• Viduthalai
"நாத்திகம் - எதிர்மறையான கருத்தல்ல; மனிதரின்
முன்னேற்றம் - வளர்ச்சிக்கான ஒரு வாழ்வியல் முறை"
தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலி வழி நிறைவுரை ஆற்றினார்
ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் அமைந்துள்ள நாத்திகர் மய்யத்தின் ஏற்பாட்டில் அதன் நிறுவனர் நாத்திக அறிஞர் கோரா அவர்களின் 120ஆம் ஆண்டு மற்றும் சரஸ்வதி கோரா அவர்களின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள்களை போற்றும் விதமாக பன்னாட்டு மாநாடு விஜயவாடாவில் நடைபெற்றது.
2023 ஜனவரி 7, 8 & 9 ஆகிய மூன்று நாள்கள் நாத்திகர் மய்ய வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் உரை நிகழ்த்தினார். ஜனவரி 7ஆம் நாள் தொடங்கிய மாநாட்டு நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நாட்டின் பிற மாநிலங்களி லிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நாத்திக அமைப் பினர் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.
தொடக்க நிகழ்ச்சி
மாநாட்டு தொடக்க நிகழ்ச்சிக்கு நாத்திகர் மய்யத்தின் தலைவர் டாக்டர் கோ. சமரம் தலைமை வகித்தார். "நாத்திகம் - மதச் சார்பின்மை சிந்தனை & சமூகச் செயல்பாடு" எனும் மாநாட்டின் நோக்கம் குறித்து நாத்திகர் மய்யத்தினைச் சார்ந்த விகாஸ் கோரா விளக்க வுரை ஆற்றினார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் மேனாள் பேரவை துணைத் தலைவர் மண்டலிபுத்தபிரசாத், சட்டமன்ற உறுப்பினர் கட்டே ராமமோகன், அமெரிக்க நாட்டு - மதத்திலிருந்து விடுதலைக்கான நிறுவனத்தின் இணை நிறுவனர் டான் பார்க்கர் மற்றும் அமித்பால், ஜெர்மனி நாட்டு - அய்யுறும் உளப்பாங்கிற்கான (ஷிளீமீஜீtவீநீ) அய்ரோப்பிய மன்றத்தின் தலைவர் அமர்தேவ் சர்மா, இந்திய பகுத்தறி வாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், மராட்டிய மாநில மகாராட்டிரா அந்த ஸ்ருத நிர்மூலன் சமிதியின் தலைவர் அவினாஷ் பாட் டில், இங்கிலாந்துநாட்டு மனிதநேயர் பன்னாட்டமைப்பின் உத்தம் நிருலா, பஞ்சாப் மாநில தர்கச்சீல சங்கத்தின் சுமீத் சிங், ஒடிசா பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு, டில்லியிருந்து பத்திரிகை யாளர் சக்தி எடமருகு மற்றும் விடுதலை வீராங்கனையும், காந்திய நாத்திகருமான திருமதி மனோரமா ஆகியோர் உரையாற்றினர்.
கருத்து அமர்வுகள்
முதல் நாள் பிற்பகல் தொடங்கி 'ஊடகமும், மதச் சார்பின்மையும்', "நாத்திகமும் அரசியலும்", "மதச்சார் பற்ற சமூகப் பணிகள்", "பன்னாட்டு மனிதநேயர் இயக் கம்" ஆகிய நான்கு தலைப்புகளில் உரை வீச்சு & கலந்து ரையாடல் நடைபெற்றது. மாலையில் கோரா - சரஸ்வதி கோரா ஆகியோரது வாழ்க்கை பற்றிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
ஜனவரி 8ஆம் நாளன்று கருத்து அமர்வுகள் இரண்டு அரங்குகளில் தொடர் நிகழ்வுகளாக நடைபெற்றன. 'அறி வாய்வு சிந்தனையும் தடையற்ற விளக்க விசாரணையும்', 'மனித உரிமையும் நாத்திகமும்', 'நாத்திகம் ஒரு வாழ்க்கை முறை'', 'கல்வியும் அறிவியல் பார்வையும்', 'மதவாத உச்சக்கட்டமும் மதவெறியும்', 'புத்துலகில் சமூகச் செயல்பாடும், சீர்திருத்தமும்' ஆகிய தலைப்புகளில் உரைவீச்சும், விவாத விளக்கங்களும் நிகழ்ந்தன.
நிறைவு நிகழ்ச்சி
மாலையில் நடைபெற்ற மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக நிறைவுரை ஆற்றினார். மாநாட்டுப் பேராளர்கள், பார்வையாளர்கள் மற்றும் நாத்திகர் மய்யத்தினர் நிறைவு நிகழ்ச்சியில் ஆசிரியர் அவர்களின் உரையினை செவிமடுத்தனர்.
ஆசிரியர் அவர்களின் நிறைவுரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது நிறைவு ரையில் பேசியதன் சுருக்கம்:அண்மையில் நாத்திகர் மய்ய தொடக்க கால செயல் பாட்டாளரும், கோரா - சரஸ்வதி கோரா அவர்களின் முதல் மருமகனுமான அர்ஜூன் ராவ் (வயது 105) அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாத்திகர் மய்யத்தை நிறுவிய கோரா அவர்கள் சமூக மாற்றங்களை உருவாக்கிய நாத்திகராக வாழ்ந்து மறைந் தார். அவர் நினைத்ததை, லட்சியத்தை எட்டு கின்ற வகையில் அவருக்குப் பின்னர் பணியாற்றிய காலம் சென்ற லவனம், விஜயம் மற்றும் கோரா குடும்பத்தைச் சார்ந்த மறைந்த பெருமக்கள் அனைவரும் போற்றுதலுக் குரியவர்கள். இன்றைய பொறுப்பாளர்களும் தொடர்ந்து கோரா காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களது நாத்திகம் பரப்பிடும் பணி தொடர வேண்டும் என்பது எமது விருப்பம்.
தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பொழுது கோரா அவர்கள் கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வந்தார். 'கடவுள் எனும் கோட்பாடு' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிய கோரா, பலவித கண்டனங்களுக் கும், கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கும் ஆளானார். சுதந்திரப் போராட்டத்தோடு நாத்திகம் பரப்பிடும் பணியிலும் கோராவும், அவரது இணையரான சரஸ்வதி கோராவும் ஈடுபட்டு வந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களுக் காகப் பணி யாற்றிய அவர்தம் பாங்கு, அதனால் பயன் பெற்ற மக்களாலேயே தொடக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நாத்திகம் என்பது எதிர்மறையான கோட்பாடு அல்ல; நேர்மறையானது; மனிதரை மேம்படுத்திட வல்லது என எடுத்துரைத்தார்; சென்ற இடமெல்லாம் கொள்கை முழக்கம் புரிந்தார்.
இந்த மாநாட்டின் நோக்கம் நாத்திகம், மதச்சார் பின்மையை வலியுறுத்துவதாக உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே 'மதச் சார்பின்மையைக் கொண்ட நாடு' என பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு அந்தக் கோட்பாடு நடைமுறையில் உள்ளது என்பது கேள்வியே. இந்தக் கோட்பாட்டையே பொருளற்றதாக்கும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் 'கடவுள் காப்பாற்றுவார்' என்று குரல் எழுப்புபவர்களாக உள்ளனர். ஏன் அமெ ரிக்க நாட்டில் 'புழக்கத்தில் உள்ள பண நோட்டில்கூட 'கடவுளின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்' (மிஸீ நிஷீபீ ஷ்மீ ஜிக்ஷீust) என்று அச்சடிக்கப்பட்டுள்ள அளவில் மதச் சார்பின்மையை பொருளற்றதாக்கி வருகின்றனர்.
இறையாண்மை மக்கள் வசமே
இறையாண்மை என்பது 'இறைவன்' என்று சொல்லப் படுகின்றவரிடம் இல்லை; இந்திய அரசமைப்புச் சட் டத்தை நாட்டுக்கு, தமக்குத்தாமே வழங்கிக் கொண்டுள்ள இந்த நாட்டு மக்களிடம்தான் இறையாண்மை உள்ளது. இதை மறுக்கின்ற வகையில் 'கடவுளிடம்தான் அனைத் தும் உள்ளது' என்பது தவறானது மட்டுமல்ல; அரசமைப் புச் சட்டத்தினையே அவமதிக்கும் செயலாகும்; அரச மைப்புச் சட்டம் உருவான பொழுது அந்த அவையிலே, முதுபெரும் சமதர்மக் கொள்கையாளர் என்று அறியப் பட்ட எச்.வி. காமத் தனது கூற்றாக - முகப்புரையிலே 'கடவுளின் பெயராலே' என்ற வாசகங்கள் இடம் பெற வேண்டுமென வாதிட்டார். பகவத் கீதையின் உள்ளீடாக 'கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாகவும் இருந்திட வேண்டும்' எனக் கூறினார். ஆனால் அவரை ஆதரித் தோர் வெகு சிலரே - எதிர்த்தோர் மிகப் பலர். இதுதான் அரசமைப்புச் சட்டம் உருவான வரலாறு.
அந்த நேரத்தில் அத்தகைய எதிர்ப்பு நிலவி, அரச மைப்புச் சட்டம் உருவானதில் டாக்டர் பி.ஆர்.அம் பேத்கர் அவர்களின் பங்குபெரிதானதாகும்.
ஆனால், இன்று அத்தகைய நிலைமைகள் தலைகீழாக மாறிப் போயுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டி, நாட்டு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் என்பது மதச்சார்பின்¬யை கேலிக் கூத்தாக்குகிறது.
சமூகத்தில் நியாயமாக நடைபெற வேண்டிய செயல்பாடுகள் தாமதமாவதைப் பொறுத்துக் கொள்ள லாம்; முரண்பாடானவை நடைபெறும்பொழுது எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அன்றாடம் மக்கள் நேர்கொள்ளும், அவதிப்படும் பிரச்சினைகளான வேலையின்மை, விலைவாசி ஏற்றம், அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் தடை என்று உள்ள நிலையில், மக்களை திசை திருப்பிட கோயில்கட்டும் பணியில் கவனம் செலுத்தி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்குள் கட்டி முடித்திட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டம் - மதவாத முடக்கம்
தமிழ்நாட்டின் - இந்திய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு, கடல்வழி வர்த்தக வளர்ச்சிக்கு உதவிடும் சேதுக் கால்வாய் திட்டம் முறையாக ஆய்வு செய்து அரசு அனுமதி பெற்று அரசே தொடங்கிய திட்டம். இதனை புராணப் புனைவான இராமன் கட்டிய பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாக அரசியல் வாதிகள் போர்வையில் உள்ள மதவாதிகள் உச்சநீதிமன் றத்திற்குச் சென்று தடையாணை பெற்றுள்ளனர். உலகில் பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்று வரவிருந்த சேது சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இத்தகைய மனித முன்னேற்றத்தை மறந்து, மதத் தைத் தூக்கிப் பிடித்து மனிதத்தை மறுக்கும் செயல்கள் முறியடிக்கப்பட வேண்டும். இவை குறித்தெல்லாம் இந்த மாநாடு கலந்து பேசி, விவாதம் மேற்கொண்டு ஆக்கரீதியாக தீர்மானங்களை நிறைவேற்றிட வேண்டும். நாத்திக அடிப்படையில் மதச்சார்பின்மை உலகெங்கும் வலியுறுத்தப்பட வேண்டும். மாநாட்டு நிகழ்ச்சிகள் அதன் நோக்கத்தினை நிறைவேற்றிடும் வகையில் வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகிறோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
கழகப் பொருளாளரின் உரை
மாநாட்டினை தொடங்கி வைத்து திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆற்றிய உரையின் சுருக்கம்:
நாத்திகத்தினை நோக்கமாகக் கொண்டு மாநாடு நடைபெறுகின்றது. சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிலவிடும் சூழலில் - கடவுள்கள் பெயரால் பேதம், பிரிவினை, உரிமை மறுப்பு நடைபெறும் சூழலில் நாத்திகம் என்பது கடவுள் மறுப்போடு மட்டுமல்ல; கடவுள் எதிர்ப் பாகவும் களம் காண வேண்டும். இது யாரையும் புண் படுத்திட அல்ல; மனிதனை - ஒடுக்கப்பட்ட மக்களை ஏற்றம் காணச் செய்திடும் செயல். இதுதான் நேர்மறை நாத்திகம் (றிஷீsவீtவீஸ்மீ கிtலீமீவீsனீ) ஆகும்.
மேற்கத்திய நாடுகளில் மனித உரிமைக்காகப் போராடியவர்கள் பலர் மத நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தனர். காரணம் அந்த மதங்களின் கடவுளர்கள் மனிதரைப் பேதப்படுத்திடவில்லை; ஒடுக்கப்படுவதை வலியுறுத்திடவில்லை. ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மதம் கடவுளின் பெயரால் மனிதரை பிளவுபடுத்தியுள்ளது. எனவே மனிதரை ஒன்றுபடுத்திட, ஒற்றுமைப்படுத்திட கடவுள் மறுப்பு - கடவுள் எதிர்ப்பு அவசியமாகியது. இதைத்தான் தந்தை பெரியார் 'கடவுள் மற - மனிதனை நினை' என சமூகச் செயல்பாட்டுக்கான முழக்கமாக வழங்கினார்.
மேற்கத்திய நாடுகளில் மதம் குறுக்கிடாத மதச் சார்பின்மைக்கு அறைகூவல் வந்துள்ளது. மத உணர் வாளர்களின் ஆதிக்கம் - அரசின் மீதான ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. மதவாதிகளின் குறுக் கீட்டால் - ஆதிக்கத்தால் மனித சமுதாயம் இழந்தவை ஏராளம்; கண்ட பின்னடைவுகள் பலப்பல.
கடந்த கால வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு உள்ளது. இந்தியநாடு மதச் சார்பின்மையற்ற அரசு ஆளும் நாடு என அறிவிக்கப்பட்டாலும், மதத்தின் பிடியிலிருந்து விலகிய பாடில்லை. மதம் நீங்கிய மனித வாழ்க்கைதான் உண்மையான வாழ்வாகும்; உன்னத மான வாழ்வாகும் எனக் கூறி மாநாட்டினை தொடங்கி வைக்கிறோம்.
இவ்வாறு வீ.குமரேசன் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வாக, நாத்திகர் மய்யத்தின் களப் பணிகளைப் பார்வையிட பேராளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பன்னாட்டு மாநாட்டில்
கலந்து கொண்ட கழகத்தினர்
விஜயவாடாவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பி.சி.ஜெயராமன், திரா விடர் கழகப் பொறுப்பாளர்கள் தாம்பரம் ப.முத்தையன், சு.மோகன்ராஜ், அ.கருப்பையா, நாத்திகன் - மீனாம்பாள் இணையர்; கோ.தங்கமணி - இரா.தனலட்சுமி இணையர், இளைஞரணி பார்த்திபன், வழக்குரைஞர் பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்று, கலந்துரையாடலிலும் கருத்துரைகளை வழங்கினர்.
தொகுப்பு: வீ.குமரேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக