வியாழன், 21 நவம்பர், 2019

பெரியார் பன்னாட்டு அமைப்பு செயல்படுவது எப்படி?

கொள்கையில் சமரசம் இல்லை - நாட்டிற்கேற்ப அணுகுமுறையில் மாற்றம் இருக்கலாம்!

பெரியார் பன்னாட்டமைப்பின் வெள்ளி விழாவிற்கு தமிழர் தலைவர் வாழ்த்து

சென்னை, நவ.13  பெரியார் பன்னாட்டமைப்பு - கொள்கையில் சமரசமின்றி அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப அணுகுமுறையில் மாற்றம் இருக் கலாம் என்று பெரியார் பன்னாட்டமைப்பின் வெள்ளி விழாவிற்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து அனுப்பியுள்ளார்.

பெரியார் பன்னாட்டமைப்பின் வெள்ளி விழா

பெரியார் பன்னாட்டமைப்பின் வெள்ளி விழா விற்காக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம்   வாழ்த்துரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சிகாகோ சோம.இளங்கோவன் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை காணொலிமூலம் தொடர்பு கொண்டார்.

(மலேசியா, சிங்கப்பூர், குவைத், இந்தியா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அமைப்பின் பொறுப்பாளர்களும் பங்கேற்ற ஒரு அருமையான வெள்ளி விழா காணொலி இது).

டாக்டர் சோம.இளங்கோவன்: ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

தமிழர் தலைவர்:  வணக்கம்.

டாக்டர் சோம.இளங்கோவன்: பெரியார் பன் னாட்டமைப்பின் வெள்ளி விழா நடைபெறவிருக்கிறது.  அடுத்த திட்டங்கள்பற்றி ஒரு பல்வழி அழைப்பு.  செயல்திட்டங்கள்பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களுடைய வாழ்த்துரை யுடன் தொடங்கவிருக்கிறோம்.

அய்யா அவர்கள் வாழ்த்துரையை தொடங்கலாம்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த் துரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம்.

25 ஆண்டுகள் -

எல்லையற்ற மகிழ்ச்சி

பெரியார் பன்னாட்டமைப்பு என்ற இந்த அமைப்பு நவம்பர் 13, 1994 ஆம் ஆண்டு சிகாகோவிற்கு வந்திருந்த நம்முடைய அருமை சமூகநீதிப் போராளி சந்திரஜித் யாதவ் அவர்களும், நானும், அதேபோல, டெபுடி அய்கமிஷனர், இந்தியாவும் இணைந்து, டாக்டர் சோம.இளங்கோவன்  அவர்களும், அவரு டைய தோழர்களும் உருவாக்கிய அந்த அமைப்பிற்கு 25 ஆண்டுகள் ஓடிவிட்டன என்று நினைக்கின்ற பொழுது, எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகின்றோம்.

25 ஆண்டுகாலத்தில், அவர்கள் விதைத்து, அதை ‘‘உழவாரம் செய்து'', ஒரு பெரிய அறுவடையை அண்மையில் நடைபெற்ற  வாசிங்டன் மாநாட்டின் மூலமாக நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது இந்த வெள்ளிவிழாவினுடைய சிறப்புகளில் தலைசிறந்த ஒரு சிறப்பாகும்.

அதோடு, அதற்காக உழைக்கக்கூடிய நண்பர்கள், அமெரிக்காவில் நான் பார்த்தவுடன், ஏராளமான அளவிற்கு, மிகப்பெரிய அளவில், பக்குவப்படுத்தப் பட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில், மிகச் சிறந்ததொரு அருமையான பெரியாரிஸ்டுகளாக இரு பாலரும் உருவாக்கப்பட்டு இருப்பது, எல்லையற்ற மகிழ்ச்சியை எங்களுக்கு, குறிப்பாக தலைமையகத் திற்கு, தமிழ்நாட்டில் இருக்கிறவர்களுக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், என்னை பொறுத்தவரையில், இந்த வெள்ளி விழாவில் கலந்து கொள்வதிலே, உங்களோடு உரையாடுவதிலே பல நாட்டுத் தோழர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகிறோம்.

தஞ்சையில், 1975 ஆம் ஆண்டு!

எனக்கு ஏற்படுகின்ற எல்லையற்ற மகிழ்ச்சி என்னவென்றால், பெரியாரின் வாழ்நாள் மாணவனா கிய நான், பெரியார் அமைப்பினுடைய சுயமரியாதை  இயக்க பொன்விழா மாநாட்டினை  அன்னை மணியம் மையாரின் தலைமையில், தஞ்சையில் 1975 ஆம் ஆண்டு நடத்திய பெருமை, வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அதற்கடுத்து, அன்னை மணியம்மையார் அவர் கள் இல்லை என்ற அந்த வேதனையான சூழ்நிலை இருந்தாலும், 1978 ஆம் ஆண்டில், ஓராண்டு முழு வதும் கழக சார்பில் தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை - நாடு முழுவதும் அரசு சார்பாக - (அப்பொழுது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல மைச்சராக இருந்தார்; அரசும் ஓராண்டு விழா நடத்தியது) நடந்தது.

அந்த அரசில் சில சாதனைகளும் உண்டு; வேதனைகளும் உண்டு. சாதனைகள், எழுத்துச் சீர்திருத்தம் போன்றவை; வேதனைகள், 9 ஆயிரம் ரூபாய் வருமானம் வரம்பு போன்றவை; அதிலே போராடி நாம் வெற்றி பெற்றோம்.

எனவே, அந்த நூற்றாண்டிற்கு ஒரு தனி முத்திரை உண்டு.

அன்னை மணியம்மையாரின்

நூற்றாண்டு விழா!

அதுபோலவே, அதற்கடுத்து அன்னையார்  அவர் களுடைய நூற்றாண்டு விழாவினை, அம்மா அவர்கள் இல்லாத நிலையில், கடந்த 2019 மார்ச் 10 ஆம் தேதி வேலூரில் தொடங்கி நாம் நடத்தினோம்.

அதற்கு முன் ஒரு சிறப்பு என்னவென்று சொன்னால், திராவிடர் கழகத்தின் பொன்விழா. இந்த விழாக்கள் எல்லாம், எளிய தொண்டன் காலத்தில், எனக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. என்னை மேலும் உற்சாகப்படுத்தி, பணியாற்றக்கூடிய உங்களைப் போன்றவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது, வயதை மறந்து, சூழ்நிலைகளை மறந்து, எதிர்ப்பை மறந்து தொண்டாற்றக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை, ஒரு பேறு என்று மகிழக்கூடிய அளவிற்கு வாய்ப்பைத் தந்திருக்கிறது.

நம் கழகத்தினுடைய பொன்விழா, சென்னையில் 1994 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதே ஆண்டில் தான், சிகாகோவில் நம்முடைய பெரியார் பன்னாட்ட மைப்பு தொடங்கப்பட்டது. நம்முடைய கழகப் பொன்விழாவினை, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை அழைத்து நாம் நடத்தினோம்.

மிகப்பெரிய வாய்ப்பு என்னவென்றால்,  69 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறுவதற்கு கையெழுத்துப் போட்டு, தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார் குடியரசுத் தலைவர். அதற்குப் பதிலளித்தார், மிகச் சிறப்பாக வி.பி.சிங் அவர்கள்.

அதற்கடுத்தபடியாக, அம்மா அவர்களுடைய நூற்றாண்டு விழா வேலூரில்.

அதற்கடுத்து, சிறப்பானது, நம்முடைய இயக்கத் தின் பவள விழா ஆகஸ்ட் 27 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்றது.

அதற்கடுத்து இப்பொழுது, பெரியார் இன்டர் நேசனல் என்று, தந்தை பெரியாரை உலகமயமாக்கி, உலகெங்கும் பெரியார், அவருடைய மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்ற வாய்ப்பைப் பெற்ற, பெரியார் இன்டர்நேசனலுக்கு வெள்ளி விழா.

6, 7 விழாக்கள் இன்றைக்கு விழாமல்

நம்மை உயர்த்தியிருக்கிறது

ஆகவே, 6, 7 விழாக்கள் இன்றைக்கு விழாமல் நம்மை உயர்த்தியிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

தனி ஒருவனுக்கு, ஒரு பெரியார் தொண்டனுக்கு இதைவிட பெரிய விருதுகள் வேறு எதுவுமே தேவையில்லை.

கட்டுப்பாடோடு இந்த இயக்கம், கொள்கை, போராட்ட வடிவம் இவை அத்தனையும் தாண்டி, உலகம் முழுவதும் நடைபோடுகிறது.

பெரியார் இன்டர்நேசனல், சிங்கப்பூரில் கலைச் செல்வன் போன்றவர்களின் தலைமையில் சிறப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

குவைத்தில், செல்லபெருமாள் போன்றவர் களுடைய தலைமையில் நடைபெறுகிறது.

அதேபோல, இங்கிலாந்தில் நடக்கிறது.

அதுபோலவே, மற்ற மற்ற நாடுகளில், நடக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி, தோழர் இளங்கோவன் அவர்களும், தோழர் இலக்குவன் தமிழ் அவர்களும் மிகப்பெரிய அளவிற்கு, சமூகநீதி விருது என்ற ஒன்றை உரு வாக்கி, உலகம் முழுவதும் பெரியாரைக் கொண்டு போய், பெரியார் தொண்டர்களைக் கொண்டு போய், பெரியார் கொள்கைகளைக் கொண்டு போய் நிலை நிறுத்துவதற்கு முன்னோட்டமாக இவை அத்தனையும் அமைந்திருப்பது

பாராட்டத்தகுந்தது.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

எனவே, முதலில் உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பெரியார் பெருந்தொண்டர்கள் நேரிடையாக வாழ்த்தாவிட்டாலும்கூட, இந்தக் காணொலி காட்சி மூலமாக அனைவரையும் வாழ்த்துகிறோம்.

உங்கள் தொண்டு தொடரவேண்டும். உங்கள் தொண்டு ஒரு புதிய தளத்திற்கு, நம்முடைய இயக் கத்தை, பெரியாரை, பெரியாருடைய கொள்கையை அழைத்துப் போகக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக் கிறது.

ஒன்றே ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். நான் எப்பொழுதும் பெரியாருடைய வாழ்நாள் மாணவன். அந்த வகையிலே அய்யா அவர்கள் வேறு எந்தத் தலைவரும், எந்த சிந்தனையாளரும் சொல் லாத அளவிற்கு கருத்துகளை மிக ஆழமாக எழுதுகிறார். எப்பொழுது?

நம்மைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்தில்!

தந்தை பெரியார் பேசுகிறார்!

கேட்போம் - பாடம் கேட்பதுபோல!

22.3.1931 ஆம் ஆண்டு ‘குடிஅரசில்',  தன்னுடைய தொண்டர்கள் இந்தப் பணிக்கு வருகிறவர்கள், அவர்கள் சர்வதேச ரீதியாக இருந்தாலும் சரி, உள் ளூரில் இருந்து உலகம் முழுவதும் வரக்கூடியவர்கள் எப்படிப்பட்ட பக்குவப்பட்டவர்களாக இருந்தால், இந்தப் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று அவர்கள் சொல்வதை, இன்றைக்கு ஒரு ‘மெசேஜ்' ஒரு முக்கியமான செய்தியாக இந்த வெள்ளி விழாவில் நான் உங்கள் முன் படைக்க விரும்புகிறேன்.

‘‘எவன் ஒருவன் தனது தொண்டின் பயனாய் பெரிதும் வெறுக்கப்படுகின்றானோ, வையப் படுகின்றானோ, சபிக்கப்படுகின்றானோ, பழி சுமத்தி தனிப்பட்ட முறையில் எதிர்ப்பிரச்சாரம் செய்யப்படுகின்றானோ, அவனது தொண்டு தான் பெரும்பாலும் உண்மையானதாகவும், பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க முடியும் என்பதும் அந்தப்படிக்கில்லாமல் அறிவற்ற மக்களாலும், சுய நலக்காரர்களாலும் அக்கிரம மாய் ஆதிக்கம் பெற்றானோ, பலனடைந்து வருபவர்களாலும் பகுத்தறிந்து மூட நம்பிக் கைக்காரர்களாலும் சமய சஞ்சீவிகளாலும் எவனொருவன் தனது தொண்டின் பயனால் பெரிதும் போற்றப்படுகின்றானோ,  கொண்டா டப்படுகின்றனோ அவனது  தொண்டானது பெரிதும் பயனற்றதும்,  உண்மைக்கும், நியாயத் திற்கும் எதிரானதுமாகவும் இருந்தாகவேண்டும் என்பது நமது தெளிவு. ''

இதைவிட ஒரு இயக்கத்தினுடைய கர்த்தா, கொள்கையை உருவாக்கியவர் நமக்குத் தருகின்ற எச்சரிக்கை, யார் உங்களைப் பாராட்டுகிறார்கள்? யார்  உங்களை எதிர்க்கிறார்கள்? இதிலே தெளிவாக இருக்கும் என்று சொல்லும்பொழுது,

மேலும் பெரியார் சொல்கிறார்,

‘‘ஆகவே, மனிதன்தான் செய்யும் பொதுநல சேவை இன்னது என்பதாக தீர்மானிக்கும் முன்பாக, அது உண்மையாகவே பொதுமக் களுக்குப் பயன்பட வேண்டியதாய் இருக்க வேண்டுமென்று கருதுகின்றவனாகவும், அதனால் தனக்கு வரும் எவ்வித கெடுதியையும், பழியையும் தாங்கி அலட்சியமாய்க் கருதக் கூடியவனாகவும் இருக்க வேண்டியதோடு, அத்தொண்டின் பயனாய் அவன் சுயநலக் காரர்களால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர் களால் அக்கிரமமாய் ஆதிக்கம் செலுத்தி அனுபவிப்பவர்களால் அறிவற்ற பாமர மக்களால் போற்றப்படாமல், புகழப்படாமல் இருக்கின்றோமா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும்.''

இதுதான் நமக்கு வாழ்நாள் முழுவதும் ‘‘கைடு லைன்'' - ஆணைகள்.

 

வெள்ளி விழா செய்தி!

இதை பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சார்ந்த, தெளிவுள்ள கொள்கையாளர்களாக, அந்தத் தூதுவர்களாக, இந்தக் கொள்கையை எடுத்துச் செல்லக்கூடியவர்களாக இருக்கக்கூடிய நீங்கள் இதைத்தான் வெள்ளி விழா செய்தியாகக் கொள்ளவேண்டும்.

எந்த அளவிற்கு நாம் தூற்றப்படுகிறோம் என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள். எந்த அளவிற்கு மற்றவர்களால் குறை சொல்லப்படு கிறோம் என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

அறிவற்றவர்களுடைய பாராட்டைவிட, நமக்குப் பழிப்பு வந்தால், நாம் சரியான பாதையில் செல்லுகிறோம் என்று அதற்குப் பொருள் என்று மிகத் தெளிவாக அய்யா எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவேதான், அந்தக் கொள்கையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை அவர்கள் உருவாக்கினார்கள்.

பேதம் நீக்கிய வாழ்வு -

பெண்ணடிமை நீக்கிய வாழ்வு!

அடுத்தபடியாக, பெரியார் இன்டர்நேசனல் - பெரியாருடைய தேவை என்ன? உலகளாவிய நிலை - சிங்கப்பூருக்கு என்ன தேவை? அமெரிக்காவிற்கு என்ன தேவை? என்று சொன்னால், பேதம் நீக்கிய வாழ்வு - பெண்ணடிமை நீக்கிய வாழ்வு - இப்படி ஒவ்வொன்றும் வரவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவில், அவருடைய கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்.

அய்யா அவர்கள், ஆறு துறைகளில் தன்னுடைய பணியை தொடங்கினார்கள்.

பிறவி பேத ஒழிப்பு. அதாவது ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு - இரண்டுமே பிறவி பேதம். அந்தப் பிறவி பேத ஒழிப்பு.

இரண்டாவது, சமூகநீதி - அனைவருக்கும் அனைத்தும். மிக எளிமையாக சொல்லியிருக்கிறார். இது எல்லா நாட்டிற்கும் பொருந்த வேண்டிய விஷய மாகும். இது தமிழ்நாட்டிற்கோ, இந்தியாவிற்கோ மட்டும் பொருந்தக் கூடிய ஒரு செய்தியல்ல.

அதற்கடுத்து பார்த்தீர்களேயானால், பாலியல் நீதி.

அதற்கடுத்து மனித உரிமை காப்பு. அதற்கு எங்கெங்கு ஆபத்து ஏற்படுகின்றதோ அதை நாம் பாதுகாக்கவேண்டும், நீதியின் பக்கம் நின்று, நியாயத்தின் பக்கம் நின்று.

அதற்கடுத்து, மூடநம்பிக்கைகளை எதிர்க்கக் கூடிய பகுத்தறிவு வாதம்.

ஒரே மாமருந்து தந்தை பெரியார்

அதேபோல, ‘‘செக்குலரிசம்'' என்ற மதச்சார் பின்மைக்கு எதிரான மதவெறி, மனிதர்களை ஆட்டிப் படைக்கக்கூடாது. ஜாதி வெறி எவ்வளவு மோசமோ, அதுபோல,  மதவெறி என்பது உலகளாவிய நிலையில் இன்றைக்குப் புதுப்புது வடிவத்தில் வருகின்றபொழுது, இவைகளுக்கெல்லாம் ஒரே மாமருந்து தந்தை பெரியார் என்கிற மாமருந்து ஆகும்.

பெரியார் இன்டர்நேசனல் என்பது உலகளாவிய அளவிற்கு இன்றைக்குத் தேவைப்படுகிறது. உல களா விய அளவிற்கு அதனுடைய பணி பரப்பப்பட வேண்டும்.

எப்பொழுதுமே மருந்தைக் கண்டுபிடித்தவர்கள்  எவருமே மருந்தை பரப்புவதில்லை. தத்துவங்களைக் கொடுத்த தலைவர்கள், எப்பொழுதுமே அவர்களே பரப்புவதில்லை; அவர்களுடைய தொண்டர்கள்தான் பரப்புவார்கள். அந்த வகையில், நாம் இதை மிகத் தெளிவாகப் பரப்பவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லி,

நீங்கள் சில வழிமுறைகளைக் கையாளவேண்டும் என்று நான் சொல்கிறேன்.

சூழ்நிலைக்கேற்ப

நடந்துகொள்ளவேண்டும்

பிறகு நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

பெரியார் இன்டர்நேசனலின் அடிப்படை கொள்கைகள், தேவை என்று சொல்கின்றபொழுது, அந்தந்த நாட்டில் எவை எவை பிரச்சினையோ, எந்த சூழ் நிலையோ அதற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும்.

அடிப்படைக் கொள்கையில் நாம் சமரசம் செய்து கொள்ள  வேண்டியதில்லை. ஆனால், அந்தக் கொள்கையை அடையக் கூடிய திட்டங்கள் இருக்கிறதே,  அந்த நெறிமுறைகளில் மாற்றங்களை செய்துகொள்ளலாம்.

ஏனென்றால், ஒரு நாட்டிற்குப் பொருந்துவது, ஒரு சமூகத்திற்குப் பொருந்துவது, இன்னொரு நாட் டிற்கோ,  இன்னொரு சமூகத்திற்கோ பொருந்தாது.

ஆகவேதான் பிரச்சினைகள் வெவ்வேறு வடி வங்களில் வரும்; வெவ்வேறு வழியில் வரும். பெரும் பாலும், நம்முடைய மக்கள் எங்கு போனாலும், ஜாதி யைத் தூக்கிப் போகிறார்கள்; பெண்ணடிமையைத் தூக்கிப் போகிறார்கள். இவை ஒரு பக்கத்தில் இருந் தாலும்,

மனித உரிமைகள் என்று வரும்பொழுது,

பகுத்தறிவு என்று வரும்பொழுது,

மூடநம்பிக்கைகள் என்று வரும்பொழுது

வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். அந்தந்த நாட்டில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். அந்தக் கட் டுப்பாடு, அந்த அரசாங்க முறைகள், அவைகளுக்கும் நாம் ஒத்துப்போய், மிகச் சாமர்த்தியமாக நம்முடைய இயக்கத்தைக் கொண்டு செலுத்தவேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமாகும்.

குறையைப் பார்க்காதீர்கள்;

நிறையை பாருங்கள்!

எனவேதான், சில அமைப்பு முறைகளைச் சொல் லுகிறோம்.

வாய்ப்பு இடங்களில், 5 பேர் இருந்தால், ஒரு கிளை அமைப்பை அமைத்துவிடுங்கள். ஒருவர், இருவர் இருந்தால், ‘‘ஒருங்கிணைப்பாளர்'' என்ற அளவில் செய்யுங்கள். ஒருவருக்கொருவர் அடிக்கடி தொடர்பு கொள் ளுங்கள். ‘‘தன்முனைப்பு இல்லாமல்'' பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரிடத்திலும் குறைபாடுகள் உண்டு. குறையை நீங்கள் பார்க்காதீர்கள். அவர் களிடத்தில் ஒரே ஒரு விழுக்காடு நிறை இருந்தால், அந்த நிறையை மட்டும் நீங்கள் பெரிதாக்கி, அதை வைத்து அவரை ஈர்த்து, பெரிதாக்கிக் கொள்ளுங்கள்.

எனவே, விரோதிகளை நண்பர்களாக ஆக்குங்கள்; நண்பர்களை பகைவர்களாக ஆக்காதீர்கள். இது மிகமிக முக்கியமாகும். அதற்கடுத்து,

இப்பொழுது நீங்கள் எப்படி மாநாடு நடத்தினீர் களோ, அதேபோல, ரீஜினல் கான்பரன்சஸ் கன்வன் சன்ஸ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, பல முக்கிய தலைப்புகள், அந்ததந்த நாட்டிற்கு, உங்கள் நாட்டிற்கு எப்பொழுது, என்ன தேவையோ, அந்தந்த நாட்டிற் குரியதை தெளிவாக செய்யலாம்.

இன்டர்நேசனல் ஹியூமனிசம் அசோசியேசன்

உதாரணத்திற்கு, ஆபிரகாம் லிங்கன், பிளவரி, அடிமைத்தனத்தை ஒழித்த நாள் என்று சொல்லி, அமெரிக்கர்களையும் அழைத்து, சிறப்பாக, பெரியார் இன்டர்நேசனல் ஹியூமனிசம் அசோசியேசன் - அதுபோல ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து நடத்துங்கள்.

இதிலே மட்டும் அவர்கள் ஒன்றுபட்டால் போதும்; மற்றவற்றில் அவர்கள் மாறுபட்டால், அதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

அதேபோல, பகுத்தறிவு, மூடநம்பிக்கையின் எதிர்ப்பு நாள்.

இங்கர்சால்.

இங்கர்சாலைப்பற்றி அமெரிக்க மக்களே மறந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் பெரியார் எப்படி 1930 ஆம் ஆண்டில், இங்கர்சாலைப்பற்றி சொன்னார்கள் என்பதைப்பற்றி சொல்லுங்கள்.

அதுபோலவே, மார்ட்டின் லூதர்கிங் அவர்கள், எப்படி உரிமைக்காகப் போராடினார்களோ, அவரை முன்னிலைப்படுத்தி, பெரியாருக்கும், மார்ட்டின் லூதர் கிங்கிற்கும் என்னென்ன வாய்ப்பு. பெரியார் இன்டர்நேசனல் எப்படி மனித உரிமைக்காக, அவர் களோடு தோளோடு தோள் நிற்பதற்குத் தயாராக இருக்கிறது என்கிற நம்பிக்கையை ஊட்டுங்கள்.

அதுபோலவே, பெண்களுக்கான சிறப்பான வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

வாசிங்டன் மாநாடு

பெரிய சாதனையை செய்திருக்கிறது

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு என்பது சிறப்பான திட்டம்.

ஜெர்மனி மாநாட்டைவிட, வாசிங்டன் மாநாடு பெரிய சாதனையை செய்திருக்கிறது. நல்ல வெற்றி யைத் தந்திருக்கிறது.

அதைவிட மிக அருமையான வாய்ப்பு என்ன வென்று சொன்னால், சில நாள்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னின்ன நிகழ்ச்சிகள் அங்கங்கே நடத்தவேண்டும்.

சிகாகோவில், பாஸ்டனில், நியூஜெர்சியில், கலிபோர்னியாவில், சான்பிரான்சிஸ்கோவில் என்று எங்கெங்கே வாய்ப்பு இருக்கிறதோ அங்கே நடத் தக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.

இணைய தளம் என்பது இன்றைக்கு மிகவும் முக்கியமாகும். கணினி துறையில் நீங்கள் சிறந்து விளங்குகின்ற காரணத்தால், அதிலே என்னென்ன புதுமைகளைப் புகுத்தி, பெரியாருடைய கருத்து களைக் கொண்டு செல்லலாம் என்பதில் மிகச் சிறப்பான வகையில் பணிகளை மேற்கொள்ளுங்கள்.

மிகச் சிறப்பான வகையில், அங்கங்கே அமைப்பு களை உருவாக்குங்கள்.

உதாரணமாக, சிங்கப்பூரில் தமிழர் பேரவை என்ற பெயரில் அமைப்பு இருக்கின்றது. அதில் எல்லா அமைப்புகளும் இருக்கின்றன. அதில், நம்முடைய பெரியார் அமைப்பும் இருக்கிறது.

அதுபோன்று, எங்கெங்கே எதை எதை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

மலேசியாவில், அன்பழகன் இருக்கிறார் என்றால், அவர் எந் தெந்த அமைப்பிலே அதை செய்ய வேண்டும்; செய்ய முடியும் என்று முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

உதாரணமாக, நம்முடைய கருணாநிதி அவர்கள், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில், சீக்கிய பெருமக்கள், இசுலாமிய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். நம்முடைய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பழைய மாணவிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்களையும் அடையாளம் கண்டு, அவர்களையும் இதனோடு இணையுங்கள். அதன் மூலமாக நம்முடைய பயணம், இலகுவான பயணமாக இருக்கும். இதை நீங்கள் தொடர்ந்து செய்யக்கூடிய வாய்ப் பைப் பெறுங்கள்.

மூன்று காரணங்களை சொன்னார்கள்

இன்னும் ஒன்றை சொல்லி, என் னுரையை நிறைவு செய்யவிருக் கிறேன்.

அது என்னவென்று சொன் னால்,

என்னை அவர்கள் பாராட்டி, விருது அளித்தபொழுது, அதற்கு நான் நன்றி செலுத்தவேண்டும்; அதனுடைய பெருமை உங்கள் எல்லோருக்கும் உண்டு.

அந்த சைட்டேசன் என்பதில் மூன்று காரணங்களை சொன் னார்கள்.

ஒன்று,

அவருடைய சிந்தனை.

பெரியாரை சொல்லுகிறார்கள் என்றுதான் நான் கொள்ளுகிறேன், என்னை அல்ல.

இரண்டு,

எழுத்துக்கள்.

மூன்றாவது,

ஆக்டிவிசம் (செயல்பாடு).

எனவே, அமைப்பு ரீதியாக நாம் தெளிவாக வேண்டும். நம்முடைய தோழர்களிடம் சிறுசிறு கருத்து மாறுபாடுகள் இருக்கும். அதைப் பெரிதாக்க வேண்டாம், தயவு செய்து. அதுதான் என்னுடைய பணிவன்பான வேண்டுகோளாகும்.

யாரையும் நீங்கள் இழக்காதீர்கள்

யாரையும் புறந்தள்ளாதீர்கள்.

ஒரு சிறு புள்ளியாக இருந்தாலும், அதை பெரி தாக்கிக் காட்டவேண்டும். அதுதான் பெரியார் அவர் களுடைய முறை. ஷ்தமிழகத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் எல் லோருமே அதில் மிகப்பெரிய அளவிற்கு இருக் கிறோம்.

புதிய நண்பர்களை அழைத்து,

வாய்ப்புகளைக் கொடுக்கவேண்டும்!

அமெரிக்காவினுடைய ஹியூமனிசம் அசோசியே சனை இப்பொழுது இணைத்தது என்பது மிகப்பெரிய செயலாகும்.

உதாரணமாக, நம்முடைய இலக்குவன்தமிழ் அவர்கள், புதிய நண்பர்களையெல்லாம் அழைத்து வந்து, அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அது போன்று நிறைய அளவிற்கு புதிய நண்பர்களை அழைத்து, வாய்ப்புகளைக் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொருவரையும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் தயாராக்குங்கள்.

அங்கே அமைதியாக இருந்து செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. பெரிய அளவிற்கு எங்களைப் போன்று போராட்டக் களத்தில் இறங்கக் கூடிய வேலைகள் கிடையாது உங்களுக்கு. ஆகவே, அதனை நீங்கள் தெளிவாகச் செய்யுங்கள்.

நம்முடைய எண்ணத்தில்,

ரத்தத்தில் ஊறிவிட வேண்டும்

இறுதியாக ஒன்றைச் சொல்லுகிறேன்,

‘‘புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி''

என்று சொன்னபொழுது,

பெரியாரிடம் கேட்டார்கள், இது மதம் சார்ந்ததாக இருக்கிறதே, இதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள் கிறீர்கள்? என்று.

அதற்குத் தந்தை பெரியார்  விளக்கம் சொன்னார்,

அது மதம் சார்ந்ததல்ல. பகுத்தறிவு - யதார்த்தம் என்று.

‘புத்தம்'  என்பது தலைமை - ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு நான் இருக்கிறேன், என்னை ஒப்ப டைத்துக் கொள்கிறேன்.

தம்மம் என்பது கொள்கை - அந்தக் கொள்கையை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

மூன்றாவது சங்கம் - நிறுவனம், அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

எனவே, மேற்கண்ட மூன்றும் நம்முடைய எண் ணத்தில், ரத்தத்தில் ஊறிவிட வேண்டும்.

யாரையும் கடுமையாக விமர்சிக்காதீர்கள்.

அதோடு, யாரையும் கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்காதீர்கள். ஏனென்றால், அவர்களையே நாம் மறுபடியும் சந்திக்கவேண்டிய அவசியம்  இருக்கும்.

தமிழகத்தில், நம்மை விட்டு வெளியேறியவர்கள், என்னைக் கடுமையாகப் பேசியவர்கள், திராவிடர் கழகத்தைப்பற்றி கடுமையாக விமர்சித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு நெருங்கி வருகிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்?

நாம் அவர்களுக்குப் பதில் சொன்னதே கிடையாது. ஒரு உதாரணத்திற்காகத்தான் இதை நான் சொல் கிறேன்.

ஆகவேதான், தயவு செய்து, தள்ளி இருக்கிற வர்களாக இருந்தாலும், அவர்களை நெருக்குங்கள்; அழைத்து வாருங்கள், வாய்ப்பைத் தாருங்கள். புதிதாக வருகின்றவர்களுக்கு கதவைத் திறங்கள். மற்றவர்களை மனந்திறந்து பாராட்டுங்கள். அதன் மூலமாக இந்த நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக செய்யக் கூடிய வாய்ப்புகளைப் பெறுங்கள்.

வியப்படையக் கூடிய அளவிற்கு செய்யுங்கள்

ஒரு நல்ல இணைய தளத்தை உருவாக்கி, உங்களுடைய பணிகள் என்ன என்பதை சரியாகச் செய்து, விளம்பரம் செய்யாமல் பெரியார் இன்டர்நேசனல் என்று சொன்னால், வியப்படையக் கூடிய அளவிற்கு செய்யுங்கள்.

வாழ்க பெரியார்! வளர்க வெள்ளி விழா காணும் உங்களுக்கு மீண்டும் திராவிடர் கழகத்தின் சார்பில், எங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

இடையூறுகளைத் தாண்டும், தாங்கும் தடந்தோள்கள் உண்டு!

உங்களுடைய லட்சியப் பயணம் தொடரட்டும்!

எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும், அதனைத் தாண்டி, தடைக்கற்கள் உண்டென்றாலும், அதனைத் தாண்டும், தாங்கும் தடந்தோள்கள் உண்டு என்று காட்டுங்கள்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு தொடக்க விழா நிகழ்ச்சிபற்றி ‘‘இண்டியன் டிரிபியூன்'' (சிகாகோ பதிப்பு) நாளிதழில் வெளிவந்த செய்தி (19.11.1994)

- விடுதலை நாளேடு 13 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக