ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

நாகபுரி சமூகநீதி மாநாடு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூன் 1-15 2022

நாகபுரி சமூகநீதி மாநாடு
கி.வீரமணி

மகாத்மா ஜோதிபா பூலே துவக்கிய சத்திய சோதக் சமாஜ் அமைப்பின் 125ஆம் ஆண்டு விழா, சமூக நீதி மாநாடு ஆகிய விழாக்கள் நாகபுரி, நேஷனல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பெற்ற டாக்டர் பஞ்சாப் ராவ் தேஷ்முக் உள்ளரங்கத்தில் மிகச் சிறப்பான முறையில் 9.1.1990 அன்று காலை 10:00 மணியளவில் துவங்கியது.
மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை-யிலிருந்து ராஜதானி ரயில் மூலம் 9.1.1999 அன்று அதிகாலை 3:45 மணிக்கு நாகபுரி ரயில் நிலையத்திற்குச் சென்று சேர்ந்தேன். சத்திய சோதக் சமாஜ் சங்க முக்கிய நிருவாகி டாக்டர் காம்ப்ளே மற்றும் உறுப்பினர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர். பின்னர் நாகபுரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நடக்கவிருக்கும் இரண்டு நாள் மாநாடுகள் பற்றி அச்சங்கத்தின் தலைவர் நாகேஷ் சவுத்ரி விளக்கமாகக் கூறிச் சென்றார்.
முதல் நாள் மாநாட்டுக்குத் தலைமை விருந்தினராக, மாநாட்டின் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அரங்கினுள் நுழையும்போது அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து வரவேற்றது அவர்கள் நம் இயக்கத்தின் மீது கொண்ட மரியாதையை உணர்த்தியது.
சமூகநீதி முன்னோடித் தலைவர்கள் மகாத்மா ஜோதிபா பூலே, தந்தை பெரியார் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் படங்களுக்கு நாகபுரி பல்கலைக்-கழகத் துணைவேந்தர் டாக்டர் பேரா.பால்சந்திர-சோப்னேவும் நாகேஷ் சவுத்ரியும் மலர் தூவி, வீர வணக்கம் செய்தனர். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக வரவேற்புப் பாடல் அங்குள்ள மாணவிகளால் பாடப்பட்டது.
பின்னர் மாநாட்டின் வரவேற்புரையை சங்கத்தின் தலைவர் திரு. நாகேஷ் சவுத்திரி ஆற்றினார். சங்க உறுப்பினர் பேராசிரியர் சுதாகர் மொக்டே, தலைமை விருந்தினரான ‘எனது வாழ்க்கைக் குறிப்பினை’ மிகத் தெளிவாகவும், விவரித்தும் மாநாட்டுப் பேராளர்கள் அனைவரின் கரவொலிக்கிடையே வழங்கி, ஆங்கிலத்திலும் மராட்டியத்திலும் மொழிபெயர்த்து பெருமைப்படுத்தினார்கள்.

பின்னர் மாநாட்டில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு மாணவிகள் பூச்செண்டு கொடுத்துச் சிறப்பித்தார்கள். ஆங்கிலம் மற்றும் மராத்தியில் தயாரிக்கப்பட்ட, ‘எனது வாழ்க்கைக் குறிப்பை’ உள்ளடக்கிய கண்ணாடிப் பேழையினையும் அளித்து சிறப்பித்தார்கள்.
அதையடுத்து மாநாட்டின் தலைவர் பேரா.சோப்னே துவக்க உரையாற்றினார். அவர் தமது உரையில், “மகாத்மா ஜோதிபா பூலே, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் அளப்பரிய பணிக் கொடை-களைப் பாராட்டி, அவர்களின் உழைப்பினால்-தான் இந்த அளவிற்கு சமுதாய மாற்றம் ஏற்பட்டு உயர்வடைந்திருக்கிறது. திரு.வீரமணி அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தலைசிறந்த சமூகநீதித் தலைவர்களில் முதல் இடத்தைப் பெற்றுத் திகழ்கிறார்கள் என்று சொன்னால், அது ஏதோ வார்த்தைக்காக அல்ல. அதற்கு அவர் முழுத் தகுதியும் பெற்றிருக்கிறார் என்றே நான் பொருள் கொள்கிறேன்.
அவருடைய இடைவிடாத நன்றி பாராத உழைப்புக்குக் காரணம், அவர் நம்முடைய சமூகநீதிப் போராளிகளான ஜோதிபா பூலே, தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் தத்துவங்களிலிருந்தும், கொள்கைகளிருந்தும் எள் முனையளவுகூட பிறழாமல் தன் பணியினைச் செய்து வருவதால்தான். தலைவர் வீரமணி அவர்கள் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கும் இவையே காரணம் என்றவர், பெரியார் சுயமரியாதை அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் 44 நிறுவனங்களைக் கூறி, மிகவும் பெருமைப்-படுகின்ற அளவுக்கு அவை சிறப்பாக வளர்க்கப்பட்டுள்ளன என்று சொன்னால், அதற்குக் காரணம் தலைவர் வீரமணியே ஆவார்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார். தலைமையுரையைத் தொடர்ந்து நான் துவக்க உரையை ஆங்கிலத்தில் ஆற்றினேன். அதை மராட்டியத்தில் சிறப்பாக தோழர் ஒருவர் மொழிபெயர்த்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக