பெரியாரும் இந்தியாவின் திராவிடர் இயக்கமும்: மதங்களின் மண்ணில் வலிமை மிக்கதோர் நாத்திகர்
அறிமுகம்: டாக்டர் ரியான் சேஃபர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு ஆய்வு மய்யத்தில் பணியாற்றும் சிறந்த ஆய்வாளர். பிஎச்.டி. ஆய்வு முடித்து விட்டுத் தற்போது முது முனைவர் (டி.லிட்) எனும் மிக உயரிய ஆய்வுப் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். வரலாற்றியல் துறை சார்ந்த பல ஆய்வுக் கட்டுரை களை ரியான் எழுதி துறை சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி யுள்ளார். 2014ஆம் ஆண்டு பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி விட்டுச் சென்ற ஆய்வாளர் ரியான் அமெரிக்காவிற்குச் சென்றதும் தமிழர் தலைவரைச் சந்தித்து உரை யாடிய இனிய நிகழ்வுகளைக் கட்டுரைகளாக வடித்து ‘Free Inquiry’ எனும் ஆங்கில இதழில் வெளியிட் டுள்ளார்.
அவற்றின் தமிழாக்கம் தான் நீங்கள் படிக்கப் போவது!
‘Free Inquiry’ இது அமெரிக்கா விலிருந்து வெளிவரும் ஆங்கில இதழாகும். உலகெங்கும் அதிக அளவில் விற்பனையாகி வரும் பகுத் தறிவு இதழ் இது! மதச்சார்பற்ற மனித நேயத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மை கொண்ட சமுதாய அமைப்பிற்காகப் பாடு படுவது, பகுத் தறிவையும் மனித நேய மாண்பு களையும் கருத்துரிமையையும் பேணி வளர்ப்பது எனும் கோட் பாடுகளைக் கொண்டு இவ்விதம் இயங்கி வருகின்றது. இவ்விதழில் ஆய்வாளர் ரியான் சேஃபர் தந்தை பெரியாரைப் பற்றியும் திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் தமிழர் தலைவரைப் பற்றியும் விரிவாக எழுதிய கட்டுரைகளைத் தமிழில் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தந்தை பெரியார் உலக மயமாகி வருகிறார் என்பதற்கு தந்தை பெரி யாரைப் படிக்கிறார்கள்; பேசு கிறார்கள்; ஆய்வு செய்கிறார்கள்; நேரடியாகப் பெரியார் திடலுக்கே வந்து தலைவரைச் சந்தித்து உரை யாடி மகிழ்ந்து திரும்புகிறார்கள். (ப.கா.) இனி, கட்டுரைக்குள் செல்வோம்.
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
- பெரியார்
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
- பெரியார்
(தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்களுடன் ரியான் தனது கட்டுரையைத் தொடங்குகிறார்.
கடந்த அய்ம்பது ஆண்டுகளுக் கும் மேலாக, இந்தியாவின் சிறப்பு வாய்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளுக்கு உயிர்ப்பூட்டித் தூண்டுணர்வு நல்கி வருபவர் உரத்த சிந்தனையாளரான ஒரு நாத்திகர் ஆவார். முதுபெரும் சான்றோர் என்று பொருள்படும் பெயரைத் தாங்கிய பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளர்; இந்தியாவின் விடுதலைக்காகவும் சமத்துவச் சம நிலைக்காகவும் பகுத்தறிவு நெறியை மக்களிடையே பரப்புவதற்காகவும் தம்முடைய வாழ்நாளெல்லாம் போராடியவர். (பார்ப்பனிய) மேலாதிக்கத்திற்கு எதிராகவும் அதன் சாதிய முரண்பாட்டு நிலைக்கு எதி ராகவும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்தும் போராடிய பெரியார் ஏறக் குறைய இருபது முறை கைது செய்யப் பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார். பகுத்தறிவு நூல்களை வெளியிட்டார் என்றும் தங்கள் ஆடைகளைத் தாங்களே நெய்து கொள்ளுமாறு மக்களைத் தூண்டினார் என்றும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. 1953இல் நடைபெற்ற புகழ்வாய்ந்த பிள்ளையார் சிலை உடைப்புப் போராட் டத்தில், பிள்ளையார் சிலைகளுக்கு எவ்விதச் சக்தியும் இல்லை என்பதை விளக்கிக் காட்டுவதற்காகப் பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்துக் காட்டினார். அதற்காக அவர்மீது சட் டத்தை மீறித் தெய்வ நிந்தனை செய்தார் என்று குற்றம் சுமத்தினார்கள்.
1967 முதற்கொண்டு தமிழ்நாட்டை ஆண்டு வரும் தி.மு.க.வும் அ.இ.அ.தி. மு.க.வும் பெரியாரை உயர்வாகப் போற்றி மதித்த போதிலும் இந்துத்துவத் தேசிய வாதிகளாலும் தென்னிந்தியாவின் உயர் சாதிப் (பார்ப்பனர்) பிரிவினராலும் பெரியார் எதிரியாகவே பார்க்கப்படுகிறார்.
வெளித் தோற்றத்திற்கு இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்று கூறப்பட் டாலும், சிறுபான்மையினரான கிறித்து வர்களும் முசுலீம்களும் சீக்கியர்களும் கணிசமான அளவு மக்கள் தொகையில் இருந்த போதிலும் இந்துத்துவம் நாடு முழுவதும் ஊடுருவிப் பரந்து கிடக்கிறது. பருவ காலங்களில் நடைபெறும் பெரிய மத விழாக்கள் தொடங்கி, கடவுள் சிலைகளை மக்களுக்குக் காட்சிப் படுத்தும் விழாக்கள் வரை இந்திய வாழ்க்கையில் இந்துத்துவம் தவிர்க்க இயலாத ஒன்றாக விளங்கி வருகிறது. இருந்த போதிலும் மாநில அரசியலில் நாத்திகம், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ளவர்களிடத்திலும் கூட, மதவாதிகள் நடத்துகின்ற அரசியல் கட்சிகளிடம் கூட பகைமை பாராட்டுவதில்லை.
தென்னிந்தி யாவில் ஒரு மாநிலமான தமிழ்நாடு - ஏழரைக் கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாடு - சிறப்பு வாய்ந்த தன் பழம் பெரும் மரபுகளையும் மொழியையும் போற்றிக் கொண்டாடி வருகிறது. இந்தப் பண்பாட்டுப் பெருமையுடன் தமிழ் மாநில அரசு, தொடர்ந்து தனக்குப் புறம்பான அயலார் ஆதிக்கத்தையும், இந்துத்துவம் தூக்கிப் பிடிக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் சாதிய அமைப்பையும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. பெரியார் ஒளிவு மறைவின்றித் தெளிவாக எழுதினார்:- நாங்கள் மதங்களையும் மதவாதிகளையும் தவறானவர்கள் என்று அவர்கள் மீது நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்; அவர்கள் மக்களின் அறிவுப் புலத்தையும் சிந்திக்கும் திறனையும், நேர்மைத் திறத்தையும், அன்பையும் இரக்க உணர்வையும் ஒற்று மையையும் சமத்துவத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியார் பிறந்தார்: ஈ.வெ.ராமசாமி தமிழ்நாட்டில் ஈரோட்டில் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் வளமிக்க ஒரு வணிகர் குடும்பத்தில் பிறந்தார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர் இளம் பருவத்திலேயே பிற சாதியைச் சேர்ந்த தன் வகுப்புத் தோழர் களைத் தொடுவதற்கும் அவர்கள் வீடு களில் தண்ணீர் வாங்கிக் குடிப்பதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துத் தன் போராட்டத்தைத் தொடங்கினார். அவருடைய முறையான கல்வி, தொடக் கப் பள்ளியோடு முடிவுக்கு வந்து விட்டது. பின்னாளில் ஊரைவிட்டுப் புறப்பட்டு, வடக்கில் கங்கைக் கரையிலுள்ள காசியைக் காண்பதற்குப் போனார்.
அவர் உயர்சாதிப் பார்ப்பனர் அல்லாதவர் என்ற காரணத்தினால் பயணத்தின் போது அவர் பசியால் வருந்த நேர்ந்தது. ஏனென்றால் வடக்கிலிருந்த சத்திரங்கள் அனைத்தும் பார்ப்பனர் அல்லாத கீழ்ச்சாதி மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இச் செயல் அவர் உள்ளத்தில் அழிக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. பின்னர் ஈரோட்டிற்குத் திரும்பி வந்த போது அவர்தம் தந்தையார் தம் வணிக நிறுவனங் களை ஈ.வெ.இராமசாமியின் பெய ருக்கு மாற்றி அவற்றை அவரிடம் ஒப்படைத்தார். 1904இல் பிளேக் நோய் மக்களை வாட்டியபோது மக்களோடி ருந்து மீட்பு வேலைகளில் ஈ.வெ.ரா. இரவு பகல் பாராது ஈடுபட்டார்.
விரைவில் இராமசாமி அரசியலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் நகராட்சி அமைப்பிலும் அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசிலும் இணைந்து பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார். 1919இல் காங்கிரஸ் அவரை வரவேற்றது. ஏனெனில் பிற கட்சிகளின் அறைகூவல்களை எதிர் கொள்வதற்கு அப்போது அக்கட்சிக் குப் பார்ப்பனரல்லாத வலிமைமிக்க ஒரு மாபெரும் தலைவர் தேவைப் பட்டார். காங்கிரசில் இணைந்தவுடன் இருமுறை அவர் கைது செய்யப் பட்டார். அடுத்த பத்து ஆண்டுகளில் அவர் பல முறை கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
நகராட்சியிலும் பிற துறைகளிலும் அவர் வகித்து வந்த பதவிகளை விட்டு விலகி மகாத்மா காந்தியார் தலை மையில் காங்கிரஸ் நடத்திய ஒத்து ழையாமை இயக்கத்தில் பங்கேற்றுத் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். ஒத்துழையாமை இயக்கம் ஆங்கி லேய நீதிமன்றங்களைப் புறக் கணித்தது; ஆங்கில நாட்டுத் துணி களை அணிய மறுத்தது; உள்நாட்டில் நெய்யப்பட்ட உடைகளை உடுத்து மாறு மக்களைக் கேட்டுக் கொண்டது.
கதர் ஆடை அணிந்தமைக்காகவும் அதைப் பரப்பியமைக்காகவும் ஈ.வெ.ரா. கைது செய்யப்பட்டார். கதர் இயக்கம் இந்தியாவில் ஆங்கிலேயரின் துணி வணிகத்தைப் பெரிதும் பாதித்தது. அதனால் அவர்கள் வெறுப்படைந் தனர். அடுத்து, கள்ளுக் கடைகளை எதிர்த்து ஈ.வெ.ரா. நடத்திய போராட் டத்திற்காகக் கைது செய்யப்பட்டார். வைக்கத்தில் உள்ள சிவன் கோவில் சாலைகளில் தீண்டத்தகாதவர்கள் நடப்பதற்கான உரிமைப் போரில் அவர் வெற்றி ஈட்டித் தந்தமைக்காக அவருக்குப் பெரும்புகழ் கிடைத்தது. மக்கள் அவரை வைக்கம் வீரர் என்று அன்புப் பெயரிட்டு அழைத்து மகிழ்ந் தார்கள். வைக்கம் போராட்டத்தின் போது அவர் இருமுறை கைது செய் யப்பட்டார். 1925இல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி தீண்டத் தகாதவர்கள் அந்தச் சாலைகளில் நடப்பதற்கான உரிமைகள் வழங்கப் பட்டன. ஈ.வெ.ரா. வைக்கம் வீரராகப் போற்றப்பட்டார்.
இந்நிகழ்வு அவரை ஒரு சமத்துவ இயக்கத்தை நோக்கி முன்னோக்கிச் செலுத்தியது.
(தொடரும்)
ஆங்கிலத்தில்: டாக்டர் ரியான் சேஃபர்
தமிழில்: டாக்டர் ப.காளிமுத்து
தமிழில்: டாக்டர் ப.காளிமுத்து
-விடுதலை,2.3.15
சாதிகளிடையே ஏற்றத் தாழ்வற்ற - சம உரிமையுடைய ஒரு சமநிலையைக் காண 1926இல் ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார். சாதிய வேறுபாடுகளைக் களைவதற் காக - முறையான முயற்சிகள் எவற் றையும் இந்திய தேசிய காங்கிரஸ் செய்யாத காரணத்தினால் ஏமாற்றப் பட்ட ஈ.வெ.ரா. அதிலிருந்து விலகி னார். காங்கிரசுக்கு எதிர்நிலையில் நின்ற சுயமரியாதை இயக்கம், அரசியல் இயக்கமாக அல்லாது சமூகப் புரட்சி இயக்கமாக நின்று, குழந்தைத் திருமணங்களை எதிர்த்தது;
பெரியாரும் இந்தியாவின் திராவிடர் இயக்கமும்: மதங்களின் மண்ணில் வலிமை மிக்கதோர் நாத்திகர்-2
சாதிகளிடையே ஏற்றத் தாழ்வற்ற - சம உரிமையுடைய ஒரு சமநிலையைக் காண 1926இல் ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார். சாதிய வேறுபாடுகளைக் களைவதற் காக - முறையான முயற்சிகள் எவற் றையும் இந்திய தேசிய காங்கிரஸ் செய்யாத காரணத்தினால் ஏமாற்றப் பட்ட ஈ.வெ.ரா. அதிலிருந்து விலகி னார். காங்கிரசுக்கு எதிர்நிலையில் நின்ற சுயமரியாதை இயக்கம், அரசியல் இயக்கமாக அல்லாது சமூகப் புரட்சி இயக்கமாக நின்று, குழந்தைத் திருமணங்களை எதிர்த்தது;
கைம்பெண் மறுமணங்களை நாடெங் கும் நடத்தி வைத்தது; பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்று கோரியது; குலத் தொழிலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்குமாறும் அழைப்பு விடுத்தது. பகுத்தறிவையும் சமூகப் புரட்சி யையும் சுயமரியாதை இயக்கம் எவ்வாறு ஒன்றிணைத்து நடைபோட்டது என்ப தற்கு ஓர் எடுத்துக்காட்டு:- 1930இல் தேவதாசி முறையை எதிர்த்த நிகழ்வைக் குறிப்பிடலாம். ஒரு பெண் திருமணம் செய்து கொள்வது தடுக்கப்பட்டுக் கோயி லில் இந்துக் கடவுளை வாழ்நாளெல்லாம் வழிபட்டுக் கொண்டிருக்கும் முறை இது. சுயமரியாதை இயக்கத் தலைவர்களும் தேவதாசி முறையில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த பெண்களும் தேவதாசி முறையை ஒழிப்பதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்று போராடினார்கள். தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டம் வந்தபோது அதனைத் தடுப்பதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை முறியடிக்கப்பட்டன. ஆனால் சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து அதன் கொள்கைகளை இசைப் பாடல்களின் வழியாகவும் நாடகங்களின் வாயிலாகவும் இலக்கியங் களின் வழியாகவும் பொதுமக்களிடையே பரப்பிச் சமத்துவச் சமநிலைக்காகக் குரல் கொடுத்து வந்தது.
ஈ.வெ.ரா. வகுப்புரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்தார். பெரும் பான்மை மக்களை அடக்கி ஒடுக்கி அரசியல் துறை, அரசு அலுவல் துறை, கல்வித் துறை முதலான அனைத்துத் துறைகளிலும் உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தமையை அவர் வன்மை யாக எதிர்த்தார். கல்வித் துறையிலும் அரசு அலுவல்களிலும் பார்ப்பனர்கள் அனுபவித்து வந்த அதே வாய்ப்பு பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக் கும் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் ஓர் அமைப்புத் தேவை என்பதற்காக அவர் போராடினார். இக்காலகட்டத்தில் அவர் மிகுந்த துணிவுடன் இந்து மதத்தைச் சாடி வந்தார். இந்துக்களின் சட்டப் புத்தகம் எனப்படுகின்ற மனுஸ்மி ருதியை வெளிப்படையாகப் பொது இடத்தில் கொளுத்தினார். பொதுமக் களால் எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியாத சமஸ்கிருத மந்திரங்களும் பார்ப்பனரும் இல்லாத திருமணங்களை அவர் ஊக்குவித்து உயர்வுபடுத்தினார். அவர் புதிதாக உருவாக்கிய சுயமரியா தைத் திருமணங்களை முன்னின்று நடத்தினார். அது நாடெங்கும் பரவியது. 1928 முதல் 1932 வரை எட்டாயிரம் சுய மரியாதைத் திருமணங்கள் நடத்தி வைக் கப்பட்டன. இத்தகைய திருமணங்கள் ஆணும் பெண்ணும் சமம் எனும் எடுத் துக்காட்டான உறவு முறையை விளக்கின. தம் இயக்கத்தில் இணைந்து தலைமை தாங்குமாறு ஈ.வெ.ரா. பெண்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்தார். சுய மரியாதைத் திருமணங்கள் ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்து கின்றன. குடும்ப வாழ்க்கையில் கணவ னும் மனைவியும் சம பங்குடையவர்கள் என்பதை ஈ.வெ.ரா. எடுத்துரைத்தார்.
1930களில் சென்னை மாநிலத்திற்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. அடுத்து வந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது. குறிப்பிடத் தக்க இந்தியத் தலைவர்களைப் பற்றி இராமச்சந்திர குகா தொகுத்து வெளியிட் டுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளவாறு இக்காலத்தில்தான் ஈ.வெ.ரா. பெரியார் எனும் பெரும் சிறப்புக்குரியவரானார். பிரிட்டானியர்களுக்கு எதிராக அனை வரையும் ஒன்று திரட்டுதல் எனும் தன் தேசியக் கொள்கையை உறுதிப்படுத்துவ தற்காகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட (காங்கிரஸ்) அரசு, பள்ளிகளில் தேசிய மொழியாக இந்தியைக் கற்பிக்கத் தொடங்கியது. இந்திக்கு எழுந்த எதிர்ப் பினை காங்கிரஸ் அரசு குறைத்து மதிப் பிட்டு விட்டது. பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்தினார். இப்போராட்டம், தொன்மை வாய்ந்த இந்த நிலத்தின் மொழியான தமிழ் மொழியைப் பள்ளிகளில் மீண்டும் அதனி டத்தில் நிலை நிறுத்த வேண்டுமெனக் கோரியது. இதனால் சுயமரியாதை இயக் கத்தை அதனுடைய நாத்திகக் கொள்கைக் காக இதற்கு முன்னர் எதிர்த்த குழுக்கள் எல்லாம் இப்போது பெரியாருடன் இணைந்தன. முடிவில் கட்டாய இந்திச் சட்ட ஆணையை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இக்காலத்தில் பெரியாரின் அரசியலில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவர் நீதிக் கட்சியில் இணைந்தார். சோசலிசக் கொள்கை அவரை ஈர்த்தது. அய்ரோப்பியச் சுற்றுப் பயணத்தின்போது அவர் சோவியத் ஒன்றியத்திற்கும் சென்று வந்தார். ஆனால் அய்யப்பாட்டிற்குரிய சோவியத் அரசாங்கத் தார் அவரை நாட்டை விட்டு வெளியேறு மாறு கேட்டுக் கொண்டனர். இந்தியாவிற்குத் திரும்பியதும் ஓர் ஆங்கில அதிகாரியைப் பழி வாங்க அவரைக் கொலை செய்தமைக் காகப் பிரிட்டானிய அரசால் தூக்கிலிடப் பட்ட புரட்சியாளரான பகத்சிங் எழுதிய, நான் ஏன் நாத்திகனானேன்? என்னும் நூலை மறுபதிப்புப் போட்டு வெளியிட்ட மைக்காகப் பெரியார் கைது செய்யப்பட்டார்.
இந்திய விடுதலை நெருங்கிவரும் நேரத் தில் திராவிட (தமிழர்) மக்கள் நடத்தப்படும் முறைகண்டு பெரியார் அய்யப்பாடு கொண்டு 1944இல் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தார். பிற கட்சிகள் தலைமை தாங்குமாறு விடுத்த அழைப்பையெல்லாம் பெரியார் ஏற்கவில்லை. திராவிடரின் உரிமைகள் அயலவராகிய வடவரின் ஆதிக்கத்தின் கீழ் சிக்கி விடக்கூடாது என்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும் பெரியாரின் திராவிடர் கழகம், இந்தியா விலிருந்து திராவிடர்களுக்கென்று ஒரு தனி நாடு தேவை என்பதனை வலியுறுத்தியது. இந்திய விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலைக் கட்சி புறக் கணித்தது. ஆனால் பெரியார் துணிவுடனும் தெளிவுடனும் சமூக மாற்றத்திற்கான தமது கொள்கைகளை வலியுறுத்தி வந்தார். 1953ஆம் ஆண்டு தெய்வ நிந்தனைச் சட்டத்தை மீறியமைக்காகக் கைதான பெரியார், ஒரு நாத்திகன், கடவுளின் உரை களை, கட்டளைகளை ஏற்பதில்லை; அந்த உரைகளும் கட்டளைகளும் கடவுளின் பெயரால் மனிதர்கள் உருவாக்கியவை என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தம்முடைய முதுமைப் பருவத்தில் உடல் நலம் குன்றி வந்த நிலையில் தம் உழைப் பின் பயன் உண்மையில் அரசியல் மாற்ற மாக வளர்ந்து வருவதை உணர்ந்தார். 1949இல் பெரியாரால் வளர்க்கப்பட்ட அவர்தம் தலை மாணாக்கராகிய சி.என். அண்ணாதுரை, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். இதனால் ஏற்பட்ட மன அலைவும் உலைவும் பல ஆண்டுகள் நீடித்தன. இறுதியில் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டபோது வெடித்தது. (கருத்து முன்பின்னாக உள்ளது நம் கவனத்திற் குரியது) அதன்பின் அவர்தம் துணைவியார் இயக்கத்தில் மிகுந்த மதிப்பினைப் பெற்றுப் பெரியாருக்கு அடுத்த தலைவராக வளர்ந்து வந்ததை அறிய முடிகின்றது. இந்தப் பிரிவின் காரணமாகப் பெரியாரின் கொள்கைகளை நாம் விட்டு விட மாட்டோம்; தமது புதிய கட்சி அவற்றை உண்மையுடன் பின்பற்றும் என்னும் உறுதிமொழியினை அண்ணாதுரை வழங்கினார். எழுத்தாளர் பால செயராமன் குறிப்பிடுவதைப் போல, பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட அவ்வியக்கம் (தி.மு.க.) அவர்மீது கொண்ட மதிப்பின் காரணமாக அண்ணாதுரையின் கட்சி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை.
திறமைவாய்ந்த தம்முடைய அரசியல் தலைமையினால் 1967இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சராக அண்ணாதுரை பொறுப்பேற்றார். பெரியார் அரசுக்கு அறிவுரை கூறும் உயர்நிலையி லிருந்தார். மத விழாக்களுக்கு அரசு விடு முறை அளிப்பதைத் தடை செய்யும் வகை யில் பகுத்தறிவுமிக்க சட்டங்களைக் கொண்டு வருமாறு அண்ணாவின் அரசைப் பெரியார் வலியுறுத்தினார். அரசு அலுவ லகங்களில் கடவுளர் படங்களை அகற்று மாறு அரசு ஆணையிட்டது. இத்தகைய மென்மையான போக்கினால் பெரியார் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் அண்ணா துரை காலமாகிவிட்டார். அதன்பின்னர், துணிவுமிக்க நாத்திகரான கருணாநிதி தனக்கே உரித்தான தகுதிமிக்க தன்மையால் கட்சியின் தலைவராகவும் அரசின் தலைவ ராகவும் ஆனார். கருணாநிதியின் தலைமை யில் கட்சி இருந்தபோது 1972இல் மேலும் ஒரு பிளவைக் கட்சி சந்திக்க நேர்ந்தது. நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் மக்களிடம் தனக் கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தைத் தொடங் கினார். பெரியார், அண்ணா ஆகியோரின் செல்வாக்கையும் அக்கட்சி பயன்படுத்திக் கொண்டது.
இங்கிலாந்தைவிட அதிக மக்கள் தொகையைப் பெற்றுள்ள தமிழ்நாட்டை 1967லிருந்து தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள்தான் ஆண்டு வருகின்றன. பெரியாரின் மதச்சார்பற்ற மனித நேயக் கோட்பாட்டை இவை அழியாது பேணிக் காத்து வருகின்றன. திராவிடர் கழகம் எப்போதும் தேர்தலில் நிற்பதில்லை. சமு தாயச் செயற்பாடுகளிலேயே தன் கவனத்தைச் செலுத்திச் சமுதாய மாற்றத் திற்கு மக்களை ஆயத்தப்படுத்தி வருகின் றது. 1973இல் பெரியார் இயற்கை எய்திய போது அவருக்கு அரசு மரியாதை அளிக் கப்பட்டது. அவருடைய நினைவிடம் அவர்தம் ஆதரவாளர்களையும் அவருடைய பணிகளைப் புகழ்வோரையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. 90 வயதாகும் கருணாநிதி, தி.மு.க.வின் தலைவராகத் திகழ்ந்து கொண் டிருக்கிறார். மாநிலத்தின் தலைவராகவும் அவர் மதிக்கப்படுகிறார். அவர் வெளிப் படையாகவே இந்துக் கடவுளான இராமன் இருப்பைக் கேள்விக்குரியதாக்கி, யார் இந்த ராமன்? எந்தப் பொறியியல் கல்லூரியில் அவர் படித்துப் பட்டம் பெற்றார்? இவற்றிற்கு ஏதாவது சான்று இருக்கிறதா? என்று மக்களிடையே சிந்தனையைத் தூண்டி விட்டார்.
தென்னிந்திய மக்களின் வாழ்க் கையில் பெரும் மாற்றத்தை இன்றுவரை பெரியார் உருவாக்கி வருகிறார். அவருடைய மறைவிற்குப் பின் அவர்தம் வாழ்விணையர் திராவிடர் கழகத்தின் தலைவரானார். மணியம்மையார் காலத் திற்குப் பின்னர், செயல்திறம் மிக்க சிறந்த பகுத்தறிவாளரும் எழுத்தாளரும் வழக் கறிஞருமான - 80களில் நடைபோடும் கிருஷ்ணசாமி வீரமணி அவர்களால் தலைமை தாங்கி நடத்தப்பட்டு வருகின் றது. 2014ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகத்தின் தலைமை நிலையத்திற்கு நான் சென்றிருந்தபோது ஆசிரியர் கி.வீரமணி அவர்களோடு நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குள்ள பகுத்தறிவாளர் ஆய்வு நூலகம், அச்சக வசதிகள், திருமண அரங்கு, அருங்காட்சியகம், பெரியார் நினைவிடம் முதலான அனைத்தையும் நான் சுற்றிப் பார்த்தேன். பெரியார் அறக்கட்டளை பகுத்தறிவைப் பரப்புதல், பல கல்லூரி களை நிறுவிக் கல்விப் பணியாற்றுதல், மருத்துவமனைகளை நிறுவி எல்லோர்க் கும் இலவச மருத்துவ உதவியளித்தல் முதலான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. ஆனால் அது பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு வரு கின்றது. வீரமணி அவர்கள் பெரியாரின் பகுத்தறிவுத் தமிழ் நாளிதழான விடு தலையின் ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் ‘The Modern Rationalist’ எனும் ஆங்கிலப் பகுத்தறிவு இதழையும் குழந்தைகளுக் கும் இளைஞர்களுக்குமான இதழ்களை யும் அவர் வெளியிட்டு வருகின்றார். அண்மையில் ரிச்சர்டு டாக்கின்சு அவர்களின் ‘The God An Illusion’ என்ற நூலையும் பெர்ட்ரண்ட் ரசலின் ‘Why I am not a Christian?’ என்ற நூலையும் இவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.
பெரியார் தொண்டுக்கு அரசியல் ஆதரவு இருந்த போதிலும் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஊடுருவிப் பரந்து கிடக் கிறது. இந்துத்துவவாதிகளிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர் கொண்டு வருகின்றது. ஆசிரியர் வீரமணி பலமுறை தாக்குதலுக்கு உள் ளாகியுள்ளார். என்றாலும் இனப்பற்றாள ரும் சிறந்த பகுத்தறிவாளரும் நல்ல நடிகருமாகிய சத்யராஜ் அவர்களைப் போன்றோரின் துணையோடு இந்தியக் குடிமக்களைச் சீர்திருத்துவதற்கு அவர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உழைத்து வருகின்றார்.
ஈ.வெ.ராமசாமி, அவருடைய ஆதர வாளர்களுக்குச் சுயமரியாதையையும் பகுத்தறிவையும் கற்றுத்தந்த மாபெருந் தலைவர். அவரைத் திறனாய்வு செய் வோர்க்கு அவர் ஒரு நாத்திகராகவும் இந்துத்துவ எதிர்ப்புணர்வுகளைத் தூண்டி வளர்த்தவராகவும் காட்சியளிக் கிறார். என்றாலும் பெரியாரின் சமூகத் தொண்டறமும் அரசியலில் அவர் காட்டிய வழிமுறைகளுமே கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டை ஆண்டு வரும் கட்சி களுக்கு அடித்தளமாக இருந்து வருகின் றன. இத்தகைய மரபுரிமைச் செல்வத் தோடு, இந்துத்துவம் ஊடுருவியுள்ள ஒரு மாநிலத்தின் சமூக அரசியல் வாழ்க்கை யில், மதம் பொய்யானது என்று மதத்தை மறுத்துத் தூக்கியெறிந்த ஒரு நாத்திகரின் மக்கள் தொண்டு இன்றுவரை போற்றப் பட்டு வருகின்றது.
(நிறைவு)
ஆங்கிலத்தில்: டாக்டர் ரியான் சேஃபர்
தமிழில்: டாக்டர் ப.காளிமுத்து
தமிழில்: டாக்டர் ப.காளிமுத்து
-விடுதலை,3.3.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக