ஞாயிறு, 6 டிசம்பர், 2015

டிரஸ்ட் வழக்கில் நாம் பெற்ற வெற்றி :


(திருவாளர்கள் டி.எம். சண்முகம், சிதம்பரம் கிருஷ்ணசாமி, கே.தங்கராசு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு, செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த எதிர்மனுவின் விவரத் தொடர்ச்சி...)
ஒரே தன்மை
(9)    (நான் மேலும் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.) இந்த நிறுவனமானது (Institution) சுயமரியாதை இயக்கத்தின் லட்சியங்களைப் பிரச்சாரம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது என்ற தன்மையில் அமைந்திருப்பதால், மறைந்த பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட திராவிடர் கழகத்தின் நோக்கங்களும் அதே அடிப்படையில் அமைந்திருப்பதாலும் இரண்டும் ஒரே தன்மையுடையனவை ஆகும். எனவே இந்த நிறுவனத்தின் (Institution) உறுப்பினர்கள் திராவிடர் கழகத்தின் கொள்கை கோட்-பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள்தான் இந்த நிறுவனத்தின் நலனிலும், நடவடிக்கைகளிலும் அக்கறை கொண்டவர்கள் என்ற உரிமையைப் பாராட்ட முடியும் என்பதைச் சொல்ல நான் ஆசைப்படுகிறேன்.
மேலே விவரிக்கப்பட்டவைப்-படி பார்த்தால் இந்த வாதிகள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தோடு எந்தவிதத்திலும் சார்ந்தவர்கள் அல்ல, அதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் அல்ல. இவர்கள் பெரியாருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களும் அல்ல. முடிவாக, அவர்கள் திராவிடர் கழக இயக்கத்துடன் எல்லாவிதத் தொடர்பையும் இழந்தவர்களாகி விடுகிறார்கள்.  இந்த அடிப்படையில் உற்றுநோக்கும்போது, சட்டக்கூற்றுபடி வாதிகளின் தாவா வழக்கு (Suit) அனுமதிக்கப்-படக் கூடியதே அல்ல. அதே காரணத்திற்காக அவர்களுடைய மனுவும் சட்டப்படி செல்லத்தக்கதும் அல்ல.
(10)    மேலே கூறப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் வாதிகளால் தாக்கல் செய்யப்-பட்ட மனுவும், நல்லெண்ண அடிப்படையில் அமைந்தவை அல்ல. அதற்கு மாறாக, கெட்ட நோக்கத்தின் அடிப்படையில், திராவிடர் கழக ஸ்தாபனத்தைச் சீர்குலைக்கவும் அது அமைதியான முறையில் செயல்படுவதைத் தடுக்கவும் செய்தவைகளே ஆகும். அப்படி அவர்கள் தாவாவையோ மனுவையோ, போடுவதற்குரிய தகுதியோ, நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்ற முறையிலாவது அல்லது நிறுவனத்தின் நலனிலும் அதன் நல்ல செயல்பாட்டிலும் அக்கறை உள்ள நபர்கள் என்ற தன்மையிலோ அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
மேலே கூறப்பட்டவற்றில் இருந்து ஒருவித உண்மை யாருக்கும் புலனாகாமல் இருக்க முடியாது. தங்களுடைய கெட்ட நோக்கத்திற்காக திராவிடர் கழகத்தின் சொத்துக்களின் நிர்வாகப் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் 1975 முதல் அக்கறை காட்டி வந்தார்கள் என்பது அந்த உண்மையாகும்.
கழகத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்பட்ட 1975 முதல் இந்த நிறுவனத்தின் மீதும் குறிப்பாக திராவிடர் கழகத் தலைவருக்கு எதிர்ப்பாகவும் தங்களுக்குள்ளே ஒரு கெட்ட எண்ணத்தை அவர்கள் வளர்த்து வந்துள்ளார்கள்.
அந்தக் கெட்ட எண்ணத்தின் விளைவே அவர்களால் கொண்டுவரப்பட்ட பிரஸ்தாப தாவாவாகும். திராவிடர் கழகத்திற்கும் பெரியார் சுயமரியாதை இயக்கத்திற்கும் ஆன எதிரிகளால் தங்களுடைய சுயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளவே இந்த வாதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்கள்.
யாரை எதிர்த்து?
(11)    பெரியாருடைய மறைவிற்குப் பிறகு இந்த நிறுவனத்தின் காரியங்களை நிர்வகித்து வந்த திருமதி ஈ.வெ.ரா.மணியம்மையை எதிர்த்துத் தான் தாவாவில் கூறப்பட்டுள்ள காரணங்களும், அதனுடன் தாக்கல் செய்யப்-பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ள காரணங்-களும் அமைந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒருபொழுதும் கூடவில்லை என்றும் நிறுவனத்தை ஒழுங்காக நடத்திச் செல்வதற்-குரிய சாதாரண காரியங்களைக் கவனித்து நடக்கவில்லை என்றும் வாதிகளால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எனவே அவை மறுக்கப்படுகின்றன. அதுபோலவே, இந்த நிறுவனத்தின் பேரவை கூடவில்லை என்றும், எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகும். பேரவைக் கூட்டம் கீழ்க்கண்டவாறு கூடி, கூட்டத்தின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்-பட்டிருக்கின்றன.
ஆண்டு    பேரவைக்கூட்டம் கூடிய தேதி
1975-76               11-4-1975
1976-77               20-2-1977
1977-78              28-5-1977
நிர்வாகக் குழு கூட்டம்
அதுபோலவே நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டமும் முறையாகவே கூடி நிறுவனத்தின் செயல்முறைத் திட்டங்களைக் கவனித்து கூட்டத்தின் நடவடிக்கைகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்திச் செல்லவும், நிர்வாகத்தின் நலனில் அக்கறை காட்டவுமான முறையில் நிர்வாகக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், மறைந்த திருமதி ஈ.வெ.ரா. மணியம்மையார் நிறுவனத்தின் காரியங்களை நல்ல முறையில் செயல்-படுத்தவில்லை என்று எதிர்ப்புத் தெரிவிப்-பதற்கான வாய்ப்பு இருப்பதற்கு இடமில்லை. நிறுவனத்தின் காரியங்களைச் செயல்-படுத்துவதில் திருமதி ஈ.வெ.ரா. மணியம்மை எவ்விதமான எதேச்சாதிகாரப் போக்கையும் கடைப்பிடிக்கவில்லை.
நிறுவனத்தின் உறுப்பினர்-கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். வாதிகளைப் பொறுத்தவரையில் எதிர்ப்பைத் தெரிவிக்க அவர்களுக்கு எவ்விதத் தகுதியும் இல்லை; உண்மையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. கழகத்திற்குச் சம்பந்த-மில்லாதவர்களும் தொடர்பு இல்லாதவர்களும் கோர்ட்டாரவர்கள் மனதில் கழகத்தின் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்தப் பயங்கரமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்கள். கழகத்தி-லிருந்து அவர்கள் விலக்கப்பட்டார்கள் என்ற விவகாரம் 1974லும், 1975லும் முடிந்துபோன உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். (Fait Accompli).
(12)    நிறுவனத்தின் சொத்துகளும், கணக்கு-களும் நிறுவனத்துக்காக நிர்வகிக்கப்-பட-வில்லை என்றும் நிறுவனத்தின் உண்மையான வருவாய் கணக்கில் கொண்டு வரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆதாரம் இல்லை
இந்தக் குற்றச்சாட்டுகள் எவ்விதப் பொருளும் இல்லாதவை. வாதிகளால் ஒப்புக் கொண்டபடி இந்த நிறுவனம் வருமானவரி போடப்பட்டுள்ள நிறுவனமாகும். வருமானவரி அதிகாரியாலும், அவருக்கு மேல் உள்ள உதவி கமிஷனராலும் 1956_1957லிருந்து 1974_1975 வரை உட்பட்ட ஆண்டுகளுக்குரிய வருமானவரி நிர்ணயிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்-பட்டுள்ளன. வருமானவரி இவ்வளவு-தான் என்பதை, சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜூ-களும் நிர்வாகத்தின் வரவு செலவுக் கணக்குகளடங்கிய அறிக்கைகளும், இன்னும் பல ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே, வருமான வரிக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்-பட்டன.
உண்மையான வருவாய்க்கு சரியான கணக்குக் காட்டவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இது மேலெழுந்த வாரியாகவும், விவரங்கள் இல்லாமலும் சொல்லப்பட்டவை-யாகும். இது ஒரு சாரம் இல்லாத குற்றச்சாட்டு. பிரதிவாதிகள் தங்களுக்குள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள், கெட்ட நடவடிக்கையில் இறங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
நிர்வாகம்
(13)    அதுபோலவே இந்த நிறுவனம் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் ஆதாரமற்றதாகும். இந்த நிறுவனத்தின் சொத்துகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை என்கின்ற குற்றச்-சாட்டும் அடிப்படையற்றதாகும். இந்த நிறுவனத்தின் சொத்துகள் பெரும்பாலும் சென்னை, திருச்சி, ஈரோடு போன்ற நகரங்களில் உள்ளன. அவை பெரும்பாலும் மாநில, மத்திய அரசாங்க அலுவல்களுக்கும், மற்றும் பிரசித்திப்பெற்ற நிறுவனங்களாகிய பாரி கம்பெனிக்கும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கும் (எம்.எம்.டிஏ.) இதுபோன்ற நிறுவனங்களுக்கும் பெரும்பாலும் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன.
எனவே அரசாங்க அலுவலகங்களுக்கும், மற்ற பிரசித்திப் பெற்ற நிறுவனங்களுக்கும் வாடகைக்கு விடப்பட்ட சொத்துகள் சரியான முறையில் பராமரிக்கப்பட-வில்லை என்று கூறும் குற்றச்சாட்டு புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும்!
அதுபோலவே வாடகைக்காரர்களிடம் வசூலிக்கப்-படும் தொகை கணக்கில் கொண்டுவரப்-படவில்லை என்கின்ற குற்றச்-சாட்டு சரியானதல்ல; ஆதாரங்களைக் கொண்டதுமல்ல. எனவே அந்தக் குற்றச்-சாட்டும் மறுக்கப்படுகிறது. நிறுவனத்திற்குரிய சொத்துகளில் 75 சதவீதம் மாநில, மத்திய அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடப்-பட்டுள்ளது. ஒருசில சொத்துகளைத் தவிர மற்றவை எல்லாம் புகழ்பெற்ற கம்பெனி-களுக்கும், கார்ப்பரேஷனுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் நிறுவனமோ அல்லது இரண்டாவது பிரதிவாதியோ அவர்களிடமிருந்து வாடகை வாங்கி அதைக் கணக்கில் கொண்டுவராமல் இருக்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டு கெட்ட எண்ணத்துடனும் கோர்ட்டார் உள்ளத்தில் தவறான எண்ணத்தை உண்டாக்குவதற்காகவும் சொல்லப்பட்டவையாகும்.
(14)    அடுத்த குற்றச்சாட்டு என்னவென்றால், பெரியார் மறைவுக்குப் பிறகு புரோ நோட்டுகள் (Pronotes) என் பெயரிலோ, என்னால் நியமிக்கப்பட்டவர்கள் பெயரிலோ (Nominees) எழுதி வாங்கி, அந்தப் பணத்தைத் தவறான முறையில் அபகரித்துக் கொள்வதற்காகும் என்ற குற்றச்சாட்டு. இது துளியும் ஆதாரமற்றதாகும்.
கோர்ட்டார் அவர்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணம் ஏற்படுத்தும்வகையில் புனைந்து கூறப்பட்டதாகும்.
இப்படிப்பட்ட பயங்கரக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எவ்வித ஆதாரத்தையும் இதற்கும் காட்டப்-படவில்லை. தாவா மனுவுடன் இணைக்கப்-பட்ட தஸ்தாவேஜூகள் பட்டியலில் இந்த புரோ நோட்டுக்களை 3, 4, 5 அய்ட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது அய்ட்டத்தில் அடங்கியுள்ள புரோ நோட்டு 20.2.1972ஆம் தேதியை உடையதாகும். அதுவும் தீர்ந்து போன (பைசலாகிவிட்ட) புரோ நோட்டாகும். இந்தப் புரோ நோட்டுக்கும், இவர்களால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. 4ஆவது புரோ நோட்டு 7.3.1972ஆம் தேதியிலும் 5ஆவது புரோ நோட்டு 20.3.1972ஆம் தேதியிலும் நிறுவனத்தின் பெயருக்கு எழுதப்பட்டதாகும். இந்தப் புரோ நோட்டுகள் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மைக்கு ஸ்தாபனத்தின் செயலாளர் என்ற பொறுப்பில் எழுதிக் கொடுக்கப்பட்டவைகளாகும். இவை காலாவதியாகின்ற தேதிகளில், இவற்றுக்குப் பதிலாக புதிய புரோ நோட்டுகள் 7.3.1975லும், 20.3.1975லும் நிறுவனத்தின் செயலாளரான ஈ.வெ.ரா. மணியம்மை பெயராலும் (அதே நபர்களால்) புதுப்பிக்கப்பட்டுள்ளன. வாதிகள் கொண்டு வந்த குற்றச்சாட்டுகளில் இந்த இரண்டு புரோ நோட்டுகளும் குறிப்பிடப்-பட்டுள்ளன.
எனவே இரண்டாவது பிரதிவாதி இந்தப் புரோ நோட்டிலுள்ள பணத்தைத் தவறான முறையில் பயன்படுத்த ஏதுவாகும் என்பதற்கு எந்தவித ஆதாரத்தையும் காட்ட--வில்லை. பெரியார் மறைவுக்குப் பிறகு திருமதி ஈ.வெ.ரா. மணியம்மை அந்த நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் நிர்வாகக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டபடியோ, அல்லது ஒப்புதல் அளித்தபடியோதான் திருமதி மணியம்மை அவர்கள் எந்த முடிவுகளையும், செயல்களையும் புரிந்தார்கள். 16.3.1978இல் ஏற்பட்ட திருமதி மணியம்மையார் அவர்கள் மறைவுக்குப் பிறகு நான் இந்த நிறுவனத்தின் செயலாளராக 19.3.1978 முதல் ஆனேன்.
இந்த நிறுவனத்தின் செயலாளர் பதவியை ஏற்பதற்கு முன்பு, நான் இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தேன். இந்த நிறுவனத்தின் செயல்முறைத் திட்டத்தின்படி தலைவர் பொறுப்பில் இருந்த என்னால், வாதிகள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுப்-படி நடந்திருக்க முடியாது. ஏனென்றால் அப்போது திருமதி மணியம்மையார் அவர்கள் இந்த நிறுவனத்தின செயலாளராவார். இந்த நிறுவனத்தின் செயல்களும், நடவடிக்கைகளும் நிர்வாகக் குழுவால் கவனிக்கப்பட்டு வந்தன.
(15)    மேலும் கூறப்பட்ட குற்றச்சாட்டானது, இந்த நிறுவனத்தினுடைய வருமானவரி பாக்கி ரூ. 65 லட்சம் வரை சென்றுவிட்டது என்றும் பாக்கி இவ்வளவு அதிகமானதற்குக் காரணம் என்னுடையதும், திருமதி மணியம்மையுடையது-மான கவனக் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் சட்ட விதி 2 (a)(viii) பிரிவில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்காக செலவிடப்படும் செலவை வருமான வரியி-லிருந்து விலக்கு அளிக்கும்படி இந்த அப்பலேட் உதவி கமிஷனர் (நிறுவனம் செய்த அப்பீலில்) வருமான வரி அதிகாரிகளுக்கு உத்திரவு பிறப்பித்தார். இந்த உத்திரவுகள் அமல்படுத்தப்-படும் நிலையில் இருக்கின்றன. அப்பலேட் உதவி கமிஷனருடைய உத்திரவுகள் செயலாக்கப்-பட்டால் இந்த நிறுவனத்திற்குரிய வருமான வரித் தொகை 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகைக்கு வரலாம். 65 லட்சம் ரூபாய்க்கு வருமானவரி கட்ட வேண்டும் என்று இந்த நிறுவனத்திற்கு ஒருபோதும் நிர்ணயிக்கப்-படவில்லை. இந்த நிறுவனத்திற்குரிய வருமான வரி பெரியார் அவர்களது ஆயுட்காலத்திலேயே வருமானவரி இலாகாவினரால் போடப்-பட்டதாகும். என்றாலும் திருமதி மணியம்மை-யாரால் அப்பலேட் உதவி கமிஷனருக்கும், வருமானவரி அப்பலேட் டிரிபூனலுக்கும் அப்பீல் செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்பலேட் வருமானவரி உதவி கமிஷனர், வருமானவரி கட்டுவதற்குரிய அடிப்படை வாய்ப்புகளைக் குறைத்து உத்திரவிட்டார். இத்தகைய சூழ்நிலையில் ஏதோ இந்த நிறுவனம் ஒரு பெரிய வருமான வரி பாக்கியைக் கட்டவேண்டிய நிலையில் இருக்கிறது என்று ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகும்.
வரிகள்
(16) இந்த நிறுவனத்திற்குரிய வரிகளும் சொத்து வரிகளும் கட்டப்படாமல் பாக்கியாக இருக்கின்றன என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இந்த நிறுவனம் வரிகளைக் கட்டுவதில் மிகவும் முறையாக நடந்து வருகிறது. பெரியாரின் மறைவுக்குப் பிறகு திருமதி மணியம்மையார் முயற்சியினால் வருமான வரியைக் குறைப்பதற்கு வரி விதிக்கும் அதிகாரிகளிடம் உரிய விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.
சொத்து-களை அட்டாச் செய்வோம் என்று வருமான வரி அதிகாரிகள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளைச் சமாளித்து வருமான வரித் துறைக்கு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு வரிப்பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. பிறகு ஏற்பட்ட பேச்சுவார்த்தையின்படி மாத ரூபாய் 12,000 வரி பாக்கியாக கட்டுவது என்று ஓர் உடன்பாடும் ஏற்பட்டது. அந்த உடன்-பாட்டின்படி, 1978 பிப்ரவரி முதல் மாதம் 12,000 ரூபாய் கட்டப்பட்டும் வருகிறது. இந்தச் சூழ்நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் மிகவும் நிதானத்துடன் நடந்து கொண்டு, இந்த நிறுவனத்திற்குரிய வாடகைகளை வாங்குவதின் மீது போடப்-பட்டிருந்த அட்டாச்மெண்டுகளை நீக்கி இந்த நிறுவனம் தன்னுடைய அன்றாட அலுவல்-களைக் கவனிப்பதற்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் வருவாயான ஏறத்தாழ  45,000 ரூபாயில் 33,000 ரூபாயை அறப்பணிகளுக்கும், நல்வழி காரியங்களுக்கும் பிரச்சாரக் காரியங்களுக்கும் செலவழிக்கப்பட்டு வருகிறது. இது மெமோரண்டம் ஆப் அசோசியேஷனில் குறிப்பிட்டுள்ள-படி இந்த நிறுவனம் உயர்நிலைப் பள்ளிகளையும், பயிற்சிப் பள்ளிகளையும், அனாதை இல்லங்களையும், நூலகங்களையும் நடத்திக் கொண்டு வருவதோடு இயக்கப் பிரச்சாரக் காரியங்-களையும் நடப்பதற்கு விடுதலை, உண்மை என்ற பத்திரிகைகளை நடத்தி வருகிறது. இதற்கு மேலும் பல புத்தகங்களும், துண்டறிக்கைகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் அடங்கியுள்ள பல பிரிவுகள் நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்பட்டு, கொடுக்க வேண்டிய தொகைகள் அவ்வப்போது காலதாமதமின்றி பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த குற்றச்சாட்டான, இந்த நிறுவனத்தின் சொத்துகளை பராதீனம் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. உண்மையில் இந்த நிறுவனத்தின் சொத்துகள் பெரும்பாலும் வருமான வரித்துறையால் அட்டாச் செய்யப்பட்டவைகளாகும். இந்த நிலையில் இந்தச் சொத்துகளைக் கைப்பற்றுதல் என்ற பிரச்சினைக்கே இடமில்லை!
(17)  1962இல் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான விடுதலை பத்திரிகையை நடத்தக்கூடிய பொறுப்பு தந்தை பெரியார் அவர்களால் என்னிடம் ஒப்படைக்கப்-பட்டது. அப்போது அந்தப் பத்திரிகை மூடப்படும் நிலையில் இருந்தது. நான் என்னுடைய உண்மையான உழைப்பினைத் தந்து அதை இன்னும் நடத்திக் கொண்டு வருகிறேன். அது இன்னும் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வமான  ஏடாக நடந்து வருகிறது. நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் பாராட்டி, மறைந்த தந்தை பெரியார் அவர்கள் 10.08.62, 06.06.64 விடுதலை இதழ்களில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். பெரியார் ஆயுட் காலத்தில் நான் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். திருமதி மணியம்மையார் ஆயுட் காலத்திலும் அந்தப் பதவியைத் தொடர்ந்து வகித்து வந்தேன். தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்க பொதுக் கருத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரையில் பெரியாருடைய ஆயுட் காலத்தில் 1971இல் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராக (டிரஸ்டியாக) நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
பெரியார் அவர்கள் மறைவுக்குப் பிறகு இந்த நிறுவனத்தில் ஆயுட்கால உறுப்பினராக ஆக்கப்பட்டு நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒன்று கூற விழைகிறேன். நீண்ட நாட்களாக மறைந்த பெரியார் அவர்களுடைய நம்பிக்கையையும், திருமதி மணியம்மையாருடைய நம்பிக்கையையும் நான் பெற்று வந்திருக்கிறேன். என் மீது ஏற்பட்ட இந்த நம்பிக்கைக்கு ஏற்ப இந்த நிறுவனத்தின் காரியங்களை என்னுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தி கவனித்து வருகிறேன். இந்த நிறுவனத்தின் ஆயுட்கால செயலாளராக 19.3.78முதல் நான் ஆனபிறகும் மனுதாரர்கள் மனுவில் கூறியுள்ள கோரிக்கை-களை நிறைவேற்றும் வண்ணம் நான் இந்த நிறுவனத்தை தவறான வழிகளில் நடத்திக் கொண்டிருந்திருக்க  முடியாது. நடந்திருக்கும் அளவுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. அதற்குரிய கால அவகாசம் கிடையாதே!
(18) செக்ஷன் 92 (C.P.C.)யின் கீழ் போடப்பட்டுள்ள தாவாவிலும் அதற்கிடையில் அட்வகேட்- ரிசீவரை (Advocate receiver) நியமிக்க வேண்டும் என்றும், இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவிலும் கோரப்பட்டுள்ளது. இவை நல்ல எண்ணத்தின் அடிப்படையில் எழுந்தவைகள் அல்ல. ஏற்கெனவே கூறியபடி வாதிகள் போட்டிக் கட்சியை ஏற்படுத்தி, அதற்கும் திராவிடர் கழகம் என்றே பெயர் வைத்து அழைக்கிறார்கள்.
திராவிடர் கழகத்தின் தலைமை, ஏற்பட்டுள்ள மாறுதலில் ஒருங்கிணைந்து தன்னைத் தயார் செய்து கொள்ள முற்பட்டு தொடர்ந்து செயலாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மணியம்மையாரின் மறைவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வாதிகள் செயல்படுகிறார்கள். மேலும் கழகத்தினுடையவும் நிறுவனத்தினுடையவும் செயல்முறையைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
தாக்கல் செய்யப்பட்ட தாவா மனுவை உற்று நோக்கினாலும், மனுவுக்கு ஆதாரமாகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தைக் கவனித்தாலும், அய்யந் திரிபு அற ஓர் உண்மை புலனாகும். அதாவது இந்த வாதிகள், குட்டையைக் குழப்பி அதில் ஏதாவது சிறு மீன், பெருமீன் கிடைக்காதா, அப்படி ஏதாவது சிறு தவறுகளோ அல்லது குறைபாடுகளோ இந்த நிறுவனத்திலோ அல்லது இந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் முறையிலோ இருந்தால், அதைக் கொண்டு, தங்களுடைய உள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கில் இம்முயற்சியில் இறங்கியுள்ளார்கள். மேலும் அவர்களால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு-களில் ஏதாவது ஒன்றுக்கு ஆதாரமோ அடிப்படையோ இல்லை என்பதிலிருந்து அவர்களுடைய உள்ளெண்ணம் தெரியாமல் போகாது.
மாறாக, போதிய ஆதாரங்களை கோர்ட்டார் முன்னிலையில் இந்த எதிர் உறுதிமொழிப் பத்திரத்தின் (Counter affidavit)  மூலம் பிரதிவாதிகளாகிய நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம். ஏன் இவ்வளவு ஆதாரங்-களைத் தாக்கல் செய்திருக்கிறோம் என்றால், வாதிகள் தங்களுடைய தாவா மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிரூபிக்க மட்டுமல்ல; கோர்ட்டார் அவர்கள் பிரதிவாதிகளாகிய எங்கள் நல்லெண்ணத்தை, திருப்தி அடையுமளவுக்கு அறிந்து கொள்வதற்கே ஆகும். அதுவும் இந்த நிறுவனம் ஒரு அறக்கட்டளை நிறுவனமாகும். எனவே இந்த மனுக்கள் மூலம் நாங்கள் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், மேலே எடுத்துக் கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் வாதிகளால்-தாக்கல்செய்யப்பட்ட தாவாவையும், மனுக்-களையும் உற்று நோக்கி, சீர்தூக்கிப் பார்த்து, இந்த இடைக்கால மனுவைத் தள்ளுபடி செய்து, எங்களுக்கு செலவுத் தொகை கிடைக்குமாறு உத்திரவிட வேண்டிக் கொள்கிறோம்.
(19) Letters Patent-ல் கண்டுள்ள 12ஆவது உட்பிரிவின் கீழும் சிவில் சட்டம் (Procedure Code) 92ஆவது பிரிவின் கீழும் வாதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வழக்காடும் வாய்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதிவாதிகள் விண்ணப்பித்துக் கொள்ளும் உரிமையைப் பயன்படுத்த உள்ளேன் என்பதையும் சமூகம் கோர்ட்டார் அவர்களுக்கு பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.
(20)    மேற்கண்ட காரணங்களுக்காகவும், சூழ்நிலையிலும், மேன்மைதங்கிய கோர்ட்டார் அவர்கள் இடைக்கால உத்திரவிற்கான வாதிகளின் மனுவைத் தள்ளுபடிசெய்து, எங்களுக்கு செலவுத் தொகையையும் அனுமதித்து, நீதி வழங்க வேண்டும் என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
சென்னையில் 12.4.1978இல் என்னுடைய வழக்குரைஞர் முன்னிலையில் உறுதிமொழி கூறி என்னால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
நினைவுகள் நீளும்...
-உண்மை இதழ்,1-15.1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக