வெள்ளி, 10 ஜனவரி, 2020

விஜயவாடா - உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

மானுடத்தை ஒருங்கிணைக்கும் மனிதநேயம் போற்றுவோம்! மக்களை ஆதிக்கம் செலுத்தும் மதவாதத்தை வீழ்த்துவோம்!

விஜயவாடா - உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

விஜயவாடா ஜன.6 மானுடத்தை ஒருங்கிணைக்கும் மனிதநேயம் போற்றுவோம்; மக்களை ஆதிக்கம் செலுத்தும் மதவாதத்தை வீழ்த்துவோம் என்றார் விஜய வாடா உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யம் 80 ஆம் ஆண்டு விழாவினையும் உலக நாத் திகர் மாநாட்டையும் சிறப்பாக நடத்தியுள்ளது. ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்கள் நிறுவிய நாத்திகர் மய்யம் (1940-2020) கடந்த காலங்களில் பல்வேறு கட்டங்களில் உலக நாத்திகர் மாநாட்டை நடத்தியுள்ளது. தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகங்களின் ஏற்பாட்டில் திருச்சி மாநகரில் இரண்டு உலக நாத்திகர் மாநாடுகளை (ஜனவரி  7, 8 மற்றும் 9- 2011 மற்றும் ஜனவரி    5, 6 மற்றும் 7 - 2019) நாத்திகர் மய்யமும் இணைந்து நடத்தியுள்ளது. விஜய வாடாவில்  ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற 11 ஆம் உலக நாத்திகர் மாநாட்டில் சிறப்புப் பங்கேற்பாளர்களாக  பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union) முதன்மை செயலதிகாரி கேரி மெக்லேலண்ட் (2018 இல் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்றவர்) மற்றும் ஜெர்மனி சுதந்திர சிந்தனையாளர் சங்கத்தின் தலைவர் முனைவர்  வோல்கர் முல்லர் (தஞ்சையில் நடைபெற்ற தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்) விஜயவாடா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இரண்டு நாள் மாநாட்டின் நிறை வுரையினை திராவிடர் கழகத்தின் தலைவர், பகுத்தறி வாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆற்றி, மாநாட்டில் பங்கேற்ற அனைத்து மாநில பகுத்தறிவாளர் அமைப்பின் தோழர்களை, நாத்திகப் பெருமக்களை  எழுச்சி கொள்ளச் செய்தார்.

ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு எழுதிய  ‘Understanding Rationalism'  புத்தகத்தை மாநாட்டில் தமிழர் தலைவர் வெளியிட்டார்.

மாநாட்டில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு நாத்திகர் மய்யத்தின் டாக்டர் சமரம் சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினார். உடன் விகாஸ் கோரா உள்ளார்.

தமிழர் தலைவருடன் 80 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் விஜயவாடா உலக நாத்திகர் மய்யத்தின் பொறுப்பாளர்களான கோரா குடும்பத்தினர்

இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் நாத்திகப் பெருமக்கள் கருத்துரைகளை வழங்கினர். அமெரிக்க - மேரிலாந்து மாநிலத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா, பகுத் தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் அ.த.சண்முக சுந்தரம், நாத்திகம் பற்றிய தங்களது கட்டுரைகள் குறித்து உரையாற்றினர்.

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு மலரினை தமிழர் தலைவர் வெளியிட்டார்

80 ஆம் ஆண்டு விழா காணும் விஜயவாடா - நாத்தி கர் மய்யம் நடத்திட்ட 11 ஆம் உலக நாத்திகர் மாநாட்டு மலரினை தமிழர் தலைவர் வெளியிட, அதனை இங்கிலாந்திலிருந்து வருகை தந்த கேரி மெக்லேலண்ட், ஜெர்மனி நாட்டிலிருந்து வருகை தந்த முனைவர் வோல்கர் முல்லர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உலக நாத்திகர் மாநாட்டை சிறப்பாக நடத்திய முனைவர் விஜயம், டாக்டர் சமரம் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக சால்வை அணிவித்து  தமிழர் தலைவர் பாராட்டி, சிறப்புச் செய்தார்.

தமிழர் தலைவர் வெளியிட்ட

நாத்திகப் புத்தகம்

உலக நாத்திகர் மாநாட்டில் ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு எழுதிய ‘Understanding Rationalism' புத்தகத்தினை தமிழர் தலைவர் வெளியிட்டார். புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு இணையருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.

தமிழர் தலைவரின்

மாநாட்டு நிறைவு எழுச்சியுரை

ஜனவரி 5 ஆம் நாள் பிற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உலக நாத்திகர் மாநாட்டின் நிறைவுரையினை ஆற்றினார். தமிழர் தலைவரின் நிறைவுரை மாநாட்டிற்கு வருகை தந்தோருக்கு எழுச்சியுரையாக அமைந்தது.

தமது உரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டதாவது:

மதவெறிக்கு ஊக்கம் காட்டும் செயல்கள் அதி கரித்துவரும் நடப்புக் காலகட்டத்தில், விஜயவாடா நாத்திகர் மய்யம் உலக நாத்திகர் மாநாட்டை சரியானபடி நடத்துகிறது. மதவெறிப் பிரச்சாரத்தை மாய்த்து, மனித நேயக் கருத்துகள், மக்களது மனதில் தழைத்தோங்கிட வழி செய்திடும் வகையில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற்று வருகிறது. நாத்திகப் பிரச்சாரத்தைப் பொறுத்த அளவில், நாத்திக அறிஞர் கோரா நிறுவிய விஜயவாடா நாத்திகர் மய்யம் ஓர் எடுத்துக்காட்டு நாத்திக அமைப்பாக - நிறுவனமாக மக்கள் சேவை ஆற்றி வருகிறது. நாத்திக அறிஞர் கோரா, நாட்டின் தந்தை எனப் போற்றப்படும் காந்தியார் அவர்களின் சீடர் ஆவார். ஆனால், காந்தியார் கடவுள் நம்பிக்கை உள்ளவர். கடவுள் நம்பிக்கை மிகுந்த காந்தியாருக்கு நாத்திகக் கருத்துடைய கோரா சீடராக இருந்தது ஒரு வேறுபட்ட சிறப்பு. மக்கள் சமத்துவத்திற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட புரட்சியாளர் தந்தை பெரியாரும் கடவுள் மறுப்பினை உரிய அணுகுமுறையாகவே கடைப்பிடித்தார்.

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு மலரினை தமிழர் தலைவர் வெளியிட்டார்

தந்தை பெரியாரும், ஒரு காலத்தில் காந்தியாரின் சீடராகவே இருந்தார். மனிதரிடம் நிலவிவரும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு  அடிப்படையான மனித விரோத வருணாஸ்ரம கொள்கைகளை எதிர்த்தவர் தந்தை பெரியார். வருணாஸ்ரம  தர்மத்திற்கு ஆதரவு அளித் தவர் காந்தியார். காந்தியாரை விட்டு அமைப்பு ரீதியாக முழுமையாக பிரிவதற்கு முன்பு 1927 இல் பெங்களூரில் காந்தியாரைச் சந்திக்கிறார் தந்தை பெரியார். அவர்கள் பேச்சில் வருணாஸ்ரம தருமம்பற்றிய பேச்சு விவாதப் பொருளாக அமைந்தது. வருணாஸ்ரம தர்மத்தை உடனே கைவிட வேண்டிய அவசியமில்லை. நாளா வட்டத்தில் அதில் மாற்றங்கள் கொண்டு வரலாம் என காந்தியார் கூறிய கருத்தினை பெரியார் ஏற்றுக் கொள்ள வில்லை. வருணாஸ்ரமம் தூக்கி எறியப்பட வேண்டியது. அதில் படிப்படியாக மாற்றம் என்பது கால விரயம் மட்டுமல்ல, வீணானதும்கூட. அப்படி வருணாஸ்ரமத்தில் மாற்றத்தைக் கொண்டுவர, மதத்தில் மாற்றங்களை உருவாக்க காந்தியார் நினைத்தால், காந்தியாரையே மதவாதிகள் விட்டு வைக்கமாட்டார்கள் என தந்தை பெரியார், காந்தியாரிடமே நேரடியாக தெரிவித்துவிட்டு விடைபெற்று, விலகி தமது கொள்கைகளை நடை முறைப்படுத்த தனியாக இயக்கம் கண்டு வெற்றியினைப் பெற்றார். பெரியார் எச்சரித்தபடி 1948 ஆம் ஆண்டில் மதவெறிக்குப் பலியானார் காந்தியார். கோராவின் நாத்திகக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத காந்தியார், இறுதியில் பெரியார், கோரா கூறிய மனிதநேயம், மனித சமத்துவம் பற்றிக் கூறும் நிலைக்கு வந்தபொழுதுதான்,  அதுவரை காந்தியாரை ஆதரித்துப் போற்றிய மதவாதிகள் - மத வெறியர்கள் காந்தியாரையே சுட்டுக்கொன்றனர். பொது வாக கொள்கை வழிநடக்கும் தலைவரைப் பின்பற்றி சீடர் நடப்பது வாடிக்கை. ஆனால், சீடர்களான பெரியார், கோரா வலியுறுத்திய கருத்துகளின் வழிதான் அவர்களது தலைவராக விளங்கிய காந்தியார் இறுதியில் வர வேண்டிய நிலை வந்தது. சீடர்கள் வழி தலைவர் நடந்து கொண்டார். தொடக்கத்திலேயே  இவர்களது வழி வந்தி ருந்தால், காந்தியார் மேலும் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி ஆற்றியிருக்க முடியும். கடவுள் மறுப்பு, நாத்திகக் கொள்கை ஏற்படுத்திய நிலைதான் சீடர் வழி தலைவர் எனும் வரலாற்றுக் குறிப்பு. அத்தகைய மாபெரும் மனிதநேய தத்துவத்துவமான நாத்திக நன்னெறி குறித்து தொடர்ந்து உலக நாத்திகர் மாநாட்டை விஜயவாடா நாத்திகர் மய்யம் நடத்தி வருகிறது.

நாத்திகம் ஒன்றும் புதிய தல்ல!

நாத்திகம் என்பது புதியதல்ல; இயல்பானதுதான். இந்த உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே நாத்திகர்கள்தான்; பிறந்த பொழுது எந்த மத அடையாள மும் தானாக வந்ததில்லை. குழந்தையின் பெற்றோர்தான் தங்களது மத அடையாளத்தை குழந் தையின்மீது திணித்து விடுகின்றனர். இயல்பாகவே குழந்தைகள் வளர்க்கப்பட்டால், மத அடையாளங்களால் உருவாகும் மதவெறிக்கு இடமே இல்லை. இயல்பானதற்கு மாறாகத் தான் மனிதரிடம் மதக் கருத்துகள் இடம் பெறுகின்றன. சமுதாயத்தில் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படிப்பட்ட மதவெறியினை எதிர்த்து - அதற்கு அடிப்படையான மத அடையாளமே தேவையில்லை என தங்களது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்கள் தந்தை பெரியாரும், நாத்திக அறிஞர் கோராவும் ஆவார்கள்.

மக்களை ஆதிக்கம் செலுத்தும்

மதவாதம்!

மனிதருடைய ஆற்றல், நேரம், உழைப்பு ஆகிய வற்றை பெரும்பாலும் மதத் தொடர்பான விசயங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மனிதருடைய முழு மையான பங்களிப்பு சமுதாயத்திற்குக் கிடைக்கவிடாமல், மதம் சார்ந்த விசயங்கள் தடையாக இருக்கின்றன. அப் படிப்பட்ட தடை என்பது இருப்பதை உணராமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் நல்ல நேரம் - கெட்டநேரம் (ராகுகாலம், எமகண்டம்) வகைப்படுத்தி, எந்த ஒரு முனைப்பான செயலையும் கெட்ட நேரத்தில் செய்யக்கூடாது எனும் மனப்பான்மையினை உருவாக்கிவிட்டது மதம். மதம் சார்ந்த பண்டிகைகள் மனிதரது உழைப்புக்கு விடுமுறை என்பதாக மட்டுமல்லாமல், பண விரயம், கடன் வாங்கி பண்டிகைக்கு செலவிட வைத்துவிடும் நிலை என்ப தெல்லாம் மதம் சார்ந்த நடவடிக்கைகாளல் ஏற் பட்டவையே!

இப்படி மனித உழைப்பை மட்டுப்படுத்தும் நிலைமையினை நீக்கிட கடவுள் மறுப்பு, மத மறுப்பு, நாத்திகக் கருத்துகள் மக்கள் மனதில் உறுதிப்பட வேண் டும். மதம் சார்ந்த சிந்தனைகளை, நடவடிக் கைகளை குறைத்துக் கொண்டதால், உலக நாடுகளில் உள்ள பலர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர். தனி நபர் வாழ்வு நிலையும் உயர்ந்து, சமுதாயம் மேம்பாடு அடைந்திட்ட நிலைமைகள் கண்கூடாகத் தெரிகிறது.

உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள்

மதம் சார்ந்த சிந்தனைகளைப் புறந்தள்ளப்பட வேண்டும். மனிதநேயம் சார்ந்த சிந்தனைகள் வளர்த் தெடுக்கவேண்டும். அத்தகைய சமுதாயப் போக்கிற்கு உலக நாத்திகர் மாநாட்டு நடவடிக்கைகள் ஆக்கம் கூட்டும். அந்த மகத்தான பணியில் நாம் அனைவரும் - இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும்  இணைந்து பணியாற்றுவோம். மனித குலம் மேம் பாடடைய பாடுபடுவோம். இறுதி வெற்றி நமக்கே; நாத்திக இயக்கத்திற்கே!

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப் பிட்டார்.

தமிழர் தலைவரின் எழுச்சியுரையினால் உணர்வு வயப்பட்ட அரங்கத்தில் இருந்தோர் அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கால் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தானாக எழுந்த கரவொலி எழுச்சி கலந்த மகிழ்ச்சி வெள்ளமாக அரங்கம் முழுவதும் அதிர்வுகளை எழுப்பியது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தமிழர் தலைவருக்கும் - வெளிநாட்டுப் பேராளர்களுக்கும் சிறப்பு

உலக நாத்திகர் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தமிழர் தலைவருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கேரி மெக்லேலண்ட் மற்றும் வோல்கர் முல்லர் ஆகியோருக் கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினர்.

நாத்திகர் மய்யத்தின் 80 ஆண்டுகால செயல்பாட் டிற்கு ஆர்வம் கூட்டியவர்கள், குடும்பத்தினர் மற்றும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பகுத்தறி வாளர் அமைப்புப் பேராளர்களுக்கும் நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து....

அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப் பின்  (FIRA - Federation of Indian Rationalist Association) சங்க அமைப்பினர், தமிழ்நாட்டிலிருந்து பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் - மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர்கள் அ.த.சண் முகசுந்தரம், ரஞ்சித்குமார், பொறுப்பாளர்கள் - நடராசன், மாணிக்கம் புதுவை குப்புசாமி இணையர் ஆகியோர் மாநாட்டில்  கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய தமிழர் தலை வருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பெரியார், பெரியார் சமூகக் காப்பு அணியின் பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் சென்றி ருந்தனர்.

- விடுதலை நாளேடு, 6.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக