வெள்ளி, 10 ஜனவரி, 2020

மலேசியா - பினாங்கு மாநிலம், பட்டர் வொர்த் நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

பினாங்கு, ஜன. 5- மலேசியா திராவிடர் கழகத்தின் சார்பில் மலேசியா - பினாங்கு மாநிலம், பட்டர்வொர்த் நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் குடும்ப விழாவாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

25.12.2019 அன்று பட்டர்வொர்த் நகர் - ஜாலான் பாகான் லூவாரில் உள்ள சிறீ ஆனந்த பவன் உணவக அரங்கில் மாலை 7 மணி அளவில் விழா தொடங்கி நடைபெற்றது. 1929ஆம் ஆண்டில் முதன்முதலாக தந்தை பெரியார் வெளிநாட்டுப் பயணமாக வந்த நாடு அன்றைய மலாக்கா நாடு. அன்னை நாகம் மையார் மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்க ளுடன் கப்பலில் பயணம் செய்து வந்து இறங்கிய இடம் பினாங்கு தீவு. அதையொட்டி அமைந்துள்ள பட்டர்வொர்த் நகரில் தந்தை பெரியார் சுயமரியாதை கொள்கைப் பிரச்சாரம் செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர், தந்தை பெரியாரின் 40ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பட்டர்வொர்த் நகரத்தில் 2013ஆம் ஆண்டில் பங்கேற்று சிறப்புரையாற்றியுள் ளார்.

நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், பினாங்கு மாநிலத் தலைவருமான ச.த.அண்ணாமலை தலைமை வகித் தார். வந்திருந்தோரை வரவேற்று பினாங்கு மாநிலச் செயலாளர் சோ.மருதமுத்து உரையாற்றினார். தேசிய பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம் அறிமுக உரையாற்றினார். கூட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்றிருந்த திராவிடர் கழகத்தின் பொரு ளாளர் வீ.குமரேசன் சிறப்புரையாற்றினார்.

பினாங்கு மாநில அரசால் விருது வழங்கப்பட்டோருக்குப் பாராட்டு

தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பொதுவாழ்க்கையில் சிறப்பாக பணியாற்றிய மலேசியா திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மலேசியா திராவிடர் கழக பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் செ.குணசேகரன் (PKT, PJK) அவர்களுக்கு DJN (Darjah Johan Negari) விருதி னையும், மலேசியத் திராவிடர் கழகத்தின் பெர்கான் மாத்தாய் பாவ் கிளைத் தலைவர் த.இரவி ஆகி அவர்களுக்கு PJM (Pingat Jasa Masyarakat) விருதினை யும் பினாங்கு மாநில அரசு வழங்கியிருக்கிறது, விருது வழங்கப்பட்ட கவிஞர் செ.குணாளன் அவர்களுக்கு தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ குமரேசன் அவர்களும் மற்றும் த.இரவி அவர்களுக்கு மலேசியா திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் அவர்களும் சால்வை, சந்தன மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். விருது பெற்றோர் பற்றிய குறிப்புகளை சோ.மருத முத்து அவர்கள் எடுத்துரைத்தார்.

திராவிடர் கழகப் பொருளாளரின் உரை

நினைவு நாள் நிகழ்ச்சியில் திராவிடர் கழக பொரு ளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:- மனிதர்களில் உயர்வு, தாழ்வு என்பது இல்லை என வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்க ளின் உயர்விற்கு பாடுபட்ட மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார். மனித சமத்துவத்திற்கு எதிராக எவை எல்லாம் தடைகளாக இருக்கின்றன என்பதை தயவு தாட்சண்யமின்றி உடைத்து எறிந்தவர் தந்தை பெரியார். ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களது சமூக நிலைக்கு - சமூக இழிவுக்கு எவை காரணம் என்பதை தனது பிரச்சாரத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எந்த சாஸ்திர புராணங்கள் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்ததோ, உடல் உழைப்பில் தான் சாகும்வரை அந்த மக்கள் வாழ வேண்டும் என வலியுறுத்தியதோ அவைகளையெல்லாம் தூக்கி குப்பையில் போடச் சொன்னார். பிரச்சாரத்தின் வலிமை, கடுமை, அதிகமாக இருந்தாலும், தனது வழிமுறையில் வன்முறை என்பது கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் பெரியார் பரப்பிய கருத் துக்கள் அவர் மறைந்தும் இன்றும் நீடித்து நிலைத்து இருக்கிறது. வற்புறுத்தலால் சொல்லப்படும் கருத்துக் கள் மக்கள் மனங்களில் தொடர்ந்து நிலைபெற முடியாது. மக்கள் மனங்களில் மனிதரிடம் இயல்பாக இருக்க வேண்டிய சுயமரியாதை, பகுத்தறிவு பண்பு களை தட்டியெழுப்பி முழுமையாக கடைப்பிடிக்கச் செய்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை உயர்த்திய புரட்சியாளர் தந்தை பெரியார். இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள எவரும் தந்தை பெரியாரை நேரில் பார்த்திருக்க முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருந்தாலும் பெரியாரின் பேச்சினை நேரில் கேட்டிருக்க முடியாது. பெரியாரது கருத்தின் வலிமை என்பது இன்று அவரை பார்த்திராத மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தெரியவரும். தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் மலேசிய நாட்டுக்கு வாழ்வாதாரம் தேடிவந்த தமிழர்களிடம் ஒரு குறிப் பிட்ட மாற்றத்தை, அவர்களது வாழ்நிலை உயர்விற் கான மாற்றத்தை தந்தை பெரியாரின் கொள்கைகள் உருவாக்கியுள்ளன.

மலேசிய நாட்டுக்கு இரண்டு முறைதான் தந்தை பெரியார் வருகை தந்துள்ளார். இங்கிருந்த மக்களை சந்தித்து உரையாடினார். அவரது மனிதநேயக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட மக்கள் அமைப்பு ரீதியாக தங்களை ஒருங்கிணைத்து செயல்படத் தொடங்கினார்கள். அப்படி உருவான அமைப்புதான் மலேசியத் திராவிடர் கழகம். அதன் சார்பாக தந்தை பெரியாரின் 46ஆம் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. வெறும் நினைவு நாளை துக்கம் கருதி நடத்தப்படும் நிகழ்வல்ல இது. அடக்கப்பட்ட மக்கள் எழுச்சி கொண்டு முன்னேறியதைக் கொண்டாடும் நிகழ்வு பெரியாரின் நினைவு நாள். சமூக இழிவுக்கு ஆளான தமிழன் எழுச்சி பெற்று, சமூக, பொருளாதார அரசியல் என பலதுறைகளிலும் சாதனை புரிந்து மலேசிய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக்கம் காட்டியதை கொண்டாடும் நாள் இது. பெரியாரது கொள்கை வழி நடப்பவர்கள் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க மாட்டார்கள். தொடர்ந்து வெற்றியடைவார்கள். பல்வேறு சோதனைகளை தாண்டி சாதனை புரிவார்கள். அப்படி சாதனை புரிந்த மலேசிய திராவிடர் கழகத்தின் பொறுப்பா ளர்கள் இருவர் மலேசியா - பினாங்கு மாநில அரசால் பாராட்டுக்கு உரியவர்களாக அடையாளம் காணப் பட்டு விருது அளிக்கப்பட்டுள்ளனர். பொது வாழ்க் கையில் பொது சேவையில் குறிப்பிடத்தக்க பணியாற் றியதற்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. பெரியாரின் கொள்கையாளர்கள் இறுதியில் பாராட் டப்படுபவர்களாக, சமுதாயத்திற்கு பயன்தரக் கூடிய வர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளான சுயமரி யாதை உணர்வுடன் மனிதன் வாழ வேண்டும்; வாழ் வில் பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினை கடைப் பிடித்திட வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட மக்க ளுக்காக மட்டுமே சொல்லப்பட்டதல்ல; குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியது அல்ல; உண்மையில் தந்தை பெரியாரின் கொள்கைகள் உலகம் முழுமையும் உள்ள மக்களுக்கு பொருந்தக் கூடியவை; பயன்தரக்கூடியவை. பெரியாரது கொள் கைகள் ஓர் உலகத் தத்துவம் சார்ந்தவை. உலக மக் களை மனிதர்களாக வாழ செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அந்த வகையில் தந்தை பெரியார் ஒரு உலகத் தலைவர். தந்தை பெரியார் கொள்கைகள் உலகமயமாகி வரும் வேளையில் இங்குள்ள மக்கள், தமது உயர்வுக்குக் காரணமாக இருக்கும் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளை இந்த தலைமுறையைத் தாண்டி அடுத்து வரும் தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, உணர்த்தி அவர்களையும் வாழ்நிலையில் உரிய மரியாதையுடன் வாழச் செய்திட தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுதி பூணு வோம். என்றும் பெரியார் வெல்வார்; பெரியாரின் கொள்கை மனிதனை வளப்படுத்தும்; மானுடத்தை  தழைத்தோங்க செய்திடும்!

- இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டார்.

மறைந்த பொறுப்பாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

மலேசிய திராவிடர் கழகத்தின் பினாங்கு மாநிலப் பொருளாளர் சுப்பிரமணியம் செப்டம்பர் 15, 2019 அன்று மறைந்தார். கழகத்தின் சார்பாக பெறப்பட்ட நிதி உதவியினை மலேசியா திராவிடர் கழகத்தின் தேசியத்தலைவர் ச.த.அண்ணாமலை மறைந்த சுப்பிரமணியம் அவர்களது துணைவியார் பத்மினி அவர்களிடம் வழங்கினார்.

சமூக நல காவலன் விருது

பினாங்கு மாநிலத்தின் கொடை நெஞ்சரும், சமூகவியலாளருமான டாக்டர் ஹாஜி ஹபீப் ரஹ்மான் அவர்களின் எழுத்துப்பணி மற்றும் அவர் ஆற்றிவரும் சமூகப் பணிக்காக தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் சமூக நல காவலன் விருது வழங்கப்பட்டது.

விழாவில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொருளாளர் கு.கிருஷ்ணன், தேசிய செயலவை கணக்காயர் ரவீந்திரன், தேசிய துணைப் பொதுச் செயலாளர் நாகேந்திரன் மற்றும் மாநில பொறுப் பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மகளிர் அணி தோழர்கள் இரா.அமுதவல்லி, பொன்.பரமேஸ்வரி, த.முருகம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிறைவாக பினாங்கு மாநில திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் பெ.இராஜேந்திரன் நன்றி கூறினார்.

மாநிலத்தில் சொந்தமாக கட்டிடம், அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் கழகம் பினாங்கு மாநில திராவிடர் கழகம். கழகம் பினாங்கு மாநிலத்தில் வலுவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஆண், பெண், குழந்தைகள் எனப்பலரும் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சிக்கு வருகை தந்து தந்தை பெரியாரின் கொள்கையை பிரச்சாரம் செய் திடும் குடும்ப விழாவாக நடைபெற்றது சிறப்புக்கு உரியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.

- விடுதலை நாளேடு 5 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக