மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும் நிலைமையினை உருவாக்க உறுதி பூணுவோம்
விஜயவாடா உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் சூளுரை
விஜயவாடா, ஜன.5 ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்றுள்ளார். நாத்திக மய்யத்தின் 80ஆம் ஆண்டு நிறைவில் நடத்தப்படும் 11ஆவது உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் இன்று (5.1.2020) பிற்பகலில் சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதற்கு முன்னர், நாத்திக மய்யத்தின் பொறுப்பாளர் டாக்டர் சமரம் கோரா புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி நூலகத்திற்கு தமிழர் தலைவரை அழைத்துச் சென்று, அதனை மேலும் செழுமைப்படுத்த தமிழர் தலைவரின் ஆலோ சனைகளை கேட்டறிந்தார். தந்தை பெரியாரின் புத்தகங்களை கணினி மூலம் தொடர்பு கொண்டு படித்திட உரிய அனுமதி தர வேண்டியும் தமிழர் தலைவரிடம் கேட்டார். தமிழர் தலைவரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலகமும், விஜயவாடா நாத்திக மய்யமும் இணைந்து உலகம் முழுவதும் நாத்திக மனிதநேய கருத்துகள் பரவிட, பயன்பட செயல்பட வேண்டும் என்று தமிழர் தலைவர் தமது விருப்பத்தினையும் தெரிவித்தார்.
நாத்திக மய்யத்தில் காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்
முற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சிறிய தொரு உரையாற்றிட அழைக்கப்பட்டார். அப் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்ட தாவது: இந்த நாட்டில் ஜாதி மனிதர்களை பிளவு படுத்துகிறது. மதங்கள் மனிதரை வேறுபடுத்து கின்றன. உலகளவில் தீவிரவாதம் அதிகரித்து மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருக்கிறது. இந் நிலைக்கு ஒரே தீர்வு மனிதநேயத்தை வலியுறுத்தும் நாத்திகமே, சுயமரியாதை பகுத்தறிவுக் கொள்கைகளே!
தந்தை பெரியார் அரங்கத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழக இலக்கியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலக மாந்தரையே ஒரே குலமாக கருதிய போக்கு நிலவியது. அப்படிப்பட்ட மனிதநேயம் சார்ந்த மனப்பான்மை, அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்கிட இந்த உலக நாத்திகர் மாநாடு வலு சேர்க்கும்; நாம் அனைவரும் வலிமை சேர்ப்போம். நாத்திகக் கருத்துகள் தழைத்தோங்கும் பொழுது மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும். அத்தகைய நிலை மையினை உருவாக்க உறுதி பூணுவோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நாத்திகத்தின் பல்வேறு கூறுகள், கடைப் பிடிக்கப்பட தேவையான அணுகுமுறைகள் பற்றிய தலைப்புகளில் உரை வீச்சு ஆற்றப்பட்டு வருகிறது.
உலக நாத்திக மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு விஜயவாடா ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு...
பஞ்சாபிலிருந்து மாநாட்டிற்கு வருகைதந்த நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருடன்...
கோரா உலக நாத்திக ஆராய்ச்சி நூலகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்...
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெரியார் நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்
- விடுதலை நாளேடு,5.1.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக