வியாழன், 2 ஜனவரி, 2020

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா - 6

- ஒரு தொகுப்பு -

23.12.2019 அன்றைய தொடர்ச்சி...

கொலம்பியா பல்கலைக்கழகம்

(Columbia University)

400 ஆண்டு கால அமெரிக்க அய்க்கிய நாடுகளின் வரலாற்றில் 250 ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்க உயர் கல்வி நிலையம் கொலம்பியா பல்கலைக் கழகமாகும். நியூயார்க் நகரம் முழுவதும் வானைத் தொடும் கட்டிடங்கள் (Skyscrapers) நிறைந்திருந்தாலும், பழமையான கொலம்பியா பல்கலைக் கழகத்தால் நியூயார்க் நகரத்திற்கு கூடுதல் சிறப்பு சேருகிறது.

இந்தியாவில் பரோடா மன்னரின் சமஸ்தான நிதி உதவியில் உயர்கல்வி கற்க அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வந்து சேர்ந்த இடம் கொலம்பியா பல்கலைக் கழகம். மும்பையில் B.A. பட்டப்படிப்பை முடித்திருந்த நிலையில் 1913-15 ஆண்டுகளில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொருளியியலில் M.A. பட்டமும், பின்னர் டாக்டர் பட்டமும் அண்ணல் அம்பேத்கர் பெற்ற இடம் கொலம்பியா பல்கலைக்கழகமாகும்.. பல்கலைக்கழக வாயில் சிறியதாக இருந்தாலும், உள்ளே சென்றதும் முதற் கட்டத்தில் உள்ள பிரம்மாண்டமான நூலகத்திலேயே கொலம்பியா பல்கலைக் கழக முழுமையின் வீச்சை தெரிந்து கொள்ள முடிந்தது. பழமையின் சிறப்பைக் கட்டியம் கூறும் வகையில் அமைந்த பரந்து விரிந்த வளாகம். மாணவர்கள் (இருபாலரும்) ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த விதமும், நாமும் இந்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்திருக்கக் கூடாதா? வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டதே! என்ற நினைப்பும் வந்தது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் அதன் மேனாள் மாணவரும், மானுடம் போற்றிய சட்ட மேதையுமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு மார்பளவு சிலை எழுப்பப்பட்டு இருந்தது. வளாகத்தை சுற்றிச் சுற்றிப் பார்த்த பொழுது - அந்திசாயும் நேரமாகிவிட்டது. பல்கலைக்கழகத்தை விட்டு அகல முடியாமல், இரவு தொடங்குவதற்கு முன்னர் மற்றொரு முக்கிய நினைவுப் பூங்காவை பார்த்திட வேண்டும் என பல்கலைக்கழக வளாகத்தை விட்டு நீங்கினோம்.

ஸ்ட்ராபெர்ரி தோட்டம்

(Strawberry Fields)

நியூயார்க் மத்திய பூங்காவில் உள்ள ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் இசைப் பாடகர் ஜான் லெனன்

நினைவாக அமைக்கப்பட்ட 'Imagine' மொசைக் தளத்தில் தோழர்கள்.

நியூயார்க் நகரத்தின் மய்யப் பகுதியின் மத்தியப் பூங்காவில் உள்ளது ஸ்ட்ராபெர்ரி தோட்டம்.  எத்தனையோ தேசியப் பூங்காக்கள் அமெரிக்காவில் இருந்த போதிலும் இந்தப் பூங்காவிற்கு மட்டும் ஒரு கூடுதல் சிறப்பு உள்ளது. உலகப் புகழ் வாய்ந்த பீட்டில்ஸ்  (Beatles) பாடகர் எனப் பெயர் பெற்ற ஜான் லெனன் (John Lenon)  இந்தப் பூங்காவிற்கு அருகில் உள்ள டகோட்டா பகுதியில் தான் வசித்து வந்தார். காலை நேரத்தில் இந்த மத்தியப் பூங்கா விற்கு நடைபயிற்சிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டி ருந்தாராம்.

கிறிஸ்தவ மத நம்பிக்கையுடன் ஏசுகிறிஸ்து மீது மதிப்பு வைத்து வழிபடும் மக்களைக் கொண்ட மேலைநாட்டில், தனது இசைப் பாடல்கள் மூலம் 'ஏசு கிறிஸ்துவை விட பிரபலமானவர்' என ஜான் லெனன் போற்றப்பட்டார். இதனை சகித்துக் கொள்ளாத மதவெறியன் ஒருவன் 1980 டிசம்பர் 8-ஆவது ஜான் லெனன் நடைப் பயிற்சிக்கு சென்ற பொழுது அவரை சுட்டுக் கொன்றுவிட்டான். இசைப் பாடகர் நினைவாக நியூயார்க் மக்கள் 1985 -ஆம் ஆண்டில் மத்தியப் பூங்காவில் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தை (Strawberry Fields) அமைத்து அர்ப்பணித்தனர்.

பாடகர் லெனன் பாடிய பிரபலமான பாடலான கற்பனை செய்வீர்!' (Imagine) நினைவாக 'Imagine Mosaic' எனும் ஒரு இடத்தை அமைத்துள்ளனர். அந்த இடத்தை மட்டும் பார்வையிட்டு, இரவு நேரமாகி விட்ட படியால் பூங்காவின் இதரப் பகுதிகளுக்குச் செல்லமுடிய வில்லை. மதவெறிக்குப் பலியான மாபெரும் இசைப் பாடகனின் நினைவாக அமைக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தை,  Imagine Mosaic தளத்தை பார்த்த நிறைவுடன் விடுதிக்கு திரும்பினோம். நியூயார்க் நகரத்தின் முக்கிய இடங்களை பார்த்ததுடன் அமெரிக்க சுற்றுலா நிறைவுபெற்றது.

விடுதியில் இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் செப்டம்பர்  28 ஆம் நாள் காலை சிற்றுண்டியை விடுதியிலேயே முடித்துக் கொண்டு, விடுதியை காலி செய்து விட்டு நியூயார்க் நகருக்கு நினைவுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் வாங்கக் கிளம்பினோம். அமெரிக்காவில் 'ஒரு டாலர் கடை' (One $ Shop) மிகவும் பிரசித்தி பெற்றது. நல்ல பொருட்கள் ஒரு டாலர் (இந்திய ரூபாயில் 70-75 வரை) விலைக்கு வாங்க லாம். பகல் முழுவதும் கடைகளைச் சுற்றிப் பார்த்து வீட்டுக்கும் உற வினர்களுக்கும், நண்பர் களுக்கும், பொருட்களை வாங்கி மாலை நேரத்தில் சென்னைக்கு திரும்பிட நியூயார்க் விமான நிலை யம் வந்து சேர்ந்தோம். வாங்கிய பொருட்களை முறையாக அடுக்கி - கூடுதல் எடை எந்தப் பெட்டியிலும் இல்லாத அளவிற்கு அடுக்கி வைத் துக் கொண்டு தாயகம் திரும்பிட விமான பயணத் திற்கு தயாரானோம்..

அமெரிக்க நாட்டில் இரண்டு நாள் மாநாடு, கிழக்குக் கடற்கரையை ஒட்டியுள்ள, அருகிலுள்ள வாஷிங்டன் D.C.  மேரிலாந்து, பெனிசில் வேனியா, நியூயார்க், மாசசூசெட்ஸ் ஆகிய மாநிலங்களிலுள்ள முக்கிய நகரங்களில் - முக்கிய இடங்களை சுற்றுலா சென்று பார்த்ததில் அமெரிக்காவைப் பற்றிக் கேள்விப்பட்டதை விட அதிகமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. விடுதலை வேட்கை, தனிமனித சுதந் திரம், அரசையும் மதத் தையும் பிரித்துப் பார்க்கும் மக்கள் என பாராட்டுதலுக்கு உரியவைகள் நிறைய இருந்தன. இருப்பினும் கருப்பர் இனத்தை அடக்கி ஆண்ட நிலைமை, அதனை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் மனப்போக்கு முரண்பாடாகத் தெரிந்தது. தனிமனித உணர்வுக்கு மதிப்பளித்தல், பிறர் விசயங்களில் தேவையற்ற தலையிடாத பண்பு, பெரும்பாலான நேரங்களில் மெதுவான குரலில் பேசும் பாணி, சாலை விதிகளை எந்தவித நிர்பந்தமுமின்றி இயல்பாகக் கடைப்பிடிக்கும் போக்கு, புதிய மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் புன்னகை புரிந்து மனித இயல்பைக் காட்டும் தன்மை என பல விசயங்கள் மனதில் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன. கல்வி கற்பதில், கல்வித் தரத்தில் பல மடங்கு முன்னேறியுள்ளனர். உயர்கல்வியில், வேலை வாய்ப்பில் உடன்பாட்டு செயல்முறை (Affirmative Action)  பாராட்டுக்குரியதாகும்; ஒடுக்கப்படும் நிலையில் உள்ள நம்நாட்டினர் புரிந்து கொள்ள வேண்டியதாகும்.

மிகப் பலருக்கு அமெரிக்கச் சுற்றுலா முதன்முறையாக இருந்தது. மிகச் சிலர் முன்னமே சென்று இருந்தாலும், சுற்றுலா செல்வது முதன்முறையே. எத்தனையோ பேர் வெளிநாட்டினர் அமெரிக்காவில் சுற்றுலா சென்றிருக்கலாம்.  ஆனால் சுயமரியாதைகாரர்கள் சென்ற அமெரிக்கச் சுற்றுலா மாறுபட்ட கண்ணோட்டத்துடன், மனிதநேயம் மதிக்கப்படுதல் பற்றிய புரிதலோடு இருந்தது. தனியாகச் சென்றிருந்தால் கூட இதில் கிடைத்த அனுபவம் பெற்றிருக்க முடியாது. சுற்றுலா செல்லுவது துணைத் திட்டமாக, மாநாட்டில் பங்கேற்பது முதன்மைத் திட்டம் என்ற அளவில் மனிதநேய சுயமரியாதை பன்னாட்டு மாநாடு ஏற்பாட்டாளர்களுக்குதான் சுற்றுலா சென்றதால் கிடைத்த அனுபவத்திற்கு நன்றி செலுத்த வேண்டும். மாநாடு, சுற்றுலா என வகைப்படுத்தி இரண்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வழிகாட்டிய தமிழர் தலைவருக்கு சுற்றுலா சென்ற சுயமரியாதைத் தோழர்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த பன்னாட்டு மாநாடு 2021-ல் நடைபெற உள்ளது. எங்கு நடைபெற உள்ளது என்பது முடிவு செய்யப்பட வேண்டும். அடுத்த மாநாட்டிலும் பங்கேற்று, சுற்றுலா செல்ல அணியமாக இருப்போம்.

வாழ்க பெரியார், வாழ்க பகுத்தறிவு, போற்றுக சுயமரியாதை மனிதநேயம்!

வீ. குமரேசன்

(நிறைவு)

- விடுதலை நாளேடு 28 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக