? யார் அதற்கெல்லாம் காரணம் என்பதெல்லாம் சந்தி சிரித்ததே! பார்ப்பனர்க்கு எப்பொழுதும் பின்புத்திதான். ஒன்றைக் கொடுத்து ஒன்பது வாங்கிக் கொள்வது அவர்கள் வாடிக்கை. அவர்கள் நம்மை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் நம் கொள்கைக்கு நல்ல அளவு விளம்பரமாகவே முடிந்திருக்கின்றன. நாம் மாநாடுகள் நடத்தினால் அவசரப்பட்டு சுவரொட்டிகள் அடிக்க அய்யா அவர்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழா முடிந்த சில நாட்களில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்கள் விடுதலை அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார். அப்போது அவர் சொன்னார், இப்பொழுது பெரிய பிரச்சினையாகி உள்ள இந்த நடைபாதைக் கோயில்கள் பற்றி நான், தீசிஸ் (Thesis)  எழுதலாம் என்று இருக்கிறேன். இவ்விஷயத்தில் யார் யாரை சந்தித்தால் விவரம் கிடைக்கும் என்று கேட்டார். நானும் அதற்கான பட்டியலை அவரிடம் கொடுத்திருக்கிறேன். பார்ப்பனர்கள் எழுத எழுத நிலைமை எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா? நீதிபதி மோகன் பேசினார், பேசினார் என்று எழுதி எழுதி விஷயம் நல்ல அளவு விளம்பரமாகிவிட்டதே!
தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டுக்கேகூட பார்ப்பனர்கள்தானே நல்ல அளவு விளம்பரம் கொடுத்தார்கள். சட்டசபையில் ஒத்திவைப்புத் தீர்மானம், கறுப்புக்கொடி காட்டியது என்ற வகையிலே நம் மாநாடு நல்ல அளவுக்கு விளம்பரம் ஆகிவிட்டது என்று அன்று கூறினார்கள். இவ்வாறு பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டி விளக்கி உரையாற்றி என்னுரையை நிறைவு செய்தேன்.
கூட்டத்தில் ஜனசக்தி ஆசிரியர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் பேசும்போது, நடைபாதைக் கோயில்களை அகற்றக்கோரி ஒரு பொதுக்கூட்டத்தை நாம் இங்கு நடத்த வேண்டி உள்ளது. இப்படி ஒரு காரணத்திற்காகப் பொதுக்கூட்டம் இங்குதான் நடக்கும், அவ்வளவு விசித்திரமான நாடு.
நடைபாதைக் கோயில்கள் என்று சொல்லுவதே அசிங்கம் _ ஆபாசம் இல்லையா? தங்களுடைய கடவுள்களை நடைபாதைக் கடவுள்கள் என்று சொல்லும் அளவுக்குப் பக்தர்கள் விட்டு வைக்கலாமா? நாங்கள் எல்லாம் உயிரோடு இருக்கும்பொழுது எங்கள் கடவுள்கள் வக்கின்றி நடைபாதையிலே குடியிருக்க அனுமதிக்க மாட்டோம் என்று பக்தர்கள் கூற வேண்டாமா? இப்படி ஒரு இழிபெயர் தங்கள் கடவுள்களுக்கு ஏற்பட்டதற்காகப் பக்தர்கள் வெட்கப்பட வேண்டும். பக்தர்கள் தங்கள் கடவுள்களை மதிக்கிறார்கள் என்றால், நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்தி ஏர்கண்டிஷன் அறைக்குள் கொண்டுபோய் வைத்துக் கொள்ளட்டுமே! என்று குறிப்பிட்டார்.
********
கொழும்புவில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள என்னை அழைக்கப்பெற்று அதில் நான் கலந்துகொண்டேன், விழாவானது.
கொழும்பு, பம்பலப்பட்டி சரஸ்வதி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த டாக்டர் கோவூர் அரங்கில் 24.9.1978 மாலையில் தந்தை பெரியாருக்கு, நூற்றாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனது முதல் பயணமும் (இன்றுவரை) இலங்கைக்குச் சென்ற இறுதிப் பயணமும் இதுதான்! முன்னதாகவே விமானம் மூலமாக கொழும்பு விமானநிலையம் வந்தடைந்த என்னை பெரியார் நூற்றாண்டு விழா குழுவினராகிய கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்களான தோழர்கள் நவசோதி எம்.ஏ., சந்திரசேகரன் பி.எஸ்.சி., எஸ்.பி. பாண்டியன், காசிநாதன், கவிஞர் சிவராசன், கம்பளைதாசன் மற்றும் தோழர்கள் வேலணை வீரசிங்கம், அழகுராசா, தியாகராசா உள்ளிட்ட தோழர்களும் மன்ற அமைப்பாளர் ப. சந்திரசேகரன் பி.எஸ்.சி., அவர்களும் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
மாலையில், இலங்கையின் பிரபல தினசரி இதழான வீரகேசரி நிருபர் பேட்டி கண்டார். திராவிடர் கழக பகுத்தறிவு மன்றத்தின் பொறுப்பாளரும் சங்கம் ஏட்டின் ஆசிரியருமான தோழர் மா.செ. அருள் என்னுடன் வந்தார். இலங்கை திராவிடர் கழகத்தலைவர் ஆ.பெ. முனுசாமி அவர்களும், ஆரம்ப கால இயக்க தோழர் இளஞ்செழியனும், அ.தி.மு.க இலங்கை அமைப்பாளர் தோழர் வித்தகன் ஆகியோரும் என்னைச் சந்தித்தனர்.
முதல் நாள் இரவு, திராவிடர் கழகத்தை இலங்கையில் வளர்த்து நிலைநிறுத்திய பெரியார் பெருந்தொண்டர் கு.யா.திராவிடக்கழல் அவர்கள் பல மாதங்களுக்கு முன் மறைந்தார். அவர் இல்லம் தேடிச்சென்று, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி திரும்பினோம். (வசதியற்ற எளிய சூழ்நிலையில் வாழ்ந்த பெருமகன்) பின்பு, கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் சார்பில் மிகச் சிறப்பாக தயாரித்து அச்சிட்ட பெரியார் நூற்றாண்டு விழா மலரை நான் வெளியிட்டு முதல் பிரதியை சுயமரியாதை வீராங்கனை ஞான செபஸ்தியான் (தற்போது இந்த 94 வயது இளைஞர், நமது பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர்), சீதக்காதி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். அடுத்தது, இந்தியப் பேரரசு வெளியிட்ட நூற்றாண்டு விழா அஞ்சல் தலை, மற்றும் குறிப்புகளை நான் வழங்க, மன்றத்தின் அமைப்பாளர் திரு.சந்திரசேகரன், வீரசிங்கம், அழகுராசா உள்ளிட்டத் தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.
பிறகு, விழாவில் உரையாற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள் தொண்டினை நினைவு கூர்ந்து நன்றிப் பெருக்குடன் அய்யாவுக்கு நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்புடன் நடத்தும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி, பாராட்டுத் தெரிவித்து, 1932ஆம் ஆண்டில் அக்டோபர் 17ஆம் தேதி பெரியார் அவர்கள் இலங்கையில் ஆற்றிய பேருரை குறித்தும், அய்யா அவர்கள் எப்படி ஒரு பகுத்தறிவுப் பகலவன் என்பதை விளக்கியும், பகலவன் பாருக்கே சொந்தம் ஒரு ஊருக்கல்ல, நாட்டுக்கு மட்டுமல்ல என்பதையும் பல ஆதாரங்களுடன் விளக்கி உரையாற்றினேன். அய்யா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறவிருப்பது பற்றி அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறு தொழில் அமைச்சரும் பிரபல தொழிற்சங்கத் தலைவருமான திரு. எஸ். கருணாகரத் தொண்டைமான் அவர்களை நான் சந்தித்து உரையாற்றினேன். அவர்களுக்கு அய்யா அஞ்சல் தலை, அய்யா வாழ்க்கை வரலாறு, இலங்கை பேருரை, வைக்கம் போராட்டம் பற்றிய நூல்களை வழங்கினேன்.
யாழ்ப்பாணம் பகுதிகளில் ஜாதிக்கொடுமைகள் உள்ளது. அங்கு உங்கள் பிரச்சாரம் மிகவும் அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். பிறகு நான் பத்திரிகையாளர்களுடன் கொழும்புவில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஒன்றான ஹாலிடே இன் (Holiday Inn) என்ற ஓட்டலின் முதல் மாடியில் இலங்கை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பிரபல வணிக வியாபாரியான வேலணை வீரசிங்கம் செய்த இந்த ஏற்பாட்டில், இலங்கையின் பிரபல நாளேடுகளான வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஈழநாடு, சுதந்திரன், சிந்தாமணி, கலாவல்லி ஆகிய நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அய்யா விழாவன்று, சுயமரியாதை காப்போம், ஜாதியைத் தகர்ப்போம் என மக்கள் கடல் உறுதி பூண்டனர். இந்நிகழ்ச்சியில் எனக்கு ஈடு இணையற்ற வரவேற்பையும் அனைத்து தரப்பும் உள்ள தமிழ்ப் பெருங்குடியினர் நல்கினர். பெருநகரில் நடந்த அந்த நூற்றாண்டு விழாவில் மக்கள் கடல் ஆர்வப் பெருக்குடன் பங்கேற்றது நினைவில் நீங்கா வடுவாக உள்ளது என்பதனை நினைவுப்படுத்துகிறேன்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக