புதன், 3 மே, 2017

புரட்சிக் கவிஞரின் பகுத்தறிவு முழக்கம்!




அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத எதுவும், தனிநபருக்கோ, சமுதாயத்துக்கோ முட்டுக்கட்டையாக இருந்து முன்னேற்றத்தை - வளர்ச்சியைத் தடுக்கும் எதுவும், கேள்விக்கு உட்படுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே ஏற்றுக்கொள்கிற எதுவும், பரிசீ லித்துப் பார்க்காமல், அலசி ஆராயாமல் அப் படியே ஒப்புக்கொள்ளும் எதுவும் மூடநம்பிக் கைகளே! மடமைச்செயல்களே! மட்டித்தனங் களே!

மனித சமுதாயம் மேதமையோடு வாழத் தானே பகுத்தறிவு! எதையும் ஏன்? எதற்காக? எப்படி? என்று கேள்விகேட்டு தெளிந்த பார்வையோடு ஒன்றை ஏற்றுக்கொள்வதுதானே அறிவுடைமை! அன்று தொட்டு இன்று வரை ஏன் மக்கள் மூடவியாபாரிகளிடம் சரணடை கிறார்கள்? முடைநாற்றம் வீசும் மடமைக் கருத் துக்கள் பால் தலைசாய்க்கிறார்கள்? மூடநம்பிக் கைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக ‘கடவுள்’ என்னும் கருத்து இருப்பதால்தான். கடவுள் என்ற ஆணிவேரை வெட்டி அகற்றிப் போடாமல் மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது சாத்தியமாகாது. அதனால்தான் தத்துவப் பேராசான் ‘கடவுள் இல்லை’ ‘இல்லவே இல்லை’ என்றது.... மூடநம்பிக்கை கிளைகளை எத்தனை முறை வெட்டிவெட்டிப் போட்டாலும் மீண்டும் அவை துளிர்க்கவே செய்யும். மூடநம்பிக்கை களின் அடிப்படையான கடவுளை எதிர்த்து கடைசி காலம் வரை தந்தை பெரியார் சமர் செய்தது அதனால்தான்!

மூடநம்பிக்கை எனும் தொற்று நோயை பரவவிடாமல் அழித்தொழிக்க வேண்டும். மடமை இருளிலிருந்து மக்களை வெளிச்சத்துக்கு மடைமாற்றம் செய்தாக வேண்டும். மீண்டும் மதக்கருத்துகள் ஏற்படுத்தும் மூடப்புதைகுழியில் அப்பாவி மக்கள் புதைந்து போகாமல் பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கச் செய்ய வேண்டும். மானுடத்தின் மேன்மையை விரும்பும் மனிதர்கள் யாராக இருந்தாலும் அறிவுலக ஆசான் அய்யா பெரியாரின் அடியொற்றி நடைபயில வேண்டும். பாட்டாலே மடமைக்கு வேட்டு வைத்தப் பாவலனாம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்துகளை பின் தொடர்ந்தால் பகுத்தறிவு ஓங்கும் - மனிதநேயம் தழைக்கும்.

சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு. எதனையும் ஆராய்ந்து பார்த்து அறிவின் வழி விடை காண்பதே பகுத்தறிவு. பழமைக்கு விடை கொடுத்து புதுமைக்கு வழிகோலுவதே பகுத்தறிவு. பகுத்தறிவின் முன் மூடநம்பிக்கைகள் முனை மழுங்கி முறிபடும். மனிதகுல ஏற்றத்துக்கும் எழுச்சிக்கும் வித்திடுவது பகுத்தறிவு. பகுத்தறிவு பரவப்பரவ மூடநம்பிக் கைகள் அற்று வீழும் என்பதை புரட்சிக்கவிஞர் தமது பாடல்களில் பல்வேறு இடங்களில் சுட்டுகின்றார். ஒவ்வொரு மாந்தனும் அறிவுவழி நின்று அறிவு வினா தொடுக்கும் நாளை மடமை கிழிக்கும் நாளாக, அறிவை ஊட்டும் நாளாக, மானம் உணரும் நாளாக புரட்சிக்கவிஞர் குறிப்பிடுகின்றார். பகுத்தறிவுச்செயல் பரவுதல் வேண்டும் என்கிறார், மூடச்செயல்கள் முறிபடல் வேண்டும் என்கிறார்.

“பச்சை விளக்காகும் - உன்
பகுத்தறிவு தம்பி
பச்சை விளக்காலே - நல்ல
பாதை பிடி தம்பி” என்று பகுத்தறிவு எனும் பச்சை விளக்கை இளைய தலைமுறை ஏந்திட வேண்டும் என்கிறார்.
நாணு மூடவழக்கம் நாடுதல் பெரிதா?
நல்லறிவென்னும் வழிச்செல்லுதல் பெரிதா?
பாழ்படும் பழமை சூழ்வது திறமா?

பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா? என கேள்வி மேல்  கேள்வி தொடுக்கும் புரட்சிக் கவிஞர் பகுத்தறிவுப் பான்மையைப் போற்று கின்றார். மேலும் கவிஞரின் பாடல் பேசும் பகுத்தறிவின் சிறப்பினைப் பார்க்கலாமா?

“இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!

மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே!

வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்?

சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றைச்

சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை

வெருட்டுவது பகுத்தறிவே”

என்றும் பறைசாற்றுகின்றார்.

வீடின்றி மக்கள் தவிக்கின்றனர்; ஆடையின்றி அலைகின்றனர் பலர்; கல்வியைப் பெற முடியாமல் கலங்குகின்றனர் பலர்; தொழிலும், வாணிபமும் கெட்டு வதைகின்றனர் பலர்; நோய் நொடியால் நொடிகின்றனர் சிலர்; பசியால் பரிதவிக்கின்றனர் பலர். இப்படிப்பட்ட இல்லா மையை, கல்லாமையை, போதாமையை தடுத்து எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கச் செய்திட பக்தர்கள் ஏற்றியும் போற்றியும் தொழுதிடும் கோயிலும், கடவுளும், ஆத்திக வைதீகமும், மந்திரங்களும், குருமார்களும், அவர்தம் உச்சாடனங்களும் என்ன செய்து கிழித்தன என கேட்டு “கடவுள் என்பது இல்லாத ஒன்று” என்பதை நிலைநாட்டுகிறார் புரட்சிக் கவிஞர். தந்தை பெரியார் எழுப்பிய அறிவுக்கணை களையே பகுத்தறிவுப் பாவலரான பாரதிதாசன் தமது பாட்டால் இப்படி விளாசுகிறார்? பதில் சொல்ல அன்று தொட்டு இன்றுவரை பக்த பிரசங்கிகளால் இயலவில்லை என்பதே உண்மை.

“உங்கள் ஆஸ்திகம் உங்கள் வைதீகம்
உங்கள் கடவுள் உங்கள் கோயில்
உங்கள் குருக்கள் உங்கள் அய்யர்
உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம்
உங்கள் யோகம் உங்கள் யாகம்
உங்கள் விரதம் உங்கள் பூசனை
உங்கள் சடங்குகள் உங்கள் மடங்கள்
இவைகள் இதுவரை என்ன செய்தன?
ஆயிரம் ஆண்டாய் அசைத்த தென்ன?
இலட்சம் ஆண்டாய் ஈந்த தென்ன?
ஓர்யுகமாக உருட்டிய தென்ன?
சதுர்யுகமாகச் சாய்த்ததென்ன?
பசியால் மக்கள் பறக்கின்றாரே
நோயால் மக்கள் நொடிகின்றாரே
தொழிலின்றி மக்கள் சோர்கின்றாரே
வாணிபம் கெட்டு வதைகின்றாரே
கல்வியின்றிக் கலங்குகின்றாரே
ஆடையின்றி அலைகின்றாரே
வீடின்றி மக்கள் வெளிக்கின்றாரே”
“கல்வியில்லாத பெண்கள்
களர்நிலம்! அந்நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி, அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவிலவோ நான்?
பெண்கட்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியை பேணுதற்கே!”

(குடும்ப விளக்கு - பாரதிதாசன்)

மானுடம் மேன்மையுற வேண்டுமெனில் பெண்கள் படித்தவர்களாக, விழிப்புணர்ச்சி உள்ளவர்களாக அமைதல் வேண்டும். பெண் ணடிமை ஒழிந்து பெண்ணுரிமை உள்ள சமுதாயமாக ஆக வேண்டும் என்று தான் தந்தை பெரியார் அரும்பாடுபட்டார். மகளிர் உரிமை எனும் தடத்தில் பெரியாரின் பங்களிப்பு மிக உயர்ந்தது. பெரியாரின் வழித்தடத்தில் பாடல்கள் புனைந்த பாவேந்தர் பெண்கல்வியை கொண் டாடினார். பெண்ணடிமை தீருமட்டும் நாட்டின் மண்ணடிமை தீருவது முயற்கொம்பே என்றார். நல்ல விழிப்புணர்ச்சி மிக்க தாயின் வயிற்றில்தான் நல்லறிவுடைய மக்கள் தோன்றுவர் என புரட்சிக் கவிஞர் சொல்லுவதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கல்வியைப் பேணவும், உலகினைப் பேணவும், மக்களைப் பேணவும், குடித்தனம் பேணவும் கல்வி பெண்களுக்கு அவசியம் என்றார் கவிஞர்.

சாணியை எரிபொருளாக பார்ப்பது - பயன் படுத்துவது நல்ல நம்பிக்கை. அதே சாணியை சாமியாக ஏற்றுக்கொள்வது மூடநம்பிக்கை. சாணியை, பசுமூத்திரத்தை தயிரோடும், பாலோடும், நெய்யோடும் கலந்து பஞ்சகவ்யமாக பவ்வியத்தோடு சாப்பிடுவதும் மூடநம்பிக்கையே!

அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் “சாணிக்குப் பொட்டிட்டு சாமியென்பார் செய் கைக்கு நாணி கண்ணுறங்கு நகைத்து நீ கண் ணுறங்கு” என்கிறார். பகுத்தறிவு என்பது ஆதாரத் தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள் வது. மடமைத்தான் அச்சத்தின் வேர் என்கிறார் புரட்சிக்கவிஞர். அச்சமும் மடமையும் இல்லாத பெண்களே அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்று பகர்கிறார் புரட்சிக் கவிஞர்.

“உச்சி இருட்டினில் பேய் வந்ததாக
உளறினால் அச்சமா? பேய் என்பதுண்டா?
முச்சந்தி காத்தானும் உண்டா? இதை 
முணுமுணுப்பது நேரில் கண்டா?
கள்ளுண்ணும் ஆத்தாளும் ஏது? - மிகு
கடிசாராய முனி ஏது?
விள்ளும் வைசூரிதான் மாரியாத் தாளாம்
வேளை தோறும் படையல் வேண்டும் என்பாளாம்!”

மடமைக்கு விடை கொடுக்கும் புரட்சிப் பெண்களாக, புதுமைப் பெண்களாக மகளிர்குலம் மாறிட வேண்டும் என்கிறார்.
“உருவிலா ஒன்றுக்குருவமைத்தது

பெரியதோர் மடமை” - என்றும்,
“மடமையை நாட்டில் மலிவு செய்தால்
உடமையை லேசாய் உறிஞ்சலாம் என்பது
பூசாரி எண்ணம்” - என்றும்
“பேடி வழக்கங்கள், மூடத்தனம் - இந்தப்

பீடைகளே இங்கு சாத்திரங்கள்” என்றும் சொன்னதுடன் வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கிடும் மூடப்பழக்கம் எனும் மாடுகளை சீர்திருத்தி வண்டியிலே பூட்டிட இளைய தலை முறைக்கு அழைப்பு விடுக்கும் புரட்சிக்கவிஞர் பெரியார் எனும் உரை நடையின் கவிதை வடிவம்தானே!

“பார்ப்பனன் உயர்வு என்கிறீர்கள், சத்திரி யனை இரண்டாம் என்கிறீர்கள், வைசியர் அவன் அண்டைபடி என்கிறீர்கள், சூத்திரன் கடைசி என்கிறீர்கள். “பஞ்சமன்” என்கிறீர்கள் இன்றைக்கு மாத்திரம் இன்றி இவைகளை உண்டாக்கியதாய்ச் சொல்லும் பிரமன் ஒருவன் இருந்தால் அவன் காலத்திலேயே இவை சுத்தப்பொய் என்பதை சிந்திக்க மறுக்கிறீர்கள். இந்த நிலையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவைகள் உமது இதயத்தில் இடம் பெறுவது எப்படி? என வினா தொடுக்கும் புரட்சிக்கவிஞர் பிரம்மனின் முகத் தில், தோளில், தொடையில், காலில் முறையே பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் எனும் நால்வரும் உருவானதாகக் கூறும் ஆரிய கற்பனையையும் சாடுகிறார்”.

“முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே
தோளில் பிறப்பதுவும் உண்டோ தொழும் பனே
இடையில் பிறப்பதுவும் உண்டோ எருமையே
காலில் பிறப்பதுவும் உண்டோ கழுதையே
நான்முகன் என்பான் உளனோ நாயே
புளுகடா புகன்றவையெலாம் போக்கிலியே”

என்ற புரட்சிக்கவிஞர் தம் பாடலில் இருக்கும் சூட்டை, கோபத்தை, வேகத்தை என்னவென்று சொல்லுவது? சமுதாயத்தின் மீது கவிஞருக்கு இருந்த பற்றுதலே இப்படி அவரை கோபப்பட வைத்தது. பெரியாரின் கொள்கை சாரமே இதற்கு அடிப்படை. தாலாட்டுப்பாடும்போதும் தளரா கொள்கைப் பேசும் புரட்சிக்கவிஞர் - சாதியை, மதத்தை, கடவுளை, தொப்பை வளர்க்கும் பார்ப்பனர் கூட்டத்தை கூட்டி அந்த பொல்லாங்குகளை தவிர்த்திட அறிவுறுத்தும் அழகியலை, பகுத்தறிவு சீர்மையை பாருங்கள்:

“மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற
காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம் விடுவிக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணில் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே!
தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண் குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று தொடை நடுங்கும்
பொல்லாங்குத் தீர்த்துப் புதுமை செய வந்தவளே!
வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயில் என்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே!”

அடடா... அய்யாவின் கருத்தின் பிரதிபலிப்பே புரட்சிக் கவிஞர் என்பதை புலப்படுத்துகிறார். தந்தை பெரியாரின் கொள்கைச் செழிப்பால் எப்படிப்பட்ட நிலைமைகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் பட்டியலிடுகிறார் கவிஞர்.

“வந்தேறிகளால் வாழ்நாள் எல்லாம்
அறியாமை இருட்டில் ஆழ்ந்திய தமிழர்க்கு 
அறிவொளி கூட்டிய அன்புடை பெரியார்
சீர்த்திருத்தத்தால் செம்மை நெறியினை
ஆர்வத்தோடும் மக்கள் அணைக்கையில்
சாதி என்னும் சழக்கு தகர்ந்தது.
சமயம் என்னும் தடைச்சுவர் இடிந்தது
மதத்தின் நரித்தனம் மடிந்தொழிந்தது
இவற்றைத் தாங்கிய என்றும் இலாத
கடவுள் என்னும் கயமையும் மறைந்தது”

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில், பகுத்தறிவுப் பேரியக்கத்தில், திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அறிவுலக ஆசானின் அறிவார்ந்த லட்சியங்களை, புரட்சிகர கருத்துகளை, மனித சமத்துவ கருத்துகளை பாடுவதையே - எழுத்தாக்கி பறை சாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்திட்ட புரட்சிக் கவிஞர் வாழ்க! அவர் எண்ணம் ஈடேற உழைப்போமாக!



,விடுதலை,29.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக