செவ்வாய், 26 நவம்பர், 2019

விருதுநகர் பகுத்தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டின் 21 தீர்மானங்கள்

'நீட்', 'டெட்' போன்ற தேர்வுகளை நீக்குக!

புதிய தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் கைவிடுக!!

ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு தேவை

விருதுநகர், நவ. 17- 'நீட்', 'டெட்' போன்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள் கையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும், ஜாதி வாரி சுடுகாடு கூடாது என்பது உள்பட 21 தீர்மானங்கள் விருதுநகரில் நடைபெற்ற (16.11.2019) பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

முன்மொழிந்தவர்: பெரம்பலூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராஜன்

விருது பெற்றமைக்குப் பாராட்டு

அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மனிதநேய சங்கத்தின் சார்பில்  (Humanist Association) 
திரா விடர் கழகத் தலைவர் - பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' (Humanist Life Time Achievment Award) விருது வழங்கியமைக்கு இம்மாநாடு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதுடன், விருது பெற்ற தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இம்மாநாடு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

முன்மொழிந்தவர்: பகுத்தறிவாளர் கழக

மாநிலத் துணைத் தலைவர் ஆ.சரவணன்

தேவையற்ற ஒன்று!

கடவுள் வாழ்த்து என்பது தேவையற்ற ஒன்று. அதற் குப் பதிலாக மக்கள் வேறுபாடின்றி மகிழ்ச்சியாகவும், ஒற்றுமை யாகவும் வாழ்ந்திட விழைவதாகப் பாடல் அமையலாம் என்று பகுத்தறிவாளர் கழக மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்  3:

முன்மொழிந்தவர்: பகுத்தறிவு ஆசிரியரணி

மாநில அமைப்பாளர் வா.தமிழ்ப் பிரபாகரன்

பாடத் திட்டத்தில் புராணம்,

இதிகாசங்கள் இடம்பெறக்கூடாது!

விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) திட்டவட்டமாகக் கூறுவதால், பாடத் திட்டங்களில் விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிரான புராணம், இதிகாசம் மற்ற மதக் கற்பனைகள் போன்றவை இடம்பெறாமல் செய்யவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்  4:

முன்மொழிந்தவர்: தருமபுரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் மாரி.கருணாநிதி

பாடத் திட்டத்தில் திருக்குறள்

திருக்குறளை தொடக்கப் பள்ளிமுதல் பட்ட மேற்படிப்பு வரை முக்கியமாக இடம்பெறச் செய்ய ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தியாவின் எல்லா மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் பாடத் திட்டங்களில் இடம்பெறச் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. பேருந்துகளில் மறுபடியும் திருக்குறள் இடம்பெறச் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்  5:

முன்மொழிந்தவர்: மேட்டூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக தலைவர் அன்புமதி

ஜாதியைக் குறிக்கும்

சின்னங்களை தடை செய்க!

ஜாதியைக் குறிக்கும் வகையிலும், வெளிப்படுத்தும் வகையிலும் வண்ணக் கயிறுகளைக் கையில் கட்டிக் கொண்டு மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு வரும் விபரீதப் போக்கை உடனடியாகத் தடை செய்யவேண்டும் என்று தமிழக அரசின் கல்வித் துறையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

முன்மொழிந்தவர்: தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சிவக்குமார்

மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதம்

மதச்சார்பற்ற அரசின் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசின் ஆணைப்படி எந்தவிதமான கடவுள் படங்களோ, பூஜை களோ இடம்பெறக்கூடாது - அப்படி மீறி நடந்தால் அது சட்ட விரோதம் என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

புதிதாக அரசு அலுவலகங்கள் கட்டும்போது பூமி பூஜை என்ற பெயரால் மதச் சடங்குகளை நடத்துவது, மழை பெய்வதற்காக யாகம் நடத்தச் சொல்லி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ததும், அப்படிப்பட்ட யாகங்களில் அமைச்சர்கள் பங்கேற்றதும் அப்பட்டமான சட்ட மீறலும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், கண்டிக்கத்தக்கதுமாகும் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமானதால் அத்தகைய மதச் சடங்குகளை நிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

முன்மொழிந்தவர்: புதுக்கோட்டை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.மலர்மன்னன்

நடைபாதைக் கோவில்களை அகற்றுக!

நடைபாதைக் கோவில்களையும், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எழுப்பப்பட்டுள்ள அனைத்து மதக் கோவில்களை யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், மத்திய - மாநில அரசுகளின் சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் உடனே நீக்கிட ஆவன செய்யப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

முன்மொழிந்தவர்: பகுத்தறிவு ஆசிரியரணி

மாநில அமைப்பாளர் சி.இரமேஷ்

‘நீட்', தேசிய கல்வியை ரத்து செய்யவேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2019 என்பது பல மாநிலங்கள், பல மொழிகள், பல இனங்கள், பல்வேறு பருவ நிலைகளைக் கொண்ட ஒரு துணைக் கண்டத்திற்குப் பொருந்தாது என்று இம்மாநாடு திட்டவட்டமாக அறிவிக்கிறது.

மாநிலக் கல்வி உரிமை பறிப்புக்கான திட்டமே இந்தக் கல்விக் கொள்கை என்று இம்மாநாடு தெரிவிக்கிறது.

மூன்றாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகளைத் திணிப்பது 5 மற்றும் 8 ஆம் வகுப்புப் பிள்ளைகளுக்கு அரசு பொதுத் தேர்வு என்பது குழந்தைத் தொழிலாளர் கொடுமை என்னும் குற்றத்தின்கீழ் வரக்கூடியது என்று இம்மாநாடு திட்டவட்டமாகக் கருதுகிறது - இத்திட்டத்தை உடனே கைவிடுமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் உறுதியாக நின்று, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவை முற்றிலும் நிராகரிக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

‘நீட்' என்பது எந்த வகையிலும் நீடிக்க அருகதையற்றது - சமூகநீதியின் குரல் வளையை நெரித்துக் கொல்லக் கூடியதேயாகும். அதனை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,081 சீட்டுகள் உள்ளன. இதில் 3,033 பேர் பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்' பயிற்சி வகுப்பு சென்று வந்தவர்கள். பயிற்சிக்குச் செல்லாத மீதமுள்ள 48 பேர்களில் பெற்றோர்கள் படித்தவர்கள் பெரும் செல்வந்தர்கள்.

இதில் ஒரே ஒருமுறை ‘நீட்' தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்தவர்கள் 1,026.

மீதமுள்ள 2007 பேர் இரண்டுக்கு மேற்பட்ட முறை பயிற்சி மய்யங்களுக்குச் சென்று பயிற்சி பெற்று ‘நீட்' தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள்.

‘நீட்' தேர்வு முடிந்த பிறகு, நாளிதழ்களில் முழு பக்கம் வரும் விளம்பரங்களைக் கொடுக்கும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணமாகப் பெறுகின்றனர்.

இது இந்த (2019-2020) ஆண்டு ரூ.13 லட்சம் முதல் ரூ.17 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 7 மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களில் அனைவருமே பெரும் செல்வந்தர்கள்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 210-க்கும் மேல் ஆகும்.

‘நீட்' ஆள் மாறாட்டம் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதாகவும், இதில் 300 பேருக்கும் மேல் ஈடுபட்டனர் என்றும் கேரளாவைச் சேர்ந்த ‘நீட்' மோசடி வழக்கில் கைதான ‘நீட்' பயிற்சி மய்யம் நடத்தும் நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமூகநீதிக்கு விரோதமான - படித்தவர்கள், பணக்காரர் களுக்கு வசதியான - ஊழல் நிறைந்த ‘நீட்'டினை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

மாநில அரசும் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களின் அடிப்படையில் மீண்டும் ஒரு மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசை வற்புறுத்தவேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9:

முன்மொழிந்தவர்: திருப்பத்தூர் மாவட்டப் பகுத்தறிவு  ஆசிரியரணித் தலைவர் இரா.பழனி

பொருளாதார அளவுகோல் ஏற்கத்தக்கதல்ல!

இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட - சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்கிற அளவுகோலே சரியானது என்பதால், எந்த வடிவத்திலும் பொருளாதார அளவுகோல் என்பது ஏற்கத்தக்கதல்ல - அது சமூக நீதியின் நோக்கத்தையே சிதற அடிக்கக்கூடியது என்று இம்மாநாடு திட்டவட்டமாக தெரிவிக்கிறது - பொருளாதார அளவுகோலை அறவே விலக்கி வைக்குமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10:

முன்மொழிந்தவர்: திருவள்ளூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கி.எழில்

தனியார்த் துறைகளிலும்

இட ஒதுக்கீடு தேவை!

விதி விலக்குகள் ஏதுமின்றி அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்றும், மிக முக்கிய மாக தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் அளிக் கப்பட வேண்டும் என்றும்,  இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

கடவுள் வாழ்த்து தேவையில்லை

பாடத்திட்டத்தில் புராண இதிகாசங்களை நீக்குக

நடைபாதைக் கோயில்களை அகற்றுக

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் ஏற்கத்தக்கதல்ல

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக

ஒரே சுடுகாடு தேவை!

தீர்மானம் எண் 11:

முன்மொழிந்தவர்: தருமபுரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கதிர்.செந்தில்

கல்வியை மீண்டும் மாநிலப்

பட்டியலுக்குக் கொண்டு வருக!

கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கானதோர் தீர் மானத்தை உடனே நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12:

முன்மொழிந்தவர்: கல்லக்குறிச்சி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீ.முருகேசன்

பெண்களுக்கான 33 விழுக்காடு சட்டம்!

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் 33 விழுக் காடு பெண்களுக்கான இட  ஒதுக்கீடு சட்டத்தை மேலும் காலதாமதம் செய்யாமல் நிறைவேற்றவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 13:

முன்மொழிந்தவர்: தஞ்சை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ச.அழகிரி

தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிதி!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை எந்த  காரணத்தை முன்னிட்டும் வேறு துறைக்குச் செலவழிக்கக் கூடாது என்று இம்மாநாடு மாநில அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 14:

முன்மொழிந்தவர்: அரியலூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தங்க.சிவமூர்த்தி

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள விடுதிகள் போதிய பராமரிப்பு இன்றி, அலங் கோலமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்கும் கட்டடம் நல்ல வசதியுடன், தக்கப் பராமரிப்புடன் பேணப்படுவது அவசியம் என்றும், அவர்களுக்கான உணவு விடயத்திலும் தக்க கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பெண்கள் தங்குவதற்கான விடுதிகளை போதுமான அளவில் அரசே உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 15:

முன்மொழிந்தவர்: தென்காசி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ம.இராசையா

மாணவர்களுக்கு யோகா என்ற பெயரால்....

மாணவர்களுக்கு யோகா என்ற பெயரால் மத ரீதியான சடங்குகளை உள்ளே நுழைக்கக் கூடாது என்றும் இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 16:

முன்மொழிந்தவர்: திருநெல்வேலி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.வேல்முருகன்

விளையாட்டுக்கு உரிய முக்கியத்துவம் தேவை!

பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியமானதோர் இடம் அளிக்கப்படவேண்டும் என்றும், வெறும் மனப்பாட படிப்பு, அதன்மூலம் பெறும் மதிப்பெண்தான் மாணவர்களின் தகுதி என்ற முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான முறையில் கல்வி திட்டம், கற்பித்தல் முறையை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் இம்மாநாடு அறிவுறுத்துகிறது.

தீர்மானம் எண் 17:

முன்மொழிந்தவர்: மன்னார்குடி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அழகிரி

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைத் திணிக்காதீர்!

குழந்தைகள் கைப்பேசியின் பொம்மைகளாக மாறாமல், பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் கடவுள், மதம், மூடநம்பிக்கைகளை அவர்களின் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கவேண்டாம் என்றும் பெற்றோர்களையும், உறவினர்களையும் இம்மாநாடு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது. ஆடம்பர நுகர்வு கலாச்சாரத்துக்கும் அவர்களை ஆட்படுத்தவேண்டாம் என்றும், பதப்படுத்தப்பட்ட வசீகரமான முறையில் டின்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள்மீதான ஆர்வம் பிள்ளைகளுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை என்றும் இம்மாநாடு தன் வேண்டுகோளாக வைக்கிறது.

தீர்மானம் எண் 18:

முன்மொழிந்தவர்: பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.திராவிடச் செல்வன்

குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டுக!

குழந்தைகளுக்கு தாய், தந்தையர் பெயர்களின் முதல் எழுத்தை இணைத்து (இனிஷியல்) தமிழில் பெயர் சூட்டுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 19:

முன்மொழிந்தவர்: தென்சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.மாணிக்கம்

சுடுகாட்டில் வேறுபாடு வேண்டாம்!

ஜாதிக்கு ஒரு சுடுகாடு, இடுகாடு என்பது ஒழிக்கப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு - இடுகாடு அமைக்கப்படுதல் வேண்டும் என்றும், மின் தகன ஏற்பாட்டை எல்லா இடங்களிலும் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 20:

முன்மொழிந்தவர்: விருதுநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.அசோக்

ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பினை உறுதி செய்க!

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைக் கொலை செய்யும் போக்கு நாளும் அதிகரித்துவருவதற்கு முடிவு கட்டப்படவேண்டும் என்றும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கென்று காவல்துறையில் தனி வசதி  செய்யப்படவேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வர சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 21:

முன்மொழிந்தவர்: நாமக்கல் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வழக்குரைஞர் இளங்கோ

மறு தேர்வுகள் தேவையில்லை

ஆசிரியர் பயிற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு மறுதேர்வு (டெட்) என்பது அவசியமற்றது என்றும், சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கும், வெளிநாடுகள் சென்று மருத்துவம் படிப்போர்க்கும் மறுதேர்வு என்பதெல்லாம் தேவை யற்ற நிர்பந்தம் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்போர் நுழை வுத் தேர்வு எழுதவேண்டும் என்பதும், கலைக்கல்லூரிகளில் சேருவதற்கும் நுழைவுத் தேர்வு என்பதெல்லாம் வளர்ந்துவரும் முதல் தலைமுறையினரையும், கிராமப்புற ஏழை, எளிய வர்களையும் ஒடுக்கும் ஏற்பாடு என்று இம்மாநாடு கருதுகிறது. இதனைக் கைவிடுமாறும் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- விடுதலை நாளேடு, 17.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக